Loading

சலனம்-11

சித்தார்த் அமைதியாய் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, அமைதியாய் முன் இருக்கையில் அமர்ந்து, நெளிந்து நீண்டு பயணித்துக் கொண்டிருந்த சாலையையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனதிற்குள் சம்யூ பற்றிய நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது.

 

“என்ன ஆச்சு டா?” என் முகம் அதீத சிந்தனை வயப்பட்டிருப்பதை உணர்ந்தவனாய், கேட்டான் சித்தார்த்.

 

“நத்திங் டா!” எனப் பேச்சுக்கு சொல்லிவிட்டாலும் என் மனதிற்குள் ஓராயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

 

“உன் முகம் ஒரு மாதிரி இருக்கே டா? எதாச்சும் பிரச்சனையா?”

 

“எப்போவும் போலத்தான் சித்தார்த்!” அவன் மீண்டும் கேட்ட கேள்விக்கு மிகச் சலிப்பாய் பதில் சொன்னேன் நான்.

 

 

“இன்னும் உங்களுக்குள்ளே எதுவும் சரி ஆகலையா டா? எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறீங்க? இப்படி ஆளுக்கு ஒருபக்கமாய் நிற்கிறதுக்கு, நீங்க கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்.!”

 

 

“எனக்கும் அப்படித்தான் தோணிச்சு சித்தார்த்.! நான் சொன்னதைக் கேட்டாலே எந்தப் பிரச்சனையும் இல்லை! சம்யூ தான் பிடிவாதமாய் நிற்கிறாள்! இப்போ இவ நடிச்சு என்ன செய்யப் போறா சொல்லு? அவள் எதையும் பண்ணணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. நான் அவளுக்காகத் தானே எல்லாம் செய்றேன். இதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறா?” மனதில் கிடந்த அனைத்துமே வார்த்தைகளாய் வெளி வந்தது.

 

“அது எப்படி டா, சாத்தியம்? உனக்காக அவள் எல்லாத்தையும் உதறிட்டு வீட்டில் உட்காரணுமா? நீ ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போதே, சம்யூ நடிகைன்னு உனக்குத் தெரியும் தானே? உண்மையிலேயே அவள் நடிகைன்னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே? இப்போ மட்டு ஏன் அவள் நடிக்கிறது உனக்கு கஷ்டமா இருக்கு?!” என சித்தார்த் கேள்வி கேட்க,

 

“ம்ப்ச்! என்னடா, நீயும் புரிஞ்சுக்காமல் இதையே பேசுற?!” என எரிச்சலுடன் பதில் சொன்னேன்.

 

 

“பின்னே என்னடா? அவள் நடிகைன்னு தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டே! உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே ஒரே காரணத்திற்காக அவள் நடிப்பையே விடணும்ன்னு சொல்றதெல்லாம் நியாயமே இல்லை டா. இதை ஒரு காரணமா வச்சு, நீ நாலு மாசம் அவள் கிட்டே பேசாமல் இருந்ததெல்லாம் ரொம்ப ஓவர். அவளுக்கும், விருப்பு, வெறுப்பு எல்லாமே இருக்கும். முதலில் நீ அவளைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு!” எனக்கு ஆதரவாய்ப் பேசுவான் என நான் நினைத்திருக்க, அவன் சம்யூவிற்கு ஆதரவாய்ப் பேசியது, என் கோபத்தைக் கிளப்பியது.

 

 

“போதும், சித்தார்த்! போதும்! இட்ஸ் இரிடேட்டிங்! யாருமே எந்தத் தப்பும் பண்ணலை! நான் மட்டும் தான் தப்பு! நான் மட்டும் தான் அவளைப் புரிஞ்சுக்கணுமா? ஏன் அவள் என்னைப் புரிஞ்சுக்கக் கூடாதா? நீயும் அவளும், இதையே மாத்தி, மாத்தி சொல்றீங்க? உங்க பார்வையிலெல்லாம் நான் வில்லனாகத் தெரியறேனா?” எனக் கட்டுப்படுத்த முடியாதக் கோபத்துடன் கத்தியிருந்தேன்.
சித்தார்த் எதுவுமே பேசவில்லை. அமைதியாய் வாகனத்தைச் செலுத்துவது மட்டுமே தலையாயக் கடமை போல் செய்துக் கொண்டிருந்தான்.

