சது(ரங்கம்). அத்தியாயம் 26

Loading

நிஜமாய் சொல்லப் போனால் தாமோதரனுக்கும் லஷ்மி அம்மாளுக்கும் அவன் வீட்டில் பேசி சம்மதம் வாங்கி சாதுர்யாவை திருமணம் செய்து  கொண்டால் அவர்கள் இருவருக்கும் சம்மதமே! ஆனால் அவனது தந்தை வழி பாட்டி தாத்தா இதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிலையும் வீட்டில் உள்ளது. அத்துடன் ரேணுகாவும் ரேணுகாவின் கணவரும் கூட மனதார இதற்கு சம்மதிக்க வேண்டும். இந்த பக்கம் மாலதியும் வெங்கடேசனும் என்ன சொல்வார்கள் என்பது தெரியவில்லை. பெண்ணின் இந்த நிலை கண்டு மாலதி கூட ஒப்புக் கொள்ளக் கூடும். ஆனாலும் நடக்க வேண்டுமே…

 லக்ஷ்மி அம்மாளுக்கு சாதுர்யாவின் திருமண வாழ்க்கை பற்றிய ஜோசியர் சொன்னது தேவையில்லாமல் இப்பொழுது நினைவுக்கு வந்தது.

 

 தன் அருகில் ரங்கனை கண்டதும் பெண்ணின் முகத்தில் சிறு புன்னகை.

‘ என்ன அத்தான் என்னை தேடி இங்கேயே வந்துட்டீங்களா ‘ என்று முயன்று சாதாரணமாக கேட்டவளை பதிலுக்கு சற்றே கோபத்துடன் ‘ஆமாம்’ என்றான் ரங்கன். அவன் குரலில் வழிந்த ஆதங்கம் அவளை புரட்டி போட்டது. ஆனாலும் அந்தப் பெரிய மனிதர் வந்து மிரட்டி விட்டுச் சென்றது வேறு காதில் ரீங்காரம் செய்ய ரங்கனிடம் இதைப் பற்றி பேசலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே பேசாது விடுத்தாள்.

 

 ரங்கன் சாதுர்யாவிடம் ‘நாளைக்கு உறையூர் போகலாம் வரியா’ என்று கேட்க  சாதுர்யாவுக்கு லேசாக தூக்கி  போட்டது. அவளது கண்முன் ரங்கனும் அவளுமாக அங்கு சென்றதும் அவன் அவளது நெற்றியில் குங்குமம் வைத்ததும் ஞாபகம் வர சம்மதம் என்று அவளையும் அறியாமல் அவள் தலை அசைந்து கொடுத்தது.

 

 மறுநாள் காலையிலேயே இருவரும் கிளம்பி உறையூர் வந்துவிட்டார்கள்.

 இருவரும் பிராகாரம் சுற்றி வந்தது அங்கே துவஜஸ்தம்பம் அருகே வரும்போது சாதுர்யா கண்மூடி நிற்க அவளருகே வந்திருந்த ரங்கன் அவள் கண்ணைத் திறப்பதற்குள் தன் கையிலிருந்த அம்பிகையின் பாதத்தில் வைத்து எடுத்த செயினில் கோர்திருந்த திருமாங்கல்யத்தை அவள் கழுத்தில் அணிவித்து விட்டு நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு விட்டிருந்தான்.

கண்ணை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி தாளவில்லை. நிச்சயம் அவள் இது போல ஒரு நிகழ்வை எதிர்பார்க்கவில்லை. எந்த நிலையிலும் அத்தான் தன்னை விட மாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு மனதில் எப்போதும் உண்டு. ஆனால் இத்தனை நிகழ்வுக்குப் பிறகும் தன்னை மனைவியாக ஏற்க ரங்கனுக்கு தன்

மேல் எவ்வளவு காதல் இருக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் சந்தோஷப்பட்டவள் நேற்று வந்து இருந்த மனிதர் மிரட்டியதை வேறு   யோசிக்க, அவள் முகத்தில் பயம் அப்பிக் கொண்டது.

 

 அவள் மனதில் இன்னொரு பயமும் உண்டு. பட்ட காயத்தின் ரணம் ஆறுவதற்கு இந்த ஜென்மம் போதாது. இன்னொரு முறை அது போன்ற ஒரு நிகழ்வை எந்த ஆணுடனும் பகிர்ந்துகொள்ளும் தைரியம்  அவளுக்கு இல்லை. அப்படி இருக்கும் போது அவளுக்கு உயிருக்கு உயிரான ரங்கன் இது போன்ற ஒரு தண்டனையை வாழ்நாள் முழுக்க எதற்காக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் சமீப நாட்களாக எவ்வளவு போல் சுழன்று அடிக்கிறது. ரங்கனின் வாதமோ திருமணத்திற்கு பின் இது போன்ற ஒன்று நடந்தால் அவளை விட்டு விடுவேனா என்பதுதான். அவளைப் பொறுத்தவரை பேசுவதற்கு நன்றாக இருக்கும் பல விஷயங்கள் நிதர்சனத்தில் அவ்வாறு இருப்பதில்லை.

 

எதைப்பற்றியும் சிந்திக்காமல் மறுநொடியே கழுத்தில் இருந்த தாலியை எடுத்து விட்டு கையில் இருக்கமாய் பத்திரமாய் வைத்துக் கொண்டவள்,’ இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று அவனிடம் சண்டை போட ஆரம்பித்துவிட்டாள். அவள் மனம் முழுவதும் ரத்தம் வடிந்தது. இதோ இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கும் இந்த நொடி கூட அவள் மனதில் ரங்கன் மட்டும்தான்.

