என் உள்ளதை ஈரத்த பூமுகம் -14

Loading

 

முகம் 14

சமரசப்பாண்டியனோ அன்று முகம் முழுவதும் புன்னகையுடன் தான் அந்த அரிசி ஆளை முன்னே இருக்கும் காலி இடத்தில் அமர்ந்திருந்தார்.

நாளை நடக்கவிருக்கும் மருத்துவ முகாமுக்கு இடம் சரியாகத் தயாராகிறதா என்ற பார்வையுடன் அவர் அமர்ந்திருக்க, சக்திவேல் பாண்டியனின் பைக் அந்த வீதியினுள் நுழைந்தது.

சாதாரணமாகவே வம்பிழுப்பவர் இன்று கேட்கவும் வேண்டுமா??

அவரது நல்ல நேரமோ என்னவோ? அரிசி ஆளைக்கு முன் சக்திவேலின் வண்டி வரும் போது அந்த வழியால் வந்த இன்னொருவர் நிறுத்திப் பேசவும், அவரும் நின்று பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

சமரப்பாண்டியனோ சத்தமாக “என்னடா முருகா, பெரியாளுங்கன்னு ஊர ஏமாத்திட்டு திரிஞ்ச பயலுங்க எல்லாம் இன்னைக்கு இங்கயே சுத்துறாங்க, ஏதாச்சும் மருத்துவ உதவி வேணும்னா தயங்காம வரச் சொல்லு” என்று வீம்புக்கென்று பேசினார்.

சக்திவேலுக்கு அது புரிந்தாலும் அதனைக் கருத்தில் கொண்டதாகக் கூடத் தெரியவில்லை. பேசி முடித்தவர் அமைதியாய் வண்டியை உயிர்பிக்கப் பார்க்க, அன்றென்று பார்த்து அது அவரது பேச்சைக் கேட்கவில்லை.

அதில் இன்னும் சத்தமான சிரிப்பு தான் சமரசப்பாண்டியனிடம்.

“ஏலேய் முருகா, ‘சமரசப் பாண்டியனின் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெறும்னு’ ஊர் புல்லா போஸ்டர் ஒட்டச் சொன்னேனே ஒட்டியாச்சா?” என்று மீசையை நீவியப்படியே கேட்க, அவர் முகத்தில் பெருமை வழிந்தது.

அவரது கையாளோ “சும்மா ஜாமாய்ச்சு விட்டிருக்கோம் தலைவரே! அந்த ஜமீன் வீட்டு வாசல்ல மட்டும் குறைஞ்சது பத்து போஸ்டர் ஒட்டிருக்கானுங்க நம்ம பசங்க. பேனர் கூடப் பட்டையக் கிளப்புது. அதுல உங்க போட்டோ தான் அழகு தலைவரே! அப்படியே பத்து வயசு குறைஞ்சதாட்டும் இருக்கீங்க” என்று அவனும் பெரிய ஐஸ் மழையை தூக்கி அவர் மேல் வைக்க, மனிதர் மனம் குளிர்ந்து தான் போனார்.

அதுவும் அந்த வீட்டிலிருந்து ஒருவர், தன் முன்னே நிற்கையில் அந்தப் பேச்சு அறுசுவையையும் கொடுத்தது எனலாம்.

“எனக்கென்னடா முருகா வயசாகுது. இப்பவும் இளமை தான்” என்றவர்,

“நம்ம வீட்டு விருந்தாளிங்களுக்கு சமைக்க கறி எடுக்கச் சொல்லி இருந்தேனே! நல்ல இளம் ஆடாப் பார்த்து, இந்த சமரசப்பாண்டியன் போடச் சொன்னான்னு நம்ம கறிகடை முருகேசன் கிட்ட சொல்லி வாங்கிட்டு வா” என்றார்.

இந்த ஒருவாரமாய் ஊரில் அவர் பெயர் தான் அடிபடுகிறது. மனிதர் தரையில் நடக்கவில்லை, ஒரே பெருமை போதை தான்.

ஜமீன் வீட்டை விட மதிப்பில் தான் உயர்ந்துவிட்ட எண்ணம் அவருள்…

நேற்றிரவு மருத்துவ குழு வந்து இறங்கி இருக்க, அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்தவர், மிக முக்கியமானவர்களை மாத்திரம் அவர் வீட்டிலே தங்க வைக்க ஏற்பாடும் செய்திருந்தார்.

