Loading

விமானத்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து படபடவென இருந்தது பவித்ராத்யாவிற்கு.

தமையனின் மீது பாசமிருந்தால், அவனிருக்கும் இடம் தெரிந்தும் இப்படி கடுகடுவென யாராவது இருப்பார்களா?

‘சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டால் கோபம் வரத் தானே செய்யும்!’
அவளது உள்மனம் அவனுக்காக பேசினாலும், ‘அதுக்காக அஞ்சு வருஷமாவா கோபமா இருக்க முடியும். நானும் தான் அத்தான் மேல கோபமா இருந்தேன். அப்பறம் புரிஞ்சுக்கிட்டு இருக்கல…’ எனத் தனக்குள் உழன்றவளுக்கு முதல் விமானப் பயணம் வேறு கிலி ஏற்படுத்தியது.

திலோத்தமாவிற்கு விவரம் தெரிவிக்க வேண்டும் என்ற யோசனை கூட வரவில்லை அவளுக்கு.

“அக்…” என ஆரம்பித்தவள், “சார்” என அழைக்க,

விழிகளை மட்டும் பக்கவாட்டில் திருப்பினான் அக்னி.

“அது… அத்தான் பாவம். என் அக்காவும் தான்… நீங்க நீங்க அவங்களை எதுவும் செஞ்சுட மாட்டீங்கள்ல!” தொண்டையில் சிக்கிக் கொண்ட துக்கத்துடன் கேட்டாள்.

அவளை தீப்பார்வை பார்த்தவன், பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டான்.

“என்னைப் பார்த்தா சொந்த அண்ணனைக் கொலை பண்ற ராட்சசன் மாதிரி இருக்கா உனக்கு?” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“இல்ல இல்ல… உங்க பாட்டி வேற அப்படி சொன்னாங்க அதான்…”

“அமைதியா வர்றதுன்னா வா. ஜன்னல் வழியா தள்ளி விட்டுடுவேன்” எனக் கடிந்ததில், வெளிறிய முகத்துடன் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள்.

அங்கிருந்து விழுந்தால், எலும்பு கூட தேறாது என்ற உண்மை உரைக்க, அதிகபட்ச உயரத்தினைக் கண்டு அடிவயிறும் கலங்கியதில் குடலைப் பிரட்டியது.

வாயை மூடிக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்தவளின் உடல்மொழியில் நிலையைப் புரிந்து கொண்டவன், விமானப்பணிப்பெண்ணிடம் அவளுக்கு ஓய்வறையைக் காட்டச் சொன்னான்.

வாந்தி எடுத்து முடித்து விட்டு மீண்டும் தன்னிருக்கைக்கு வந்தவள், இப்போது அக்னி வேந்தன் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

“குடிக்க ஏதாவது வேண்டுமா” எனக் கேட்ட பணிப்பெண்ணிடம் மறுப்பாகத் தலையசைத்து விட்டு, காலைக் குறுக்கி அமர்ந்தவளுக்கு, எப்போதடா இறங்குவோம் என்ற நிலை தான்.

ஒரு மணி நேரத்தில் விமானத்தை விட்டு இறங்கியதும் தான் அவளுக்கு நிம்மதியே பிறந்தது.

செக் அவுட் முடிந்து வெளியில் வந்தவன், அவளை நேராய் ஒரு உயர்தர உணவகத்திற்கு தான் அழைத்துச் சென்றான்.

அப்போதே நேரம் மதியத்தைக் கடந்திருந்தது.

முதலில் ஒரு எலுமிச்சை சாறை ஆர்டர் செய்தவன், அது வந்ததும் நேராய் அவளிடம் தள்ள, “எனக்கா?” என்றாள்.

“நீ தான வாந்தி எடுத்த?”

அவளுக்கும் அது தேவையாய் இருந்தது போலும். எடுத்துக் குடித்துக் கொண்டாள்.

பாதி கிளாஸை காலி செய்த பிறகே, ஆடவனின் நினைவு வர, “உங்களுக்கு?” என சம்பிரதாயமாகக் கேட்டாள்.

“தேங்க்ஸ்…” என அவளது கிளாஸை வாங்கி மீதி சாறை அவன் குடிக்கத் தொடங்க, அவளுக்கு அடிவயிற்றில் பலவித இடி முழக்கங்கள்!

