Loading

அன்றில்-7🦢

பிம்பங்கள் தொலைத்த

கண்ணாடியாய் 

நீளும் என் நாட்களுக்குள்

விரவிய வெறுமையை

ஒரு புன்னகையில்

கேள்வி கேட்கிறாய்..

நீ என்பது

பேராறுதல் எனக்கு.

 

அவளுக்கான ஐஸ்கிரீம் எடுத்துவர ஹர்ஷா நகர்ந்து சென்றுவிட.. அப்போது தான் எதிரில் இருந்த துருவனையும், கோகுலையும் காண.. ஒரு நொடி சிரிப்பதா வேண்டாமா என்று யோசித்தாள் நேத்ரா.

 

“நாஞ் சொல்லல.. இவ கொடூர இன்ட்ரோவெர்ட்னு.. சிரிக்கலாமான்னு யோசிக்கறா பாரு” என்று துருவன் சொல்ல.. அவளைப் பார்த்த கோகுலின் கை அவன் இடது பக்க நெற்றித் தழும்பை வருட.. அதைக் கண்ட நேத்ராவின் இதழ்கள் தன்னை மீறி விரிந்தது.

 

அதற்கு மேலும் அவர்களைத் தவிர்க்க முடியாது அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றாள் நேத்ரா.

 

அவள் அருகே வந்ததும் எழுந்த கோகுல் “இன்னமும் நாய்க்கு சோறு வைக்கறேன்னு போற வர்றவங்க மண்டைய உடைச்சு பொங்கல் வச்சுட்டு இருக்கறயா” என்று கேட்க..

 

“இல்ல திருந்திட்டேன்.. இப்ப நாய்க்கு சோறு வைக்கறவங்க கூட தான் சண்டை போடுறேன்” என்று அவளும் சிரித்தபடி பதிலுரைத்தாள்.

 

அது அவர்களின் கல்லூரிப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவம்.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பிரபாவின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.. அப்படி ஒரு முறை இருவரும் டூ வீலரில் வந்தனர்.

 

அப்போது தான் கோகுல் டூ வீலர் ஓட்டிப் பழகிய புதிது.. நேற்று முழுவதும் அடித்துப் பெய்த மழையில் இவர்கள் வீட்டு வாயிலில் ஒதுங்கிய ஒரு நாய்க்கு பாலை ஊற்றிவிட்டு நேத்ரா உள்ளே செல்லவும்.. இவர்கள் இருவரும் வரவும் சரியாக இருந்தது.

 

அந்த நாய் புதியவர்கள் என்று குரைத்தபடி குறுக்கே செல்ல.. கோகுல் எவ்வளவோ முயன்றும் அதன் ஒரு கால் மீது வண்டியை விட்டுவிட்டான்.. அதற்குள் துருவனும் சுதாரித்து விட.. இருவரும் காலைக் கீழே ஊன்றி ஒருவழியாகச் சுதாரித்து விட.. துருவன் கீழிறங்கி நாயைப் பார்க்கப் போக.. எங்கிருந்தோ வந்த பாத்திரம் ஒன்று கோகுலின் இடப்பக்க நெற்றியைப் பதம் பார்த்தது.

 

அது நேத்ராவின் கை வண்ணம் தான்..

 

அதன்பின் சத்தம் கேட்டு பிரபா வந்து.. இவளிற்கு நாலு வைத்து.. கோகுலிற்கு வைத்தியம் பார்த்து என்று அந்நாள் முடிந்தது.

 

அதே நியாபகத்தில் கோகுல் புன்னகையுடன் “எப்படி இருக்கற” என்ற வினவ..

 

மற்றவர்களிடம் தோன்றும் எவ்வித விலக்கமும் அவனிடம் தோன்றாமல் போக நேத்ராவும் “நல்லாருக்கறேன்னு நினைக்கறேன்” என்று சிரிக்க.. “நீ நல்லா தான் இருப்ப” என்று வாஞ்சையுடன் அவள் தலையை வருடினான் கோகுல்.

 

இதைப்பார்த்து உள்ளே சென்ற ஆல்ஃபாம் சிக்கன் மீண்டும் ஒரு முறை வெந்துவிடும் அளவு துருவனின் வயிறு புகையை.. ஐஸ்கிரீமைக் கையில் எடுத்து வந்த ஹர்ஷாவும் அது உருகும் அளவு கொதிப்புடன் தான் வந்தான்.

 

துருவனின் ரியாக்ஷனை ஏளனத்துடன் பார்த்த கோகுல்.. ஹர்ஷாவைக் கண்டுவிட்டு ‘இந்த எள்ளு தான் எண்ணெய்க்கு காயுது.. ஆனா இது ஏன் காயுது.. இவன எப்படி தெரியும் இவளுக்கு’ என யோசிக்க..

