Loading

இரு நாள்கள் ஒரு பொட்டுத் தூக்கமின்றி ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் தவிக்க விட்டாள் நிதர்ஷனா.

உயிருக்கு ஆபத்து நேரும் கட்டத்தைத் தாண்டி விட்டாலும், சுயநினைவு பெற இயலாது தற்காலிக கோமாவிற்குச் சென்று விட்டதாக மருத்துவர் கூறியதில் அங்கிருந்த அனைவரிடமும் கடும் அதிர்ச்சி.

யாஷ் முற்றிலும் சிதைந்து போனான்.

யாருக்கும் யார் முகத்தையும் பார்க்கத் தெம்பே இல்லை.

கண்மணி தான் சற்றே மன தைரியம் பெற்று, “அண்ணா… அண்ணிக்கு ஒன்னும் ஆகாது. நீங்க வேணா பாருங்க திரும்பி தெம்பா வர தான் போறாங்க. இப்ப வரை அவங்க உயிருக்கு ஆபத்து இல்ல. அதுவே பெரிய பாசிட்டிவ் தான அண்ணா. நீங்க அவங்கள முழுசா குணமாக்குற வேலையை பாருங்க. ரோபோடிக் சர்ஜரி தான் பெஸ்ட் ஆப்ஷன்னு முடிவு பண்ணுனா, அதை தாராளமா பண்ணுங்க. உங்கமேல அண்ணிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு… அவங்க கண்டிப்பா சரியாகுவாங்க” என்று சமாதானம் செய்ய அவனிடம் துளி அசைவும் இல்லை.

பெருமூச்சு விட்டு நிவேதனின் அருகில் அமர்ந்தவளுக்கு வேதனை தாளவில்லை. அவன் கண்கள் தாங்கும் ஒவ்வொரு துளி கண்ணீரும் அவள் நெஞ்சில் குருதியாய் இறங்குகிறதே!

கண்ணீரைத் துடைக்கும் அளவு இந்தக் காதலுக்கு சக்தியேது?

உள்ளம் உருக்குலைக்க, “நிவே… ப்ளீஸ் இப்படி இருக்காதீங்க. அண்ணி சரி ஆகிடுவாங்க” என நம்பிக்கை அளிக்க, அழுது அழுது சோர்ந்து போனவன் அழக்கூட நீர் வரத்து இன்றி, தரையை மட்டுமே வெகு நேரமாய் வெறித்திருந்தான்.

கதிரவனின் நிலையோ வேறு. அவனுக்கு அழுகை கூட வரவில்லை. மனமெங்கும் பயம் மட்டுமே!

மீண்டும் மறந்து விடுவாளோ அல்லது அதை விட அதிக பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சம் அவனைக் குதறியது.

முன்னொரு முறை தரையில் பிரண்டு அழுத கதிரவன், தற்போது இருண்ட முகத்துடன் துளி கண்ணீரின்றி அமர்ந்திருந்ததைக் கண்டு சிந்தாமணிக்கு கிலி பிடித்தது.

“கதிர்!”

தன்னை அழைத்த சிந்தாமணியின் குரல் கூட உறைக்கவில்லை அவனுக்கு.

“தாற்காலிக கோமா தான்னு சொல்லிருக்காங்க கதிர். எப்ப வேணா அவங்களுக்கு நினைவு வரலாம். வந்துடும். தயவு செஞ்சு எல்லாருமே நெகட்டிவா இருந்தா, அவங்களை எப்படி எழ வைக்கிறது. இந்த மாதிரி சூழ்நிலைல, கோமால இருக்குறவங்களுக்கு சுத்தி இருக்குறவங்களோட நேர்மறை எண்ணம் தான் அதிகம் தேவைப்படும்னு கேள்விப்பட்டிருக்கேன். ப்ளீஸ் நீங்களாவது மாமாவையும் நிவே அண்ணாவையும் சரி பண்ணுங்க…” என்று வருத்தம் நிறைந்த குரலில் கூறினாள்.

இருவரையும் திரும்பிப் பார்த்த கதிரவன், விரக்தியுடன் தலை குனிந்து கொண்டான்.

“ரெண்டு பேரையும் பார்த்தீல… என்ன பேச சொல்ற? என்ன பேசுனா சரியாகுவாங்க? முடியல சிந்தா! இதுக்கு முடிவே இல்லாம போயிட்டு இருக்கு. அன்பு வச்ச பாவத்துக்கு எவ்ளோ வலியை தான் தாங்க முடியும்” என தேம்பலுடன் நெற்றியில் கை வைத்துக் கண்ணீர் விட்டவனை அடக்கப்பட்ட அழுகையுடன் ஏறிட்டாள்.

“அன்பு குடுக்குற வலியை அந்த அன்பால தான் தடுக்க முடியும் கதிர். வேற வழி இல்ல!” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், கண்ணை அழுந்தத் துடைத்து விட்டு, எழுந்தான்.

யாஷ் பிரஜிதனின் அருகில் செல்ல மனம் வரவில்லை. நிவேதனிடம் சென்றான்.

“அவளை போய் பாரு நிவே!”

நண்பனின் குரலில் கண்ணில் நிறைந்த நீர்தேக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தான் நிவேதன்.

அதைத் தாங்க இயலாதவனாய், நிவேதனை வயிற்றுடன் கட்டிக்கொண்ட கதிரவன், “டேய் முடியலடா…” என்று கதறிட, நிவேதனும் கத்தி அழுது விட்டான்.

இருவரின் அழுகையையும் நிறுத்த இயலாது பெண்கள் இருவரும் தான் திணறினர்.

“கதிர்… நிவே” ஆதிசக்தியும் இளவேந்தனும் அவர்களை அடக்க முயன்றும் முடியவில்லை.

இவர்களது கூக்குரலில் தான் யாஷ் பிரஜிதன் எனும் சிலைக்கு உயிர் வந்தது.

“டேய்!” யாஷின் கடுமை நிறைந்த கத்தலில், இருவரது அழுகுரலும் சற்றே மட்டுப்பட,

“ஷீ வில் பீ ஆல்ரைட்! அவள் எந்திரிச்சு வர்ற வரை, எந்த அழுகை சத்தமும் எனக்கு கேட்க கூடாது…” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவன், தன்னவளைப் பார்க்கச் சென்றான்.

உயிர் காக்கும் உபகரணங்களுடன், தளர்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் நிதர்ஷனா.

அவளையே அமைதியாய் பார்த்திருந்த யாஷ் பிரஜிதன், “ஆலம்பனா” என்றழைத்தான்.

அவளிடம் எவ்வித அசைவும் இல்லை.

