என் உள்ளதை ஈரத்த பூமுகம்- 10

Loading

முகம் 10

 

கண்களைத் திறக்கப் போராடி மெல்ல விழிகளைத் திறந்தவளுக்கு தன் முன்னே நின்றிருக்கும் கோதை தெரிய, சற்று முன்னர் நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்திருந்தது.

“ப்ச்” என்று எரிசலுடன் முனங்கியவள் எழப் போக,

“மொழி…” என்று பதறி அருகில் வந்தார் கோதை. அவளிடம் ஒரு வெற்றுப் பார்வை தான்.

அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த ஒருவனோ “என்னாச்சு பேபி? ஆர் யூ ஆல் ரைட்?” என்று கேட்டு கோதை உணர்வதற்கு முன்பே மொழியின் அருகில் நெருங்கி இருந்தான்.

“பார்த்து இருக்குறது இல்லையா பேபி? நீயே ஒரு டாக்டர் தானே, உடம்ப நல்லா பார்த்துக்கணும்ல!” என்றவன், அவள் கரத்தைப் பற்றப் போக, அவளோ கரத்தைத் தன் புறம் இழுத்துக் கொண்டாள்.

“ஓஓ சாரி, தீடீர்னு சிஸ்டர் நீ மயங்கிட்டன்னு சொல்லவும் பதறிட்டேன். இப்போ ஓகேல?” என்றான் மீண்டும் அவளை மேலிருந்து கீழ் ஆராய்ந்தபடி…

அவன் பார்வை அவளுக்கு ஏதோ அசௌகாரியத்தைக் கொடுக்க, “ஹூ ஆர் யூ மேன்?” என்றாள் அவனை பார்வையால் எட்ட நிறுத்தி…

“பேபி என்னாச்சு? என்ன யாருனு கேக்குற?” என்று அவளிடம் ஆரம்பித்தவன்,

கோதையிடம் “ஆண்டி, கயலுக்கு தலைல ஏதாச்சும் அடி பட்டிருக்குமோ? எதுக்கும் ஒரு எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்க்குறது பெட்டர்” என்றான்.

கோதையோ கையைப் பிசைந்தபடி “விஷால் இது நம்ம கயல் இல்…” என்று சொல்ல வர, மீண்டும் கதவு திறக்கும் சத்தம். இந்த முறை உள்ளே வந்தது கயல்மொழி.

விஷாலுக்கு கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அவனுக்கு தான் அவர்கள் இரட்டையர்கள் என்ற விபரம் தெரியாதே!

கோதையோ சட்டெனப் பதறிவிட்டார். “கயல் நீ ஏன் இங்க வந்த? உனக்கான கேஸ் டீடெயில்ஸ் சிஸ்டர் மாலா உனக்கு சொல்லுவாங்க. இங்க இருந்து போ” என்றவருக்கு பெரியவளை அங்கிருந்து அகற்றும் முனைப்பு.

அவர் குரலில் தெரிந்த பதற்றத்தில் மயல்மொழியின் உதடுகள் கேலியாய் வளைய, விழிகளில் இனங்கான முடியாத ஒரு உணர்வின் ரேகை…

விழிகளை இறுக்கமாக மூடிக்கொண்டவளது பார்வை தன் சகோதரியை மொய்க்க மறுத்தது. ஆனால் கயலின் பார்வை மொத்தமும் அவளின் விம்பமானவளின் மீதே! தாய் பேசியதைக் கூட காதில் வாங்கமல் தான் நின்றிருந்தாள்.

அவளுக்கு ஒரு தங்கை இருப்பதே அவளது பத்து வயதில் தான் தெரியவே வந்திருந்தது. அதுவும் தியாகராஜன் மூலம்.

‘தாயும் தந்தையும் ஏன் தனித்தனியே இருக்கின்றனர்?’ என்ற கேள்விக்குப் பதில் தேடியவளின் தேடலின் விடையாய் கிடைத்தாள் அவளது தங்கை.

அன்று தங்கை வேண்டுமென அடம்பிடித்து அழுதவளை ஏதேதோ காரணம் சொல்லி கோதை சமாளித்திருந்தார். அதன்பின் தங்கையை முதன் முதலில் பார்த்தது அவளது கல்லூரி முதல் நாளில் தான்.