 

துருவனும் ‘காலையில அப்பா கூட சண்டை.. நைட் மகனோட டின்னர்.. எங்கியோ இடிக்குதே’ என்று அதையே தான் யோசித்தான்.

 

அதற்குள் ஹர்ஷா தான் வாங்கி வந்ததை நேத்ராவின் கையில் கொடுத்துவிட்டு “எப்படி இருக்கறீங்க மாமா” என துருவனிடம் கேட்க..

 

“ம்ம்.. ஃபைன் நீ இங்க என்ன பண்ற” என்றான் அவனை அளவெடுத்தவாறே.

 

“இங்க நண்டு சூப் சூப்பரா இருக்கும்னு என் ஃப்ரெண்ட் சொன்னான்.. அதான் ட்ரை பண்ணலாம்னு வந்தேன்” என்றான் ஹர்ஷா.

 

“இவன் என்ன ட்ரை பண்றான்னு உனக்கு எதாவது புரியுதா” என்று கோகுல், துருவனிடம் கேட்க.. அவனை முறைத்தான் துருவன்.

 

மீண்டும் அவனே “அப்பறம் மாமா எங்க அண்ணியும், லிட்டில் ப்ரின்சஸூம் எப்படி இருக்காங்க.. ஏன் எங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்றீங்க” என்று கேட்க..

 

“ஏன்னா அவங்க எங்க வீட்டுல இருந்தா தான் நல்லா இருப்பாங்கன்னு நா நினைக்கறேன்.. பெரிசா இன்னைக்கு கேக்கற அண்ணி, ப்ரின்சஸ்னு இதெல்லாம் இந்த நைன் மந்த்ஸா உனக்கு நியாபகம் வரலையா.. இல்ல உங்க வீட்டுப் பெரியவங்களுக்குத் தெரியலையா.. பேபி பிறந்து நைன் மந்த்ஸ் கம்ப்ளீட் ஆகப் போகுது.. ஆனா இப்ப வரைக்கும் உங்க பாட்டி குழந்தைய பாக்க வரல.. உங்க அம்மா, சித்தி ஹாஸ்பிடல் வந்துட்டு போனதோட சரி.. நீங்க எங்கள என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க” என்று கண்டபடி துருவன் திட்ட.. ஹர்ஷா விழித்தான்.

 

ஏற்கனவே நேத்ராவோடு நெருக்கமாய் அவனைப் பார்த்தே கிளம்பிய கடுப்பை மறைக்க அவன் வழி தேடிக்கொண்டு இருக்க.. போதாக்குறைக்கு அவனே அக்காவைப் பற்றி நினைவு படுத்த.. மொத்தத்தையும் சேர்த்து வைத்து வாங்கி விட்டான்.

 

அவன் பேச்சு நீளவும் கோகுல் அவன் தோள் பற்றி அழுத்தி “இவன்ட்ட ஏன்டா கத்துற” என்று நிதானத்திற்குக் கொண்டு வர..

 

“இல்லடா.. நாளைக்கு சார்க்கும் மேரேஜ் ஆகும்ல.. அப்ப கட்டுன பொண்டாட்டிய வீட்டுல இருக்க மத்தவங்க மதிக்கல, விட்டுட்டு வான்னு சொன்னா.. அப்படியே பண்ணிடப் போறான்.. இப்பவே இதெல்லாம் தெரிஞ்சுக்கட்டும்” என்று காட்டமாய் துருவன் சொல்ல.. அந்த வார்த்தைகளில் ஹர்ஷா திரும்பி நேத்ராவைப் பார்க்கவும்.. அவள் விழிகளில் லாவா குழம்பே வழிந்தது.

 

ஹர்ஷா அவளிடம் கண்களால் கெஞ்சிவிட்டு.. துருவனிடம் “சாரி மாமா.. ஆகாஷ் அண்ணாவும், பெரியம்மாவும் வந்து பாத்துட்டு தான இருக்காங்கன்னு நினைச்சுட்டேன்.. இவ்வளவு பெரிய இஷ்யுன்னு எனக்குத் தெரியல” என மன்னிப்பு வேண்ட..