கோதை எத்தனை மறுத்தும் அவர் விடுவதாக இல்லை. தங்கியே ஆகவேண்டும் என்ற அன்புக் கட்டளை வேறு.

அவர் அழைப்பை நிராகரிக்க முடியாது என்பதனால், இறுதியில் தன்னுடன் கயல், விஷால் என தாங்கள் மூவர் மட்டும் அங்கே தங்குவதாக கோதை முடிவு எடுத்திருந்தார்.

சக்திவேல் எத்தனை முயற்சி செய்தும் வண்டியை உயிர்பிக்க முடியவில்லை என்றதும் மகனுக்கு அழைத்து விபரம் சொன்னவர், சற்று தள்ளி இருந்த மரத்தின் கீழ் வண்டியைத் தள்ளிச் சென்றார்.

காலையில் மகன் சொல்லியும் கேட்காமல் சிறிய வேலை தான் என காரை விடுத்து பைக்கை எடுத்து வந்திருந்தார்.

சில நாட்களாக ஓடாமல் இருந்த வண்டி என்பதால் திடீரென வேலையைக் காட்டி இருந்தது.

சிறிது நேரம் அங்கேயே இருக்க, சமரசம் பேச்சு வார்த்தையையும் பெருமை பாடலையும் விடவே இல்லை.

அழைத்த அடுத்த பத்து நிமிடத்தில் முகிலின்பனும், கிருபாகரனும் அவ்விடம் வந்து சேரந்திருந்தனர்.

தன் வண்டியிலிருந்து இறங்கிய இன்பனோ “என்னப்பா என்னாச்சு?” என்று கேட்டபடி தந்தையின் வண்டியைப் பரிசோதித்தான்.

“என்னனு தெரியல இன்பா, ஸ்டார்ட் ஆகல. நம்ம சைக்கிள் சண்முகத்துகிட்ட கொடுத்து என்னனு பார்க்க சொல்லணும்” என்றார்.

“நான் பார்த்துக்கிறேன்ப்பா நீங்க என் வண்டில போங்க” என்றவன் வண்டிச் சாவியைத் தர,

“வண்டி மட்டுமில்லடா முருகா, சிலரோட மூளையும் அப்படித்தான் அடிக்கடி மக்கர் பண்ணும்” என்று சமரசப் பாண்டியன் இன்னும் சத்தமாய் சிரிக்க, அவருக்கு ஒத்து ஊதியபடி அவரது அல்லக்கையும் சிரித்தான்.

கிருபாகரனோ அதில் கோபம் வந்தவனாக “இவர…” என்று பல்லைக் கடித்தபடி ஆரம்பிக்க,

“கிருபாஆஆ” என்ற சக்திவேலின் அழுத்தமான குரல் தடுத்தது.

“இல்ல சித்தப்பா, இவர் ஆட்டம் கொஞ்சம் ஓவரா…” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“அதுக்குன்னு இப்படி தான் பேசுவியா? அவரப் பத்தித் தெரியாததா விடு. ஏதோ இப்பதான் புத்தி வந்து நல்ல விஷயம் ஒன்னும் பண்றாரு சந்தோஷமா பண்ணிட்டு போகட்டும். பழிவாங்குறேன் அது இதுன்னு ஊர்ல குழப்பம் பண்ணாம, இப்படி ஊர் மக்களுக்கு நல்லது நடக்குதுனா சந்தோசம் தான்” என்று வண்டியில் ஏறி அமர்ந்தவரோ

“அது சரி, ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே ரெண்டு பேரும் லீவ் முடிஞ்சு வேலைக்கு போனீங்க. அப்புறம் என்ன திருப்பி ஒரு வாரம் லீவு?” என்று கேட்டார்.

“அது வந்து சித்தப்பா..” என்று இழுத்த கிருபாகரனோ ஏதோ ஞாபகம் வந்தவனாக,

“ஆஆன், சீனிவாசன் சாரோட பொண்ணுக்கு கல்யாணம் அதனால அதனால…” என்று மீண்டும் இழுக்க இன்பனோ அவன் காலில் மிதித்திருந்தான்.