 

 

என்னைப் பற்றி சித்தார்த்திற்கு நன்றாகத் தெரியும். இப்போது அவன் என்ன பேசினாலுமே, நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பது, அவனுக்குத் தெரியும். அதனால் அமைதியாகிப் போனான். சித்தார்த், நிஜமாகவே ஒரு நல்ல நண்பன். நான் சொன்ன எந்த விஷயமும், அவன் செவி தாண்டிப் போனதில்லை.

 

 

நிஜமாகவே நல்ல நட்பாக இருந்தால், அங்கே இரகசியங்கள் காக்கப்படும். அங்கே புரிதலும் இருக்கும். எனக்கும் சித்தார்த்திற்கும் இடையேயான நட்பு அப்படிப்பட்டது தான்.

 

 

“உனக்கு தெரியாது டா! ஷீ இஸ் ஃபோர் மன்ந்த் ப்ரெக்னென்ட்! ஆனால், அவள் என் கிட்டே இருந்து அதை மறைச்சிருக்கிறாள். ஹௌ க்ளவர் ஷீ இஸ்? உனக்குப் புரியுதா சித்தார்த்? இப்போ அவளுக்கு ரிலீஸ் ஆன படத்தில் கமிட் ஆன நேரத்திலேயே அவளுக்கு தெரிஞ்சிருக்கணும். பட், அவள் அதை மறைச்சிருக்கிறாள்ன்னா என்ன காரணம்ன்னு புரியுதா? எனக்குத் தெரிஞ்சால், நான் அவளை நடிக்க விட மாட்டேன்னு தான் அவள் என்கிட்டே இருந்து மறைச்சிருக்கிறாள். இதெல்லாம் என்கிட்டே மறைக்கிற விஷயமா? என்ன தான் எங்களுக்குள்ளே சண்டை இருந்தாலும், அந்தக் குழந்தைக்கு அப்பா நான் டா. என் குழந்தையைப் பற்றி எனாக்குத் தெரியப்படுத்தலைன்னா எனக்குக் கோபம் வருமா? வராதா?” என சித்தார்த்திடம் கேட்டேன்.

 

“விக்ரம்! உனக்கு ஒண்ணு புரியவே இல்லை. நீ ஏன் உன் லைஃபை இவ்வளவு காம்ப்ளிகேட் பண்ணிக்கிற? அவள் ஒருவேளை கன்சீவா இருக்கிறதை முன்னாடியே உன் கிட்டே சொல்லியிருந்தால், நீ அவளை நடிக்க விட்டுருப்பியா? உண்மையை மறைக்கிறதுக்காகக் கொடுத்த வாய்ப்பை, உண்மையைச் சொல்றதுக்காக கொடுக்கலாம் விக்ரம்.! சம்யூ பக்கமிருந்தும், நீ கொஞ்சம் யோசி.!” எனச் சொல்லிவிட்டு நான் பதில் சொல்லும் முன்னமே, வாகனத்தை நிறுத்தியிருந்தான் சித்தார்த்.

 

“வீடு வந்துடுச்சு விக்ரம்! எதுவா இருந்தாலும், கொஞ்சம் யோசிச்சு முடிவெடு! நீ குழந்தைக்கு அப்பாவாக இருக்கலாம்! ஆனால் அவள் தான் அந்தக் குழந்தைக்கு அம்மா! அதைப் பெத்துக்கணுமா? வேணாமான்னு முடிவெடுக்கிற உரிமை அவளுக்கு இருக்கு.! டேக் கேர் டா!” எனச் சொல்லிவிட்டு, என்னை எனது வீட்டின் வாசலில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டான். ஆனால் நான் தான் புரியாமல், பித்துப் பிடித்தார் போல் நின்றேன்.

 

 

என்ன தான் நான் அப்பாவாகப் போகிறேன் என்ற மகிழ்ச்சி, உள்ளுக்குள் நிறைந்திருந்தாலும், அவள் என்னிடம் மறைத்துவிட்டாளே என்றக் கோபமும் எனக்குள் இருந்தது. பற்றாக்குறைக்கு, சித்தார்த் சொல்லிவிட்டுப் போனவைகளும், என் மனதைக் குழப்பித் தொலைந்தது. அதே குழப்பத்தோடு, காவலாளி, கேட்டைத் திறந்துவிட, உள்ளே நுழைந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கு முன்பே கிளம்பிய சம்யூவின் வாகனம், இன்னும் வீடு வந்து சேரவில்லை, என்பதைத் தெரிந்துக் கொண்டதும், என் மனதிற்குள் ஏதேதோ யோசனைகள் வந்துத் தொலைத்தது.

