
அத்தியாயம் – 17
“ஏய் ஸ்ரீ…. ஏன்டி நின்னுட்ட” தோழிகள் நால்வருமாய் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் நோக்கி சென்று கொண்டிருந்த வழியில், நித்யா ரோட்டின் ஒரு பகுதியில் நின்றுவிட்டதை கண்டுகொண்ட, அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தோழி வாசுகி வண்டியை நிறுத்திவிட்டு வினவினாள்,……
“பஞ்சுமிட்டாய் வாசு” என பஞ்சுமிட்டாய் விற்பவறை கைகாட்டி கூறியவள்,… “நான் வாங்கிட்டு வந்திடுறேன், நீ போ” என கூற, அவள் பஞ்சுமிட்டாய் பைத்தியம் என்பதை அறிந்த வாசுகியும் தலையில் அடித்து விட்டு “சீக்கிரம் வந்துடு” என்ற சொல்லுடன் கிளம்பிவிட்டாள்,…
வண்டியை விட்டிறங்கியவள், இரண்டு பாக்கெட் பஞ்சு மிட்டாயை வாங்கி, அங்கேயே நின்று ரசித்து ருசித்து சாப்பிட தொடங்கிவிட்டாள், பஞ்சுமிட்டாயை ரசித்து திண்பவள், தன்னையே வெகுநேரமாய் ஒரு ஜோடி கழுகு கண்கள் நோட்டமிடுவதை பார்க்க தவறினாள்,…
இரண்டு பக்கெட்டையும் பிரித்து சாப்பிட்டு முடித்தவள், பிசுபிசுவென்ற கரத்தை, துப்பட்டாவில் துடைத்துக் கொண்டு, வண்டியில் ஏறி கிளம்ப போன சமயம் அவள் ஸ்கூட்டியின் அருகிலேயே ஒரு ஆம்னி வேன் வந்து நின்றது கிட்டதட்ட அவள் வண்டியை உரசிக்கொண்டு,…
“ஏய் யாரது” என அவள் சத்தமிடும் முன்னே, அந்த ஆம்னி வேனின் கதவு திறக்கப்பட்டு, சடாரென்று உள்ளே இழுக்கப்பட்டாள் அவள்,.. அவள் வந்த ஸ்கூட்டி நிராதரவாய் ரோட்டில் சாய, அவளை சுமந்து கொண்டு அந்த வேன் அவ்விடத்திலிருந்து வேகமாய் புறப்பட்டது,…….
சில மணி நேரத்திற்கு பிறகு,….
கை கால்கள் நாற்காலியோடு கட்டப்பட்ட நிலையில் ஆழ்ந்த மயக்கத்திலிருந்தாள் நித்யஸ்ரீ, அவளை சுற்றிலும் எங்கும் கருமை நிறைந்த இருட்டு, பக்கத்தில் போய் பார்த்தால் மட்டுமே அங்கு ஒருவள் கட்டப்பட்டநிலையில் இருக்கிறாள் என்பது பார்வைக்கு அகப்படும், மணிகள் கடந்தது, கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்தது, மெது மெதுவாக விழிகளும் திறந்தது, ஆனாலும் விழிகளின் பார்வைக்கு எதுவும் தெரியவில்லை, அந்த மை இருட்டில் என்னத்த காண முடியும் அவளால்,….
தலை கிருகிருவென்று சுற்றியது, கை இரண்டும் வலி எடுத்தது, கால்கள் அது இருக்கிறதா என்பதை கூட உணர முடியாத நிலையில் இருந்தாள், கரத்தை அசைக்க முயன்றால் முடியவில்லை, கால்கள் மரத்து போய்விட்டதா? இல்லை கால்களை இழந்து விட்டேனா? அவளுக்கு சந்தேகம் எழுந்தது,….
அது என்ன இடம் என்று அவளால் பார்க்க இயலவில்லை, எப்படி வந்தோம் என்பதும் தெரியவில்லை, யோசித்தாள், கொஞ்சம் கொஞ்சமாக நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது,…..
