
“ஏன்டா இப்படி பொய் சொல்லி வச்ச” என்று கதிரவனிடம் தான் நிவேதன் கடிந்தான்.
“பொய் சொன்னதுனால தான, அவள் இவ்ளோ பதறுனா… இதே எனக்கு அடிபட்டுருந்தா இப்படி தான் பதறி இருப்பாளா?” கதிரவன் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள,
சிந்தாமணியும், “எல்லாம் நல்லா தான் பதறுவாங்க. ஆனா காதலிக்கிறதை ஒத்துக்குறதுல மட்டும் கவுரவம் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க… சிலரோட புத்தியே இது தான…” எனக் கதிரவனையும் சேர்த்தே கொட்டினாள்.
அதில் முகம் மாறிய கதிரவன், “இங்க யாரும் கவுரவம் பார்க்கல சிந்தா…” என்றதில்,
“நான் கண்மணியைப் பத்தி தான் பேசுறேன். உங்களுக்கு ஏன் குடையுது’ எனச் சீற்றமாய் வினவ, குடும்பத்தினர் நிவேதன் கண்மணியைத் தவிர்த்து இப்போது இவர்களை தான் ஆராய்ச்சியாகப் பார்த்தனர்.
ஆதிசக்தியோ, “இளா… கண்மணிட்ட லவ் பண்றியான்னு கேட்குறதுக்கு முன்னாடி நான் இவள்கிட்ட கேட்டுருக்கனும்போலே” என முணுமுணுக்க, “இவங்க கேட்டா கூட வாயைத் திறக்க மாட்டுறாங்களே…” என்றார் நொந்து
இடைப்பட்ட மாதங்களில் யாஷின் மூலமாக, சிந்தாமணி கதிரவனை விரும்புவதை அவர் அறிந்தே வைத்திருந்தார்.
நிவேதனுக்கோ இங்கிருக்கும் அனைவரும் கண்மணியைத் தவறாக எண்ணுவது தற்போது தான் உறைத்தது.
“நிறுத்து சிந்தா… கண்மணியை எதுக்காக சீண்டுற?” அவனிடம் மெல்லிய கோபம் தென்பட்டது.
“அவள் உங்களை விரும்புறா அண்ணா. ஆனா வேணும்னே மறைச்சதும் இல்லாம எல்லார்முன்னடியும் உங்களை வேணாம்னு சொன்னது எந்த விதத்துல நியாயம்.”
“ஐயோ! நான் தான் அத்தை எங்களை பத்தி கேட்டா, என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடுனு சொன்னேன்.
அவளுக்கு என்னை பிடிக்கும்னு எனக்கும் தெரியும்” என்றவன் அதன்பிறகே ஆதிசக்தியின் காரப்பார்வையில் தலை கவிழ்ந்தான்.
“ஏன் இப்படி பண்ணுன நிவே?” காட்டத்துடன் கேட்டார் ஆதிசக்தி.
“நான் அவளுக்கு செட் ஆவேன்னு தோணல அத்தை. என் வாழ்க்கை முறை எல்லாமே வேற. எனக்குன்னு படிப்பு இல்ல. அவளுக்கு எந்த விதத்துல நான் சரியா வருவேன். அதெல்லாத்துக்கும் மேல, தலைக்கு மேல கத்தி தொங்கும்போது, அவளையும் இழுத்து விட எனக்கு மனசு இல்ல!” என்றவனின் விழிகளில் காதல் காயம்.
“பைத்தியமா நீ?” இளவேந்தன் அதட்டினார்.
இவை அனைத்தும் காதில் வாங்கினாலும் அறையை விட்டு வந்தாளில்லை கண்மணி.
அவளது அறைக் கதவைத் தவிப்பாய் ஏறிட்டவனும், “ஒருவேளை நிதாவைக் காப்பாத்த என் உயிர் தான் அலெஸ்ஸுக்கு வேணும்னா, எப்ப வேணாலும் அதைக் குடுக்க நான் தயாரா இருக்கேன் மாமா. அந்த முடிவை எடுத்தப்பறம், அவளுக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்கையைத் தருவேன்னு நம்பிக்கை குடுக்க முடியும்?” எனக் குரல் தேய கூறினான்.