‘இன்னொன்னு வாங்கி குடிக்க வேண்டியது தான…’ வாய்க்குள் முணுமுணுத்தபடி அமர்ந்திருக்க, அக்னி அடுத்ததாக மீல்ஸ் ஆர்டர் செய்தான்.

அதையும் அவள் புறம் தள்ளி வைக்க, “எனக்கு வேணாம்” என வேகமாய் மறுத்ததில், “உன் அக்காவை காப்பாத்த தெம்பு வேணாமா?” என அமர்த்தலாக கேட்டவனை முறைத்து வைத்தாள்.

“அவங்களை எதுவும் செய்ய மாட்டீங்க தான?” கண்கள் நீரை உருவாக்கியது.

அவனோ பதில் கூறாமல், விரல்களால் சாப்பாடைக் கை காட்ட, வேறு வழியின்றி கொஞ்சமாக உண்ட பிறகே, அவளுக்கு அரை மயக்கம் தெளிந்து சற்று தெளிவு பெற்றாள்.

பாதி உணவிற்கு பிறகு ஆடவனை நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க சாப்பிடலையா?” என வினவ, “ஆர் யூ டன்?” என எதிர்கேள்வி கேட்டான்.

“ம்ம்…” அவள் தலையை உருட்டியதில்,

இலையை அவன் பக்கம் திருப்பியவன், அதிலேயே இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு உண்ணத் தொடங்க, பேய் முழி முழித்தாள்.

‘இவரு என்ன… கஞ்சப் பிசுனாரியா இருப்பாரு போல!’ பவித்ராத்யா தலையைச் சொறிந்தாள்.

———-

கேபில் விக்ரமின் வீட்டிற்கும் வந்து விட்டனர்.

இன்னும் நடந்த விபத்தைப் பற்றி கூறாதது பவித்ராத்யாவிற்கு ஆற்றாமையைத் தந்தது.

விக்ரம் அவனை பார்க்க விரும்பவில்லை என்று கூறி விட்டால், தன்னை இவன் கொன்றே விடுவான் என்ற பயத்தில், கேபை விட்டு இறங்கியதுமே அக்னி வேந்தனை மறித்து நின்றாள்.

“வாட்?”

“வந்து வந்து… விக்ரம் அத்தான் உங்களை பார்க்கணும்னு சொல்லல” என உளறினாள்.

அக்னியின் முகம் கடுகடுத்துப் போக, “என் அக்கா தான் உங்ககிட்ட விவரம் சொல்ல சொன்னா… அது… அத்தானுக்கு கொஞ்ச நாள் முன்ன, ஒரு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு” என்றதில் அக்னியின் முகத்தில் அதிர்வு அப்பட்டமாய் தெரிந்தது.

“ஆக்சிடெண்ட்டா? இப்ப இப்போ எப்படி இருக்கான். எங்க இருக்கான்?” என்றவனின் பார்வை அந்த பழைய அடுக்குமாடி குடியிருப்பை அவசரமாய் ஆராய்ந்தது. அவன் விழிகள் சட்டென கலக்கமும் கொண்டது. தரையில் சாக்கடை தேங்கி ஆங்காங்கே அசூசையாய் காட்சியளித்தது.

இந்த மாதிரி இடத்திலெல்லாம் இருந்து விக்ரமிற்கு பழக்கமில்லையே!

“இல்ல இல்ல நீங்க பயப்படுற மாதிரி அத்தான் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல. இங்க வீட்ல தான் இருக்காரு” ஆடவனின் வதனம் தாங்கிய வேதனை நொடியில் அவளுக்குள் ஊடுருவிட, வேகமாய் அவனை நிதானப்படுத்தினாள்.

அந்த ஒரு கணமே, இவனால் விக்ரமிற்கு ஆபத்து நேராது என்ற நம்பிக்கையும் தானாய் பிறந்தது.

அவனோ நெருப்பாய் காய்ந்து கொண்டிருந்தான்.

“அறிவிருக்கா உனக்கு… வந்த அன்னைக்கே இதை சொல்ல வேண்டியது தான?”

“என் அக்கா தான் உங்க வீட்ல உங்களைத் தவிர வேற யார்கிட்டயும், எதையும் சொல்லக் கூடாதுன்னு சொன்னா அதான்…”

அவளது பேச்சில் சற்றே தணிந்தவன், “எந்த வீடு” எனக் கேட்டுக்கொண்டு நேராய் அங்கு சென்றான்.

இன்னும் தமையனின் கைகள் செயலிழந்திருப்பதை எப்படி உரைப்பது என்று அவளுக்கே தெரியவில்லை. விபத்து என்றதற்கே நடுங்கி விட்டானே!