 

“என்னதான் நீ குழந்தையோட அப்பாவாய் இருந்தாலும், அவள் குழந்தையோட அம்மா! குழந்தையைப் பெத்துக்கணுமா? வேணாமான்னு முடிவெடுக்கிற உரிமை அவளுக்கு இருக்கு!” என சித்தார்த் சொல்லிவிட்டுச் சென்றது வேறு என் செவிக்குள் அசரீரீயாய் ஒலித்தது.

 

 

‘எங்கே சென்றிருப்பாள்? ஒருவேளை என்மீதிருக்கும் கோபத்தில், குழந்தையை வேண்டாமென முடிவு செய்திருப்பாளோ? ஒரு நடிகையாய் அவள் அப்படித்தானே முடிவெடுக்க வேண்டும். அவளுக்கு அவளுடைய கெரியர் மட்டும் தானே பெரிது!’ என மனம் கேள்வி கேட்க, அலைபேசியைக் கையிலெடுத்து, அவளுக்கு அழைப்பெடுத்தேன். எப்போதும் போல், அவள் அழைப்பை ஏற்கவில்லை. என் மேல், கோபமாய் இருக்கிறாள் என்பது புரிந்தது.

 

 

அவசரமாய் வீட்டிற்குள் நுழைந்து, பணிப்பெண்ணிடம் விசாரித்துப் பார்த்தேன். மருத்துவனை சென்றிருப்பதாய் தகவல் கிடைத்தது. எனக்கு ஒருநொடி மூச்சே நின்றுவிட்டது. நிச்சயமாய் என் மீதிருந்தக் கோபத்தில், குழந்தையை வேண்டாமென முடிவெடுத்துவிட்டாள் என்பது புரிந்தது. என்னைக் கேட்காமல், அவள் எப்படி இப்படியொரு முடிவு எடுக்கலாம்? அந்த உரிமையை அவளுக்கு யார் கொடுத்தது? கல்மண் தெரியாதக் கோபம் அவள்மேல்.

 

‘ அது என் குழந்தை! வேண்டாமென முடிவு செய்ய இவள் யார்?’ என்ற கேள்வி எனக்குள் எழ, பதற்றமாய், போர்டிகோவில் நின்றிருந்த இன்னொரு மகிழுந்தைக் கிளப்ப முடிவெடுத்து பின் நிதானித்தேன். இப்போதிருக்கும் கோபத்தில், வாகனத்தை ஓட்டுகிறேன் என ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால்? என யோசித்து, காரோட்டியின் உதவியுடன், மருத்துவமனை நோக்கி பயணித்தேன்.

 

*****

 

மருத்துவமனையை நெருங்க, நெருங்க, எனக்குள் பயப்பந்துகள் உருண்டது. நான் செல்வதற்குள் ஏதாவது தவறாக நிகழ்ந்துவிடுமோ? என்ற பயம் எனக்குள் இனம்புரியா அவஸ்தையை நிகழ்த்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு யுகமாய் கடப்பது போல், எனக்குள் ஒரு பிரம்மை.

 

‘என்னிடம் இவள் முன்னமே சொல்லியிருக்கலாம்! பேருக்குத்தான் ஒரே வீட்டில் இருந்திருக்கிறோம். ஆனால் எதுவுமே தெரியாமல் விலகி இருந்திருக்கிறோம். இருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, அமைதியாய் இருந்திருக்கிறோம்.

 

 

 

இதற்காகத்தானே, அவளை நான் நடிக்க வேண்டாமெனச் சொன்னது!’ என எனக்குள் யோசனை ஓடிக் கொண்டிருக்கும் போதே, மருத்துவமனை வளாகத்திற்குள் கார் நுழைந்திருந்தது. வேறெங்கும் தேட வேண்டிய அவசியமின்றி, அவளின் வாகனம், அவள் இங்கே இருக்கிறாள், என்பதற்கு அடையாளமாய் நின்றிருந்தது.

 

 

“நீங்க கார் எடுத்துட்டு கிளம்பிடுங்க! நான் மேடம் கூட வந்துடுவேன்!” என ஓட்டுநரை அனுப்பிவிட்டு, வரவேற்பில் விசாரித்துவிட்டு அவசரமாய் உள்ளே நுழைந்தேன். மனம் பதைபதைத்தது. ஏதோ என் உயிரே போய்விடும் போல் பயமாக இருந்தது. இதுநாள் வரை நான் இப்படியெல்லாம் உணர்ந்ததே இல்லை. புதுப்புது உணர்வுகளை எனக்குள் விதைத்து பூச்சாண்டி காட்டுகிறாள் இந்த இராட்சசி. நானும், பூச்சாண்டியைப் பார்த்து மிரளும் குழந்தையாய் பயந்து மிரண்டு தான் நிற்கிறேன்.
பதற்றமும், பயமும் சூழ்ந்த முகத்துடன்,

 

 

“சம்யுக்தா?!”