பார்த்ததும் அத்தனை அதிர்ச்சி அவளுக்கு, இரட்டை என்று தெரியும் தான். ஆனால் இப்படி தன்னுடைய நகலாய் இருப்பாள் என சிறிதும் நினைக்கவில்லை அவள்.

பார்த்ததும் தாய் சொன்னது அனைத்தும் எங்கேயோ சென்று மூளையில் மறைந்து போக, நட்பு கரம் நீட்டி நின்றவளை சிறிதும் கண்டுகொள்ளவில்லை அவள் தங்கை. அதுவே மீண்டும் மீண்டும் கயலை அவளை நோக்கிச் செலுத்தியது.

கோதைக்கும் இது அதிர்ச்சி தான். மயல் அங்கேயே கல்லூரி வருவாள் என்று சிறிதும் அவர் எதிர்பார்க்கவில்லை.

ராம் ஏற்கனவே சொல்லி இருந்தாரே மயல் வெளிநாட்டில் சென்று படிக்கப் போவதாக, அதனால் தான் கயலை இங்கயே படிக்க அனுமதித்திருந்தார்.

ஆனால் விதி அக்கா தங்கை இருவரையும் ஒன்று சேர்க்க நினைத்திருக்கும் போல, மயல் முடிவை மாற்றிக் கொண்டாள். இல்லை இல்லை மாற்றிக்கொள்ள வைக்கப்பட்டாள்.

அதில் பாதிக்கப்பட்டது என்னவோ கோதை தான். கயலையும் அங்கிருந்து மாற்ற முடியாமல், மயலையும் ‘அங்கிருந்து சென்று விடு’ என்று சொல்ல முடியாமல் தினம் தினம் பயத்துடனே அவர் நாட்கள் கழிந்தது எனலாம்.

ஆனால் கயலின் வாழ்வில் அவை எல்லாம் ஒரு வசந்த காலம். அதுவரைக்கும் அவளுக்கு நண்பர்கள் என்னும் வகையில் யாரும் இருந்ததே இல்ல. பேசுவது கூட அரிது தான். கோதை அவளை எல்லாமுமாக பார்த்துக்கொண்டதில் அவளுக்கு வேறு உறவு தேவைப்பட்டதே இல்லை.

ராம்பிரசாத் அவளுக்கான அத்தனையும் பார்த்துக் கொள்கிறார் தான். ஆனால் அவருடன் அவளுக்கு ஒரு ஒட்டுதல் வந்ததே இல்லை. தனது தந்தை அவர் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வு மட்டுமே!

பேசினால் பேசுவாள், கொடுப்பதை வாங்கிக்கொள்வாள். ஆனால் உரிமை எடுத்து அவரிடம் செல்லம் கொஞ்சியதெல்லாம் இல்லை.

அவள் நண்பியாய் தாயாய் தந்தையாய், இப்படி எல்லா உறவுகளையும் ஒன்றாக பார்க்கும் ஒரே உறவு கோதை மட்டுமே!

ஆனால் இங்கே மயலைக் கண்டது முதல், தாயை தவிர்த்து தனக்கு இன்னொரு உறவு இருக்கிறது என்ற எண்ணம் அவளுள் வெகுவாய் ஊடுருவியது.

அவளுடன் பேசத் தூதுக் கடிதம் அனுப்புவது, அதனை அவள் நிராகரித்ததும் வேறு வழியில் தங்கையை நாடுவது என மீண்டும் மீண்டும் விடாமல் படையெடுத்துக் கொண்டே தான் இருந்தாள் கயல்.

அதில் ஒரு ஆர்வம் அவளிடம். அதற்காகவே முதல் முறையாக அவள் வட்டத்தைத் தாண்டி சித்தார்த்துடன் நட்புக்கரம் நீட்டி இருந்தாள்.

சித்தார்த் அங்கே அவர்களது சீனியர். இறுதியாண்டு மாணவன். தியாகராஜனின் விருப்பதுக்குரிய மாணவனும் கூட.

தியாகராஜன் மருத்துவ மாணவர்களுக்கான பகுதி நேர வழிகாட்டியாகவும் அந்தக் கல்லூரியில் கடமையாற்றி வருகிறார். அவர் மூலம் சித்தார்த் மயல்மொழிக்கு பழக்கமாகி நண்பனும் ஆகி இருந்தான்.

