
அத்தியாயம் – 18
அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து நின்றவளுக்கு உள்ளுக்குள் ஒரு வித பயம் ஏற்பட்டது, தானே வாயை கொடுத்து முதலை வாயில் சிக்கிக் கொண்டோமோ என்று தோன்றியது, கரங்களை பிசைந்தபடி முகத்தில் கலவரம் படர நின்றவளிடம்,…”சொல்லு ஸ்ரீ” என்றான்,…
‘என் பேர் இவனுக்கு எப்படி தெரிஞ்சது’ என முதலில் மிரண்டவள்,… ‘ச்சே நான் தானே சொன்னேன்’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள்,… “இங்க பாருங்க,… நான்” அவள் ஏதோ விளக்கம் தர வர,… அவனோ “நீ எதுவும் சொல்ல வேணாம், நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும்” என்றான்….
“நீ கடத்தல் வேலையெல்லாம் பண்ணுற ரவுடி, உன்னை எப்படி நான் கல்யாணம் பண்ணிக்க முடியும், இது வரைக்கும் நீ எவ்வளவு கொலை குற்றமெல்லாம் பண்ணிருக்கியோ எனக்கு தெரியாது, என்னை மாதிரி குடும்பத்து பொண்ணு உன்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டா” அவன் கேட்டது அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை, ஏதோ தன்னை விட்டுவிட மாட்டானா என்ற எண்ணத்தில் தான் அவனுக்கு புத்திமதி கூறி கல்யாணமெல்லாம் கட்டிக்க சொன்னது, அவன் தன்னிடமே திரும்பியது பயத்தை தந்தாலும் ஒரு ரவுடி தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவது நினைக்கவே நாராசமாய் தெரிந்தது, அதனால் தான் கோபத்தில் எகிறி விட்டாள்,….
அவளது கோபவார்தைகளை மௌமாய் இருந்து கேட்டவனோ,… “அப்படினா நீ என் கூட இருக்க மாட்ட?” என்றான்
“மாட்டேன் மாட்டேன், எப்படி என்னால உன்கூட இருக்க முடியும், பைத்தியமா நீ, இப்படி கேட்க உனக்கே அசிங்கமா இல்ல” என்றாள் எள்ளலாய்,…
“அப்படினா நீ என்கூட இருக்க மாட்ட?” அவன் மீண்டும் அதையே தான் கேட்டான், சற்று நேரத்திற்கு முன் அவள் கட்டிவிட்ட கைகட்டை மெது மெதுவாக அவிழ்த்துக் கொண்டே,…
அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை,”நீ எத்தனை தடவை கேட்டாலும் நான் ஒரே பதிலை தான் சொல்லுவேன், நல்லவன் மாதிரி எனக்கு சாப்பாடுலாம் போட்டதுக்கு காரணம் ஏதோ ஒரு உள்அர்த்தத்துனால தானா? என் அண்ணனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது உன்னை குழி தோண்டி புதைச்சுடுவான்” என்றவளை பார்த்து நக்கலாய் சிரித்தவன் முழுதாக கட்டை பிரித்திருந்தவன், மேஜையின் மீதிருந்த இன்னொரு கண்ணாடி டம்ளரை உள்ளங்கையால் அழுத்தி பிடித்து உடைத்தான், அதன் விளைவாய் பட்ட காயத்திலேயே கண்ணாடி துண்டுகள் சொருகி மீண்டும் ரத்தம் வழிந்தது,….
“உனக்கென்ன பைத்தியமா?” அவன் செய்கையை கண்டு கத்தியவள்,… “இந்த முறை நான் உனக்கு உதவ மாட்டேன்” என்றாள்,…
“நல்லது ரொம்ப நல்லது” முகத்தில் சின்னதாய் கூட வலியை உணராமல் சொன்னவனின் கையிலிருந்து ரத்தம் நிற்காமல் வடிந்தது, கல்லாக நின்று கொண்டிருந்தவளின் மனதும் கரைந்தது கொஞ்சம் கொஞ்சமாய்,…
“இப்படியே நின்னனா ரத்தம் முழுக்க வெளியேறி செத்துடுவ” என்றாள் ஆதங்கமாய்,…
“எனக்கு கவலை இல்லை, பட் நீயும் என் கூட சேர்ந்து செத்துடுவங்குறது தான் பரிதாபபட வேண்டிய விஷயம்,..” அவன் சொன்னதும், அவள் விழிகள் இரண்டும் பயத்திலும் அதிர்ச்சியிலும் விரிந்தது,… “என்ன சொல்ற?” என்றாள் தந்தியடித்த குரலில்….