தன்னை யாரோ வண்டிக்குள் இழுத்தார்கள், அவள் கத்தும் முன்பே அவள் மூக்கில் துணி வைத்து அடைக்கப்பட்டது, அவ்வளவு தான் நியாபகம் இருந்தது, வேறெதுவும் நியாபகம் இல்லை, அவளை காருக்குள் இழுத்தவனை கூட அவள் கண்கள் பார்க்கவில்லை, புரிந்து கொண்டாள் தான் கடத்தப்பட்டிருகிறோம் என்பதை, ஆனால் ஏனென்று தெரியவில்லை, அழுகை முட்டிக் கொண்டு வந்தது, அழ கூட முடியாத ஜீவனற்ற நிலையில் இருப்பதை போல் உணர்ந்தாள், மூளையில் செய்தி சேன்னலில் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றாக ஓடத் தொடங்கியது,…
இளம் பெண் கழுத்தை அறுத்துக் கொலை,
இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார்,…
இளம்பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் கொடுமையால் கொலைசெய்திருக்கிறார்,… என்று அவள் காதில் கேட்ட செய்திகள் அனைத்தும் இப்போது அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்ததது, திக் பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள், அதுவும் சில கணமே,….
அவள் அமர்ந்திருந்த நேர் திசைக்கு அப்பால் ஏதோ ஒரு சத்தம், அந்த சத்தத்தை தொடர்ந்து விழிகளை கூசசெய்யும் வெளிச்சம் வேறு, கேட்ட அந்த சத்தத்தில் நெஞ்சம் படபடக்க அமர்ந்திருந்தவள், அவ்வெளிச்சம் முகத்தில் படவும் முகத்தை திருப்பி விழிகளை மூடிக் கொண்டால் கூச்சம் தாங்க இயலாமல்,….
அதே நேரம் அழுத்தமான காலடி ஓசை அவளை நெருங்கியது, தன்னை நோக்கி யாரோ வருவதை அந்த ஓசையின் மூலம் புரிந்து கொண்டவளுக்கு பயம் எகிறியது, செய்திகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் காதில் எதிரொலித்தது, வியர்வை அவளை குளிக்க வைத்திருக்க, தன்னை இன்னும் இன்னும் நெருங்கி வந்தவனை, இதயம் தடதடக்க திரும்பி பார்த்தாள், முகம் தெளிவாக தெரியவில்லை, ஆனால் உயரம் ஆறடிக்கு மேல் இருந்தது, ‘இவ்வளவு ஹைட்டா’ நினைத்தபடியே மீண்டும் மயங்கி போனாள்,…
அடுத்த முறை முகத்தில் மழை துளிகள் விழவே, கண்விழித்தாள் நித்யா, மழைதுளிகள் விழுந்ததாக தான் எண்ணினாள் ஆனால் அது மழை துளிகள் அல்ல அவளை கடத்தி கொண்டு வந்தவன் தான் முகத்தில் மினரல் வாட்டரை தெளித்திருக்கிறான் என்று விழிகளை நன்றாக விழித்து பார்த்த போது தான் புரிந்தது, இந்த முறை அவள் கரங்களும் கால்களும் கட்டப்படவில்லை, அவ்விடம் வெளிச்சமாக இருந்தது, அவன் முகத்தை தெளிவாக பார்த்தாள்,….
உயரம் அதே ஆறடிக்கு மேல் தான், அகன்ற நெற்றி அதன் வலது பக்கம் ஆழமான தழும்பு, விறைப்பான நாசி, அவன் எந்நேரமும் விறைத்து கொண்டிருபத்தால் அப்படியே அமைந்து விட்டதா என்று தெரியவில்லை, அழுத்தமான உதடுகள், சிரித்தே பல நாட்கள் ஆகிருக்கும் போல, தாடையில் சிறு குழி, முறுக்கிய மீசை, சுருண்ட கேசம், மாநிறத்திற்கும் குறைவான நிறம் என்றாலும் முகம் கலையானதாக தான் இருந்தது,….
