
வெள்ளை புகை மூட்டமும், விடிந்தும் தன்னை வெளியே காட்டிக் கொள்ளாத சூரியனும் இருக்க, ஊட்டி குளிரை ரசித்த வண்ணம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மதுவர்ணிகா. அவளது கைகளை பற்றியபடி கடைக்குள் அழைத்துச் சென்றாள் சைத்ரா.
“கமான்யா வந்து வேடிக்கை பார்ப்போம்.” என்றவள் அவளுக்கென்று ஒதுக்கபட்ட கேபினுற்குள் அழைத்துச் செல்ல, இருவரும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். கணினியை உயிர்ப்பித்தவள் மெயில் ஒன்றை அனுப்பிக் கொண்டிருக்க, ஆர்வத்துடன் பார்த்தாள் மதுவர்ணிகா.
“சிஸ்டம் எப்படி யூஸ் பண்ணனும்னு நல்லாவே தெரியுமா?”
“டென்த் லீவ்லயே கத்துக்கிட்டேன் மச்சி.” என்றவள் முகப்புத்தகத்திற்கு செல்ல, அதை வியப்புடன் பார்த்தாள் மதுவர்ணிகா.
“இது பேஸ்புக் தானே. படத்துல பார்த்திருக்கேன். இதுல உனக்கு அக்கவுண்ட் இருக்கா?”
“எஸ் இருக்கு மச்சி. பரவாயில்லையே பேஸ்புக்னு தெரிஞ்சு வெச்சிருக்கியே. பெரிய ஆளு தான் போ.” என்று கேலியாக புன்னகைத்தவள், தனது போஸ்ட்டை பதிவிட, லைக்குகளும், கமெண்ட்களும் வரிசையாக வந்தது.
“இது என்ன லைனா அந்த பெல் சிம்பிள்ல ரெட் லைட் வருது?”
“இது நோட்டிபிகேசன் மது… நம்ம போஸ்ட் லைக் பண்ணுனா கமெண்ட் பண்ணா வரும்.” என்றவள் கமெண்ட்ஸ்களை பார்க்க தொடங்கினாள்.
“உனக்கு ஒரு பையன் மெசெஜ் போட்ருக்கான் பாருடி. நீயும் ரிப்ளை பண்ற? இதுல ஆபத்து இல்லையா?” மிரட்சி பார்வையுடன் கேட்கும் தோழியைக் கண்டு வாய்விட்டு சிரித்தாள் சைத்ரா.
“ஹே ரிலாக்ஸ் இதுல என்ன இருக்கு. அவன் தப்பா மெசெஜ் பண்ணா தான் நம்ம அலார்ட்டா இருக்கணும். மத்தபடி பிரண்ட்லியா பேசுறதுல என்ன வரப் போகுது மச்சி.”
“அந்த பையன் உனக்கு யாருனு தெரியுமா என்ன? இப்படி தெரியாத பையனோட பேசுறது பிரச்சனையில முடியாதா?”
“தெரியாது தான். என்னோட பிரெண்ட் லிஸ்ட்ல தானே இருக்கான். பாரு நல்லபடியா தான் பேசியிருக்கான். இவன் தப்பா பேசியிருந்தால், நம்ம இவனை பிளாக் பண்ணிடலாம். அந்த ஆப்சனும் இருக்கு.”
“என்னமோ சொல்ற போ சைத்து.” என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“ஹே மது… என்ன பாரு. பேஸ்புக்ல என் பேரண்ட்ஸ் கூட இருக்காங்க. என் ரிலேட்டிவ்ஸ் இருக்காங்க. எப்படி இருக்கணும்னு நமக்கு தெரியும்ல. நான் பாதுகாப்பா தான் இருக்கேன். நீ பயப்படாத மச்சி.” அவள் தாடையை கைகளில் ஏந்திக் கொண்டு சைத்ரா கூறிய நொடி தான் மதுவின் முகத்தில் தெளிவு பிறந்தது.
அதன்பின்னர் முகப்புத்தகத்தை பற்றி ஒவ்வொன்றாக எடுத்துரைக்க, மதுவுக்குமே அதில் ஈடுபாடு வந்திருந்தது.
