Loading

அத்தியாயம் 28

சஞ்சய் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. தாரணியின் உதவியோடு சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலை கிடைத்து சென்ற ஒரு தம்பதியரின் வீடு இவர்களுக்கு வாடகைக்கு கிடைத்தது. காணொளி அழைப்பில் பார்த்திருந்தவனக்குத் திருப்திகரமாகவே இருந்தது. மனைவி மற்றும் பெற்றோரிடமும் காட்டி அவர்களுக்கும் வீடு பிடித்திருக்க. மேற்கொண்டு விஷயங்களை நேரில் சென்று பேசி முடிவு செய்வது கொள்வதாகத் தீர்மானித்தார்கள் ஒரு மனதாக.

பயணத்திற்கு இன்னுமே இரண்டு நாட்கள் இருக்க முறையாக வசுந்தராவின் பெற்றோர்களிடம் கூறிவிட்டு விடை பெற அன்று அவர்கள் இருவரும் மகனுடன் வசுந்தராவின் தந்தை வீட்டிற்கு சென்றார்கள். கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் கழித்து தன் வீட்டிற்கு வருகிறாள் வசுந்தரா. இத்தனை நாட்களில் ஒரு நாள் எனும் தன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்ததே இல்லை. தந்தை மட்டும் வந்து பார்த்துச் செல்வார் அவளையும் அவள் மகனையும். பேரனின் மீது அளவு கடந்த பாசம் அவருக்கு. தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று சீராட்ட முடியாத நிலையை நினைத்துச் சில நேரம் வருந்துபவரை வசுந்தராவே சமாதானம் செய்து அனுப்பி வைப்பாள். சில நேரம் கோகிலாவும் இவருடன் வந்து பேரனைப் பார்த்துச் செல்வார். அவருக்கும் அவன்மீது அளவு கடந்த பாசம் இருந்தது ஆனால் அதைச் சரியாக வெளி காட்டாமல் தனக்குள்ளாகவே வைத்துக் கொண்டார். இதற்கு முன் அவன் அன்னைக்கு செய்த செயல்களால்.

வீட்டுக்கு வந்தவர்களை இனிதாக வரவேற்றார் ரகுபதி. எப்பொழுதும் போல வசுமதி அங்குத் தான் இருந்தாள். ஆனால் அவளின் கணவன், சஞ்சயின் அழைப்பின் பேரில் வந்திருந்தான். இருவருக்கும் இடையே சுமுகமான பேச்சுவார்த்தை இருந்தது. வசந்தியும் படிப்பை முடித்துவிட்டு நல்லதொரு வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறாள். அவளின் திருமணத்திற்கு ஓரளவேனும் சேர்த்த பிறகு வரன் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ரகுபதி.

குண்டு கன்னங்களும் பளீரென்ற குங்குமப்பூ நிறத்தில் கோலி குண்டு கண்களுமாக இங்கும், அங்கும் விழிகளைச் சுழற்றி பார்த்தபடி தந்தையின் மடியில் அமர்ந்து இருந்த வருணனை பார்த்தவர்களுக்கு அவனை அள்ளி எடுத்துக் கொஞ்ச வேண்டும் போன்ற ஆவல் எழுந்தது. ஆவலை அடக்க முடியாமல் வசந்தி அவனைச் செய்கையால் அழைக்க. வர முடியாது எனத் தலையை ஆட்டித் தன் தந்தையின் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டான்.
“தங்க புள்ள, தாத்தா கிட்ட வாங்க.” என ரகுபதி அழைக்கவும் தயக்கத்துடன் அவரிடம் சென்று அவரின் மடியில் அமர்ந்து கொண்டான் குழந்தை. அவர்  அடிக்கடி இவனை வந்து பார்த்துக் கொஞ்சி சென்றதில் அவருடன் நன்றாகவே பழக்கம் இருந்தது இவனுக்கு.

இருவருக்கும் காபியை கொண்டு வந்து கொடுத்த கோகிலா நலம் விசாரிக்கப் பதில் கூறி காப்பியை அருந்தி முடித்தார்கள் இருவரும்.
பின், சஞ்சய் ரகுபதியை பார்த்து,
“மாமா அலுவலகத்தில் எனக்குப் பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைச்சிருக்கு. அகமதாபாத்திற்கு. இன்னும் இரண்டு நாட்களில் கிளம்புறேன். அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்.”
“என்ன மாப்பிள்ளை திடீர்னு சொல்றீங்க.?”
“ஆமாம் மாமா. நானும் எதிர்பார்க்காதது இது. திடீர்னு தான் கிடைத்தது.சரி, எல்லாம் ஓரளவுக்கு முடிவான பிறகு சொல்லலாம்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா அதுக்குள்ள சீக்கிரம் வரச் சொல்லிட்டாங்க.” என்றவன் பதிலில் “அப்போ வசுவும், பிள்ளையும்.?” எனச் சந்தேகமாகக் கேட்க
“வீடு எல்லாம் பாத்துட்டேன். நான் போய் முதல்ல எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு, பத்து நாள்ல ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய்டுவேன்.” என்றான் அவருக்கு விளக்கமாக.

