Loading

அத்தியாயம் 32

 

ஒன்றரை வருடங்களுக்கு பிறகு :

இந்தியா செல்ல துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சித்தார்த் தன் அருகில் அமைதியாய் நின்று பார்த்து கொண்டிருந்தவளை கெஞ்சும் பார்வை பார்த்தான்.

 

“உனக்காக தான்டா.. உன் சொந்தத்தை எல்லாம் நீ பார்க்கணும்.. உன் அப்பா உனக்காக காத்துட்டு இருப்பார்” என்றவனை முறைத்தவள் “எனக்கு யாரையும் நியாபகம் இல்லை” என்றாள் உதட்டசைவில்.

 

இப்போதெல்லாம் அவள் சைகை செய்வது கூட இல்லை. அவளின் உதட்டசைவில் அவள் பேச நினைப்பதை கண்டுபிடித்து விடுவான் அவன். அவர்களின் காதலின் பலன். அவளுக்கு பேச்சுவந்தும் அவள் பேச விரும்பவில்லை. அவளுக்கு தோன்றினால் மட்டுமே பேச்சு வடிவத்தில் வரும். இல்லையென்றால் உதட்டசைவில் அவனை ஒரு வழியாக்கி விடுவாள்.

 

“உனக்கு யாரையும் நியாபகம் இருக்க வேண்டாம்.. ஆனா நீ கண்டிப்பா வந்தே ஆகணும்” என்றவனை எதிர்த்து பேச முடியாமல் கோபமாக கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

 

“என்ன கோபம் என் கியூட்டிக்கு? நம்ம பாப்பா அவளோட தாத்தா பாட்டி கூட கண்டிப்பா தொடர்பு வச்சிருக்கணும்.. அதை தடுக்கும் உரிமை உனக்கோ எனக்கோ இல்லை” என்று மண்டியிட்டு அவளின் மேடிட்டவயிற்றை கைவைத்து தடவியவனின் கையை அப்படியே பற்றி கொண்டவள் “நீ என் கூட இருப்ப தானே?” என்று கேட்டாள்.

 

“கண்டிப்பா இருப்பேன்டா.. உன்னை விட்டுட்டு எங்க போக போறேன்?” அவளின் நெற்றியில் இதமாக முத்தமிட்டவன் எழுந்து கடிகாரத்தை பார்க்க அவர்கள் செல்ல இன்னும் நேரம் இருந்தது. “பென் வர டைம் இருக்குடா.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று சொல்லி அவன் வெளியே செல்ல முயற்சிக்க அவனின் கைப்பற்றி இழுத்து தன்னருகில் அமர்த்தியவள் “ஐ லவ் யூ சித்து..” என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

“அடிக்குற கை தான் அணைக்கும்னு சொல்றது இதுதானோ..” என்றவன் அவளின் முத்தத்தின் வாசத்தை தேடி கொண்டிருந்தான்.

 

“என்ன தேடுற சித்து?”

 

“நீ இப்படி சித்துன்னு கூப்பிடும் போது எனக்கு என்னவோ பண்ணனும் போல இருக்கு கியூட்டி.. உன் நிலமையை நியாபகம் வச்சு தள்ளி இருக்கேன்.. அந்த பெர்பியூம் வாசம் தூக்குதுடா” என்றவன் ஒரு கிறக்கத்தில் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

 

அவன் சொல்லிவிட்டு போனதையே நினைத்து கொண்டிருந்தாள் கனிஷ்கா. குழந்தை உருவானதை முதலில் சொல்லும்போது அவனின் கண்கள் கலங்கியது இன்றும் நினைவில் இருந்தது. அவளை பூ போல் தாங்கி கொண்டிருக்கிறான். அவள் சமையல் செய்து கையை கட் பண்ணி கொள்வாள் என இன்று வரையிலும் அவன் சமையல் பொறுப்பை எடுத்து கொண்டான். அவன் எங்கு சென்றாலும் அழைத்து சென்று விடுவான். அங்கு கூட அவள் சிறிது கஷ்டப்பட்டாலும் யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் அவளின் அருகில் ஓடி வந்து விடுவான். இன்றளவும் அவனின் காதல் பத்திரிகையாளர்களுக்கு தலைப்பு செய்தி தான். கடந்த ஒருவருடமாக இந்தியா போவதை பற்றி பேசாதவன் இந்த ஆறுமாதங்களாக இந்தியா போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறான். காரணம் கேட்டாலும் சொல்வதில்லை.