‘எஸ் பாஸ் சொல்லுங்க. இப்ப நான் என்ன பண்ணனும்’ என்ற குறும்பு நிறைந்த புன்னகையே அவனது மனக்கண்ணில் தோன்றி அலைக்கழிக்க, கண்களை இறுக்கி மூடித் திறந்தவன்,

“ஒன்னும் இல்ல ஆலம்பனா. இந்த ஒரு ஸ்டேஜ் மட்டும் தாண்டி வந்துடு. வாழ்க்கை முழுக்க, உன்ன என் உள்ளங்கைல வச்சு பொத்திக்கிறேன். ஹ்ம்ம்? ஆல்மோஸ்ட் உனக்கான எல்லா ப்ரொசீஜரும் பண்ணிட்டு இருந்தேன்டி. ப்ச், ஆமா உன் மெண்டல் ஹெல்த்காக தான் உன்கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தேன். அது எனக்குத் தப்பா தெரியல ஆலம்பனா.

அதை வெறும் டிராமானு முடிச்சுட்ட. ஓகே டிராமாவாவே இருக்கட்டும். பட், எனக்கு தெரியும் உனக்குத் தெரியும்… நீயும் நானும் இந்த வாழ்க்கையை எவ்ளோ ரசிச்சு வாழ்ந்தோம்னு. ரசிக்கணும் ஆலம்பனா. உன்கூட சேர்ந்து, உனக்கு என்ன ஆகுமோன்ற பயம் இல்லாம, தவிப்பு இல்லாம, உன்னை தினம் தினம் ரசிக்கணும். அந்த அலெஸ் உன்னைக் கடத்துறதுக்கு ஒரு நாள் முன்னாடி நான் உன்னைக் கடத்தி இருந்தா, இவ்ளோ கஷ்டமே இல்லைல நிது” சொல்லும்போதே அவளது கையில் அவனது கண்ணீர் தளும்பி நின்றது.

“எப்படியோ, உன்னை முழுசா சரியாக்குவேன் ஆலம்பனா. இட்ஸ் மை ப்ராமிஸ். என்னை எப்பவும் போல இப்பவும் நம்பு நிது. என்கிட்ட சண்டை போட்டுட்டு இப்படி படுத்துருக்குறத பார்க்க முடியலடி! வலிக்குது ஆலம்பனா!” என்றவனின் தேய்ந்த குரலில் அவளது விழிகளில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

அதனை வேகமாய் துடைத்து விட்டவன், “டோன்ட் க்ரை” என்றான்.

அதுவோ நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க, “ஐ செட் டோன்ட் க்ரை மின்னல்!” என்றவனின் அழுத்தக்குரலில் அதிகமாய் வழிந்திட, பெருவிரலால் சுண்டி விட்டவன், “வந்துடு ஆலம்பனா. உன் அரக்கனை முழு கிறுக்கனா மாத்திடாத. வந்துடு என்கிட்ட ப்ளீஸ்!” என்ற ஆடவனின் ஆணவமெல்லாம் அவளது அருகில் மொத்தமாய் கரைய, அவளது வயிற்றில் முகத்தைப் புதைத்து, அழுது கரைந்தான்.

தங்கையைப் பார்க்க தட்டுத் தடுமாறி அங்கு வந்த நிவேதனுக்கும் யாஷ் பிரஜிதனின் கண்ணீர் அழுத்த வலியைக் கொடுத்தது.

அதன்பிறகு, அவளை விட்டு நொடியும் நகன்றானில்லை அவன். ரித்திகாவையும் ஆஹில்யனையும் சோதனைக்கூடத்திலேயே இருக்க சொல்லி விட்டு, முழுக்க முழுக்க நிதர்ஷனாவின் அருகிலேயே தான் இருந்தான்.

என்ன உடுத்தினான், என்ன உண்டான், எப்போது உறங்குவான்… யாருக்குமே தெரியவில்லை. யாருமே அவன் அருகிலும் வர முடியவில்லை.

சில நேரம் நிதர்ஷனாவின் அருகில் ஒருக்களித்துப் படுத்து, அவளையே விழியெடுக்காது பார்த்திருப்பான். அதனால் சங்கடப்பட்டு யாரும் சட்டென உள்ளேயும் வருவதில்லை.

கிட்டதட்ட மூன்று மாதங்களாக ஒரே அறையில் அடைந்திருக்கிறான்.

ஆதிசக்திக்கு மனமே ஆறவில்லை.

“இவனைப் பார்த்தாலே பயமா இருக்கு இளா. சாப்பாடு எடுத்துட்டு போனா பேருக்கு கொறிச்சுட்டு அப்படியே வச்சுடுறான். இவன் இப்படியே இருந்தா, அவள் பக்கத்துலயே பெட் போட வேண்டியது தான்” என்றார் வருத்தம் தாளாது.

“நமக்கே இப்படி இருக்கும்போது அவனால எப்படி இதை தாங்க முடியும் ஆதி. அவனும் என்ன செய்வான்…” இளவேந்தனுக்கு வேதனை பொங்கியது.

யாரையும் அவளருகிலும் விட மாட்டேன் என்கிறானே! அவனது போக்கு நிவேதனுக்கும் பயத்தைக் கொடுக்க, ஒரு முடிவுடன் நிதர்ஷனாவின் அறைக்குச் சென்றான்.

எப்போதும் போல அவளருகில் படுத்தபடி அவளையே பார்த்திருந்த யாஷை அழைத்தான்.

“மச்சான்!”

அவன் திரும்பவில்லை.

“டேய் மச்சான்!” நிவேதன் இம்முறை சத்தமாக அழைக்க, யாஷ் திரும்பி முறைத்தான்.

“என்னை முறைக்கிறதுலாம் இருக்கட்டும். மொதோ எந்திரி”

“வாட் டூ யூ வாண்ட்?” யாஷ் கடுமையாகக் கேட்க,

“உன் லவ்வால அவளை மூச்சு முட்ட வைச்சதும் இல்லாம, இப்ப எங்களையும் மூச்சடைக்க வைக்கிற மச்சான். இப்படி ஒரே இடத்துல அவளை மாதிரியே அசையாம இருந்தா, எப்படி மச்சான்? உனக்காக அவள் கண்டிப்பா எந்திரிப்பா. எனக்கு நம்பிக்கை இருக்கு. அவள் முழிக்கிறப்ப, நீ தெம்பா இருக்க வேணாமா? ரோபோ வச்சு ஏதோ பண்ண போறேன்னு சொன்ன. இப்படியே அவளை பார்த்துட்டே இருந்தா எல்லாம் நடந்துடுமா?” என்றான் ஆற்றாமையுடன்.

“நடக்க வேண்டிய வேலை நடந்துட்டு தான் இருக்கு…”

“நீ எல்லாத்தையும் நடத்திட்டு இருப்பன்னு எனக்கும் தெரியும். ஆனா நீ இறங்கி பார்த்தா தான், அந்த வேலை எவ்ளோ சுமூகமா நடக்குதுன்னு தெரியும். என் தங்கச்சியோட உயிர் உன் கைல இருக்கு. உன்னை நம்பி மட்டும் தான் அவளும் நானும் உயிரைக் கைல பிடிச்சுட்டு இருக்கோம்…” என்னும் போதே நிவேதனின் விழிகளில் துளிநீர்.