கேட்டுக்கொண்டவருக்கு மகளும் மருமகனுடன் செல்வதில் திருப்தியே. ஆனாலும் சிறிய வேதனை அவர் வார்த்தையில் வெளிப்பட்டது.
“சந்தோஷம் மாப்ள, ஏதோ மாசத்துல ஒரு முறையாவது மகளையும்  பேரனையும் வந்து பாத்துட்டு இருந்தேன் இப்போ அதுக்கும் கஷ்டம் வந்துருச்சு..”
“ஏன் மாமா..? அங்க வரலாமே..அங்கு வந்து உங்க மகளையும், பேரணையும் பாருங்க. புது ஊரு, உங்களுக்கும் சுற்றி பார்க்க நல்லா இருக்கும். எல்லாரும் தான் வாங்க..” என்றான் அனைவரையும் சுற்றி பார்த்து. அனைவரும் அமைதியாக இருக்க. வசுமதியின் கணவன் தான்,

“வாழ்த்துக்கள் சகல. ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா ஒரு நாள் எல்லாரையும் அழைச்சிட்டு நான் வரேன்..” என்றான் அவன் அழைப்புக்கு பதில் கூறும் விதமாக. ஆமோதிப்பாக அவனிடம் தலையசைத்தவன். பின், ரகுபதியை பார்த்து,

“சரி மாமா கிளம்புறோம்..” என்று எழுந்திருக்க. அவனோடு எழுந்த வசுந்தராவும் சுற்றி பார்வையை ஓட்டியபடி,
“போயிட்டு வரேன் எல்லோருக்கும் ..” என்றாள். ஏனோ குரலடைக்க.
அனைவருக்குமே நெஞ்சடைத்தது.
இதுவரை தெரியாத ஒன்று இப்போது தெரிவது போல் ஒருவிதமான அலைக்கழிப்பு மனதிற்குள்.
இனி தமக்கையையும் அவள் குழந்தையையும் பார்ப்பது கடினமே என உணர்ந்த வசந்தி இதுவரை இப்படி நினைத்திராதவள் மனதில் நொந்தவாறு வேகமாக தமக்கையின் அருகில் வந்தவள் அவளை இருக அணைத்து விடுவித்து அவள் கைகளை பிடித்து படி நின்றிருந்த சின்ன உருவத்தை அவன் திமிர திமிர இருக்கி அனைத்து தூக்கியவள் இரு கன்னங்களிலும் மாறி மாறி அழுந்த முத்தமிட்டு அவனை கீழே இறக்கியவள். தான் சாப்பிடுவதற்காக எப்போதும் வைத்திருக்கும் பெரிய சைஸ் டைரி மில்க் சில்க்கை எடுத்து வந்து அவன் கைகளில் கொடுத்தாள். அவள், அவனின் விருப்பமின்றி தூக்கி முத்தமிட்டதில் கன்னத்தை துடைத்துக் கொண்டு லேசான அழுகையுடன் முகத்தை சுருக்கி அவளை முறைத்துக் கொண்டிருந்தவன் அவள் கொடுத்த சாக்லேட்டை வாங்குவதா வேண்டாமா என யோசனை உடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க.

“வாங்கிக்கோ செல்லக்குட்டி..” என்றவள் திரும்பவும் அவன் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டு. அவன் கைகளில் சாக்லேட்டை திணித்தவள்.
“நான் சித்தி உனக்கு. இனி கண்டிப்பா உன்ன வந்து பார்ப்பேன். உன்கூட போன்ல பேசுவேன். நீ என்கிட்ட பேசுவியா..?” என கேட்க. நிமிர்ந்து
‘என்ன சொல்வது..’ என
அன்னையைப் பார்த்தவன், அவள் சரி என்பதாக தலையாட்ட கூற. இவனும் சரி என்றபடி தலையாட்டினான்.

“அழகு பொம்ம..”என்று மறுபடியும் அவனை முத்தமிட்டவள் எழுந்து தாயின் அருகில் நின்று கொண்டாள்.
அவளின் செயலையே வீட்டில் இருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்குமே தாங்கள் இதுவரை இழந்தது என்ன என்பது லேசாக புரிந்தது. அந்த வீட்டில் பிறந்த ஒரு மகளை தள்ளி வைத்ததையும் கோபமும் துவேஷமும் கொண்டதையும் நினைத்து வருந்தியவர்களாக இனி என்ன செய்ய முடியும் என்று நிலையில் அமைதியாகவே அனைவரும் நின்றிருந்தார்கள். வசுந்தராவின் குழந்தையை பார்த்ததும் அள்ளி அணைக்க ஆசை ஏற்பட்டது வசுமதிக்கு. இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை அவளுக்கு ஆனாலும் தான் இதற்கு முன் ஏற்படுத்திய அனர்த்தங்களால் குழந்தையை ஆசையுடன் தூக்க முடியாத நிராசையுடன் நின்றிருந்தாள் அவள்.