 

“கிளம்ப போறோம் டேட்.. நைட் எட்டு மணிக்கு தான் பிளைட்..” என்று பேசிகொண்டே வந்தவன் அவளின் யோசனையை பார்த்து “உங்க மருமக ஏதோ தீவிர யோசனையில் இருக்கா.. என்னன்னு கேட்டுட்டு அப்புறம் பேசுறேன்.. நேரா பெங்களூர் தான் வருவேன்.. அப்புறம் தான் அவ ஊருக்கு போகணும்” என்று அழைப்பை துண்டித்துவிட்டு அவள் அருகில் வந்தான்.

 

“இந்த குட்டி மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடுது?”

 

“நீ ஏன் இந்தியா போகணும்னு அடம்பிடிக்குற சித்து? எனக்கு போகவே பிடிக்கல”

 

“இப்போ மட்டும் பேச்சு வருது? சரி இப்போ என்ன பண்ணலாம்? உங்க அப்பாவை தங்கச்சிகளை எல்லாம் பார்க்க வேண்டாமா? ஆனா அவங்க எல்லாம் உன்னை பார்க்க ஆர்வமா இருக்காங்க.. அதை ஏமாத்த போறியா?”

 

“எனக்கு எதுவும் நியாபகம் இல்ல.. எல்லாத்துக்கும் காரணம் நீதான்” என்றவள் அவனை அடிக்க ஆரம்பிக்க அனைத்தையும் வாங்கியவன் “நான் பண்ணுன தப்பை சரி பண்ண ஒரு சான்ஸ் குடுடா” என்று கெஞ்சினான்.

 

அவனின் பேச்சில் “எனக்கு பயமா இருக்கு சித்து.. என்னை விட்டு போயிடாத” என்று அவனின் மார்பில் ஒட்டிகொள்ள அவளை அணைப்பதை தவிர வேறுவழி இருக்கவில்லை.

 

“உனக்கு அங்க ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்குடா” என்றவன் பென் வரவும் டிக்கெட் வாங்கி கொண்டு கிளம்பினான்.

 

இந்தியா வந்து இறங்கும்வரை அவள் எந்த பேச்சும் பேசவில்லை. சித்தார்த் தான் அவளுக்கு தேவையான ஜூஸ், தண்ணீர், உணவு என்று வாங்கி கொடுத்து கொண்டிருந்தான். பெங்களூர் வந்து இறங்கியதும் அவனை பத்திரிகையாளர் கூட்டம் சூழ்ந்துகொண்டது. முன்பு வரும்போது மாஸ்க் போட்டிருந்தான். இப்போது மனைவியுடன் வருவதால் சாதாரணமாக வந்தான். அமைச்சருக்காக காத்துகொண்டிருந்த பத்திரிகையாளர் கூட்டம் அவனை பிடித்து கொள்ள பயந்து அவனின் பின்னால் மறைந்து கொண்டாள் கனிஷ்கா. அமெரிக்காவில் என்றா எப்போதும் இந்தமாதிரி சூழ்வதில்லை. அவனுக்கான தனிஉரிமை அங்கிருக்கும்.

 

இப்போது தன் பின்னால் மறைந்திருந்தவளை அருகில் கை வளைவில் கொண்டு வந்தவன் “அவளோட நிலைமை பார்த்துடீங்க தானே.. ப்ளீஸ் வழி விடுங்க.. நாங்க இங்க பெர்சனலா வந்திருக்கோம்.. ரொம்ப நேரம் அவளால் தாக்குபிடிக்க முடியாது” என்று வெளியேற நினைக்க “உங்களோடது காதல் திருமணமா?” என்று ஒருவர் கேட்டார்..

 

“ஆமா..” என்றவன் அவளை அழைத்து கொண்டு நகர “அமெரிக்காவில் இருக்கும் நீங்க எப்படி ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்தீங்க?” என்று அவனே கேட்டான்.