“ஆமா நான் செத்து போயிட்டா, உனக்கு யார் சாப்பாடு வாங்கி தருவா, அதோட உன்னால இந்த காட்டை தாண்டி வெளியே போகவும் முடியாது, சாப்பாடு இல்லாம இந்த வீட்டுக்குள்ள எத்தனை நாள் உன்னால இருக்க முடியும்” என்றதும் அவள் முகம் பயத்தில் வெளிறியது,… முதலுதவி பெட்டியை திறந்து அவனுக்கு தேவையான பொருளை எடுத்தாள் அவன் காயத்திற்கு மருந்திட,….
“நீ என்கூட இருப்பேன்னு சொன்னா மட்டும் தான் என் காயத்துக்கு மருந்து போட விடுவேன்” அவனது அழுத்தமான குரலில் அவனை எரிச்சலும் கோபமும் கலந்த பார்வை பார்த்தவள்,…. “என்ன ஆனாலும் நான் உன்கூட இருக்க மாட்டேன்” என்றாள்,…
“சரி” என்று தோள்களை குலுக்கியவனும் அலட்சியமாய் திரும்பிக் கொள்ள, ரத்தம் ஒரு பக்கம் வடிந்தது, அவனுடன் இருக்க அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை, தன் அண்ணன் வருவான் தன்னை காப்பாற்றி அழைத்து போக என்று நம்பி கல் மனதாய் நின்றாள், அதற்குள் அவனுக்கு என்னவானதோ தடுமாறி கீழே விழ போனவன், நாற்காலியை பிடித்துக் கொண்டு நின்றான்,…
கண்கள் சொறுகிக் கொண்டு போக தலையை இடவலமாக ஆட்டி, தன்னை சமன்படுத்த முயன்றவன் அடுத்த கணம் தரையில் விழுந்து மயங்கி போனான், நித்யாவிற்கு ‘இவனுக்கு என்னவானது’ ஒன்றும் புரியவில்லை, ‘செத்துட்டானோ’ பேச்சு மூச்சில்லாமல் கீழே விழுந்து கிடந்தவனை மிடறு விழுங்க பார்த்தாள், ‘இவன் செத்துட்டால் அந்த பாவம் முழுக்க தன்னையே அல்லவா வந்து சேரும், கடவுளே ஏன் எனக்கு இப்படியொரு சோதனை?’ புலம்பிலவள் அவளை நெருங்கினான், மூச்சு வருகிறதா என்று மூக்கின் பக்கம் கை வைத்து சோதித்து பார்த்தாள், மூச்சு சீராக வந்தது, ரத்தம் அதிகமாய் வெளியேறியதால் வந்த மயக்கமா? முதலில் அவன் காயத்திற்கு மருந்திட்டு ரத்தம் வெளியேறாத வகையில் மீண்டும் கட்டு போட்டு விட்டாள்,…
நிமிடங்கள் கடந்தும் அவன் கண்விழிக்கவில்லை, முகத்தில் தண்ணீரை தெளித்து பார்த்தாள், அப்போதும் அவன் எழவில்லை, பயம் கை கால்களை நடுங்க வைத்தது, தைரியத்தை வர வழைத்துக் கொண்டு அவனை பிடித்து உலுக்கினாள், ம்ஹும் எழவேயில்லை, அந்த நேரம் எதிர்பாராவிதமாய் கதவு தட்டப்பட்டது, யாரோ வந்துவிட்டார்களா? தன்னை காப்பாற்ற தன் அண்ணன் வந்துவிட்டானா? அவள் முகத்தில் நிம்மதி படர்ந்தது, ஓடிப்போய் கதவை திறந்தாள், வெளியே யாரோ முகமறியா ஒருவன் நின்று கொண்டிருந்தான்,…
“நீ… நீங்க யாரு” உள்ளே போன குரலில் கேட்டவளுக்கு அவன் முகத்தில் தெரிந்த பார்வை பயத்தை உண்டுபண்ணியது,… வந்தவன் அவளை மேலிருந்து கீழ் வரை அளவிட்டபடி உள்ளே எட்டி பார்த்தான், அவன் சுயநினைவில்லாமல் கிடப்பதை கண்டு அவன் இதழில் மர்மபுன்னகை, அவளை ஒரு மாதிரி பார்வையில் பார்த்தவன் அவளை நெருங்கினான்,… “யா.. யார் நீங்க” அவள் கேட்டுக் கொண்டே பின்னால் நகர்ந்தாள், அவன் முகத்தில் தெரிந்த பார்வை அருவருப்பை ஏற்படுத்தியது, கொஞ்சம் தொலைவிலிருந்தாலும் அவன் மீதிருந்து வெளிப்படட வாடை குமட்டிக் கொண்டு வந்தது,.
