
அன்னபூரணி எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டாள் இன்னும் இரண்டு மாதங்கள் தான்… பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் கேட்கும் நிலையில் அவன் இல்லை. உயிர் பற்றிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவனிடமிருந்து விலகி கொண்டிருந்தது. அன்னபூரணி ஒரு ஆறுமாதம் உனக்கு நேரம் சரியில்லை என்று சொன்னதிலிருந்து சற்று தன்னை அடக்கி வாசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனது இயல்பான குணம் அவன் பயத்தை அடக்கி விட்டது. பெண் தன் கையை மீறி விடுமோ என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாய். போதாத குறைக்கு சங்கரன் இருந்தபொழுது வேண்டுமென்றே உமா அந்த பொடிப்பயலை வைத்துக் கொண்டு தனக்கு ஆட்டம் காட்டி விட்டதாகவே குரு நம்பினான்.
சங்கரன் திருச்சியில் தங்கியிருந்த பொழுது அவனது வாட்டசாட்டமான உருவ அமைப்பும் நேர்கொண்ட பார்வையும் குருவுக்கு ஒருவித பயத்தை உண்டு பண்ணி இருந்ததால் சிவன் வீட்டில் பக்கமே அவன் செல்லவில்லை. 3மாதம் உண்மையில் உமா நிம்மதியாக உணர்ந்தாள். சங்கரனுக்கும்
உமாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கக்கூடும் என்று கூட குருவுக்கு ஒரு சந்தேகம் உண்டு. ஒருவழியாக சங்கரன் கல்யாணம் செய்துகொண்டு சென்றுவிட்டான்.
சிவன் அடுத்த நாள் காலையில் வேலைக்கு வந்த உடன் முதல் காரியமாக அவரை தன் அறைக்குள் அழைத்துச் சென்ற குரு, ‘உம்ம பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்’? என்றுதான் கேட்டான். இதை சற்றும் சிவன் எதிர்பார்க்கவில்லை.
ஒரு வழியாக எச்சிலைக் கூட்டிக்கொண்டு “இன்னும் இரண்டு மாதங்கள் மீதம் இருக்கிறது தம்பி” என்றார் சிவன். அந்த பதிலைக் கேட்ட குருவின் கண்கள் ரத்தம் என சிவந்துவிட்டது. அன்னபூரணி அருணாச்சலம் இந்த திருமணத்திற்கு இன்னும் மாதங்கள் இருக்கிறது என்கிறார்கள். வருங்கால மாப்பிள்ளையிடம் பேசுகிறோம் என்ற மரியாதையும் இல்லாமல் சிவனும் இதுபோன்ற ஒரு பதிலையே சொல்லுகிறான். இந்த குருவை இவர்கள் எல்லாம் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனுள் ஆத்திரம் பொங்கியது.
சட்டென்று, ஊர் கூட்டி செய்த கல்யாணத்த பத்தி பேசல சிவன், அதுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. உமாவை கூட்டிக்கிட்டு வந்து இங்கு வைங்க. முதல்ல குடும்பம் நடத்தி பார்க்கிறேன். அப்புறம் உங்க இஷ்டத்துக்கு கல்யாணத்த வச்சிக்கலாம் என்று ஒரு பெரிய குண்டை இறக்க சிவனின் கண்கள் முதன்முறையாக கலங்கியது. எப்பேர்பட்ட ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கும் முடிவெடுத்து விட்டோம். ஆழம் தெரியாமல் பாழும் கிணற்றில் தன் மகளை இறக்கிவிட்டு விட்டேனே என்று மருகினார். அவரிடமிருந்து பதில் வராமல் போகவே ஒரு கோணம் சிரிப்புடன், இதுல யோசிக்க ஒன்னும் இல்ல சிவன். ஒன்னு உங்களுக்கு வசதின்னா கல்யாணத்தை சீக்கிரம் வையுங்க. இல்ல ஏன் வசதிக்கு அவள் இங்கே கொண்டு வந்து விடுங்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னவனை என்ன செய்வது என்று சிவனுக்கு புரியவில்லை. எந்த பதிலுமே சொல்லமுடியாமல் தலை கவிழ்ந்து கொண்டு கூடத்திற்கு வந்தவரை அன்னபூரணி தான் எதிர்கொண்டாள்.