விருட்டென எழுந்து விட்ட யாஷ் பிரஜிதன், அழுது சிவந்த விழிகளால் நிவேதனைப் பார்க்க, அவனது நிலையே நெஞ்சைப் பிசைய வைத்தது.

இளகினால், ஊண் உறக்கமின்றி இங்கயே மடிந்து விடுவானென்ற நிதர்சனம் புரிய, அசையாது நின்றான் நிவேதன்.

“வீட்டுக்குப் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா மச்சான். அதுவரை இவளை நாங்க பாத்துக்குறோம்…” என அவனது பதிலை எதிர்பாராது நிதர்ஷனாவின் மறுபக்கம் சென்று அமர்ந்து கொண்டான்.

அவனையே வெறித்த யாஷ் பிரஜிதன், ஆய்வுக்கூடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் உறைக்க, வீட்டிற்குச் சென்று குளித்துக் கிளம்பினான்.

ஆய்வுக்கூடத்திற்கு சென்றதுமே, ரித்திகா அவனிடம் பழங்களையும் பாலையும் நீட்டினாள்.

“உன் மெண்டல் ஹெல்த் பிஸிக்கல் ஹெல்த் ஸ்டேபிளா இருக்கணும் யாஷ். ப்ளீஸ்!” தலைசாய்த்து கெஞ்சலாகக் கூறியவளின் விழிகளும் கூட சிவந்திருந்தது.

தங்கையை அருகில் இருந்துக் காண இயலாத வலி அவளைக் கொய்வது புரிந்து, “இங்க ஒன் அவர் நான் பாத்துக்குறேன். நீ ஹாஸ்பிடல் போயிட்டு வா!” என்றான். மறுக்காது பழங்களையும் உண்டான்.

ரிசப்ஷனில் அமர்ந்திருந்த கண்மணியின் முகம் தீவிர சிந்தனையில் இருந்தது.

சுற்றி முற்றி பார்த்தபடி அமர்ந்திருந்தாள். சிந்தாமணி வந்தவள், “என்ன கண்மணி ஒரு மாதிரி இருக்க. அக்காவ நினைச்சா…” என கேட்க,

“ம்ம் சிந்தா… உனக்கு யாரும் நம்மளை பாலோ பண்ற மாதிரி தோணுதா?” எனக் கேட்டாள் மிரட்சியாக.

“ம்ம்க்கும்… எப்ப உன் அண்ணன் வீட்டுக்கு வந்தாரோ அப்போ இருந்தே நம்மளை யாரோ கொலை பண்ண முகமூடி போட்டுட்டு முதுகுக்கு பின்னாடி நிக்கிற மாதிரி தான்டி இருக்கு”

“ப்ச், ஐயோ அதில்லடி. இப்ப ஹாஸ்பிடல் வந்தப்பறம்…”

“நான் கவனிக்கலையே!”

“ஒரு பச்சை சட்டை போட்டவன், அப்போ அப்போ என் கண்ணுல பட்டுட்டே இருக்கான்.”

“பார்க்க எப்படிடி இருந்தான்?” சிந்தா பதறி வினவ,

“கொஞ்சம் வயசானவன் மாதிரி தான் இருந்தான். முகத்தை கர்சீப் வச்சு மறைச்சுருந்தான்…” என்றாள் யோசனையுடன்.

இங்கு நிவேதன் வார்த்தைகளற்று தங்கையின் கேசத்தை வருடிக்கொண்டிருந்தான்.

நிச்சயம் மீண்டு விடுவாளென்ற அசைக்க இயலாத நம்பிக்கை உள்ளுக்குள் ஓடியது. அவள் காதல் மீதிருந்த நம்பிக்கை!

அந்நேரம் ஆஹில்யனும் ரித்திகாவும் அங்கு வந்தனர்.

“எதுவும் இம்ப்ரூவ்மென்ட் தெரிஞ்சுதா நிவே?” ரித்தி வேதனையாய் வினவ, மறுப்பாய் தலையசைத்தான்.

இன்னும் இரு தினங்களில் இருவருக்கும் திருமணம் முடிவாகி இருந்தது.

ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நின்று போவது அவனுக்கும் வருத்தம் அளிக்க, ஆஹில்யனின் பெற்றோரும் வருந்தக்கூடாதே என்ற யோசனையும் எழுந்தது.

ரித்திகா சில நொடிகள் நிதர்ஷனாவை பார்த்து விட்டு, எதுவும் பேசாமல் வெளியில் செல்ல, ஆஹில்யனுக்கும் எதுவும் பேச இயலா நிலை.

அவர்கள் பின்னாலேயே வந்த நிவேதன், “ரித்தி… இன்னும் ரெண்டு நாள்ல உங்க கல்யாணம். எதுக்காகவும் அது தடைபட வேணாம்…” என்றிட, வாசலில் அமர்ந்திருந்த ஆதிசக்தியும் இளவேந்தனும் கூட, அப்போது தான் அதை பற்றியே சிந்தித்தனர்.

இளவேந்தனும் “நிவே சொல்றது சரிதான் ரித்தி. ஏற்பாடு பண்ணுன கல்யாணம் தடைபட வேணாம்” என்றிட,

ரித்திகா சீறினாள்.

“என்ன பேசுறீங்க? அதெப்படி அவள் படுத்த படுக்கையா இருக்கும்போது நான் நிம்மதியா கல்யாணம் பண்ணிக்க முடியும். அவள் என் தங்கச்சி மாமா. அவள் இல்லாம எப்படி என் கல்யாணம் நடக்கும்…” என எகிறியவள், நிவேதனைப் பார்த்து, “இல்ல… உனக்கு அவ மட்டும் தான் தங்கச்சி. நான் இல்லைனு சொல்லிட்டன்னா, ஓகே என் கல்யாணத்துல யாருமே வேணாம் அனாதைனு நினைச்சு இப்பவே கூட தனியா இவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று தீயாய் எரிந்திட, நிவேதன் தவித்து விட்டான்.

“என்ன ரித்தி இப்படி பேசுற. உன்னையும் நிதாவையும் நான் பிரிச்சு பார்க்கல. அவள் தான் இப்படி இருக்கா. அட்லீஸ்ட் உன் வாழ்க்கையாச்சு நல்லபடியா போகணும்னு ஆசை தான்.”

ஆஹில்யனும், “அதுக்காக எங்க கல்யாணத்துல அவள் நிக்க வேணாமா. எவ்ளோ லேட்டானாலும் பரவாயில்ல. அவள் சரியாகி வர்றவரை வெய்ட் பண்றோம்” என்று தீர்க்கமாகச் சொல்லி விட, அதற்குமேல் பேச இயலாமல் நிவேதன் ஒப்புக்கொண்டான்.