அப்போது தான் அங்கு யாஷ் பிரஜிதனுடன் வந்திறங்கிய நிதர்ஷனா, தமையனின் கூற்றில் அதிர்ந்து விட்டாள்.
“பைத்தியமா இவன்?” வாய்விட்டே கேட்டு விட்டவளை, மேலிருந்து கீழ் வரை பார்த்த யாஷ், “உன்னை விட இல்லை” என்றான் தோளைக் குலுக்கி.
அவனை கடுப்பாய் முறைத்து வைத்தவளுக்கோ, இத்தனை நாள் நடித்ததெல்லாம் வீண் என்றதோடு, தனது நடிப்பிற்கும் சேர்த்து என்ன ஆட்டம் ஆடப்போகிறானோ என்ற பயம் மெல்லத் துளிர்த்தது.
அவனது கோபத்தை விட, அந்த அடக்கப்பட்ட அமைதி அவளை அதிகம் அச்சுறுத்தியது.
இதில் நிவேதன் வேறு! காதலை தன்னிடம் இருந்தே மறைத்து விட்டானே என்ற கோபம் எழ, விறுவிறுவென உள்ளே சென்றவள், மொத்தக் குடும்பத்தையும் முறைத்துப் பார்த்தாள்.
“நிதா…” இளவேந்தன் அவளைக் கண்டதும் கண்கள் பனிக்க அருகில் வர,
“அந்த அரக்கனுக்கு தான் அறிவில்ல. ஒவ்வொரு வாட்டியும் புதுசா கடத்துற மாதிரியே கடத்தி என்னை இங்க இழுத்துட்டு வர்றான். பெரிய மனுசங்க புத்தி மதி சொல்லாம, அவனோட சேர்ந்து நடிக்க அலப்பறை பண்ணிட்டு இருக்கீங்க” என இடுப்பில் கையூன்றி நின்றாள்.
ஆதிசக்தி அவளைக் கூர்மையாய் ஏறிட்டு, “அப்போ அவன் சொன்ன மாதிரி நீ உண்மையாவே மறந்த மாதிரி தான் நடிச்சுருக்க” எனக் கோபமாய் கேட்க,
நிவேதனோ “கடைசிவரை நீ நடிச்சுருக்க மாட்டன்னு நம்புனேன் நிதா…” என்றான் உணர்வற்று.
திருதிருவென விழித்த நிதர்ஷனாவிற்கு ஐயோ என்றிருந்தது.
‘அப்போ நான் நடிச்சதை யாருமே கண்டிபிடிக்கலையா. நான் தான் வாண்டடா வந்து மாட்டிக்கிட்டேனா…’ எனத் தனக்குள் புலம்பியவள்,
“கண்மணியை அவாய்ட் பண்ண உனக்குன்னு ஒரு காரணம் இருந்த மாதிரி, எனக்கும் ஒரு காரணம் நிவே.” மெதுவாய் கூறியவளின் முகம் பார்க்க மறுத்தவன், யாஷ் அருகில் இருந்த வீட்டிற்கு சென்று விட்டதை அறிந்து அங்கு நகன்றான்.
முதன்முறை அறிந்த தமையனின் பாராமுகம் அவள் நெஞ்சைப் பிசைந்தது.
யாஷ் பிரஜிதன் தனது அறைக்குள் நுழைந்ததும், கட்டிலில் அமர்ந்து நெற்றியில் கை வைத்துக் கொண்டான்.
அவனைத் தேடி வந்த நிவேதனுக்கு அவனது வலி புரிந்ததோ என்னவோ, “மச்சான்” என அழைத்தான் மெல்லமாக.
கண்மூடி அசையாத நிலையில் இருந்தவன், “ம்ம்” என்க,
“நீ சொன்னப்ப நான் நம்பல. அவளால எப்படி நடிக்க முடிஞ்சுதுனு என்னால நினைக்கவே முடியல மச்சான். அவள் உன்னை அவ்ளோ லவ் பண்ணுனா… உனக்கே தெரியுமே!” என்றான் வருத்தமாக.