அவள் பயத்தில் பின்னோக்கி நகரவும், அவளை தாவி நெருங்கியவன், அவள் மார்பை போர்த்திருந்த துப்பட்டாவை உருவி எடுத்தான், தன்னை கடத்தி கொண்டு வந்தவன் அவளை பார்க்கும் பார்வையில் கூட கண்ணியத்தை கடைபிடித்திருந்தான், ஆனால் இவனோ வந்ததுமே தன் துப்பாட்டவை பிடித்து இழுக்கவும், கதிகலங்கி போனாள், அவள் பார்வை மயங்கி கிடந்தவனின் மேல் வந்து விழுந்தது, எழுந்து வர மாட்டானா தன்னை வந்து காப்பாற்ற மாட்டானா? என்று ஏங்கியது….
அவளை நெருங்கி கொண்டிருந்தவனோ,… அவளது தோள்பட்டையில் கரம் வைத்து அவள் உடையை பிடித்து இழுக்க,… “கடவுளே காப்பாத்து” எனும் பெருங்குரலோடு விழிகளை மூடிக் கொண்டவள், யாரோ ஒருவனின் அலறல் சத்தத்தில் தான் விழிகளை திறந்தாள்,…
அவள் முன் அவளை கடத்தி கொண்டு வந்தவன் தான் நின்றிருந்தான் விழிகள் சிவக்க, அவளை தவறான எண்ணத்துடன் தொட வந்தவன், கீழே சுருண்டு விழுந்து கிடந்தான், தற்போது அவன் அவளுக்கு கடத்தல்காரனாய் தெரியவில்லை, தன்னை காக்க வந்து பாதுகாவளனாய் கடவுளாய் தெரிந்தான், மனதில் நிம்மதி படர்ந்தது, அது அவன் எழுந்து வந்து விட்டான் என்பதனால் வந்த நிம்மதியா? அல்லது அவள் மானம் காக்கபட்டுவிட்டதால் வந்த நிம்மதியா? அவளே அறிவாள்,…
கீழே விழுந்து கிடந்தவனின் காலை பிடித்து தரதரவென்று வெளியே கொண்டு சென்றவன், அவனை என்ன செய்தானோ! சற்று நிமிடத்தில் உள்ளே வந்தவன்,… “யாரை கேட்டு வெளிக்கதவை திறந்த” என்று அவள் முன்னிலையில் நின்று உறுமினான்,..
