
சொல்லாமல்…!
மௌனம் – 03
தன் முன்னே எதிர்பாராமல், தோழியைக் கண்டதும் திக்கென்றது,தர்ஷினிக்கு.
அதுவும்,நேரம் இரவு எட்டு மணியை அண்மித்திருக்க,இந்த நேரத்தில் தோழியின் வரவை எண்ணியே இருக்கவில்லை.
முன்பென்றால் அவளைக் கண்டதும், எழும் ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றிய, தோழியின் உறைநிலை அவளைக் கொஞ்சம் உலுக்கிப் போட,கார்த்திகாவின் மனதில் மெல்லிய வாட்டம்.
“தர்ஷினி..” அவள் அழைக்க சடுதியாய், கலைந்தவளின், புன்னகையை பூசிக் கொண்ட இதழ்களில் இருந்து “வாடி..வா..” என்று வார்த்தைகள் உதிர்ந்தாலும்,அந்த புன்னகையில் இருந்த உயிர்ப்பற்ற தன்மை தோழியை சோர்வடையச் செய்தது.
அவளும் அவள் கணவனும் விவாகரத்துக்கு விண்ணபித்தது,கார்த்திகாவுக்கு தெரிய வந்ததில் இருந்து அவளுக்கு அத்தனை யோசனை.
அவர்கள் நாடிச் சென்ற வக்கீல்,அவள் தங்கைக்கு தெரிந்தவராயிருக்க,எப்படியோ இவளின் காதை வந்தடைந்திருந்தது,செய்தி.
கார்த்திகாவின் விழிகளில்,அவ்வளவு ஆராயும் தன்மை.தோழியின் முகத்தை அணுவணுவாய் அளந்து,அவளின் எண்ணவோட்டத்தை படிக்க முயல,அதற்குள் அவள் பக்கத்தில் வந்தமர்ந்தாள்,தர்ஷினி.
கார்த்திகாவின் பார்வையில் சிறு வித்தியாசத்தை,அவள் உள் மனம் உணர,என்னவென்று கேட்டாள்,விழியுயரத்தி.என்னவோ,அந்தப் பார்வையே தன்னை கூரிடுவது போலிருக்க,அலைபாய்ந்த விழிகளில் கண நேரத்தில் இயல்பாகிற்று.
“எப்டி இருக்க கார்த்தி..?”,புன்னகையுடன் அந்த பார்வை வீச்சை தடை செய்தாள்.
“நா நல்லா தான் இருக்க..நீ எப்டி இருக்க..?” கேள்வியே,இயல்பற்று வந்தது.எனக்கு எல்லாம் தெரியும் என்ற படி,அவள் காண்பித்த பாவனையில் தர்ஷினிக்கு மனம் துணுக்குற்றது.
இவளுக்கு தன் விடயம் தெரிந்து இருக்குமோ என்கின்ற சந்தேகம் உருப்பெற,அதை வாய் விட்டு கேட்கவும் முடியவில்லை.
தெரிந்திருக்காத பட்சத்தில் தான் கூறித் தெரிய வருவது ஒரு புறம் என்றாலும்,அவளுக்கு தெரிந்திருந்தால் கூட,தான் அதைப் பற்றி எதுவும் கூறப் போவதில்லை என்கின்ற உறுதி,அவளுக்குள்.
என்னவாயினும்,அது அவளுக்கும் அவனுக்குமான தனிப்பட்ட விடயம்.அதில் யாரினது தலையீடும் இருக்கக் கூடாது என்பது அவளின் தீர்க்கமான எண்ணம்.
“நா நல்லா தான் இருக்கேன்..நீ எப்டி இருக்க..? வீட்ல அம்மாப்பா எப்டி இருக்காங்க..?”
“நல்லா இருக்காங்க டி..நானும் நல்லா தான் இருக்கேன்..” பட்டென்று தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டாள்,கார்த்திகா.இப்போதைக்கு இதைப் பற்றி பேச வேண்டாம் என்றே தோன்றிற்று.
“சரி..எப்போ தர்ஷினி வந்த வீட்டுக்கு..?” அவள் பேச்சை மாற்றும் பொருட்டு கேட்டிடவே இயல்பு நிலை திரும்பிய உணர்வு.
“நேத்து தான்டி..சரி உன் கல்யாண வேல எப்டி போகுது..”
“அது போகுது டி..ராகுல் ஃபாரின்ல இருந்து வந்ததும் டேட் பிக்ஸ் பண்ணிட்றதா சொல்லியிருக்காங்க..”