குரு சொன்னதை அப்படியே சொன்ன சிவனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. இதற்கு மேல் அவன் சொல்வதை கேட்க மாட்டான் என்று புரிந்து அன்னபூரணியும் கல்யாணத்திற்கு சீக்கிரம் ஏற்பாடு பண்ணிடலாம் சிவன் என்று விட்டாள். இந்த குடும்பத்திற்குள் வரப்போகும் பெண் மரியாதையாக நுழைய வேண்டும் என்பது நிச்சயம். குரு பொறுமை இல்லாதவன், ஆத்திரக்காரனும் கூட. யாரும் திருமணத்திற்கு இப்போது ஒப்புக்கொள்ளவில்லை என்று அவளை கடத்தி சென்று விட்டால் பெரிய ஆபத்து என்று யோசித்தவள் குடும்ப ஜோசியரை நாள் கொடுத்த தருமாறு கேட்டுக் கொண்டு சென்றாள்.
ஜோசியரோ இன்னும் 20 நாட்களில் முகூர்த்தம் உள்ளது என்று நாள் குறித்து கொடுக்க அன்னபூரணி நேரே குருவிடம் சென்று “இன்னும் கல்யாணத்திற்கு 20 நாட்கள் தான். அது வரை வேறு எதையும் யோசிக்காதே “என்று எச்சரித்து விட்டுச் சென்றாள்.
திருமணத்திற்காக திருச்சியில் பெரிய துணிக்கடையில் துணிகளும் முகூர்த்த பட்டும், நகைக்கடையில் நூறு சவரனுக்கு பெண்ணிற்கு நகைகளும் தாலிக்கொடியும் அருணாச்சலமும் அன்னபூரணியும் சென்று வாங்கினார்கள்.
அவர்களுடன் சென்ற சிவனுக்கும் அவர் மனைவிக்கும் இவர்கள் வாங்கும் வேகத்தைப் பார்த்து தலை சுற்றல் தான். பாறுக்குட்டி தன் மகள் பெரிய இடத்தில் கல்யாணம் ஆகி செல்ல போகிறாள் என்பதை நினைத்து ஆனந்தப் பட்டதுண்டு. இப்பொழுது தன் எண்ணம் சரிதான் என்று அவளுக்கு தோன்றியது.
என்னவானாலும் இந்த திருமணத்தை அன்னபூரணியும் அருணாசலமும் தோற்க விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவளுக்குள் வந்துவிட்டது. தனது அன்பினாலும்,நேசத்தினாலும் குருவை தன் மகள் தன் வழியில் மாற்றிக்கொண்டால் அவள் வாழ்க்கை சந்தோஷமாக அமையும் என்று நினைத்துக் கொண்டாள் அந்த தாய்.
ஆனால் என்றாவது புலிதான் மேல் தோலில் உள்ள வரிகளை மாற்றி கொள்ளுமா, இல்லை பாம்பால் தான் தன் விஷத்தை விட்டுவிட முடியுமா?
குரு மோகத்துடனும் உமா பயத்துடனும் எதிர்பார்த்திருந்த அந்த திருமண நாளும் விடிந்தது. திருச்சியிலேயே பெரிய கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு ஆகி இருந்தது அவர்களது திருமணம். சென்னையிலிருந்து கட்சித் தலைமை முதற்கொண்டு அடிமட்ட தொண்டன் வரை குருவின் திருமண நிகழ்வில் பங்கேற்றார்கள். இதை தனது அரசியல் செல்வாக்கிற்கு ஒரு பெரிய வாயிலாக அமைத்துக்கொண்டார் அருணாச்சலம். கட்சித் தலைமையே அவரது மகன் திருமணத்திற்கு வர சுற்று வட்டாரத்தில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட திருமண நிகழ்வில் பங்கேற்றார்கள். கூட்டம் அலைமோத எல்லோருக்கும் உணவு பந்தி பந்தியாக பரிமாறப்பட்ட கொண்டே இருந்தது.
