Loading

சலனம்-15

 

 

இப்போ எதுக்கு இங்கே வந்த?” தயக்கமாய் நான் கேட்க, ஏதோ நகைச்சுவையைக் கேட்டதைப் போல், தெற்றுப் பல் தெரிய சிரித்துத் தொலைத்தாள் அவள்.

 

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இப்படி சிரிச்சுட்டு இருந்தால் என்ன அர்த்தம்?” என நான் கேட்டதும்,

 

“புரியலையா? புரியாத மாதிரி நடிக்கிறியா?” என பதில் கேள்வி கேட்டாள் சமுத்ரா.

 

 

“நான் நடிக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை!” சுள்ளென பதில் சொன்னேன் நான்.

 

“நடிப்பு சொல்லிக் கொடுக்கிற உனக்கு, நடிக்கத் தெரியாதா என்ன? உன் நடிப்பை சம்யூ நம்பியிருக்கலாம். ஆனால் நான் நம்ப மாட்டேன்.!” குத்தும் வார்த்தைகளால் பதில் சொல்லி, சம்யூவோடு ஒட்டிப் பிறந்தவள் என நிரூபித்தாள் சமுத்ரா.

 

 

“சம்யூ!” என அழுத்தமாய் அழைத்துவிட்டு, “ஸாரி சமுத்ரா!” எனச் சொன்னேன்.

 

 

“அவந்திகாவை நான் கூட்டிட்டுப் போறேன்.! எப்படியும் உன்னால் பார்த்துக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. ஸோ, என்னைப் போக விடுறது தான் உனக்கு நல்லாது!” நான் சொன்ன ஸாரியைக் கூட காதில் வாங்காதவள் போல், பேசினாள்.

 

“அவள் என் குழந்தை!”

 

 

“நான் இங்கே வந்து முழுசா ஒரு அரைமணி நேரம் இருக்குமா? இப்போ வரை, உன் குழந்தை என்னைத்தான் அம்மான்னு நினைச்சுட்டு இருக்கா! இதிலிருந்தே உனக்குத் தெரியலை! குழந்தைக்கு அம்மா தான் தேவை.! நீ போய் உன் டைரக்டர் வேலையைப் பாரு! சம்யூன்னு ஒருத்தி உன் வாழ்க்கையில் இருந்ததையே மறந்துடு. அது தான் உனக்கும் நல்லது! அவந்திகாவிற்கும் நல்லது.!” சம்யூவே எதிரில் நின்று, அவளை மறந்துவிடச் சொல்வதாய் தோன்றியது எனக்கு. என் கரம் என் அணைப்பிலிருந்த குழந்தையை இன்னும் கொஞ்சம் இறுக்கியது.

 

 

“சம்யூ எனக்காக விட்டுட்டுப் போன ஒரே உறவு அவந்தி மட்டும் தான். நான் அவளை யாருக்காகவும் விட்டுத் தரமாட்டேன்.!” என நான் சொன்னதும், அந்த நீலநிறக் கண்களில் வந்து போன பாவனையை நான் அவதானிக்க முற்படும் முன்னமே,

 

 

“சம்யூவைக் கொன்ன மாதிரி, இந்தப் பிஞ்சுக் குழந்தையையும் கொல்லப் பார்க்கிறியா? என்னால் இவளை உன்கிட்டே விட முடியாது.!” உறுதியாய்ச் சொன்னாள் அந்த நீலநிறக் கண்களின் சொந்தக்காரி.

 

 

“சம்யூ செத்துப் போய் ஒருமாசம் ஆகுது.. இத்தனை நாள் உன் பாசம், மண்ணாங்கட்டி, அக்கறையெல்லாம் எங்கே போச்சு? இப்போ வந்து குழந்தையைக் கொடுன்னு குதிக்கிறே? அதெல்லாம் கொடுக்க முடியாது. நீ முதலில் இங்கிருந்து வெளியே போ!” வாசலை நோக்கி கரம் நீட்டினேன்.

 

 

“நீ போன்னு சொன்னதும் நான் பயந்து போய்டுவேனா? குழந்தை இல்லாமல் நான் இங்கிருந்து போக மாட்டேன்!” சட்டமாய் மெத்திருக்கையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்துக் கொண்டாள்.