அவர்களின் நிலை நன்றாகவே சஞ்சைக்கும், ரகுபதிக்கும் புரிந்தது. ஆனால் இனி என்ன செய்ய என்று நினைத்துக் கொண்டார்கள் இருவருமே. இனியேனும் திருந்தி நல்லபடியாக ஒருவருக்கொருவர் ஒற்றுதலுடன் வாழ முடிவெடுத்தால் நன்றுதான் என நினைத்துக் கொண்டான் சஞ்சய். பின், அனைவரிடமும் விடை பெற்று சென்ற சஞ்சய்யிடம் அவன் கிளம்பும் தேதியையும், நேரத்தை கேட்டு தெரிந்து கொண்டே அனுப்பி வைத்தார்கள் ரகுபதியும் வசந்தியின் கணவனும்.

சஞ்சய் கிளம்பு வேண்டிய நாளும் வந்தது. அவனின் உடமைகள் அனைத்தும் இரண்டு பெரிய பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு தயாராக இருந்தது. தயார் நிலையில் இருக்கும் பெட்டிகளைப் பார்க்கும்போது ஒரு விதமான தவிப்பு ஏற்பட்டது வசுந்தராவிற்கு. கணவனைப் பிரிந்து இருக்க வேண்டும். இதுவரை, திருமணம் முடிந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட அவனைப் பிரிந்து இருந்ததில்லை.
முதல் முறையான பிரிவு, அவன் இல்லாத வீடும் அவர்களின் அறையும் எப்படி இருக்குமோ என்ற அலைக்கழிப்பு ஒரு புறம். இதில் மகனை வேறு சமாளிக்க வேண்டும்.
தந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வில்லை என்றாலும் அவனுடன் சிறிது நேரமாவது விளையாடுவதும் உடன் இருப்பதும் அவனின் வழக்கம்.
இவர்களும் அவனோடு விரைவில் சென்று விடுவார்கள் என்றாலும் அவன் இல்லாத சிறிது நாட்களை எப்படி கழிப்பது என்பது பெரும் மலைப்பாக இருந்தது பெண் அவளுக்கு. அத்துடன் தன் பிரியத்துக்குரிய மாமியாரை விட்டுச் செல்வதும் பெரிய மனக்கவலை அவளுக்கு.

சனிக்கிழமை மாலை நான்கரை மணி அளவில் விமான பயணம் அவனுக்கு. வீட்டிலிருந்து இரண்டு மணிக்கு எல்லாம் கிளம்ப வேண்டும். மறுநாள் விடுமுறை நாளாக இருந்தால் அவனுக்கு வசதியாக இருக்கும் என்ற நோக்கில் சனிக்கிழமை பயணத்தை ஏற்பாடு செய்திருந்தான் அவன். அவர்களின் காரிலேயே கிளம்பினார்கள் அனைவரும். வரும்போது பிரபுக் காரை ஒட்டி வந்து விடுவார் என்று. வருணனுக்கு எங்கோ வெளியில் செல்கிறோம் என்று குஷியாக இருந்தது.. வசுந்தராவிற்கு தான் வீட்டிலிருந்து கிளம்பும்போதே கண்களில் நீர் கட்டிக் கொண்டது யாரும் பார்ப்பதற்கு முன்பு நாசுக்காகத் துடைத்துக்கொண்டாள். ஆனால் அது அவளவனின் கண்களில் தப்பாமல் பட்டது. அனைவரும் கிளம்பி இருக்கும்போது தன்னரைக்குச் சென்றவன்  வசுந்தரா என மேலிருந்தபடி அழைக்க,

“என்ன ங்க.?”என்று கேட்டபடி உள்ளே சென்றவள் அவனின் அணைப்பில் இருந்தாள். அவள் மனம் விரும்பிய இறுகிய அணைப்பு. அதிலிருந்து வெளிவரவே விரும்பவில்லை அவள்.
“பத்து நாள் தான் அதிகபட்சம். அதுக்குள்ளவே வந்துடுவேன். எனக்குமே உன்னையும் பையனையும் விட்டுட்டு எப்படி இருக்க போறேன்னு தெரியல.? அம்மா, அப்பாவை விட்டுப் போறதும் கஷ்டமா தான் இருக்கு. உங்களை எல்லாம் ரொம்ப தேடுவேன் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.” என்றவன் அவள் இதழில் ஆழ்ந்து முத்தமிட்டு விலகியவன்.
“எல்லாரையும் பாத்துக்கோ. என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சுடு. ஏதாவது வாங்கணும்னாலும் வாங்கிடு. நாளிலிருந்து பேக் பண்ண ஆரம்பிச்சிடு. பணம் இருக்கு இல்ல.?”என்றவனின் கேள்விக்கு
“நிறையவே இருக்கு.”
“அதான் தெரியுமே.” என்று விட்டு, அவளோடு கீழ் இறங்கி சென்றான். அவர்கள் வாகனமும் புறப்பட்டது விமான நிலையத்தை நோக்கி.

இவர்கள் சென்று சேரும்போது விமான நிலையத்தில் இவர்களுக்காக வசுந்தராவின் குடும்பமே காத்திருந்தது. அனைவருமே வந்ததில் ஆச்சரியம்தான் வசுந்தராவிற்கு. தந்தையையும் அக்காவின் கணவரை மட்டும் எதிர்பார்த்திருந்தவளுக்கு இது பெரும் அதிர்ச்சி தான்.

தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கொஞ்சமாக அவர்களும் வெளிப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். வசந்தியும் வந்திருந்தாள். வருணனை பார்த்ததும் ஆசையுடன் கைகளை நீட்ட ஏற்கனவே பார்த்து இருந்ததாலும் பெரிய சாக்லேட் பாரை கொடுத்து இருந்த சித்தியைச் சின்ன வாண்டுக்கும் சற்று பிடித்தே இருந்தது. ஆரம்பமாகச் சற்று தயங்கினாலும் பின் அவளோடு ஐக்கியமாகினான்.

சற்று நேரம் பொதுவாக அனைவரிடமும் பேசி இருந்த சஞ்சய் பின் நேரம் ஆவதை உணர்ந்து அனைவரிடமும் விடை பெற ஆரம்பித்தான். மகனைத் தூக்கி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அவன் முகம் பார்க்க, தந்தை எங்கோ செல்வதை உணர்ந்தது போல அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் குழந்தை. அவனைப் பிரித்தெடுப்பது தான் மிகவும் சிரமமாக இருந்தது.
“வா நான் உனக்குப் பெரிய ட்ரெயின் காட்டுறேன்.” என்று வசந்தி அழைக்க. அதில் கவரப்பட்டவன் அவளிடம் சென்றான்.

சொல்லும் மகனைப் பார்த்த சஞ்சய், அன்னையையும் மனைவியையும் லேசாக அணைத்து விடுவித்தவன். தந்தையின் கைகளை அழுத்தமாகப் பிடித்து அழுத்திய பின், வேகமாக உள்நோக்கி சென்றான். யாரையும் திரும்பிப் பாராமல். அனைவரையும் பிரிந்த செல்வது அவனுக்குமே சிரமமாக இருந்தது.
ஆனாலும் வாழ்வின் வசதிக்காகச் சில தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்தது.

சஞ்சய் அகமதாபாத் வந்து சேரவே  இரவாகியிருந்தது. அவன் தங்கிக்கொள்ள கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் கொடுத்திருந்தார்கள். அதில் அதிகபட்சமாக ஒரு மாதம்வரை தங்கிக் கொள்ளலாம். கெஸ்ட் ஹவுஸ் வந்தவன் வீட்டிற்கு அழைபேசி அழைப்பு விடுத்து, அனைவரிடமும் தான் நலமாக வந்து சேர்ந்ததை தெரிவித்தான். பின் தாரணிக்கும் தான் வந்துவிட்டதை  தெரிவித்துவிட்டு நாளைச் சந்திப்பதாக அவருக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டவன்  அருகிலேயே இருந்த ஒரு  உணவகத்திற்கு சென்று இரவு உணவை முடித்துவிட்டு வந்தவன். நன்றாகத் தூங்கி எழுந்தான்.

காலை உணவையும் முடித்தவன் ஒன்பது மணிபோலத் தாரணி கொடுத்திருந்த முகவரியை நோக்கிப் பயணப்பட்டான். இவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காமல் அந்தப் பெரியவளாகத்தின் கேட்டின் முன்பு தன் பத்து வயது மகளுடன் நின்றிருந்தார் தாரணி. இவனைப் பார்த்ததும்
“வாங்க, வாங்க.” என்று தமிழில் வரவேற்று விட்டுப் பின்பு ஆங்கிலத்திற்கு மாறிக்கொண்டார்.

“அதுக்கு மேல பேசத் தெரியாது.”என மலையாளத்தில் கூறியவர் பின்பு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.
“இங்க ஏ பி சி டி என்று நான்கு பிளாக் இருக்கு. நாங்க பி பிளாக்கில் இருக்கோம். அந்தப் பிளாக்ல ரெண்டு வீடு காலியா இருக்கு உங்களுக்கு எது ஓகேவா இருக்குன்னு பாருங்க என்று பேசிய படியே லிப்டின் அருகே வந்தவர், ஐந்தாம் மாடி பட்டனை அழுத்திவிட்டு அவனோடு மேல் நோக்கிப் பயணப்பட்டார்.
அந்தத் தளத்தில் மொத்தம் நான்கு வீடுகள் இருந்தன. ஒரு பிளாக்கில் ஏழு தளம். ஒவ்வொரு தளத்திற்கும் நான்கு வீடுகள். இப்படியாக ஒரு பிளாக்கில் மொத்தம் இருபத்தி எட்டு வீடுகள். நான்கு  பிளாக்குகள் சேர்த்து மொத்தம் நூற்று பன்னிரண்டு வீடுகள். தரைத்தளம் முழுவதும் கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இடது பக்கம் சென்றால் பெரிய பூங்கா. சிறுவர்கள்  விளையாடுவதற்கும் பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்வதற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டு இருந்தது. பி மற்றும் சி பிளாக்கின் இடையே பின்புறத்தில் பெரிய நீச்சல் குளம் அங்கும் சிறியவர் குளிப்பதற்கு ஏற்றவாறும் பெரியவர்களுக்கு ஏற்றவாறும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பிற்கு எப்போதும் செக்யூரிட்டிகள் ஒருவர் மாற்றி ஒருவர் சுற்றிக் கொண்டே இருந்தார்கள். அதேபோல் நீச்சல் பழகித் தரவும் ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரவருக்கு விருப்பம் என்றால் கட்டணம் செலுத்தி நீச்சல் பழகிக் கொள்ளலாம்.