————-

விக்ரமிற்கு காலையில் வந்த கனவின் தாக்கம் இன்னும் தீரவில்லை.

அப்போது தான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த அக்னிலா, தந்தைக்கு அருகில் கட்டிலில் அமர்ந்து மழலைக் குரலில் உரையாடிக் கொண்டிருக்க, இருவரையும் ரசித்தபடி திலோத்தமா துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் காலிங் பெல் சத்தம் கேட்டதில், விக்ரமிற்கு திடுக்கிட்டது.

“நான் யாருனு பார்த்துட்டு வரேன்…” என்று திலோத்தமா செல்ல, விக்ரமிற்கு வியர்த்து வழிந்தது.

“திலோ என் வீட்டு ஆளுங்க வந்தா கதவை இழுத்து மூடிடு” பதற்றமாக உரைத்தவனை விசித்திரமாய் ஏறிட்டவள், “என்ன உளறுறீங்க?” எனப் புருவம் சுருக்கியபடி வெளியில் சென்று கதவைத் திறந்தவள் சிலையாக சமைந்து விட்டாள்.

அங்கு அக்னி வேந்தனை நிச்சயமாய் அவள் எதிர்பார்க்கவில்லை.

திகைத்து நின்றவளை மேலிருந்து கீழ் வரை அழுத்தமாய் ஏறிட்ட அக்னி வேந்தன், “மிஸஸ் விக்ரம வேந்தன். ரைட்?” என அர்த்தமாய் பார்த்தான்.

கீழுதட்டை அழுந்தக் கடித்த திலோத்தமா பேச்சிழந்து நிற்க, “திலோ, யாரு?” என உள்ளிருந்து கத்தினான் விக்ரம்.

தமையனின் குரலைக் கேட்டு எத்தனை காலமாகி விட்டது.

முழுதாய் அவனுடனான ஐந்து வருடங்களை இழக்க வைத்து விட்டானே! நினைக்க நினைக்க அக்னி வேந்தனின் நெஞ்சம் ஆறவே இல்லை.

திலோத்தமா பதில் கூறாததில் விக்ரமிற்கு பயம் எழுந்தது.

“அப்பா நானும் போய் பாக்குறேன்” என்ற மகளைத் தடுத்து அமர வைத்திருந்தான்.

“வழி!” கண்ணாலேயே திலோத்தமாவை ஒதுக்கி நிற்க வைத்தவன், வீட்டினுள் நுழைந்து, அந்தச் சிறிய ஒரு படுக்கையறை கொண்ட வீட்டை அளந்தான்.

வீட்டில் அடிப்படைத் தேவையான பொருள்கள் மட்டும் இருந்தது. ஆங்காங்கே விளையாட்டுப் பொருள்களும் இருக்க, கண்ணைச் சுருக்கி திலோத்தமாவை ஏறிட்டான்.

அவளும் அதனைக் கவனித்து விட்டு, “பொண்ணு! நாலு வயசு ஆகுது…” என்றாள் தவிப்புடன்.

அறைக்கதவை வேறு அடைத்து விட்டுப் போய் விட்டாள். வெளியில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை விக்ரமிற்கு.

ஏதோ பேச்சு சத்தம் கேட்டதில், “திலோ இங்க வா!” என்று மீண்டும் அழைத்தான் விக்ரம்.

“விக்ரம் உள்ள தான் இருக்காரு…” திலோத்தமா கதவைத் திறந்து விட, அவசரமாக வாசல்புறம் துழாவிய விக்ரம வேந்தனின் கண்ணிற்கு அருமருந்தாய் கிடைத்தான் அவனது ஆருயிர் தம்பி!

ஆஜானுபாகுவாய், பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து நின்றவனின் தோற்றத்தில் விக்ரம் கண்ணிமைக்க மறந்து போனான்.

ஐந்து வருடத்தில் எத்தனை மாற்றம் அவனிடம்!

தன்னைக் கண்டதும் மின்னும் விழிகள், இன்று உணர்விழந்திருப்பதைக் காணவே விக்ரமின் மனதில் அத்தனை வேதனை.

“அகி…” ஆடவனின் விழிகள் கலங்கிப் போயிற்று.

“சொல்லுங்கப்பா! தண்ணி வேணுமா?” தன்னைத் தான் அழைப்பதாக எண்ணிக்கொண்ட அக்னிலா, தனது தாயைப் போல, அவனிடம் கேட்டாள்.