 

 

‘யார் இவள்? எங்கிருந்து வந்தாள்? திடீரென வந்தாள், ஒட்டிப் பிறந்த இரட்டை என்றாள், இப்போது குழந்தையைக் கேட்கிறாள். நான் என்ன செய்யப் போகிறேன்?’ சம்யூவை அச்சில் வார்த்தார் போல் இருக்கும் இவளை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் குழம்பித் தவித்து நின்றேன்.
அவளோ, எதுவுமே நடக்காதது போல் காலை ஆட்டியபடி அமர்ந்துக் கொண்டு, என் தூக்கி வைத்திருந்த என் குழந்தையைப் பார்த்துச் சிரித்தாள். அவந்திகாவும், பிஞ்சுக் கரங்கங்களால், என்னை உந்தித் தள்ளி இறங்கி,

 

 

“ம்மா!” என விளித்தபடியே ஓடிப்போய் சமுத்ராவின் மடியில் எறிக் கொண்டது.

 

 

“அவந்திகா! ஷீ இஸ் நாட் யுவர் மாம்! உன் அம்மா இல்லை! செத்துப் போய்ட்டா!” அதீத கோபத்தின் உச்சியில் நரம்புகள் தெறிக்கக் கத்தினேன். நான் கத்திய கத்தலின் அதிர்வில் குழந்தை வீறிட்டு அழத் துவங்கியிருந்தாள்.

 

 

குழந்தை அவந்திகாவின் அழுகை, வீடு முழுதையும் கிடுகிடுக்க வைத்தது.

 

 

“பைத்தியமா நீ? கொஞ்சமும் பொறுமை இல்லை? அவள் பச்சைக் குழந்தை! குழந்தையை எப்படி ஹேண்டில் பண்ணணும்ன்னு கூடத் தெரியலை. நீயெல்லாம் குழந்தைக்கு அப்பான்னு வெட்கம் இல்லாமல் வெளியே சொல்லிக்காதே! எப்படி இருந்தக் குழந்தையை எப்படி மாத்தி வச்சிருக்க?!” குழந்தையை மார்போடு அணைத்துப் பிடித்தபடி பதிலுக்குக் கத்தினாள் சமுத்ரா.

 

 

“எல்லாம் உன்னால் தான்! நீ தான் எல்லாத்துக்கும் காரணம். என் சம்யூ உருவத்தில் நீ ஏன் இங்கே வந்தே? வந்தது தான் வந்த, நான் சம்யூ இல்லைன்னு சொல்லித் தொலைச்சால் என்ன? சம்யூ மாதிரி நடிச்சு ஏமாத்தி என்ன செய்யப் போற? இந்த உருவம் மட்டும் சம்யூ மாதிரி இருக்கலாம்.! நீ சம்யூ இல்லை. நீ எப்போதும் அவளாக முடியாது!” கோபமும், அழுத்தமும் என் பதிலில் இருந்தது.

 

 

“நான் சம்யூன்னு உன் கிட்டே சொல்லவே இல்லையே? நீ தான் சம்யூ, சம்யூன்னு என் பின்னால் வந்த! வார்த்தைக்கு வார்த்தை என் சம்யூ! என் சம்யூன்னு சொல்ற உனக்கு உன் சம்யூவை அடையாளம் கண்டு பிடிக்க முடியலையா? கணவன் உருவத்திலே வந்தாலும், மாற்றானை அடையாளம் கண்டு பிடிக்கணும்ங்கிற விதி மனைவிக்கு மட்டும் தானா? உன்னை மாதிரி உண்மையான கணவனுக்கெல்லாம் இல்லையா? நான் மட்டும் மார்டன் அகலிகையாய் இருந்திருந்தால்,

 

“கற்பில் உறுதியில்லாத நீ கல்லாகப் போ!” அப்படின்னு உன்னை சபிச்சுருப்பேன்.!” அதீத நக்கலுடன் அவள் பேச, கோபம் மிகுந்து, அவளைக் கொன்று போட்டுவிடும் அளவிற்கு ஆத்திரம் மிகுந்தது.