 

என எதிரே வந்த செவிலிப் பெண்ணிடம், கேட்டேன்.

 

“கன்ஸல்டேஷனில் இருக்காங்க சார்! நீங்க போப்ய் பாருங்க!” எனச் செவிலிப் பெண் சொல்ல,

 

 

“அவங்க எதுக்காக வந்திருக்காங்க?” எனத் தயக்கமாய் கேட்டேன். அந்தப் பெண், என்னை சங்கடமாய் பார்த்தபடி,

 

“நார்மல் செக்-அப் தான் சார்!” எனச் சொன்ன பின் தான், எனக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. அவசரமாய் அந்த அறையை நோக்கி நான் விரைந்த அதே நேரம், கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள் சம்யுக்தா.

 

 

சிரித்துக் கொண்டே வெளியே வந்தவளின் முகம், என்னைப் பார்த்ததும், சட்டெனச் சுருங்கியது.

 

 

“இங்கே ஏன் வந்த விக்ரம்? ஏதாவது ஹாஸ்பிட்டல் சீன் ஷூட்டிங்ன்னு வந்திருப்ப!” நக்கலாய் சொல்லிவிட்டு என்னைத் தாண்டிச் சென்றாள். முதன்முறையாய் அவள் உடலில் தெரிந்த மாற்றங்கள் என் கண்ணில் பட்டது. கொஞ்சம் பூசினார் போல் அழகாக மாறியிருந்தாள் துளி ஒப்பனை இல்லாத முகம் பளபளப்பாய் மின்னியது. அவள் முட்டி வரை அணிந்திருந்த மஞ்சள் நிற உடையும், விரிந்திருந்த கூந்தலும், அவளுக்கு இன்னும் கொஞ்சம் அழகு சேர்த்தது. அவளை இரசித்துக் கொண்டு நான் நின்றிருக்க, அவள் வெளியே சென்றிருந்தாள்.

 

 

“சம்யூ! வெய்ட்!” என நான் சொல்ல, சொல்ல, வேகமாய் வெளியேறி வாகனத்தைக் கிளப்பியிருந்தாள்.

 

 

“சும்மா கோபப்படாதே சம்யூ! எனக்கும் தான் உன் மேல் கோபம் இருக்கு.!” எனச் சொன்னபடி, முன் இருக்கையில் ஏறி அமர்ந்தேன்.

 

 

“என் கூட வர்ரதா இருந்தால், நீ தான் ட்ரைவ் பண்ணனும்!” எனச் சொன்னவள், வாகனத்திலிருந்து இறங்கிக்கொள்ள, வேற வழி இல்லாமல், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து, நான் வாகனத்தைக் கிளப்பியதும் தான் உள்ளே ஏறி அமர்ந்தாள்.

 

 

“அப்படி என்ன கோபம் விக்ரம் உனக்கு? நான் நடிக்கிறேன்.. அது மட்டும் தான் உன் பிரச்சனையா? என்னைப் பேசவே விட மாட்டேங்குற! உனக்கு மரியாதைக் கொடுத்து, தலையாட்டி பொம்மை மாதிரி தலையாட்டிட்டே நிற்கணும் அப்படித்தானே? நான் பேசுறது, கேள்வி கேட்கிறது எதுவுமே உனக்குப் பிடிக்கலை தானே? என்னை ஏன் கல்யாணம் பண்ணின விக்ரம்? நான் தான் நம்ம ரிலேஷன்ஷிப் பிரேக் பண்ணிக்கலாம்ன்னு சொன்னேனே? உங்க வீட்டில் உன் பேச்சுக்கெல்லாம் தலையாட்டுற பெண்ணைத் தான் பார்த்து வச்சிருந்திருப்பாங்க.. அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிருக்க வேண்டியது தானே? என்னை ஆசைப்பட்டு தானே மேரேஜ் பண்ணிக்கிட்டே? அப்பறம் ஏன், என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறே? இந்தச் சமூகம் எவ்வளவு மாறிடுச்சு.. இன்னும் பொண்ணுங்களை சமமா நடத்த உன்னை மாதிரி ஆம்பிள்ளைங்களுக்கு மனசே வர மாட்டேங்குது.!”

