Loading

“நாளைக்குக் காலையில் ரெடியாக இரு. முடிஞ்சளவு பேக் பண்ணிக்கோ. அப்பா, அம்மா வீட்டுக்குப் போகனும். குழந்தைப் பிறக்குற வரைக்கும் அங்கே இருக்கலாம். நான் காலையில் உன்னைக் கொண்டு போய் விட்டுட்டு நான் ஆஃபீஸ் வேலையை முடிச்சுட்டுசா சாயந்தரம் அங்கே வந்துடறேன்”

 

ஆராவிடம் பதில் வராமல் போனாலும் பரவாயில்லை என்று, தான் கூற நினைத்ததைக் கூறி விட்டு அறைக்குச் சென்று உறங்கி விட்டான் அபூர்வன்.

 

ஆனால் உணவு மேசையில் இருந்த ஆராவிற்குக் கணவனின் திட்டம் விளங்கி விட்டிருந்தது.

 

தன்னைத் தனித்து விடாது அவனுடைய பெற்றோரிடம் விட்டு விட்டால், தான் காரிகாவுடன் செல்பேசியில் வேகு நேரம் உரையாட இயலாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டான் போல! மனைவியின் அறிவு மழுங்கி விட்டது என்று நினைத்து விட்டானோ! 

 

‘காரிகாவுடன் பேசவே கூடாது என்று உத்தரவிட்டும் கூடத் தொடர்ந்து அவளிடம் பேசிக் கொண்டு இருக்கும் என்னை அவ்வளவு எளிதாக எடை போட்டு விடாதே அபூர்வன்?

 

இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் உடன் இருப்பேன் என்ற வாக்கை அவளுக்கு நல்கி இருக்கிறேன்! அப்படி இருக்க அவளுடன் நான் பேசுவதை மட்டும் உன்னால் தடுக்க இயலுமோ?

 

அப்படித்தான் பேசிக்கொண்டு இருப்பேன்.

 

அதுவும் நீ

எத்தனை முறை கூறினாலும் இப்படித் தான் பேசிக் கொண்டே இருப்பேன்’இவ்வாறெல்லாம் ஆராவை யோசிக்க வைப்பது “ஈகோ”என்ற இரண்டெழுத்துச் சொல் தான்! 

 

காரிகாவுடன் பேசுவதில் தான் ஆராவிற்கு மனநிலை பாதிக்கப்படுகிறது என்பதால் தான் அதைச் செய்யாதே என்று கூறினான் அபூர்வன்.

 

ஆனால் நம்மில் பலருக்கோ செய்யாதே என்றால் அதை நிச்சயம் செய்து முடித்தப் பின்னர் தான் தூக்கமே வருமே?

 

ஆக ஆராவிற்கும் தற்போது அதே நிலை தான். 

 

அபூர்வன் கூறியதற்காகவே காரிகாவிடம் இன்னும், இன்னும் அதிகமாகச் செல்பேசியில் பேசத் தொடங்கினாள்.

 

சாப்பிட்டு முடித்து இத்தனை நேரம் அப்படியே இருப்பதைக் கண்டு எழுந்து சென்று கை கழுவி விட்டு அறைக்குச் சென்றாள் ஆரா.

 

தங்கள் அறையில் கட்டிலில் தன் அலுவலக வேலையில் மூழ்கி இருந்த அபூர்வன் மனைவியைப் பார்த்ததும் புன்னகைத்தான்.

 

இவளும் பதிலிற்குப் புன்னகைத்து விட்டுத் தன் செல்பேசியைத் தேடி எடுத்தாள்.

 

அவள் அதை எடுத்த நேரம் யாரோ அழைப்பது தெரிந்து பெயரைப் பார்த்தாள்.

 

அதற்குள் அபூர்வனின் கழுகுப் பார்வைத் தன்னை வட்டமிடுவது தெரிய, அவளோ தன் செல்பேசியில் தெரிந்த தோழியின் பெயரை அவனிடம் காண்பித்தாள்.

 

“காரிகா இல்ல. இவ என்னோட வேற ஃப்ரண்ட்! பேர் கனிஷ்கா”என்று அவனிடம் நக்கலாக கூறி விட்டு அழைப்பை ஏற்று,”ஹேய்! கனி சொல்லுடி”என்று அவளிடம் உற்சாகமான மனநிலையில் பேசினாள்.

 

“ஆரா! இது முக்கியமான விஷயம். உன் ஹஸ்பண்ட் பக்கத்தில் இல்லை தானே?” 

 

அந்தப் பக்கம் இருந்த கனிஷ்காவின் குரல் பதட்டத்தில் இருப்பது இவளது கருத்திற்குப் புலப்பட்டது.