அதில் “ஆஆ” என்று அலறியவனின் வாயை மூடிய இன்பனோ “அது ஒன்னும் இல்லப்பா, சாரோட பொண்ணுக்கு கல்யாணம் என்றகிறதால பெருசா கேஸ் எதுவுமே இந்த மாசம் எடுத்துக்கல. அதான் எங்களையும் ஊருக்கு போகச் சொல்லிட்டாரு” என்று ஒருவழியாக கிருபன் ஆரம்பித்த பொய்யை முடித்து வைத்தான்.

“இனிமேலாச்சும் தனியா பிராக்டிஸ் பண்றது பத்தி பேசி முடிவு எடுங்க, நானும் உங்க சார் கிட்ட பேசுறேன்” என்க பதறிய இன்பன்,

“இப்ப எதுக்குப்பா? அவரே கல்யாண வேலைல பிசியா இருப்பாரு. அப்புறம் நானே பேசிட்டு சொல்றேன்ப்பா” என்றான் நல்ல பிள்ளையாக…

அவரும் சரியெனத் தலையசைத்துக் கிளம்பி விட, அப்போதுதான் இருவருக்கும் மூச்சே வெளி வந்தது.

தந்தை போனது தான் தாமதம் கிருபாகரனின் முதுகில் மத்தளம் வாசித்து இருந்தான் முகிலின்பன்.

“ஏன்டா நாயே உனக்கு சொல்றதுக்கு வேற பொய்யே கிடைக்கலையா? அவரு பொண்ணுக்கு கல்யாணம்னா நாம ஏன்டா லீவுக்கு வரணும்? இதுல இல்லாத பொண்ணுக்கு கல்யாணம்னு வேற சொல்லி வெச்சிருக்க. மீசைக்கு உண்மை தெரியிற அன்னைக்கு செத்தடி மகனே” என்றவன் மீண்டும் மொத்த,

“டேய் டேய் கொலைகாரா விடுடா, உன் காதலுக்கு உதவி பண்ண வந்த என்னையே அடிக்கிறியா?” என்று முதுகை எட்டித் தடவியவனோ,

“இந்த நாள் உன் டயரில குறிச்சு வச்சுக்கோ…” என்று கிருபாகரன் ஆரம்பிக்க,

“சாரி மிஸ்டர் குட்டி சமரசம். எனக்கு டைரி யூஸ் பண்ற பழக்கம் எல்லாம் இல்லை. சோ இந்த வீர வசனத்தை வேஸ்ட் பண்ணாதீங்க” என்றான்.

“டேய் நான் தான் ஒரு ப்லோல போறேன்னு தெரியுதுல, வாய மூடிட்டு இரு. இப்போ நான் சொல்லியே தீருவேன். நீ கேட்டே ஆகணும்” என்றவன்,

“இந்த நாள் உன் டயரில குறிச்சு வச்சுக்கோ…” என்றவனை மீண்டும் இடையிட்டவன்,

“கொஞ்சம் போர்ஸ் கம்மியா இருக்கு, இன்னும் கொஞ்சம் ஹெவி ஃபெர்ஃபோர்மன்ஸ் உனக்கிட்ட இருந்து எதிர்பார்க்குறேனே” என்று சிரிப்பை அடக்கியபடி சொல்ல,

“அப்படியா, அப்போ சரி இரு ஒரு பொசிஷன்ல நின்னுகிறேன்” என்றவன் அவனது வண்டியில் சாய்ந்து நின்று,

“இந்த நாள் உன் டயரில குறிச்சு வச்சுக்கோ, முதல் முதல்ல வாதாடுற என் சொந்தக் கேஸ் உன்ன ஜெயில்ல போடுற கேஸா தான் இருக்கும். அப்போ வந்து கெஞ்சுவ அண்ணா என்னை காப்பாத்தி விடுடான்னு. அப்போ சரி பாவம் பொலச்சி போகட்டும் பெரிய மனசு பண்ணிக் காப்பாத்துவேன்” என்றவன் வண்டியில் ஏற, இன்பனின் வீசில் சத்தம் காதை கிழித்தது.

கிருபாகரனும் “நன்றி… நன்றி” என்று தலைவணங்கி நாடக பணியில் அவன் பாராட்டை ஏற்றுக்கொண்டான்.