தங்கையுடன் பேச முதல் படியாக, அவனுடன் விரும்பி நட்பில் இணைந்து கொண்டாள் கயல்மொழி. அவளுக்கு அந்த உணர்வுகள் பிடித்திருந்தது.

அக்கா தங்கை இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழித்தது என்னவோ சித்தார்த் தான்.

ஒருத்தி பேசு என்று உரிமையாய் சண்டைக்குச் செல்வாள் என்றால் இன்னொருத்தி வாயைத் திறக்கவே மாட்டேன் என அழுத்தமாய் இருப்பாள். இருவரின் இடையிலும் சண்டையிலும் மாட்டிக்கொள்ளும் அப்பாவி அவன்.

இப்படியே கல்லூரி வாழ்க்கையில் மூன்று வருடங்கள் கடக்க, அவர்களது சண்டைக்குள்ளும் ஒரு பாசம் இழையோட ஆரம்பித்த தருணத்தில், விதி மீண்டும் பிரிவு என்ற நிலையை கொண்டு வந்திருந்தது.

அதன்பின் தங்கையை இன்று தான் பார்க்கிறாள் கயல்மொழி.

கண்களோ அவளது ஆரோக்கியத்தில் ஒரு அலசலை சடுதியில் செய்து முடித்திருக்க, கால்கள் அவளை நோக்கி நகர ஆரம்பித்த நேரம், கோதை அவளைக் கை பிடித்து வெளியேற முயல சித்தார்த் விடயம் கேள்விப்பட்டு அங்கே வந்திருந்தான்.

வந்தவன் கண்டது கயலின் கரத்தைப் பற்றி பரிதவிப்புடன் நின்றிருக்கும் கோதையையும், தங்கையையே பார்வையால் தொடரும் கயலையும், இவர்கள் வேண்டவே வேண்டாம் என்பதை போல் விழிகளை மூடிப் படுத்திருக்கும் மயலையும் தான்.

‘வந்ததும் முட்டிகிச்சா’ என்று எண்ணியவன் “என்னாச்சு மேம்?” என்று உள்ளே நுழைந்தான்.

அவரோ “என்ன ஆகணும் சித்தார்த். இவ வர்றான்னா என்கிட்ட இன்ஃபோர்ம் பண்ணனும்னு தெரியாதா உங்களுக்கு?” என்று அவரது கோபம் அவன் பக்கம் திரும்பியது.

“மேம்…” என்று அவன் இழுக்க,

“போய் அவளப் பாருங்க” என்றவர், பதில் எதுவும் சொல்லாமல் சித்தார்த்திடம் பார்த்துக்கொள்ளும் படி கண்ணசைத்து விட்டு கயலுடன் கிளம்பி இருக்க, விஷாலும் நடப்பது எதுவுமே புரியாது, கோதையுடன் வெளியேறி இருந்தான்.

அவர் சென்றதும் “ஏன்டி, இன்னும் உனக்கு இந்தப் பிரச்சனை இருக்கா? ரொம்ப நாளா வரலன்னு தியாகராஜன் சார் சொன்னாங்களே!” என்று கேட்க,

“கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் அத விடு. முதல்ல ஒர்க் ஆரம்பிக்கலாம்” என்று எழுந்து நின்றாள்.

“உத படுவ ராஸ்கல், இப்போ என்ன வேலை. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு, நீ வேலை செஞ்சி தான் தூக்கி நிறுத்தணும்னு எந்த அவசியமும் இந்த ஹாஸ்பிடலுக்கு இன்னும் வரல, மூடிட்டு ரெஸ்ட் எடு” என்றவன் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

________________

“ம்மாஆ, மயல் பாவம்ம்மா. இன்னும் அத நம்பிட்டு எங்க ரெண்டு பேரையும் ஏன்மா இப்படிப் பிரிச்சி வெக்கிறீங்க?” என்று அழவே செய்தாள் கயல்.