 

“சமுத்ரா!” என் அதட்டல், மிரட்டலுக்கெல்லாம் அவள் துளியும் அசைந்துக் கொடுக்கவே இல்லை. அவள் பிடித்தப் பிடியில் அவள் அசையாது அழுத்தமாய் நின்றாள். இந்த அழுத்தமும், தீர்க்கமாய் எனைப் பார்க்கும் விழிகளும் எனக்கு சம்யூவை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க,

 

 

“உனக்கு என்ன தான் வேணும்? இப்படி சம்யூவோட உருவத்தில் வந்து அணு அணுவாய்க் கொல்வதற்கு பதில் ஒரேடியாய் கொன்னுடு!” அன்று சம்யூ என்னிடம் சொன்னதை நான் சமுத்ராவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

 

 

நான் எந்த இடத்தில் சம்யூவை நிறுத்தினேனோ, அதே இடத்தில் இன்று நான் நின்றிருக்கிறேன். காலம் என்னை அதே இடத்தில், அதே சூழலில் நிறுத்தியிருந்தது. அன்று சம்யூவிற்கு எப்படி வலித்திருக்கும் என என்னால் உணர முடிந்தது.

 

 

“அவந்தியை என் கிட்டே கொடுத்துடு விக்ரம்! சம்யூ என்னோட ட்வின்.. அவள் என்ன நினைக்கிறாள்ன்னு என்னால் புரிஞ்சுக்க முடியும். அவளோட உணர்வுகள் எனக்குப் புரியும். அவள் அவந்தியை நினைச்சு ரொம்பவும் கவலைப்படுறாள். அவள் இல்லாமல் போன பிறகும், அவளைக் கஷ்டப் படுத்தாதே ப்ளீஸ்.. குழந்தை நல்லா இருந்தால் மட்டும் தான், அவளோட ஆன்மாவிற்கு நிம்மதி கிடைக்கும். அவள் இந்த உலகத்தை விட்டுப் போன பிறகும், அவளை நிம்மதியில்லாமல் அலைய விட்டுடுடாதே..!” என சமுத்ரா சொன்னதற்கு என்னால் பதில் பேசவே முடியவில்லை.

 

 

சம்யூவின் நினைவில் என் கண்களில் நீர் கோர்த்தது.

 

“நான் கொஞ்சம் யோசிக்கணும்!” அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் வேறு சொல்லவும், அமைதியாய், அவந்திகாவோடு அறைக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டாள் சமுத்ரா.

 

‘இப்போது நான் என்ன செய்வது? எனக்கு யோசிக்கக் கடினமாக இருந்தது. சம்யூவின் உருவத்தில் இருக்கும் இவள் சமுத்ரா என எப்படி நம்புவது? ஒருவேளை இவள் பொய் சொன்னால்? ஒருவேளை குழந்தையைக் கடத்திப் போக வந்திருப்பாளோ? நானே குழந்தையைப் பார்த்துக் கொள்வேன் எனச் சொல்லி அவளை வெளியே அனுப்பிவிட்டால் என்ன? அம்மா! அம்மா என அரற்றிக் கொண்டே திரியும் அவந்திகாவிற்கு என்ன பதில் சொல்வேன்.?’ ஏகப்பட்ட கேள்விகளால் என் மனம் குழம்ப, பத்திரமாய் வைத்திருந்த சம்யூவின் அலைபேசியே எடுத்து உயிர்ப்பித்தேன்.

 

அலைபேசி உயிர் பெற்றதும், நானும் அவளும் நின்றிருக்கும் புகைப்படம் திரையை நிறைத்தது. என் கரம் அவள் பிம்பத்தை ஆசையாய் வருடியது. உயிரோடு இதே வீட்டிற்குள் நடமாடியவள், இப்போது உயிரில்லா பிம்பமாக மட்டுமே நிலைத்திருக்கிறாள் என நினைக்கையில் வேதனையில் நெஞ்சம் விம்மித் தவித்தது.