“இந்த வீடியோ பாரு. செம காமெடில்ல…” என்று இருவரும் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினர்.
“சைத்து, ஆனால் இதுல ஏதோ இருக்குடி. டைம் போறதே தெரியல.” என்று ஆர்வமாக கூறியவளைக் கண்டு உற்சாகமாக தலையாட்டி ஆமோதித்தாள் சைத்ரா.
அந்த காலகட்டத்தில் முகப்புத்தகத்தின் மீதான மோகம் அதிகமாகவே காணப்பட்டது. சிலர் முகப்புத்தகத்திலேயே முழு நேரமும் செலவிட, சிலர் அதுவே கதியென கடந்த காலம் தான் அவை. பிரவுசிங் நேரம் முடிவடைந்ததால் லாக் அவுட் செய்துக் கொண்டிருந்தாள் சைத்ரா. மதுவிற்கோ அவ்வளவு தானா? என்று இருந்தது.
“மது, வா போகலாம்.” என்று சைத்து கூறவும் அமைதியாகவே இருந்தாள் மதுவர்ணிகா.
“என்னாச்சு போலாம் தானே?”
“சைத்து, இந்த பேஸ்புக் அக்கவுண்ட் எப்படி கிரீயட் பண்ணுவாங்க?”
“மெயில் ஐடி வெச்சு தான். ஏன் மச்சி?”
“இல்லை சும்மா தெரிஞ்சுக்க தான்.” என்று தயங்கியவளை பார்த்து புன்னகைத்தவள்,
“சரி மச்சி, வா போலாம். டைம் ஆச்சு.” என்று கூறி முன்னே சென்றாள் சைத்ரா. கணினியை பார்த்துக்கொண்டே அவள் பின்னால் வந்த மதுவர்ணிகாவோ, எதிரே வந்தவனின் மீது மோத, ஒரு நிமிடம் அதிர்ந்து கண்களை சுருக்கியபடி நிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் மோதியவனோ, “சாரி” என்று கூறியபடி தன் வேலையை பார்க்க சென்றிருக்க, மதுவிற்கோ கோபமாக வந்தது. நாங்க அப்பவே கோவக்காரி ஆக்கும் என்று சொல்லாமல் சொன்னது அவளின் குட்டி கோபம்.
“மூஞ்சி மேல இடிச்சுட்டு போறான் இடியட்.” என்று வாய்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள் பெண். அதற்குள் பணத்தை கட்டிவிட்டு வந்த சைத்ராவோ மதுவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
வெளியே வந்ததும் பக்கத்துக் கடையில் ஊட்டி சாக்லேட்டை வாங்கிய இருவரும் சுவைத்து உண்டபடியே நடந்து வந்தனர். இருவரும் முன்னோக்கி நடக்க, அதே இரண்டு பேர் இருவரையும் பின் தொடர்ந்து வர, இம்முறை சத்தம் கேட்டு திரும்பி பார்த்தது என்னவோ மது தான்.
அந்நேரம் யாரும் இல்லாது போக, திரும்பிக் கொண்டாள் மது. பின் இருவரும் வந்த காரில் ஏறிக் கொள்ள, அடுத்து ஊட்டி பூங்காவிற்கு சென்று இறங்கினார்கள்.
நுழைவு டிக்கெட் வாங்கியதும் உள்ளே சென்ற இருவருமே உற்சாகம் கொண்டனர். அதுவும் மது கண்களில் அத்தனை மகிழ்ச்சி தென்பட்டது. அனைத்தையும் வெகுவாக ரசித்தவளது பார்வை ஒரு இடத்தில் கவலையோடு தேங்கி நின்றது.
“மச்சி என்னாச்சு?” என்று சைத்து உலுக்கவும், அவளை பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்தாள் மது.
“ஒன்னுமில்லை மது. வா அங்க போகலாம்.” என்றவள் செல்ல அப்போது தான் கவனித்தாள் சைத்ரா.
அங்கு தன் குழந்தைகளோடு வந்த பெற்றவர்களை கண்டு தான் ஏக்கம் அடைந்திருக்கிறாள் என்று. அவளுக்கும் சிறு வயதிலிருந்தே ஆசை தான். தன் பெற்றோர்களுடன் ஒன்றாக வெளியே செல்ல வேண்டும் என்று. இதுவரை அவ்வாறு நடக்காத காரணத்தினால் ஏங்கிப் போனாள் மதுவர்ணிகா.