 

இருவரும் வீட்டிற்கு வந்து சேர ரங்கன் ஒருவழியாக பாட்டி தாத்தாவிடம் இந்த விஷயத்தை சொல்லி விட்டான். லக்ஷ்மி அம்மாள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட சாதுர்யா அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். 

 

பாட்டியை தனியாக அழைத்துக் கொண்டு சென்று, தவறை வேறொருவர் செய்திருக்க தண்டனையை

ரங்கனுக்கு கொடுக்க முடியாது என்ற தன்மன நிலைமையும் தெளிவாகச் சொல்லிவிட்டாள்.

நடந்த திருமணத்திற்கு அர்த்தம் என்ன என்று பாட்டி கேட்டதற்கு ‘ “என் வாழ்க்கையில் அர்த்தம் அனார்த்தமாகி பல நாள் ஆகிறது பாட்டி” என்று முடித்துவிட்டாள். ஆனால் தன் நெற்றி வகுட்டில் அவனிட்ட குங்குமத்தை தன் வாழ்நாள் முழுவதும் ஏற்றுக் கொள்வதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை என்று மனதுக்குள் முடிவு செய்து கொண்டாள்…

 

சொன்ன  நாட்கள் வரை காத்திருக்க பொறுமை இல்லாத அந்த பெரிய மனிதன் தன்னுடன் இன்னும் சில மனிதர்களை கூட்டிக்கொண்டு இவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டான்.

சாதுர்யா திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவும், அவளின் பெற்றோர் வருவதற்கு முன்னரே திருமணம் முடிந்து இதோ புகுந்த வீட்டில் அவள்.

 

சதா சர்வ காலமும் குருவையே கண்காணித்துக் கொண்டிருக்கும் சிவம் சிறிது அசந்த போது நடந்த சம்பவம் தான் சாதுர்யாவின் இழப்பு. சாதுர்யா பற்றி அறிந்து கொண்டவர் இந்த குடும்பத்திற்கும் அருணாசலத்தின் அரசியல் வாழ்க்கைக்கும் சரியான பாடம் கற்பிக்க இவள்தான் ‘மகாகாளி’என்று முடிவு செய்து கொண்டார். அவருக்கு ரங்கன் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. ஒருவேளை தெரிந்திருந்தால் வேறு மாதிரி யோசித்திருக்கலாம்.

 

அருணாச்சலத்திடம் குருபரன் செய்திருந்த இந்த விஷயத்தை சொல்லி முடித்தவர் அந்தப்பெண்ணின் தகப்பனும் சரி தாத்தாவும்  சரி இந்திய ஆட்சிப் பணித் துறையில் பணியாற்றியவர்கள். அவளது அப்பா இப்பொழுது வெளிநாட்டில்… மத்திய அரசியலிலும் தாமோதரனுக்கு இன்னும் கூட மரியாதை உண்டு. ஒருவேளை இந்த திருமணம் நிகழாவிட்டால்  பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றெல்லாம் சொல்லி, அருணாச்சலமே குருபரனை கூப்பிட்டு மிரட்டி இந்த திருமணத்தை  செய்து வைத்தார்.

 

திருமணம் பற்றி பேசுவதற்கு சிவமும் ராகாயியும், அருணாச்சலத்தின் நெருக்கத்தில் உள்ள இன்னும் இரண்டு பேரும் தான் வந்திருந்தார்களே தவிர அருணாச்சலம் வரவில்லை.

சாதுர்யா திருமண நிகழ்வு 

 

சொல்லிவிட்டாள்”,பதிவுத்திருமணம் மட்டும்தான் செய்து கொள்வேன்… அக்னியின் முன்நின்று அவன் கையிலிருந்து திருமாங்கல்யம் வாங்கிக் கொள்வது என்பது என்றுமே நிகழாத ஒரு சம்பவம். இதற்கு ஒப்புக் கொண்டால் நாளைக்கு கூட திருமணத்திற்கு நான் தயார்தான் “என்று விட்டாள்… அவளின் இந்த அதிரடியில் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்து நிற்க, ரங்கனோ கொந்தளித்தான்… வந்தவர்கள் முன்னாடியே என் மனைவியை எப்படி இன்னொருவருக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று ஒரே ஆர்ப்பாட்டம்… ஆனால், என்றுமே அவனுக்கு மனைவியாக இருக்க முடியாது என்று தீர்மானமாக மனதிற்குள் பொங்கி நிற்கும்  பேத்தி ஒருபுறமும், இவளை மறந்துவிட்டு தனக்காக ஒரு நல்ல வாழ்க்கையை நல்ல மனைவியை அமைத்துக் கொள்ள வேண்டிய,திருமணம் செய்து கொள்ளும் வயதில் இருக்கும் பேரன் ஒருபுறம்.

 

ரங்கனின் வருங்கால வாழ்க்கை எண்ணி தாமுவும் லட்சுமி அம்மாளும் இந்த திருமண நிகழ்வுக்கு ஒப்புதல் தர அவள் பெற்றோர் வரும் முன்னரே திருமண ஏற்பாடு செய்தார் சிவம்.சாதுர்யாவே ஒப்புதல் தந்த பிறகு தாமுவால் தன் செல்வாக்கை பயன் படுத்த முடியவில்லை.

 

சிவம் அவரது குறிக்கோள் பெண்ணின் பெற்றோர் வருமுன் திருமணம்.இல்லாவிட்டால் பெண்ணின் பெற்றோர் எந்த எல்லைக்கும் போவார்கள். பெண்ணை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து திருமணத்தை நிறுத்தி, குருவுக்கு சிறிதாக தண்டனை கிடைத்தால் இவரது இழப்புகளுக்கு யார் பதில் சொல்வது?