இருவரும் உடனடியாய் ஆய்வு கூடத்திற்கு கிளம்பி விட, ஆதிசக்தி “அறிவுரை யாஷுக்கு பண்ணுனா மட்டும் பத்தாது நிவே. நீயும் கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும். ரிஸப்ஷன்ல கண்மணியும் சிந்தாவும் இருக்காங்க. அவங்களையும் கூட்டிட்டுப் போய் மூணு பேரும் சாப்பிடுங்க. அதுவரை நாங்க நிதாவ பாத்துக்குறோம்…” என அனுப்பி வைக்க, அவனும் பெருமூச்சுடன் ரிசப்ஷனுக்கு சென்றான்.

அங்கு இரு பெண்களும் தீவிரமாய் வாதிட்டுக் கொண்டிருந்ததில், “என்ன ஆச்சு?” என வினவினான்.

கண்மணி நடந்ததைக் கூற, “என்ன சொல்ற கண்மணி. யார் அது?” என அவனும் சுற்றி முற்றி தேட, அந்நேரம் கண்மணி பரபரத்தாள்.

“அதோ அங்க பாருங்க நிவே…” என்று மருந்தகத்தின் ஒரு மூலையைக் கை காட்ட, நிவேதனும் “அந்தப் பச்சை சட்டையா?” எனக் கேட்டபடி அவனை நோக்கிச் சென்றான்.

அதனை உணர்ந்த அந்த மர்ம நபர், நடையை வேகப்படுத்தி வெளியேற, அவனை வேகமாய் பின்தொடர்ந்தான் நிவேதன்.

கதிரவனுக்கும் அலைபேசி அழைப்பு விடுத்துக்கொண்டே அவனைப் பின் தொடர, “சொல்லு நிவே” என்றான் கதிரவன்.

“எங்கடா இருக்க?”

“இங்க பார்க்கிங்ல இருக்கேன்.”

“டேய் அங்க தான் நாங்களும் வந்துட்டு இருக்கோம். ஒரு பச்சை சட்டைக்காரன் மூஞ்ச மூடிட்டு அந்த பக்கமா வர்றான். பிடிச்சு வை” என அழைப்பைத் துண்டிக்க, “எதுக்கு இவன் ஐஸ் பாய் விளையாடிட்டு இருக்கான்” எனத் தலையை சொரிந்தபடி பச்சை சட்டைக்காரனைத் தேடினான் கதிரவன்.

இறுதியில் அவனைப் பார்த்து விட்டவன் பின்னிருந்து பிடித்து விட, அதற்குள் நிவேதனும் வந்து விட்டான். அவன் பின்னால் கண்மணியும் சிந்தாமணியும்.

“யாருடா நீ? எதுக்கு ஃபாலோ பண்ற” என்று அவன் முகத்தில் இருந்த கர்சீப்பை எடுத்தவன் சிலையாகி விட்டான்.

கதிரவனிடம் இருந்து துள்ளிக் குதித்து விலகிய அந்த நபரைப் பார்த்து கதிரவனும் திகைத்தான்.

“ப்பா?”

அனைவரையும் கண்டு திருதிருவென விழித்தார் நடேசன்.

“நா நா நிதாவ பார்க்க வந்தேன்.”

“டேய்… நிதாவை பார்க்க வந்தவரை புடிச்சு ஏதோ கொள்ளைக்கூட்ட தலைவன் ரேஞ்சுக்கு பிடிச்சு வச்சுருக்க” என்று கதிரவன் நிவேதனை அதட்டி விட்டு, “ஏன்ப்பா… நிதாவை பார்க்க வந்தா, நார்மலா வர வேண்டியது தான. நீ ஏன் கொரோனா வந்த பேஷண்ட்டு மாதிரி மூஞ்சிய மூடிட்டு வர்ற?” என்று தந்தையையும் அதட்டினான்.

சிந்தாமணிக்கு தான் உள்ளுக்குள் அபாயமணி அடித்தது.

யாஷ் பிரஜிதன் இவர் மீது சந்தேகம் கொண்டுள்ளானே!

“என்ன அங்கிள் நீங்க மட்டும் வந்துருக்கீங்க ஆண்ட்டி வரலையா?” என நாசுக்காக வினவ, “அது… அவ அவளுக்கு தெரியாது” என்றார்.

“ஓ… கதிர் நீங்க தான் உங்க அப்பாட்ட விவரம் சொன்னீங்களா நிதா அக்கா பத்தி” என வினவ,

“இல்லையே” எனப் புருவம் சுருக்கியவன், “நான் உங்கிட்ட எதுவுமே சொல்லலையே. அப்பறம் எப்படி கரெக்ட்டா வந்தப்பா?” என வினவ, நடேசனின் முகத்தில் ஒரு பீதி தெரிந்தது.

“அது அது உன்னையும் நிதாவையும் பார்க்கலாம்னு நீ குடுத்த பங்களா அட்ரசுக்கு போனேன். அங்க தான் வாட்ச்மேன் சொன்னாங்க…” என்றார்.

“எந்த வாட்ச்மேன்?” பின்னிருந்து இன்னொரு குரல் கேட்க, அங்கு கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் யாஷ் பிரஜிதன்.

அவனைக் கண்டதும் அவர் விழிகளில் பீதி அதிகரித்தது.

“அதான் அந்த பங்காளல இருந்த வாட்ச்மேன்…”

“எந்த பங்களால இருந்த எந்த வாட்ச்மேன்?”

எச்சிலை விழுங்கிய நடேசன், அவன் முன்னால் வருவதை அறிந்து தானாய் பின்னால் நகன்றார்.

நிவேதனும் கதிரவனும் அவரைப் புரியாது ஏறிட, “சொல்லுங்க மிஸ்டர் நடேசன். பிரெண்ட் ஆஃப் நீலகண்டன்!” என்று அர்த்தமாய் ஏறிட, நடேசன் அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

அவரது சட்டைக்காலரை பிடித்து விட்ட யாஷ் பிரஜிதன், “இவ்ளோ நாள் ஓடுனது போதாதா?” என்றான் இதழ் வளைத்து.

“நான்… நான் எதுக்கு ஓடணும்?” என்ற நடேசனின், முகத்தில் நங்கென ஒரு குத்து விட்டான்.

ஒரே அடியில் வாயில் இருந்து பொலபொலவென இரத்தம் கொட்ட, மண்டியிட்டு அமர்ந்த நடேசனைப் பதறி பிடித்தான் கதிரவன்.

“யாஷ் என்ன பண்ற? அவர் என் அப்பா.”

