Loading

சலனம்-12

நான் ஊட்டிய உணவை பசி தாளாமல் உண்டுவிட்டு,

 

“ம்ம்மா!”

 

என சம்யூவின் புகைப்படத்தைப் பார்த்து, கை நீட்டிய என் குழந்தையின் மீதே என் பார்வை மொத்தமும் இருந்தது. இப்போது குழந்தைக்கு என்ன பதில் சொல்வது? என் கண்களும், சம்யூவின் நிழற்படத்தின் மீது நிலைத்தது.

 

அவள் நிழலாக மட்டுமே மிச்சமிருக்கிறாள் என்பதை இந்தப் படம் குத்திக் காட்டுவதைப் போலவே இருந்தது. நிஜமில்லாமல், வெறும் நிழலோடும், நினைவுகளோடும் வாழ்ந்து முடித்து சாவதென்பது, திரிசங்கு சொர்க்கத்திற்கு ஒப்பானது தான்.

 

 

அவள் போனதும், வாழவே வேண்டாம் என முடிவு செய்திருந்த என் முடிவை மாற்றி, என்னை இப்போது உயிரோடு நிற்க வைத்திருப்பது என் குழந்தை அவந்திகா மட்டுமே..

 

“ப்பா.. ம்மா!” என் முகத்தைத் திருப்பி அவளைப் பார்க்க வைத்து, சம்யூவை மட்டுமே மீண்டும், மீண்டும் கேட்டாள் குழந்தை.

 

 

“அம்மா வருவாங்க! பாப்பாவுக்கு என்ன வேணும்?” எதையாவது சொல்லி சமாளிக்க முயன்றேன். தலையை இடவலமாய் ஆட்டி பிடிவாதமாய் மறுத்தாள் குழந்தை. இல்லாமல் போனவள், எங்கிருந்து வருவாள்? குழந்தைக்கே புரிந்ததோ என்னவோ? குழந்தை உதடு பிதுக்கி, அழுகைக்கு தயாரானாள். இந்த ஒருமாதத்தில் குழந்தை தாயைத் தேடுவதும் நான் பாடுபாட்டு சமாதானப்படுத்துவதும் வழக்கமாயிருந்தது.

 

 

அவளைச் சமாதானப்படுத்துவது தான் ஆகப்பெரும் போராட்டமாய் இருக்கிறது.

 

 

“ம்ப்ச்! அழக்கூடாது தங்கம்!” என் மகளைச் சமாதானப்படுத்த முயன்றேன். என்னால் முடியவில்லை. இதுவே சம்யூவாக இருந்திருந்தால், நொடியில் குழந்தையை சமாதானம் செய்திருப்பாள். குழந்தை எதற்காக அழுகிறாள்? என்ன காரணம் என்றெல்லாம், நான் ஆராய்ந்து அறிவதற்கே, நாளும் நேரமும் போய்க்கொண்டிருக்கிறது.

 

 

கடந்த ஒரு மாதமாக குழந்தையை நான் மட்டும் தான் கவனித்துக் கொள்கிறேன். ஆனால், இப்போதும் கூட, குழந்தையின் செயல்கள், புரிய மறுக்கிறது. என்ன வார்த்தை சொல்லி சமாதானப்படுத்த? என் குழந்தையை எப்படிக் கொஞ்சுவது? எல்லாம் மறந்து போனது. மனம் சம்யூ எப்படிக் கொஞ்சுவாள் என தன்னால் நினைத்துப் பார்த்தது.

 

 

அவள் ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு மாதிரி கொஞ்சுவாள். சில நேரம், தங்கம், வைரம், சில நேரம் அம்மு, பொம்மு, சில நேரம் அவி.. இப்படி நிறைய.. ஆனால் நானோ, குழந்தையைக் கொஞ்ச, கெஞ்ச வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தேன்.

 

“அவி! என் தங்கம்! அழாதேம்மா!”

 

“ப்ளீஸ் டா!”

 

“அப்பா பாவம் டா!”

 

 

என்ன சொன்னாலும், குழந்தையின் அழுகை நிற்கவே இல்லை. மனம் கனத்துப் போனது எனக்கு.

 

எவ்வளவு பெரிய பொறுப்பு? ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வதென்பது, அத்தனை சாதாரணம் இல்லை. மிகக் கடினமானது. இந்தக் குழந்தைக்காகவாவது, அவள் உயிரோடு இருந்திருக்கலாம்.

 

 

நான் வருந்துகிறேன், அவளுக்காக ஏங்குகிறேன் எனத் தெரிந்து திரும்பி வந்துவிடவா போகிறாள்? என எனக்குள் ஓடிக் கொண்டிருக்க, குழந்தை அவந்திகாவின் அழுகைச் சத்தம் ஊரைக் கூட்டியது.