கடவுள் புண்ணியத்தில் தப்பித்து சென்றால் அடையாளம் கூற வேண்டுமல்லவா அதனால் தான் தன் பயந்த விழிகளால் அவனது முகத்தை அளந்து கொண்டவள், அவனது உரமேறிய உடலை கண்டு, அதற்கு மேலும் அளவிடமுடியாமல், பயந்து பார்வையை திருப்பிக் கொண்டாள்,…
அவனோ சற்று நிமிடங்களாய் அவளது அளவிட்ட பார்வையை கண்டும், எதுவும் பேசாமல் தான் நின்றான், அவள் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொள்ளவும்,… அவள் பக்கம் ஒரு உணவு பொட்டலத்தை வைத்து விட்டு,… “சாப்பிடு” என்றான்,… அந்த சாப்பிடு என்ற வார்த்தையில் ஒரு வித மிரட்டல் ஒளிந்திருப்பது தெரிந்தாலும், அவள் அதை தொட்டு கூட பார்க்கவில்லை, அவள் என்ன சாப்பிடும் நிலையிலா இருக்கிறாள்? அவளை எதற்காக இங்கு கொண்டு வந்திருக்கிறான் என்று முதலில் தெரிய வேண்டும், அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவளுக்கு துணிச்சலும் இல்லை, இதில் அவன் சாப்பாட்டில் எதை கலந்து கொடுத்திருக்கிறான் என்பதும் வேறு நெருட, அந்த பொட்டலத்தின் பக்கமே திரும்பவில்லை,
நிமிடங்கள் கடந்தது,… மீண்டும் கூறினான்… “சாப்பிடு” என்று…
அவனது கடினமான குரல் ஒரு மாதிரி நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், அவள் அதை சாப்பிடும் ஐடியாவில் இல்லை, அதனால் செவிடன் காதில் சங்கூதியது போல் அமர்ந்திருக்க,… அதே நேரம் அவளுக்கு சற்று இடது புற சுவரில் துப்பாக்கி குண்டு ஒன்று மிகப்பெரும் சத்தத்துடன் வந்து பாய, அரண்டு போனவள் பயத்தில் காதுகளை இரு கரங்களால் பொத்திக் கொண்டு, விழிகள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள்,…
இதயம் அதிவேகமாக துடிக்க, மெல்லமாக நிமிர்ந்து விழிகளை கொஞ்சமாக திறந்து பார்த்தாள், கையில் துப்பாக்கியுடன் சீறும் சிறுத்தையாக மாறி அவளது முன்னிலையில் நின்று கொண்டிருந்தான் அவன், மூச்சே ஒரு நிமிடம் நின்று விட்டது போல் உணர்வு அவளுக்கு, துப்பாக்கி இப்போது அவளை பார்த்து நீண்டு கொண்டிருந்தது, விழிகள் இரண்டும் தெறித்து வந்து விழுவது போல் விரிந்தது அவளுக்கு,….
“சாப்பிடு” இந்த முறை அகங்காரமாக கத்தினான்,,…. படபடவென்று உணவு பொட்டலத்தை பிரித்தவள், அதிலிருந்த இட்லியை பிட்டு வலுக்கட்டாயமாக வாய்க்குள் திணித்தாள், உள்ளே போகவில்லை, ஆனாலும் உள்ளே வைத்து குத்தினாள் தன் விரல்களால்,…
அவளை இரு நிமிடங்கள் நின்று பார்த்தவன்,… “நான் ஒன்னு சொன்னா அதை கேட்டு நடக்கணும், இல்லனா மூளை சிதறிடும்” எச்சரித்தவன், அவ்வறையை விட்டு வெளியேறினான், அவளுக்கு விழிகள் கண்ணீரை வெளியிட்டது, பசி எடுக்கிறதா இல்லையா என்பதை உணரும் நிலையில் கூட அவள் இல்லை, சாப்பிட முடியாமல் சாப்பிட்டாள், வாந்தி வருவது போல் இருந்தது, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் விக்கிக் கொண்டு பயத்தில் மீண்டும் மீண்டும் இட்லியை உள்ளே அனுப்பியவளின் முன்னால் ஒரு தண்ணீர் போத்தலை வந்து வைத்தவன், அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றுவிட்டான்,….
தண்ணீரை குடித்த பிறகு தான் கொஞ்சம் நன்றாக இருந்தது போல் இருந்தது, தண்ணீரை குடித்து குடித்தே பொட்டத்திலிருந்த மூன்று இடலிகளையும் உள்ளே அனுப்பி விட்டாள், வலுக்கட்டாயமாக தின்றதினால் இறங்காமல் நெஞ்சிலேயே நின்ற உணவு வாந்தி வழியாக வெளியே வந்து விட்டது,….