 

 

அவள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேச, விறுவிறுவென உச்சந்தலைக்கு ஏறிக்கொண்டிருந்த கோபத்தை வெளிக்காட்டாது இருக்க அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தேன் நான்.

 

 

“என்ன விக்ரம்? பதிலே பேசமாட்ங்குறே? இப்போ கூட நீ ஏன் இங்கே வந்தேன்னு எனக்குத் தெரியும்! உன் குழந்தையை அபார்ட் பண்ணிடுவேனோன்னு பயந்து தானே வந்த? இப்போவெல்லாம் என்னைப் பற்றி உனக்கு கவலையே இல்லை விக்ரம்! நீ ரொம்பவும் மாறிட்டே! என்னோட மன்ந்த்லி டேட்ஸ், என்னை விட உனக்கு தான் நல்லா தெரியும். இந்த நாலு மாசமா, உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையே ஏன் டா? நாலு மாசமா, இன்னைக்கு கேட்டுட மாட்டியா? நாளைக்குக் கேட்டுட மாட்டியான்னு எவ்வளவு தவிச்சுருக்கேன் தெரியுமா? மேரேஜ் லைஃப்ங்கிறது கல்யாணமான ரெண்டே வாரத்தில் முடிஞ்சுடுச்சா விக்ரம்? இல்லை நான் உனக்கு சலிச்சுப் போய்ட்டேனா?” அவள் கேட்ட கேள்வியில் என் இதயப்பகுதியில் பூகம்பம் வெடித்தது.

 

 

“ம்ப்ச்! ஏன் இப்படியெல்லாம் பேசுற சம்யூ! இட்ஸ் ஹர்ட்டிங்! ஷூட்டிங் பிஸியில் மறந்துருப்பேன். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா பேசுறே?” வாய் தவறி வார்த்தைகள் வந்துவிடக் கூடாதென்பதற்காக நிதானமாகவே பேசினேன்.

 

“வேற எப்படி டா பேச? எனக்கும் வலிக்குது விக்ரம்! கல்யாணம்ன்னு ஒண்ணு பண்ணுற வரை, எல்லாமே உனக்கு ஞாபகம் இருந்துச்சு. இப்போ தான் நான் வொய்ஃப் ஆகிட்டேனே! நமக்குப் பிடிச்ச பொருள் நம்ம கையில் கிடைக்கிற வரை, நாம அதையே நினைச்சுட்டே இருப்போம். ஆனால் அது நமக்கு கிடைச்சுட்டா, கொஞ்ச நாளைக்குப் பிறகு அது சலிச்சுடும்! நானும் அப்படித்தானா விக்ரம்?!” நேராய் என் கண்ணைப் பார்த்து அவள் கேட்ட கேள்வியில், தடுமாறி, வாகனத்தை ஓரமாய் நிறுத்தியிருந்தேன் நான்.

 

 

“ஜஸ்ட் ஸ்டாப் இட் சம்யூ! போதும் நிறுத்து! என் பொறுமையை நீ ரொம்பவே சோதிக்கிற! இப்போ உனக்கு என்ன பதில் வேணும்? நான் வளர்ந்த சூழ்நிலை அப்படி! அம்மா வீட்டைப் பார்த்துப்பாங்க! அப்பா வேலைக்குப் போவாங்க! இப்படித்தான் என் வாழ்க்கையும் இருக்கணும்ன்னு நினைச்சேன். நீ கேட்கலாம், அப்போ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டே விக்ரம்ன்னு கேட்கலாம்.. உன்னைத் தான் எனக்குப் பிடிச்சிருந்தது. அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனால் உன்னை எனக்குப் பிடிச்ச மாதிரி மாத்தணும்ன்னு நினைச்சேன். அது என்னைப் பொருத்தவரை தப்பு ஒண்ணும் இல்லை.!” அதீத ஆணாதிக்க மனோபாவத்தோடு தான் பதில் சொன்னேன்.

 

 

“நான் மாறனும்ன்னு நீ நினைக்கிறது சரின்னா, எனக்குப் பிடிச்ச மாதிரி நீ மாறனும்ன்னு நான் நினைக்கக் கூடாதா விக்ரம்? எப்போவுமே நீ நினைச்சது மட்டும் தான் நடக்கணும் அப்படித்தானே? நீ என்ன ப்ரஷர் பண்ணாமல் இருந்திருந்தாலே, எல்லாம் தான்னால் நடந்திருக்கும். ஆனால், நீ எல்லாத்தையும் ரொம்பவும் காம்ப்ளிகேட் பண்ணிட்ட விக்ரம்!”