“அட…அப்போ இனி மிஸஸ்.ராகுலா தான் நாங்க பாப்போம் போல இருக்கு..”
“போடி நீ வேற..அவனுக்கு என்ன புடிச்சு இருக்கான்னே தெரியல…ஏதோ அம்மா அப்பா சொன்னதுக்காக தான் மண்டய ஆட்டி இருக்கான் போல..”
ஒரு வித வருத்தத்துடன் வந்து விழுந்த,தோழியின் குரலில் இவளுக்குள்ளும் பல நினைவுகளின் அலைமோதல்.
“கண்ணு இவன் தாத்தா பேச்சுக்கு தான் டா கல்யாணத்துக்கே சம்மதிச்சு இருக்கான்…கவனமா நடந்துக்கடா..”
அன்றொரு நாள்,அவன் தன்னை தன் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற நேரம், அவனின் தாயார் காதோரம் சொல்லிச் சென்றது நினைவில் வர,அந்த நேரம் வலிக்காததற்கும் சேர்த்து இப்போது வலித்தது.
முயன்று தன்னை கட்டுப்படுத்தியவளால், உயிர்த் தோழியின் முன் கூட அவனை விட்டுக் கொடுக்க, முடியாமல் போனதன் காரணம் ஆழமான காதல் அன்றி வேறேதாம்..?
அவள் விட்டு வந்தாலும்,அவனே விட்டுச் சென்றாலும்,அவள் காதல் ஒரு போதும் அவனை அவனிடம் கூட விட்டுக் கொடுக்காது.அவள் காதலுக்கு அதற்கான சூட்சுமம் கிடையாது.
“தர்ஷினி..”
“ம்ம்ம்ம்..”
“என்னடி யோசனைல இருக்க..?”
“ஹான் ஒன்னுல்ல..சொல்லு..”
“நீ பக்கத்து வீட்டு தேவேந்திரன் அண்ணாவ பத்தி என்ன நெனக்கிற..?”
“யாரு நம்ம சீனியர் தேவேந்திரனயா சொல்ற..?”
“ஆமா..ஆமா..” சிறு புன்னகையுடன் சொன்னவளுக்கு, தோழியின் மனதை ஆழம் பார்க்க வேண்டி இருந்தது.
“என்ன சொல்ல..டைரெக்ட் சீனியர்னு கெத்து காட்டிட்டு முன்னவெல்லாம் சிடு சிடு கடுகடுன்னு இருப்பாரு..அப்றம் கொஞ்சம் நல்லா பேசுவாரு..அதுக்கப்றம் சாதாரணமாவே பழக ஆரம்பிச்சுட்டாரு..ரொம்ப நல்ல மனுஷன்..”என்றவளின் மனதில், பலவித நினைவுகளின் ஊர்வலம்.
“ஆனா அவர் ரொம்ப பாவம் டி..”
“ஏன்..என்னாச்சு..? திடீர்னு ஏன் அப்டி சொல்ற..?” தர்ஷினியின் புருவங்கள் சுருங்கின.அவனுக்கு ஏதேனும் பிரச்சினையோ என்று தான் அவள் முதலில் யோசித்தாள்.
“அவரு நம்ம காலேஜ்ல ஒரு பொண்ண லவ் பண்ணாரு டி..”
“எதே..?இது எப்போ நடந்துச்சு..?எனக்கு நீ சொல்லி தான் தெர்யும்..நாம காலேஜ் இருக்குறப்போ கூட இது கேள்வி பட்டதில்ல..”
“வேறெப்போ நடக்கும்..அவரு படிக்கிற டைம்ல தான்..வன் சைட் லவ்..”
“அப்போ டபுள் சைட் இல்லியா..? பாவம் ல..அப்றம் என்னாச்சு..? அவங்க சேந்துட்டாங்களா..?
“இல்லடி..அவர் லவ்வ சொல்ல முன்னாடியே அந்த பொண்ணுக்கு நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க..”
“ஐயோஓஓ..பாவம்ல..அதான் அவரு இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்காரா..?”
“ம்ம்.அப்டியும் சொல்ல முடியாது…மே பி அந்த லவ்ல இருந்து வெளில வர்ரதுக்கு அவர் எடுத்து கிட்ட டைமா இருக்கலாம்..ஆனா..?”
“ஆனா…?”
“இப்போ அந்த பொண்ணுக்கு டிவோர்ஸ் ஆயிடுச்சாம்..அப்போ அவரு அந்த பொண்ண திரும்ப போய் கேக்குறது தப்பில்ல தான..”