அவளது வாந்தி எடுக்கும் சத்தத்தில் உள்ளே வந்தவன், அவள் செய்து வைத்திருக்கும் காரியத்தை விழிகள் இடுங்க பார்த்து விட்டு,…. “ஏய் எழுந்து வா” என்றான் அதிகாரத்துடன்…
மயக்கமருந்தின் வீரியம் இன்னமும் குறையாமல், தட்டு தடுமாறி எழுந்தவள், தளர்வான நடையுடன் அவன் பின்னே சென்றாள், அவன் ஓரறையை காட்ட, அது குளியலறை என்பதை வெளியிலிருந்து எட்டி பார்த்தே அறிந்து கொண்டவள், உள்ளே சென்று பூட்டிக் கொண்டாள்,… குழாயை திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட தண்ணீரை கரங்களில் அள்ளி முகத்தில் அடித்து கழுவினாள், உடையில் ஆங்காங்கே பட்டிருந்த வாந்தியை சுத்தம் செய்தாள்,… குளிர்ந்த தண்ணீர் முகத்தில் படவும் கொஞ்சம் நிதானத்திற்கு வந்ததை போல் உணர்ந்தாள்,….
கொஞ்சம் நேரம் உள்ளேயே இருந்தாள் அவனுக்கு பயந்து, அவன் படப்படவென்று கதவை தட்டவும் வேறு வழியின்றி வெளியே சென்றாள்,…. “இவ்வளவு நேரம் என்ன பண்ண? என்ன தப்பிக்க பிளானா?” அவள் சென்று முக்கால் மணி நேரத்திற்கு மேலானதால் தான் கதவை தட்டி வெளியே வந்தவளிடம் எகிறிக் கொண்டிருந்தான்,… ஆனால் அவள் தப்பிக்க பிளான் போடவில்லை பயத்தில் மட்டுமே உள்ளே இருந்தால் என்பது அவனுக்கு தெரியாதே,…
“இல்ல” வெளிவராத குரலில் பதில் கூறியவளை, நம்பாத பார்வை பார்த்தவன்,… “வா” என்று அழைத்து விட்டு முன்னே நடந்தான், அவள் அப்போது தான் அவ்விடத்தை அளவிட்டாள், வீடு போல தான் இருந்தது, ஒரு மூலையில் அவள் இவ்வளவு நேரம் இருந்துவிட்டு வெளியே வந்த குளியலறை, வலது பக்கம் அவள் வாந்தி எடுத்து வைத்துவிட்டு வந்த சிறிய அறை, இப்போது நடந்து கொண்டிருப்பது விசாலமான முற்றம் போல் இருக்க, அதன் ஓரத்தில் அவளை அமர சொன்னான், அவளுக்கும் வேறு வழி இல்லை அமர்ந்தாள்,….
அதே முற்றத்தின் சில அடி தொலைவில் போட்டிருந்த டேபிளுடன் கூடிய நாற்காலியில் அவன் அமர்ந்தான், நேரங்கள் கடந்தது, டேபிளின் மீது கால் போட்டபடி நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கொண்டிருந்தான் விழிகளை மூடிய நிலையில், அவளுக்கு அவனது எண்ணம் என்னவென்றே புரியவில்லை, மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்திருந்தாள், தப்பிக்கும் அளவிற்கு அவளுக்கு தைரியமில்லை, விஷயம் அறிந்து தான் இருக்கும் இடம் கண்டுபிடித்து தன் தமையன் வருவான் என நம்பினாள், மணிகள் கடந்ததே தவிர யாரும் வரவில்லை, அமர்ந்த வாக்கிலேயே தூங்கிவிட்டாள்,….
