
அன்றில்-4🦢
நேசம், கோவமென
நொடி தப்பாமல்
தன்னுணர்வுகளை
எனக்குக் கடத்திவிடும்
அவளிரு விழிகளுக்கு
தெளிவுரை தேவையற்ற
கவிதைகளின் சாயல்..
அவனோடு நக்கலாகப் பேசிய போது வராத கோவம் இப்போது தலைதூக்க “அய்யா சாமிகளா உங்க அக்கறை எல்லா எனக்குத் தேவையே இல்ல.. ஒழுங்கா உன் வேலைய மட்டும் பாரு சரியா.. ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்காத.. என்னையப் பாத்துக்க எனக்குத் தெரியும்” என்றாள் முகத்தில் அடித்தாற் போல.
அவள் குரலில் கோபத்துடன் சரி பங்கு கலந்திருந்த அவனை எப்படியேனும் விலக்கி வைத்து விடவேண்டும் என்ற அவளின் தவிப்பு ஹர்ஷாவுக்கும் புரிந்தது.
அவள் வார்த்தைகளில் சற்றும் முகம் மாறாமல் “நீ என்ன வேணா பேசு நேத்ரா.. நைட் ஃபுல்லா டிராவல் பண்ணி வந்ததுக்கு ஒரு காஃபி மட்டும் குடிச்சுட்டு இன்னும் தெம்பா என்னை பேசு ப்ளீஸ்” எனக் கெஞ்ச.. அதில் சற்றும் இளகாமல் தனக்கான வாகனம் வருகிறதா என அவதானித்தபடி இருந்தாள்.
அதில் ஹர்ஷாவின் முகம் வாட்டம் கண்டாலும் அதற்கு மேலும் பேசி அவள் கோவத்தைத் தூண்டாமல் அமைதியாக அவளோடே நின்றவன்.. அவள் எதிர்பார்த்த மகிழ்வுந்து வரவும்.. அவளைத் தடுத்துத் தானே அவள் உடைமைகளை வண்டியில் ஏற்றி வைத்தவன் “நீ செய்யமாட்ட இருந்தாலும் சொல்றேன்.. எதாவது எமர்ஜென்சின்னா யோசிக்காம என்ன கூப்பிடு.. ஐம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ்” என்று உருக்கமாகச் சொல்ல..
“கண்டிப்பா அடுத்த பாய் ஃப்ரெண்ட் ரெடி பண்ணிட்டு சொல்றேன்.. வந்து கங்ராஜூலேஷன்ஸ் சொல்லிட்டு போ.. இப்ப நகரு” என்று அவனிடம் நன்றி கூடச் சொல்லாமல் வண்டியில் ஏறி அமரவும்.. கார் புறப்பட்டது.
அவன் கண்களுக்குத் தான் திரும்புவது தெரியாது என்று உறுதிபடத் தெரியவும்.. அவனைத் திரும்பிப் பார்க்க.. அதே இடத்தில் நின்றிருந்தான் ஹர்ஷா.
கண்களை இறுக மூடித் திறந்தவள் ‘நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்க.. எல்லார் மாதிரி நீயும் என்னை விட்டுட்டுப் போயிரு.. அதுவும் நான் உன்னை எதிர்பார்க்கறதுக்கு முன்னாடியே போயிரு’ என்று மனதோடு பேசிக் கொண்டவள்.. தலைநகரின் காலைப் போக்குவரத்து நெரிசலில் பார்வையைப் பதிக்க ஆரம்பித்தாள்.
சோழிங்கநல்லூரின் ஓர் அதிநவீன அடுக்குமாடிக் குடியிருப்பின் முன் கார் நிற்க.. தன் சிந்தை கலைந்து விழித்தவள்.. ஓட்டுநரிடம் பணம் கொடுத்து “அண்ணா வண்டிய பார்க்கிங்ல போட்டுட்டு நீங்க கெளம்பிக்கோங்க.. மீதிய நான் டாடிகிட்ட பேசிக்கறேன்” என்று அனுப்பி வைத்தவள்.. தன் வீட்டை நோக்கிச் சென்றாள்.
ஏழாவது மாடியில் இருந்த தனது வீட்டினை அடைந்தவள் கதவைத் திறக்க.. காற்றை முந்திக்கொண்டு ‘ஹோ’வென்ற வெறுமை தான் முதலில் அவள் முகத்தில் வந்து மோதியது.
ஒருவனின் பிடிவாதத்திற்காக இங்கே வந்திருந்தாலும்.. இருக்கப் போகும் இந்தச் சில நாட்களுக்காவது தனது வெறுமையை.. தனக்குத் தெரிந்த கொஞ்சமே கொஞ்சமான நபர்களுடன் இருந்து, வாழ்ந்து கரைக்கத்தான் வந்திருக்கிறாள் நேத்ரா.