 

குரு இவற்றை கடந்தவன். கடைந்தெடுத்த அயோக்கியன். சாதுர்யாவின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் ரங்கன் அடுத்து வந்த இரண்டு நாட்களுக்குள் கிளம்பி  சென்றுவிட்டான்.

 

குரு அவனுக்கு சென்னை ஏர்போர்ட்டில் டெல்லி செல்லும் பெண்ணை பார்த்தவனுக்குள் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் அவளை பின் தொடர்ந்து, திரும்ப வரும்போது கட்டம் கட்டி தூக்கி விட்டான்.அவளது மற்ற விவரங்கள் அவனுக்கு அனாவசியம்.

 

காரணமின்றி எதுவும் நிகழ போவது இல்லை எனில்…

 

 “இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று!”

 

 

 

சாதுர்யா மனதில் மீண்டும் மீண்டும் ரங்கனின் பிம்பம். இவளை பதிவு திருமணம் செய்துகொண்ட பிறகு   அந்த மகானு (பாவன்) வீட்டுக்கே வரவில்லை. அன்று சென்றவனை இன்னும் அவன் எங்கு இருக்கிறான் என்பதை பற்றி ஒரு தகவலும் இல்லை. குருபரன் மனதில் அணைக்க முடியாத தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதுவரை அவன் தொட்ட எந்தப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது இல்லை. வழக்கமாக தான் எந்த பெண் மீது கை வைக்கிறானோ அந்தப் பெண்ணை தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவான்.

 

இதுவரை பெண்களின் விற்பனையில் இலாபம் ஈட்டி தான் பழக்கம். ஆனால் இன்று எந்த பெண் மீது தான் கை வைத்தானோ அந்த பெண் அவன் மனைவியாக அவன் வீட்டில். முதன் முதலாக நஷ்ட கணக்கு.

 

அவளை திரும்பி பார்ப்பதற்கு கூட அவனுக்கு இஷ்டமில்லை. ஏதோ மயக்கத்தில் அவளை தனது வேலை முடிந்தவுடன் தனது காரிலேயே எடுத்துக்கொண்டு வந்து அங்கே ஹைவேயில் முட்புதருக்கு அருகே தள்ளிவிட்டு விட்டுச் சென்று விட்டான். அப்போது அவள் போதை மயக்கத்தில் இருந்தாள். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் உணவை கொடுக்காமல் வெறும் போதை மருந்தை செலுத்தி செலுத்தி அவளின் நிலை கொஞ்சம் கவலைக்கிடமாக இருந்ததால் தான் அவன் அவ்வாறு செய்தான். ஹைவேயில் வரும் ஏதேனும் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுவாள் என்று கணித்து இருந்தான்.ஆனால் அவன் கணிப்புகளையும் பொய்யாக்கி, இன்று சட்டப்படியான மனைவியாக, அதுவும் குருவை அவனது அப்பாவே மிரட்டி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்தது எல்லாவற்றுக்கும் உச்சம் என்று நினைத்தான்.

 

ஆனால் குருவுக்கு இப்போது ‘அட்டமத்தில் குரு’ என்பது அவனுக்கு தெரியவில்லை.

 

சாதுர்யா அந்த வீட்டில் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. அவளுக்கு வேளாவேளைக்கு உணவு சென்று விடுமாறும், அவள் சரியாக உண்கிறாளா என்று பார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தார் சிவம்.

 

கொஞ்ச நாட்கள் கழிந்தால் வீட்டில் எல்லாம் சரியாகிவிடும், அருணாச்சலத்திடம் சாதுர்யாவை பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்க வேண்டும் இன்னும் எத்தனையோ சிவமின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

 

ஒருவழியாக மாலதியும் வெங்கடேசனும் இந்தியா வந்து சேர்ந்தார்கள். ஸ்ரீரங்கத்திற்கு வருவதற்குள் மாலதி வெங்கடேசனை பாடு படுத்தி எடுத்துவிட்டாள்.

 

தன் பெண்ணுக்கு தான் இல்லாமல் திருமணமே நடக்காது அவள் புகுந்த வீட்டிற்குச் சென்று விட்டார் என்ற எண்ணமே மாலதியை கிழித்தது. ரங்கன் உடன் திருமணம் நடக்க கூடாது என்று  நினைத்திருந்தவளுக்கு, தங்களின் செய்கை,அவன் மீது ஹிமாலைய அளவிற்கு மரியாதையை உயர்த்தி இருந்தது. 

 

இந்தப் பெண் இப்படி கிடைத்த வாழ்க்கையை கெடுத்துக் கொண்டு விட்டாளே! என்ற ஆதங்கம் வேறு மாலதிக்கு.இன்னோர் பக்கம் இவளை தன் போக்கிற்கு விட்டு சென்றானே… முடியை பிடித்து இழுத்துபிடித்தாவது தன்னுடன் வாழ செய்திருக்க வேண்டாமா என்று. இத்தனை வருஷங்களாய் அவனை வெறுத்து, தன் பெண்ணுடன் அவனை ஒட்ட விடாமல் செய்தது எல்லாம் ஞாபகத்தில் இல்லை. மீட்புக்கான கதவுகளை அடைத்து இந்தப் பெண் தானே குழியில் விழுந்து விட்டதே என்று கண்ணீரில் கரைந்தாள்.