நன்றாக உறங்கி கொண்டிருந்தவள், ஏதோ உடையும் சத்தம் கேட்டு அரண்டு போய் விழித்தாள்,… அவன் தான் அங்கும் இங்கும் வேகமாக நடைபயின்றபடி அலைந்து கொண்டிருந்தான், அவனது செயல் அவளுக்கு பயத்தை தந்தது, அவன் முகத்தில் ஒருவித கோபம் ஆக்ரோஷம், தரையை பார்த்து நடை பயின்று கொண்டிருந்தவன் அவள் புறம் திரும்பினான், அவளுக்கு ஈரகொலையே நடுங்கியது, சுவரோடு சுவராக ஒன்றினாள், அவன் அவளை நெருங்கி வந்தான்,… பயத்தில் வெடவெடத்து போய் அமர்ந்திருந்தவள் “உன் பேரன்ன” அவன் கேட்ட கேள்வியில் திருத்திருவென்று விழித்தாள்,…
“ஏய் உன்னை தான் உன் பேரென்ன?” அவன் மீண்டும் அதட்டி வினவவும், அதே திருத்திருத்தென்ற விழிகளுடன் எச்சிலை விழுங்கி கொண்டவள்,… “நித்யா, நித்யஸ்ரீ” என்றாள் உள்ளே போன குரலில்,… அவள் பெயரை கேட்டதும் அவன் முகத்தில் ஏமாற்றம், “ஓஹ்… ஷிட்” என்றவன், தன் காலை தரையில் ஓங்கி உதைத்தான் கோபமாக,…
அவன் செயலில் பயந்து போனவள், அரண்ட விழிகளுடன் இன்னும் இன்னும் ஒன்றி போனாள் பின்னாலிருந்த சுவருடன், அந்த நேரம் அவனது போன் ஒலித்தது,… இறுகிய முகத்துடன் அழைப்பை ஏற்றவன்,… “எப்படி எப்படிடா தப்பு நடந்தது” கத்தினான் ஆக்ரோஷமாக,…
______________
“*** துணி கலரை வச்சு அடையாளம் காட்டுனது நீ தானே, என் கைல நீ கிடைச்ச கைமாவாக்கிடுவேன் ****” கெட்ட வார்த்தையில் ஆரம்பித்து கெட்ட வார்த்தையில் முடித்து உறுமினான் இணைப்பில் இருந்தவனிடம்,…
______________
“எனக்கு தெரியாது, நாம கடத்த வேண்டிய பொண்ணை இன்னைக்கே நம்ம இடத்துக்கு கொண்டு வரணும்” என்றான் கர்ஜனையாக, அவனது இவ்வாக்கியத்தில் மேலும் பயந்து போனாள் நித்யா,….
______________
“அதை நான் பார்த்துகிறேன்” நித்யாவை அளவிட்டவாறே கூறியவன், அவளை பார்த்தவாறே இணைப்பை துண்டித்துவிட்டு போனை பாக்கெட்டில் போட்டவன்
அவளருகில் வந்தான், மேலும் பின்னால் நகர முடியாது என்பது தெரிந்தும் அவள் நகர முயன்றாள், முடியவில்லை, பயத்தில் அவளுக்கு கண்ணீர் வெளியேற,… “எதுக்கு அழற” அவனது கடுமையான குரலில், திடுக்கிட்டு போனவளுக்கு, அழுகை மேலும் கூடியது,…
“இப்போ அழறதை நிறுத்தல” என கேட்டபடி அவன் தன் துப்பாக்கியை கையில் எடுக்க, வாயை கரங்களால் மூடிக் கொண்டவள், அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள்,….
“எங்க இருந்து வர” இப்படி கேட்டால் அவள் என்ன பதில் சொல்லுவாள், ரோட்டில் நின்று கொண்டிருந்தவளை இவன் தானே கடத்தி கொண்டு வந்தான், இதை அவனிடம் கேட்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு, ஆனால் வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளிவரவில்லை,…
“உன்கிட்ட தான் கேட்டேன்” அவன் குரலில் இருந்த அழுத்தம் அவளை பேச வைத்தது….”வீட்லருந்து” அவன் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை தான் சொன்னாள், ரோட்டிலிருந்து என்று சொன்னால் அசிங்கமாக இருக்குமே என்று வீட்டையே பதிலாக்கி விட்டாள்..