விக்ரம் மகளையும் தம்பியையும் மாறி மாறி பார்க்க, அக்னி வேந்தனும் அக்னிலாவை விழி விரித்துப் பார்த்தான்.

நெற்றியில் தழுவிய குட்டி குட்டி முடிகளை பிஞ்சி விரல்களால் பின்னால் தள்ளிக்கொண்டவள், விக்ரமிற்கு அருகில் இருந்த நீர் குவளையை எடுத்து, “அப்பா அகி தண்ணி குடுக்குறேன்!” என விக்ரமிற்கு புகட்ட முயன்று பாதியை அவன் சட்டையிலேயே கொட்டி விட்டாள்.

“அச்சோச்சோ” என வருத்தமும் பட்டுக்கொண்டாள்.

அவளது அக்கறை மிகுந்த நடவடிக்கையை தன்னை மீறி ரசித்திருந்த அக்னி வேந்தனுக்கு மற்றவர்கள் கண்ணிற்கே தெரியவில்லை.

திலோத்தமா தான் வேகமாய் உள்ளே வந்து, “என்ன அகி…” என ஆரம்பித்துப் பின் அக்னியைக் கண்டு திருதிருவென விழித்தவளாக, “எந்திரி நிலா. பாரு அப்பா மேல கொட்டி விட்டுட்ட…” என்று கடிந்தாள்.

“சாரிப்பா” உதட்டைப் பிதுக்கி அழத் தயாரான பிறகே, மகளைக் கவனித்த விக்ரம், “இட்ஸ் ஓகே டா… ஏன் திலோ திட்டுற! விடு…” என்று விட்டு மீண்டும் தம்பியைப் பார்த்தான்.

“ஆத்யா…” அடிக்குரலில் பவித்ராத்யாவை அழைத்ததில், அத்தனை நேரமும் ஹாலில் நின்று நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தவள் அடித்து பிடித்து உள்ளே வந்தாள்.

“பாப்பாவை வெளில கூட்டிட்டுப் போ!”

“என்னது?”

“செவிடு இல்லைல நீ…” என அவளிடம் காய்ந்ததில், அவசரமாக அக்னிலாவைத் தூக்கிக் கொண்டாள்.

‘இவள் எப்போ வந்தா?’ என்ற விக்ரமிற்கு எதுவோ விளங்கியது. அதில் பவித்ராத்யாவை அவன் முறைத்து வைக்க, ‘அண்ணனும் தம்பியும் என்னைப் பந்தாடுறாங்க…’ என்று புலம்பியபடி வெளியில் சென்றாள்.

“உனக்கு எப்படி தெரியும் நான் இங்க இருக்குறது?” விக்ரம் பலவீனமாக கேட்க, அறைக்கதவை காலால் எத்தி விட்டு அறைந்து சாத்தியவன், விக்ரமின் கன்னத்தில் பளாரென அறைந்தான்.

“அக்னி…” எனக் கத்திய திலோத்தமா, வேகமாய் விக்ரமின் கன்னத்தைத் தடவிக் கொடுத்ததில், அக்னி திமிராய் ஒற்றைப்புருவம் உயர்த்தினான்.

“விடு திலோ. அவன் கோபம் போற வரை அடிக்கட்டும்!” என விழியில் துளிர்த்த நீருடன் கூற, “எல்லாப் பிரச்சினைக்கும் காரணம் நான் தான் விக்ரம். அவன் அடிக்கணும்னா என்னை அடிக்கட்டும்…” எனத் தேம்பிட, விக்ரமின் மறுகன்னத்திலும் அறைந்தான் அக்னி.

“அக்னி ப்ளீஸ்டா!” திலோத்தமாவிற்கே வலித்தது போல கதறி விட்டாள்.

“இந்த அடி உன் பொண்டாட்டிக்கு! ஆக்சிடெண்ட் ஆனதைக் கூட சொல்லாம விட்டதுக்கு…” என்றான் தனது உணர்வுகளை மொத்தமாக அடக்கியபடி.

“சாரிடா!” விக்ரம் பொங்கிய அழுகையுடன் மன்னிப்பு வேண்ட,

அதனை ஏற்காமல் நின்றவன், திலோத்தமாவை ஏறிட்டு, “ஒரு மணி நேரம் டைம். திங்ஸ் எல்லாம் சீக்கிரம் பேக் பண்ற” என்றான் கட்டளையாக.