 

இந்த குடும்பத்தை பொறுத்தவரை ஒரே பெண் குழந்தை அவள், அப்படிபட்டவளை உயிருடன் கொடுத்தாயிற்று ஒரு பொறுக்கிக்கு. மாலதியும் வெங்கடேசனும் சென்னையில் அருணாச்சலத்தின் வீட்டிற்குச் சென்று தங்கள் பெண்ணை பார்த்தார்கள். வீட்டில் வேறு யாரும் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை அமைதியாக இருந்தது. ஹாலின் ஒரு மூலையில் போட்டு இருந்த சோபாவில் சிவம் உட்கார்ந்திருந்தார். இவர்களைப் பார்த்தவுடன் வேகமாக எழுந்து வந்தவர் உபசரிப்பாக பேசி அவர்களை உட்கார செய்து, சற்று நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் தங்கள் பெண்ணை எப்படியாவது திரும்ப கூட்டி போய்விடும் நோக்கத்தில் தான் பேசினார்கள். 

 

ஆனால் இருவருக்கும் ஒன்று புரியவில்லை இது மீளமுடியாத கோட்டை என்று. ஏனென்றால் இந்த கோட்டையை கட்டி இருப்பவர் சிவம். ஊழிக்கால பிரளயத்தில் மஹா ருத்ரன் தாண்டவம் ஆடினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது சிவனின் மனம். அவர் மனதிற்குள் இருப்பதை யாரும் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தன் மூன்று பெண்களையும் ஏதோ ஒரு விதத்தில் இழந்துவிட்ட ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு அவருக்கு சாதுர்யா தவிர வேறு வழி இல்லை.

 

இருவரிடமும் இன்முகமாகவே பேசினாலும், அவர் மனதிற்குள் விட்டுக் கொடுக்கவே கூடாது என்ற தீர்மானம்.

 

வெளியில் பேச்சு சத்தம் கேட்டு, தன் அறையிலிருந்து வெளியே வந்த அருணாச்சலம் வந்திருந்தவர்களை பார்த்ததும் முகம்  வெளுத்தார். டெல்லிக்கு சென்று இருந்த சமயங்களில் வெங்கடேசன் அவர் சந்தித்திருக்கிறார். மிகவும் நேர்மையான அதிகாரி வெங்கடேசன் என்பது அருணாச்சலத்திற்கு தெரியும்.

 

ஆனால் சிவன் இந்தத் திருமணம் நடப்பதற்காக சாதுரியாவை மிரட்டியது எல்லாம் அருணாசலத்திற்கு தெரியாது. தன் மனைவியை இழந்த பிறகு ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் அவர். உமாவின் மரணத்திற்குப் பிறகு, அவர் அடி மனதில் வெறுமை வந்துவிட்டது. வெளியே காண்பித்துக் கொள்ளாமல் அரசியல்வாதியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். எந்த அரசியல்வாதிகளும் நடிகர்களும் தங்கள் உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ள முடியாது.

 

வெங்கடேசனும் -மாலதியும் அருணாச்சலத்தை பார்த்தவுடன் நேரடியாகவே ஆரம்பித்துவிட்டார்கள், தங்கள் பெண்ணை திருப்பி அனுப்பி விடுமாறு. ஆனால் திருமணம் என்ற ஒன்று நிகழ்ந்த பிறகு தன் வீட்டு மருமகளே திரும்ப பிறந்தகம்  அருணாச்சலம் தயாராக இல்லை. குருபரன் எவ்வளவுதான் மானத்தை வாங்கி விட்டாலும் வீட்டு மருமகள் தன் பிறந்த வீட்டுக்கே திரும்ப சொல்வது என்பது அவருக்கு அவமானம். பத்திரிக்கைகளும் இவற்றை சும்மா விடாது. ஏற்கனவே நிகழ்ந்த திருமணத்தை பத்திரிகைக்காரர்கள் தங்கள் கற்பனைபடி எழுதி தள்ளி விட்டார்கள். மீண்டும் மீண்டும் அவமானங்களை சந்திப்பதற்கு அருணாச்சலம் தயாராக இல்லை. அவரது பேச்சிலும் இது தெளிவாக வெளிப்பட்டது. உங்கள் பெண்ணிடமே இதுபற்றி பேசி அவளை கூட்டி சென்று விடுவது ரங்கனுடன் அவளுக்கு திருமணத்தை பதிவு செய்து அவளை ஸ்பெயினுக்கு அனுப்பி விடுவது என்று யோசித்துக் கொண்டு வந்தவர்களுக்கு இது மாபெரும் அதிர்ச்சி.

 

தங்கள் பெண் ஒப்புக்கொண்டால் கூட இவர்கள் இருவரும்  விடமாட்டார்கள் போலிருக்கிறதே… என்ற பெண்ணின் பெற்றோர்கள் தடுமாறினார்கள்.

 

தாமோதரன் சொல்லித்தான் அனுப்பினார் ‘நிகழாத ஒன்றை பேச வேண்டாம் ‘என்று ஆனாலும் இவர்கள் மனம் கேட்கவில்லை.

 

தன் அறையிலிருந்து வெளியே வந்த சாதுர்யா பெற்றவர்களைப் பார்த்தவுடன் சந்தோஷ படுவதற்கு பதிலாக அவளது நெற்றி புருவம் சுருங்கியது. எப்படி அவர்கள் இருவரையும் சமாளிப்பது என்ற ஆழ்ந்த யோசனைக்குள் சென்றுவிட்டாள். மாடியிலிருந்து இறங்கி வருவதற்குள் அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் உலகை வலம் வந்து விட்டது. அதில் ரங்கன் எப்படி இருக்கிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூட உண்டு. ஆனால் அருணாச்சலம் செய்வது கூட அங்கே இருப்பதை கண்டு தன் எண்ணங்களை தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டாள்.