 

 

“இதோ! நீ இப்படி உனக்கு மட்டும் தான் பேசத் தெரியும்ங்கிற மாதிரி பேசுற பார்த்தியா, இது எனக்கு சுத்தமாய் பிடிக்கலை. எப்போ பார்த்தாலும் எதையாவது இரிடேட்டிங்கா சொல்லிட்டே இருக்க.? என்ன நினைச்சாலும், இனிமே நீ நடிக்க முடியாது. குழந்தைப் பிறக்கற வரை வீட்டில் இருந்து தான் ஆகணும். இப்போ என்ன செய்யப் போற?” என்னப் பேசுகிறேன் என்பதைக் கூட யோசிக்காமல் பேசியிருந்தேன்.

 

 

“உனக்கு என்னைப் பார்த்தால், இளக்காரமா இருக்கா விக்ரம்? நீ என்ன சொன்னாலும் நான் நடிக்கறதை விட மாட்டேன். இவ பொண்ணு தானே? இவளால் என்ன செஞ்சிட முடியும்ன்னு நினைச்சுடாதே! என்னால் முடியும். இனிமேல் என்னால் முடியாது. இதைப் பொறுத்துட்டு இருக்க முடியாது. நாம இந்த ரிலேஷன்ஷிப்பை ப்ரேக் பண்ணிக்கலாம். இனிமே இது தொடர்ந்தால் ரெண்டு பேருக்குமே கஷ்டம் தான். நீ கொஞ்சம் டாமினன்ட் பர்ஸன்னு தான் நினைச்சேன். ஆனால், நீ சைக்கோன்னு இப்போ தான் புரியுது.!” என அவள் சொல்ல, அவள் சைக்கோ எனச் சொன்ன வார்த்தையின் தாக்கத்தில்,

 

 

“என்னடி சொன்ன?” என அவளை அடிப்பதற்காய் கையை ஓங்கியிருந்தேன்.

 

“இப்போதான் சொன்னேன்.. உடனே சைக்கோன்னு நிரூபிக்கிறயே!” கண்களில் துளி பயமில்லாமல் சொன்னாள்.

 

 

“என்னடி! அடிக்க மாட்டேன்னு தைரியமா?” தெனாவட்டாய் கேட்டேன்.

 

“உன்னோட விரல் நுனி என் மேல் பட்டால் கூட, டொமஸ்ட்டிக் வைலன்ஸ்ன்னு நான் கேஸ் கொடுப்பேன். அப்பறம் உன் படத்துக்கான கதையை ஜெயிலுக்குள்ளே உட்கார்ந்து தான் ஸ்க்ரிப்ட் எழுதணும் புரிஞ்சுதா?” எனச் சொன்னவள், காரிலிருந்து விருட்டென இறங்கி, விறுவிறுவென நடக்கத் துவங்கியிருந்தாள்.

 

 

இதைத் துளியும் எதிர்பார்த்திராத நான், வாகன நெரிசலான அந்தச் சாலைப் பகுதியில், அவள் பின்னாலேயே ஓடினேன். அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் மனதிற்குள் திரும்ப திரும்ப எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

 

 

‘நான் சைக்கோவா? என்னைப் பார்த்து இவள் எப்படி இப்படி சொல்லலாம்? டொமஸ்ட்டிக் வைலன்ஸ்ன்னு பயம் காட்டுறா! நான் பயந்துடுவேன்னு இவளுக்கு நினைப்பு. நான் உன் பின்னால் வர்ரதால் தானே என் அருமை உனக்குத் தெரியலை.? இனிமே நான் உன் பின்னால் வர மாட்டேன் டி!’ என யோசித்தபடியே, அவள் பின்னாலேயே சென்றுக் கொண்டிருந்தேன். இவள் விஷயத்தில் மட்டும் நான் நினைப்பதும், செயல்படுத்துவதும், முற்றிலும் வேறுவேறாகத் தான் இருக்கிறது. அவள் எனக்கு முன்னால் வேகமாக நடந்துக் கொண்டிருக்க, அந்த சாலையின் வளைவில் அவளை கரம் பிடித்து இழுத்து நிறுத்தியிருந்தேன்.

 

 

“கையை விடு விக்ரம்! பப்ளிக் ப்ளேஸில் அசிங்கமா பிஹேவ் பண்ணாதே!” என் கரம் உதற முயன்றாள்.