சஞ்சய் பார்க்க வந்த வீடு பூஜ்ஜியம் ஐந்து மூன்று என்ற எண் கொண்ட வீடு.  இரண்டு அறைகளுடன் நன்கு விசாலமாக இருந்தது. போன மாதம் தான் அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டிற்கு மாற்றலாகி சென்றிருந்தார். அதனால் இரண்டு அறைகளிலும் ஏசி, பெரிய வால் மௌண்டெட் டிவி, பெரிய பிரிட்ஜ் ஆகியவற்றை விட்டுச் சென்று இருந்தார்.  இரண்டு அறைகளிலும் கட்டில் சுவற்றுடன் சேர்த்து உட்வொர்க் செய்யப்பட்டிருந்தது. அறைகள் அனைத்திலும் கபோடுகளும், சமையலறை, மாடுலர் கிச்சனாக அனைத்தும் நவீனமாக இருந்தது. அறையின் பால்கனியிலிருந்து பார்த்தால் சிறுவர் பூங்கா நன்றாகப் பார்வைக்கு கிடைத்தது அங்கும் இரண்டு நாற்காலிகள் ஒரு டீப்பாய் போடப்பட்டிருந்தது. மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாடுவதை பார்த்தபடி டீக்குடிக்க ஏதுவான இடம் எனத் தோன்றியது சஞ்சய்க்கு.

மகனும், மனைவியும் அருகில் இருக்கும்போது நன்றாக இருக்கும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்த்துக் கொண்டவனுக்கு மெலிதான புன்னகை. மகனுக்கும் இங்கிருந்து வேடிக்கை பார்ப்பது மகிழ்வை கொடுக்கும் என நினைத்தபடி அனைத்தையும் கற்பனையில் ஓட்டிப் பார்த்தான். அவனுக்கு இந்த வீடு மிகவும் பிடித்திருந்தது இருந்தாலும் தாரணி சொன்ன மற்றொரு வீட்டையும் பார்த்துவிட நினைத்தான்.

“மற்றொரு வீடு.?” எனக் கேட்டு அவன் தாரணியை பார்க்க.
“அது இன்னும் மேல.ஏழாவது மாடி.” என்றார் அவர். லிப்ட் நோக்கி நடந்த படி ஏழாவது மாடி என்ற உடனே திக் என்றானது சஞ்சய்க்கு.
‘சிறு குழந்தையை வைத்திருப்பதால் அவ்வளவு உயரம் போக வேண்டுமா.?’ என நினைத்துக் கொண்டே பயணப்பட்டான். பாதுகாப்பிற்கு எந்தக் குறைவும் இல்லை. இருந்தாலும் ஏனோ மனம் சற்று தடுமாறியது. அதுவும் அல்லாமல் தற்போது பார்த்த வீட்டில் மனைவியையும் மகனையும் பொருத்தி கற்பனை வேறு செய்திருந்ததால், பார்க்காமலேயே  இந்த வீடு வேண்டாமென முடிவுக்கு வந்திருந்தான். அதற்கு ஏற்றார் போல். வீடும் எந்தப் பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது. இந்த வீடு நீச்சல் குளம் பார்க்கும் மாறு அமைந்திருந்தது. மேலிருந்து பார்க்கும்போது இவனுக்கே ஒரு மாதிரித் தலை சுற்றி கொண்டு வந்தது. அதுவும் அல்லாமல் நீச்சல் குளம் வியூ இவனுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கண்டிப்பாக மனைவிக்கும் பிடிக்காது என்பதை நினைத்தவனாக.
தாரணியை பார்த்தவன்
“ஐந்தாம் தளத்தில் இருக்கிற வீட்டையே புக் பண்ணிடலாம்.” என்றான்.
“நானும் நீங்க அதைத்தான் சொல்லுவீங்கன்னு நெனச்சேன்.”என்றார் அவரும் சிரித்தபடி.
“உங்க வீடு எங்க.?”
“மூன்றாவது மாடி.வாங்க போகலாம்.” என்றபடி அவனை அழைத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கிச் சென்றார்.
இவர்களுக்குக் கதவைத் திறந்து விட்ட பெண் இவனைக் கண்டு,
“நமஸ்தே.” என வரவேற்கும் விதமாகக் கூறியவர் கையோடு தாரணியின் மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று மறைந்தார்.
யார் என்று இவன் கேள்வியாகப் பார்க்க.
“இங்கே வீட்டோட தங்கி வேலை பாக்குறாங்க. ஆபீஸ்ல இருந்து வர முன்ன பின்ன ஆகுது. குழந்தை தனியாக இருப்பான்னு இவங்கள வேலைக்குச் சேர்த்துக்கிட்டேன். கிட்டத்தட்ட  ஏழு வருஷமா இங்க தான் வேலை பாக்குறாங்க. இப்போ ஒரு ஆறு மாசமா தான் வீட்டோட தங்கியிருக்காங்க. நான் இந்த ஊருக்கு வந்த நாளிலிருந்து அறிமுகமானவங்க. ரொம்ப நம்பிக்கையானவங்க.நல்ல வேலை பார்ப்பாங்க. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க மேல் வேலை பார்த்துக் கொடுப்பாங்க.” என மடை திறந்த வெள்ளம் போல் அனைத்தையும் கூறிக் கொண்டிருந்தார்.