“உன் அப்பா நீலகண்டனோட டியரஸ்ட் ப்ரெண்ட்…”

“ஆமா, அவர் எங்க வீட்ல தான ரொம்ப நாள் இருந்தாரு. அதுனால அப்பாவும் அவரும் க்ளோஸுனு சொல்லிருக்காரே…” கதிரவன் பரிதவித்தான்.

“நோ, உன் ஃபாதரும் நீலகண்டனும் ஆல்ரெடி ஃப்ரெண்டா இருந்ததுனால தான், நிவேதனையும் நிதாவையும் நீலகண்டன் உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கான்”என்றதில் அதிர்ந்து விட்டான்.

நிவேதனோ, “அது எப்படி இப்படி உறுதியா சொல்ற மச்சான்?” என்றதில்,

“ஐ ஹேவ் சாலிட் எவிடன்ஸ். க்ராண்ட்பா வீட்டுக்கு பக்கத்துல இருந்த பூத்ல இருந்து பல தடவை கதிர் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற பூத்கு கால் வந்துருக்கு. நீலகண்டனும் இந்த நடேசனும் காண்டாக்ட்ல தான் இருந்துருக்காங்க.” என்றான் அழுத்தமாக.

“அவ்ளோ வருஷத்துக்கு முன்னாடி இருக்குற டீடெய்ல் எல்லாம் எப்படி எடுத்த மச்சான்!” நிவேதன் வியப்பாய் கேட்க, “இன்னும் நிறையவே எடுத்துருக்கேன். பட், அது எந்த அளவு மேட்ச் ஆகுதுன்னு இவன் வாயைத் திறந்தா தெரியும்!” என்றான்.

கதிரவனோ, “இதெல்லாம் எப்ப கண்டுபிடிச்ச?” எனப் புரியாது வினவ, சிந்தாமணி “நாங்க உங்க வீட்டுக்கு வந்தோம்ல. அப்பவே மாமா உங்க அப்பா மேல சந்தேகம்னு சொன்னாங்க கதிர்.” என்றாள்.

“அப்போ அப்பவே என்கிட்ட ஏன் சொல்லல?” மீண்டும் யாஷிடம் கேட்டான்.

“எனக்குத் தேவை அந்த நாலாவது ஆள். எக்ஸ்சாக்டா அது யாருனு கண்டுபிடிக்காம, எந்த விஷயத்துலயும் அவசப்பட வேணாம்னு வெய்ட் பண்ணேன்” யாஷின் கூற்றில், கண்மணி “அப்போ இப்ப மட்டும் எதுக்கு அண்ணா இவரை எக்ஸ்போஸ் பண்ணீங்க?” என்றதில், ஆடவனின் முகத்தில் இகழ்ச்சிப் புன்னகை.

“பிகாஸ் அந்த ஃபோர்த் பெர்சன் யார்னு எனக்குத் தெரிஞ்சாச்சு!”

நால்வருமே அதிர்ந்தனர்.

“யாரு மச்சான்?” நிவேதனின் கேள்விக்குப் பதில் கூறாதவன், “ஃபர்ஸ்ட் இந்த இன்டெராகேஷன் முடியட்டும்… சொல்லுங்க மிஸ்டர் நடேசன். வாட் வாஸ் ஆக்சுவலி ஹேப்பண்ட்!” என்றான் பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து.

மகனையும் ஒரு முறை தவிப்பாய் பார்த்தார். அவனது பார்வையில், “என்னை அப்படி பாக்காதடா. மனசறிஞ்சு நான் எந்த தப்பும் செஞ்சது இல்ல.” என்று கண் கலங்கிட, அவனுக்கும் நெஞ்சம் அதிவேகமாய் துடித்தது.

“முதல்ல என்ன தான் பண்ணித் தொலைஞ்சனு சொல்லுப்பா” என்றான் எரிச்சலாய்.

“நீலகண்டனும் நானும் ஒரே ஊர்க்காரங்க. என் சொந்த ஊரு தஞ்சாவூரு தான். நானும் நீலகண்டனும் ஒரே பள்ளிக்கூடத்துக்கு தான் போவோம். நான் கொஞ்சம் படிச்சுப்பேன். அவன் படிக்காம ஊர சுத்துறனால அவங்க அப்பா, மகேந்திரன் ஐயா வீட்ல வேலைக்கு சேர்த்து வுட்டாரு. அவனுக்குத் தொணையா நானும் மகேந்திரன் ஐயா வூட்டுக்குப் போய் வேலை பாப்பேன். கொஞ்ச வருசத்துல அவங்க வீட்டுப் பொண்ணு ஆதி, வெளிநாட்டுக்காரன் கூட ஓடிப்போய்டுச்சுன்னு ஊர் பூரா வதந்தி பரவ, நீலி என்னாண்ட ரொம்ப வருத்தப்படுவான்.

ஆதி ரொம்ப நல்ல பொண்ணு. அங்க அமுதானு இன்னொரு வயசுப்பொண்ணும் இருந்துச்சு. ஆதி படிப்பு பக்கம் போனதுனால, எனக்கும் அவங்களுக்கும் பெருசா பழக்கம் இல்ல, ஆனா அமுதா என்னாண்ட நல்லா பேசும். அவளும் ஒருத்தன விரும்புனா. அவன் பேரு பெருசா நெனைவு இல்ல” எனும்போதே யாஷ் வரதராஜன் என்றான்.

“ஆ… ஆமா அவன் தான். அப்ப அந்த ஊர்த்தலைவரோட பையன். அவரு உடம்புக்கு முடியாம இருந்ததுனால பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு மகேந்திரன் ஐயாவாண்ட தான் அமுதாவை கேட்டாரு. அதுல இருந்தே, அவளுக்கு அவனைப் பிடிக்கும். அவன் ஊருக்கு வர நேரம், ரெண்டு பேரும் கோவில்ல பார்த்துப்பாங்க. அதுக்கு வூட்டுக்கு தெரியாம நானும் நீலியும் தான் அவளை பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டு வருவோம். அவளுக்கும் அந்த பையனுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணும்போது, எனக்கும் என் வீட்ல பொண்ணு பார்த்துட்டாங்க. பொழப்ப தேடி மெட்றாஸ்க்கு போக வேண்டிய சூழ்நில. அமுதாக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் ஆகி, நான் மெட்றாஸ்க்கு வந்துட்டேன்.

அஞ்சு சவரன் தங்க செயினை குடுத்து, என் மருமகளுக்கோ மருமகனுக்கோ போடுண்ணேனு சொன்னா. அப்ப தெரியல. அது தான் அவள் என்கிட்ட கடைசியா பேசுற வார்த்தைன்னு” எனும் போதே அவர் குரல் தேய்ந்தது.

கண்ணீர் அணை உடைய கலங்கியவரை நிவேதனும் கதிரவனும் வருத்தமாய் பிடித்துக் கொண்டனர்.

