Loading

சலனம்-14

என் மனதிற்குள் கேள்விகளும், குழப்பங்களும், தொடர் வண்டியைப் போல் இடைவிடாது ஓடிக் கொண்டே இருந்தது.

 

இன்னும் ஏன் இவள் அசையாமல் நிற்கிறாள்? சம்யூவிற்கு என் மீது கோபமா? ஒரு மாதப் பிரிவில் அவள் என்னைத் தேடவே இல்லையா? என்றக் கேள்விகளுக்கு விடை தெரியாமல், அவளிடமே கேட்டுத் தெரிந்துக் கொள்ள முனைந்தேன்.

 

என் மனதிற்குள் ஏகப்பட்டக் குழப்பங்கள் இருந்தன. சம்யூவை அணைக்கையில் ஏற்படும் பிரத்யோக உணர்வு இவளிடம் ஏற்படவில்லை. ஏதோவொரு உறுத்தல் அவளுக்கும் எனக்கும் நடுவில் இருந்து கொண்டே இருந்தது. ஒருவேளை குற்றவுணர்வாக இருக்குமோ? என்றுக் கூட எனக்கு தோன்றியது.

 

“என் மேல் கோபமா? இத்தனை நாளாய் எங்கே போயிருந்த? எப்படி திரும்பி வந்த? இது ஒண்ணும் கனவு இல்லையே? நிஜம் தானே? அப்போ உன்னோட உடலுக்கு நான் தானே இறுதி சடங்கு பண்ணினேன்.. நீ இங்கே நிற்கிறன்னா அது யாரு? எதாவது பேசு சம்யூ.. எனக்கு ஒண்ணுமே புரியலை.! இது நிஜமா? இல்லை கனவா? என் தலையே வெடிச்சுரும் போல இருக்கு சம்யூ! எதாவது பேசித் தொலையேன்? இப்படியே அமைதியாய் நின்னுட்டு இருந்தால் என்ன அர்த்தம்.?”

 

கோபமாய், என்னை மீறி, நான் கத்திய அந்த நொடி, என்னை அவளிடமிருந்து விலக்கித் தள்ளிவிட்டு, ஓங்கி அறைந்திருந்தாள் சம்யுக்தா.

 

செவிக்குள் கொய்ங்ங்ங் என சில விநாடிகளுக்கு சத்தம் கேட்டது.

 

‘நிஜமாகவே சம்யூ என்னை அடித்திருக்கிறாளா?’ இதுவரை எத்தனை சண்டைகள் வந்த போதும், அவள் என்னைக் கை நீட்டி அடித்ததில்லை. அவள் என்னைக் கடைசியாய் அடித்தது, காரை மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான போது தான். இப்போது விழுந்த இந்த அறையின் அர்த்தம் புரியாமல், கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நான் சிலையாக நிற்க, அவள் உதடுகள் பிரிந்தன.

 

“நீயும் உயிரோட தான் இருக்கே.. நானும் உயிரோடு தான் இருக்கேன். இது கனவு இல்லை. புரியுதா?”

 

வைரத்தைப் போன்ற அந்த வார்த்தைகளை உதிர்த்துவிட்டு என்னைத் தாண்டி உள்ளே சென்றாள். அவளது ஒவ்வொரு அடியும் என் வீட்டின் தரைத்தளத்தில் ஒரு புதிய கதையை எழுதத் தொடங்கியது.நானோ அவளின் முதுகை வெறித்திருந்தேன்.

 

இவள் முற்றிலும் புதிதாகவும், புதிராகவும் நடந்துக்கொள்வதாய் எனக்கு தோன்றியது.

 

“ம்ப்ச்! சம்யூ! இப்போ எதுக்கு டி என்னை அடிச்சே.? இத்தனை நாள் என்னை ஏமாற்ற தலை மறைவாய் இருந்தியா.? உன் புத்தியைக் காட்டிட்ட பார்த்தியா?”

 

உள்ளுக்குள் ஊற்றெடுத்த மகிழ்ச்சியை மறைக்க, கோபத்தைத் திரையாகப் போர்த்திக் கொண்டு உளறினேன். அவளோ என் சொற்களைக் காற்றில் கரைந்த தூசியெனக் கருதினாள்.  பயணப் பையை எடுத்து, அதில் அவந்தியின் ஆடைகளை அவசர அவசரமாகத் திணித்தாள்.