“இல்ல, இல்ல தேவைப்படாது. என் மனைவியே அனைத்து வேலைகளையும் செய்து விடவா.”
“ஓஹ்.! அவங்க ஹவுஸ் வைப்பா.? வேலைக்குப் போகலையா.?”
“இதுவரைக்கும் போகணும்னு அவங்க கேக்கல. அதனால போகல.” என்றான் தெளிவுபடுத்தும் விதமாக.
“ஓஹ்.!” என்று கேட்டுக் கொண்டவர் சற்று அமைதியாக இருக்க. அந்நேரத்தில் இவனுக்குக் குடிக்க கொண்டு வந்து கொடுத்தார் வீட்டில் இருந்த பெண்மணி.

“சரி, நீங்க வீட்டு ஓனர் கிட்ட பேசிட்டு, என்னுடைய நம்பர் அவருக்குக் கொடுங்க. நானும் பேசுகிறேன்.” என்றவனுக்கு
“நான் ஏற்கனவே சொல்லித்தான் வச்சிருக்கேன். உங்க நம்பர் கொடுக்கிறேன். அவரே உங்களுக்குப் பேசுவாரு…” எனக் கூற. நன்றி கூறி விடை பெற்று சென்றான் சஞ்சய்.

தாரணி கூறியது போல வீட்டின் உரிமையாளர் சஞ்சய்க்கு அழைத்துப் பேசினார். இருவருக்குமே அனைத்தும் திருப்தியாக இரு தினங்களில் வீட்டிற்கு வெள்ளை அடித்துச் சுத்தம் செய்து தருவதாகக் கூறினார். சொன்னது போல மூன்று நாட்களில் அனைத்தும் தயாராகி அவனிடம் வீட்டின் சாவியும் கொடுக்கப்பட்டது.

சாவி கிடைத்ததும் வீட்டை ஒரு முறை சென்று பார்த்தவனுக்கு அனைத்துமே திருப்தியாக இருந்தது. மனைவி வந்ததும் அவளுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட வேண்டும் என முடிவு செய்தவன் பத்து நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியிருந்தவன் அந்த வார இறுதியிலேயே கிளம்பிச் சென்று மனைவி மகனை அழைத்து வந்த விட வேண்டும் என்று முடிவெடுத்தவனாக அன்றே விமான டிக்கெட்டையும் புக் செய்திருந்தான்.
மனைவி மற்றும் மகனுடன் தான் புது வீட்டிற்குள் செல்ல வேண்டும் என முடிவு செய்தவன் மீதம் இருந்த இரு நாட்களையும் கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸ்சில் கழித்தான்.

 வெள்ளி நள்ளிரவு இவனின் பயணம் இருக்க, இவன் வீடு சென்று போது விடியற்காலை ஐந்து மணி ஆகியிருந்தது. அந்நேரத்தில் இவனைக் கண்ட அனுபமா அதிர்ச்சியுடன்,
“என்ன சஞ்சய் இவ்வளவு காலையில் வந்து இருக்க.? ஏதாவது பிரச்சனையா.? வரேன்னு ஒரு  வார்த்தை கூடச் சொல்லலையே.?” என்று பதட்டத்துடன் கேட்க.
“அம்மா, அம்மா ஏன் இவ்வளவு டென்ஷன்.? மெதுவா.” என்றபடி அவரின் தோளைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டவன் சோபாவில் வந்து அமர்ந்தவாறு.
“இவ்வளவு நாள் தான் என்னால உங்களை எல்லாம் பிரிஞ்சி இருக்க முடிஞ்சது.” என்றவன்
“வீடு கிடைச்சிருச்சு. எல்லாம் பைனலைஸ் ஆயிடுச்சு. அதுதான் வசுந்தராவையும், வருணனையும் அழைச்சிட்டு போலாம்னு வந்துட்டேன். நீங்களும் வாங்க. அப்பா கிட்டயும் கேட்டுட்டு நாளைக்கு கிளம்புற மாதிரி எல்லாருக்கும் டிக்கெட் போட்டுடறேன்.  அதுவரை கொஞ்ச நேரம் போய்ப் படுக்கிறேன்.” என்றபடி தன் அறையை நோக்கிச் சென்றான். ஒரு வாரம் சென்று மனைவி மற்றும் மகனைப் பார்க்கும் ஆவலுடன்.