 

அதில் சற்றே இரங்கிய துருவனும் “தெரிஞ்சுக்கனும் ஹர்ஷா.. எப்ப இதெல்லாம் பழகப்போற.. இன்னும் சின்னப்பையனா நீ.. இன்னும் பேபிக்கு நேம் கூட வைக்கல.. ரெண்டு பேர் வீட்டுக்கும் ஃபர்ஸ்ட் பேபி.. அதான் கொஞ்சம் எமோஷனலா பேசிட்டேன்.. மனசுல வச்சுக்காத.. மார்னிங் உங்கப்பா இது ரிலேட்டடா பேச வந்தாங்க.. ஆனா நீயும் இனி ஃபேமிலில என்ன நடக்குதுன்னு கவனம் வச்சுக்கோ” என்று தான் பேசியதற்கு வருந்தி அவனை திருத்தவும்.. இப்போது நேத்ராவின் விழிகள் அவன் மீது ஆச்சரியமாகப் படிந்தது.

 

அந்தப் பார்வையை எதிர்கொண்ட துருவனும் அவளின் விழிகளின் மீதே தன் கவனத்தை நிறுத்த.. சட்டென உள்ளெழுந்த தடுமாற்றத்தோடு தன் பார்வையை நேத்ரா விலக்கிக் கொள்ளவும்.. ‘பரவால்லயே.. ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் போல’ என்று துருவனும் எண்ணிச் சிரித்துக் கொண்டான்.

 

துருவனையும், கோகுலையும் பொதுவாய் ஒரு பார்வை பார்த்த நேத்ரா “ஓகே.. நான் கிளம்பறேன்” என்று விடைபெற..

 

“நேத்ரா.. ஒரு நிமிஷம்” என்று அவளை நிறுத்திய துருவன் “உன்னோட அப்பார்ட்மெண்ட்ல தான் இவனோட வீடும் இருக்குது.. ட்ராப் பண்ண முடியுமா” என்று கேட்கவும்.. அவள் மறுக்க முடியாது ஹர்ஷாவைப் பார்க்க.. அவனைத் தான் அழைத்துச் செல்வதாய்ச் சொன்னான் துருவன்.

 

அதில் ஹர்ஷாவிற்கும் நிம்மதி தான்.. ‘இப்ப துருவ் மாமா சொன்னதுல கொல காண்டுல இருப்பா.. இவள நம்பி போனா இவளே நம்மள நரபலி குடுத்துருவா’ என்று எண்ணிக் கொண்டான் அவன்.

 

அது புரிந்தோ என்னவோ அவனை முறைத்த நேத்ரா “இந்தா புடி.. இந்த வெனிலா ஃப்ளேவர்க்கு ஐஸ்கிரீம் கப்பு கழுவுன தண்ணி கூட இன்னும் நல்லாருக்கும்.. இதை ஏன் எனக்கு வாங்குன.. நீயே தின்னு” என்று அவன் கையில் திணித்துவிட்டு அவள் நடக்க.. மூவரும் அவள் பின்னே சென்றனர்.

 

தான் ட்ரைவ் செய்வதாகக் கூறி சாவியுடன் ஓட்டுநர் இருக்கையில் கோகுல் சென்று அமரவும்.. அவள் மறுபக்கம் வர.. அவளுக்காகக் கதவு திறந்துவிட்ட துருவன்.. அவள் கையில் ராஸ்பெரி ரிப்பில் ஐபாரைத் திணிக்கவும்.. அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

இளமுறுவலுடன் அவளை ஏறிட்டவன் “மார்னிங் வீட்ல இருந்து வரும்போதே கொஞ்சம் டென்ஷன்.. நடந்தது எதையும் யோசிக்காம போய் தூங்கு.. குட்நைட்..” என்று உரைக்கவும்.. அவள் உள்ளே அமர.. அதே புன்னகையுடன் டோரை சாற்றி அவளுக்கு விடை கொடுக்க.. குழப்பமாகவே அமர்ந்தாள்.

 

***

 

ஹர்ஷா வீட்டிற்கு வரும்போது அவனது தாத்தாவையும், தங்கையையும் தவிர அனைவரும் ஹாலில் தான் அமர்ந்து இருந்தனர்.

 

அவனைப் பார்த்ததும் பாட்டி காவேரி “என்னடா உம்பட மனசுல நெனச்சுட்டு இருக்கற.. ஜாம ஏமத்துக்கு ஊடு வர்ற.. இது ஊடா இல்ல சத்திரம் சாவடியா” என்று திட்டவும்..

 

“இது வீடு மாதிரி இருந்தா நான் ஏன் வெளிய போய் சுத்திட்டு வர்றேன்” என்று பாட்டிக்குத் தப்பாத பேரனாய் எரிந்து விழுந்துவிட்டு உள்ளே செல்லப்போக.. “சாப்பிட்டு போ ஹர்ஷா” என்ற அவன் பெரியம்மாவின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது.