அதற்கும் அவன் “நாங்கல்லாம் என்ன காட்டுலருந்தா வறோம்” கேலியையும் மிரட்டலான குரலிலேயே கூறியவன்,… “உன் வீடு எங்க இருக்கு, வீட்ல யார்லாம் இருக்கீங்க” என்றான்,…
” ***** தெரு, நான், அம்மா அண்ணா மூணு பேரும் இருக்கோம்” என்றாள் சிறு குரலில் மூக்கை உறிந்துக் கொண்டே,…
“உன் அண்ணன் பேர் என்ன? என்ன பண்ணுறான்”அவனது கேள்வியில் தயக்கமாய் அவனை பார்த்தவள்,… “சொன்னா என்னை விட்டுடுவீங்களா?” என்றாள்
“சொன்னாலும் விட மாட்டேன், சொல்லலனாலும் விட மாட்டேன், கேட்ட கேள்விக்கு பதில்” அவன் உரும,… “நான் என்ன தப்பு பண்ணேன், என்னை எதுக்காக கடத்திட்டு வந்திருக்கீங்க, தயவு செஞ்சு விட்டுடுங்க” என்று அழுதாள்,…
“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல” அவன் கையிலிருந்த துப்பாக்கியால் தாடையை வருடியபடி கூற, பயந்தவள்,… “அண்ணா பேர் வருணேஷ், ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறாரு” என்றாள்,…
“கம்பெனி நேம்” என்றவனுக்கு அதற்கான பதிலையும் கொடுத்தாள், அனைத்தையும் உள்வாங்கி கொண்டவன்,.. “சரி கொஞ்ச நாள் நீ இங்க தான் இருக்க வேண்டியது வரும், அமைதியா இருந்தன்னா நான் உன்னை எப்படி கடத்தி கொண்டு வந்தேனோ அப்படியே போய் விட்டுடுவேன், வேறு ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்த்தன்னு தெரிஞ்சது பொட்டுனு சாகடிச்சு போட்டுட்டு போயிடுவேன்” என்று மிரட்டல் குரலில் கூறியதும் மிரண்டு விட்டாள்,…
“ஏன்? என்னை கடத்திட்டு வந்தீங்க, உங்களுக்கு எனக்கும் என்ன சம்மந்தம், அம்மா என்னை நினைச்சு கவலை படுவாங்க, தயவு செஞ்சு என்னை போக விடுங்க” கெஞ்சினாலாவது போக விட மாட்டானா என்ற நப்பாசையில் பயத்தை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு மன்றாடினாள்,…
“உன்னை பார்த்தா பாவமா தான் இருக்கு, சரி உன் நிம்மதிக்காக நான் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்றேன், ஆக்சுவல்லா ஆள் மாத்தி உன்னை தூக்கிட்டோம்” என்றதும் அவள் விழிகள் இரண்டும் சாசர் போல் விரிந்தது,….
“ஆமா யாரை கேட்டு மஞ்சள் கலர் துணி போட்டுட்டு வந்த, வேற கலர் துணி போட்டு வந்திருந்தா நீ எங்க கிட்ட மாட்டிருந்திருக்க மாட்டல்ல” என்றதும், இதென்னடா எனக்கு வந்த சோதனை என்று தனக்கு பிடித்த மஞ்சள் கலர் சுடிதாரை குனிந்து பார்த்தாள், இப்போது வெறுப்பு வந்தது அவ்வுடையின் மீது,…..
“துணி கலரை வச்சு வேற பொண்ணை தூக்குறதுக்கு பதிலா உன்னை தவறுதலா தூக்கிட்டோம், பயப்பட வேணாம், நீ எங்களுக்கு தேவை இல்லை, தூக்க வேண்டிய ஆளை தூக்கினதும் உன்னை விட்டுடுறேன்” என்று கொஞ்சம் ஆறுதலாக பேசியவன், நகர்ந்து வந்து விட்டான்,…..
‘கடவுளே பொண்ணுங்களை கடத்துற கூட்டத்துல வந்து மாட்டிக்கிட்டேனா? பெரிய மனசு பண்ணி என்னை விட்டுடுறேன்னு வேற சொல்றான், அப்படினா அவனுங்களுக்கு தேவையான பொண்ணுங்களை தான் ஸ்கெட்ச் போட்டு கடத்துவானுங்க போல, முதல்ல இங்கிருந்து போகணும், அப்புறம் அண்ணன் கிட்ட சொல்லி இவனை ஜெயில்ல பிடிச்சு போடணும்’ என தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தவள், என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்தாள்,…
நேரங்கள் கடந்தது, உட்கார்ந்து போனை பார்த்து கொண்டிருந்தவன் எங்கோ கிளம்பினான், வெளிகதவை நெருங்கியவன்,…ஒரு முறை நித்தியாவின் புறம் திரும்பி,…”அரை மணி நேரத்துல வந்துடுவேன், அது வரைக்கும் அமைதியா இருந்த இடத்தை விட்டு எழுந்துக்காம இருக்கணும்” கிட்டத்தட்ட மிரட்டிவிட்டே, வெளிபக்கமாக கதவை பூட்டிவிட்டு வேகமாக வெளியேறினான்,…..