 

ஒவ்வொரு துணியும் அவள் கைகளில் அகப்படும்போது, ஏதோ ஒரு பந்தம் அறுபடுவதைப் போல எனக்குத் தோன்றியது. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினேன். அவளோ எதையும் கண்டுக் கொள்ளாமல், தன் பணியைக் கண்ணும் கருத்துமாய் செய்துக் கொண்டிருந்தாள்.

 

“சம்யூ! என்ன செய்ற? அவந்தியோட ட்ரெஸ்ஸெல்லாம் எதுக்கு எடுக்கிறே?” என நான் கேட்ட கேள்விக்கு அவள் பதில் சொல்லவே இல்லை.

 

“சம்யூ! நான் கேட்டுட்டே இருக்கேன்.. நீ என்ன பதில் சொல்லவே மாட்ங்குறே?” என அவள் கரம் பிடித்து இழுத்து நிறுத்தினேன். மின்சாரம் தாக்கியதைப் போல என் கையை உதறினாள்.

 

“ம்ப்ச்! தொட்டுப் பேசற வேலையெல்லாம் வச்சுக்காதே! கொன்னுடுவேன் உன்னை!” அவளது கண்கள் சிவந்து நெருப்பைக் கக்கின.

 

​அவள் திரும்ப என்னிடம் சேர்ந்துவிட்டாள் என்ற பேருவகையை மீறி, எனக்குள் ஒரு அந்நிய உணர்வு மெல்லப் படர்ந்தது. இந்த ஒரு மாதப் பிரிவு அவளை உருமாற்றியிருந்தது. அவளது நிமிர்ந்த நடை, அதிகாரமான பேச்சு, உணர்ச்சியற்ற கண்கள்… என் சரிபாதியாக இருந்தவள், இன்று வித்தியாசமாகத் தெரிந்தாள்.

 

விரல் நீட்டி என்னை அவள் எச்சரித்த தோரணை, எனக்குள் ஊற்றெடுத்த சந்தோஷத்தையும் மீறி, எனக்குள் ஏதோ வித்தியாசமான உணர்வை தந்தது.. இந்த ஒருமாதப் பிரிவு அவளை நிரம்பவும் மாற்றியிருந்தது. அவள் பேச்சு, நடவடிக்கை, எல்லாமே வித்தியாசமாக இருந்தது. என் மனைவியாக இருந்தவள், ஏனோ மூணாவது மனுஷியைப் போல் தெரிந்தாள். ஏன் இப்படி நடந்துக் கொள்கிறாள்? என்னால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை.

 

“நாம ஹஸ்பண்ட் அன் வொய்ஃப் சம்யூ! நானே தொடக் கூடாதுன்னு சொல்ற? என்னதான் நினைச்சுட்டு இருக்க.! நீ ரொம்பவும் மாறிட்ட சம்யூ!” அவள் நக்கலாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் காதல் இல்லை, வெறும் ஏளனம் மட்டுமே இருந்தது.

 

“ஹஸ்பண்ட் அன் வொஃய்ப்ன்னா என்ன? தொடக் கூடாதுன்னா கூடாது தான். கழுத்தில் தாலியைக் கட்டிட்டு, ஒரு குழந்தையைக் கொடுத்ததால் ஹஸ்பண்ட் அன் வொய்ப்ன்னு சொல்றியா? ஒரு ஹஸ்பண்டா இதுவரை நீ என்ன செஞ்சு கிழிச்சுருக்க? குழந்தையும் இந்த வீடும், இருக்கிற நிலையைப் பார்த்தாலே நல்லா தெரியுதே.. நீ எந்த லட்சணத்தில் குழந்தையைப் பார்த்துக்கிறன்னு..!” என அவள் சொல்ல,

 

“சம்யூ!” எனக் குரலை உயர்த்தினேன் நான்.

 

“டோன்ட் கால் மீ சம்யூ!”

 

என அழுத்திச் சொன்னாள் சம்யுக்தா. அவள் குரல் ஒரு கட்டளையைப் போல அறைக்குள் அதிர்ந்தது.

 

“உன் பேரைக் கூட நான் சொல்லக் கூடாதா? அந்த அளவிற்கு என்மேல் கோபமாய் இருக்கியா?” என நான் கேட்க,

 

“நான் சம்யூ இல்லை புரியுதா? சம்யூ ஒரு முட்டாள்! உன்னைப் போய் கல்யாணம் பண்ணி, பத்தாக் குறைக்கு ஒரு குழந்தையும் பெத்து வச்சிருக்கா!” எனச் சொன்னாள் அவள். எனக்கு ஒருநொடி அவள் என்ன சொல்கிறாள் என்பதே புரியவில்லை.

