
அன்றில் – 12🦢🍃
மீள்தலின்றிய
இப்பெருங்காதல்
நின்
ஆள்தளில்
அமைதியடைகிறது..
ஐப்பசி மாத அடை மழை அடித்துப் பெய்து.. அப்போது தான் சற்றே வெட்டாப்பு விட்டிருந்தது.. சுவர்க்கோழிகளின் சத்தத்தைத் தவிர.. வேறு எவ்வித ஓசையும் இன்றி இரவின் இருளையும், நிசப்தத்தையும் வஞ்சனையின்றித் தத்தெடுத்து இருந்தது அந்த ஊர்.
அவ்வூரின் மையத்தில் மிகப் பெரியதாக அமைந்திருந்த அந்தத் தொட்டி வாசல் வீடும் அதே அமைதியுடன் இருந்தது.. குறிப்பாக இறப்பிற்குப் போடப்பட்ட பந்தல் கூட பிரிக்கப்படாது ஆழ்ந்த சோகத்தையும் கொண்டிருந்தது.
தான் இவ்வளவு நாள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த வீடு நேத்ராவிற்கு இன்று அச்சத்தை மட்டுமே கொடுத்திருக்க.. அவள் முக வாட்டம் கண்டு என்ன ஏதென அவள் அம்மா ஜோதி பிரபா விசாரிக்கவும் “இல்லம்மா.. அம்மத்தா இல்லாம ரொம்ப பயமா இருக்குது.. ஏம்மா அம்மத்தா நம்மள விட்டு போயிருச்சு” என்று சற்றே பயந்தபடி கூற.. ஜோதிக்கும் தங்கள் நிராதரவான நிலை எண்ணி கழிவிரக்கம் ஏற்பட்டாலும்.. மகளின் இந்தப் பயத்தை ஓர் அம்மாவாக வளர விடுவது தவறு என்றும் புரிந்தது.
அரும்பு மொட்டாகக் காத்திருக்கும் பருவத்தில் இருந்த மகளின் அருகே அமர்ந்து “சாமி.. அம்மா இன்னைக்கு சொல்றேன்.. யாருக்காகவும் யாரும் இருக்க முடியாது.. நாளைக்கு நானே இல்லீன்னா கூட நீ தைரியமா இந்த உலகத்தை ஃபேஸ் பண்ணோனும்.. செரியா தங்கோ” என்று அவள் கையை அழுத்திக் கேட்க..
அவளுக்கோ அம்மாவின் வார்த்தைகளில் இன்னும் பயம் கூட “நீயும் போறேன்னு சொல்ற” என்று மழுக்கென கண்களில் இருந்து நீர் இறக்கிவிட…
“சும்மா சொன்ன சாமி.. நாளைக்கே எனக்கு எதுவும் ஆகாது.. அப்படியே ஆனாலும் நீ தைரியமா இருக்கனும்னு தான் இப்ப சொல்றேன்.. புரிஞ்சுக்க சாமி” எனக் கெஞ்சினார் பிரபா.
பிரபாவின் அம்மா இறப்பிற்கு வந்த சொந்தங்கள் அனைவருமே ‘வயசுப்புள்ளைய வெச்சுட்டு தனியா இருக்கப் போறயா.. இதெல்லாம் செரிப்பட்டு வருமா.. காசு பணம் இருந்து என்ன பண்றது.. இனி காலத்துக்கும் ஒத்தையில தான’ என்று விதவிதமாக அவர்கள் தனிமையை விமர்சித்திருக்க.. ஆக மொத்தம் தங்களுக்கு யாரும் இல்லை என்ற உண்மை அந்தப் பனிரெண்டு வயதிலேயே நேத்ராவிற்குப் புரிந்திருந்தது.
அதன் காரணமாகவே இந்த பாதுகாப்பின்மையும், பயமும்.
நல்ல விசாலமான தொட்டி வாசலைச் சுற்றி ஆசாரம் பறந்து விரிந்திருக்க.. எப்போதும் அங்கேயே உறங்கும் அம்மாவும், மகளும் இன்று மழை விட்டு விட்டுப் பெய்து கொண்டே இருப்பதால் அறைக்குள் சென்று உறங்கலாம் என்று ஏகமனதாக முடிவு செய்து அறைக்குள் உறங்கச் சென்றனர்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேத்ராவிற்கு ஏதோ சத்தம் கேட்க.. திடுக்கென விழித்து அமர்ந்தாள்.. ‘என்ன சத்தம்.. அதும் இந்நேரத்துல’ என்று யோசித்தவள்.. அந்தச் சத்தத்தை அமைதியாக கவனிக்க ஆரம்பித்தாள்.