வடக்கத்திய முறைப்படி முதல்நாள் மெஹந்தி, ஹால்தி முதலியவைகள் நடக்க அடுத்த நாள் திருமணம் தமிழக முறைப்படிதான் நடக்க வேண்டுமென்று அருணாச்சலம் தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
ஐயர் மந்திரங்கள் சொல்ல, பாதி மந்திரங்கள் சொல்லியும் மீதியை விட்டும், வந்திருந்த இளம் குமரிகளின் பார்த்து ஜொல்லு விட்டுக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் அமர்ந்திருந்த குருவுக்கு சிவனின் மனைவி ,தனது மாமியார் பாறுகுட்டி கண்ணில் பட தன் அன்னை வயதை உடையவர்கள் என்பதையும் மறந்து அளவிட்டு கொண்டிருந்தான் குரு. இவற்றையெல்லாம் பார்க்கும் நிலையில் நல்லவேளை பாறு இல்லை.
உமா ஏற்கனவே சொல்லி விட்டதால் சங்கரனும் ரத்னாவும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. திலகா வீட்டினர் கோவம் நிறைய இருந்தாலும் கூட அண்ணன் வீட்டு திருமணத்தை எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக திலகா மட்டும் வந்திருந்தாள். அவளுக்கு பொறாமையில் அடிவயிறு எரிந்தது.
அரக்கு நிற பட்டு உடுத்தி அதே நேரத்தில் கையில் மருதாணி சிவந்து, புதுப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு அன்னபூரணி வாங்கிக்கொடுத்து இருந்த நகைகள் மொத்தத்தையும் அணிந்துகொண்டு அழகு சிலை என மெல்ல தன் பஞ்சு வண்ண பாதங்களால் நடந்து வந்த உமாவை விட்டு குருவின் கண்கள் அப்படி இப்படி நகர வில்லை. அவளை அவன் பார்த்த விதம் அவள் மனதினுள் நாணத்தை ஏற்படுத்துவதற்கு பதில் அச்சத்தையும் அருவருப்பையும் உண்டுபண்ணியது. உடல் முழுவதும் கம்பளிப்பூச்சி ஏறுவது போல் உணர்ந்தாள் பெண். இவனுடன் என் காலம் முழுவதுமா என்று உள்மனம் கதறியது.
‘இறைவா எனது திருமண வாழ்க்கை சீக்கிரம் முடித்து விடு என்று உள்ளூர பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தாள் உமா’.
குருவுக்கு அவளது மெல்லிடையில் இருக்கும் ஒட்டியாணம் மீது கோபம் வந்தது அது மட்டும் அவளது இடையை ஒட்டி உறவாடுவது பார்த்து . கூடவே அவளது இடை அளவு என்ன என்றும் யோசித்துக்கொண்டிருந்தான்.
ஐயர் மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருப்பதில் பொறுமை இழந்தவனாக,’ போதும் ஐரே! தாலி கட்டுற மந்திரத்தை மட்டும் சொல்லு ‘ என்று சத்தம் போட்டு அசட்டு சிரிப்புடன் சொல்ல அவன் தோழர்களும் பெரிய ஹாசியத்தை சிரிக்க, அருணாச்சலம் அன்னபூரணி இருவருக்கும் எரிச்சல் என்றால் சிவனுக்கும் அவரது மனைவிக்கும் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது. உமாவுக்கு அவன் அருகில் அமர்ந்து இருப்பதே குமட்டிக் கொண்டு வர சிரிக்க முடியாமல் சிரிப்பது போல் பாவனையில் அவன் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
மங்கலநாண் பூட்டும் நிகழ்வு வர, உமாவின் காதுகளில், குருவோ, “ஃபர்ஸ்ட் நைட் எதுக்கு டி, ஃபர்ஸ்ட் டே கொண்டாடலாமா… சும்மா கும்முனு கொல்ற டி “ என்று அவன் அவள் காதுகளில் பிறருக்கு கேட்காமல் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கேட்டுக்கொண்டே மூன்று முடிச்சுகளிட வெறுப்புடன் அவன் கருவிழிகளில் தனது விழிகளை கலக்க விட்டாள் பெண்.
