
அத்தியாயம் – 24
நித்யாவின் வீட்டு காம்பவுண்டினுள் நுழைந்த கருணாவின் பார்வையில் முதலில் விழுந்தது நித்யாவை ரிஷி தூக்கி சுற்றி கொண்டிருந்த அந்த அழகான தருணத்தை தான், நமக்கு அது அழகான தருணம், ஆனால் கருணாவிற்கோ அதை கண்டு உடல் இறுகியது, முகம் ரௌத்திரமாய் மாறி போனது, “ஸ்ரீ” கருணாவின் அழுத்தமான குரலில் நித்யா ரிஷி இருவரின் பார்வையும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பியது, கருணாவை கண்டதும் நித்யாவின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள், ரிஷியின் முகமோ சாதாரணமாக தான் இருந்தது இவன் வருவான் என்று ஏற்கனவே யூகித்தது போல,…
மெதுவாக அவளை கீழே இறக்கி விட்டான், முதலில் அவனை கண்டு அதிர்ந்து நின்ற நித்யா, பிறகு முகத்தில் நிம்மதியும் சந்தோஷமும் படர,… “கருணா” என்று அவனருகில் வந்தாள், அந்த நொடி ரிஷியின் முகம் சட்டென்று வாடி போனது, அவள் அவன் தாலி கட்டிய மனைவி தான், அவனை காதலிக்கிறாள், அவனது மகவையும் சுமக்கிறாள் தான் ஆனாலும் ஏனோ கருணாவை பார்த்ததும் மனைவி தன்னிடமிருந்து பிரிந்து அவனருகில் ஓடிச்சென்றது உள்ளுக்குள் ஒருவித வலியை தர தான் செய்தது, இவ்வளவு நேரம் முட்ட முட்ட அனுபவித்த மகிழ்ச்சி சட்டென்று மொத்தமாய் வடிந்து போன உணர்வு….
இங்கு கருணாவிற்க்கோ நித்யா தன்னை கண்டதும் முகத்தில் சந்தோசம் படர தனதருகில் வந்தது அவனுக்குள் எழுந்த கோபத்தை மொத்தமாய் மட்டுப்பட வைத்தது, அவள் தன்னை மறக்கவில்லை என உள்ளம் குளிர்ந்து போனது,….
“கருணா,… நீ,.. நீ… வந்துட்டியா கருணா?, உனக்கு உனக்காக தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்” அவள் கலங்கிய விழிகளுடன் இதழில் புன்னகையுடன் கூற,…”எனக்கு தெரியும் ஸ்ரீ, நீ எனக்காக காத்திருப்பன்னு எனக்கு தெரியும், உனக்காக உனக்காக தான் அந்த எமனையே எதிர்த்து போராடி வந்து உன் முன்னாடி நிற்கிறேன்” என்றான் சந்தோஷ மிகுதியில்,….
“இப்போ நீ எப்படி இருக்க, உன் காயம்”அவள் அவனது கட்டு போடப்பட்ட தலையை பார்த்து கேட்க… “நான் நல்லா இருக்கேன், இப்போ உன்னை பார்த்துட்டேன்ல இனி சந்தோசமாவும் இருப்பேன், என் வாழ்க்கை இனி உன்கூட தான், வா ஸ்ரீ, நான் உன்கிட்ட நிறைய பேசணும், நாம போலாம்” அவளது கரத்தை அவன் பற்ற,… “இ.. இல்ல கருணா, இங்கே இங்கேயே பேசலாம், நானும் உன்கிட்ட நிறைய பேசணும், நிறைய சொல்லணும்” என்றாள், அவன் சட்டென்று வா என்று அழைக்கவும் கொஞ்சம் தடுமாறியும் தான் போனாள்,…
“எவ்வளவு வேணும்னாலும் பேசலாம் ஸ்ரீ, ஆனா இங்க வேணாம், வா நாம எங்கேயாச்சும் போயிடலாம், அங்கே நீயும் நானும் மட்டும் தான் யாரோட தொந்திரவும் இல்லாம இருக்கணும், அங்க போயி எவ்வளவு வேணும்னாலும் பேசலாம்” அவன் கூற,… “கருணா,… இல்ல அது” அவள் தனக்கு திருமணமான விஷயத்தை சொல்ல முடியாமல் தடுமாற,… “என்ன ஸ்ரீ,… என்கூட வரமாட்டியா, நீ எனக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தை மறந்திருக்க மாட்டேன்னு நம்புறேன்” என்றான் அழுத்தமான பார்வையில்,…
“கருணா…. நான், நான் இப்போ உன்கூட வர முடியாது, தயவுசெய்து நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளேன், எனக்கு” என அவளுக்கு திருமணமான விஷயத்தை கூற வந்த சமயம்,… “ஏன் ஸ்ரீ இப்படி பண்ணுற, நான் சொல்றது உனக்கு புரியலையா? உன்கூட நான் தனியா பேசணும் நம்ம வாழ்க்கையை பத்தி” அவள் சொல்வதை கேட்காமல் அவன் தன்பாட்டிற்கு பேச,…. “நானும் உன் வாழ்க்கையை பத்தி பேசணும் கருணா, அதுக்கு முன்னாடி என்னை பத்தியும் உன்கிட்ட சொல்லணும்” என்றாள் படபடக்கும் மனதுடன்….