 

“ஆமா”என்று கூறி மேற்கொண்டு அவளிடம் பேசாமல் அபூர்வனிடம் வந்து, 

 

“கனிஷ்கா கூடத் தானே பேசறேன்.நான் ஃப்ரீ ஆகப் பேசனும். ரூம்மை விட்டு வெளியே போறேன்”என அவனிடம் அனுமதி கேட்காமல் விஷயத்தை தெரிவித்து விட்டு வெளியே சென்றாள்.

 

இவளது நடவடிக்கையைக் கண்டுக் கடுப்பாக இருந்தாலும் இவளை விட்டுப் பிடிக்க எண்ணி ஒன்றும் கூறாமல் விட்டு விட்டான் அபூர்வன்.

 

“அவர் ரூமில் இருக்காரு. நான் வெளியே வந்துட்டேன். இப்போ சொல்லு. என்ன விஷயம்?”எனக் கனிஷ்காவிடம் இருந்து வெளிப்பட்டப் பதட்டம் இவளிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

 

“ஆரா ஒரு பிரச்சனை நடந்துருச்சு. அதனால் உனக்கு ரொம்பப் பெரிய சிக்கல் வரலாம்?”என்றதுமே,

 

இவள் திடீரென்று இவ்வாறு கூறுவதன் காரணம் என்ன என்பது புரியாமல் திகைத்தாள். 

 

“உன் ஹஸ்பண்ட் இன்னைக்கு நம்ம காலேஜூக்குப் போய் நம்ம ஹெச்.ஓ.டி கிட்ட காரிகாவைப் பத்தி விசாரிச்சு இருக்காரு”

 

ஆனால் அதைக் கேட்டதுமே அது தெரிந்த விடயம் தானே! இதில் அதிர்ச்சிக்கு இடமில்லை என்று தான் ஆராவின் எண்ணவோட்டமாக இருந்தது. 

 

இவளுக்கு ஏற்கனவே தன் கணவன் அடுத்து இதைத் தான் செய்வான் என்பது எப்போதோ தெரியும்!

 

அதனாலேயே அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருந்தாள்.

 

“ஆரா! இதைக் கேட்டதும் உனக்கே ஷாக் ஆகத் தானே இருக்கு? மிஸ்டர். அபூர்வன் அங்கே திடீர்னு வந்ததும் எனக்கு ஒன்னும் புரியல. ஆனா நம்ம ஹெச்.ஓ.டி எப்படியோ சமாளிச்சு அனுப்பிட்டாங்க. அங்க நான் ஸ்டாஃப் ஆக வொர்க் பண்றதும் நல்லதுக்குத் தான். இல்லைன்னா உன் ஹஸ்பண்ட்டுக்கு எல்லாமே தெரிஞ்சுஇருக்கும். அப்பறம் காரிகாவோட நிலைமையை விட உன் நிலைமை தான் ரொம்ப மோசமாகிடும்!”என்று தனது இன்னும் பதட்டம் இம்மியளவும் குறையாமல் பேசிக் கொண்டு இருந்தாள் கனிஷ்கா.

 

“ப்ச்.கனி! நீ முதல்ல இப்படி பதட்டப்படாதே! ரிலாக்ஸ் ஆக இரு! இனிமேல் அபூர்வனை நான் பார்த்துக்கிறேன்! நீ பதட்டம் ஆகாமல் இதுக்கு அப்பறமும் அபூர்வன் காலேஜூக்கு வர்றாரான்னுப் பாரு. மத்ததை நான் சமாளிச்சுக்கிறேன்”என அவளுக்குத் தைரியம் சொன்னவளோ, 

 

இதற்குப் பிறகு அபூர்வனின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள் ஆரா.

 

“அப்பறம் ஆரா”என்று தோழியை மென்மையாக அழைத்தாள் கனிஷ்கா.

 

“என்னடி?” 

 

“கங்கிராட்ஸ்! நீ கர்ப்பமாக ஆக இருக்கன்னு உன் ஹஸ்பண்ட் ஹெச்.ஓ.டி கிட்ட சொன்னாரு”என அவளுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டுக் காரிகாவிடமும், தான் பேசிக் கொள்வதாக கூறி விட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள் கனிஷ்கா.

 

அவளிடம் பேசி முடித்ததும் அறைக்கு வந்து தன் கணவனின் அருகில் வந்தாள் ஆரா.

 

“என்ன?”என்று அவளின் பார்வையின் காரணத்தை அறிந்து கொள்வதற்காகக் கேட்டான் அபூர்வன்.

 

“நீங்க நான் சொல்றதை சீரியஸாகவே எடுத்துக்க மாட்றீங்கன்னு கவலையாக இருக்கு அபூர்வன்”என உண்மையாகவே கவலை தோய்ந்த குரலில் தான் கூறினாள் ஆரா.