அதை புரிந்துக் கொண்ட சைத்ராவோ, தன் தோழியின் அருகே வந்து அவளுடன் தனது பள்ளிக்கால சேட்டைகளை பேசி அவளை புன்னகை கொள்ள வைத்தாள்.
“மேடம், ஆறாவதுலயே அப்படி?”
“பின்ன இல்லாமலேயா? ஆறாவது படிக்குற குழந்தையான எனக்கு என்னென்னு கூட தெரியாது. என்கிட்ட வந்து லவ் சொல்றான் அந்த தீச்சட்டி மண்டை பார்கவ்.”
“பட்ட பேரு அல்டிமேட் சைத்து… அவனோட பேரு பார்த்தியா? பார் கவ்…ஹெட்மாஸ்டர் கிட்ட சொன்னதும் அவன் அழுதானு சொன்ன பார்த்தியா ஹைலைட்” என்று வாய்விட்டு மது சிரிக்க, அவளுடன் சேர்ந்து சிரித்தபடி திரும்பிய சைத்ராவின் கண்கள் நொடியில் விரிந்தது.
சைத்ரா அமைதியாக நிற்பதை கண்ட, மதுவும் அவளை உலுக்கியபடி எதேச்சையாக முன்னே பார்த்தாள். அவள் முன் இருவர் நிற்க, அவளோ யோசனையுடன் பார்த்தாள்.
‘இவங்களை எங்கயோ பார்த்தனே?’ என்று யோசித்தவளுக்கு பிரவுசிங் சென்டரில் பார்த்த நினைவு வர, தன் தோழியிடம் கூற வரும் முன் அவளே பேசினாள்.
“பார்கவ்.” என்றவளின் பேச்சில் திகைத்தவள்,
“நீ சொன்ன தீச்சட்டி மண்டையா?” என்றவள் வாயை பிளந்தபடி கேட்க, பார்கவ்வின் முகம் மாறியது என்றால்,
சைத்ராவோ, “ரொம்ப முக்கியம். கொஞ்சம் அமைதியா இரு.” என்று முணுமுணுத்தாள்.
“ஹாய் சைத்ரா. எப்படி இருக்க? வேற ஸ்கூல் போயிட்ட… ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் பார்க்கிறோம். நீதானானு ஒரு டவுட். பிரவுசிங் சென்டர்லயே உன்னை பார்த்தேன்.” என்றவன் படபடவென பேச, அவளோ ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொண்டாள்.
“மது, நம்ம கிளம்பலாம். பாய் பார்கவ்.” என்று அவனை அத்துடனே நிறுத்தி வைத்தவள் மதுவர்ணிகாவை அழைத்தபடி விடுதி வந்து சேர்ந்தாள்.
விடுதி வந்தும் பார்கவ்வை பற்றி பேசாது இருந்த மதுவை மேலும் பிடித்தது சைத்ராவிற்கு. தனக்கு ஒரு நல்ல தோழி கிடைத்து விட்டதாகவே உணர்ந்தாள் சைத்ரா.
இப்படியே நாட்கள் நகர, ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்த இருவரும், வெளியே சுற்றி பார்த்தும் உறவினர் வீட்டில் நல்ல உணவுகளை உண்டும் மகிழ்ந்தனர். அங்கு உறவினர் வீட்டிலிருந்த கணினியை பார்த்துக் கொண்டே இருந்தாள் மது.
“என்ன மது கேம் விளையாடுறியா? நான் வேணா அங்கிள் கிட்ட பர்மிஷன் வாங்கி தரேன்.”
“அது இல்லை சைத்து. எனக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஓபன் பண்ணி தரியா?” ஆவலோடு கேட்பவளுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் அக்கவுண்ட் தொடங்கி கொடுத்தாள் சைத்ரா.