அவள் வெறுப்புப்பார்வை அவனுக்குள் பிராந்தி போல் இறங்கியது. உள்ளே இறங்கும் போது எரிச்சலை கொடுத்தாலும், அதன் போதையே தனிதான் என்று எண்ணிக்கொண்டான் குரு.
அவனைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் பெண் மறுக்கிறாளோ, பிடித்தமின்மையை அவளது விருப்பமின்றி அவளை அனுபவிக்கும் போது கிடைக்கும் சுகமே தனிதான்!
பெண்களின் சிரிப்பை விட வெறுப்பும் கோபமும் அதிகம் போது போதையூட்டும் என்று தீர்மானமாக நம்பிக்கொண்டிருக்கிறான் குரு. இதுவரை அவன் சீரழித்த பெண்களின் கணக்கு வெளியே தெரியாவிட்டாலும் அதிகம்தான். இவற்றையெல்லாம் பெருமையாக தன் மனதில் என்னை கொண்டான் அவன். அவனது இதழ் கோடியில் புன்னகை.
அவள் கண்கள் கலங்கி சிவந்தன. ஹோமப்புகையிலா, இல்லை அவனது சொற்களிலா?
இவை அனைத்தையும் திருமணத்திற்கு தனது மகளுடன் வந்திருந்த ராக்காயியும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். குரு திருந்தும் நாள் வரவே வராதா என்ற அவள் மனம் கேள்வி கேட்டது.
இதே கேள்விதான் என் மனதில் ஓடுகிறது…
திருமணம் முடிந்த பிறகு,திருமணத்துக்கு வந்தவர்களையெல்லாம் இரண்டு குடும்பத்தினரும் ஒன்றாக நின்று நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தார்கள். திருமண மண்டபத்தின் வாயிலில் தாம்பூலம் கொடுக்க தனியாக கல்யாண காண்ட்ராக்டரின் ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இன்னும் பதிநைந்து நாட்களில் தேர்தல் பற்றிய அறிவிப்புகள் கட்சித் தலைமையிடம் இருந்து வரவிருப்பதால் அந்த அறிவிப்பு வந்த பிறகு இன்னும் பிரமாண்டமாய் வரவேற்பு நிகழ்ச்சி வைத்துக்கொள்ளலாம் என்று அருணாச்சலம் முடிவு செய்துவிட்டார். அதனால் திருமணம் முடிந்த அன்று மாலையே எல்லோரும் அவரவர் வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.
மணமக்கள் பால்பழம் எடுத்துக்கொளளவெல்லாம் சிவனின் வீட்டிற்கு வர முடியாது என்று தீர்மானமாக மறுத்து கொண்டிருந்தான் குருபரன். அவன் மணமகன் அறையில் பேசிக் கொண்டிருப்பது அதற்கு எதிரில் இருந்த மணமகள் அறையில் அமர்ந்து கொண்டிருந்த சிவனின் காதுகளிலும் விழுந்தது. அவர் பக்கத்தில்தான் உமாவும் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சிவனின் முகம் விழுந்துவிட்டது. அவர்கள் வீட்டில் அவனது அலட்சியம் தெரிந்ததுதான்.
இன்றும் இப்படியா என்பதுதான்.மண்டபத்தில் அதிகம் யாரும் வெளி ஆட்கள் இல்லாததால் பிரச்சனை ஒன்றும் பெரிதாக இல்லை. அருணாச்சலம் பதிலுக்கு அவனிடம் கத்திக் கொண்டிருந்தார். “இனி, நீ ஒத்துக்கொண்டாலும் இல்லாட்டாலும் சிவன் தான் உன் மாமனார். அந்த மனுஷனுக்கு அதற்கான மரியாதையை கொடுத்துதான் ஆகணும். உமாவை கூட்டிக்கிட்டு இன்னும் அரை மணி நேரத்துல கிளம்ப வேண்டும்” என்று.