“அதிகமா லவ் பண்றவங்களால தான் ஹர்ட் பண்ணவும் முடியுது. உங்களை மாதிரி!” என அவனையும் இணைத்தே கூற, சுள்ளென உள்ளுக்குள் ஒரு வலி பரவித் துடிக்கச் செய்தது.
“யா… யாஷ்” பேச இயலாமல் திணறியவன், ‘லவ்வை விட அது குடுக்குற வலி காயப்படுத்திடும்ன்ற பயம் தான் மச்சான்…” எனத் தவிப்பாய் கூறினான்.
“ஓ! காயப்படும்போது கூட நிக்கனும்னு தோணாது உங்க லவ்வுக்கு…” ஏளனமாய் கேட்டவனின் முகத்தில் ஒரு டஜன் ஆத்திரம் வழிய, நடுங்கிப் போனவனோ, “அப்படி இல்ல யாஷ்!” என்றான் வலியுடன்.
“கெட் அவுட்!” பற்களைக் கடித்துக் கத்தினான் யாஷ் பிரஜிதன்.
அவன் வதனம் தாங்கிய கொடிய காதல் ரணம் அவனை அதிகம் காயம் செய்தது.
அவனை எதிர்கொள்ள தெம்பின்றி அங்கிருந்து வெளியேறினான்.
——-
வீட்டினர் யாரும் நிதர்ஷனாவுடன் பேசவில்லை. கதிரவனும் அவள் மீது கோபமாக இருந்தானோ என்னவோ முறைத்துக்கொண்டே இருந்தான்.
அவர்களது மௌனம் அவளுக்கு சற்றே மனவருத்தத்தைக் கொடுக்க, பின்பக்கம் சென்று அமர்ந்து கொண்டாள்.
அங்கு வீற்றிருந்த மருதாணிச்செடி கூட அவளுடன் ஆயிரம் நினைவுகளை பகிர்ந்தது.
இரவு வேளையிலும் தான் கேட்டதற்கிணங்க, மருதாணிச் செடி கேட்டு தாய் வீட்டிற்கு வந்த ஆடவனின் பிடித்தமும் துடிப்பும் மனதில் மெல்லிறகை வருடிச் சென்றும் புழுவாய் துடிக்க வைத்தது.
இங்கோ ரித்திகாவும் ஆஹில்யனும் நிதர்ஷனாவைப் பார்வையாலேயே சுட்டனர். அவர்களும் அங்கு வேலையை முடித்து விட்டு முன்னமே கிளம்பி விட்டனர்.
ரித்திகா தான் கொந்தளித்து விட்டாள்.
“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நிதா. உனக்கு சரியாகணும்னு ராத்திரி பகலா லேப்ல அடைஞ்சு கஷ்டப்பட்டவனை ஈஸியா மறந்துட்டேன்னு கிளம்பி போய்ட்ட. அவனோட கேரியர், பியூச்சர்னு எல்லாத்தையும் அடமானம் வச்சு, லீகலா பெர்மிஷன்ஸ் வாங்கி, ரிசர்ச் சக்ஸஸ் பண்ண வச்சு, அவனோட ஒட்டு மொத்த உழைப்பையும் போட்டான்.
சைனீஸ்காரன் உனக்கான ரிசர்ச்ச பண்ண விடமாட்டுறான்னு, அவனுக்குத் தேவையான ஸ்பேஸ் ப்ராஜக்டை கூட விட்டுக் குடுத்துட்டான் தெரியுமா? இப்ப அவன் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதை இன்னொருத்தன் பேர்ல, லான்ச் பண்ண போறாங்க.
இதெல்லாம் அவனுக்கு ஒரு பெரிய விஷயமாவே தெரியல. நீ இல்லைன்றது மட்டும் தான் அவனுக்கு ஒட்டு மொத்த வலியே. கிட்டத்தட்ட பதினைஞ்சு வயசுல இருந்து அவனோட வெறி, அவன் கேரியர் மட்டும் தான் நிதா. உன் ஒருத்திக்காக தான் தன்னோட பத்து வருஷ கனவான சேர்மன் போஸ்ட்டை விட்டுட்டு உன் மேல காதல்னு உன்னைத் தேடி வந்தான்.