தன் எண்ணங்களை ஒதுக்கி கதவைத் தாழிட்டவள்.. அந்த 2BHK வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டினாள்.. அவள் ஒருத்திக்கு அது தாராளம் தான்.
எதையோ யோசித்தபடி அந்தச் சிறிய பால்கனியில் நின்று இலக்கற்று வெறித்தவள் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு.. தன் உடைமைகளில் இருந்து ப்ளூடூத்தை எடுத்து கனெக்ட் செய்துவிட்டு குளிக்கச் சென்றாள்.
காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது
மானே..
நீரில் குளித்தாலும்
நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது
தாயே..
பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
யேசுதாஸின் குரல் உயிரைத் தீண்டிக் கொண்டிருக்க வே.ஜோதி பிரபா.. தோற்றம் மறைவு எனத் தேதி பொறிக்கப்பட்ட புகைப்படச் சட்டத்திற்குள் புன்னகைத்தவாறு இருந்த அம்மாவைப் பார்த்தபடி துளி சலனமின்றி ஈரம் சொட்டும் கூந்தலுடன் நின்றிருந்தாள் நேத்ரா.
“ரொம்ப செல்ஃபிஷ்மா நீ.. உனக்கு கூட நா முக்கியமா இல்ல தானம்மா.. ஆனா இவ்வளவு பெரிய உலகத்துல எனக்கு உன்னத் தவிர யாரையும் தெரியலையே.. அல்மோஸ்ட் டென் மந்த்ஸ் ஆகிருச்சு.. ஆனாக்கூட தூங்கி முழிச்சதும் நீ பக்கத்துல இருப்பன்னு தோணுதும்மா.. ரியாலிட்டிய ஏத்துக்க முடியல.. ஏம்மா என்ன மட்டும் விட்டுட்டு போன” குரல் உடையவும் தொண்டையைச் சரி செய்து கொண்டவள் “ஓகே ஓகே.. நேத்ரா ப்ரேவ் கேர்ள்.. நோ டியர்ஸ்(tears).. நோ வொரீஸ்” என்று சமாளித்துக் கொண்டாள்.
அப்போது தான் அவள் வயிறு தான் இருப்பது குறித்து நினைவு படுத்தவும்.. விதம்விதமாகத் தன்னிடம் சமைத்துத் தரச் சொல்லும் அம்மாவின் நினைவில் மீண்டும் பெருமூச்சு எழுந்தது.
இன்னமும் யேசுதாஸ் ‘பூவே பூச்சுடவா’ என்று உருகிக் கொண்டிருக்க.. “நல்லா இந்த வாய்ஸ்க்கு என்னைய அடிக்ட் பண்ணிட்டுப் போய்ட்டம்மா நீ.. ஆனா அங்க நம்ம வீட்டுல இருக்க மாதிரி பெரிய சவுண்ட் சிஸ்டம் எல்லா இங்க இல்ல.. சின்ன ப்ளூடூத் தான்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றவாறே.. சோம்பேறித்தனமாக எதையோ செய்து சாப்பிட்டாள்.
வீடு ஏற்கனவே அவள் தங்குவதற்கான முன் ஏற்பாட்டுடனும், சகல வசதிகளுடன் இருக்க.. அவளுக்கும் அதற்கு மேல் வேலை இல்லாமல் போனது.. அலுவலகத்திற்கும் நாளை தான் செல்ல வேண்டிய நாள்.. இங்கு இருந்தாலும் களைப்பில் கூட உறக்கம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை என்ற உண்மை அவளைச் சுட.. அலுவலகத்திற்கே கிளம்பிச் சென்றாள்.
அதே நேரத்தில்.. தனது அக்காவின் சாபத்தை காதில் வாங்கியபடியே ஆசை மருமகளை ஒரு கையில் வைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த துருவனுக்குக் காலை உணவு பரிமாறிய கார்த்திகா “துருவ்.. அக்காவை அவங்க வீட்டுக்கு அனுப்பறத பத்தி எப்ப அப்பாகிட்ட பேசப்போற.. ” என்று வினவ..
ஏற்கனவே பாட்டியின் கைங்கர்யத்தில் வயிறு நிரம்பியிருக்க.. அவன் ஊட்டிய உணவுக்கு வாயைத் திறக்காமல்.. தலையை மறுத்து அசைத்தபடி அவன் உணவுத் தட்டை எட்டிப் பிடிக்கப் போராடிய அச்சிறு பூங்கைகளை தன் ஒரு கையில் அடக்கியவாறே “ம்மா.. அப்பாட்ட நா பேசும்போது லைட்டா இருமல் வந்தா கூட உங்ககிட்ட அப்படியே அப்டேட் பண்ணுவாரு உங்க காதல் மன்னன்.. நான் அவர்ட்ட பேசின அடுத்த செகன்ட்டே உங்களுக்கு இன்பர்மேஷன் வந்துருமே.. அப்பறம் என்ன.. விடுங்க” என்று பதில் கேள்வி கேட்டான் மகன்.