“எதுக்கு?” இருவருமே ஒன்றாக கேட்க,

“அது உங்க ரெண்டு பேருக்கும் தேவையில்லாத கேள்வி” என்றபடி வெளியில் செல்லப் போக, ஏதோ உணர்ந்து மீண்டும் திரும்பினான்.

“உன் கைல என்ன ஆச்சு?” என வினவினான் கூர்மையாய்.

குழந்தை நீரைக் கொட்டியபோதும், தான் அறைந்த போதும் கூட, கையை தூக்கவில்லையே அவன். உடம்பில் எங்கும் கட்டிடவில்லை என தீர ஆராய்ந்தபிறகு தானே அறையவும் செய்தான்!

திலோத்தமாவிடம் வேண்டாமென கெஞ்சலாகக் கண் காட்டிய விக்ரமின் வேதனையை உணர்ந்தவளுக்கு செய்வதறியா நிலை. எப்படியும் தெரியத் தானே போகிறது. இதையும் ஏன் முதலிலேயே சொல்லவில்லை எண்று விக்ரமைத் தான் அடிப்பான் என உணர்ந்து கொண்ட திலோத்தமா கண்களை இறுக்கி மூடித் திறந்து அக்னியிடம் விவரம் கூறினாள்.

விக்ரம் தலையைத் தரையில் புதைத்திட, அக்னி வேந்தன் உள்ளூர உடைந்தே விட்டான்.

ஆடவனின் அழுத்த விழிகளில் நீர் தேங்கியது.

எண்ணங்களோ சில வருடங்கள் முன் நிகழ்ந்த சிறு நினைவுகளில் புதைந்தது.

“உன் கோபத்தை கொஞ்சம் குறையேன் அக்னி! எத்தனை தடவை சொல்லிருக்கேன் காலேஜ்ல எதுக்கு எடுத்தாலும் சண்டை போடாதன்னு” விக்ரம் தம்பியைத் திட்டிக்கொண்டே காரை ஓட்டினான்.

“என் க்ளாஸ் பொண்ணுட்ட ஒருத்தன் மிஸ்பிஹேவ் பண்ணுனான் விக்ரா. எப்படி பார்த்துட்டு இருக்க சொல்ற, அவள் பொலிடீஷியன் பையனாம். அதுனால அவன் இஷ்டத்துக்கு தான் இருப்பானாம்… தெனாவெட்டா பேசுனான். அதான் அடிச்சேன். அவன் அப்பாவோட ஆளுங்க கையில அரிவாளோட காலேஜுக்கே வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கல…” இறுதி வரியை மட்டும் முணுமுணுப்பாய் உரைத்தான்.

அவனது இரு கையிலும் பெரிய கட்டிடப் பட்டிருந்தது. கையைத் துண்டாக்கி இருப்பார்கள். எப்படியோ அவர்களைத் தாக்கி பலத்த அடியுடன் அக்னி தப்பித்திருந்தான். போலீஸ் கேஸ் ஆகி, அந்த ஆள்களை ஜெயிலில் போட்டு விட்டார்கள்.

ஆனால், மூன்று மாதங்கள் வரை இரு கையையும் உபயோகிக்க இயலாமல் உடைந்திருந்தது.

அதனைப் பார்க்கவே விக்ரமிற்கு அத்தனை வேதனையாக இருந்தது. மருத்துவமனையிலேயே எத்தனை நாள்கள் தான் இருக்க இயலும்.

“என்னால இங்க இருக்க முடியல விக்ரா” என்ற தம்பியின் புலம்பலில் தானே அவனைப் பார்த்துக் கொள்வதாக வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

வரும் வழியில் தான், தம்பியை அதட்டியதும்.

“தயவு செஞ்சு இனி கோபம் வந்தா யாரையும் அடிக்காத அகி. உன் கோபம் அவங்க தப்பை உணரத் தான் வைக்கணும். மேலும் மேலும் வம்பை வளர்க்க கூடாது” என்று புரிய வைக்க, “ஓகே… இனி யாரையும் அடிக்கல” என உர்ரென கூறிய அக்னி, “ஆனா அடிச்சா தான் ஒரு சில தறுதலைங்களுக்கு புரியும்” என்றான்.