அப்போ இருந்து, அவன் உனக்காக பண்ற சாக்ரிபைஸ் கொஞ்சம் நஞ்சம் இல்ல. ஆனா உனக்கு எல்லாம் அசால்ட்டா இருக்குல்ல?” என்று மூச்சிரைக்க கோபத்தைக் கொட்டினாள்.
கண்ணில் துளிர்த்த நீர்த்துளியுடன் நிதர்ஷனா அவளைப் பார்க்க, ஆஹில்யனுக்கு தான் வருத்தமாக இருந்தது.
“ரித்தி… கொஞ்சம் அமைதியா பேசு” என ரித்திகாவை சமாதானம் செய்ய, “எப்படி ஆஹி? எப்படி இவள் அவனை விட்டுட்டுப் போகலாம். அதுவும் தெரிஞ்சே! இவளுக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருக்கணும்” எனக் கத்தும்போதே,
நிவேதன் தங்கையின் மீது எழுந்த கோபத்துடன் அவளைத் தேடி வந்தான்.
நிலைப்படியில் காலைக்குறுக்கி அமர்ந்திருந்தவளை சப்பென அறைந்திருந்தான். ரித்திகாவும் ஆஹில்யனுமே திகைத்து, அவனைத் தடுத்தனர்.
நிதர்ஷனா அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்து அவனையே பார்த்திருக்க, சத்தம் கேட்டு கதிரவன் தான் வேகமாய் ஓடி வந்தான்.
“டேய் என்னடா பண்ற?” என நிவேதனை அதட்ட,
“என்ன காரியம்டா பண்ணிருக்கா இவ. நம்ம தான் அன்னைக்கு அவள்கிட்ட படிச்சு படிச்சு சொன்னோமே. அவன் பால்ல மருந்து கலந்ததுல இருந்து எல்லாமே இவள் நல்லதுக்காக தான்னு. அதையே மனசுல வச்சுத் தொங்கிட்டு, ஆறு மாசமா படுத்த படுக்கையா இருந்தவளை பார்த்து பார்த்து உடைஞ்சு போனவனை மொத்தமா உடைய வச்சுட்டுப் போக எப்படிடா மனசு வந்துச்சு இவளுக்கு.
இவள் நடிக்கிறான்னு பார்த்ததும் கண்டுபிடிச்சவனுக்கு எவ்ளோ வலிச்சுருக்கும். சொல்லு நிதா. உன் வறட்டுக்கோபம் இப்பவாவது தீர்ந்துச்சா. இல்லை இன்னும் மிச்சம் இருக்கா…” என்று அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி கடுமையாகக் கேட்க, அவனது கோபம் அவளை அதிகம் தாக்கியது.
கன்னத்தில் வழிந்த கண்ணீருடன் பேச்சற்று அமர்ந்திருந்தவளைக் காணவே நெஞ்சம் தகித்தது.
“வாயில என்ன கொழுக்கட்டையா வச்சுருக்க. சொல்லு நிதா. ஏன் இப்படி செஞ்சு தொலைஞ்ச?” என அவள் முன் அமர்ந்து ஆதங்கம் குறையாது கேட்க, அவளோ தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.
“என்னை என்ன பண்ண சொல்ற நிவே. என்னைப் பார்த்து தினம் தினம் அவன் சாகுறதை பார்க்க சொல்றியா. என் காதலுக்கு அந்த அளவு தைரியமெல்லாம் இல்ல நிவே” சொல்லும்போதே நிவேதனின் சட்டையைப் பிடித்திருந்தாள்.
“வலிக்குது நிவே. அவன் காதல் ரொம்ப ரொம்ப வலிக்குது…” கதறலுடன் தொடங்கியவள்,
“நம்ம காதலிக்கிறதை விட நம்மளை காதலிக்கிறவங்க நமக்காக பண்ற சாக்ரிபைஸ் எவ்ளோ வலிக்கும் தெரியுமா.