லேசான முறைப்புடன் “அதுல உனக்கு என்னப்பா வருத்தம்.. எங்களைக் கண்ணு வைக்காம சீக்கிரமா இப்படி ஒரு லைஃப் பார்ட்னர நீயும் தேடிக்கோ” என்ற அம்மாவின் சுட்டிக்காட்டலில்.. அவன் கண்ணில் ஒருத்தியின் நினைவு மின்னிப் போக.. அவள் நினைவில் அவன் அதரங்களில் புன்னகை முகிழ்த்தது.
அதைக் கண்டு கொண்டாலும் அவனாகவே சொல்லட்டும் என்று அதை ஒதுக்கிய கார்த்திகா “துருவ்.. இன்னைக்கு எப்படியாச்சு அப்பாட்ட பேசிரு” என்று அவன் சிந்தையைக் கலைக்க..
“அப்பாக்கு இன்னைக்கு ஃபுல்லா சி.எம் கூட ப்ரோக்ராம் இருக்கும்மா.. நைட் அவரே கால் பண்ணுவாரு.. நீங்க என்ன சொன்னாலும் சரிம்மா.. எனக்கு ப்ரியாவ அங்க அனுப்பறதுல இப்ப வரைக்கும் நல்ல டிசிஷனா தோணலம்மா” என்றான் முகம் சுருக்கலுடன்.
குழந்தையை அவன் கையில் இருந்து வாங்கிக் கொண்டு “அவ மேரேஜ்க்கு முன்னாடி நாங்க அவள ஓவரா ப்ரொடக்ட் பண்றோம்னு சொல்லுவ.. ஆனா இப்ப நீயே புருஷன் வீட்டுக்கு கூட அனுப்ப யோசிக்கறியே” என மகனைக் கிண்டலடித்த கார்த்திகா “அதெல்லாம் அவ ஹேண்டில் பண்ணிக்குவா.. நீ அப்பாட்ட பேசு.. அப்படியே அவங்க வீட்லயும் பேசிடு” என்று அறிவுறுத்த.. தலையை அசைத்தபடி கிளம்பிச் சென்றான் துருவன்.
Enfin IT Solutions..
துருவனின் ஏழு வருட உழைப்புக்குச் சான்றாய் கனகம்பீரமாக நின்றிருந்தது.. தந்தையின் செல்வம், செல்வாக்கு என அனைத்திற்கும் அப்பாற்பட்டு அவனுக்காய் அவனே உருவாக்கிய சாம்ராஜ்யம்.. இணையதளம் தொடர்பான பல்வேறு சேவைகளை இந்தியா முழுவதும் வழங்கி வந்த இவன் நிறுவனம்.. தற்போது உலகின் சில நாடுகளிலும் தன் காலடியைப் பதிக்க ஆரம்பித்திருக்கிறது.
அவனது அலுவலகத்தில் காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு.. லிஃப்டை நோக்கிச் செல்லப் போனவனை “துருவன்” என்ற பழகிய குரலில் ஓர் அழைப்பொலி நிறுத்த.. புன்னகையுடன் திரும்ப.. தனது டிரேட் மார்க் சிரிப்புடன் நின்றிருந்தார் பார்த்திபன்.
அவர் அருகே சென்று கை குலுக்கிய துருவன் “ஹலோ அங்கிள்.. எப்படி இருக்கீங்க.. வாங்க உள்ள போய் பேசலாம்” என்று அழைக்க..
பதிலுக்குப் கூட குலுக்கிய பார்த்திபனும் “ஃபைன் யங்மேன்.. நீங்க எப்படி இருக்கீங்க.. ரொம்ப இம்பார்டென்ட்டான மேட்டர் தான்.. அதை இங்க பேசறது சரி கிடையாது தான்.. ஆனா அதை தள்ளிப் போடவும் கூடாதுன்னு தான் இவ்வளவு காலையில உங்கள பாக்க வந்தேன்.. சாரி ஃபார் டிஸ்டர்பிங் யூ” என்க..
“அதெல்லாம் இல்ல அங்கிள்.. ப்ளீஸ் வாங்க” என்று அழைத்துக் கொண்டு தன் அறையை நோக்கிச் சென்றான்.