 

 

திரும்பி அவரைப் பார்த்தவன் விழிகளில் குற்றவுணர்ச்சி மின்னியது.

 

 

“நா நேத்ரா கூட டின்னர் முடிச்சுட்டு தான் வர்றேன்” என்று அமைதியான குரலில் சொல்ல.. அனைவரும் அவன் அம்மா பல்லவியைப் பார்க்க.. பல்லவி மட்டும் பார்த்திபனைக் கவனித்தார்.

 

பல்லவி முக மாறுதலைக் கண்டு கொண்ட பாட்டி “ஏன்டா அறிவு கெட்டவனே.. அவிய சங்காத்தமே வேண்டாம்னு நாங்க எல்லா இருந்தா நீ தேடிப்போயி உறவு கொண்டாடிட்டு வர்றியா.. வெக்கமா இல்ல உனக்கு” என்று பேரனைத் திட்ட..

 

“எனக்கு எதுக்கு வெக்கமா இருக்கனும்.. நீங்க தான் மனுஷத்தன்மையே இல்லாம இருக்கறதுக்கு வெக்கப்படனும்.. அவகிட்ட ஆரம்பிச்சு இன்னைக்கு ஆகாஷ் அண்ணன் பொண்ணு வரைக்கும் உன்னோட வறட்டு கௌரவத்தை காட்டுறியே நீதான் வெக்கப்படனும்” ஹர்ஷா கத்தவும்.. ஆகாஷ் தலையைக் குனிந்து கொண்டான்.

 

பார்த்திபன் ஏதோ சொல்ல வரவும்.. அவரை முந்திக் கொண்ட பல்லவி “உனக்கு பெத்த அம்மாவை விட.. அவதான் முக்கியமா போய்ட்டாளா” என்று கண்ணீர்க் குரலில் கேட்டார்.

 

அவர் அருகே சென்ற ஹர்ஷா “யெஸ் நீங்க என்னப் பெத்தவங்க தான்..  ஆனா நீங்க அழுகும் போது எனக்கு எதுவுமே தோணல.. ஐம் சாரி.. ஆனா நேத்ரா தனியா என்ன பண்ணுவாளோன்னு தினமும் எனக்குத் துடிக்குது” என்று குரூரமாக அவரது கண்ணீரைப் பார்த்தபடியே சொல்ல..

 

“அவ தனியா இருக்கறான்னா அது அவ தலையெழுத்து.. என்ன புதுசா ஆகாஷ் புள்ள வரைக்கும் யோசிக்கிற.. அவ சொல்லிக் குடுத்தாளாக்கும்.. அவுங்க அம்மா இப்படி எம்பட குடும்பத்தை கலைக்க பாத்து தான் அல்பாயிசுல நெஞ்சு வெடிச்சு போய் சேந்தா.. இவளும்” என்று பாட்டி பேசிக்கொண்டே செல்ல..

 

“அம்மா” என்ற பார்த்திபனின் குரலுக்கு முன்னே “ஏய்”  என்ற அவரின் அப்பாவின் குரல் இடையிட்டது.. உறக்கத்தில் இருந்தவருக்கு இவர்கள் பேச்சு சத்தம் கேட்டதில் விழிப்பு வர.. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர் மனைவி பேசியதில் வெகுண்டுவிட்டார்.

 

 

“அடிப்பாவி.. அவ யாரோ எவளோவா கூட இருந்துட்டுப் போகட்டுமே.. ஆனா வாழ வேண்டிய சின்னப்புள்ளய என்ன பேச்சு பேசுற.. ஒரு நாளைக்கு நீ எத்தன மாத்திரை போடுறன்னு தெரியுதா இந்த உசுரை புடிச்சு வைக்க.. அப்படி நீ உசுரோட இருக்கனும் எந்தங்கச்சி பேத்தி அவ போய்ச் சேரனுமா.. வேண்டாம்டி.. இத்தன ஆங்காரம் இந்தச் சாவற காலத்துல உனக்கு நல்லதில்ல” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவருக்கு.. மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிட.. லலிதா ஓடிச்சென்று அவரது இன்ஹேலரை எடுத்து வந்து தந்தார்.