அவன் அழுது நீ பார்த்துருக்கியா… அவன் பயந்து நீ பார்த்துருக்கியா… ஆறு மாசம் கோமால இருக்கும்போது நான் பார்த்தேன்.
அவன் கண்ணீர் என் கைல படும்போதெல்லாம் அப்படியே செத்துட்டா, அவன் ஒரேடியா அழுதுட்டு என்னை மறந்துடுவானேன்னு துடிச்சுருக்கேன் தெரியுமா…
‘வந்துடு ஆலம்பனா… வந்துடு’ன்னு அவன் பயந்து என் பக்கத்துல நடுங்கி படுக்கும்போதெல்லாம், உயிரே போகும்.
எத்தனை தடவை நிவே… இன்னும் எத்தனை தடவை தான் எனக்காக அவன் துடிப்பான். ஏற்கனவே ஒரு தடவை தெரியாம அவன் காதலை கொன்னுட்டு வலி குடுத்தேன். இப்ப படுத்த படுக்கையா இருந்து, அவனுக்கு ஒவ்வொரு நாளும் நரகத்தை தான் குடுத்தேன். என் காதல் அவனுக்கு வலியை மட்டும் தான் குடுக்குது நிவே. என்னை சரி பண்ண முடியலைன்னு ஒவ்வொரு நாளும், அவன் உள்ளுக்குள்ள படுற வேதனையை தினமும் உணர்ந்துருக்கேன்.
அவன் என்னைத் தொடும்போது தெரியாதா, என்னைப் பிடிச்சு தொடுறானா கடமைக்கு தொடுறானான்னு… அப்போ என் மேலயே எனக்கு கோபம். எனக்காக சின்ன விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ற அவனோட அன்பு எனக்குப் பயத்தை கொடுத்துச்சு நிவே.
நாளை பின்ன, எனக்கு ஏதாவது ஆகிட்டா என்ன ஆவானோனு நடுங்கிட்டேன். அதை தான் அவன்மேல் கோபமா காட்டுனேனே தவிர, என் அரக்கனை பத்தி எனக்கு தெரியும். அவன் எனக்கு வெசத்தை கலந்து குடுத்தா கூட நான் குடுச்சுப்பேன்.
ஆனா, என் பயம் உடனே நடந்து என்னை கோமால தள்ளுனதோட, அவனோட ஒட்டுமொத்த வலியையும் வேதனையும் என்னைக் கையாலாகாத நிலைல உணர வச்ச இந்த விதி மேல எனக்கு பயங்கர கோபம்.
போதும் நிவே. என்னால அவனுக்கு என்ன குடுக்க முடியுது. இந்தக் காதல் என்னை கடன்காரியா தான் ஆக்குது நிவே.
என்னால முடியல. என்னால இந்தக் காதலைத் தாங்க முடியல நிவே. அவனை அவன் வேலையை பார்க்க சொல்லு நிவே. என்னை இங்க இருந்து கூட்டிட்டுப் போய்டுடா…
முடியலைடா. இன்னொரு தடவை எனக்காக அவன் துடிக்கிறதை பார்த்தா செத்தே போய்டுவேன் நிவே… கூட்டிட்டு போடா அண்ணா. ப்ளீஸ்டா” என்று வாய்விட்டே கதறி அழுதவள் அவனது சட்டையை விடாமல் பிடித்து அவன் நெஞ்சிலே சாய்ந்து உடைந்து போனாள்.
அவளது கூற்றில் அவள் முன்னே வீற்றிருந்த நால்வரும் தான் உருகி விட்டனர்.
“நிதா…” ரித்திகா கண்ணில் நிறைந்த நீருடன் அவளை சமன்செய்ய விழைய,
“நீயாச்சு சொல்லு ரித்தி. எனக்காக அவன் பண்ணுன சாக்ரிபைஸ் போதும். ப்ளீஸ் ரித்தி…” எனக் கண்ணீருடன் கெஞ்சிட, அவளை வாரி அணைத்துக்கொண்டவளுக்கோ அழுகை தான் வந்தது.