“இல்ல அது, நீ வேற பேச்சு மூச்சில்லாம கிடந்த, கதவை யாரோ தட்டவும், பதட்டத்துல, உதவி செய்ய தான் யாரும் வந்திருக்காங்களோனு நினைச்சு தான் திறந்தேன்” என்று விளக்கம் கொடுத்தாள் பதட்டப்பட்ட குரலில்,…
“இங்க யாரும் உதவி செய்ய வரமாட்டாங்க, மனிதனோ மிருகமோ எது வந்தாலும் அதனால நமக்கு பிரட்சனை தான் வரும், இதை எப்போதும் மனசுல வைச்சுக்கோ” அவன் அழுத்தமாய் உரைக்க, அவள் சம்மதமாய் தலையை ஆட்டினாள்,…
“யாரவன் எப்படி இங்க வந்தான்” அவள் சும்மா தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் கேட்க,…”குடிகாரன் காமுகன், மனித உருவில் இருக்கும் அரக்கன், இப்படி எது வேணும்னாலும் சொல்லலாம், போதையை ஏத்திகிட்டு சுத்திக்கிட்டு இருந்திருப்பான், வீட்டை காணவும் வந்திருப்பான், உள்ளே ஒரு பொண்ணை பார்த்ததும் சும்மா இருப்பானா” அவன் சொல்வதன் அர்த்தம் புரிந்தது, பயம் தொண்டையை அடைத்தது, இனி ஒரு தடவை இந்த தவறை செய்ய கூடாது என தனக்கு தானே கூறிகொண்டு மனதில் அழுத்தமாக பதிய வைத்தும் கொண்டாள்,…
“யாரை கேட்டு எனக்கு நீ கட்டு போட்டு விட்ட” என கேட்டுக் கொண்டே அவன் மீண்டும் தன் கையிலுள்ள பேண்டேஜை பிரிக்க,… “தயவு செஞ்சு மறுபடியும் அப்படி பண்ணிடாத” என்று அவசரமாய் வந்து தடுத்தவள்…. “இந்த இடம் ரொம்ப மோசமான இடம், இங்க என்னை தனியா விட்டுட்டு ஜாலியா நீ மயங்கி போயிட்ட, நீ மட்டும் எழுந்து வராம போயிருந்தா அந்த அரக்கன் கையில மாட்டி சின்னா பின்னமாயிருப்பேன்” என்றாள் குரல் நடுங்க,…..
“என் பொறுப்புல இருக்க, அவ்வளவு சீக்கிரம் யாரையும் உன்னை நெருங்க விட மாட்டேன்” அவன் வார்த்தையில் தெரிந்த அழுத்தம், அவளுக்கு பிடித்தது, தனக்கு அவன் எதுவும் ஆக விட மாட்டான் என்பது புரிந்தது, தன் அண்ணனுக்கு பிறகு தன்னை பத்திரமாய் பார்த்துக் கொள்ள இன்னொருவனும் இருக்கிறான் நினைக்க நினைக்க மனம் பரவசமடைந்தாலும், தான் இதை நினைத்து சந்தோசப்படுவது சரி தானா என்று அவள் உள்மனம் கேள்வி கேட்டது,…
“என்ன முடிவு பண்ணிருக்க” அவன் கேட்டதன் அர்த்தம் புரியாமல் அவள் மலங்க மலங்க பார்க்க,…”என்கூட இருப்ப தானே?” என்றான்,…
அவளுக்கு இப்போது கோபம் வந்து விட்டது,… “உன் மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்க?” என்று எகிறியவள்,… “ஒரு பொண்ணை கடந்து கொண்டு வந்து என் கூட இரு, என்னையே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ற, உன் கண்ணியமான பார்வை, செயல் அனைத்தையும் பார்த்து கடத்தல்காரனா இருந்தாலும் உன் மேல பெரும் மதிப்பு மரியாதையே வந்தது, ஆனா இப்போ உன்னை பிடிக்கல எனக்கு, நீயும் சக ஆம்பிளைங்களை போல தான்னு நிரூபிச்சுட்ட, இப்போ வந்தானே அவனுக்கும் உனக்கும் இருக்க எண்ணம் கூட ஒரே மாதிரி தான்னு நிரூபிச்சுட்ட, அவன் அனுமதி கேட்காம என்னை தொட வந்தான், ஆனா நீ அனுமதி கேட்டு நிற்கிற அவவளவு தான் வித்தியாசம் அவனுக்கும் உனக்கும்” என பேசிக் கொண்டு போனவளை அடிபட்ட பார்வை பார்த்தான் அவன்,…
அவன் விழிகளில் தெரிந்த வலி வேதனை அவளை அசைத்து பார்த்தது, அதிகமாய் பேசிவிட்டோமோ என்று எண்ண வைத்தது, அதற்கு பிறகு அவன் கூறிய பதில் அவளை திகைப்படைய வைத்து, அவனை பரிதாபமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்க வைத்தது,…
“நீ என்னை கல்யாணம் கூட பண்ணிக்க வேணாம், என்கூடவே இருந்தா மட்டும் போதும், உன்னை நான் மனைவி ஸ்தானத்துல நிறுத்த மாட்டேன், கணவனா மனைவிக்கிட்டருந்து எதிர்பார்க்கிற எந்த ஒரு விஷயத்தையும் எதிர்பார்க்க மாட்டேன், நீ நீயாவே இருக்கலாம், உன்னை பத்திரமா பார்த்துகிறேன், ப்ளீஸ் ஸ்ரீ, என்கூடவே இருக்கேன்னு சொல்லு, என்னை விட்டு போக மாட்டேன்னு சொல்லு” என்று சட்டென்று அவளது கரம் பற்றி கெஞ்ச துவங்கினான்,….