 

திரும்பி நின்று முறைத்தவன் “நானும் இந்தியன் தான்.. ஏன் இந்தியபொண்ணு அமெரிக்காவுக்கு வர கூடாதா?” என்று கேட்க “கன்னிபுரம் கிராமத்துல இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தவங்க எப்படி உங்க மனைவி ஆனாங்கன்னு தான் என் கேள்வி?” என்றான்மற்றவன்.

 

“தட்ஸ் மை பெர்சனல்..”

 

“எது சார் இன்னொருத்தன் மனைவி உங்கமனைவி ஆனதா?”

 

அவர்கள் கேள்வியில் கனிஷ்கா கூனி குறுகி போனாள். சித்தார்த்தை முறைக்க அவனோ அவளை இன்னும் இறுக அணைத்து கொண்டு “உங்க பத்திரிகைக்கு ஏதாச்சும் என் இன்டெர்வியூ வேணும்னா நேரடியா என் ஆபீஸ்க்கு வாங்க.. அதை விட்டுட்டு பப்ளிக்ல ஒரு பெண்ணை அசிங்கபடுத்தாதீங்க” என்று பல்லை கடித்துகொண்டு சொன்னான். இதே அமெரிக்காவில் என்றால் பொதுஇடம் என்றும் பாராமல் வெளுத்து வாங்கியிருப்பான்.

 

“சார் என் கேள்விக்கு இன்னும் பதில் வரல”

 

“ஹே.. நீ விட மாட்டியா? எஸ் அவள் ஏற்கனவே கல்யாணம் ஆனவ தான்.. அவளோட முதல்புருஷன் இப்போ உயிரோட இல்ல.. ஆண்கள் மட்டும்தான் மனைவி செத்து போயிட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுமா? ஏன் பெண்கள் பண்ணுனா ஏத்துக்க மாட்டீங்களா? இன்னும் எத்தனை வருஷத்துக்கு பழையதையே சொல்லிட்டு இருப்பீங்க.. இவ என் மனைவி.. நான் காதலிச்சு கல்யாணம் பண்ணின என் வைப்.. அவளை பத்தி தப்பா பேச யாருக்கும் உரிமை இல்ல.. என் பிசினஸ் பத்தி கேள்வி கேளு.. பதில் சொல்றேன்.. என் பெர்சனல் பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸ் இல்ல ஓகேவா?” என்றவன் அடுத்து கேள்வி கேட்ட எவரையும் கண்டுகொள்ளாமல் கனிஷ்காவை அழைத்து கொண்டு காரில் ஏறினான்.

 

காரில் ஏறியதும் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அவள். கன்னத்தை தடவிகொண்டே அவளை அணைத்து கொண்டவன் “இதுக்கே இவ்ளோ பீல் பண்ற.. இன்னும் உன் ஊருக்கு போனா எவ்வளவோ கேட்பாங்க.. நீ என்னை காதலிக்குறது உண்மைன்னா இந்த கேள்வி எதுவும் உன்னை பாதிக்காதுடா.. இவங்க இன்னும் மாறல.. அதுக்காக உன் வாழ்க்கையை அழிச்சுக்க சொல்றியா? மாட்டேன்.. நீ எப்பவும் எனக்கானவள் மட்டும் தான்” என்று கூற அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள் அவள்.

 

அவன் தந்தையின் வீட்டிற்கு வரும்போது அவள் தூங்கியிருந்தாள். வரவேற்ற தந்தையை தாண்டி படுக்கையறைக்கு கொண்டு போய் படுக்க வைத்தவன் ஏ.சியை போட்டுவிட்டு வெளியே வந்தான்.

 

“என்னாச்சு சித்?”

 

நடந்ததை அவன் சொல்ல “கண்டிப்பா அவனுக்கு வேலுவை நல்லா தெரிஞ்சிருக்கும்.. இதை சீரியஸா எடுக்காத.. பத்திரிகையில் போட்டாலும் ரெண்டு வாரத்தில் அமெரிக்கா கிளம்ப போற உங்களை அது பாதிக்காது” என்றார் கிரண்.