அவளது கதறலைக் கேட்க இயலாதானாக கதிரவன் காதை மூடிக்கொண்டு கன்னத்தில் வழிந்த நீருடன் உள்ளே சென்று விட, அங்கு சிந்தாமணி கண்மணியுடன் மற்றவர்களும் தளர்ந்து நின்றிருந்தனர். அவர்களுக்குப் பின்னால் யாஷ் பிரஜிதனும்!
நொந்து தரையில் அமர்ந்து விட்ட கதிரவன் இன்னும் காதில் இருந்து கையை எடுக்கவில்லை.
“டேய் ஏதாச்சு பண்ணுடா! போதும்டா இதெல்லாம்…” என யாஷைப் பார்த்து குமுறலுடன் கூறியவனை உணர்வின்றி ஏறிட்டான்.
நிவேதனோ தங்கையின் அழுகுரலை சகிக்க இயலாது கதிரவனின் பின்னேயே வந்து விட்டான்.
காலெல்லாம் நடுங்கியது அவனுக்கு.
சிலநொடிகள் தன்னையே சமன்செய்து கொண்டவன் ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்து,
“நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். அதுக்கு நீ ஓகே சொல்லி தான் ஆகணும்” என்று யாஷிடம் வீராப்பாய் நின்றான் நிவேதன்.
“என்னடா உன் முடிவு” கதிரவன் யாஷைத் தவிப்பாக பார்த்து எழுந்தபடி நிவேதனிடம் வினவினான்.
“நான் நிதாவை கூட்டிட்டுப் போறேன்” நிவேதனின் முகத்தில் அதீத அழுத்தம்.
“டேய் இவன் இல்லனா அவள் இருக்க மாட்டாடா? இவ்ளோ நான் இருந்தது வேற. இவனைத் திரும்பி பார்த்ததுல இருந்து அவள் அவளா இல்லைடா” கதிர் பரிதவிப்புடன் கூற,
“பழகிக்கட்டும்!” என்றான் தீர்மானமாக.
“யாஷ் இவன கொல கில பண்ணிடாத. ஏதோ அசட்டுத் தைரியத்துல பேசுறான்” யாஷின் பார்வைச் சூட்டைக் கண்டு கதிரவன் சமாளித்தான்.
“கொலை பண்ணாலும் பரவாயில்ல. உயிரோட இருந்து என் கண்ணு முன்னாடியே என் தங்கச்சியும் மச்சானும் உயிரோட சாவுறதை பாக்குறதுக்கு நான் செத்தே போயிடலாம்…” நிவேதனின் விழிகள் கலங்கிப் போக,
“சிம்பில் செத்துரு!” என அசட்டையாக தோளை குலுக்கிக் கொண்டான் யாஷ் பிரஜிதன்.
“ப்ச் டேய் விளையாட இது நேரம் இல்ல…” நிவேதன் கடுப்படித்ததில்,
கதிரவன் தான் “அதை தான்டா நானும் சொல்றேன். விளையாட இது நேரம் இல்ல. உன் மச்சான்கூட செத்து விளையாடணும்னா அப்படி தனியா போய் விளையாடு” என்று நேரம் காலம் தெரியாமல் கலாய்த்தான்.
“டேய் செத்த சும்மா இருடா… நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.”
“சீரியஸா மாறிட கூடாதேன்னு தான் சொல்றேன். செத்த சும்மா இரு. அவள்தான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசுறான்னா, அவள் பண்ற தப்பை நீயும் பண்ணாத.”
“ரெண்டு பேரும் பேசி முடிச்சுட்டீங்கன்னா, இடத்தை காலி பண்றீங்களா?” என அமர்த்தலாக உரைத்தவன் முன்னேற போக, நிவேதன் தடுத்தான்.
இவனிடம் கோபமாய் பேசி பிரயோஜனமில்லை என்ற உண்மை விளங்க,
“யாஷ் ஏற்கனவே அவளை அடிச்சுட்டேன். நீ அவள்மேல கோபத்தை காட்டாத மச்சான். அவள் உன்னைப் புருஞ்சுக்காம எல்லாம் உன்னை விட்டுப் போகல…” என மேலும் விளக்கம் சொல்ல வரும்போதே,
“என் ஆலம்பனா பத்தி உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும். நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்ல…” என்று தீர்க்கமாக உரைத்து அவனை வாயடைக்கச் செய்து விட்டே அவளை நோக்கிச் சென்றான்.