“டிவோர்ஸ் ஆகினதுக்கு அப்றம்னா..கேக்குறது தப்பில்ல டி..ஆனா,நல்ல மனுஷன் தான் போல..இல்லன்னா டைவரோஸ் ஆகி இருக்குறது தெரிஞ்சும் திரும்ப அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க முன் வருவாரா..? லக்கி கேர்ள்..” அவள் சிலாகித்திட,தோழியின் பார்வை கனிந்தது.ஏனோ, அவள் கூறக் கூற கார்த்திக்காவின் மனதில் அத்தனை நிம்மதி.
“அப்போ நெஜமாவே, அந்த பொண்ண திரும்ப கல்யாணம் பண்ணிக்க ட்ரை பண்றதுல தப்பில்ல தான..”
“தப்பில்ல டி..இப்போ தான் டைவோர்ஸ் ஆயிடுச்சே…ஆனா..” என்று ஏதோ சொல்லிடப் பார்த்திடும், முன்னர் கதவு தட்டப்பட பாதியில் நின்று போனது,இருவரினதும் உரையாடல்.
“ஆனா அந்த பொண்ணு மனசுல வேற யாரும் இல்லாம இருக்கனும்..” தொடர்ந்து தோழி சொன்ன முனைந்ததை, கேட்டிருந்தால் கார்த்திகாவுக்கும்,அவளின் எண்ணப்போக்கு வெளிச்சமாகி இருக்கும்.
எதுவாயினும்,நடக்க இருப்பது தானே நடக்கும்!
தர்ஷினியின் தாய் இருவருக்கும், சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்து விட்டு நகர்ந்திட, கார்த்திகாவின் மனதில் பலவித யோசனைகள்.
தோழியின் தாயைக் கண்டதுமே,மனம் கலக்கம் கொண்டது.இந்த விவாகரத்து விடயம்,குறிப்பிட்ட இருவரை விட,இவளைப் பெற்றவரையே அதிகம் பாதிக்கும் என தோன்றிட,விபரீதம் ஏதும் நிகழ்ந்திடக் கூடாது என்கின்ற அவசர வேண்டுதல்,மானசீகமாய்.
“கார்த்தி என்ன யோசனடி..?”
“ஹான் ஒன்னுல்ல..சரி உன் புருஷன் அர்ஜுன் எப்ப உன்ன கூட்டி போக வர்ராராம்..?”
வேண்டுமென்ற கேட்ட கேள்வியில் சடுதியாய் ஒரு தடுமாற்றம் அவள் விழிகளில்.
அவளுக்கு அவ்வளவாய் அவனை பிடிக்காது.ஒரு வேளை தேவேந்திரன் தான் தோழிக்கு பொருத்தம், என்று அவள் மனதில் ஆழப் பதிந்திருப்பது காரணமாய் இருக்கலாம்.
என்ன தான் மறைக்க முயன்றாலும்,அதை தெளிவாகவே இனங்கண்டு மனதுக்குள் குறித்துக் கொண்டன,அவள் விழிகள்.
“தர்ஷினி..எப்ப வர்ராறாம்..?”
“வர்ரேன்னு சொன்னாரு டி..புது வீடு வாங்குறதுக்கு பாத்துகிட்டு இருக்காரு..அதான் இங்கயும் அலய முடியாதுல..”
விழிகளை பாராமல் எங்கெங்கோ, பார்வையால் அலசிய படி அவள் சொல்லிட ஏனோ தோழியின் மீது கடுங்கோபம் மனதுக்குள்.
தன்னிடம் கூட,அவனை விட்டுக் கொடுக்காததில் கொஞ்சம் கோபமும் வந்தது.ஆயினும்,அவள் குணம் தெரியுமென்பதால்,பாவமாகவும் இருந்தது.
இருவரின் தரப்பும் தெரியாது,அவளுக்கு.ஆனால்,தோழியின் மீது பிழையிருக்காது என்று இருசதவிகித நம்பிக்கை இருந்தது.
சிறிது நேரம்,உரையாடி விட்டு அவளும் கிளம்பிட விட,அதன் பின் கட்டிலில் வந்து படுத்துக் கொண்ட போதிலும்,உறக்கம் வரவில்லை,தர்ஷினிக்கு.
ஒருக்களித்து சரிந்தவளுக்கு,தன் மாற்றங்களை நினைக்கையில் இன்னுமே,வியப்பு தான்.