ஏதோ ஓடு சறுக்கும் சத்தத்துடன் யாரோ தொப்பென்று குதிக்கும் ஓசையும் கேட்க.. அவளின் இதயம் தொண்டையில் வந்து துடித்தது.
தொடர்ந்து விட்டு விட்டு யாரோ நடக்கும் சத்தமும் கேட்க.. பிரபாவை எழுப்ப ஆரம்பித்தாள் நேத்ரா.
தூக்கக் கலக்கத்தில் “என்ன சாமி தூங்கலயா.. பாத்ரூம் வருதா.. கூட்டிட்டு போகட்டா” என்று கேள்வியோடு எழுந்த பிரபாவின் காதிலும் அந்தச் செருப்பு சத்தம் கேட்க.. “ம்மா” என அழுகுரலில் முணகிய மகளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
‘ஐயோ மாரியாத்தா இதென்ன சோதனை.. நாஞ்செத்தாக் கூட எம்புள்ளய எப்புடியாச்சு காப்பாத்தோனும்’ என மனம் முரசு கொட்ட.. மகளை அணைத்த கரங்கள் இறுகியது.
கதவு பூட்டித் தானே இருக்கிறது என்ற தைரியத்தில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடியே இருக்க.. சில நிமிடங்களில் அந்தச் செருப்பு சத்தம் அவர்கள் அறையை அடைந்து “அம்மாளும் மகளும் என்னடி பண்றீங்க.. கதவைத் தெறங்கடி” என்று கதவை ஓங்கித் தட்ட.. நேத்ராவின் உடல் தூக்கிப் போட்டது.
அதில் அவ்வளவு நேரம் மூச்சு கூட விடாமல் இருந்த நேத்ரா பயத்தில் “அம்மா.. பயமா இருக்குது ம்மா” என்று கதறி அழ ஆரம்பித்தாள்.
“இல்ல சாமி.. ஒன்னுமில்ல.. அம்மா கூட இருக்கறன்ல.. பயப்படாத தங்கோ. ஒன்னும் ஆகாது” என்ற ஜோதியின் எந்த சமாதானமும் நேத்ராவை எட்டியதாகவே தெரியவில்லை.
வெளியே அவனோ குடி போதையில் “கதவை தெறங்கடி ***களா” என்று ஏக வசனத்தில் கண்டபடி பேச.. நேத்ரா இன்னும் பயத்தில் கத்த ஆரம்பித்தாள்.
வெளியே எவனோ ஒரு குடிகாரன்.. உள்ளே இளவயது மகள்.. ஜோதியின் நெஞ்சுக்கூடே ஒரு நொடி காலி ஆகிவிட்டது.
அவன் கதவை ஓங்கி ஓங்கித் தட்ட.. இங்கே நேத்ராவின் பயமும் பதட்டமும் அதிகமாக.. ஜோதி திடமாக ஒரு முடிவெடுத்து அவள் கன்னத்தை அழுத்தமாகப் பிடித்து தன்னைப் பார்க்கச் செய்ய.. தேம்பியபடியே அம்மாவைப் பார்த்தாள் நேத்ரா.
மகளையேனும் காப்பாற்ற வேண்டும் என்ற திடத்துடன் “சாமி.. அம்மா என்ன சொன்னாலும் கேப்பயா” எனக் கேட்க..
“கேக்கறம்மா.. அவன் உள்ள வந்துட்டா என்ன ம்மா பண்றது” என்று பயத்தில் உடல் நடுங்கக் கேட்ட மகளை இறுக்கி அணைத்து விடுவித்த ஜோதி “சாமி.. அம்மா இப்ப கதவை திறக்கறேன்.. நீ வேகமா வெளியே ஓடிப் போயிரு” என்றவாறே.. கட்டிலில் இருந்து எழ “வேண்டாம்மா.. எனக்கு பயமா இருக்குது” என்று கதறி அழுதாள் நேத்ரா.
“இல்ல சாமி.. நீ வெளிய ஓடிப் போயி லட்சுமி அம்மத்தா வீட்டுத் திண்ணையில மூர்த்தி மாமா படுத்துருக்கும்.. அதைய கூட்டிட்டு வா.. செரியா” என்று ஜோதி சொல்லும் போதே.. கதவு தட்டுவது ஓய்ந்து.. எதுவோ தொப்பென்று விழுவதும் தெரிந்தது.