 

 

“முதலில் நீ வா! நீபாட்டுக்கு எல்லாம் முடிஞ்சுதுன்னு கிளம்பி போய்ட்டே இருக்க..! அப்போ இதுக்கு என்ன பதில்?” அவள் வயிற்றை சுட்டிக் காட்டி கேட்டபடியே, அவளை அழைத்து வந்து மகிழுந்தில் அமர்த்தினேன்.

 

 

“இப்போ என்னை ஏன் மறுபடியும் இழுத்துட்டு வர்ர?” கோபமாய் முகம் சிவக்க வினவினாள்.

 

 

“உனக்கு நான் வேண்டாம்ன்னா, என்னால் வந்த குழந்தையும் வேண்டாம் தானே? பெத்துக் கொடுத்துட்டு, எங்கே வேணும்னாலும் போ! நான் உன்னைத் தடுக்க மாட்டேன்.!” கொஞ்சம் கூட, மனசாட்சியே இல்லாமல், குழந்தையைச் சுமந்துக் கொண்டிருப்பவளின் உணர்வுகளை உயிரோடுக் கொன்றேன் நான்.

 

 

“இரக்கமே இல்லாதவன் விக்ரம் நீ.! நீ மனுஷனே இல்லை!” கோபத்தில் அவள் வார்த்தைகள் தடுமாறியது. அவள் உணர்வுகளை முகத்தில் காட்டாமலிருக்கப் பாடுபடுவதைக் கண்ணாடியாகக் காட்டும் வண்ணம், அவள் முகம் செக்கச் செவேலென சிவந்தது.

 

 

“நான் வேணாம்ன்னு முடிவெடுத்த பின்னாடி, என்னால் வந்த குழந்தை மட்டும் எதுக்கு? பெத்துக் கொடுத்துட்டு போ!” அவளுக்கு வலிக்க வேண்டும் என்பதற்காகவே பேசினேன்.

 

 

“இந்தக் குழந்தைக்கு நானும் அம்மா தான் விக்ரம்.! மனித உடலில் இருக்கிற குரோமோசோம்கள் கூட, அம்மாகிட்டே இருந்து பாதியும், அப்பாக்கிட்டே இருந்து பாதியுமாகத்தான் குழந்தைக்குப் போகுது. அப்படி இருக்கும் போது, நீ கேட்டதும் குழந்தையைத் தூக்கிக் கொடுத்துட நான் ஒண்ணும் முட்டாள் இல்லை விக்ரம். நாலு மாசமா நான் கன்சீவா இருக்கேன்னு கூட தெரியாத உனக்கு, இப்போ மட்டும் என்ன அக்கறை? எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கலாம். என்னை இறக்கி விடு! நான் உன்னோட அந்த வீட்டுக்கு வர்ரதா இல்லை!” என அவள் சொன்னதில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சரியமோ இல்லை. அவள் பேசாமல் இருந்தால் தானே ஆச்சர்யம்.

 

 

“குழந்தையைப் பெத்துக் கொடுக்கிற வரை நீ என்னோட தான் இருக்கணும் சம்யூ! உன்னை விடுறதா எந்த ஐடியாவும் எனக்கு இல்லை.!” எனச் சொல்லிவிட்டு, வாகனத்தைக் கிளப்பி, நாங்கள் வசித்த வீட்டின் வாசலில் தான் நிறுத்தினேன்.

 

 

“ரெண்டு பேருக்கும் வேணாம் விக்ரம்! நான் அபார்ட் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்.!” வீட்டிற்குள் நுழைந்ததும், நுழையாததுமாக புதிய இடியை என் தலையில் இறக்கினாள் சம்யுக்தா.

 

 

“அப்படி எதாவது பண்ணினன்னு வை! உன்னைக் கொன்னுடுவேன் டி!” அவள் சொன்ன வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் என் கைமுஷ்டி இறுகியது.

 

 

“கொன்னுடு விக்ரம்! உன் வார்த்தைகளாலும், செயல்களாலும், கொஞ்சம் கொஞ்சமாய் கொல்றதுக்கு பதில் என்னை ஒரேடியா கொன்னுடு!” எனக் கோபமாய் அறையதிரக் கத்தியவள்,

 

 

“இப்போ என்ன உனக்கு உன் குழந்தையைப் பெத்துக் கொடுத்துட்டுப் போகணும்! அவ்வளவு தானே? பெத்துக் கொடுத்துட்டு போய்டுறேன் விக்ரம்! திரும்பவும் வரவே முடியாத தூரத்திற்குப் போய்டுறேன்..”