விலகிச் செல்பவர்களை விட்டு,தள்ளிச் செல்பவள்.ஆனால்,வெறுப்பை மட்டுமே அள்ளித் தெளிக்கும்,இவனின் நிழல் பிடித்துத் தானே,இவள் ஜீவன் சுழல்கிறது.
“எனக்கு இந்த சிடுசிடு கேரக்டர் எல்லாம் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல..நல்ல அன்பா கேரிங்கா இருக்கனும்..”முன்பெல்லாம் அவள் சொல்லிக் கொண்டு திரிந்தது இந்த வசனங்களைத் தான் என்றால் கல்லெடுத்தாவது அடித்து விடுவார்கள்,கேட்போர்.
வார்த்தைகளுக்கு மாறான,வாழ்க்கை.அந்த வாழ்க்கைப் பாதை முழுக்க,அவனின் பாதச்சுவடுகளே நிரம்பி இருக்க,அம்மாற்றமும் அவளுக்கு பிடித்துப் போயிருந்தது.
அவள் எண்ணங்களுக்கு,அப்பாற்பட்டவன் அவன்.ஆனால்,அவனுக்கென,அவளின் வரையறைகளை முற்றிலும் தகர்த்திருந்தாள்,தாலி வாங்கியவள்.
நேரம் பதினொரு மணி.இதற்கு மேலும் உறக்கம் வந்திடும், என்கின்ற நம்பிக்கை கொஞ்சமேனும் இன்றிப் போக, சத்தமின்றி கதவைத் திறந்து கொண்டு மொட்டை மாடிக்கு நகர்ந்தாள்,அவள்.
துப்பட்டா குளிருக்கு தோதாய் சுற்றப்பட்டிருக்க, கொட்டாவி விட்ட படி வானை இலக்கின்றி வெறித்தவளுக்கு இதழோரம் ஒரு விரக்திப் புன்னகை.
அவர்களின் வீட்டின் முன்னே இருக்கும் அந்த பாதையின் வழியே,பெரியளவு வாகனங்கள் செல்லாத போதும் இரவு நேரங்களின் விதிவிலக்காய் சிலது நகர்வதும் உண்டு.
ஏனோ வாகன சத்தத்தில் வீதியை எட்டிப் பார்த்தவளுக்கு அங்கு ஓரமாய் நிறுத்தப்பட்டிருந்த, வண்டி கொஞ்சம் சந்தேகத்தை கிளப்பிட்டாலும் கீழிறங்கிச் சென்றிட பயம் தான்.
அவளின் சந்தேகம் பொய்யென்பது போல, அடுத்த நொடியே அந்த வண்டி கிளம்பியிருக்க அவளிடம் நிம்மதிப் புன்னகையொன்று.
விளக்கு வெளிச்சத்தில் பெரிதாக தெளிவாக தெரியவில்லை என்றாலும் எதிர் வீட்டு மொட்டை மாடியில் நிற்கும் நிழலுருவத்தை கண்டவளுக்கு,சிறு யோசனை.
●●●●●●●●
“எங்க தான்,வச்சாளோ அந்த ஃபைல..” தோழிக்கு திட்டியவாறு,அலுமாரியை அலசிக் கொண்டிருந்தாள்,பூமிகா.
கடுப்பாக வந்தது,தோழியவள் மீது.நாளை அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
காலையில் தேடி ஏன் வீணான பதட்டத்தை உண்டு பண்ணுவான் என்கின்ற நினைப்பில் உறக்கம் கண்ணை முட்டிய போதும்,தன் தேடுதல் வேட்டையை அவள் தொடர்ந்திருக்க,கையில் அகப்படாத கோப்பை மனதுக்குள் சபித்திடவும் செய்தாள்.
“ச்சை” நெற்றியை நீவிக் கொண்டு,இமைகளை பிரித்து ஒட்டி வைக்காத குறையாய் தேடிட,ஒருவாறு அவள் கையில் கோப்பும் அகப்பட்டது.
நிம்மதி பெருமூச்சுடன் தோழிக்கு,அழைத்துச் சொல்ல, மறுமுனையில் இருந்த கயல்விழியும் கலாய்த்திட,உறுமிக் கொண்டே அழைப்பை துண்டித்தவளோ,அப்படியே கட்டிலில் விழுந்தாள்.