 

“ஏன்டி என்னை விட்டுப் போன? நீயில்லாமல் நான் வாழ மாட்டேன்னு தெரிஞ்சு தான் குழந்தையை என்கிட்டே விட்டுட்டு போனியா? என்னையும் அவந்தியையும் சேர்த்தே கூட்டிட்டு போயிருக்கலாமே சம்யூ! நான் இப்படி வேதனைப்படுறதைப் பார்க்கத்தான் தனியா போய்ட்டியா? ஆனால், நான் செஞ்சதுக்கெல்லாம் சேர்த்து வச்சு என்னைப் பழி வாங்கிட்ட சம்யூ! இப்போ சமுத்ரான்னு புதுசா ஒருத்தி வந்து நிற்கிறாள்! இப்போ நான் என்ன பண்ணுறது? அவந்தியைத் தூக்கிக் கொடுத்துட்டு அநாதையாய் நிற்கவா? நீ என்னை நம்பி அவந்தியை விட்டுட்டு போயிருக்க சம்யூ! நான் அவ்வளவு ஈஸியாய் அவளை விட்டுட மாட்டேன்.!” என நான் சம்யூவின் பிம்பத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நேரம்,

 

 

என் விரல் பட்டு, அலைபேசியின் கேலரியிலிருந்த ஃபோல்டர் என் கண்ணில் பட்டது.
அதைத் திறந்து பார்த்த எனக்கு, முழுக்க முழுக்க ஆச்சர்யங்கள் காத்திருந்தன. அந்தக் கோப்புறை முழுதும், சம்யுவும் சமுத்ராவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மட்டுமே நிறைந்திருந்தன. இதை இத்தனை நாள் எப்படி பார்க்காமல் விட்டேன்? எனக்கே புரியவில்லை.

 

 

ஏதோ யோசனை வந்தவானாய் சம்யூ அலைபேசியிலிருந்த புலனத்தைத் (Whats app) திறந்தேன்.

 

சமி என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்த எண்ணில் நீலநிறக் கண்களுடன் சிரித்துக் கொண்டிருந்தாள் சமுத்ரா. அடுத்தவர்களின் குறுஞ்செய்தியைப் படிப்பது அநாகரிகம் எனத் தெரிந்தும் அதைச் செய்தேன். எனக்கு உண்மை தெரிய வேண்டியதாய் இருந்தது. சட்டென நம்பி என் குழந்தையை விட்டுவிட முடியாது. புலனத்தில் சம்யூவும், சமுத்ராவும் பரிமாறிக் கொண்ட, குறுஞ்செய்திகள், ஒலிக்குறிப்புகள் அனைத்தையும் பார்க்கும் போது, இங்கு நடந்த எல்லா விஷயங்களையும் உடன் பிறந்தவளுக்குத் தெரிவித்திருக்கிறாள் சம்யூ என்பது மட்டும் எனக்கு தெளிவாகத் தெரிந்தது.

 

 

குழந்தை பிறந்தது முதல் இப்போது வரை அனைத்தும் அவளுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் துளி தடுமாற்றமில்லாமல், அவளால், இந்த வீட்டிற்குள் நுழைய முடிந்திருக்கிறது என்பதும் புரிந்தது.

 

இத்தனையும் தெரிந்த பின்பும், என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. யோசித்து யோசித்து தலையை வலித்தது தான் மிச்சம் என்ற நிலையில் வேறு வழியின்றி சித்தார்த்தை அழைத்தேன்.

 

***-*****

“என்னடா திடீர்ன்னு வரச் சொல்லியிருக்கிற? என்ன பிரச்சனை?” என்றபடியே வந்து என் எதிரே அமர்ந்தான் சித்தார்த்.

 

“இது யாருன்னு சொல்லு!” சம்யூவின் அலைபேசியிலிருந்த சமுத்ராவின் புகைப்படத்தைக் காட்டினேன்.

 

“ம்ப்ச்! என்னடா உனக்கு பைத்தியமா? சம்யூ ஃபோட்டோவைக் காட்டி யாருன்னு கேட்கிறே?”

 

“ஒழுங்கா பார்த்துச் சொல்லு டா!” மீண்டும் அவனுக்கொரு வாய்ப்புக் கொடுத்தேன்.

 

“டேய்! மச்சி, சரக்கடிச்சுருக்கியா.? இது சம்யூ தான் டா!” என சித்தார்த் மீண்டும் சொல்ல, எனக்குள் தேங்கிக் கிடந்த மன அழுத்தத்தையும் மீறி எனக்கு சிரிப்பு வந்தது.

 

 

“கண்ணைப் பாரு டா!”