 

 

“அம்மு குட்டியில்ல? என் செல்லக் குட்டியில்ல? அப்பா சாக்கி வாங்கித் தரவா?” என நான் கேட்டதும், ஒரு நொடி, முற்றுப்புள்ளியாய் நின்ற அழுகை, மீண்டும் தொடர்புள்ளியாய் தொடரத்தான் செய்தது.

 

 

குழந்தையின் அழுகைச் சத்தத்தில் என்னால் யோசிக்கவே முடியவில்லை. தோளில் போட்டு தட்டிக் கொடுக்க முயற்சி செய்யும் போது தான் குழந்தையின் உடை ஈரமாக இருப்பது புரிந்தது. ஈர உடையால் தான் அழுகிறாளோ? என்ற எண்ணம் தோன்ற, உடையை மாற்றி, மீண்டும் தோளில் போட்டு மெதுவாய் தட்டினேன்.

 

 

குழந்தையின் அழுகைச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஒருவழியாய் உறங்கியது. குழந்தை உறங்கியதுமே தான் நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது.

 

 

சம்யூ இல்லாமல் போன இந்த ஒரு மாதத்தில், என் குழந்தையைப் பற்றி, நானே நிறைய தெரிந்துக் கொள்கிறேன். பிறந்தது முதல், தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், ஆனாலும், நான் எதுவுமே தெரிந்துக்கொள்ளவே இல்லை. குழந்தையை மட்டுமில்லை, குழந்தையைப் பெற்றவளையும் நான் முழுதாய்ப் புரிந்துக் கொள்ளவே இல்லை.

 

 

முழுக்க, முழுக்க ஒரு ஆணாதிக்க மனநிலையில், முழுக்க முழுக்க அகம்பாவத்துடன் அலைந்திருக்கிறேன். சம்யூவின் மன வேதனைகளும், கோபமும் தான் என் பிள்ளையை தனியாய் நிறுத்திவிட்டதோ? என்னவோ?
எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும் கூட, இறுதியில், என் மனம் முழுதும், சம்யூவில் மட்டுமே நிலைக்கொள்கிறது.

 

 

கடலில் விழுந்த மழைத்துளி போல், என் ஞாபகங்கள் மொத்தமும், அவளில் துவங்கி, அவளில் மட்டுமே முடிகிறது. வெறும் ஞாபகங்களை மட்டுமே துணையாகக் கொண்டு, வாழ்ந்து முடித்துவிடுவதென்பது வாழ்வின் பெரும் சாபம்.

 

 

வாழும் போதே நரகத்தில் உழல்வதைப் போன்ற பெரும் சாபம். சம்யூ என்ற வரத்தைத் தொலைத்துவிட்டு, சாபத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். சம்யூ இல்லாத இந்த வாழ்க்கை நானாக வலியப் பெற்றுக் கொண்ட சாபம்.

 

 

எனக்குள் நான் யோசித்துக் கொண்டு நிற்கையில், கதவருகே பொருத்தியிருக்கும், கேமிராவில், யாரோ அழைப்பு மணியை அழுத்துவதற்கான மெல்லிய ஒலி கேட்டது. குழந்தை வந்த பிறகு, குழந்தையின் உறக்கத்தைக் கெடுத்துவிடக் கூடாதென்பதற்காய், அழைப்பு மணியின் ஓசையைக் கூட மெலிதாய் மாற்றியிருந்தாள் என் சம்யூ.

 

 

வெகு நாட்களுக்குப் பிறகு, சித்தார்த்தின் முகத்தைக் கண்டு அவசரமாய்க் கதவைத் திறந்தேன்.

 

 

“உயிரோட தான் இருக்கியா டா? கால் பண்ணினால் எடுக்காதே! கதவையும் திறக்க மாட்டேங்குறே? மெய்ட் வந்தப்போவும் வேணாம்ன்னு சொல்லிட்டியாம்? என்னதான் டா நினைச்சுட்டு இருக்கே? குழந்தையை வச்சிட்டு தனியா என்னடா பண்ணுவ?!” உண்மையான அக்கறையுடன், திட்டியபடியே உள்ளே வந்தான் சித்தார்த்.