பூமிகா – கயல்விழி.இருவரும் பள்ளிக் காலத் தோழிகள்.பூமிகாவின் பெற்றோருக்கு மாற்றல் கிடைத்த சமயத்தில் அவள் வெளியூர் வந்திட,அதன் பின்னர் பெரிதாய் பழக்கம் இல்லை.
மீளவும் இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை கிடைத்திட,நட்பை புதுப்பித்து இன்னும் வலுப்படுத்த முடிந்தது.சில வாரங்கள் வரை,கயல்விழிக்கும் அவர்களின் கணினி நிறுவனத்தின் பூமிகா பணி புரியும் கிளையில் தான்,வேலை இருந்தது.
புதிய ப்ராஜெக்ட் ஒன்றுக்கு,வேறொரு கிளைக்கு தற்காலிகமாக,பணியாளர் ஒருவர் தேவைப்பட,கயல்விழியின் திறமையில் அவளை அங்கு நியமித்திருந்தனர்,சில மாதங்களுக்கென.
அழுது புலம்பாத குறையாய்,வழி அனுப்பி வைத்தாள்,பூமிகா.இருவரும் விடுதியொன்றில்,ஒரே அறையை பகிர்ந்து கொண்டிருக்க,அவளுக்கு அலுவலகத்தில் மட்டுமல்ல,இங்கும் தனிமையே.
அந்த தனிமையில் வெந்தவாறு கண்மூடியவளுக்கு,அலுமாரியை சரிவர மூடிப் பூட்டாதது நினைவிலாட,அரைக் கண்ணை திறைந்து வைத்துக் கொண்டு பூட்ட முயன்ற சமயம்,கதவில் முட்டிக் கொண்டு ஏதோ வந்து விழுந்தது.
“ஐயோ இது வேறயா..?” முணுமுணுத்த வண்ணம்,அதை கையிலெடுத்திட,முத்து முத்தாய் கயல்விழியின் கையெழுத்துக்கள்.
சட்டென,புரிந்து போனது,அது அவள் எழுதி வைத்த கதையொன்று என்பது.”அட நம்ம ரைட்டரோட ஸ்டோரி..” உள்ளுக்குள் அப்படி ஒரு குதூகலம்,பூமிகாவுக்கு.
தூக்கம்,தூரப் போன இடம் தெரியவில்லை.கயல்விழி கதை எழுதும் விடயம்,அவள் அறிந்ததே.ஆனால்,ஒரு போதும் அவளின் கதைகளை படிக்க தந்தது கிடையாது.
வற்புறுத்தி கேட்டால் கூட,”ஸ்டோரிய தந்தா,என்ன ஜட்ஜ் பண்ணுவாங்கன்னு தான் நா தர்ரதில்ல..” என,உறுதியாய் மறுப்பு சொல்வாள்,அவள்.
அதற்கு மேலும் தொந்தரவு செய்யாத போதும்,பூமிகாவுக்கு அவளின் கதையொன்றையேனும் படித்திட வேண்டும் என்பது நெடுநாள் ஆசை.
அவளுக்குத் தெரியாமல் படிப்பது தவறென்று புரிய,புத்திக்கும் மனதுக்கும் இடையில் ஒரு போராட்டம்.
“கத தான..” தன்னைத் தானே தேற்றிக் கொண்டு,முதல் பக்கத்தை புரட்ட முயல்கையில்,அவள் அலுமாரியில் இருந்த நாட்குறிப்புக்கள் அவள் கவனத்தை ஈர்த்திட,பேசாமல் கையில் எடுத்து ஒன்றை பிரித்து புரட்டினாள்.
ஏதேதோ,எழுதி இருக்க,அது கயல்விழியின் கையெழுத்து அல்ல என்பது புரிய,”அட கள்ளி!” திட்டினாள்,தோழியை.
ஏனோ,அதை வாசிக்க பெரிதாய் ஆர்வம் வராது போக,இறுதிப் பக்கத்தை பார்த்திட,விழிகள் சுருங்கின.
“தேடுகிறேன்!” என்று மாத்திரம் நேர்த்தியான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க,அதை அப்படியே மூடி வைத்து விட்டு,அவளின் கதையை புரட்ட,முதல் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் தலைப்பு.
“சொல்ல மறந்த கதை!” என்று எழுதியிருந்ததை வாசித்தவளுக்கு,ஒரு புறம் திகைப்பாக இருந்த போதிலும்,என்ன தான் இருக்கும் இந்த கதையில் என்கின்ற ஆர்வமும் அபரிமிதமாய்.
தொடரும்.
🖋️அதி..!
2026.07.04