 

“ஆமா கண்ணு! ப்ளு கண்ணு! கான்டெக்ட் லென்ஸ் வச்சிருப்பாங்க! இதைக் கேட்கத்தான் என்னை வரச் சொன்னியா?” சலிப்பாய் சொன்னபடியே எழுந்தவன், கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்த சமுத்ராவைப் பார்த்து, அதிர்ந்து அசையாமல் நின்றிருந்தான்.

 

“மச்சி! இது கனவு இல்லையே?”

 

“இப்படி கேட்டாதுக்குத்தான், அவள் என்னை ஓங்கி அறைஞ்சாள். இவள் சம்யூ இல்லை சமுத்ரா!” நான் சொல்லவும்,

 

“ஹான்..?” எனக் குழப்பமாய் என்னையும் சமுத்ராவையும் மாறி மாறி பார்த்தான் சித்தார்த்.

 

“சமுத்ராவா? அது யாரு?” என சித்தார்த் கேட்க, சமுத்ரா உள்ளே சென்றதை உறுதி செய்துக் கொண்டு, ஆதி முதல் அந்தம் வரை எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தேன்.

 

 

“இப்போ என்னடா செய்யப் போற  விக்ரம்? உனக்கு மட்டும் எப்படி டா இப்படி வித்தியாசமாய் நடக்குது? ஆனாலும் சம்யூவை விட சமுத்ரா அழகா இருக்கா டா!” எனச் சொன்னவனை நான் முறைக்க,

 

“சரி! இப்படியெல்லாம் என்னை பாசமா பார்க்காதே மச்சி! அடுத்து என்ன செய்யலாம் சொல்லு?” என என்னையே திரும்பக் கேட்டான் சித்தார்த்.

 

“என்ன செய்யன்னு தெரியாமல் தான் உன்னை வரச் சொன்னேன்.!”

 

“ஏன்டா! நானே மிங்கிள் ஆக முடியாமல், சிங்கிளாய் திரியறேன்! என்னைப் போய் யோசனை கேட்க கூப்பிட்டியா? நீ தான், லிவ் இன், கல்யாணம், குழந்தைன்னு எல்லாத்தையும் பார்த்தவன், நானே உன்கிட்டே தான் அட்வைஸ் கேட்கணும். நீ போய் என்கிட்டே கேட்கிறியே டா?” என சித்தார்த் கேட்க,

 

“போடா லூசு! உன்னைப் போய் கூப்பிட்டேன் பாரு!” என நான் சலித்துக் கொள்ள,

 

“மச்சி! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே! ஒண்ணு அவங்க கேட்கிற படி, குழந்தையைக் கொடுத்துடு! உன்னால் பார்த்துக்க முடியாது விக்ரம்! அவந்தியை யோசிச்சுப் பாரு! சின்னக் குழந்தை டா அவள். அம்மா இல்லாமல் வளர வேண்டிய வயசா அவளுக்கு? யோசிச்சு பாரு டா! அவந்திக்கு தேவையானது வெறும் சாப்பாடு மட்டும் இல்லை! அம்மாவும் தான்!” என சித்தார்த் சொல்ல,

“அப்போ அவள் அப்பா இல்லாமல் மட்டும் வளரலாமா?” என நான் கேட்டேன்.

 

“அப்போ, சம்யூ மாதிரியே இருக்கிற சமுத்ராகிட்டே பேசி, அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ! உன் ப்ராப்ளம் சால்வ்ட்!” என சித்தார்த் விளையாட்டாய் சொல்ல, அவன் சொன்ன விஷயத்தில் என் மனம் சிக்கித் தவிக்கத் துவங்கியது.

 

‘அவந்திக்கு அம்மாவும் வேணும்! அப்பாவும் வேணும்! இது சரியா வருமா?’ என நான் யோசித்துக் கொண்டிருக்க,

 

‘இது நீ சம்யூவிற்கு செய்யும் துரோகம்!’

 

 

என என்னையே குத்திக் காட்டிய மனசாட்சியை
“குழந்தைக்காக!” என சமாதானம் செய்ய முயன்றுக் கொண்டிருந்தேன் நான்.

 

“பூ உதிரும் என்பது மட்டுமல்ல;
புதிய பூக்களும் மலரும் என்பதும் உண்மை..!”
(ஜெயகாந்தனின் வரிகளிலிருந்து..)

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்