 

 

“முதலில் உள்ளே வா டா!” சின்னப் புன்னகையுடன் வரவேற்றேன். ஒருமாத காலமாய், அறைக்குள்ளே அடைந்துக் கிடந்த எனக்கு, சித்தார்த்தின் வருகைக் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

 

 

“எப்படி டா இருக்கே? நாங்களெல்லாம் இருக்கோம்ன்னு உனக்கு ஞாபகமே இல்லையா? எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம்? நீ ஒரு டைரக்டர் டா! ஞாபகம் இருக்கா? இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தால், எல்லாம் சரியாகிடுமா? உன்னோட இழப்பு பெருசு தான்டா, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனால் இப்படியே அறைக்குள்ளே அடைஞ்சுக் கிடக்கறதும் சரியில்லை விக்ரம்!” ஒரு நண்பனாய் அவன் சொல்வது சரியெனப் புரிந்தாலும், என் மனம் எதிலும் நிலைக்க மறுத்தது.

 

“அவந்தியை யாருடா பார்த்துப்பா? என் உலகமே பாதியில் நின்னுட்ட மாதிரி இருக்கு டா. என்னால் எதுவும் செய்ய முடியுமான்னு தெரியலை. பேசாமல், சினிமாவிலிருந்து விலகிடலாமான்னு யோசிக்கிறேன்.!” என நான் சொன்னதும், பதறி எழுந்து நின்றுவிட்டான் சித்தார்த்.

 

 

“லூசாடா நீ? இத்தனை நாள் கஷ்டப்பட்டதெல்லாம், இப்படி பாதியில் விடுறதுக்கு தானா? நாம இந்த இடத்திற்கு எப்படி வந்தோம்ன்னு யோசிச்சுப் பாருடா! இந்த வாய்ப்பு ஈஸியா நமக்கு கிடைச்சுடுச்சா? இவ்வளவு கஷ்டப்பட்டு கிடைச்சதை தூக்கிப் போட்டுட்டு போறேன்னு சொல்ற?” கோபமாய்க் கேட்டான் சித்தார்த்.

 

 

“பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டியவளே போய்ட்டா, இனிமே எது இருந்தாலும், இல்லாமல் போனாலும் ஒண்ணு தான் டா!” தொண்டை அடைக்க நான் சொன்னதும், சித்தார்த்தால் பதில் பேசவே முடியவில்லை.

 

 

சித்தார்த்தின் கண்கள் கூட லேசாய்க் கலங்கியது.

 

“நான் அவளைப் புரிஞ்ச்சுக்கவே இல்லை சித்தார்த்! நீ சொன்னது சரி தான். நான் நினைச்சது மட்டும் தான் சரின்னு நான் என் நிலையிலேயே இருந்துட்டேன். நான் தான் தப்பு இல்லை சித்தார்த்.? எல்லாமே அவள் இல்லாமல் போன பிறகு தான் புரியுது! என்னால் முடியலை டா. தினமும் நான் தான் அவளைக் கொன்னுட்டேன்னு குற்றவுணர்வு கொல்லாமல் கொல்லுது டா!” என நான் சொல்லிக் கொண்டிக்கும் போதே, ஆறுதலாய் என்னை அணைத்துக் கொண்டான் சித்தார்த்.

 

“மச்சி! நீ இப்படியெல்லாம் இல்லை டா! பட், இதிலிருந்து மூவ் ஆன் பண்ணணும் டா! அவந்தியைப் பார்க்க, நல்ல கேர் டேக்கர் ஏற்பாடு பண்ணலாமா? ஒருவேளை, இதெல்லாம் உனக்குப் பிடிக்கலைன்னா உங்க அம்மாவை வரச் சொல்லலாம்! எத்தனை நாளைக்கு வெறும் செரிலாக்கும், பௌடர் பாலும் கொடுத்துட்டு இருப்பே? குழந்தையைப் பார்த்துக்க கண்டிப்பா யாராவது வேணும் டா. குழந்தை கண்டிப்பா வெய்ட் குறைஞ்சுருப்பா! நாம வேணும்ன்னா வெளியில் பேசிக்கலாம். ஆனால், பொண்ணுங்களுக்கு இருக்கிற பக்குவம் நமக்கு வராது விக்ரம்!” என சித்தார்த் சொல்வது எனக்குப் புரிந்தாலும், இப்போது என்ன செய்வதென எனக்குப் புரியவில்லை.

 

 

“இப்போ என்னை என்னதான்டா பண்ண சொல்ற?” குழப்ப மிகுதியில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டேன். அவளில்லாமல் அசைய மறுக்கும் , என் வாழ்வில், எப்படி மூவ் ஆன் செய்வது? வெறும் வார்த்தையால் தாண்டி வந்துவிடு என எளிதாய்ச் சொல்லிவிடலாம் தான். ஆனால் அவளை மறந்து, நான் அனைத்தையும் தாண்டி வருவதென்பது, ஒற்றைத் தாண்டலில் கடலைத் தாண்டுவது போலாத்தான். இந்த அண்ட பேரண்டங்களைப் போல, என்னுள் நிறைந்திருக்கும் என் சம்யூவின் ஞாபகங்களும், கணக்கில் அடங்காதவை தான்.