 

“எஸ் டேட்.. சீக்கிரம் அமெரிக்கா கிளம்பணும்” என்றவன் தன்னை சுத்தப்படுத்தி விட்டு அவளின் அருகில் வந்து படுத்தான். பயணகளைப்பில் அயர்ந்து தூங்கியவன் நான்கு மணி நேரம் கழித்தே எழுந்தான். பக்கத்தில் படுத்திருந்த கனிஷ்காவை பார்க்க அவள் இன்னும் தூக்கத்தில் இருந்தாள். நெற்றியில் இதமாக முத்தமிட்டவன் வெளியே வந்து கனிமொழிக்கு அழைப்பு விடுத்தான்.

 

“சொல்லுங்க சித்தார்த்.. பெங்களூர் வந்துட்டீங்களா?” கனி கேட்க “வந்துட்டேன் கனி.. இங்கேயே கெட்-டுகெதர் மாதிரி ரெடி பண்லாமா? அருண் இங்க இருக்குறதா தானே சொன்னீங்க?” என்று சொல்ல “ஒன் மினிட்” என்றவள் கீதனிடம் அனுமதி வாங்கிவிட்டு சரியென்று சொன்னாள்.

 

“ஓகே கனி.. எனக்கு கன்னிபுரம் போகுற வேலை இருக்கு.. முடிச்சிட்டு ரெடி பண்ணலாம்.. நாங்க ரெண்டுவாரம் இங்கே தான் இருப்போம்” என்றான்.

 

“ஓகே சித்தார்த்.. பார்க்கலாம்” என்றவள் அழைப்பை துண்டித்து விட கீதன் “கண்டிப்பா போகுற அளவுக்கு யார் பிரண்ட்?” என்று கேட்டான்.

 

“கனிஷ்காவோட ஹஸ்பண்ட்” என்று சொல்ல “என்கிட்ட சொல்லவே இல்ல” என்று ஆச்சர்யப்பட்டான்.

 

“சொல்லுற நிலமைல நீங்க இல்ல..” என்றவள் அனைத்தும் சொல்ல அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

 

“எல்லார் லைஃப் செட்டில் ஆயிடுச்சுல்ல..” கீதன் கேட்க தன் ஐந்துமாத மேடிட்ட வயிற்றை தடவிகொண்டே “எல்லாமே செட்டில்ட்..” என்றாள்.

 

இரண்டுநாள் கழித்து கனிஷ்காவுடன் கன்னிபுரம் சென்றான் சித்தார்த். ஐந்து வருடங்களுக்கு முன் அவன் சென்றபோது இருந்ததைவிட இப்போது நல்ல முன்னேற்றம் இருந்தது. அவன் வருகிறான் என்றவுடன் கேசவ் அங்கு வந்திருந்தான். சித்தார்த் முதலில் இறங்க அவன்பின் தன் ஏழுமாத மேடிட்ட வயிற்றை பிடித்துகொண்டு மெதுவாக இறங்கினாள் கனிஷ்கா.

 

அவளை அங்கிருந்த பலருக்கும் அடையாளம் தெரியவில்லை. முன்பு மாநிறமாக இருந்தவள் இப்போது வெள்ளை நிறத்தில் வந்து இறங்கினாள். தான் வாங்கிய வேலுவின் வீட்டின்முன் அவர்கள் நிற்க முத்தையா தன் மகள்களுடன் ஓடி வந்தார்.

 

“கனி..” என்று அவர் பாசமாக அழைக்க அவரை யாரென்று அடையாளம் தெரியாமல் திணறினாள்.

 

“உன் அப்பாடா..” சித்தார்த் எடுத்து கொடுக்க அவளோ “நல்லா இருக்கீங்களா அப்பா?” என்று கேட்டு தங்கைகளின் திருமணவாழ்க்கை மற்றும் படிப்பு பற்றி விசாரித்தாள்.

 

முத்தையாவிற்கு மனம் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இது தான் தன் மகளுக்கு நல்லது என்று எண்ணியவர் “எத்தனாம் மாசம்மா?” என்று கேட்டார்.

 

“ஏழாம் மாசம்பா..” அவள் சொல்ல முத்தையா சித்தார்த்தின் பக்கம் திரும்பி கையெடுத்து கும்பிட்டார்.

 

“என் பொண்ணு வாழ்க்கை எம் முட்டாள்தனத்தால் எப்படியோ போயிருக்க வேண்டியது.. அவளை அந்த நரகத்தில் இருந்து காப்பாத்தி வாழ்க்கை குடுத்ததுக்கு நன்றி மாப்பிள்ளை” என்று கூற அவரின் கையை பிடித்து கொண்டவன் கேசவிடம் இருந்து வாங்கி அவர்களின் வீட்டுபத்திரத்தோடு வேலுவின் வீட்டை வாங்கியதும் கொடுத்தான்.