 

எனக்குத் தலை சுற்றியது. இவள் என்ன பிதற்றுகிறாள்? அதிர்ச்சியில் மூளை செயலிழக்க, அவளையே உற்று நோக்கினேன். அதே நிறம், அதே உயரம், இளவேனில் காலத்துக் காடுகளைப் போன்ற அதே கபில நிறச் சிகை… அச்சு அசலாக என் சம்யு தான். இவள் சம்யு இல்லை என்பதை என் கண்கள் ஏற்க மறுத்தன. இவள் என்ன சொல்கிறாள்? இவளுக்குப் பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டாதா? அவள் சம்யூ இல்லை என அவளே சொல்லிக் கொள்கிறாள்.. என்ன தான் இங்கே நடக்கிறது? மிகவும் குழப்பமாய் இருந்தது எனக்கு.

 

 

“பொ.. பொய் சொல்லாதே சம்யூ!” என் வார்த்தைகள் தடுமாறியது.

 

“உன்கிட்டே பொய் சொல்லி நான் என்ன செய்யப் போறேன்?!” என என்னைப் பார்க்காமலே சொன்னவள், குழந்தையை ஒருகரத்தில் வைத்தபடியே, துணிகளை பைக்குள் அடுக்குவதில் கவனமாய் இருந்தாள். அதோடு, குழந்தையின் பிறப்புச்சான்றிதழ், தடுப்பூசி விவர அட்டை என அனைத்தையும், சரியாய் மேஜை இழுப்பறையிலிருந்து எடுத்து பைக்குள் பத்திரப்படுத்தினாள்.

 

“விளையாடாதே சம்யூ! இது விளையாட்டு விஷயமில்லை.!”

 

“நானும் விளையாடலை. மிஸ்டர். விக்ரம்! உன்னை மாதிரி ஒரு ஆளுக்கெல்லாம் மரியாதைன்னு ஒண்ணு தேவை இல்லை தான். ஆனால் நான் தரத்தை விட்டு இறங்கி வர முடியாது பாரு!” அதீத நக்கலுடன் வந்தது அவளின் குரல். என்னிடம் வேண்டா வெறுப்பாய் பதில் சொல்லிவிட்டு,

 

குழந்தையையும், பயணப் பொதியையும் தூக்கிக் கொண்டு வெளியேற முற்பட்டாள் அவள்.

 

“ஏய்.. என்னடி விளையாடுறியா? நீபாட்டுக்கு வந்த, குழந்தையைத் தூக்கிட்டு வெளியே போற? அவந்தி என் குழந்தை.. நீ சம்யூ இல்லைன்னா என் குழந்தை உனக்கெதுக்கு? குழந்தையை விட்டுட்டு எங்கே வேணும்னாலும் போ!” கொஞ்சம் குரலுயர்த்தி சொன்னேன்.

 

“மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும்..!” எனச் சொல்லிவிட்டு, அவள் என்னைத் தாண்டிச் செல்ல முற்பட்ட நேரம், அவள் கைப்பிடித்து தடுத்து நிறுத்தினேன் நான்.

 

“நீ சம்யுக்தா இல்லை.. அப்போ நீ யாரு?” என நான் கேட்ட அந்த நொடி இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது. முதன் முறையாய் அவள் விழிகளைச் சந்தித்தேன். என் ஒட்டுமொத்த உலகமும், காலின் கீழே தலைகீழாய்ச் சுழன்றது. நிச்சயமாய் இவள் சம்யுக்தா இல்லை. என் மனம் அடித்துச் சொன்னது. அவள் என் சம்யூ இல்லை எனத் தெரிந்த நொடி, அவள் கரம் உதறிவிட்டு விலகி நின்றேன்.

 

அதே உருவம், அதே தோற்றம், நிறம் பார்வை என அத்தையும் சம்யூவைப் போல இருந்தாலும், அந்தக் கண்கள், என்னிடம் கசிந்துருகி காதல் பேசிய கண்கள் இது இல்லை எனத் தெரிந்த நொடி, உயிருக்குள் ஒருகோடி முறை பூகம்பம் நிகழ்ந்து முடிந்திருந்தது.

