
சலனம்-18
அதிகாலை சூரியனின் வெளிச்சக் கீற்றுகள் என் முகத்தில் தாராளமாகவே விழுந்தது.
பறைவையின் கீச்சல்களும், காகம் கரையும் ஒலியும், என் செவிகளில் தெளிவாகவே விழுந்தது. அந்தப் பறவைகளின் ஒலியைக் கேட்ட பின்னரே, எங்கே இருக்கிறேன்? எனப் புரியாமல் கண்களைத் திறந்து பார்த்தேன் நான்.
தரையில் அமர்ந்து சுவற்றில் தலை சாய்த்து உறங்கியிருக்கிறேன். ‘இங்கேயே தூங்கினேன்?’ அதிர்ச்சியாய் எனக்குள் நானே கேள்வி கேட்டுக்கொள்ள, சற்று தாமதமாகவே இரவு நடந்தவைகள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வந்தது.
“ச்சே!”
எரிச்சலுடன் நானே நெற்றியில் அறைந்துக் கொண்டேன். நான் தள்ளாடி வந்ததும், சமுத்ரா என்னை வெளியே தள்ளி கதவைச் சாத்தியதும் நினைவிற்கு வந்தது. இன்னுமே கதவு பூட்டியிருக்கிறதா? என யோசித்து, தலையைத் திருப்பிப் பார்த்தேன். கதவு திறந்திருப்பது தெரிந்தது.
அவசரமாய் எழுந்து நின்று, கதைவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். அரவம் ஏதும் இல்லாது, அந்தச் சூழல் முழுதும் நிசப்தமாய் இருந்தது.
சம்யூவின் வரவிற்குப் பின், என் வீடு நிசப்பதமாக இருந்ததில்லை. அவள் என்னை விட்டுச் சென்ற பிறகும் கூட, அவந்தியின் அழுகை, சிரிப்பு என சத்தங்களால் என் வீடு நிறைந்து தான் இருந்தது. ஆனால் இப்போதிருக்கும் நிசப்தம், எனக்கு சுத்தமாய் பிடிக்கவே இல்லை. இந்த அமைதியான சூழலில் எனக்கு தலையை வலிப்பது போல் இருந்தது.
இந்த நிசப்தம் என்னை ஏதோ செய்தது. மனம் படபடப்பை உணர்ந்தது. அவந்தி எங்கே? முதலில் என் மகளைத் தான் என் மனம் தேடியது.
“அவந்தி! அவி குட்டி!”
என என் போக்கில் கத்திக் கொண்டே, அறை அறையாக ஓடினேன். அவள் பிஞ்சுக் கால்களின் கொலுசொலியும், சிரிப்பு சத்தமும் என் செவிகளில் விழவே இல்லை. இருட்டடைந்து போன என் ஒட்டுமொத்த வாழ்வின் ஒரேயொரு வெளிச்சப்புள்ளியாய் இருந்த என் மகளைக் காணவில்லை என்றதும், மனம் பதைபதைக்கத் துவங்கியிருந்தது.
சமுத்ராவையும் காணவில்லை, அவந்தியையும் காணவில்லை.
ஒட்டுமொத்த வீடு முழுதும், அங்குலம், அங்குலமாய் அலசிவிட்டேன். இருவரும், எங்கேயும் இல்லை. சமுத்ரா தான் எங்கேயோ கூட்டிச் சென்றிருக்கிறாள் என்பது புரிந்தது. வீட்டுப் பணியாட்களை அழைத்து விசாரித்துப் பார்த்தேன். யாருக்கும், எதுவும் தெரியவே இல்லை.
“எங்கே போய்த் தொலைந்தாள் இவள்? என் பிள்ளையை எங்கே கூட்டிச் சென்றாள்? அதற்கான அனுமதி இவளுக்கு யார் தந்தது?” எரிச்சலாய் முணுமுணுத்தபடியே, அலைபேசியை எடுத்து, அவளுக்கு அழைக்க முயன்றேன். அவளின் அலைபேசி எண் கூட, என்னிடம் இல்லை என்பது தாமதமாகத்தான் என் புத்திக்கு உரைத்தது.
‘இப்போது என்ன செய்வது?’ யோசனைகள் எங்கும் செல்ல மறுத்தது. அப்போது தான் எனக்கு சம்யூவின் அலைபேசி நினைவிற்கு வந்தது. அவசர அவசரமாய் சம்யூவின் அலைபேசியை தேடியெடுத்து, அதலிருந்த சமுத்ராவின் எண்ணை என் அலைபேசியில் பதிவு செய்ய முயன்றேன். என் மனைவியைப் போலவே இருக்கும் இவளின் பெயரை என்னவென்று பதிவு செய்ய? இவளுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? இவளால் என் வாழ்க்கை எப்படி மாறப் போகிறது? என்ற கேள்விகளுக்கு மத்தியில்,
‘சமுத்ரா’
எனப் பதிவு செய்து அவளுக்கு அழைப்பெடுத்தேன். அழைப்பு சென்றுக் கொண்டே இருந்ததே ஒழிய, அவள் எடுக்கவே இல்லை.