கல்யாணத்திற்காய் சமையல் செய்து மீந்துபோன சாப்பாட்டையெல்லாம் சிவனின் வீட்டிற்கு கொஞ்சம் எடுத்து பாறுவிடம் கொடுத்துவிட்டு, தங்களுக்குத் தேவையான வற்றையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, மீதி இருந்தவற்றை , தங்கள் வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்பவர்களுக்கும் கொடுத்து அனுப்பி விட்டு அன்னபூரணி மணமகன் அறைப்பக்கம் வருவதற்கும், பாறுக்குட்டி அதே சமயம் மணமகள் அறைப் பக்கம் வருவதற்கும் சரியாக இருக்க,குருபரன் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் கேட்டு இருவரும் திகைப்பூண்டு மிதித்தார் போல அங்கே வாயிலிலேயே நின்று விட்டார்கள்.அவன் வார்த்தைகள் அவ்வளவு ஏளனம் செய்தது சிவன் குடும்பத்தை.
உமாவின் அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரிய இடம்… மிகப் பெரிய இடம் என்று ஆசைப்பட்டு திருமணம் செய்து கொடுத்தது எவ்வளவு பெரிய பிழை என்றே இந்தக் கணம் அவள் புரிந்து கொண்டாள். குருவிடம் தன் மகள் இன்னும் எவ்வளவு சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியது வருமோ… என்று அந்த தாய்க்கு பயம் வேறு வந்துவிட்டது.கைகால்கள் நடுங்க சுவற்றை பற்றிக்கொண்டு நின்று கொண்டாள்.
அவளது நிலையை புரிந்து கொண்ட அன்னபூரணி ஆதரவாக அவளது தோள்களைப் பற்றி, ‘’கவலைப்படாதீங்க சம்பந்தி அம்மா, நான் இனிமே உங்க மகளை என்னோட சொந்த பொண்ணாவே பாத்துக்குறேன். இன்னைக்கு கண்டிப்பா குரு வருவான் உங்க பொண்ண கூட்டிக்கிட்டு. அப்படியே மறுத்தாலும் ஓரிரு நாள்களில் அவனை சரி பண்ணி மறுவீடு சடங்குக்கு நிச்சயம் அனுப்பி வைக்கிறோம்’ ‘ என்று ஆறுதல்படுத்த முனைய,பாறுவின் மனது சமன படுவதாக இல்லை.
பாறுவும் மகள் அறைக்குள் நுழைய, அங்க உமாவோ தன் அப்பாவிடம்,’ ‘இந்த இடம் நீங்க பார்த்து முடித்து வைத்ததுதான் அச்சா… ஒரு வார்த்தையும் மறுபேச்சு பேசாமல் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன், எனக்கு இஷ்டம் இல்லாட்டியும்.அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்து தானே இப்படி, இவரோட கல்யாணம்னு எனக்கு முடிவு செஞ்சிங்க?
இப்போ அதுக்கான விலை கொடுப்போம். இனி நான் அந்த வீட்டு… ம்ஹும்… உங்க முதலாளியோட மருமகள்தானே தவிர, உங்க பொண்ணுங்கற அதிகாரம் முடிஞ்சுது. எந்த காரணத்தை கொண்டும் வேலைய மட்டும் விட்டுடாதீங்க. நாளை பின்னைக்கு எனக்கு ஏதாவது ஆனாலும் உங்களுக்கு தெரியணும்… “என்றவளின் கண்களில் வலி. முகம் உணர்ச்சிகளை துடைத்து… மடியில் கோர்திருந்த விரல்களை வெறித்து கொண்டிருந்தவளின் மனம் அவள் கைகளில் போட்டிருக்குற மருதாணி சிவப்பிற்கு குறைந்தாதில்லை.அவள் மனம் எதையோ மனகண்ணில் கண்டது.
மகள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தைகளும், அவளது வெறித்த பார்வையும் பெற்ற வயிற்றில் தீயை மூட்டியது. கலியாண வீட்டின் அந்த அறை துக்கம் நிறைந்து. சாந்தாவுக்கு அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும், இந்த கலியாணம் அக்காவின் சந்தோஷத்திற்கு இல்லை என்று புரிந்து கொண்டவள் இனி, இந்த ஜென்மம் முழுவதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். படித்து வெளிநாடு சென்று விடுவேன் என்று முடிவெடுத்தாள். இந்த யோசனையில் இருக்கும் பெண்ணின் வயசு வெறும் பதிநான்கு.