பிரபா உள்ளே பயந்தாலும் மகளை இங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்ற தைரியத்தில் கதவைத் திறக்க.. செருப்புக் காலோடு நெடுக மல்லாக்க விழுந்து கிடந்தது ஓர் உருவம்.
ஜோதியின் கைச்சந்தில் எட்டிப் பார்த்த நேத்ரா அதைக் கண்டு வீல் எனக் கத்தியவாறே வாயிற்கதவை நோக்கி ஓட.. அதையும் யாரோ தட்டுவது போலத் தெரிய.. விழுந்தடித்து ஓடி வந்து கதவைத் திறந்தாள்.
வெளியே ஜோதி கூறிய மூர்த்தி தான்.. கூட ஊர் ஆட்கள் சிலரும் இருக்க “என்ன சாமி உம்பட சத்தம் கேட்டுச்சு.. என்னாச்சு” என்று பதட்டமாக வினவ..
“மாமா.. அங்க அவன்” என்று திக்கித் திணறிச் சொல்ல.. அதற்குள் ஜோதி வீட்டின் அனைத்து விளக்குகளையும் போட்டுவிட.. வீடே வெளிச்சத்தில் மிதக்க.. நேத்ரா அம்மாவை ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்.
வந்தவர்கள் “என்னாச்சு” என வினவ ஆசாரத்தில் ஓர் உருவம் குடி போதையில் உருண்டு கொண்டிருந்தது.
“அட இந்த பரதேசி நாயா.. இவனெங்க இங்க” என்ற மூர்த்தி அவனை நெருங்கி “டேய்.. முருகேசா.. இங்கென்னடா பண்றா” என்று அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றி எழுப்ப.. அவனோ குடிபோதையில் உளற.. வீட்டின் வெளியே இழுத்துப் போனார் மூர்த்தி.
சத்தம் கேட்டு அந்தத் தெருவே விழித்துவிட.. எதிர் வீட்டில் இருந்து விடுமுறையில் வந்த பார்த்திபன் குடும்பமும் வெளியே வர.. மூர்த்தி சரமாரியாக அந்த முருகேசன் எனப்பட்டவனை வெளுக்க.. ஊர் ஆட்கள் அவர்களுக்குள் பேசியபடி இருந்தனர்.
“என்னடா.. என்ன நெனப்புல உள்ள போன.. திமிரெடுத்து திரியறயா.. இன்னையோட உன்ற காலை முறிச்சு எறிஞ்சு போடறேன் இரு.. எதுக்குடா ஓட்டு மேல ஏறி ஊட்டுக்குள்ள போன” என்று கேட்டவாறே அடித்து நொறுக்க..
அவனோ எவ்வளவு கேட்டும் “அந்தக்கா தான் வரச் சொல்லுச்சு” என்று குடிபோதையில் திரும்பத் திரும்ப அதையே உளற.. பிரபாவின் நெஞ்சில் இரத்தமே வடிந்தது.
இதில் ஊர்க்காரர்கள் வேறு “இதைத்தான் சொன்னோம்.. வயசுப் புள்ளைய வச்சுட்டு தனியா எப்படி இருப்பான்னு.. இப்ப நல்லா உரைச்சுருக்கும்” என்று ஒருசிலர் குத்த..
மற்ற சிலரோ “அவன் சொல்றது பொய்யோ நெசமோ.. ஆரு கண்டது.. நாம என்ன கூட நின்னா பாத்தோம்” என்றும் பேச.. உள்ளம் வெறுத்துப் போய் நின்றனர் அம்மாவும் மகளும்.
பார்த்திபனுக்கும் விஷயம் பகிரப்பட.. அவரும் சேர்ந்து முருகேசனை அடிக்க.. அவர்களுக்காகப் பார்த்திபன் பரிந்து செல்வது பல்லவியைப் பாதிக்க.. ஆத்திரத்தில் அவரைப் பிடித்து இழுத்து “நீங்க எதுக்கு தேவையில்லாத வம்புக்கு போறீங்க.. அவன் சொல்றது நிஜமா இருந்தா என்ன பண்ணுவீங்க” என்றும் கேட்க.. பார்த்திபன் “என்ன சொன்ன” என்று கையை ஓங்க.. அதற்குள் இன்னொரு கரம் பல்லவியின் கன்னத்தில் அழுந்தப் பதிந்தது.