 

“நான் அப்படி என்னப் பண்ணேன்? நான் இப்போதெல்லாம் காரிகாவைப் பத்திக் கேட்கிறது இல்லையே?”என்று அவளிடம் குழப்பமாகக் கேட்டான் அபூர்வன்.

 

‘இவள் ஏன் தன்னைக் குற்றம் சாட்ட வேண்டும்? தாம் எழுங்காக இருப்பதாகத் தானே நடித்துக் கொண்டு இருக்கிறோம்? அதற்குள் என்னத் தெரிந்து கொண்டாள்?’என்று தன் மனதினுள் இருந்து வந்த கேள்விகளுடன் மனைவியைப் பார்க்க, 

 

“இன்னைக்கு நான் படிச்ச காலேஜூக்குப் போனீங்க போலவே அபூர்வன்?” 

 

அதில் சில கணங்கள் தனது முகத்தை அதிர்ச்சியாக வைத்துக் கொண்டவனோ நொடியில் அதை வெகு சாதாரணமாக மாற்றிக் கொண்டு, 

 

“ஆமாம். அதுக்கு என்ன இப்போ? மிஞ்சி, மிஞ்சிப் போனால் என்னை விட்டுப் போய்டுவேன்னு சொல்லுவ! அவ்ளோ தானே?”என்றவனுக்கோ உண்மையிலேயே சலிப்பு வந்து விட்டது.

 

இதையே கூறித் தன் மனதைக் காயப்படுத்தும் இவளிடம் தன் காயத்தைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொண்டான் அபூர்வன்.

 

“இல்லை. நாளைக்கு அத்தை, மாமாவைப் பார்க்கப் போய்ட்டு அங்கேயே இருக்கலாம். நான் இனிமேல் உங்களை விட்டு எப்பவும் போக மாட்டேன். ஆனால் காரிகாவைப் பத்தி விசாரிக்கிறதை மட்டும் விட்ருங்க. ப்ளீஸ்”எனப் பலவீனமாகப் பேசியவளைக் கனிவுடன் பார்த்து, 

 

“சரி. ஆனால் நீ காரிகாவோட கதையை எனக்குச் சொல்லனும். என்னோட மனைவி ஆரா என் கூடப் பழைய மாதிரி பேசனும். முக்கியமாக என்னை நீ அபூன்னுக் கூப்பிடனும். இதுக்குச் சம்மதம் சொல்லு. நானும் நீ சொல்றதுக்குச் சரின்னுச் சொல்றேன்”என்று இது நாள் வரையில், தான் ஏங்கித் தவித்த விடயங்களை அவளிடம் பட்டியலிட்டான் அபூர்வன். 

 

“கதை தானே? சொல்லிடலாம். அதை சொன்னதுக்குப் பிறகு என்கிட்ட அவ கூடப் பேசாதேன்னு சொல்லாதீங்க”என்று தன் கணவன் கூறியவற்றிற்கு எல்லாம் சரி என்று ஒப்புக் கொண்டாள் ஆரா.

 

“தாங்க்ஸ். இப்போ தான் நிம்மதியாகத் தூங்கப் போறேன். குட்நைட் ஆரா”எனக் கூறித் மடிக்கணினியை மூடி ஓரமாக வைத்து விட்டு உறங்கினான்.

 

அவனது நிம்மதியான உறக்கத்தைப் பார்த்து தானும் உறங்கிப் போனாள் ஆரா.

 

அடுத்த நாள் காலை வழக்கமான நேரத்தில் எழுந்து அருகில் உறங்கிக் கொண்டு இருந்த கணவனையும் எழுப்பி, 

 

“ஆஃபீஸூக்கு டைம் ஆச்சு. எழுந்திரிச்சுக் கிளம்புங்க”என்று அறிவுறுத்தியவளை அபூர்வனின் சொற்கள் தடுத்தது.

 

“இன்னைக்கு நான் ஆஃபீஸூக்குப் போகல ஆரா. இப்போ காலையிலேயே அப்பா, அம்மா வீட்டுக்குப் போகலாம். நீ ரெடியாகு. நானும் கிளம்பிட்டு வர்றேன்”என மொழிய,

 

அதுவும் சரியே என்று நானும் கிளம்பினாள்.

 

இருவரும் தங்கள் காரில் அபூர்வனின் பெற்றோரின் வீட்டிற்குச் சென்றனர்.

 

காரைப் பார்க் செய்து விட்டுத் தன் மனைவியுடன் வீட்டு வாசலில் வந்து நின்று கதவைத் தட்டினான் அபூர்வன்.

 

இரண்டு தடவை தட்டிய பிறகு,”யாரு?”என்றக் குரலுடன் கதவு திறக்கப்பட்டது.