கிருபாகரனின் வண்டியின் பின்னே ஏறிக்கொண்ட இன்பன், “அதுசரி நீ வாதடி நான் தப்பிக்கணுமா? இதுக்கு நான் ஜெயில்லையே இருந்திடுவேனே! உன்ன அண்ணான்னு கூப்பிடுற கொடுமைக்கு அது பரவாயில்லை” என்று சிரிக்க,

“டோன்ட் அண்டரஸ்டிமேட் தி பவர் ஆஃப் எ வக்கீல் மேன்” என்ற கிருபனோ வண்டியை எடுத்திருந்தான்.

சமரசப்பாண்டியனைத் தாண்டிச் செல்லும் போது இன்பனோ சும்மா இராமல் “ஆகாயத்துலயே மிதக்காம கொஞ்சம் கீழ இறங்குங்க சமரசம். இல்லனா தூரம் கம்மியா இருக்குனு எமதர்மர் ஸ்ட்ராய்ட்டா பரலோகம் கூட்டிட்டுப் போய்ட போறாரு” என்று சத்தமாய் அவரை வம்பிழுத்து விட்டே கிளம்பினான்.

________________________

மலர் தன்னை அறியாமல் யோசனையில் மூழ்கி இருக்க, சிவா வந்தது, அவள் அருகில் அமர்ந்தது இது எதையுமே உணரும் நிலையில் இல்லை அவள்.

அவள் தலையில் கொட்டிய சிவரஞ்சினியோ “என்னடி எந்த நாட்ட வாங்க இவ்வளவு யோசனை?” என்று அவள் மடி மீது பாதத்தை போட்டபடி தள்ளி அமர,

சுற்று முற்றும் பார்த்த மலரோ மெல்லிய குரலில் “ஒரு டெடிகேஷனே இல்ல சிவா உங்கிட்ட, இந்நேரத்துக்கு கயல் நம்ம ஊருக்கு வந்திருப்பாங்க. அடுத்து என்னனு யோசிக்கணும்ல. அதுக்கு தான் என்னோட ஏழாவது இல்லை இல்லை எட்டாவது அறிவ யூஸ் பண்ணித் தீவிரமா யோசிச்சு ஒரு வழி கண்டுபிடிச்சிருக்கேன்” என்றாள் புடவை ஜாக்கட்டில் இல்லாத காலரைத் தூக்கி விட்டபடி…

சிவாவோ சிரித்தபடி “உனக்கு ஆறறிவு இருக்குன்றதே எனக்கு இன்னுமே டவுட் தான். இதுல எட்டாவது அறிவு வேறயா? அதுசரி அப்படி என்ன ஐடியா எடுத்து வச்சிருக்கீங்க மேடம்?” என்று கேட்க,

தன் கதையைக் கேட்க ஒருவர் கிடைத்த சந்தோஷத்தில் ‘ரிவோல்வர் ரீட்டா’ ரேஞ்சுக்கு தன்னை எண்ணிக்கொண்டவளோ,

“மிஷன் இன்பமொழிக்குத் தேவையான நம்மளோட வெப்பன் பொஸ்ஸஸிவ்னஸ்” என்றாள் சிவாவின் பாதங்களை பிடித்து விட்டபடி…

அது இதமாய் இருந்ததில் தன் கால்களை வாகாகக் கொடுத்த சிவாவோ “சரி அதுக்கு?” என்றாள் கதை கேட்கும் ஆர்வத்துடன்.

“ஐயோ, புரியலையா சிவா? சரி நானே சொல்றேன். காதல் எங்க அதிகமா இருக்கோ அங்க தான் பொஸ்ஸசிவ் அதிகமா இருக்கும். இப்போ மாமா கூட நாம நெருக்கமா பேசுறத அவங்க பார்த்தாங்கன்னு வெச்சிக்கோயேன். உடனே பொறாமைல பொஸ்ஸசிவ் அதிகமாக கோபமெல்லாம் குறைஞ்சி காதல் மேல வந்துடும். அப்பறம் பிரிஞ்சவங்க சேர்ந்துடுவாங்க” என்று முடிக்க,

“இதான் படிக்கிறியா நீ காலேஜ்ல? நீ கெட்டது பத்தாதுன்னு இவளையும் சேர்த்துக் கெடுக்குற?” என்றபடி வேதவல்லி வீட்டினுள் நுழைய, பெண்கள் இருவரும் அடித்துப் பிடித்து எழுந்து நின்றனர்.