“இங்க பாரு கயல், என்னோட பயம் என்னைக்கும் உங்களுக்கு புரியப் போறதில்ல. அம்மாக்காகடா கண்ணா, என் ரெண்டு பொண்ணுங்களையும் ஒன்னா பார்த்துக்க முடியலைன்னு நான் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பேன். கொஞ்சம் புரிஞ்சிக்கோடா. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குறத விட உயிரோட நிம்மதியா இருக்கணும் என்கிறது தான் என்னோட விருப்பம்” என்றவர் பேசிக்கொண்டிருக்க, அங்கே வந்த தாதி ஒருவர் அனுமதி கேட்டு நின்றார்.

அவரை உள்ளே அனுமதித்த கோதையோ “சொல்லுங்க சிஸ்டர் மாலா” என்று சொல்ல,

அவரோ “டாக்டர், தியட்டர் ரெடி பண்ணியாச்சு, பி.பி கொஞ்சமா நார்மல் ஆகி இருக்கு” என்க,

“ஓகே, பிடியாட்ரிஷன் இன்னைக்கு யாரு டியூட்டில இருக்காங்க?” என்று கேட்க,

“டாக்டர் சித்தார்த் இருக்காங்க மேம்” என்றார் அவர்.

“ஓகே, சித்தார்த்த தியட்டர் வர சொல்லிடுங்க” என்றவர் கயலுடன் அங்கே சென்றார்.

__________________

“குழந்தைய வாங்கிக்கோங்க மா” என்ற கோதை தன் முன்னே நின்றிருந்த அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க,

“யம்மா தாயே! நீ தான் மா எங்க சாமி… நல்லா இருப்ப தாயி, உன் பிள்ளைங்களுக்கு எந்த ஆபத்தும் வராம ஆத்தா மீனாட்சி பார்த்துக்குவாத்தா” என்று அந்த வயதான பெண்மணி உள்ளம் குளிர ஆசியை வழங்கினார்.

நேற்று இரவு வாழ்வா சாவா என்ற நிலையில் நிறைமாத கருவுடன் இங்கே வந்து சேர்ந்திருந்த அவரது பேத்தின் உயிரை மட்டுமல்லாது குழந்தையையும் முழு ஆரோக்கியத்துடன் மீட்டு கொண்டு வந்திருந்தார் கோதை.

சற்று சிக்கலான பிரசவம் தான். தாயின் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் உயர்ந்து இருந்தது மட்டுமல்லாது, குழந்தையின் கழுத்தில் நஞ்சுக்கொடி சுற்றி இருந்தது.

முதலில் அவரது இரத்த அழுத்தம் குறைய மருந்து கொடுத்துத் தாயை சமநிலைப் படுத்திக் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

எத்தனையோ பிரசவம் பார்த்திருந்த கோதைக்கும் இது சவாலாகவே இருந்தது. எப்படியோ சில மணி நேரப் போராட்டத்தின் பின் தாயையும் குழந்தையையும் மீட்டெடுத்து விட்டனர்.

அவரது ஆசியைப் புன்னகை முகமாக ஏற்றுக்கொண்டு தனதறைக்குள் நுழைந்தவர், முதலில் அழைத்தது கணவனுக்குத் தான்.

“ஏன் ராம் மொழி வர்றத எங்கிட்ட சொல்லல?” என்று எடுத்ததும் கோதை கோபமாய் கேட்டதில் புன்னகைத்தவர்,

“என்னாச்சு கோதை இப்போ ஏன்மா இவ்வளவு டென்ஷன். நம்ம பொண்ணு நம்ம ஹாஸ்பிடல் வந்திருக்கா, இதுல என்ன இருக்கு, உன்கிட்ட பேசினாளா? உனக்கு ஒரு சர்பிரைஸா இருக்கட்டும்னு தான்மா சொல்லல” என்க,

“அவ எங்க பேச, ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தா, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு அவளுக்கு பேனிக் அட்டாக் கூட வந்திச்சு” என்க,

பதறிய ராமோ “என்ன கோதை சொல்லுற? அவளுக்கு ரொம்ப நாளா வராம தானே இருந்திச்சு. நான் கூட பூரணமா குணமாகிடிச்சினு நெனச்சேனே” என்று பதட்டத்துடன் சொன்னார்.