“பாஸ்வேர்ட் மறந்திடாத. யாருக்கும் சொல்லாத. பார்த்து யூஸ் பண்ணனும் சரியா.” என்று பொறுப்பாக அவள் கூற, சரியென தலையசைத்தாள் மதுவர்ணிகா. அதன் பின்னர் தேர்வுகள் என்று நாட்கள் கழிய, பதினொன்றாம் வகுப்பை வெற்றிகரமாக முடித்திருந்தனர் இருவரும்.
கோடை விடுமுறையில் மது கோயமுத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருக்க, அவளது பிறந்த நாளும் அதே மாதத்தில் வந்திருந்தது. உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடக்க, பிறந்தநாள் பரிசாக கைப்பேசி ஒன்றை பரிசளித்திருந்தார் தாமோதரன்.
அதைக் கண்டதும் வாயை பிளந்தாள் மது. “தாங்க் யூ அப்பா.” என்று தன் தந்தையை தாவி அணைத்திருந்தாள். கைப்பேசியில் முதலில் அவள் உரையாடியதே தன் தோழி சைத்ராவிடம் தான்.
“சைத்து, அப்பாவோட கிப்ட் இந்த போன். இதுலயே பேஸ்புக் எல்லாம் இருக்கு. அப்புறம் வாட்ஸ்அப்னு எதுவோ புது அப்ளிகேஷன்ஸ் இருக்குடி.”
“வாவ்! சூப்பர் மது. நான் கசின் வீட்டுல இருக்கேன். கசினோட பர்த்டே.”
“வாவ்! அவங்களுக்கும் இன்னைக்கு தான் பர்த்டேவா? ஆமா அந்த பொண்ணு பேர் என்ன?”
“ஹாஹா பொண்ணு இல்லை பையன் ரகு. ஓகே மச்சி என்னை கூப்பிடுறாங்க நான் வைக்கிறேன்.” என்றவள் போனை வைத்திருக்க, மதுவும் அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் காணப்பட்டாள்.
விடுமுறை முடிந்து அவள் விடுதிக்கு வந்து விட, சைத்ராவும் வந்திருந்தாள். மது அவளது கதைகளை கூற, சைத்ராவும் அவள் வீட்டு கதைகளை அடுக்கத் தொடங்கினாள்.
“மது…மது உனக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கேன்.” என்றவள் வெளிநாட்டு இனிப்புகளை அவளுக்கு கொடுக்க, மகிழ்ச்சியுடன் வாங்கினாள் மதுவர்ணிகா.
“எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சாக்லெட்ஸ்.”
“என்ஜாய் பண்ணு. ரகு சொன்னேன்ல அவங்க டாடி வாங்கி தந்தது. அப்புறம் இந்த பென் ரகு தந்தது.” என்று ரகுவின் பெருமைகளை அளக்கத் தொடங்கி விட்டாள் பெண்.
“போதும் சாமி. இப்படி ரகு புராணம் பாடினா நானே அவனோட ஃபேன் ஆகிடுவேன்.” என்று கேலியாக கூறினாள் மது.
“ஏய், செம… அவனும் இதே தான் சொன்னான். நான் அவன்கிட்ட உன்ன பத்தி சொல்வேன். இதே மாடுலேசன்ல அவனும் சொன்னான். பர்த்டே மட்டும் இல்லை கேரக்டர் கூட சேம் தான் போல.” என்று சைத்ரா கூறியதுமே வியப்பாக தோன்றியது மதுவிற்கு.
“அப்புறம் மது அவன் நம்மளை விட ஆறு வயசு பெரியவன் அண்ணானு சொல்லு.” என்று எச்சரிக்கை விடும்படி அவள் சொல்ல,
“எது…?” என்று இவள் அதிர்ந்தாலும், “அது எல்லாம் சொல்ல முடியாது. நான் நம்மளை விட சின்ன பையன்ல நினைச்சேன். பரவாயில்லை போனா போகட்டும் பேர் சொல்லி கூப்பிடுறேன்.” என்றவள் புன்னகையோடு கூறினாலும், சைத்ரா ரகுவை பற்றி கூறியதிலிருந்தே ஏனோ முகம் பார்க்காத அவன் மீது அவளுக்கே தெரியாத உணர்வு துளிர்க்கத் தொடங்கியிருந்தது.