“சரி சொல்லு, என்ன சொல்ல போற நீ” அவன் விட்டேற்றியாக கேட்க,… “கருணா,.. எ.. எனக்கு கல்யாணமாகிடுச்சு” இதயம் படபடக்க இதனால் அவன் எதிர்வினை எப்படி மாறுமோ என்ற பயத்துடன் சொல்லி முடித்து விட்டாள்,…..
அவள் பயந்தது போல் அவன் முகத்தில் உட்சபட்ச அதிர்ச்சியை பார்க்க முடிந்தது அதுவும் சில கணங்களே,… நொடியில் முகத்தை இயல்பாக்கி கொண்டவன்… “அதனால என்ன இப்போ” என கேட்க,.. நித்யாவிற்கு தான் பயம் இன்னும் கூடி போனது,….
“கருணா,… இப்போ நான் இன்னொருத்தரோட மனைவி” முதலில் தன் நிலையை அவனுக்கு அழுத்தமாக புரிய வைக்க நினைத்தாள்,….
“உனக்கு கல்யாணமாகிடுச்சு, நீ இன்னொருத்தரோட மனைவி அப்படி தானே, பரவால்ல ஸ்ரீ எனக்கு அதை பத்தி கவலை இல்ல, எனக்கு தெரியும் நீ விருப்பப்பட்டு இந்த கல்யாணத்தை பண்ணிருக்க மாட்டன்னு, உன் வீட்ல உள்ளவங்க எதையாவது சொல்லி மிரட்டி தான் உனக்கு இந்த கல்யாணத்தை செய்து வைத்திருப்பாங்க, என்ன நான் சொல்றது சரி தானே” அவன் நடந்ததை கண்கூடாக பார்த்தது போல் கூற,… “ஆமா கருணா, ஆனா” அவள் நடந்ததை பற்றி முழுதாக விளக்க வரும் முன், “இல்ல ஸ்ரீ, இதுக்கு மேலயும் நீ எதுவும் சொல்ல வேணாம், உன்னோட இந்த ஆமா என்ற பதிலே எனக்கு போதுமானது, வா நாம போலாம்” என விட்ட அவளின் கையை மீண்டும் பற்ற,…. “இல்ல,… கருணா தயவு செய்து நான் சொல்ல வரதை முழுசா கேளு” என்றான் கெஞ்சல் பார்வையில் தன் கையை உருவிக் கொண்டு,…
சட்டென்று உருவிக் கொண்ட அவளது கரத்தையும் அவளையும் மாறி மாறி பார்த்தவன்…. “என்ன? என்ன சொல்ல போற நீ” இந்த முறை அவன் முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது,…
“கருணா,… அது… நான்… நான் கர்ப்பமா இருக்கேன்” என்று கூறிவிட்டாள் பட்டென்று, அதனை கேட்டு அவனது புருவங்கள் சுருங்கியது, அவளை அழுத்தமாக பார்க்க, அவளோ கரங்கள் பிசைந்த நிலையில் மனம் படபடக்க நின்றாள்….
“வேற ஏதாவது சொல்ல வேண்டியது இருக்கா” அவள் சொன்ன விஷயத்தை அவன் பெரிதாக எண்ணவில்லை என்று அவனது இச்சொல்லின் மூலம் புரிந்தது, ‘இவனுக்கு நான் சொன்னது புரியலையா’ எனும் பார்வை பார்த்தாள் அவனை….