இவன் அறைக்குள் சென்றபோது இருவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். சிறிது நேரம் அவர்களைப் பார்த்துப் படி நின்றிருந்தவன் பின், இருவரையும் சேர்த்து அணைத்தபடி உறக்கத்தை தழுவினான். இவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்க எழுந்து பார்த்த வசுந்தராவிற்கும், வருணனுக்கும் தான் ஆனந்தம் தாங்கவில்லை. வருணன் தந்தையின் மேலேறி படுத்துக் கொண்டதில் விழிப்பு வர, விழித்துப் பார்த்தவனுக்கு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் புன்னகை முகம் தான் பளிச்சிட்டது. ஒரு கையை அவளை நோக்கி நீட்டி அழைக்க, அருகில் வந்தவளை இழுத்து தன் தோள்வளைவில் போட்டுக் கொண்டான்.
“எப்ப வந்தீங்க.?”என்றவளின் கேள்விக்கு.
“காலையில.”என்று பதில் அளித்தவன் திரும்பவும் உறங்க ஆரம்பித்தான். அவனது அணைப்பில் சிறிது நேரம் அப்படியே இருந்தவள் கீழே இறங்கி வர, மும்முரமாகக் காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார் அனுபமா.

“எப்ப அத்தை வந்தாரு.?” என்ற மருமகளின் கேள்விக்கு மகன் கூறிய  அனைத்தையும் கூறியவர்
“நாளைக்கு கிளம்பனும்னு சொல்றான்.” என்றார் கூடுதல் தகவலாக.
“நாளைக்கே வா.?”
“ஆமா மாமா கிட்ட கேட்டுட்டு எல்லோருக்குமே டிக்கெட் போடப் போறேன்னு சொல்லிட்டு தான் போனான்.” என்றார் வேலைகளைப் பார்த்துக் கொண்டே.
“என்ன காலையிலேயே ஒரே பரபரப்பா இருக்கு வீடு.?” எனக் கேட்டுக்கொண்டே வந்தார் பிரபு. அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக,
“சஞ்சய் வந்திருக்கான்.” என்றார் அனுபமா.
“அப்படியா.?” என இவர் கேட்கும் போதே மகனுடன் மாடியிலிருந்து இறங்கி வந்தான் சஞ்சய்.

“என்னப்பா திடீர்னு.” எனக் கேட்ட தந்தையை பார்த்தவன்.
“அங்கு வீடு எல்லாம் பைனலைஸ் பண்ணிட்டேன் பா. எல்லாம் ரெடி ஆயிடுச்சு. அதுதான் கிளம்பி வந்துட்டேன். இவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போயிடலாம்னு.”  என்று மனைவி, மகனைப் பார்த்தபடி கூறியவன்.
“நீங்களும் வாங்க எங்களோட. ஒரு வாரம் ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம்.”
“ம்ம்… வரலாமே…” என்றார் அவரும்.
“எப்போ கிளம்புற மாதிரி.?” “நாளைக்கு.”
“நாளைக்கே வா.?”
“ஆமா. திங்கள் கிழமை  நான் வேலைக்குப் போகணுமே.”
“சரி, சரி. டிக்கெட் பாத்துட்டியா.?” “இல்ல. இனிமேதான் பார்க்கணும்.” என்றபடி மகனை மடியில் அமர்த்தியவாறு அலைபேசியில் மறுநாள் ஐவரும் கிளம்ப விமான பயணச்சீட்டை புக் செய்தான்.

“நாளைக் காலைப் பதினொன்றுக்கு பிளைட்.”. என்றவன்
“நைட்டே பேக்கிங் எல்லாம் முடிக்கணும்.” என்று கூறியபடி மனைவியைப் பார்க்க. அவள் ஏற்கனவே அவன் சொல்லிச் சென்றதற்கு இணங்க முக்கால்வாசி முடித்திருந்தாள்.
“அம்மா, காலைல சீக்கிரமே கெளம்பிடலாம். போற வழியில வசுந்தரா வீட்ல சொல்லிட்டு போகணும்.”என்றான் அன்னைக்கும், மனைவிக்கும் தகவலாக.
இருவருமே தலையாட்டி ஒப்புக்கொள்ள, திட்டமிட்டபடி மறுநாள் காலையில் கிளம்பியவர்கள் வசுந்தரா வீட்டிற்கு சென்று அனைவரிடமும் கூறிவிட்டு விடைபெற்றார்கள்.

ரகுபதிக்கு தான் மகள் தொலைதூரம் செல்வதில் மிகுந்த கவலையாக இருந்தது. அவர்களோடு இவர்களுமே விமான நிலையத்திற்கு சென்றார்கள் மகளை வழி அனுப்பி வைப்பதற்கு.
விமான நிலையத்தில் வசுந்தரா அனைவரிடமும் விடை பெற்று செல்ல
“சந்தோஷமா போயிட்டு வாடா. கண்டிப்பாக அப்பா ஒரு நாள் வருவேன். உன்னையும் பேரணையும் பார்க்க.” என்று கூறி இருவருக்கும் முத்தமிட்டு அனுப்பி வைத்தார் கண்களில் துளிர்ந்த கண்ணீரை துடைத்தபடி.