அவன் போய்விட்டதை உறுதி படுத்திக் கொண்டவள் ஒரு வேகத்துடன் எழுந்தாள், வீட்டை அலசி ஆராய்ந்தாள், அறையில் ஜன்னல் இருந்தது, ஆனால் திறக்க முடியாத அளவிற்கு கட்டை வைத்து அடைத்து வைக்கப்பட்டிருந்தது, வெளிகதவின் பக்கம் வந்தாள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தள்ளி திறக்க முயன்றாள், முடியவில்லை சாவி போடும் துவாரம் வழியாக எட்டி பார்த்தாள், இருட்டி விட்டிருந்தது, ஒரு குண்டு பல்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்தது, மரங்களை மட்டுமே பார்க்க முடிந்தது, அடுத்து என்ன செய்வதென்று யோசித்தாள், ஒன்றும் புலப்படவில்லை, அவ்வீட்டில் ஒரு பொருட்கள் கூட கிடைக்கவில்லை, தன் பாதுகாப்பிற்காக ஏதாவது ஆயுதமாவது கிடைக்காதா என்றும் தேடி பார்த்தாள், ஒன்றும் கிடக்கவில்லை, சோர்ந்து போய் தனதிடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள், அவனும் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டிருந்தான்….
அவளுக்கு மீண்டுமொரு உணவு பொட்டலத்தை கொடுத்தான்,,… “சாப்பிடாம இருந்து என்னை டென்ஷன் படுத்துனனா விளைவு உனக்கு தான்” என மிரட்டி விட்டே கொடுத்தான், அவளுக்கும் பசி எடுக்க தான் செய்தது, ஏற்கனவே சாப்பிட்ட சாப்பாடு வாந்தி வழியாக வெளியே வந்து விட்டது, வயிறு கத்திக் கொண்டிருந்ததால் அவளும் அந்த பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டாள், தோசையும் உளுந்த வடையும் இருந்தது சூடாக, வயிறு நிரம்ப சாப்பிட்டாள், உடலில் புதுதெம்பு வந்தது போல் இருந்தது, அவனை தள்ளிவிட்டு ஓடிவிடலாமா என்று யோசித்தாள், அவனை தன்னால் தள்ளி விட முடியுமா? கண்டிப்பாக முடியாது அந்த முடிவை கைவிட்டாள்,…
கடத்த வேண்டிய பெண்ணை எப்போது கடத்துவார்கள் என்று சுயநலமாக யோசித்து விட்டு, அதற்காக வருத்தப்பட வேறு செய்தாள், மணிகள் மௌனமாகவே கடந்தது, இடையில் மறுபடியும் ஒரு தூக்கம், அவள் எழுந்த போது நன்றாக வெளிச்சம் எட்டி பார்த்திருந்தது, விடிந்து விட்டது போல என நினைத்து கொண்டாள் வெளியே கேட்ட பறவைகளின் சத்தத்தின் மூலம்,…
தூங்கி விழித்ததிலிருந்தே அவனை காணவில்லை, மறுபடியும் வெளியே போய்விட்டானா? மீண்டும் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடலாம் என்று எழுந்து மீண்டும் அலசினாள், கதவை எப்படியாவது உடைத்து வெளியே போய்விடலாம் என்று தன் பலம் கொண்டு கதவை உடைக்க முயன்றாள், கதவு அசைய கூட இல்லை, ஆனாலும் அவள் தன் முயற்சியை கைவிடவில்லை, தன் தோளால் ஹீரோவை போல் தள்ளி உடைக்க முயன்று கை வலி வந்தது தான் மிச்சம்,…. அந்த கணம் “என்ன பண்ணுற” தன் பின்னால் கேட்ட அவனது குரலில் விழுந்து அடித்துக் கொண்டு திரும்பினாள்,…
அவன் தான், உள்ளே தான் இருந்திருக்கிறான், தான் தப்பிக்க நினைத்தது தெரிந்தால் கொலை செய்து விடுவானே, பயத்தில் எச்சிலை விழுங்கினாள்,… அவனோ.. “என்ன தப்பிக்க பார்க்கிறியா” சரியாக கண்டுபிடித்து கேட்டான், பயத்தில் வியர்வை கொட்டியது, கைகால்கள் ஆட்டம் கண்டது,…
“சரி நகரு, நானே கதவை திறந்து விடுறேன்” அவளை தாண்டி வந்து கதவை திறந்து விட்டவன்…”போ” என்றான்,…
தன்னை விட்டுவிட போகிறானா சந்தோசம் தாங்க இயலவில்லை, ஆர்வக்கோளாரில்…. “ரொம்ப நன்றி” என்றாள் முகத்தில் நிம்மதி தெரிய கையெடுத்து கும்மிட்டு ,…
“எதுக்கு” புருவத்தை ஏற்றி இறக்கி அவன் வினவ…. “என்னை போக விடுறதுக்கு” என்றாள் சந்தோஷத்துடன்….