“அம்மா…” என்று மலர் இறங்கிய சுருதியுடன் அழைக்க,

“என்னடி பேச்சு இது, வயசுப் புள்ள காதல் அது இதுனு?” என்று அதட்ட, ஒரு பக்கம் பயம் என்றால், இன்னொரு பக்கம் முழுதாக விடயம் அவர் காதில் விழவில்லை என்ற ஆசுவாசம் இருவருக்கும்.

“அதான நல்லா கேளுங்க சித்தி. ஒன்னும் தெரியாத பச்ச புள்ள நானு, எங்கிட்ட என்ன எல்லாம் பேசுறா” என்று சமயம் பார்த்து சிவரஞ்சனி காலை வாறி அங்கிருந்து தப்பித்திருந்தாள்.

அதிர்ந்த மலரோ பேச வாய் திறப்பற்குள், வேதவல்லி அவளை காய்ச்சி எடுத்துவிட்டார்.

மலரோ பேசாமல் அப்படியே நின்றிருக்க, “என்னடி வாயில என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்க. பதில் சொல்லாம என் மூஞ்சியவே பார்த்தா ஆச்சா?” என்க,

‘அதுக்கு முதல்ல என்ன பேச விடணும் தாய் குலமே’ என்று எண்ணியவளோ “ம்மா அது காலேஜ்ல ஒரு நாடகம் நடிக்க ஒத்திகை பார்த்துட்டு இருந்தேன்ம்மா” என்றாள் பவ்யமாய்…

“நல்ல காலேஜ் தான் போ. பிள்ளைங்களுக்கு இப்படி எல்லாமா நாடகம் கொடுப்பாங்க” என்றவர்,

கொண்டு வந்திருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து, “இவளுக்கு நல்ல புத்தியக் கொடு தாயே” என்று கடவுளையும் தொந்தரவு செய்து விட்டே அறைக்குள் நுழைந்தார்.

அவர் அந்தப் பக்கம் சென்றதும் சிவரஞ்சினியை தேடிச் சென்றவள் “கொலைகாரப் பாவி” என்றபடி கட்டிலில் படுத்தபடி காலாட்டிக் கொண்டிருந்தவள் மீதே விழுந்திருந்தாள்.

“யம்மா, ஆஆஆஆ” என்று அலறிய சிவாவோ எழுந்தமர்ந்து இவளைப் பார்த்ததும் சிரித்தே விட்டாள்.

அதில் மேலும் கோபம் கொண்டவள் அவள் மீது மீண்டும் விழப்போக,

“அடிச்ச கைப்புள்ளக்கே இவ்வளவு காயம்னா அடிவாங்குனவன உயிரோட இருப்பான்ற?” என்று கேலியாய் கேட்டுச் சிரிக்க, அடுத்து அங்கே நடந்தது மொத்தமும் கலவரம் தான்.

________________________

அங்கே சமசரத்தின் வீட்டு பின் பக்கத் தோட்டத்தில் தனியே அமர்ந்திருந்தாள் கயல்.

மற்ற நேரமாக இருந்திருந்தால் அங்கிருக்கும் இயற்கையோடு நிச்சயம் ஒன்றிப் போயிருக்கக் கூடும்.

ஆனால் மனம் கலங்கிய நீரோடையாக இருக்கையில் எதிலும் கவனம் செல்லவில்லை அவளுக்கு…

இங்கே வர அவள் விருப்பப்படவே இல்லை. முதலில் அவள் மறுப்புக்கு ஆமோதித்த அவளது தாயோ, மயலின் வருகையில் பிடிவாதமாய் வந்தே ஆக வேண்டும் என்று நிற்க, மறுக்க முடியவில்லை அவளால்…

அது தானே அவள் பிரச்சனையும் தாய் சொன்னால் அவளால் அதனைத் தட்டிச் செல்லவே முடியாது. அவள் மனதே தாயின் பக்கம் தான் கொடி பிடிக்கும்.

இப்போது இந்த ஒரு வாரம் எப்படி அவன் ஊரில் அவனைப் பார்க்காமல் கடக்கப் போகிறோம் என்பதே அவளது முதல் கேள்வி.

அது சாத்தியம் இல்லை என அவளே அறிவாளே!

“என்ன டாக்டர் மேடம், சீக்கிரமே கல்யாணமாம். ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போலயே?” என்று சத்தம் கேட்க,

அவள் திரும்பி பார்க்க அவசியமே இன்றி, அது கிருபாகரன் தான் என அவளுக்குத் தெரிந்தது.