“மெட்ராஸுக்கு வந்ததும் எனக்கும் அவங்களுக்கும் இருக்குற தொடர்பு அருந்துருச்சு. எப்பவாச்சு, பூத்ல இருந்து நீலி பேசுவான்.

‘அமுதா வாழ்க்கை நம்ம நெனைச்ச மாதிரி இல்லடா’னு புலம்புவான். மனசுக்கு வருத்தமா இருக்கும். வாழ்க்க போற ஓட்டத்துல அன்னன்னைக்கு ஒழச்சா தான் சோறுன்னு ஓடிட்டு இருந்தோம். அப்ப தான் கதிரும் பொறந்த நேரம், என் மாமனாரு அப்பனு கடனை வாங்கி இடம் வாங்கி குடுத்து, அதையும் என் தலைல கட்டி விட்டாரு. அதுல வீடு கட்டியே ஆகணும்னு என் பொண்டாட்டி வூட்ல ரொம்ப கெடுபிடி பண்ணிட்டாங்க. அதுனால, கடனை ஒடன வாங்கி வீடு கட்டி ஒத்திக்கு விட்டுந்தேன்.

அப்ப தான் சில வருஷத்துக்கு அப்பறம், நீலிட்ட இருந்து மறுபடியும் எனக்கு போன் வந்துச்சு. எனக்கு மறைவா வாழ ஒரு இடம் வேணும். அமுதாவோட பொண்ண காப்பாத்த உதவி பண்ணுன்னு அழுதான். அமுதா எங்கன்னு கேட்டேன். அதுக்கு அவன் பதிலே சொல்லல. உதவின்னு கேட்குறப்ப எப்படி விட முடியும். ஒரு வூட்ல அவனை தங்க வைக்கலாம்னு வர சொல்லிட்டேன். அப்ப தான் நிவேவும் நிதாவும் அவன்கூட வந்தாங்க.

நிதாவுக்கு ஒரு மூணு வயசும், நிவேவுக்கு ஒரு ஆறு வயசும் இருக்கும். ஏதுடா இந்தப் பசங்கனு கேட்டப்ப. என்கிட்ட எதுவும் கேட்காத, இது அமுதாவோட பசங்க. ஆனா யாருக்கும் இவங்க இங்க இருக்குறது தெரியக்கூடாதுனு சத்தியம் வாங்கிக்கிட்டான்.

அமுதாவுக்கு என்ன ஆச்சுன்னு எவ்ளோவோ கேட்டும் அவன் பதிலே சொல்லல. ஒரு நாள் திடீர்னு, நெஞ்சைப் பிடிச்சுட்டு விழுந்துட்டான்.

‘என்னை நம்பி ரெண்டு பிள்ளைகளை அமுதா விட்டுச்சே. இப்படி அனாதையா வுட்டுட்டு சாக போறோமே’ன்னு அழுதான். அப்படிலாம் ஒன்னும் ஆகாது நீலினு உசுர கையில பிடிச்சுட்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனேன்.

‘இல்லடா நடேசா… என்னமோ நான் பொழைக்க மாட்டேன்னு தோணுது. நிவேவையும் நிதாவையும் நீ பாத்துக்கோ. அவங்களுக்கு கண்டிப்பா பிரச்சினை வரும். அவங்க இங்க இருக்குறது தெரிஞ்சா உன்னை கூட விலைக்கு வாங்குவாங்க. ரெண்டும் அப்பிராணியா இருக்கு. நீ அவங்கள சுத்தியும் என்ன நடக்குதுன்னு கவனிச்சுக்கனு சொல்லிட்டு, என் பொட்டில, ஒரு கடுதாசி இருக்கு. ரொம்ப தேவைப்படுறப்ப மட்டும் அதை நிதாட்ட குடு’ன்னு சொன்னான். அதோட ஆஸ்பத்திரிக்கு போற வழிலேயே என் மடிலேயே அவன் உசுரு போய்டுச்சு” என்று குமுறி அழுதார்.

“அவன் சொன்னமாறி, அந்தக் கடுதாசியை நான் எடுத்து வச்சுட்டேன். இன்னும் அதை பிரிச்சு படிச்சதில்ல. அதே மாதிரி, நிவேவை படிக்க கூட எங்கயும் அனுப்பிடாத. வேலைக்கு போனா கூட இந்த ஏரியாவை தாண்டி அவன் போகக்கூடாதுனு சொன்னதுனால, நான் தான் அவனை சின்ன வயசுலயே ஜவுளிக்கடலை வேலைக்கு சேர்த்து விட்டேன்” என உடைந்து அழுதார்.

“வாட்ஸ் தட் கடுதாசி?” யாஷ் பிரஜிதன் புரியாது வினவ,

“லெட்டர் அண்ணா” என விளக்கம் கொடுத்தாள் கண்மணி.

“இப்ப அந்த லெட்டர் எங்க?” யாஷ் தீவிரமாகக் கேட்க, “என் வூட்ல தான் இருக்கு” என்றதும், “கதிர் உடனே அந்த லெட்டர் எனக்கு வரணும்” என்று உத்தரவிட்டான்.

தலையை ஆட்டிய கதிரவனுக்கு ஏன் தான் இப்படி எல்லாம் நடந்ததோ என்று ஆயாசமாக இருந்தது.

நிவேதனோ அனைத்து உணர்வுகளும் வற்றிய நிலையில் விரக்தியுற்றான்.

தனது உயிரானவளே படுத்த படுக்கையாக இருக்கும்போது, யார் வந்து கொலை செய்தால் என்ன என்ற நிலை தான்.

யாஷ் பிரஜிதனோ நடேசனை நோக்கி, “யூ… உன் பிரெண்ட் பார்த்துக்கணும்னு சொன்ன பசங்களை உன் வைஃப் வச்சு கண்டபடி பேச வச்ச உன்னை என்ன செய்யலாம்!” என்று ஆத்திரம் அடங்காது கேட்டான்.

“ஐயா… அப்படிலாம் இல்ல. அவளுக்கு வாய் துடுக்கு ஜாஸ்தி தான். ஆனா, அவளுக்கு இதுங்க ரெண்டையும் புடிக்கும். நிவேவை ஸ்கூலுக்கு அனுப்ப சொல்லி என்னாண்ட சண்ட போடுவா. அவன் உசுருக்கு ஆபத்து இருந்தும், எந்நேரமும் தங்கச்சி தங்கச்சின்னு உருகுறவனை வெரட்டிக்கிட்டே இருப்பா. ரொம்ப அமைதியான சுபாவம் அவனுக்கு. இப்படி இருந்தா நாளை பின்ன பிரச்சினை வந்தா எப்படி சமாளிப்பான்னு ரெண்டு பேரையும் எதுக்கெடுத்தாலும் குறை சொல்லுவா.