நித்யாவால் சட்டென்று அவனை தள்ளி விட்டு பின்நகர முடியவில்லை, அவன் கோபத்தை காட்டிருந்தால் எப்படியாவது முயன்று அவனிடமிருந்து விலகி போயிருப்பாள், ஆனால் அவனது கெஞ்சல் அவன் மீது பரிதாபபட தான் வைத்தது,… ஆறடி ஆண்மகன், உடலில் அதிக வலு கொண்டவன், தன்னிடம் கெஞ்சுகிறான், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று, அவனது கெஞ்சலுக்காக அவனுடனே இருந்து விடலாம் என்ற முடிவையும் சர்வ சாதாரணமாக எடுக்க முடியவில்லை, சிலை போல் நின்றாள்,….
எத்தனை நேரம் நின்றிருப்பாளோ,… “ஸ்ரீ” என்ற அவனது அழைப்பில் தான் சுயநினைவுக்கு வந்தாள், விழிகளில் ஏக்க பார்கை கொண்டு பார்த்தான் அவளை, அவளுக்கு மனது நெருடியது, ‘என் வாழ்க்கையில என்ன நடந்துகிட்டு இருக்கு, நான் பாட்டுக்கு ஜாலியா தோழிங்களோட ஊரை சுத்திக்கிட்டு இருந்தேன், யாரோ ஒரு பொண்ணு கடத்தப்படுறதுக்கு பதில் நான் கடத்தபட்டேன், இப்போ கடத்தியவனே என் கூட நிரந்தரமா இருன்னு சொல்றான், இதை எப்படி என்னால ஏத்துக்க முடியும், நானே ஏத்துகிட்டாலும் என் அம்மாவும் அண்ணாவும் இதை எப்படி ஏத்துப்பாங்க, கடவுளே இதென்ன விளையாட்டு’ என மானசீகமாக புலம்பினாள் கடவுளிடம்,…
“என்ன ஸ்ரீ யோசிச்சு முடிச்சிட்டியா? என்ன முடிவு பண்ணிருக்க?” என்றான் யோசனையில் உழன்று கொண்டிருந்தவளிடம்…
பார்வையை அவன் பக்கம் திரும்பியவள்,….”நான் என் அம்மாகிட்டயும் அண்ணா கிட்டயும் பேசிட்டு சொல்லட்டுமா?” அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள் அவள்……
“நான் உன் அம்மாவையோ உன் அண்ணாவையோ என் கூட இருக்க சொல்லி கேட்கல, உன்னை தானே கேட்கிறேன், அதனால நீ தான் அதுக்கான பதில் சொல்லணும்” என தெளிவாக நின்றான் அவன்,……
‘விட மாட்டான் போலயே, கடவுளே இப்போ நான் என்ன பண்ணுறது’ விட்டத்தை பார்த்து புலம்பியவளை, “நான் உன்னை கட்டாயப்படுத்தல, உனக்கு விருப்பம் இல்லனா என்கூட இருக்க வேணாம்” அவன் கூறியதும், கொஞ்சம் நிம்மதி கொண்டவள்.. “சரி நான்” என ஏதோ சொல்ல வர, அதற்குள் அவன் முந்திக்கொண்டு “ஆனா இங்கிருந்து போகும் போது நீயே உன் கையால என்னை கொன்னு போட்டுட்டு போயிடு” என அவன் துப்பாக்கியை அவள் கையில் வைத்தான்,…
மிரண்டு போய் பார்த்தாள் அவனையும் அவள் கையிலிருந்து துப்பாக்கியையும், “ஏன் ஏன் என்னை இப்படி சாகடிக்கிற” என்றாள் ஆற்றாமையுடன்,…
“நீ தான் என்னை சாகடிக்கிற, ஏன் என்கூட இருக்க யோசிக்கிற, உனக்காக நான் எல்லாத்தையும் விட்டுடுறேன்னு சொல்றேன், அப்போவும் உன்மனசு இறங்கலயா? ஏன் என்னை மாதிரி ரவுடிங்க சந்தோசமா இருக்கணும்னு ஆசை பட கூடாதா? எங்களுக்கும் மனசு இருக்க கூடாதா? நான் இதுவரைக்கும் எதுக்கும் ஆசை பட்டதில்லை, ஆசை படவும் விரும்பல உன்னை பார்க்கும் வரைக்கும், ஏதோ ஒரு வகையில நீ எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்திட்ட, எனக்கு உன்கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு, உன்னை உள்ளங்கையில வச்சு தாங்கணும், உனக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து பண்ணனும், நீ எனக்காக எதுவும் செய்ய வேணாம், உன்னோட அன்பு அதை மட்டும் கொடுத்தா போதும், எப்படியிருந்தாலும் உன்னை உன் அம்மா யாருக்காவது கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க தானே போறாங்க, யாரோ ஒருத்தன் கூட போறதுக்கு நீ ஏன் என் கூடவே இருந்திட கூடாது” என்றான், அவன் பேச பேச நித்யா விழித்து போய் நின்றாள், அவளுக்கு என்ன பேசுவதென்று கூட தெரியவில்லை, சில நிமிடங்கள் அமைதி காத்தவள்,…”உன் பேரன்ன?” என்றாள், ஐந்து நாட்கள் அவனுடனுடனிருந்திருக்கிறாள், இப்போது தான் அவன் பெயரை தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் பிறந்தது போல,…
“கருணா,… கருணாகரன்” மிடுக்கான குரலில் கூறினான்,…
“கருணா” வாய்விட்டே சொல்லி பார்த்தவள்,…”உனக்கு அம்மா அப்பாலாம் இருக்காங்களா? கண்டிப்பா இருக்க மாட்டாங்கன்னு தான் தோணுது, இருந்திருந்தா நீ ஏன் ரவுடியாகிருக்க போற” அவள் சொல்லின் அர்த்தம் சரி என்பது போல் அவனும் மௌனமாக நின்றான்,…..
“எப்போதுல இருந்துடா உனக்குள்ள நான் தாக்கத்தை ஏற்படுத்தினேன், ஐந்து நாள் இந்த ஐந்து நாள்ல உனக்கு நான் எதுவுமே செய்திடலேயே, நீயாச்சும் எனக்கு சாப்பாடு ட்ரஸ் எல்லாம் வாங்கி தந்த, நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்னு என்னை உனக்கு பிடிச்சிருக்கு” காரணம் தெரியாமல் தான் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் அவனிடம் கேட்டாள்,…
“நீ தானே சொன்ன கடத்தல் வேலையைஎல்லாம் விட்டுட்டு நல்ல வேலையில சேர்ந்தா பொண்ணுங்க என்னை கட்டிக்க போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கனு, நீ சொல்றதுக்கு முன்னாடி வரைக்கும் பொண்ணுங்களை பத்தி யோசிச்சி பார்த்ததில்லை, உன்னை கடத்தியதற்கு முன்னாடி வரைக்கும் நிறைய பொண்ணுங்களை கடத்தியிருக்கேன், அவங்கள்லாம் என்கிட்ட ஒரு வார்த்தை பேசவே பயப்படுவாங்க, ஆனா நீ தைரியமா என்கிட்ட பேசுன, அறிவுரை சொன்ன, எனக்கும் பிடிச்சது, நீ சொன்னதையெல்லாம் யோசிச்சு பார்த்தேன், யாரோ ஒரு பொண்ணை கட்டிக்கிறத்திக்கு பதில் ஏன் உன்னையவே கட்டிக்கிற கூடாதுனு தோணுச்சு, நீ அக்கறையா என் கை பிடிச்சு மருந்து போட்டு விட்டது உள்ளுக்குள்ள ஒரு மாதிரி சந்தோசத்தை கொடுத்தது, ஒரு நாள் ஒரு முறை உன்கிட்டருந்து வெளிப்பட்ட அந்த அக்கறை, வாழ்க்கை முழுக்க கிடைச்சா? எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன், மனசு இது வரை அடைந்திராத சந்தோசத்தை அடைந்தது யோசிச்சு பார்த்ததுக்கே, சத்தியமா இது வரை எந்த பெண்ணையும் தொட்டது கிடையாது, தவறான கண்ணோட்டத்துல பார்த்தது கிடையாது, இப்போ உன்கிட்ட மட்டும் தான் மனசு தடுமாறி நிற்கிது, இதுக்கு பெயர் என்னனுலாம் எனக்கு தெரியாது, தெரிஞ்சிக்கவும் விரும்பல, நீ என் கூட இருந்தா அதுவே போதும் எனக்கு” என்று முடித்தான் கருணா,….
நித்யாவால் அவனை தவறாக பார்க்க முடியவில்லை, கோபமாகவும் முறைக்க முடியவில்லை, அவன் அன்பிற்காக ஏங்கி போயிருக்கிறான், அதனால் தான் தன்னுடைய சின்னதான அக்கறையான செயல் கூட அவன் மனதை அதிகமாய் பாதித்திருக்கு என்பது புரிந்தது, அதற்காக அவனுடன் இருந்துவிடலாம் என்றெல்லாம் அவள் முடிவெடுக்கவில்லை, அவள் முடிவெடுக்க தெரியாமலும் நிற்கவில்லை, அவனுடன் வாழ்வதை பற்றி அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை, ஒருவித நெருடல் இருந்து கொண்டே இருந்தது, அவன் நாடகமாடவில்லை உண்மையான வார்த்தைகளை தான் வெளிப்படுத்துகிறான் என்று அவனது விழிகள் கூறினாலும் அவளால் அவனுடன் இருக்க முடியாதே,……
அவனிடம் பேச்சு கொடுத்தாள்…. “நீ ஏன் ரவுயான, எப்படி எப்போதுல இருந்து இந்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பிச்ச, உன் அம்மா அப்பா எப்போ உன்னை விட்டு போனாங்க” அவனது கதையை தெரிந்து கொள்ளணுமென்ற ஆர்வத்தில், அவனை பற்றி விசாரித்தாள்,…
“சின்ன வயசுலயிருந்தே இதே வேலையை தான் பண்ணிக்கிட்டு இருக்கேன்” என்றான் விரக்தியாய்…
‘சின்ன வயசிலருந்தேவா?’ என திகைத்தவள்,…”சின்ன வயசுனா? எத்தனை வயசுலருந்து” என்றாள் கொஞ்சம் மிரண்ட விழிகளுடன்,…
“ஒரு பத்து பன்னிரெண்டு வயசுலருந்து” அவன் கூறவும், அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள்,… “இந்த வயசுல விவரம் கூட முழுசா தெரிஞ்சிருக்காதே, நீ எப்படி இப்படி ஒரு வேலையில இறங்குன, உன் அம்மா அப்பா என்னானாங்க, தாய் தகப்பன் இல்லன்னா பிள்ளைங்க வழி தவறி போவாங்க அப்டிங்கிறது உன் விஷயதத்துல உண்மையாகிடுச்சு இல்ல” என்றாள் வருத்தத்துடன்….
“அம்மா அப்பா இல்லனா பிள்ளைங்க வழி தவறி போவாங்க அப்டிங்கிறது எந்தளவு உண்மையோ, தாய் தகப்பன் இருந்தும் அவங்க குணம் சரியில்லாம பிள்ளைங்க வழி தவறி போவாங்க அப்டிங்கிறதும் ஆணித்தரமான உண்மை, என்னை பெத்தவங்களால தான் நான் இப்போ இப்படி ஒரு நிலமையில இருக்கேன், என் தங்கச்சி சின்ன பிள்ளையிலேயே துடி துடிச்சி இறந்து போனா, எல்லாம் அவனால அவங்களால தான்” என்றவனின் விழிகளில் கோபம் வெறியாய் மாறி பிரதிபலித்தது….
“உனக்கு தங்கச்சி இருந்துச்சா, என்னாச்சு அவளுக்கு, உன் அப்பாவும் அம்மாவும் அவளை என்ன பண்ணாங்க” குலை நடுங்க கேட்டாள் நித்யா,…
அவன் பதில் கூறவில்லை, விழிகள் இரண்டும் ரத்தமாய் சிவந்திருந்தது, முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது, அவனது நிலையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது, அவள் எதிர்பார்த்ததை விட அவன் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான் என்பது புரிந்தது, ஆதரவாக அவனது கரம் பற்றினாள், அவளது ஆறுதலான இந்த பற்றுதல் அவன் மனதை சாந்தப்படுத்தியது, விழிகளை மூடிக் கொண்டவனின் விழிகளிருந்து விழிநீர் வடிந்தது, பல வருடங்களுக்கு பிறகு வருகிற கண்ணீர் அவனது தங்கையின் இறப்பை நினைத்து, இத்தனை வருடங்கள் இரும்பு மனிதனாக வாழ்ந்து வந்தவனுக்கு கண்ணீர் கண்ணுக்குள்லேயே வற்றி போயிருந்தது, இப்போது எங்கிருந்து எப்படி வந்ததோ நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது, அவன் முகத்தை பார்க்க பார்க்க மனம் குமுறியது அவளுக்கு, தானாக அவள் கரம் உயர்ந்து அவன் கண்ணீரை துடைத்து விட்டது, “அழாத கருணா, நான் இருக்கேன் உனக்கு” அவள் அந்த நொடி இந்த வார்த்தைகளை வெளியிடாமல் இருந்திருக்கலாம், அவனுக்கு ஆறுதல் கூறும் பொருட்டாய் இவ்வார்தையை வெளியிட்டவள், பின்னாளில் அந்த வார்த்தைகளை காப்பாற்ற போவதில்லை என்பதை அறிந்திருக்க மாட்டாள், அறிந்திருந்தால் சொல்லிருக்கவும் மாட்டாளோ,….
அச்சயம் அவனது மனதை அமைதி படுத்தவே அவ்வார்தைகளை உபயோகித்தாள், தன் வார்த்தையால் அவன் மனம் ஆறுத்தலடையாதா என்ற எண்ணத்தில் மட்டுமே கூறினாள், சிறு வயதிலேயே தாய் தந்தையோடு சேர்த்து, கோழி குஞ்சாய் பொத்தி பொத்தி வைத்திருந்த தங்கையையும் இழந்து, சூழ்நிலை கைதியாய் ரவுடியாய் மாறி போனவனின் மனது, நித்யாவின் வார்த்தைகளால் சலனப்பட்டது, தனக்கும் ஒரு உறவு வந்து விட்டது அன்பை வாரி வழங்க என்று மனம் துள்ளாட்டம் போட்டது, அவளை அணைத்துக் கொண்டான் சந்தோச மிகுதியில், அந்த அணைப்பில் காதலும் இல்லை காமமும் இல்லை, மகன் தாயை அணைக்கும் அணைப்பு, அண்ணன் தங்கையை அணைக்கும் அணைப்பு, பல வருடங்களாய் அன்புக்காக ஏங்கி போயிருந்தவனுக்கு தாயாய், தங்கையாய், அக்காவாய், தோழியாய் பாசம் காட்ட ஒருவள் வந்து விட்டாள் என்ற சந்தோசத்துடன் அளவில்லா மகிழ்ச்சியுடன் மனம் முழுக்க பூரிப்புடன் உள்ளம் பட்டாம் பூச்சியாய் சிறக்கடிக்க அவளை அணைத்துக் கொண்டிருந்தான் கருணா….