நாட்கள் அதன் போக்கில் செல்ல பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை முடித்து இருவரும் பிரிந்து செல்லும் தருணமும் வந்திருந்தது. கடைசி தேர்வை முன்னரே எழுதி விட்டு வந்திருந்த சைத்ரா தன் தோழிக்காக வெகு நேரம் காத்திருந்தாள்.
மதுவர்ணிகாவும் தேர்வை முடித்தபடி வெளியே வந்தவள், நாலாபுறமும் தன் தோழியை தேடினாள். சைத்ராவின் பெற்றோர்கள் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.
“சைத்து, வா கிளம்பலாம். எவ்வளவு நேரம் இங்கயே நிற்ப?”
“மம்மி, மது வருவா. ஒரு ஃபை மினிட்ஸ்.” என்று நேரம் ஒதுக்கி காத்திருக்க, அவர்கள் வந்த காரிலிருந்து இறங்கியபடி வெளியே வந்தான் ரகு.
“அத்தை, வாங்க நம்ம அதுக்குள்ள ஒரு காபி குடிப்போம்.” என்று சைத்ராவை பார்த்து புன்னகைத்தபடி இருவரையும் தன்னோடு அழைத்துச் சென்றான் ரகு. சைத்ராவும், “தாங்க்ஸ்டா” என்று கண் சிமிட்டினாள்.
அவர்கள் சென்றதும் சைத்ராவை தேடி மது வர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததுமே ஓடி வந்து அணைத்துக் கொண்டனர்.
“எங்க உன்னை பார்க்காமலே போயிடுவேனோனு பயந்துட்டேன்.” என்று மது கூற, சைத்ராவும், “அது எப்படி முடியும்?” என்று புன்னகைத்தாள்.
“இதுவரை நான் சொன்னதே இல்லை சைத்து. நீ மட்டும் எனக்கு இங்க கிடைக்காமல் போயிருந்தால் எனக்கு இந்த இடம் நரகமா மாறியிருக்கும். லவ் யூ லாட்ஸ் சைத்து.” என்று கூறும் போதே அவளது கண்கள் கலங்கியது.
“ஏய் மச்சி, என்ன இது குழந்தை மாதிரி அழுற. உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு உன்னை பிரிஞ்சு போற பீலிங்கே இல்லை. எப்படியும் நீ என்னோட இருப்பேனு தோணிட்டே இருக்கு. சப்போஸ் காலேஜ் ஒன்னா படிக்காட்டியும் கூட நம்ம பிரண்ட்ஷிப் லைஃப்லாங் தொடரணும் சரியா.” என்றவள் கூறவும், “கண்டிப்பா.” என்று வேகமாக தலையாட்டினாள் சைத்ரா.
“மம்மி, டாடி அப்புறம் ரகு வந்திருக்காங்க. வா அறிமுகப்படுத்துறேன்.” என்றவள் அவளை அழைத்துச் செல்லப் பார்க்க, மதுவின் பெற்றோர்கள் வந்திருந்தனர்.
“வருணி.” என்றவர்கள் காரில் இருந்தபடியே அவளை கூப்பிட,
“சாரி சைத்து. மாம் லேட்டாச்சு சொல்றாங்க நான் வரேன்.” என்றவள் முன்னோக்கி நகர்ந்தாலும் அவள் பார்வை சைத்ராவின் மீதே இருந்தது.
பாதி தூரம் வரை சென்றவள் மீண்டும் அவளை நோக்கி ஓடிவர, தன் தோழியை இறுக அணைத்துக் கொண்டாள் மதுவர்ணிகா.
“டேக் கேர் பேபி. மிஸ் யூ.” என்று அழுதபடி அவள் விடைபெற இருவரது நட்பையும் தூரத்திலிருந்து பார்த்த ரகுவின் இதழ்கள் ரசனையுடன் விரிந்தது.
குழந்தை போல் உதடுகளை பிதுக்கி, தன் நேசத்தை உயிரினும் மேலான தோழியிடம் அவள் காட்டியது அவனை ரசிக்க தான் செய்தது. அந்த ரசனை காதலாக மாறும் நாளும் வெகு விரைவிலேயே வரவிருந்ததை அவனும் அறியவில்லை. அவளும் அறியவில்லை.