நிதா வளர்ந்த பின்னடியாச்சும், இவனை மெரட்டி படிக்க அனுப்பி இருக்கலாம். எப்படியும் வேற எடத்துல கல்யாணம் ஆகிப் போகப்போறவ… அவள் போனபின்னாடி இவன் என்ன செய்வானோனு அவளுக்கு கவல. எத்தனை நாளுக்கு தான் பயந்து பயந்து குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டுவான். உலகம் தெரியட்டும்னு தான், வீட்டை விட்டு போக சொல்லி திட்டுவா. காசியாண்ட கடன் வாங்குனதுக்கும் ரெண்டு பேரையும் திட்டுனா. ஒரு நாள், கதிரையும் நிதாவையும் யாரோ கடத்துறதை பார்த்து எனக்கு ஒண்ணுமே ஓடல.

எனக்குத் தெரிஞ்ச கான்ஸ்டபிளுக்கு போன போட்டு, தேடி கண்டுபிடிச்சா, அவ மகேந்திரன் ஐயா வீட்ல இருக்குது தெரிஞ்சு அதிர்ச்சி ஆகிடுச்சு. அப்பறம் தான் நீங்க ஆதியோட புள்ளைன்னு தெரிஞ்சுகிட்டேன். எப்படியோ அவள் அவளோட எடத்துல சேர்ந்துட்டா அதுவே போதும்னு தான் அமைதியா இருந்தேன். கதிர் என்னாண்ட பொய் சொன்னப்ப கூட நான் எதுவும் கேட்டுக்கல… நிவே கூட உண்மையா காணாம போய்ட்டான்னு எனக்குத் தெரியல. அவன் வெளியூருக்கு வேலைக்கு போனதா தான் நினைச்சுட்டு இருந்தேன்” என முழுதாய் விளக்கம் கொடுத்தார்.

நிவேதன் மட்டுமல்ல, மற்ற மூவருக்கும் கூட அவரது சுடுசொல்லில் அன்பு தான் தேங்கி இருக்கிறது என்ற உண்மை விளங்கியதில் வியப்பு தான்.

ஆனால், யாஷ் கடுகடுவென இருந்தான்.

“வாட்எவர், ஷீ இஸ் மை கேர்ள் நொவ். அவளைப் பத்தி இனி ஏதாவது தப்பா வந்துச்சு… உன்னையும் உன் வைஃப்பையும் அதே வீட்ல புதைச்சுடுவேன்” என்று மிரட்டி விட்டு உள்ளே செல்ல, நடேசனுக்கு பேயறைந்த நிலை.

“ஆமா இங்கிலிஷ் புரியாத ஆளுட்ட இங்லிஸ்ல மிரட்டுறதே இவன் வேலையா போச்சு” என மானஸீகமாகத் தலையில் அடித்துக் கொண்ட கதிரவன், “ப்பா… அந்த லெட்டரை உடனே எடுத்துக் குடு… வா…” என்று அவரை அழைத்துச் சென்றான்.

சிந்தாமணிக்கோ ‘நம்ம மாமியார் நம்ம நெனச்ச அளவு மோசம் இல்லை போல’ என்ற நிம்மதி பிறக்க, கண்மணி நிவேதனின் வாடிய வதனத்தையே வருத்தமாய் பார்த்திருந்தாள்.

“என்ன யோசனை நிவே?” அவனது கைப்பிடித்து கேட்க,

“எதுவுமே யோசிக்க முடியல கண்மணி. தலையெல்லாம் சுத்துது. எங்களை சுத்தி நிறைய மர்மம் இருந்துருக்கு. ஆனா அது தெரிய முன்னாடி கூட நாங்க பாட்டுக்கு நிம்மதியா தான் இருந்தோம். இப்ப தோண்ட தோண்ட பூதம் வருது. இன்னும் என்ன என்ன வருமோ!” என்ற நிவேதன், மனதினுள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தான்.

அதனை செயல்படுத்த ரித்திகாவிற்கு அழைத்தான் தனியே சென்று.

“சொல்லு நிவே…”

“ரித்தி எனக்கு உதவி வேணுமே. வரதராஜனும் அலெஸ்ஸும் இப்ப எங்க இருக்காங்க?” எனக் கேட்க,

“எதுக்கு அது?” என்றாள் புரியாமல்.

“எனக்குத் தெரியணும். ப்ளீஸ், ஒரு அண்ணனா கேட்குறேன். இதை தயவு செஞ்சு ரெண்டு மச்சான்ட்டயும் சொல்லிடாத…” எனக் கேட்க, அவள் தயங்கினாள்.

“இல்ல நிவே. அதை யாஷ் ரொம்ப கான்ஃபிடென்ஷியலா வச்சிருக்கான்.”

“ப்ளீஸ் ரித்தி… உன் கால்ல வேணா விழுகுறேன் சொல்லு” என்றதில் “என்னடா நீ?” என நொந்தாள்.

“எதுக்கு கேட்குறனு சொல்லு சொல்றேன்…”

“நீ சொல்லு மொதோ. சும்மா பேச தான்” என சமாளித்தான்.

“நிவே!” கலங்கிய குரலுடன் கேட்ட ரித்திகாவிற்கு அவன் மனம் புரிந்தது.

“ப்ளீஸ் ரித்தி… என்னால முடியல. எப்பவோ செத்துருக்க வேண்டியவன், நிதா அம்மாவோட வேலையால நானும் காப்பாத்தப்பட்டுருக்கேன்னு ஒரு உறுத்தல் இருக்கு. என்னால அவளும் சேர்ந்து பட்ட கஷ்டம் போதும். நான் அலெஸ்ட நேரடியா பேசணும்” என்றான்.

“ஆனா ரெண்டு பேருமே இன்னும் இத்தாலில தான் இருக்காங்க. நீ பார்க்க முடியாது நிவே…” ரித்திகா கூறியதில், “நாங்க போன அதே தீவுலயா?” என்றான் புருவம் சுருக்கி.

“இல்ல… நம்ம இருந்த யாஷ் பங்களாவோட அண்டர்கிரௌண்ட்ல”

“என்னது?” நிவேதன் திகைத்தாலும், “நான் உடனே இத்தாலிக்கு போரேன். இந்த விஷயத்தை உன் நட்புக்கு விசுவாசம் காட்டுறேன்னு அவன்கிட்ட சொல்ல மாட்டன்னு நம்புறேன்” என்றான்.

“நானும் நீ முட்டாள்தனமா முடிவெடுக்க மாட்டேன்ற நம்பிக்கைல இருக்கேன்” என்றதில், பதில் பேசாது அணைத்து விட்டான்.

வேகமாய் அலுவலகம் சென்றவன், அங்கு சில விவரங்களை ஆராய்ந்து விட்டு, யாஷிற்கு அழைத்தான்.

நிதர்ஷனாவின் தலையைக் கோதி கொடுத்துக் கொண்டிருந்த யாஷ் பிரஜிதன், அழைப்பை ஏற்க, “மச்சான்” என்றான் நிவேதன்.