 

இவர்களைப் பார்த்ததும் நீலவேணிக்குத் தலை,கால் புரியவில்லை.

 

“அபூர்வா, ஆரா! வாங்க, வாங்க! செல்லங்களா!”என்று மகனையும், மருமகளையும் அணைத்துக் கொண்டார். 

 

தனது கண்களில் இருந்து வழிந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டுக் கணவரை அழைத்தார்.

 

“என்னங்க ; நம்ம அபூர்வனும், ஆராவும் வந்துட்டாங்க. வாசலுக்கு வாங்க” 

 

அவர் அவ்வாறு கூறியதும் நாச்சிமுத்துவும் வேகமாக அங்கு வந்து, 

 

“அபூர்வா”என்று மகனை ஆரத் தழுவிக் கொண்டு விடுவித்து விட்டு, மருமகளையும் புன்னகையுடன்,” வா, ம்மா”என்று அழைத்தார்.

 

தனது கணவன் அவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே வீட்டினுள் நுழைந்த நீலவேணியோ ஐந்து நிமிடங்களில் ஆரத்திக் கரைத்து எடுத்து வந்து, 

 

“ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க” 

இருவருக்கும் முகம் கொள்ளாதப் புன்னகையுடன் ஆரத்தியைச் சுற்றினார்.

 

அதைச் சுற்றி முடித்ததும் நாச்சிமுத்து மற்றும் நீலவேணியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர் அபூர்வன் மற்றும் ஆரா.

 

“சந்தோஷமாக இருங்க. தீர்க்காயுசோட இருங்க. ஆராம்மா! தீர்க்கச் சுமங்கலியாக இரும்மா”என அவர்களை மனதார ஆசீர்வாதம் செய்தார்கள் நாச்சிமுத்து மற்றும் நீலவேணி. 

 

“இன்னும் ஏன் வெளியவே நின்னுட்டு இருக்கீங்க? உள்ளே போங்க”என வேலையாளிடம் ஆரத்தியை முச்சந்தியில் ஊற்றி விட்டு வரச் சொன்னார் நீலவேணி.

 

“லக்கேஜ் காரில் இருக்கு எடுத்துட்டு வந்துட்றோம்மா”என்றான் அபூர்வன்.

 

அவர்களது துணிமணிகள் அடங்கிய பை இன்னும் காரில் தான் இருக்கிறது. 

 

“நம்மக் கிருஷ்ணா எடுத்துட்டு வருவான். நீ உள்ளே வா”என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டு வேலையாளை அழைத்து அந்தப் பைகளை எடுத்து வருமாறு கூறி அனுப்பினார் நாச்சிமுத்து.

 

“இல்லை வேண்டாம்ப்பா. நாங்களே எடுத்துட்டு வந்துட்றோம். உங்களுக்காக வாங்கினது எல்லாம் அதில் தான் இருக்கு. அடுக்கி வச்சது ஒழுங்காக இருக்கான்னும் பார்க்கனும்ப்பா”என விளக்கிச் சொன்னதும் அதற்குத் தந்தையும் சரி என்று சொல்லி மகன் அனுப்பி வைத்தார்.

 

“வா ஆரா”என்று மனைவியையும் அழைத்துக் கொண்டுக் காரை நோக்கி நடந்து சென்றான் அபூர்வன்.

 

அவன் தன்னிடம் ஏதோ ரகசியமாகப் பேசத் தான் தனியாக அழைக்கிறான் என்பது ஆராவிற்குப் புரிந்தது.

 

“ஆரா! நீ என்னை விடப் புத்திசாலி! உன்னோட பகுத்தறிவின் அளவு சூப்பரோ, சூப்பர்! வாவ்!”என்றவனது பாராட்டில் கிண்டல் சுத்தமாக இல்லை அது உண்மையானப் பாராட்டுத் தான்!

 

ஆனால்,’இவன் ஏன் தன்னை இப்போது சம்பந்தம் இல்லாமல் பாராட்டுகிறான்?’என்று சிந்தித்தாள் ஆரா.

 

அதற்கு அவனே பதிலும் கூறினான்.

 

அதைக் கேட்ட ஆராவிற்குச் சர்வமும் நடுங்கிப் போய் விட்டதே!

 

“நீங்க சூப்பராக ஃப்ரண்ட்டுக்காகப் பார்த்துப், பார்த்துத் திட்டம் போட்டு அதைச் சரியான முறையில் செயல்படுத்திட்டு இருக்கீங்களே! அதை நினைச்சுத் தான் எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு மிசஸ். ஆராத்ரிகா அபூர்வன்”

 

                        – தொடரும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஏன் இந்த திருட்டுத்தனம்