மனைவி, மகன், அன்னையுடன் வீட்டிற்குள் நுழைந்த சஞ்சய்க்கு மிகுந்த மகிழ்வு. அனைவருக்குமே வீடு மிகவும் பிடித்திருந்தது இவன் எதிர்பார்த்தபடி  பால்கனியிலிருந்து பூங்காவைப் பார்த்த வருணனுக்கு மிகவும் குஷியானது. உடனே அங்கே போக வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தவனை அடக்கிய வசுந்தரா “அப்புறம் போய்ப் பார்க்கலாம். சரியா.?” எனக் கூறிய தாயின் பேச்சைத் தட்டாமல் சரி என்பதாகத் தலையாட்டினான் குழந்தை. இரண்டு அறைக்கும் தேவையான மெத்தையை ஏற்கனவே ஆர்டர் செய்து பிக்ஸ் செய்திருந்தான். இனி சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் மளிகை சாமானும் வாங்கினால் போதும் என்ற நிலையில், வீடு குடித்தனம் பண்ண தேவையான அனைத்து பொருட்களுடன் அழகாக ஜொலித்தது.

மாலை ஆறு மணிபோல் அனைவரும் வளாகத்திலேயே இருந்த சூப்பர் மார்க்கெட்க்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.அங்கு  மளிகை பொருட்களுடன் பாத்திரங்களும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தது. மறுநாள் காலையில் சஞ்சய் அலுவலகத்திற்கு கிளம்பி விட வாங்கி வந்த பொருட்களை அடுக்கி வைப்பதிலும் சமைப்பதிலும் நேரம் சென்றது வசுந்தராவுக்கும் அனுபமாவுக்கும். பிரபு பேரனுடன் பூங்காவிற்கு சென்றவர் பின்பு அங்கு என்னென்ன இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டார். இவர்களின் வளாகத்துக்குள்ளையே இரண்டு மருத்துவர்கள் கொண்ட சிறிய மருத்துவமனை, மெடிக்கல் ஷாப், சிறுவர்களுக்கான மழலையர் பள்ளியென அனைத்தும் இருந்தது அவை அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து தெரிந்து கொண்டார் பிரபு.

தெரிந்து கொண்டதை மருமகளுக்கும் சொல்ல. அவளும் அனைத்தையும் மனதில் குறித்து வைத்துக் கொண்டாள். அங்கிருக்கும் மழலையர் பள்ளியிலேயே குழந்தையைச் சேர்ப்பது என முடிவாகி மறுநாளே அங்குச் சென்று விசாரித்துக் குழந்தையையும் சேர்த்து விட்டார்கள்.
இப்படியாக ஒரு வாரம் மிக வேகமாகக் கடந்திருந்தது.
மேலும் இரண்டு நாட்கள் மகன், மருமகள் மற்றும் பேரனுடன் செலவழித்தார்கள். பின், அவர்கள் ஊர் செல்லும் நாளும் வந்தது. வசுந்தராவிற்கு தான் மனம் பாரமாகி போனது.
அவர்களை விமான நிலையம்வரை சென்று வழி அனுப்பி வைத்தார்கள் கிளம்பும் நேரம் வருந்தபோது அதற்கு மேல் முடியாமல் அனுபமாவை கட்டி அணைத்த வசுந்தரா தேம்பி அழ ஆரம்பித்தாள். அவளைச் சமாதானம் செய்யவே போதும் போதும் என்று ஆனது அனைவருக்கும். தாத்தா பாட்டி எங்கோ செல்கிறார்கள் என்பதில் சினுங்கிக் கொண்டிருந்த வருணனன் கூட அமைதியாகி அழும் அன்னையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். ஒருவாறுச் சமாதானமாகி அவர்களும் கிளம்பி இருக்க. கண்ணீரை கட்டுப்படுத்தியபடியே வீட்டிற்கு வந்தாள். வீட்டிற்குள் நுழைந்த உடன் அங்கிருந்த வெறுமையைக் கண்டு மீண்டும் அழுகை வரப் பார்த்தது.

அவள் நிலையைப் பார்த்த சஞ்சய். அவளை இழுத்து அணைத்தவன், “என்னடி.? உங்க அப்பாவை விட்டுட்டு வரும்போது கூட இப்படி அழுகல. எங்க அம்மா போறதுக்கு இப்படி அழுகிற.” என அழுததில் சிவந்திருந்த  மூக்கை நிமிண்டியபடி கேட்க.
“அப்பாவா.மாமியாராங்கிறது கிடையாது. யார் உண்மையான பாசம் வச்சிருக்காங்கறதுல தான் இருக்கு. கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் அவங்க கூட நான் ஒண்ணா இருந்து இருக்கேன். மக மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க அளவுக்கு என் மேல யாருமே பாசம் வச்சது கிடையாது.” என்றாள் மூக்கை உறிஞ்சிய படி.
“அப்ப நான்.?” என்று அவன் நெற்றியை சுருக்கி சிந்தனையுடன் கேட்க.
“அவங்கள விடக் கொஞ்சம் கம்மிதான்.” என்றவள் அவன் கைகளில் சிக்காமல் அறைக்குள் சென்று மறைந்தாள்.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 3.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்