 

ஆனால், ‘அவளிடம் திரும்ப வந்துவிடு’ என்று பெற்றவர்கள் அவர்களிருவரும் கெஞ்சியும் கூட அவள் அசைந்து கொடுக்க வில்லை. “இனி இதுதான் என் வீடு நான் இங்கிருந்து எங்கும் வருவதற்கு இல்லை நீங்களும் அடிக்கடி என்னை பார்க்க இங்கு வரவேண்டாம். அது உங்களுக்கும் நல்லது அல்ல” என்று விட்டாள். 

 

இங்கு வந்திருந்த இந்த ஒரு வாரத்திற்குள் இந்த குடும்பத்தின் அவர்களைப் பற்றி ஓரளவுக்கு அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. சிவன் கூட மிரட்டும் ரகம் அல்ல. இதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்று அவளுக்கு புரிந்தது. அதை எல்லாம் கண்டு பிடித்தே ஆகவேண்டிய நிலையில் அவள். அது தவிர, குரு போன்ற  கயவனை சும்மா விடவும் அவளுக்கு இஷ்டமில்லை. அதற்கு என்ன வழி என்று இப்பொழுது புரியாவிட்டாலும் இங்கேயே இருந்தால்தான் எல்லாம் சாத்தியம் என்பது அவளுக்கு தெரிந்ததால் மௌனம் சாதித்தாள். ஆனால் அவள் மனதில் இருக்கும் படி உணர்ச்சி பற்றியெல்லாம் வெங்கடேசனுக்கும் மாலதிகும் எந்த அக்கறையும் இல்லை. தன் மகளுக்கு ஒரு சீரான வாழ்க்கையை தான் அவர்கள் மனம் எதிர்பார்த்தது.

 

ஆனால் சாதுர்யா சொன்ன பதிலில் அருணாச்சலம் மிகவும் மெய் மறந்து போனது என்னவோ நிஜம். அவளுக்கு அந்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் தனது பேத்தி போல இருக்கிறது. இத்தனை சிறிய பெண்ணை எப்படி தன் மகனால் சீரழிக்கப்பட்ட என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. குருவை விட   சாதுர்யா ஏறத்தாழ இருபது வயது சிறியவள். உண்மைதான்!

 

சாதுரியாவுக்கும் ஸ்கந்தனுக்கும் ஏழு வருஷங்கள் தாம் வித்தியாசம். அதாவது தன் மகள் வயது  ஒத்த பெண்ணை குரு எனும் அரக்கன் பெண்ணாண்டுள்ளான்.

 

இது போன்ற நிகழ்வுகள் நடக்குமா என்று யோசிக்காதீர்கள் இவையெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பேருந்துகளிலும் ரயில்களிலும் செல்லும்பொழுது கூட இளவயது பெண்களிடம் வம்பு வளர்ப்பவர்கள் பெரும்பாலும் 40 கடந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

 

சாதுர்யா சொன்ன பதிலில் திருப்தி அடையாத அவளது பெற்றோர் திரும்பத் திரும்ப பல்வேறு விதமாகப் பேசி அவளை தங்களுடன் வருமாறு வேண்ட அவள் நிச்சயமாக மறுத்துவிட்டாள்.

 

அவளுக்கு பதிலைக் கேட்டு அவர்கள் இருவரும் மனமுடைந்து கிளம்பிவிட்டார்கள். தங்கள் பெண் இனிமேல் தங்களுக்கு இல்லை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது.

 

அருணாச்சலம் அவளது பதிலில் மெய் மறந்து விட்டாலும் சிவனுக்கு அவள் சொன்ன பதில் திருப்தி தரவில்லை. அவர் தீவிர சிந்தனைக்கு உட்பட்டார்.

 

இரண்டொரு நாட்களில் அருணாச்சலம் வீட்டின் நிர்வாகப் பொறுப்பை வீட்டின் மருமகளிடம் ஒப்படைத்து விட்டார். வீட்டில் அதுதான் வழக்கமும் கூட. போதாத குறைக்கு அவள் குடும்பத்தை பற்றி தீர விசாரித்து அறிந்து கொண்டவர் மனதில் வேறு ஒரு யோசனை உதித்தது. ஆனால், நிச்சயம் அந்த யோசனை குருவுக்கு நல்லது இல்லை.

 

சிவனுக்கு இந்த பெண் மனதில் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டு.

 

சாதுர்யாவின் பெற்றோர் வந்து சென்ற இரண்டாவது நாள் அவளின் உயரத்தில் ஒரு சிறுவன் ஹாலில் அருணாச்சலத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான்.

 

சாதுர்யா அவனை இத்தனை நாட்கள் பார்க்கவில்லை. அவன் முகம்  ஹாலில் மாட்டியிருந்த புகைப்படத்தில் இருக்கும் உமா ஆண் குழந்தையாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. முகத்தில் முழு குழந்தைத்தனம். அவளையும் அறியாமல் அந்த சிறுவன் மீது  ஒரு உணர்வு.

 

அந்த சிறுவன் குருவின் மகன் என்று தெரிந்த போதும் கூட அவன் கண்களில் தெரியும் ஏக்கம் அவளுக்குள் ‘உனக்கு இனி நா இருக்கேன், கவலை படாதே ‘ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஒரு வேளை அவன் குருவின் சாயலில் இருந்தால் அவள் எண்ணம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் அவனுக்கும் அவன் அப்படி இல்லை.

 

ஆனால் அவன் சாதுர்யாவை பார்த்த பார்வையில் முழு வெறுப்பு தெரிந்தது. அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையை தொங்க போட்டுக்கொண்டு தன் அறைக்குள் சென்று மறைந்து கொண்டான். சாதுர்யாவுக்குள் சிறு வருத்தம் எழுந்த போதும் சிறுவன் தன்னை உடனடியாக ஒத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு தான் சரிக்கட்ட வேண்டிய முதல் நபர் இந்த வீட்டில் அவன் தான் என்பதையும் புரிந்து கொண்டாள்.