 

“எனக்கு எதுக்கு மாப்பிள்ளை?” அவர் தயங்க “மூணு பொண்ணுங்கள்ள ரெண்டு பேருக்கு தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.. இன்னோருத்தி படிப்பு இருக்கு.. அவ கல்யாணசெலவு இருக்கு.. வீட்டு மாப்பிள்ளைங்க தங்க ஒரு நல்லவீடு வேண்டாமா? இது வேலு கனிக்கு செய்த துரோகத்துக்கு பரிகாரம்.. கண்டிப்பா வாங்கிக்கணும்” என்று கூற வாங்கினார்.

 

பின் ஊரில் உள்ள மற்றவர்கள் “முத்தையா பொண்ணா இது? இவன் கூடவா ஓடி போச்சு?” என்று பேச அவர்களை சித்தார்த் முறைத்த முறைப்பில் எவரும் வாய் திறக்கவில்லை.

 

சித்தார்த்தின் கண்கள் வேலுவின் தாய் தந்தையை தேட “அவங்க நான் வரும்போதே ஊர்ல இல்ல மாப்பிள்ளை.. வேற ஊருக்கு போயிட்டதா சொல்லுறாங்க” என்றார் முத்தையா.

 

“நல்ல விஷயம்.. இனி ஊர்ல எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க” என்றவன் வந்த வேலை முடியவும் மீண்டும் பெங்களூர் கிளம்பி விட்டான்.

 

அவனுக்கு நன்றாகவே தெரியும் இதற்கு மேல் நின்றால் கனியை சமாளிக்க முடியாது என. ஏற்கனவே அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன. காரில் ஏறி அமரவும் அந்த ஊரை திரும்பி பார்த்தவள் அவனின் கைகளை இறுகபற்றி கொண்டு திரும்பினாள்.

 

“அந்த ரிபோர்ட்டர் இப்போ இங்க வரமாட்டான் கியூட்டி.. பயப்படாம இரு” என்றவன் ஏற்கனவே கேசவ் மூலம் அவனை எச்சரித்து அனுப்பியிருந்தான்.

.
மனைவியை தொட நினைப்பவனுக்கே சாவை காட்டுவான். அவளை பற்றி தவறாக பேசுபவனை சும்மா விடுவானா? அவனின் வாய் இனி கொஞ்சநாளைக்கு கேள்வி கேட்க முடியாதபடி பத்திரிக்கை அலுவலகத்தில் சொல்லி விடுப்பு கொடுக்க செய்திருந்தான். எதற்காக பேசியிருந்தாலும் விட்டிருப்பான். அந்த வேலுவுக்காக கனியை பற்றி பேசியதை கேட்டு கணவனான அவனுக்கு வரும் கோபம் நியாயம் தானே. ரிப்போர்ட்டர் என்றால் எதுவும் பேசிவிடலாம் எனும் நினைப்பை அழிக்கவே சிறியதண்டனை கொடுத்துவிட்டு வந்தான்.

 

பெங்களூர் வரும்வரை அவளும் எதுவும் பேசவில்லை. அந்த ஊரின் தாக்கத்தில் இருந்து அவளுக்கு வெளியேவர சிறிதுநேரம் தேவைபட்டது. வீட்டிற்கு வந்தவுடன் கிரண் மகனிடம் என்னவென்று கேட்க ஒன்றும் பேசவேண்டாம் என்று கண்களை காட்டியவன் “டேட் பரமபதம் விளையாடுவோமா?” என்று கேட்க அவளைபற்றி அறிந்தவர் ஆதலால் “விளையாடலாம் சித்..” என்று அட்டையை எடுத்து கொண்டு வந்தார்.