பல்லவி அதிர்ந்து திரும்ப.. ஜோதி தான் நின்றிருந்தார் மகளை அணைத்தபடி.
“தொலச்சுக் கட்டிருவேன் ஜாக்கரதை.. உன்னோட பண்ணாட்டெல்லாம் உன்னோட மாமியார் வீட்டோட நிறுத்திக்கோ” என்று வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக பல்லவியை எச்சரித்த ஜோதி.. அங்கிருந்தவர்களையும் ஒரு துச்சப் பார்வை பார்த்தபடி மகளை அணைத்துக் கொண்டு உள்ளே சென்று கதவை இறுக மூடிக் கொண்டார்.
அன்றைய இரவின் நினைவு நெடுநாட்களுக்கு மனதை விட்டு அகலாமல் இருந்தது நேத்ராவிற்கு.
இப்போதும் அதே நினைவுடன் இருளில் ஆள் அரவமற்ற அந்தப் பேருந்து நிறுத்தத்தில் தனியே அமர்ந்திருந்தவளின் தோளில் ஒரு கரம் பதிய.. உடல் தூக்கிப் போட.. விலுக்கென்று நிமிர்ந்தாள் நேத்ரா.
துருவன் தான் நின்றிருந்தான்.
அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டவள் உள்ளத்தின் போராட்டத்தை இதுவென்று அறியாத போதும் “வாம்மா.. வீட்டுக்கு போகலாம்” என்று பரிவாக அழைக்கவும்.. மறுத்துப் பேசாமல் அவனோடு சென்றாள்.
அவளது வீட்டிற்கு அழைத்து வந்த துருவன் பின்னேயே நேத்ராவும் நுழைய.. இம்முறை அந்த வீட்டின் வெறுமை முகத்தில் அறையும் முன்னே.. போட்டோ பிரேமில் சிரித்துக் கொண்டிருந்த அவள் அம்மாவின் இழப்பு அவளைத் தாக்க.. இதற்காகவே அடக்கி வைத்திருந்தாற் போல.. ஹாலிலேயே மண்டியிட்டுக் கதற ஆரம்பித்தாள் நேத்ரா.
கதவைச் சாத்திய துருவன் அவள் சத்தத்தில் மிரண்டு அவள் அருகே ஓடி வர.. அதற்குள் முகத்தில் அறைந்தவாறே “ஏம்மா என்ன விட்டுப் போன.. நீயில்லாம ஒவ்வொரு நாளும் விடிஞ்சு முடியறதுக்குள்ள.. என்னால முடியலம்மா.. என்னையும் கூட்டிட்டு போயிரும்மா” என்று நெஞ்சைப் பிடித்தவாறே அழ.. அதற்கு மேலும் அவளை விட்டுத் தள்ளி இருக்க முடியாத துருவன் அவளைத் தன் நெஞ்சில் சாய்த்துக் கொள்ள.. அவள் அழுகை இன்னும் அதிகமாகியது.
“மறுபடியும் வந்துரும்மா.. நீ இல்லன்னு என்னால நம்பவே முடியலம்மா.. எனக்கு இப்ப நீ வேணும்.. வாம்மா” என்று ஏதேதோ பிதற்றியபடியே அவள் அழுக.. துருவனுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அவள் முதுகை நீவியவாறே.. சற்று நேரம் அவளை அழ விட்டான்.
சில நிமிடங்களில் அவள் அழுகை தேய்ந்து தேம்பலாக.. அவளை எழுப்பி நிறுத்தியவன்.. மெல்ல அவளது அறைக்கு அழைத்துச் சென்றான்..இது எதையும் அவள் உணராமல்.. தனக்குள்ளேயே உழன்றவளை மெத்தையில் படுக்க வைத்து.. போர்வை போர்த்தி விட்டவன்.. சிறிது நேரம் அவள் கையைத் தட்டிக் கொடுக்க.. தேம்பியபடியே உறங்கிப் போனாள் நேத்ரா.
அவள் அறைக்கதவை லேசாக சாற்றிவிட்டு சோஃபாவில் வந்து அமர்ந்த துருவனின் மனம் எங்கும் முகத்தில் அடித்துக் கொண்டே அழுத நேத்ராவின் நினைவு தான்.
‘என்ன தான்டி உன் ப்ராப்ளம்’ என்று மனதோடு வினவியவாறே.. அந்த இரவை வெறுத்தபடி அமர்ந்திருந்தான் துருவன்.
துணையாவான்..