 

“நீ யார்.. நீ என் சம்யூ இல்லை!”
அவசரமாய் அவள் கரத்திலிருந்தக் குழந்தையை வெடுக்கெனப் பிடுங்கிவிட்டு வினவினேன். என் பயத்தையும், பதற்றத்தையும் அந்த நீல நிறக் கண்கள் கேலியாய் பார்த்தது. ஆம்! சம்யூவினுடையது அடர் பழுப்பு நிற விழிகள். ஆனால் இவளுடையதோ, நீல நிற விழிகள். இந்த நீல நிற விழிகள் தான் இவள் சம்யூ இல்லை எனக் காட்டிக் கொடுத்தது. அந்த நீல நிற விழிகளில் காதல் இல்லை, மாறாக ஒரு பெரும் சூறாவளி ஒளிந்திருந்தது.

 

இவள் யார்? இவளுக்கும் சம்யூவிற்குமான உருவ ஒற்றுமைக்குக் காரணம் என்ன.? என என் மூளைக்குள் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும் போதே,

 

“சமுத்ரா! என் பேர் சமுத்ரா!” எனச் சொன்னாள். விழிகளுக்குள்ளேயே அகன்று விரிந்த ஆழ்கடலை சிறை செய்து வைத்திருக்கும் இவளுக்குப் பொருத்தமான பெயர் தான். என நினைத்துக் கொண்டேன்.

 

“நான் சம்யூவோட ட்வின் சிஸ்டர்!”

 

“சமுத்ரா”

 

அந்தப் பெயர் என் நினைவடுக்கின் ஏதோ ஒரு மூலையில் மங்கலாக மின்னி மறைந்தது.அவள் சொன்ன பின் தான் சமுத்ரா என்ற பெயரை என்றோ கேட்டதாய் எனக்குள் ஞாபகம் வந்தது. என்றோ ஒருநாள் சம்யூ என்னிடம் சொல்லியிருக்கிறாள்.

 

“விக்ரம்! சமுத்ரா உன்கிட்டே பேசணுமாம்! ஏற்கனவே சொன்னேனே! என் சிஸ்டர் டா!”
என அலைபேசியை சம்யூ தர முயற்சித்ததும், நான் மறுத்ததும், நினைவிற்கு வந்தது. ஆனால் நான் தான் எதையுமே சரியாய் கவனிக்கவில்லை. சம்யூவிற்கு என் குடும்பத்தைப் பற்றி எல்லாமும் தெரியும். ஆனால் எனக்கு, அவளை மட்டுமே தெரியும். அவள் குடும்பமோ, உடன் பிறந்தவர்களோ, எதுவுமே தெரியாது. எனக்குத் தெரியாது என்பதை விட, நான் தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை எனச் சொன்னால் தான் சரியாக இருக்கும்.

 

சம்யுவின் காதல் மட்டுமே எனக்குப் போதுமானதாக இருந்தது; அவளது வேர்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை நான் தேடவே இல்லை.
​இன்று என் முன்னே நிற்பது சம்யுவின் பிம்பம் தான், ஆனால் அவள் ஆன்மா அல்ல. சம்யுவின் மென்மை அற்ற, ஒரு கட்டுக்கடங்காத சமுத்திரமாக இவள் நிற்கிறாள். இப்போது என் முன்னே இருப்பது தீர்க்க முடியாத ஒரு புதிரா? அல்லது என் வாழ்க்கையின் அடுத்தக்கட்டப் போராட்டமா? விடை தெரியாமல் அந்த நீல நிற விழிகளுக்குள் நான் தொலைந்து போய்க்கொண்டிருந்தேன்.

 

“உருவம் அவள்… கண்கள் வேறோ?

உயிரைச் சுட்ட நீலத் தீயோ!
​காதல் பேசிய பழுப்பு நிற விழிகள் எங்கே?

கடலாய் மிரட்டும் இந்த நீல நிறக் கண்கள் எங்கே?

​என் சம்யுவின் முகமூடி அணிந்த மர்மமே!

சமுத்ராவாய் வந்து என் அமைதியைக் கொன்றாயே!

​அவள் அலை… நீயோ ஆழி!

முடிவற்ற இப்போரில் – நான்
யாரைத் தேடி அலைவேன் இனி?”

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சமுத்திரா சூப்பர்.

    1. Author

      தொடர் ஆதரவிற்கு நன்றிகள் கலை மா ❤