 

லலிதாவின் கையைப் பிடித்துக் கொண்ட தாத்தா “பிரபா அல்பாயிசுல போனான்னா உம்பட மகன் எதுனால போனான்.. அப்ப இது நீ பண்ணுன பாவத்துக்கு கூலி தான.. இல்ல நான் பண்ணுன பாவத்துக்குக் கூலியா.. ஆனா ஒன்னு தெரிஞ்சுக்க.. அவ செத்ததுல நீ நியாயமா பாத்தா வெசனம் தான் படோனும்.. ஏந்தெரியுமா.. இன்னைக்கு யார சந்தோசப்படுத்த நீ இப்படி நாக்குல நரம்பு இல்லாம பேசறியோ.. அவங்க யாருமே நீயோ நானோ படுத்துட்டா பாக்க மாட்டாங்க.. அக்கட்ட நகந்து போயிருவாங்க.. ஆனா பிரபா இருந்துருந்தா நீ இத்தன பண்ணுனதுக்கு அப்பறமும் நம்மள வெச்சு பாத்துருப்பா.. இதோ இந்த மருமகளும் பாத்துக்குவா.. ஆனா இவளுக்கு நீ என்ன பண்ணன” என்று கேட்கவும்.. கணவனை இத்தனை கோவமாய்ப் பார்த்திடாத காவேரி அவரது பேச்சில் அரண்டு போய் நிற்கவும்..

 

 

ஆகாஷ் “தாத்தா விடுங்க.. போய்த் தூங்கலாம் வாங்க” என்று அவர் கைப்பற்ற..

 

“அவர் பேசட்டும்ண்ணா விடு.. அப்ப யாரு தான் பேசுவா.. துருவன் மாமாவ நா இன்னைக்கு பாத்தேன்.. அவ்வளவு வருத்தப்பட்டாரு.. உங்க வீட்டுக்கு எப்படி நம்பி அனுப்பனும்னு கேக்கறாரு.. எங்கிட்ட பதில் இல்ல.. அப்பத்தான் எனக்கு அசிங்கமா இருந்துச்சு..  உனக்கும் பெரியம்மாவுக்கும்.. அண்ணிய, குழந்தைய இங்க வச்சு பாத்துக்கனும்னு ஆசை இருக்காதா.. குடும்பம்னா எல்லாரோட ஆசைக்கும் சரியான மதிப்பு இருக்கனும்.. இங்க அப்படியா சர்வாதிகாரம்ல நடக்குது” என்று தன் அம்மாவைப் பார்த்துக்கொண்டே ஹர்ஷா சொல்ல.. பல்லவியின் விழிகள் மீண்டும் கலங்கியது.

 

 

ஆகாஷிடம் திரும்பிய தாத்தா “கேட்டுகிட்டியா.. உந்தம்பி சொல்றத.. புத்தியோட பிழைச்சுக்க பாரு.. யாருக்காகவும் உன் குடும்பத்தை விட்ராத.. அதுவும் முக்கியமா இங்க இருக்கறவங்களுக்காக” என்று இறுதியாகக் கூறிவிட்டு.. தன் அறையை நோக்கி நடக்க.. பாட்டியும் வேறு வழியின்றி எதுவும் பேசாமல் அவரைப் பின்தொடர்ந்தார்.

 

பார்த்திபன் ஒரு பெருமூச்சுடன் நகர.. பல்லவியின் அக்கா சங்கீதா “பாத்தியாடி இந்தக் கிழவனுக்கு கொழுப்ப.. நாம ரெண்டு பேரும் வந்த அப்பறம் தான இத்தன வசதி வாய்ப்பு எல்லாம்.. அந்த நன்றி இல்லாம எவளோ ஒருத்திய தலையில வச்சு ஆடிட்டு போறாரு” என்று பொறுமவும்..

 

“விடுக்கா.. காலையில பாத்துக்கலாம்.. நீ தூங்கு போ” என்ற பல்லவியின் காதில்.. லலிதா, ஆகாஷ், ஹர்ஷா மூவரும் பேசுவது விழுந்தது.

 

 

“நேத்ராவ பாத்தியா ஹர்ஷா.. எப்படி இருக்கறா.. இங்க எதுக்கு வந்துருக்கா” என்று லலிதா கேட்கவும்..

 

“நம்ம துருவன் மாமா கம்பெனியில தான் ஜாயின் பண்ணிருக்கா” என்று ஹர்ஷா பதில் சொல்லிக்கொண்டு இருக்கவும்.. அவர்களைக் கடந்து தன் அறைக்கு நடந்தவர் மனதில் பலவித கணக்குகள் ஓட..

 

அமைதியாகக் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த பார்த்திபன் அருகில் அமர்ந்து “நாளைக்கு ப்ரியாவையும், ஆகாஷ் குழந்தையையும் போய் பாத்து பேசிட்டு வருவோம்” என்று சொல்ல.. எதிர்பார்த்தது தான் என்பது போலத் தலையசைத்தார் பார்த்திபன்.

 

 

துணையாவான்..

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்