“ம்ம்…”

“நான் அவசரமா இத்தாலிக்குக் கிளம்பனும்.”

“வை?” விழிகள் இடுங்கியது.

“அது… நீ கவனிக்கலனு நினைக்கிறேன். ஆல்மோஸ்ட் ப்ராஜக்ட் முடிஞ்சுருச்சு. அதுக்கான ப்ரசெண்டேஷனை இன்வெஸ்டர்ஸ் இத்தாலில தான் அரேஞ்சு பண்ணிருக்காங்க. இப்ப இருக்குற நிலமைல நீ அவளை விட்டு வர வேணாம். நான் போயிட்டு வந்துடுறேன்” என உண்மையைக் கலந்தே கூறினான்.

“ஆர் யூ சியூர். நீ ஸ்டேபிளா இருக்கியா?” எனக் கேட்டான் கூர்மையாக.

ஏனெனில் தங்கை இந்த நிலையில் இருக்கும்போது அவனால் அவளைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்க இயலாது என்று அறிந்தவனாகிற்றே. அதனாலேயே இந்த சந்தேகம்.

தொண்டையை செருமியவன், “அவளும் சேர்ந்து தான் இதுக்காக உழைச்சா. இப்ப எல்லாம் முடிஞ்சு வர்றப்ப, எல்லாத்தையும் போஸ்ட்போன்ட் பண்ணுனா, அவளோட உழைப்பு வேஸ்ட் ஆகும். அதுனால தான் சொல்றேன்…” முடிந்த அளவு சமாளித்தான்.

இந்த காரணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க, “ஓகே… பட் உனக்கு பிரசன்டேஷன்கு ஹெல்ப் வேணும். கண்மணியைக் கூட்டிட்டுப் போ!” என்றான். அவனுக்கு இது முதல் ப்ராஜக்ட் ஒப்படைப்பு என்பதால், நிச்சயம் உதவிக்கு ஆள் வேண்டுமென்ற எண்ணத்தில்.

“இல்ல வேணாம் மச்சான். ஏற்கனவே எங்க இருந்து ஆளுங்க வந்து அட்டாக் பண்றங்கன்னு தெரியல. எதுக்கு ரிஸ்க்?”

“டோன்ட் வொரி! இப்போதைக்கு அவள் மேல யாரும் கை வைக்க மாட்டாங்க. என் கார்ட்ஸ் உங்களுக்கு பாதுகாப்புக்கு வருவாங்க” என ஒரே பேச்சாக முடித்து விட, நிவேதன் அலைபேசியால் தனது தலையை தானே அடித்துக் கொண்டான்.

கண்மணிக்கு நிவேதனுடன் இத்தாலிக்கு செல்லப்போகிறோம் எண்ணும்போதே, தரையில் கால்கள் படவில்லை. ஆனால் அதற்காக முழுதாய் மகிழவும் இயலவில்லை.

நிதர்ஷனாவின் குரல் இல்லாது, அவர்களது வீடே வெகு அமைதியாய் காட்சியளித்தது.

அவ்வப்பொழுது கண்ணிமைகள் அசைகிறது. தங்களது உரையாடல்களைக் கேட்கிறாள். ஆனால், முழு சுயநினைவு ஏனோ வர மறுக்கிறது. கூடிய விரைவில் கண் விழித்து விடுவாள் என்ற மருத்துவரின் நம்பிக்கை சற்றே தெம்பைக் கொடுத்தது அனைவர்க்கும்.

ஆனால், யாஷ் பிரஜிதன்? அவனுக்கு யார் நம்பிக்கை கொடுக்க இயலும்! தன்னுள் துவண்டு தவிப்பவனை தேற்றுவார் அங்கு யாருமில்லை.

இந்நிலையில், கண்மணி நிவேதனுடன் இத்தாலிக்குச் செல்லப் போவது அறிந்து ஆதிசக்தி யோசனையில் ஆழ்ந்தார்.

நிதர்ஷனா விழித்து விடுவாள் என்ற நம்பிக்கையைத் தாண்டி கண்மணியின் முகம் பளபளப்பதைக் கண்டறிந்து விட்டவர், தானே அவளிடம் கேட்டு விட்டார்.

“நீ நிவேதனை விரும்புறியா கண்மணி?” தாயின் கேள்வியில் திருதிருவென விழித்தாள்.

இன்னும் சம்பந்தப்பட்டவனிடமே தெளிவாய் பேசி இருக்காத போது, எப்படி வெளிப்படையாய் கூற இயலும்.

மகளின் அமைதியில் மனம் உணர்ந்தாலும், “இந்த மௌனத்தை சம்மதமா எடுக்குற வேலையெல்லாம் வேணாம். வாயைத் திறந்து சொல்லு” என அதட்டினார்.

“தெரியலமா! அவரைப் பிடிக்கும். ஆனா அவர் மனசுல என்ன இருக்குனு தெரியாம என் மனசுல இருக்கறதை சொல்ல எனக்கு விருப்பம் இல்ல” என்றவளை ஆயாசமாகப் பார்த்தவர், “ரெண்டு பேரும் விரும்புறீங்க. அதை சொல்றதுக்கு என்ன வந்துச்சு உங்களுக்கு? அவனைக் கேட்டா அவனும் மழுப்புறான். நீயும் சமாளிக்கிற.” என்றான் சலிப்பாக.

“அவருகிட்ட கேட்டீங்களா என்ன சொன்னாரு?” படபடப்பாகி விட்டவளை முறைத்தார் ஆதிசக்தி.

“இதோ பாரு கண்மணி. சில விஷயங்களை மனசுல வச்சு அழுத்துறதுக்கு சம்பந்தப்பட்டவங்க கிட்ட பேசிடுறது பெட்டர். நீயும் அவனும் கலந்து பேசிட்டு எனக்கு ஒரு முடிவு சொல்லு…”

“எந்த முடிவா இருந்தாலும் ஓகே வா?” சின்னக்குரலில் கேட்டவளிடம் முறுவலித்தவர்,

“நிவேதனை விட ஒரு அப்பாவியை எல்லாம் எங்க போய் தேடுறது. எதுவா இருந்தாலும் ஓகே தான். இல்ல உங்க ரெண்டு பேர் மனசுலையும் எதுவும் இல்லன்னா, சென்னைல ஒரு வரன் வந்துருக்கு. நிதா சரியாகி வரவும் அதை பேசி முடிக்கலாம். ஏன்னா, அந்த முருகன் வேற ஊருக்குள்ள தேவையில்லாம புரளியை கிளப்புறான். அது உன்னையும் உன் கல்யாணத்தையும் பாதிக்க கூடாது!” என்றதில், நிவேதனிடம் பேசியே தீர வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள், அது நடக்கவே போவதில்லை என்பதை அறியாமல்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்