 

அருணாச்சலம் சொல்லியிருந்தபடி சிவன் சாதுர்யாவுக்கு வீட்டு நிர்வாகத்தை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கூடவே அருணாசலத்தின் அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார். இயற்கையிலேயே நிர்வாகம் சாதுர்யாவின் குடும்பத்தில் உரியது என்பதால் அவளுக்கு இவையெல்லாம் ஒன்றும் பெரியதாக தோன்றவில்லை. சுலபமாகவே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு தன் வேலைகளை தொடங்கி விட்டாள். அவளைப் பற்றிய மதிப்பு அருணாச்சலத்தின் மனதில் உயர்ந்து கொண்டே சென்றது. இனி தனக்கு கவலையில்லை என்று கூட நினைத்து கொண்டார்.

 

திருமணம் முடிந்து ஒரு மாதம் சென்ற பின்பும் கூட குருபரன் வீட்டிற்கு வரவில்லை. சிவன் தனது ஆட்களை கொண்டு அவன் எங்கே இருக்கிறான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். வீடு வருவதைப் பற்றிய வராமல் எங்காவது செல்வது பற்றியும் அவருக்கு கவலையில்லை. ஆனால் அவன் செய்துகொண்டிருக்கும் வேலைகள்… ஒரு வகையில் அதைப் பற்றியும் கூட அவர்கள் கவலை இல்லை தான் ஆனால் பெயரில் இருக்கிறானே அவனது வாழ்வு இருக்கிறது என்பதற்காகத்தான் நிறைய பார்க்க வேண்டியதிருக்கிறது.

 

அன்று சாதுர்யா இரவு வெகுநேரம் விழித்திருந்து கணக்கு வழக்குகளைப் பார்த்து கொண்டிருந்தாள். கீழே ஸ்கந்தனின் அறையிலிருந்து விதமான சப்தங்கள் வர அவன் அறைக்குள் சென்றாள் அவள் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். ஒரே கண்டபடி கத்திக் கொண்டும் அழுது கொண்டும் கூட இருந்தான்.ஆம், அதற்கு சிகிச்சை எடுப்பதற்காக தான் அவன் பத்து நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருந்த அந்த சமயத்தில்தான் குருவிற்கு திருமணம் நடந்தது. அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அவனுக்கு ஏற்பட்ட முக்கிய பாதிப்பு இது. மனதில் இறுகி இருந்தவனுக்கு இரவு தூங்கும்போது அதுவும் தனியாக படுக்கும் போது இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படத் தொடங்கிவிட்டது. உமா இருந்தவரை தனது மகனை தனியே தூங்க விடவில்லை. கடந்த இரு வருடங்களாக அவன் தனியே தான் தூங்குகிறான். 

 

சிவனும் தினமும் தனது வீட்டிற்கு சென்று விடுவதால், அவன் தனியாக இருக்க வேண்டியதாயிற்று. சும்மா என்றால் இது போன்ற பாதிப்புகள் தனியே படுக்கும்போது எழுவதில்லை. ஆனால் அவன் கண்ட காட்சிகள் அவன் மனதிற்குள் இப்பேர்பட்ட பாதிப்பை உண்டு பண்ணி விட்டது.

 

சிறுவனைக் கண்டவளுக்குள் ஒரு சிலிர்ப்பு வந்து அடங்கி, பின் விரைந்து ஓடிச் சென்று சிறுவனை தனது வயிற்றில் இறுக கட்டிக்கொண்டாள். அவள் தலையை கோதி விட விட சிறுவனின் அலட்டல்கள் மெல்லக் குறையலாயிற்று.

 

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு கவனித்தவளுக்கு சிறுவனை இனி தனியாக தூங்க விட முடியாது என்பது புரிய, தனது படுக்கையை கீழே மாற்றிக் கொண்டாள்.

 

ஸ்கந்தன் எவ்வளவோ மறுத்துக் கூறியும் கூட அதைப்பற்றியெல்லாம் சாதுர்யா கண்டுகொள்ளவில்லை.

 

விடலைப் பருவத்தில் இருக்கும் ஸ்கந்தனுக்கு மனதிற்குள் ஒருமாதிரி இருந்தாலும் கூடதன் வார்த்தைகள்  எடுபட போவதில்லை என்று மௌனம் காத்தான்.

 

ஸ்கந்தன் இல்லாத நேரத்தில் இதுபற்றி அருணாச்சலம் சிவனும் கேட்டதற்கு உண்மை நிலையை எடுத்துக் கூறிய அந்த சிறு பெண்ணின் மீது முதியவர்கள் இருவருக்கும்   நன்றி உணர்ச்சி. அருணாச்சலம் இரவு நேரங்களில் மாத்திரை போட்டுக் கொண்டு உறங்கச் செல்வதால்  அவரை யாராலும் எழுப்ப முடியாது. அதனால்தான் அவர் ஸ்கந்தனுடன் படுத்துத் தூங்குவதற்கு முற்படவில்லை. சிவன் அருணாச்சலத்தின் வீட்டில் எப்போதுமே தங்குவதில்லை என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறார்.

 

முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் சொல்லி பார்த்த ஸ்கந்தன் பிறகு தானே நிறுத்திக் கொண்டான். அவளை அவன் விழிப்பதற்கு முன்னாடியே சாதுர்யா தன் அறைக்கு சென்று விடுவாள். அதனால் ஸ்கந்தனுக்கு மனதில் எந்த பதட்டமும் இருப்பதில்லை.