அவனது உபசரிப்புகளை மறுத்தவர் “ப்ரியாவ வீட்டுக்கு அனுப்பறதுல உங்களுக்கு என்ன சங்கடம் துருவன்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட.. அவரே கேட்ட பின் அவரிடம் பதில் சொல்வதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
“நான் சொல்லப் போற விஷயம் டெபனெட்டா உங்கள ஹர்ட் பண்ணலாம்.. கோவப்படுத்தலாம் அங்கிள்.. பட் இதெல்லா உண்மை இல்லைன்னு உங்களால சொல்ல முடியாது.. அதுக்கு முன்னாடி ப்ரியாக்கு பாப்பா பிறந்து எவ்வளவு நாள் ஆகுது”
“துருவன்.. அம்மா கொஞ்சம் பழைய காலத்து ஆள்.. இப்ப அவங்க பாக்காம இருக்கறத வச்சு.. அவங்களுக்குப் பாசமே இல்லைன்னு இல்ல.. டெய்லியும் கேட்டுட்டு தான் இருக்காங்க எப்ப குழந்தைய வீட்டுக்கு எடுத்துட்டு வருவீங்கன்னு.. அங்க வந்த அப்பறம் ஆட்டோமேட்டிக்கா பாசம் வந்துரும்” என்று தன் அன்னைக்கு சப்போர்ட் செய்தார் பார்த்திபன்.
அதில் அதிருப்தி உற்ற துருவன் “அங்கிள்.. உங்க வீட்டுல அவங்க மட்டுமே இல்ல தான.. ஹர்ஷா, லலிதா அத்தையத் தவிர வேற யாருக்குமே வந்து பாக்கனும்னு தோணலயே.. இவங்கள எல்லா நம்பி எப்படி குழந்தைய அனுப்பி வைக்கிறது” என்று பொட்டில் அடித்தாற் போல கேட்டான்.
அதில் பார்த்திபனுக்குமே மனைவி, தன் தம்பி மற்றும் அவரது மனைவி மீது மனக்குறை தான்.. இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவருக்குமே தெரியவில்லை.. இந்தக் காலத்தில் கூட இந்தப் பிற்போக்குத்தனத்தை சுமந்து திரியும் அன்னையை இத்தனை வயதிற்கு மேல் மாற்ற முடியாமல் அவரும் திணறிக் கொண்டு தான் இருந்தார்.
காவேரிக்கு பெண் குழந்தையைச் சென்று பார்க்க வேண்டுமா என்ற எண்ணம்.. மீதம் இருந்த பல்லவி மற்றும் சங்கீதா சகோதரிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே அண்ணன் குடும்பம் மேல் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது.. அடிமனதில் அவர்கள் தங்களை நம்பி இருக்கிறார்கள் என்ற சிறு இளக்காரம் கூட.. குடும்பத்தில் தம்பி ஒரு தனிப்பிறவி.. வீடு, வேலை தவிர ஒன்றையும் கருத்தில் கொள்ள மாட்டார்.
அவர்களை எண்ணி எழுந்த இயலாமைப் பெருமூச்சுடன் அவனை நிமிர்ந்து பார்த்த பார்த்திபன் “சரிப்பா.. இதுல தப்பு எங்க பக்கம் தான்.. நாங்க என்ன பண்ணினா உனக்கு எங்க மேல நம்பிக்கை வரும்” என்கவும்.. தான் பார்த்து வளர்ந்த ஆளுமையான மனிதர் தன்னிடம் இப்படிப் பேசுவதில் துருவனின் மனதும் லேசாய் அசைய.. அவனும் தன் கண்டிஷனைச் சொல்ல.. அவரும் வந்த விஷயம் ஓரளவு நல்லபடியாக முடிந்ததில் முகத்தில் மீண்ட சிரிப்புடன் கிளம்ப.. அவரை வழியனுப்ப கூடவே வந்தான் துருவன்.
கதவருகே வந்ததும் “ஓகே துருவன்.. சீ யூ” என்று அவர் அவனைப் பார்த்தபடியே விடைபெற.. அப்போது தான் கதவைத் திறந்து உள்ளே வந்த அவளைக் கவனியாமல் மோதிவிட.. எதிரில் வந்தவள் நிலைகுலைந்து கீழே விழப் போகவும்.. துருவனுக்கும் முன் அவசரமாக அவள் கையைப் பிடித்து நிறுத்தினார் பார்த்திபன்.
ஒரு நொடியில் தன்னை நிலைப்படுத்திய நேத்ரா.. தன்னைப் பிடித்திருந்த பார்த்திபன் விரல்களைப் பார்த்துவிட்டு.. அவர் முகத்தை ஏறிட்டுப் பார்க்க.. அவள் முகத்தில் தெரிந்த அசூயை உண
ர்வில்.. எதிரில் இருந்த இரண்டு ஆண்களின் முகமும் இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சியைத் தொலைத்து இறுகியது.
துணையாவான்..