 

 

“விக்ரம்! நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோடா! கண்ணை மூடிட்டே இருக்காமல், உன் கண்ணைத் திறந்து பாரு! ஒரு குழந்தை இருக்கிற வீடு எப்படி இருக்குன்னு பாரு! முதலில் உன்னை நீ பார்த்தியா?” என்னை இழுத்துப் பிடித்துக் கண்ணாடியின் முன்னால் நிறுத்தினான் சித்தார்த்.

 

 

“எப்படி இருக்கேன்னு பாரு! ஏதோ பைத்தியக்காரன் மாதிரி இருக்கிறே! காடு மாதிரி வளர்ந்த முடியும், தாடியுமா, எப்படி இருக்கிற பாரு! சம்யூ உன்னை இப்படிப் பார்க்கத்தான் விரும்பினாளா? அவள் இல்லாமல் போனாலும், நீ குழந்தையை நல்லா பார்த்துக்குவேன்னு தானே, உன் கிட்டே விட்டுட்டு போயிருக்கா! அப்படி இருக்கும் போது, நீ இப்படி நடந்துக்கிட்டால் நல்லாவா இருக்கு?” என சித்தார்த் சொன்ன பின்பே, என் முகத்தை நான் கண்ணாடியில் பார்த்தேன்.

 

 

எதிரில் தெரியும் பிம்பம், நானா என்பது எனக்கே தெரியவில்லை. கொஞ்சம் இளைத்திருந்தேன். கடைசியாய் நான் என்ன சாப்பிட்டேன்? எப்போது சாப்பிட்டேன்? குளித்தேனா? குழந்தைக்கு மட்டும் எல்லாம் செய்தேன்! எனக்கு நான் என்ன செய்தேன்? யோசித்தும் ஞாபகம் வரவில்லை. ஆனால் கண்ணாடியில் தெரியும் என் பிம்பம் எனக்கே பிடிக்காத போது, நிச்சயமாய் சம்யூவிற்கும் பிடிக்காது தான்.

 

“ஷேவ் பண்ணணும் டா சித்தார்த்! ஆனால் அவந்தியை யார் பார்த்துப்பா?” என நான் கேட்டதும், சித்தார்த்தின் முகத்தில் ஒரு சிறு புன்னகை. கொஞ்சம் நிம்மதி கலந்த புன்னகை. ஒரு நண்பனாய், சித்தார்த்தின் ஆற்றாமையும், ஆசுவாசமும் எனக்குப் புரிந்தது.

 

 

“அம்மாவை வரச் சொல்றேன் டா! அப்படியே க்ளீன் பண்ணுறதுக்கும் ஆளை வரச் சொல்றேன்.!” என சித்தார்த் சொன்னதும், என் மனம் கொஞ்சம் பதறியது,

 

 

“க்ளீன் பண்ணிட்டா சம்யூவோட வாசனை போயிரும் டா!” என நான் சொன்னதுமே, பைத்தியக்காரனைப் பார்ப்பதைப் போல் என்னைப் பார்த்து வைத்தான் சித்தார்த்.

 

 

என் நண்பனின் பார்வையில் நான் பைத்தியக்காரனாய் தெரியலாம். ஆனால், தூற்றித் துடைத்து எடுத்துவிட்டால் என் சம்யூவின் வாசனை காணாமல் போய்விடுமோ? என்ற பயம் எனக்குள் நிறையவே இருந்தது.

 

 

அவள் வாசம் வீசும் இந்த வீடும், மனதிற்குள் நான் சுமக்கும் ஞாபகங்களும் மட்டும் தான் அவள் நினைவாய் என்னோடு இருப்பவை. ஒருவேளை அதுவும் அவளைப் போலவே காணாமல் கரைந்து போய்விடுமோ? என்ற பயம் எனக்குள்.

 

“விக்ரம்! சம்யூ இப்போ இல்லை டா! உன் குழந்தைக்காக நீ இந்த நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆகனும். அப்பறம் உன் இஷ்டம். என்ன ஏதுன்னு யோசிச்சு முடிவெடுத்து கால் பண்ணு. குழந்தையை உன்னால் தனியா பார்த்துக்க முடியாது! அதையும் மனசில் வச்சிக்கோ!”

எனச் சொல்லிவிட்டு சித்தார்த் சென்ற பிறகும் கூட, அந்தக் கண்ணாடியின் முன்னாலேயே நின்றிருந்தேன் நான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்