 

என தொண்டை அடைக்கப் பேசியவளின் கண்களில் ஒற்றைத் துளி நீர் தேங்கி நின்றது. கண்ணீர் துளி கண்களைக் கடந்துவிடாமல், வெகு பிராயத்தனப்பட்டு உள்ளிழுத்தாள் சம்யுக்தா. எனக்குத் தெரிந்தவரை சம்யூவின் கண்களில், கண்ணீரை நான் கண்டதில்லை. அவளுக்கு அழுவது பிடிக்காது. அவள் கண்ணீருக்கான அர்த்தம் அப்போது எனக்கு புரியவும் இல்லை. எப்படியும் குழந்தை பிறந்த பிறகு, அவள் குழந்தையை விட்டுப் போக மாட்டாள் என்ற எண்ணமே எனக்குள் விரவியிருந்தது.

 

 

ஆனால் அழுத்தக்காரி சொன்னபடியே செய்வாள் எனத் தெரிந்திருந்தால், அவளிடம் அப்படிக் கேளாமல் இருந்திருப்பேனோ? என்னவோ.?
எனக்குள் யோசித்தபடி நான் அமர்ந்திருக்க, திடீரென என் செவிக்குள் அந்தச் சத்தம் கேட்டது.

 

 

ஒருநொடி எங்கே இருக்கிறோம்? என்பது மறந்து போய், தூக்கத்திலிருந்து கண் விழிப்பவன் போல், மெத்திருக்கையிலிருந்து எழுந்தவன், அவசரமாய், பராபரப்பாய் தேடினேன். கடந்தகாலத்தில் சம்யுக்தாவோடு நின்றிருந்த என் மனம், நனவுக்கு வர மறுத்தது.

 

 

கண்ணெதிரே தெரியும் அறைக்குள் நுழையவே, நான்கைந்து பேரண்டங்களைத் தாண்டி வந்ததைப் போல் ஓருணர்வு எனக்குள். என் கண்கள் மீண்டும், மீண்டும், சம்யூவின் நினைவில் கலங்கியது. அதற்குள் என் செவிக்குள் கேட்ட அழுகைச் சத்தம் என்னை அவள் நினைவுகளிலிருந்து திசை திருப்பியது.

 

“சொன்னதைப் போலவே, செஞ்சுட்டியே டி! அழுத்தக்காரி! அழுத்தக்காரி! நான் கையில் கிடைச்ச பொக்கிஷத்தை கண்ணிருந்தும் தவற விட்டுட்டேன்!” என என்னிடம் நானே பேசியபடி, அந்தப் பெரிய மரத் தொட்டிலில் தூங்கி எழுந்து அழுதுக் கொண்டிருந்த எங்கள் குழந்தையை, சம்யுக்தா விட்டுப் போன, பேரன்பின் மிச்சத்தை கையில் ஏந்தினேன்.

 

“இதைத் தானே கேட்டாய்?”
அருவமாய் எங்கிருந்தோ சம்யுக்தா சிரிப்பதைப் போன்ற சத்தம் எனக்குள் கேட்டது. அதற்குள் நான் மார்போடு அணைத்துப் பிடிந்திருந்த என் குழந்தை தாய்ப்பாலுக்காய் என்னிடம் தேட, உயிரோடு செத்துப் போனேன் நான். ஒருவயது குழந்தையை என்னிடம் தந்துவிட்டு, ஒன்றுமில்லாமல் காற்றோடு காற்றாய்க் கரைந்து போய்விட்டாள் சம்யுக்தா.

 

 

அவள் உயிரோடு இருக்கையில் புரியாத ஒவ்வொன்றும், இந்த ஒருமாதத்தில் எனக்கு நன்றாகவே புரிந்திருந்தது. ஆனால் புரிந்துக் கொண்ட நேரம், பிரிந்து சென்ற அவள் திரும்பி வரப் போவதே இல்லை என்ற நிதர்சனம் என் நெஞ்சை நெருப்பாய் சுட, அவளோடு போய்ச் சேர்ந்துவிடலாம், என்ற எண்ணத்தைக் கொளுத்திவிட்டு, என் கையில் அவள் தந்துவிட்டுப் போன, எங்கள் மகவிற்காக நடமாடும், நடைபிணமாய் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறேன்.. என் சம்யூவின் நினைவுகளில்..!

 

முதலில்
நீ என்னை விரும்பினாய்..

பிறகு
நான் மட்டுமே

உன்னைத்
தனியாக விரும்பிக் கொண்டிருந்தேன்..!”

(யாத்திரியின் வரிகளிலிருந்து..)

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்