அவள் இதழ் மெல்லிதாய் வளைய, “பண்ணிக்கலாமே அதுக்கென்ன, ஏன் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா என்ன?” என்ற கேள்வி அவளிடம் இருந்து வர,

அவள் முன்னே வந்தவன் “ஓஹோ, நீங்க அப்படி வரீங்களா? பண்ணிக்கலாமே அதுவும் நீங்க தாராளமா பண்ணிக்கலாம். அதான் உங்கம்மா மாப்பிள்ளைய கையோட கூடவே வெச்சிருக்காங்களே அப்பறம் என்ன கவலை” என்றான் ஏற்ற இரக்கங்களுடன், நக்கல் தொணியில்…

அவளும் மாறாத புன்னகையுடன் “உங்க தம்பிக்கிட்ட போய் சொல்லுங்க, அவர் தலைமைல இங்கேயே சிறப்பா கல்யாணத்தை முடிச்சிட்டே போறேன்னு” என்க,

“கயல்…” என்றான் அழுத்தமான குரலில்.

“இப்போ வருதுல பெயர். நான் கூட மறந்துடீங்கன்னு நினைச்சேன்” என்றாள்.

கிருபாகரனிடம் சில நொடி மௌனம். மீண்டும் அவனே ஆரம்பித்தான்.

“என்ன கயல் பண்ண போறீங்க ரெண்டு பேரும். இப்படியே இருக்குறது தானா? நீ எப்போ உன் அம்மாகிட்ட பேசப் போற? அவனையும் உன் அம்மாகிட்டப் பேச விடமாட்டேங்குற. அவன் கூடவும் பேச மாட்டேங்கிற. ஆசப்பட்டு காதலிச்ச பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நிம்மதி இல்லாம சுத்துறான் அவன்” என்றான் ஆதங்கமாய்…

மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப் படுத்தியவளோ “பேசணும் கிருபாண்ணா, நானும் அதுக்காகத் தான் தினம் தினம் போராடுறேன். கல்யாணம் பண்ணிக்கிட்ட இந்த மூனு மாசமும் நான் முயற்சி செஞ்சிட்டு தான் இருக்கேன்” என்றவள்,

“அம்மா முகத்தைப் பார்த்து என்னால சொல்ல முடியல ண்ணா, நான் கேட்டா அம்மா இல்லைனு சொல்லப்போறது இல்ல. என்னோட சந்தோசத்துக்காக நிச்சயம் ஒத்துக்குவாங்க. ஆனா எனக்காக வாழுற அவங்கள ஏமாத்திட்டோம் எங்குற குற்ற உணர்ச்சி என்னை தினம் தினம் கொன்னுட்டு இருக்கு” என்றவளின் கண்ணில் கண்ணீர் துளிகள்.

“அப்போ எதுக்காக அவன் கூட சண்டை போட்டு இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்ட கயல்?” என்று எப்போதும் கேட்கும் அதே கேள்வியை இன்றும் கேட்டான்.

“எனக்கு தெரியல, அன்னைக்கு விட்டா நிச்சயம் என் முகி எனக்கு கிடைக்கவே மாட்டான்னு என் மனசுக்குள்ள ஒரு குரல் உறுதியா சொல்லிச்சு. அப்பாவ நினைச்சு பயம். அம்மா என்ன சொல்லுவாங்கன்னு பயம். ஏன் எனக்கு என் மேலயே பயம். ‘ஒருவேளை அம்மா சொல்லி நான் என் முடிவ மாத்திக்கிட்டா?’ அப்படினு எனக்குள்ள ஒரு கேள்வி எழுந்த அந்த நொடி என் கண்ணுக்கு என் முகிய தவிர யாருமே தெரியல, அவன் எனக்கே எனக்கா வேணும் என்கிறது மட்டும் தான் அன்னைக்கு என் முடிவுக்கான காரணம்” என்றாள்.

அவள் சொல்லும் போதே அந்த குரலில் தெரிந்த வேதனை கிருபாகரணை நிதானிக்க வைத்தது.

கூடவே அங்கே ஒருவன் பல நாள் கழித்துக் கேட்ட அவனது பொம்மையின் குரலில் உருகி உறைந்து கொண்டிருந்தான்.

 

ஈர்க்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்