“அப்படி இல்ல… உன்னை நெருங்குனவங்க மட்டும் தான், நீ அடிச்சா உடைஞ்சு போவாங்க. உன்னை அதிகமா காயப்படுத்திட்டோம்னு புருஞ்சுப்பாங்க. ஆனா மத்தவங்க அந்த அடியால, உன்னை அதை விட அப்படி அதிகமா அடிக்கலாம்னு தான் யோசிப்பாங்க.”

“ம்ம்!” உதட்டைச் சுளித்துக் கொண்ட தம்பியை பெருமூச்சுடன் ஏறிட்டவன், வீட்டை அடைந்திட, அங்கு நிவேதாவும் சிவக்குமாரும் அவர்களுக்கு முன்னேயே வீட்டிற்கு வந்து அவனுக்குத் தேவையானதை செய்திருந்தனர்.

“இப்படி ஆகிடுச்சே என் பேரனுக்கு” என்று சவுந்தரவல்லி அழுது தீர்த்து விட்டார்.

ஆடவர்கள் இருவரும் அவரைச் சமன் செய்து விட்டே அறைக்குச் சென்றனர்.

அதன்பிறகு அந்த மூன்று மாதமும், தாயைக் கூட தம்பியின் அருகில் விடவில்லை விக்ரம்.

ஆண் நர்ஸ் வைத்துக் கொள்ளலாம் என அடம்பிடித்த அக்னியின் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை அவன்.

“விக்ராண்ணா ப்ளீஸ். எனக்கு ஆக்வர்டா இருக்கும்…” அக்னி தவித்து விட,

“என்கிட்ட என்னடா ஆக்வர்டு உனக்கு? இதே மாதிரி அரிவாளைத் தூக்கிட்டு என்னை வெட்டி இருந்தா, நீ முகத்தை சுளிச்சுட்டு போயிருப்பியா…” எனக் கேட்டவனிடம், “உன்னை சாவடிச்சுடுவேன்” என்று முறைத்து வைத்தான்.

“அப்பறம் என்ன? உன்னை இப்படி பாக்கும்போது நாங்க எல்லாரும் எவ்ளோ வேதனைப்படுறோம்னு பாக்குறீல… தயவு செஞ்சு இந்த வேதனையை எங்களுக்கு திருப்பிக் குடுத்துடாத அகி” என்றான் கண் கலங்கி.

“சாரிண்ணா!” அவனுக்கும் செய்த தவறு புரிந்தது. அவசரப்பட்டு அடிக்காமல், கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்திருக்கலாம்! அல்லது, அரிவாளுடன் சண்டை போடக் கற்று கொண்டிருக்க வேண்டும் என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்.

தமையனின் அரவணைப்பில் மெல்ல மெல்லத் தேறினான். ஆகினும், கழிவறைக்குச் செல்லக் கூட ஒருவரின் உதவியை நாடுவது என்பது எத்தனை கொடுமை என அப்போது தான் உணர்ந்து கொண்டான்.

“கையில்லாம இருக்குறவங்களுக்கு எவ்ளோ கஷ்டம்ல விக்ரா…” வேதனை படிந்த அக்னியின் முகம் கண்டு விக்ரமிற்கும் வருத்தம் படர்ந்தது.

“சரியாகிடும்டா!” அவன் தலையை மெல்லக் கோதி விட்டான்.

“நீ ஸ்டார்ட் பண்ற ஹோம்ல… ஃபிசிக்கலி சேலஞ்ச்ட் பீப்பிள்க்கும் ஒரு பிளேஸ் உருவாக்கலாம்ல” அக்னி ஆர்வமாகக் கேட்டான்.

“டேய், ஏற்கனவே பாட்டி நான் சொத்தை அழிக்கிறேன்னு என்னைக் கரிச்சுக் கொட்டிட்டு இருக்காங்க. முதல்ல நம்ம பிளான் பண்ணுனத கரெக்ட்டா பண்ணலாம். அதுல நமக்குன்னு ஒரு வருமானம் வந்த அப்பறம், நம்ம வருமானத்தை வச்சு, என்ன வேணாலும் செய்யலாம். சரியா?”

“அதுவும் கரெக்ட் தான். பட் பியூச்சர் பிளான்ல இதையும் நோட் பண்ணிக்கோ!”

“டன்…” என்று கண் சிமிட்டி விக்ரமின் புன்னகைத்த வதனமும், அவனது கம்பீர உருவமும் மனக்கண்ணில் தோன்றி அலைக்கழிக்க, அக்னியின் கன்னம் வழியே வழிந்தோடியது சில துளி கண்ணீர்.

போதை தெளியும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 50

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
41
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்