 

மேல்தளத்தில் உமாவின் அறையை தான் இப்பொழுது  சாதுர்யா பயன்படுத்துகிறாள்.

 

யார் வாயிலிருந்தும் வெளிவராத உண்மைகளை கூட இனி அவளால் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.

 

ஸ்கந்தன் இப்போதெல்லாம் சாதுர்யாவுடன் நன்றாக பேசி பழக ஆரம்பித்து விட்டான்.

 

அவனது பேச்சுகளில் இருந்து இவள் தெரிந்து கொண்டது சிறுவன் தனது தந்தையின் செய்கைகளால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் என்பதை. தனக்கு அக்கா போல் இருப்பவளை சித்தி என்ற கூப்பிடுவதற்கு அவனுக்கு நா எழ வில்லை. அதை அவளிடமே ஸ்கந்தன் குறிப்பிட்டுச் சொல்ல, தாய்மை எனும் உணர்வை பற்றி ஸ்கந்தனுக்கு புரியும் விதத்தில் சாதுர்யா எடுத்துச் சொல்ல ஒருவாறு ஒப்புக்கொண்டான். இனி நீ என்னை சித்தி என்று அழைக்க வேண்டாம் அம்மா என்று கூப்பிட வேண்டும் என்று விட்டாள்  பெண்.

 

இருவருக்குமான நெருக்கத்தை வீட்டில் வீட்டின் பெரியவர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சிதான். ஸ்கந்தன் தனது மன அழுத்தத்திலிருந்து எப்படியாவது வெளிவரவேண்டும் என்று அவனது இரு தாத்தாக்களும்  பிரயத்தனம் செய்கிறார்கள். அதற்கு

 

சாதுர்யா செய்யும் விஷயங்கள் பேருதவி.

 

ஸ்கந்தனுக்கும் சாதுர்யாவுக்கும் இடையே அம்மா பிள்ளை பாசம் மட்டுமல்ல, பெண்ணவள் அந்த சிறுவனுக்கு நல்ல தோழியாய், மனதிற்கு நெருக்கமானவளாய் மாறி விட்டிருந்தாள்.

 

எவ்வளவு தூரம் நெருக்கம் என்றால், ஸ்கந்தன் தன் மனதை உடைத்து  தன் அம்மாவின் இறப்பு பற்றியும் தன் அப்பாவின் திருவிளையாடல்கள் பற்றி மற்றவர்கள் பேசுவதையும் இவளிடம் சொல்லுமளவிற்கு.

 

அவனுடன் பேசும்போது தான் சாதுர்யா தெரிந்துகொண்டால் உமாவின் அப்பா சிவம் தான் என்று. அவளுக்கு புரியாத முடிச்சுகள்

அவிழ்வது போலிருக்க அவள் உதடுகள் மர்ம புன்னகையில் விரிந்தது.

 

சாதுர்யா உமாவின் அறையில் தங்கிக்கொண்டு, இரவு நேரங்களில் மட்டும் ஸ்கந்தனுக்கு துணையாய் அவனது அறையில் உறங்குவதை தனது முக்கிய கடமையில் ஒன்றாய் நினைத்திருந்தாள். அந்த குழந்தையை சரியான படிக்கு வளர்த்தெடுப்பது   இப்போது இருக்கும் வேலைகளில் அதிமுக்கியமானது என்பதில் அவளுக்கு மாற்றுக்கருத்து இல்லை.

 

மகாபாரதப் போரில் கர்ணன்  இறந்த பிறகு அவனது ஒரு பிள்ளையை எடுத்து அர்ஜுனன் தனது மகனாக வளர்ப்பு அவனுக்கு போர்க்கலைகள் சொல்லிக் கொடுத்ததாக ஒரு கிளைக்கதை உண்டு. என்னதான் குருவின் பிள்ளையாக இருந்தாலும்கூட வருங்காலத்தில் இந்தியாவின் ஒரு சிறந்த பிரஜையாக மகனை உருவாக்க வேண்டியது  தாயின் கடமை. இப்பொழுது அம்மா என்ற  இடத்தில் இருப்பது சாதுர்யா.

 

திடீரென்று வீட்டிற்கு வந்த குமரகுரு, இரண்டு நாட்களுக்கு வீட்டில் தங்கியிருந்து என்ன நடக்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள தீர்மானித்திருந்தான். ஏற்கனவே அருணாச்சலம் அரசியலைப் பொறுத்தவரை உமா தான் தனது வாரிசு என்பது போல நடந்துகொண்டார். சொந்த மகனையே அவர் ஓரம்கட்ட யோசிக்கவில்லை. இந்த முறை, எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறான் குரு.

 