“இங்க பாரு ஸ்ரீ, நீ கல்யாணப்பண்ணிக்கிட்டது, இப்போ கர்ப்பமா இருக்கிறதுன்னு எனக்கு இது ரெண்டும் பிரட்சனை இல்ல, எனக்கு நீ வேணும் அவ்வளவு தான், பரவால்ல உன்கிட்டருந்து வர குழந்தை தானே, எனக்கு நீயும் அந்த குழந்தையும் ஒன்னு தான், நான் பத்திரமா பார்த்துகிறேன் உன்னோடு சேர்த்து குழந்தையையும்” என்றிட, அவளுக்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது, அவள் கணவன் வேறு இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருக்கிறான் என மனம் பரிதவித்தது அவனுக்காக, ஆனால் கருணாவிடம் கோபம் கொள்ள முடியவில்லை, அவன் தன் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தால் இத்தனை பெரிய விஷயத்தை இவ்வளவு சுலபமாக எடுத்து கொண்டு தன்னோடு சேர்த்து தன் குழந்தையையும் பார்த்து கொள்கிறேன் என்று கூறுவான், அவனுக்கு தான் எந்தளவிற்க்கு முக்கியம் என்பது புரிந்தது, புரிந்தும் என்ன பிரயோஜனம் அவள் வாழ்க்கை அவளின் கணவனுடன் தான் என அவள் என்றோ முடிவு செய்து விட்டாள், இப்போது கருணாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அவள் புரிய வைக்க நினைத்தாள், அவன் புரிந்து கொள்வான் என்பதும் சந்தேகமே? எது எப்படி இருந்தாலும் அவனுக்கு தன் நிலையை விளக்க வேண்டியது அவள் கடமையாக எண்ணி, விழிகளில் வழிந்த நீரை அழுத்தமாக துடைத்து கொண்டு அவனை ஏறிட்டவள்,… “கருணா,… நான் இந்த கல்யாணத்தை விருப்பம் இல்லாம தான் பண்ணிக்கிட்டேன் அது உண்மை தான், உன்னை ஏமாற்ற விரும்பாமல் இந்த காலயணத்தை நிறுத்த நான் எவ்வளவோ முயற்சி பண்ணேன் ஆனா முடியல, முதல்ல இந்த வாழ்க்கையை என்னால ஏத்துக்க முடியல, அப்புறம் என் புருஷனோட அன்பால நான் அவரோட சேர்த்து எனக்கு கிடைச்ச வாழ்க்கையையும் மனப்பூர்வமா ஏத்துகிட்டேன், என் புருஷனை நான் அளவுக்கு அதிகமா நேசிக்கிறேன், என்னோட மித்து தான் என் உலகம், அவரை பிரிஞ்சி என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது, எங்க அன்புக்கு அடையாளமா கிடைச்சது தான் எனக்குள்ள ஜனித்திருக்க உயிர், எங்க குழந்தை” அவள் கண்ணீர் வழிய, தன் கணவன் மீதான காதலை கருணாவிடம் எடுத்துரைக்க அவன் தான் ஆடிபோய்விட்டான்,…. அவள் தன்னுடனே இருந்துவிடுகிறேன் என்று சொன்ன அந்த தருணம் அவன் எத்தகைய கனவெல்லாம் கண்டு வைத்திருந்தான், அனாதையான தனக்கு அனைத்து உறவாகவும் கிடைத்த அவளை பொக்கிஷமாய் எண்ணினான், தன் வாழ்க்கை இனி பேரானந்ததோடு தனக்கு கிடைத்த தேவதையின் அன்பினால் நிரம்பி வழிய போகிறது என்று எக்கச்சக்க ஆசை கொண்டிருந்தான், இனி அவளுக்காக அவளின் விருப்பத்திற்கேற்ப இருக்க வேண்டும் என மனதில் சூளுரைத்து கொண்டவன், தற்போது அவள் வேறு ஒருவனை காதலிக்கிறேன் அவன் இல்லையென்றால் தான் இல்லை என்று கூறியதை கேட்டு அவன் இதயத்தை யாரோ செம்மட்டியால் அடித்தது போல் துடி துடித்தது, விழிகளில் கண்ணீர் அவன் அடக்க நினைத்தும் வெளிப்பட்டுவிட்டது, உடல் ஜீவனற்று செயலிழந்து போனது போல் உணர்ந்தான், கால்கள் நிற்க கூட திராணியற்று விடுவிடுவென்று ஆட்டம் கண்டது,….
கருணாவின் இந்நிலை நித்யாவின் மனதை சுக்குநூறாய் சிதற வைக்க,… கையெடுத்து கும்மிட்டு “என்னை மன்னிச்சிடு கருணா” கதறியவள்,… “நான் உன் மனசை நோகடிக்க இப்படி சொல்லல, நான்” என அவள் தன் பக்க நியாயத்தை கூற வந்த சமயம்,… “நிறுத்து” கரம் நீட்டி அகங்காரமாய் கத்தியதில் திடுக்கிட்டு போனாள் நித்யா,…
விழிகள் சிவக்க, முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாட, அனல் தெறிக்க அவளை நோக்கியவன்,…. “துரோகி,… நம்பிக்கை துரோகி” அவனது வார்த்தையிலும் பார்வையிலும் செத்தே போய்விட்டாள் நித்யா,….
“இறுதியா என்னை பெத்தவளும் நீயும் ஒரே மாதிரி தான்னு நிரூபிச்சிட்ட இல்ல” அவனது வார்தைகள் அவளை துடிதுடிக்க வைத்தது,…
“அவளும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு ஒருத்தன் பின்னாடி போனா, நீயும் இப்போ அதையே தான் செய்திருக்க” வேதனையை அடக்கிக் கொண்டு, பற்களை நறநறவென்று கடித்து அவளை கொல்லும் பார்வை பார்த்தவன்,…. “இந்த பொம்பிளைங்க புத்தி ஏன் இப்படி போகுது, ச்சே எல்லாம் என் தப்பு தான், சின்ன பிள்ளையிலேயே பெத்தவளே வேணாம்னு கடாசிட்டு போயிட்டா, பத்து மாசம் சுமந்து பெத்து, பாலூட்டி சீராட்டி வளர்த்த அவளே என்னை வேணாம்னு தூக்கி போட்டு போயிருக்கா, அப்படி பார்த்தா நீயெல்லாம் எம்மாத்திரம், உன்னை எப்படி நான் நம்பினேன், பார்த்து ரெண்டு மூணு நாளேயான நீ, எனக்கு அன்பையும் பாசத்தையும் போதும் போதுங்கிற அளவுக்கு ஊட்டுவன்னு நான் எப்படி நம்பிருக்கலாம், ஏன் ஏன் என் மனசு உன்கிட்ட தடுமாறுச்சு, தப்பு எல்லாம் என் தப்பு, உன்னை நம்பினது தப்பு, உனக்காக என் ஆயுதத்தை தூக்கி போட்டது தப்பு, அன்னைக்கு மட்டும் என் ஆயுதம் என்கையில இருந்திருந்தா இத்தனை நாட்கள் நான் படுத்த படுக்கையா இருந்திருக்க வேண்டிய அவசியமும் வந்திருக்காது” என உணர்ச்சி பெருக்கில் தலையை தாங்கியபடி அங்கும் இங்கும் நடந்தவன்,… “ஏன்? ஏன்? ஏன் இப்படி பண்ணேன், இவ பேச்சை எப்படி நம்பினேன், துரோகி துரோகி நம்பிக்கை துரோகி, சத்தியம் பண்ணி கொடுத்து என்னை ஏமாதிட்டா” என அவன் பிதற்றிக் கொண்டிருக்க, அவன் நிலை கண்டு பயந்தவள்,…. “கருணா” என அவன் அருகில் வர,…”நில்லு,… அங்கேயே நில்லு, என் பக்கத்துல வந்த கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன்” அவன் விழிகளில் தெரிந்த ஆக்ரோஷம் அவன் சொன்னதை செய்வான் என்பதை தெளிவாய் காட்ட அவள் நின்று விட்டாள் கலங்கிய விழிகளோடு…. “நல்லா கேட்டுக்கோ, காதை கூர்மையாக்கி வச்சு நல்லா கேட்டுக்கோ இது தான் நான் உன்னை பார்க்கிற கடைசி நாளா இருக்கணும், இதுக்கு அப்புறம் தப்பி தவறி என் பார்வையில பட்டேன்னு வை பொட்டுன்னு கொன்னு போட்டுட்டு போயிட்டே இருப்பேன், என் வாழ்க்கை முடியுற வரைக்கும் உன்னை என் கண்ணால இனி பார்க்கவே கூடாதுனு கடவுள் கிட்ட வேண்டிக்கோ” என விழிகள் உருள அழுத்தம் திருத்தமாக கூறியவன், வந்த வழியே புறப்பட்டு விட்டான்…..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
+1
+1