யாஷ் கண்ணைக் காட்டியதும், கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ரித்திகா அவளை விட்டு மெல்ல விலக, அது கூட உணராத நிதர்ஷனா இன்னும் அழுகையில் தன்னைப் புதைத்திருந்தாள்.
“அவனை என்ன விட்டுப் போக சொல்லு ரித்தி” என்ற புலம்பல் மட்டும் நிற்கவில்லை.
ஆஹில்யனும் ரித்திகாவும் மெல்ல நகன்றதும், “சரி போறேன்!” என்றான் திமிராக.
அதில் சட்டென நிமிர்ந்தவள், அவனைக் கண்டதும் வேகமாய் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.
“போ!” நலுங்கிய குரலில் கூறியவள், அவனைக் காணாது தவிர்க்க,
“போறதுல பிரச்சினை இல்ல. உன்னை மறக்க வைக்க மூளைல ஊசி போட்டு உன் முகத்தை மறந்துப்பேன். ஆனா நீ குடுத்த உணர்வை எதைக் கொண்டு அழிக்கடி… மறந்ததா நடிச்சுட்டு, உன்னை மாதிரி யாருக்கும் தெரியாம வாயை மூடிட்டு சத்தம் வராம அழுதா, கொஞ்சம் கொஞ்சமா உணர்வெல்லாம் செத்துடுமா?” ஊசியாய் கேள்வி எழுப்பியவனை அதிர்ந்து பார்த்தாள்.
தான் அழுதது இவனுக்கு எப்படித் தெரியும்?
“திஸ் இடியாடிக்ஸ் பீலிங்க்ஸ்னா என்னன்னே தெரியாம தானடி இருந்தேன்.
உணர வச்ச, உருக வச்ச, உடையவும் வச்ச… இப்ப பீலிங்ஸ் எல்லாம் போதும். நீ ரோபோவாவே இருன்னு சொல்ற. இந்த ரோபோவுக்கு ஏண்டி இத்தனை அன்பைக் குடுத்த?” கேட்கும்போதே அவன் குரல் உடைந்தது.
“நான் கொடுத்ததை, நீ ஏன் அரக்கா இத்தனை மடங்கா திருப்பித் தர்ற… மூச்சு அடைக்குற அளவு” விழி நீர் தளும்பக் கேட்டாள்.
“எனக்கு இப்படி தான் குடுக்கத் தெரியும். கஷ்டமா இருந்தா போடி… உன் பிரதர் கூடவே போ.
எவ்ளோ நாளைக்கு இருக்க முடியும். இன்னும் ஒரு ஆறு மாசம். ஒரு வருஷம், அஞ்சு வருஷம்.
எத்தனை வருஷம் நீ இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது உன் ஞாபகத்துல நான் வந்தே தீருவேன்… “ என்றான் அழுத்தமாக.
அவனையே கண்ணிமைக்காது ஏறிட்டவள், “இல்ல” என்றாள் அதே அளவு அழுத்தத்துடன்.
அவன் முகம் இறுகிட,
“ஒரு நாளைக்கு ஒரு தடவை இல்ல. ஒரு நிமிஷத்துக்கு மில்லியன் தடவை உன் ஞாபகத்துல மட்டும் தான் இருந்தேன் அரக்கா. உன் நினைவும், நீ கூட தான் இருக்கன்ற கற்பனையும் மட்டும் தான் இவளோ நாள் என்னை நார்மலா இருக்க விட்டுச்சு…” என உதட்டைப் பிதுக்கி கேவலுடன் கூறியதில், அதற்கு மேலும் அவளை வதைக்க விரும்பாதவனாக, இறுக்கி அணைத்திருந்தான் யாஷ் பிரஜிதன்.
aduthathu final episodes than dears… mudincha alavu seekiram poduren… akni story updates naalaiku kudukuren dears.. thanks for your patience.. love you allll
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
11
+1
+1