 வீட்டில் இருக்கும் தன் மனைவியை ஒரு அலட்சிய பார்வை பார்த்தான். அந்தப்பார்வை ‘நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா என்பது போல இருந்தது.’ அந்தப் பார்வையில் அத்தனை வெறுப்பும் கூட.  அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளும் நிலையில் சாதுர்யா இல்லை. அவளது மனக்கணக்குகள் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. கழுத்தில் தாலி அணியாமல் விட்டாலும் கூட அந்தப் பெண் நெற்றி வகிட்டில் மங்களகரமாக அழுத்தமாக குங்குமம் இட்டு இருந்தாள். அதைப்பார்த்த உடன் மனதிற்குள் அவ்வளவு ஏளனம் குருவுக்கு. இன்னும் எத்தனை தான் நாடகம் போடுறன்னு பாக்குறேன் டி என்று மனதுக்குள் கறுவிக் கொண்டான். அவனைப் பொருத்த வரை மனைவி என்றாலும் உமாவின் முகம் மட்டும் தான் ஞாபகத்திற்கு வருகிறது. மற்ற பெண்கள் எல்லாம் வெறும் படுக்கைக்கு மட்டும்தான். தனது வாழ்க்கையில் பங்கு கொடுக்க அவன் விரும்பவில்லை. உமா தன் கண்முன்னே உருண்டு விழுந்தும் கூட அவளைக் காப்பாற்ற எந்தவிதமான  முயற்சியும் எடுக்காத அவனுக்கு இந்த உணர்வு எப்படி என்று கேட்கக் கூடாது… திருமணம் என்ற பந்தத்தில் மாட்டிக் கொள்ள அவனுக்கு அப்போதும் விருப்பமில்லை. வீட்டின் கட்டாயத்தின் பெயரில் உமாவை பார்க்க சென்றவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான் அவ்வளவுதான்.

இப்போது இந்தப் பெண்ணுடனான திருமணமும் அப்பாவின் கட்டாயத்தினால் தான்.

 

 ஒருமுறை உபயோகித்த சட்டையை கூட குமரகுரு அடுத்த முறை உபயோகிக்க மாட்டான். அப்படிப்பட்டவன் ஏற்கனவே ஒரு முறை அனுபவித்த அந்த பெண்ணை கேவலம் படுக்கையில் கூட தன் மனைவியாக  நடத்த எப்படி இஷ்டப்படுவான்? அவனுக்கு பெண்கள் புதுசு புதுசாக தேவை. நிச்சயம் இவள் வேண்டாம்.

 

ஒரு வகையில் குருவின் இந்த தீர்மானம் சாதுர்யாவுக்கு மனதில் மிகுந்த திருப்தி. எங்கே மனைவிக்கான மற்ற கடமைகளையும் அவன் எதிர் பார்ப்பானோ என்ற பயம் அவளுக்குள் இருந்தது.

 

 நடப்பவற்றை நோட்டம் விட்டவாறு வீட்டில் அமர்ந்திருந்தவன்  அன்று இரவில் ‘தான்’ திருமணம் செய்து கூட்டிக்கொண்டு வந்த பெண்( மனைவி என்று நினைக்க அவன் மனம் இடம் தரவில்லை), தனது மகனின் அறைக்குள் செல்வது அவனைப் பொருத்தவரை இரண்டாம்தர செயல். அடுத்தநாள் காலையிலேயே  தன் அப்பாவிடம் சண்டைக்கு சென்றுவிட்டான். அவசரப்பட்டு அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள்.

அந்தப் பெண்ணும் உடம்பு  சுகம் தேடி, என் பையனின் அறைக்குள் செல்கிறாள். அவனும் தனது சின்னம்மா என்று கூட யோசிக்காமல் அவளுடன் கூத்தடிக்கிறான்… என்று வாய்க்கு வந்ததை பேசி கூச்சலிட்டான்.

 

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே மாமனாருக்கு காபியும் மாத்திரையும் எடுத்துக் கொண்டு வந்த சாதுர்யா அடக்கமாட்டாமல் குருவை கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள். அவளது மூச்சுக் காற்று வெப்பம் மிகுந்து முகமெல்லாம் சிவந்து குருவுக்கு அவளைப் பார்க்கவே பயம் வந்துவிட்டது. நிச்சயம் அவளின் இந்த ரூபத்தை அவன் நினைத்துக் கூட பார்த்ததில்லை. பெண் என்றால் அடிமை, அப்படி ஒரு அலங்கார பொம்மை, வாய் பேச கூட 

அவளுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பது அவனது எண்ணம். ஆனால் அவளது இந்த பரிமாணத்தைப் பார்த்து திகைத்து விட்டான்.இருந்தாலும் தன்னை சுதாரித்துக் கொண்டு” ‘என்னடி பத்தினி வேஷம் போடுறியா, நேத்து ராத்திரி நீயு

ஸ்கந்தனோட ரூமுக்கு போகல…”என்று சண்டைக்கு நின்றான். இதற்கெல்லாம் பெண் அசர்வதாக இல்லை.

ஆமா இப்ப என்னங்குற… என்று திருப்பி அவனிடமே மல்லுக்கு நின்றாள். தன் அப்பாவின் முன்னே அவளை ஒன்றும் செய்ய முடியாமல் “இப்போ அதுக்கு என்ன வா… வீட்டை விட்டு வெளியே போடி பொம்பள நாயே… உடம்பு அரிப்புக்கு இது இடமில்லை “ என்று அவளை தாறுமாறாக பேசினான். அருணாசலத்திற்கு என்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. பிறகு தன்னை நிதானித்து கொண்டவர், குருவை கடுமையாக எச்சரிக்கை விட்டார். “இனி இதுபோல எல்லாம் பேசிக் கொண்டு இங்கு வந்தால் பெத்த பிள்ளைன்னும் பார்க்க மாட்டேன்… உன்னை வேற மாதிரி வச்சி செய்ய வேண்டிவரும், என்னோட பலம் தெரியுமில்ல..”. என்று  குரலை கூட உசத்தாமல் மிரட்ட அவரது வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்டவனாக” உன்னை என்ன பண்றேன் பாரு டி,”என்று கறுவி விட்டுச் சென்றுவிட்டான். சாதுர்யாவுக்கோ படபடப்பாக இருந்தது. குருவை அடித்தது பற்றி அவளுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. அருணாச்சலம் என்ன நினைத்துக் கொள்வாரோ என்பதுதான் அவளது அச்சம். ஆனால் பெரியவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்