“உன் நன்றியை நீயே வச்சுக்கோ, ஆனா ஒரு வாக்கு மட்டும் கொடுத்துட்டு போ” என்றான்…
“என்ன” அவள் புரியாமல் வினவ,… “இப்போ போற நீ மறுபடியும் இந்த பக்கம் வர கூடாது” அவளுக்கு புரியவில்லை ஏன் இவ்வாறு கூறுகிறான் என்று,… “நான் ஏன் மறுபடியும் இங்க வர போறேன், கண்டிப்பா வர மாட்டேன்” என்றாள்,…
“சரி போ” அவன் சாதாரணமாய் கூறிவிட, விட்டால் போதுமென்று அவள் ஓடினாள், வாசல் படியிலேயே அவன் அமர்ந்துவிட்டான், பத்து நிமிடங்கள் இருக்கும், போனவள் மீண்டும் ஓடிவந்தாள் இவ்வீட்டை நோக்கி, அவன் இதழ்களில் வெற்றிப்புன்னகை,….
வியர்த்து விறுவிறுக்க, மூச்சு வாங்க அவனது முன்னிலையில் வந்து நின்றாள், புருவம் உயர அவளை பார்த்தவன்.. “போகல?” என்றான் விஷம புன்னகையுடன்…
“இல்ல நான் இங்கேயே இருக்கேன், நீங்களே என்னை கொண்டு போய் விடும் வரை, நான் தப்பிக்க நினைக்க மாட்டேன்” என்றவள், மீண்டும் வீட்டினுள் ஓடிவிட்டாள், மிகப்பெரிய உருமலுடன் காட்டு யானையின் சத்தம் கேட்க, காது இரண்டையும் கரத்தினால் பொத்திக் கொண்டு அமர்ந்துவிட்டாள், அதை பார்த்து பயந்து ஓடி வந்தவள் தான் அப்படியொரு முடிவை எடுத்திருந்தாள்…
அவர்கள் இருப்பது காட்டு விலங்குகள் நடமாடும் ஒரு காட்டு பகுதி, எந்த பக்கத்திலிருந்து எந்த மிருகம் வரும் என்று தெரியாது, காலை நேரத்தில் யானைகள் உலாவிக் கொண்டிருக்கும், இரவு நேரத்தில் மோசமான மிருகங்கள் வேட்டையாட காத்திருக்கும், அவன் வெளியே சென்றால் ஆயுதத்தோடு தான் செல்வான், தன்னை தாக்க வரும் மிருகங்களிடமிருந்து தன்னை காத்து கொள்ளவும் அவனுக்கு தெரியும், அதனால் அவனுக்கு அது பெரிய பிரட்சனை இல்லை, நித்யா மீண்டும் தப்பிக்க முயற்சி செய்ய கூடாதே என்று தான் காலை நேரத்தில் அவளை போக விட்டு வேடிக்கை பார்த்தான், இனி அவள் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்க மாட்டாள் என்பது புரிந்தது, அந்த நிம்மதியுடன் அவனும் வெளியே எங்கேயோ கிளம்பினான்….