 

கனிஷ்காவுக்கு பரமபதம் விளையாடுவது மிகவும் பிடிக்கும். அவர்கள் மேசையில் வைத்து விளையாட ஆரம்பித்த சிறிதுநேரத்தில் அவனின் மடியில் வந்து அமர்ந்தாள் கனிஷ்கா. கிரண் சிரித்துகொண்டே தொடர அவர்களோடு இணைந்தவள் விளையாட்டில் ஜெயித்து விட்டே எழுந்தாள். விளையாட்டு முடியும்வரை அவளின் கவனம் சிதறாமல் பார்த்து கொண்டான் சித்தார்த்.

 

“நீ மனோதத்துவ மருத்துவம் படிச்சிருக்கலாம் சித்” என்றவர் எழுந்துசெல்ல தன் கையில் தூங்கி வழிந்த கனியை தூக்கிகொண்டு அறைக்குள் நுழைந்தான் சித்தார்த்.

 

ஒரு வாரத்திற்கு பிறகு பெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் புக் செய்திருந்தான் சித்தார்த். அவனுடன் கனிஷ்கா மற்றும் கிரண் காத்திருக்க, கீதன் தன் மனைவி கனிமொழி மற்றும் மகள் ஷாரவியுடன் வந்தான். அவனை பார்த்ததும் சித்தார்த் கட்டி அணைத்து வரவேற்க அவனின் அருகில் நின்ற கனிமொழியை பார்த்து அதிர்ந்து நின்றாள் கனிஷ்கா.

 

“சித்து இவங்க..” என்று திணற “இதுதான் ஸ்வீட் சர்ப்ரைஸ் கியூட்டி.. இவங்க கனிமொழி, இது அவங்க ஹஸ்பண்ட் கனிகீதன் அண்ட் மகள் ஷாரவி” என்று அறிமுகபடுத்த கனிமொழி அவளை வாஞ்சையுடன் அணைத்து கொண்டாள். அவளைபற்றி அனைத்தும் தெரிந்தவள் ஆயிற்றே.

 

“யூ லுக் சோ பியூட்டி கனி..” என்று சொல்ல “நீங்களும் தான் அக்கா..” என்று அணைத்தாள்.

 

“டேட்.. இவளுக்கு என்னை ஹக் பண்ணனும்னு அடிக்கடி மறந்து போகுது” என்று சித்தார்த் சொல்ல “லவ் யூ சித்து” என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளின் செயலை அனைவரும் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.

 

“அருண் வரலையா கனி?” சித்தார்த் கேட்க “வந்துட்டு இருக்கான் சித்தார்த்.. குழந்தை கூட்டிட்டு வரதுல நேரம் எடுக்கும்” என்று சிரிக்க “யார் அந்த அருண்?” என்று கேட்டாள் கனிஷ்கா.

 

மற்றவர்கள் தயங்க “வரும் போது பாத்துட்டா தெரிய போகுது” என்றவன் வாசலை நோக்க அருண் தன் மனைவி மற்றும் கைகுழந்தையுடன் வந்து கொண்டிருந்தான்.

 

“ஹாய் அருண்..” சித்தார்த் அவன் கைபிடித்து குலுக்க அவனின் அருகில் நின்ற கனிஷ்காவை பார்த்து அதிர்ந்து நின்றான். “கனி உயிரோட..” என்று திணற “மூன்றரை வருஷங்களுக்கு பிறகு கண்டுபிடிச்சேன்.. இது உங்க குழந்தையா? பேர் என்ன?” என்று கேட்க “கிருஷ் நந்தா” என்று பதில் அளித்தாள் அம்ருதா. அவளின் பதிலில் அருண் கொஞ்சம் தெளிவடைந்தான். அவனுக்கு அதிர்ச்சிதான் என்றாலும் அவன் கனிஷ்காவை இப்போது காதலிக்கவில்லையே.

 

சித்தார்த் குழந்தையை கனிஷ்காவின் கைகளில் கொடுக்க ஆனந்ததோடு வாங்கியவள் “நம்ம பாப்பாவும் இப்படி குட்டிவாய், குட்டி கைகாலோட தானே இருப்பா சித்து” என்று அந்த பிஞ்சு கால்களில் முத்தமிட்டு கேட்க “கண்டிப்பா கியூட்டி.. உனக்கென்ன சந்தேகம்?” என்றவனும் குழந்தையை கொஞ்சினான்.