“திமிர்பிடித்தவள்! அட்டன் பண்ணி என்னன்னு சொன்னால் தானே தெரியும்? இவள் பாட்டுக்கு குழந்தையைத் தூக்கிட்டு போய்ட்டா! சொல்லிட்டுப் போகணும்ன்னு அறிவு கொஞ்சமும் இல்லை!”
என் கோபத்தை அவளைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இதையெல்லாம், நான் அவளிடம் எதிர்பார்க்க, அவளென்ன என் மனைவியா? கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
எந்த அடிப்படையில், இதையெல்லாம் அவளிடம் எதிர்பார்க்கிறேன் என்பதும், எனக்குப் புரியவில்லை.
மீண்டும் மீண்டும் அழைப்பெடுத்து தோற்றுப் போய் வேறு வழியில்லாமல் சித்தார்த்திற்கு அழைத்தேன்.
“சொல்லு டா! இன்னைக்கு லொக்கேஷன் பார்க்கப் போகணும்! ஈவ்னிங் வந்துடு!” என சித்தார்த் சொல்ல,
“ம்ப்ச்! ஈவ்னிங் தானே? இப்போ மார்னிங் தானே? வர ட்ரை செய்றேன்.!”என வேண்டா வெறுப்பாய் சொன்னேன்.
“என்னது மார்னிங்கா.. டேய் மதிய நேரம் ஆகிடுச்சுடா! அப்பறம்..!” என சித்தார்த் ஏதோ சொல்ல வர,
“சமுத்ராவையும், அவந்தியையும் காணோம் டா.! எங்கே போனாங்கன்னு தெரியலை!” அது காலையா மதியமா என்ற கவலை எனக்கில்லை. எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், அவந்திகா எங்கே என்பது மட்டுமே..
“உன்கிட்டே சொல்லலையா விக்ரம்?” என சித்தார்த் கேட்ட பிறகே, அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டேன்.
“என்கிட்டே சொல்லலையான்னு கேட்டால் என்ன அர்த்தம்? அப்போ உன்கிட்டே சொல்லியிருக்கிறாள் அப்படித்தானே?” எரிச்சலும், கோபமும் மீறியக் குரலில் கேட்டேன்.
“யெஸ்.. காலையில் கால் பண்ணி, ஹாஸ்பிட்டலில் அப்பாய்ண்மெண்ட் போடச் சொன்னாங்க! நான் அப்பாய்ண்ட்மெண்ட் போட்டேன்! அவந்திக்கு ஜென்ரல் விஸிட்ன்னு சொன்னாங்க!” எனச் சொன்னதும், என் கோபம் தலைக்கேறியது.
“ஆமா! நீ வீட்டில் தானே இருக்கே? உனக்குத் தெரியாமல் எப்படி போவாங்க?” என சித்தார்த் கேட்ட பிறகு, நேற்று இரவு நடந்தவற்றைச் சுருக்கமாய் சொல்லி முடித்தேன்.
“டேய்! என்னடா பண்ணி வச்சிருக்க? குடிச்சது தான் குடிச்சு தொலைஞ்ச, என் வீட்டுக்கு வந்துருக்க வேண்டியது தானே? உன்னை யாரு பாருக்கெல்லாம் போகச் சொன்னது? வீட்டை விட்டு விரட்டாமல் கதவை மட்டும், சாத்தினாளேன்னு சந்தோஷப்பட்டுக்கோ!”என சமுத்ராவிற்கே ஆதரவாய் பேசினான் சித்தார்த்.
“என்னடா நீயும் அவளுக்கே சப்போர்ட் பண்ணுற? அது என் வீடு உனக்கு புரியுதா? அவள் தான் என் மூஞ்சியைப் பார்க்கப் பிடிக்கலைன்னு சொன்னாள். நான் எங்கே போறது? இப்போவும், என்கிட்டே சொல்லாமல், உனக்கு மட்டும் சொல்லியிருக்கா.? உன் நம்பர் அவளுக்கு எப்படி கிடைச்சது?” எனக் கேட்டேன்.
“அப்பறம், உனக்கா சப்போர்ட் பண்ணுவாங்க? நீ குழந்தையை சரியா ஹாஸ்பிட்டல் எல்லாம் கூட்டிட்டு போவியா? குழந்தைக்கு எது எப்போ தேவைன்னு பார்த்து உன்னால் செய்ய முடியுமா? நீ சம்யூ, சம்யூன்னு அவளையே நினைச்சுட்டு திரிஞ்சால் குழந்தையை யார் பார்க்கிறது? இது பத்தாதுன்னு சமுத்ராவையும் குறை சொல்லிட்டே இருக்காதே டா!” சித்தார்த் சொன்னதெல்லாம் சரி தான் எனப் புரிந்தாலும், என் குழந்தையை அழைத்துப் போவதற்கு, என்னிடம் அனுமதி கேட்டிருக்க வேண்டும், என்பதே என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
“அப்பறம், விக்ரம்! அம்மா கால் பண்ணினாங்க!” என சித்தார்த் ஏதோ சொல்ல வரும் முன்னமே,
“குழந்தையை நேரில் போய் பார்த்தால் தான்டா, எனக்கு நிம்மதியாகும்.. நான் அப்பறம் பேசுறேன்.!” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்திருந்தேன்.
அடுத்த பத்து நிமிடத்தில், குளித்துக் கிளம்பி, மின் தூக்கியின் மூலம், நான் கீழே இறங்கிய அதே நொடி, சமுத்ராவும் வந்திருந்தாள். வாகன தரிப்பிடத்தில் நின்றிருந்த என்னைக் கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல், பார்த்து, வைத்தவள், என்னைத் தாண்டி சென்றுவிட,
“சமுத்ரா நில்லு!”
அதிகாரமாய் குரலுயர்த்தி அவளைத் தடுத்தி நிறுத்தினேன்.
“என்ன? எதுக்கு இப்போ கத்தறே?” சாவகாசமாய் கேட்டபடி என் பக்கத்தில் வந்தாள் சமுத்ரா.
“இவள் என் குழந்தை! என்னைக் கேட்காமல், என் அனுமதி இல்லாமல், நீ எப்படி இவளைக் கூட்டிட்டு போகலாம்? உனக்கு இவளை வெளியே கூட்டிட்டுப் போக, யார் பர்மிஷன் கொடுத்தது?” கோபமாய் அவளிடம் கேட்டபடியே, குழந்தையை அவளிடமிருந்து பிடுங்கிக் கொள்ள முயன்றேன். குழந்தையோ வீறிட்டு அழத் துவங்கியிருந்தாள்.
“விக்ரம்! இவள் ஒண்ணும் பொம்மை இல்லை! நைட் குடிச்ச போதை இன்னும் தெளியலையா? குழந்தையைப் போய் வெடுக்குன்னு இழுக்குற? அறிவு இருக்கா? இல்லையா? என்ன கேட்ட, அவந்தியைக் கூட்டிட்டு போற பர்மிஷன் யார் கொடுத்தான்னு கேட்டல்ல? நீ நேத்து பர்மிஷன் கொடுக்கிற நிலையில் தான் இருந்தியா? உனக்கு உண்மையிலேயே குழந்தை மேலே பாசம் இருந்திருந்தால், இப்படி வந்திருப்பியா? ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்கோ, அவந்தியைக் கூட்டிட்டு போறதுக்கு எனக்கு யார் அனுமதியும் தேவை இல்லை. ஏன்னா இவள் என் பொண்ணு. பெத்தது வேணும்ன்னா சம்யூவாக இருக்கலாம். ஆனால், இவள் சம்யூவுக்கு மட்டுமில்லை, எனக்கும் பொண்ணு தான்.!” அழுத்தமாய் அவள் சொல்லி முடிக்க, சமுத்ராவின் கழுத்தை இறுகப் பற்றியபடி, என்னைப் பயத்தோடு, ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த,’அவந்திகாவைப் பார்த்தபடியே, தரையில் கால்கள் வேரூன்றிப் போக கையாலாகாதனத்துடன், அமைதியாய் நின்றேன்.
“நீயொரு நல்ல அப்பா இல்லை விக்ரம்! தயவு செய்து குழந்தைப் பக்கத்தில் வராதே! உன் கூட இருந்தால், அவந்தியோட ஃப்யூச்சர் சரியா இருக்காது. அதனால் தான் குழந்தையின் கஸ்டடி கேட்டு, கேஸ் ஃபைல் பண்ணிருக்கேன். எல்லாத்துக்கும் ரெடியா இரு..!” எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென சென்றுவிட்டாள்.
‘நான் நல்ல அப்பா இல்லையா? என் குழந்தைக்கு கஸ்டடி கேட்க இவள் யார்?’
எனக்கும், சம்யூவிற்குமான, நாங்கள் வாழ்ந்த வாழ்வின் சான்று அவந்தி மட்டுமே.. அவளை எப்படி நான் விட்டுக் கொடுக்க முடியும்? என்ற கோபத்தோடு அவளைத் தொடர்ந்து ஓடினேன். அவள் மின் தூக்கியில் மேலே சென்றிருக்க, படிகளில் வேகமாய் ஏறி, அவள் சரியாய் கதவைத் திறக்கும் நேரம், இழுத்துப் பிடித்து நிறுத்தியிருந்தேன்.
“என் குழந்தைக்கு கஸ்டடி கேட்க நீ யாரு? என் குழந்தையைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். குழந்தையை விட்டுட்டு நீ கிளம்பு!” குழந்தையைப் பிடுங்கி, என் கரத்தில் வைத்துக் கொண்டேன்.
“எப்படி பார்த்துப்ப விக்ரம்? எப்படி பார்த்துப்ப? நேத்து வந்தியே அதே மாதிரி தள்ளாடிட்டு வந்து குழந்தையைப் பார்த்துப்பியா? இல்லை, குழந்தையைத் தூங்க வச்சிட்டு, ஸ்மோக் பண்ணிட்டே பார்த்துப்பியா? இது மட்டும் தானா? இந்த பார்ட்டி, பொண்ணு, அது இதுன்னு வேற எதாவது இருக்கா? என்னமோ ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி பேசுற? உன் அக்கறையை தான் நான் பார்த்துட்டு தானே இருக்கேன். குழந்தைக்கு அம்மா இல்லை. அப்பா குழந்தையைப் பார்த்துக்கிற நிலையில் இல்லை. அப்படி இருக்கும் போது, நான் கஸ்டடி கேட்கிறதில் என்ன தப்பு இருக்கு?” என சமுத்ரா கேட்க,
“சமுத்ரா..! வார்த்தைகளைப் பார்த்து பேசு!”
எனக் கோபத்தில் கையை ஓங்கியிருந்தேன். நான் குழந்தையைப் பார்த்துக் கொள்ளவே தகுதியில்லாதவன் போல் அவள் என்னை சித்தரித்தது, எனக்குள் கோபத்தைக் கிளறிவிட்டது.
“இப்படித்தான் சம்யூவையும் அடிச்சுருப்ப? அடிச்சு கொடுமைப் படுத்தி, அவளைக் கொன்னுட்ட இல்ல?”
என அவள் கேட்ட கேள்வியில் என் கரம் தானாய் கீழே இறங்கியது. ஊசியாய் என் மனதைத் துளைக்கும் அவள் வார்த்தைகளில், நான் உயிரோடு கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக் கொண்டிருந்தேன்.
‘நான் அந்தளவிற்குக் கொடுமைக்காரனா?. நான் கட்டிய மனைவியையே கொல்லும் அளவிற்கு கொடூரமான சைக்கோவா? இவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்? என்னையும் சம்யூவையும் பற்றி இவளுக்கு என்ன தெரியும்?’
என மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க, இந்த ஆகாய வண்ண விழிகளுக்குச் சொந்தகக்காரி உதிர்த்த வார்த்தைகளில் என் மனம் ஒட்டுமொத்தமாய் தளர்ந்து தரையில் விழுந்தது.
நீரிலிருந்து தரையில் விழுந்து, தண்ணீருக்கு தவிக்கும் மீனாய் தவித்துக் கொண்டிருந்தேன். கண்கள் கலங்கிப் போனது. என் கரம், என் மகளை இறுக அணைத்துக் கொண்டது.
“போதும் விக்ரம்! உன் நடிப்பை எல்லாம் நம்ப நான் தயாராய் இல்லை. உன்னோட இந்த ட்ராமாவெல்லாம் வேற எங்காவது போய் வச்சுக்க!”
எனச் சொன்னவள், குழந்தையை நோக்கிக் கையை நீட்ட, குழந்தை என்னிடமிருந்து தாவி அவளிடம் ஒட்டிக் கொண்டது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அவள் உள்ளே சென்றுவிட்டாள்.
‘இங்கே என்ன நடக்கிறது? இது எப்படி சாத்தியம்? என் குழந்தை கொஞ்சம், கொஞ்சமாய் என்னிடமிருந்து விலகிக் கொண்டிருக்கிறாளா? வந்த சில நாட்களிலேயே, என் குழந்தையை என்னிடமிருந்து பிரித்துவிட்டாள் இந்த மாயக்காரி!. நான் கண்களைத் திறந்துக் கொண்டிருக்கும் போதே, இதெல்லாம் எப்படி நடந்ததென எனக்குப் புரியவில்லை. ஆனால், இப்படியே நிலை நீடிக்குமானால், என் குழந்தையை இழக்க வேண்டிவரும். என்பது மட்டும் புரிந்தது.’