“நீங்க பயப்படாதீங்க ஜஸ்ட் மயக்கம் தான். இப்போ ஓகேயாகிட்டா” என்றவர்,

“கயலும் இங்கே இருக்கும்போது எதுக்காக ராம் அவளை இங்க அனுப்புனீங்க?” என்று மீண்டும் கோதை கேட்டதில் அவருக்கு உண்மையில் கோபமே வந்துவிட்டது.

“என்ன பேசுற கோதை? அவளும் நம்ம பொண்ணு தானே!” என்று சத்தமாய் வந்தது அவரது வார்த்தைகள். அதில் தெரிந்த கடுமையில் கோதைக்குக் கண்கள் கலங்கியே விட்டது.

மனைவியின் அழுகையில் நிதானதுக்கு வந்து “இங்க பாரு கோதை, ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ன்னு’ சொல்றது மாதிரி தான் இருக்கு உன்னோட கதை. அதுல இருந்து வெளியே வரப் பாரு போதும். உன்னோட அந்த நம்பிக்கை நம்மளோட வாழ்க்கைய மட்டும் இல்ல நம்ம குழந்தைகளோட வாழ்க்கையும் பாதிக்குது. அது ஏன் உனக்குப் புரிய மாட்டேங்குது” என்றவருக்குத் தெரியும் இருப்பத்தைந்து வருடமாய் மனைவி மூளையில் உறைந்திருக்கும் அந்த நம்பிக்கையை அழிப்பது கடினம் என்பது.

“நாம மயல் விஷயத்துல நியாயமா இதுவரை நடக்கவே இல்ல கோதை, அந்த ஒரு குற்ற உணர்ச்சி இன்னைக்கு வரைக்கும் என் மனசுல தீராத வடுவா தான் இருக்கு. இனிமேலாவது அவளுக்கு உரிமையானது அவளுக்கும் சேரட்டுமே” என்க,

அவரோ “என்னங்க நீங்க எனக்கு என்னமோ அவ மேல அக்கறையே இல்லன்ற மாதிரி பேசுறீங்க? உங்க யாருக்கும் என்னோட பயம் புரியப்போறதே இல்ல, நான் வேணும்னா அவளைப் பார்க்காமப் பேசாம இருந்தேன்? உங்களுக்கே தெரியும் கயல் சின்னவயசுல எப்படி வீக்கா இருந்தான்னு, எப்பவும் கூடவே ஒருத்தர் இருந்தே ஆகணும். சரி மயலுக்கு நீங்க இருக்கீங்களேன்னு ஒரு நம்பிக்கைல நான் இவளைப் பார்த்துக்கிட்டா. விதி மயல என்னை விட்டு ரொம்ப தூரம் கூட்டிட்டுப் போயிடிச்சு, ஒரு அம்மாவா என்னோட உணர்வுகள் உங்களுக்கும் புரியலையே!” என்றார் ஆதங்கமாய்…

“கோதை, என்னது இது அழுகை எல்லாம். நடந்ததப் பேசி எதுவுமே ஆகப்போறதும் இல்ல, அதோட விளக்கங்களும் நியாயங்களும் நமக்கு வேணா சரியா இருக்கலாம் ஆனா அனுபவிச்ச அவளுக்குத்தான் அதோட டெப்த் புரியும்” என்றவர்,

“இன்னும் ஒரு சிக்ஸ் மந்த்ஸ் தான் இங்க இருக்கப்போறா அதுவரை நம்ம பொண்ணு நம்ம இடத்துல உரிமையா இருக்கணும்னு எங்குறது என்னோட ஆசை. அன்ட் மெடிக்கல் கேம்ப்க்கு நீயும் கயலும் போறீங்கல்ல, சோ மயல் இங்க பார்த்துப்பா” என்றார்.

கோதையும் சமாதானமாகி சிறிது நேரம் பேசி வைத்தவர் அடுத்த நோயாளியைப் பார்க்கத் தொடங்கினார்.

அங்கே ராம்பிரசாத்துக்கோ மனது ரணமாய் போயிருந்தது. அவர் இப்படி தனியே இருக்கக் காரணமே அவரைக் கூறு போட, மௌனமாய் கண்களை மூடிய ராம் பிரசாத்தின் மனதுக்குள் அவர்களது கடந்தகாலம் படமாய் ஓடியது.

 

 

ஈர்க்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்