 

அருணின் கைகளில் குழந்தையை கொடுக்கவும் “யார் இவங்க சித்து?” என்று அருணை பார்த்து கொண்டே கேட்க “அவருக்கு உன்னை தெரியும்.. உனக்கு அவரை தெரியாது.. எல்லாரும் பிரெண்ட்ஸ்.. சோ இன்னைக்கு மீட் பண்லாம்னு கூப்பிட்டேன்.. நாம அமெரிக்கா போயிட்டா மறுபடியும் மீட் பண்ண முடியாதுல்ல” என்றுகூற ஆமாம் என்றவள் அவர்களுடன் சகஜமாக பேசினாள்.

 

“விஷ்வா எங்கடா?” கீதன் கேட்க “அவன் ஹனிமூன்க்கு மாலதீவு போயிருக்கான்” என்று சொல்ல அதன்பிறகு தங்கள் பேச்சில் மூழ்கிவிட்டனர்.

 

அருணை தனியாக கூப்பிட்ட சித்தார்த் “அவளோட சந்தோஷத்தை நீங்க நேர்ல பார்க்கணும்னு தான் இந்த மீட்.. உங்க மனசுல எந்த குற்றஉணர்ச்சியும் வேண்டாம்.. தப்பு செய்தவன் நான்தான்.. அது அவளுக்கும் தெரியும்.. இப்ப அவகிட்ட இருக்குற சந்தோசம் எப்பவும் போகாது” என்று கூற “தேங்க்ஸ்..” என்று அவனை அணைத்து கொண்டான் அருண். அவர்களின் செயலை பார்த்த மற்றவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியாக இருந்தது. அனைத்தும் முடித்துவிட்டு வெளியே வரவும் தாங்கள் அன்று அமெரிக்கா கிளம்புவதாக சொன்னான் சித்தார்த்.

 

“கனி பிரசவம் வரை இங்க இருக்கலாமே சித்தார்த்..” என்று கீதன் கேட்க “இங்க வந்ததே அவளுக்கு பிடிக்காம தான்.. ஆனா இங்க இருக்குற எல்லாரையும் பத்தி தெரிஞ்சிக்கணும்னு தான் கூட்டிட்டு வந்தேன்.. அவளோட விருப்பம்தான் முதல் சாய்ஸ்.. இனி மீட் பண்ண முடியாது.. தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்” என்று சித்தார்த் கூற சந்தோசத்துடனே அவர்களை வழியனுப்ப ஏர்போர்ட் வந்தனர்.

 

அருண் குழந்தை இருந்ததால் மனைவியுடன் வீடுதிரும்பி விட கீதன் மற்றும் கனி குடும்பம் விமானநிலையம் வரை வந்தனர். “உடம்பை பார்த்துக்கணும் கனி.. நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கணும்” என்று கனிமொழி கூற “கண்டிப்பா அக்கா.. நீங்களும் குழந்தை பிறந்தா சொல்லுங்ககா” என்று விடைபெற சித்து அவளுடன் விமானத்திற்குள் நுழைந்தான்.

 

எங்கேயோ பிறந்து ஒருவனிடம் தன் வாழ்க்கையை கொடுத்து அவனின் இன்னல்களை தாங்கிகொண்டு வாழ நினைத்தவளுக்கு சித்தார்த் எனும் பெயரில் மறுவாழ்வு அவளை தேடிவர இன்று அவளின் உயிரும் மூச்சும் அவனாகி போனான். அவனின் தோள் சாய்ந்தவளை தட்டி கொடுத்தவன் “அமெரிக்கா போனா கண்டுக்காம போயிடுவியா கியூட்டி.. புது அக்கா எல்லாம் கிடைச்சிருக்காங்க” என்று சீண்ட “யார் வந்தா என்ன சித்து? என் உயிர் எப்போவும் நீ மட்டும்தான்” என்று அவனின் கன்னத்தில் முத்தமிட அவளை வாகாக அணைத்து கொண்டான். அவர்களின் வாழ்வு இனி சந்தோஷத்தை தவிர எதையும் காண போவதில்லை. முதன்முதலில் அவளின் விழிவீச்சில் அவளை அடைந்தவன் இன்று மொத்தமாக அவளுள் சரணடைந்து விட்டான். அவளுக்காக அவனும் அவனுக்காக அவளும் இருக்கும் வரையில் அவர்கள் காதலும் அழிவதில்லை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment