Loading

சிறகின்றி வானில் பறப்பது போல உணர்வுகளும், புதிய அடிதளத்திற்கான முதல் படியாகவும், புது நண்பர்கள் என்று தொடங்கி வாழ்வை மகிழ்ச்சியூட்டும் கல்லூரி வாழ்க்கையில் தடம் பதித்திருந்தாள் மதுவர்ணிகா. சைத்ரா ஜார்ஜியாவில் மருத்துவப் படிப்பை ஆரம்பித்திருக்க, இருவரும் வெவ்வேறு இடத்திலிருந்து படிக்கும் சூழல் நிலவியது.

 

மதுவர்ணிகா ஆடை வடிவமைப்பு பிரிவைத் தேர்ந்தெடுத்திருந்தாள். பத்தாம் வகுப்பு தோழி வைஷ்ணவியும் அதையே தேர்ந்தெடுத்திருக்க, கல்லூரி வாழ்க்கை அழகாக ஆரம்பித்திருந்தது. இருந்தும் வாரத்தில் ஒரு முறையாவது சைத்ராவிடம் பேசிவிடுவாள். மேலும் மருத்துவம் சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்ததுமே சைத்ரா வலைதளங்களிலிருந்து சற்று விலகியிருக்க ஆரம்பித்திருந்தாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, அவளது முகப்புத்தகத்தில் தோன்றியிருந்த பிரெண்ட் ரெக்வெஸ்ட்டுகள் ஒவ்வொன்றையும் பார்த்தபடி வந்தவளது பார்வை, ஒரு இடத்தில் பதிந்து மீண்டது. 

 

“ரகு” என்று அந்த பெயரை படித்ததும், அவனது பிரெண்ட் லிஸ்டில் தெரிந்த சைத்ராவின் பெயரை பார்த்ததுமே புரிந்துக் கொண்டவளுக்கு அவளையும் மீறி புன்னகை துளிர்த்தது. முகம் பார்க்காமலே அவளுக்கு பிடித்த ஒருவரிடத்திலிருந்து வரும் அழைப்பு வித்தியாசமான உணர்வினையும் நல்கியது.

 

ரகுவின் குணம் அறிந்தவள் தயக்கமின்றி அவனது நண்பர் அழைப்பினை ஏற்றுக் கொண்டாள். அவனது டைம்லைனை ஆவலாக பார்க்க தோன்றிய மனதை அடக்கி வைத்தவள், தனது கைப்பேசியை அணைத்து விட்டு சென்றிருந்தாள்.

 

முகப்புத்தகம் (Facebook) என்னும் மாயவலை இருக்கும் இடத்திலிருந்தபடியே பல நட்புக்களை பெற்றுத் தருவதாக இருந்தாலும், அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. பகுத்தறிந்து பார்த்து நம்மை காத்துக் கொண்டால் மட்டுமே தீமையில் விழாமல் நம்மை நாமே காத்துக் கொள்ள இயலும்.

 

அன்றைய நாள் காலை எழுந்ததுமே கல்லூரிக்கு தயாராகியபடி வெளியே வந்தவள், தன் தம்பி உமாபதியை தான் முதலில் பார்த்தாள். நன்கு வளர்ந்துவிட்டான். குரலிலும் நன்கு மாற்றம் உண்டாக்கியிருக்க, புதிதாக முளைத்த அரும்பு மீசையுடன் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் உமாபதி.

 

“டேய் என்னடா, ஹேர்ஸ்டெயில் இது?”

 

“இது ட்ரெண்ட் வருணி. நல்லாருக்கா?” என்று பள்ளிச் சீரூடையில் தலையை கண்ட மேனிக்கு அவன் வளைத்திருக்க, பக்கென்று சிரித்து விட்டாள் மது.

 

“டேய் முடியலைடா, மாம் பார்த்தாங்க மவனே நீ காலி.” 

 

“வாயை கழுவுக்கா… மம்மி வரதுக்கு முன்னாடி நான் எஸ்கேப் ஆகணும். ரெடி ஜூட்.” என்று ஓடத் தயாராக இருக்க, சரியாக படிக்கட்டிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தார் பிரபாவதி.

 

“உமாபதி‌.” என்றவரின் அழுத்தம் திருத்தமான அழைப்பில் அவனது கால்கள் முன்னேறாமல் தடைப்பட்டு போக, பயத்துடன் திரும்பி பார்த்தான் உமா. 

 

மதுவர்ணிகாவும் அன்னையின் சத்தத்தில் முகப்பறைக்கு வர, பிரபாவின் பார்வை இருவரின் மீதும் படிந்து மீண்டது. 

 

“என்ன தலை இது?”

 

“எந்த தலை மாம்?” என்றவன் வாய் தவறி பேசியிருக்க, பிரபாவதியின் முறைப்பை சம்பாதித்தது தான் மிச்சம்.

 

“சாரி மாம்.” என்றவன் பட்டென்று தன் தலை முடியை தன் கைகளாலே படிய வைக்க முயற்சி செய்ய, அது மீண்டும் மீண்டும் சாய்ந்த கோபுரம் போல் எழுந்து நிற்க, ‘நேரங்காலம் பார்த்து முடி கூட சதிபண்ணுதேடா உமாபதி’ என்று தன் தலைமுடியை பற்றி நினைத்தவனின் உள்மனமோ திக்திக்கென்று அடித்துக் கொண்டது.

 

“படிக்குற பையன் இப்படியா தலைமுடியை வெச்சுட்டு போவ? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லை” என்று முறைப்பில் தொடங்கியவர் மேலும் திட்ட வரும் முன்னர் மதுவோ இடையில் குறுக்கிட்டாள்.

 

“மாம் சாரி, நான் தான் சும்மா அவனுக்கு ட்ரை பண்ணி பார்த்தேன். அப்புறம் சரி செய்ய மறந்துட்டேன். அவனும் மறந்து அப்படியே வந்துட்டான்.” என்று அவனை காக்கும் நோக்கில் அவள் கூற, உமாபதியின் மனம் அக்காவை நினைத்து நிறைந்து தான் போனது.

 

‘அக்கா… அக்கா… என் உயிர் நீதான் அக்கா.’ என்று மனதில் அவளை புகழத் தொடங்கியிருக்க, பிரபாவதி மகளை திட்டிவிட்டு சென்றுவிட்டார். தாயின் குணம் உணர்ந்தவளுக்கு அந்த திட்டும் பெரிதாக தெரியவில்லை.

 

“ஏ வருணி அக்கா, ஏன் அப்படி சொன்ன?” என்று வருத்தம் நிறைந்த குரலில் கேட்கும் தன் தம்பியை பார்த்தவள், அவனது தலையை மென்மையாக ஆட்டி விட்டாள்.

 

“உனக்கு புரியாது. இரண்டு வருசமா நம்ம பேமிலியை ரொம்ப மிஸ் பண்ணேன். இன்க்லூடிங் அம்மாவோட திட்டும்” என்றவளின் வலி அவனுக்கு புரிந்ததோ இல்லையோ, அவளது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

 

“தாங்க்ஸ்டா. அப்புறம் மொதல்ல தலையை ஒழுங்கு பண்ணிட்டு போடா. இல்லைனா இதுலாம் ஒரு மண்டை இதுக்கு தேவையில்லை கொண்டைனு ஒரே வெட்டு, உங்க பீ.டி. மாஸ்டர் கட் பண்ணிட்டு போயிகிட்டே இருப்பாரு” சிரித்துக் கொண்டே கூறியவள் சென்றுவிட அவனும் தலையை சரி செய்தபடி பள்ளிக்கு சென்று விட்டான்.

 

கல்லூரியில் அன்று மதியம் லெக்சரர்களுக்கு மீட்டிங் என்பதால் சென்று விட, மதுவும் அவளது தோழிகளும் குழுவாக அமர்ந்து ட்ரூத் ஆர் டேர் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். வைஷ்ணவியும் அவளும் அருகருகே அமர்ந்திருந்தனர். பத்தாம் வகுப்பில் விட்ட நட்பு கல்லூரியிலும் தொடர ஆரம்பித்திருந்தது.

 

குவளையை சுழற்ற, வைஷ்ணவியை பார்த்து நின்றது. உடனே அவளுக்கு எதிரே இருந்த தோழி ஒருத்தி, “ட்ரூத் ஆர் டேர்” என்று கேட்டாள்.

 

“டேர்” என்று புத்திசாலித்தனமாக கூறிவிட்டோம் என்ற ரீதியில் வைஷ்ணவி புருவம் உயர்த்தினாள். இது எல்லாம் தனக்கு அசட்டையான வேலை என்ற ரீதியில். 

 

“என்னடி டேர் செல்லிட்ட?” என்று அருகில் அமர்ந்திருந்த மது கேட்க,  “எப்படியும் ஆட சொல்வாங்க இல்லை பாட சொல்வாங்க. ஆடலும், பாடலும் அம்முணிக்கு கைவந்த கலையாக்கும்.” என்று அவளது காதோரமாக கிசுகிசுத்தாள்.

 

“ஒண்ணும் இல்லை ரொம்ப சிம்பிள்‌. நம்ம பக்கத்து கிளாஸ்ல வருண்னு ஒரு பையன் இருக்கான்ல, அவங்கிட்ட போய், நீ அலைபாயுதே டையலாக்கை சொல்லிட்டு வரணும்.” என்று தோழி ஒருத்தி கூறிவிட, வைஷ்ணவிக்கு அல்லு இல்லை. மதுவும் கூட அதிர்ந்து போய் பார்த்தவள், அடுத்த நொடியே வைஷ்ணவியை பார்த்து கள்ளசிரிப்பு சிரித்தபடி தலையாட்டினாள்.

 

‘பேச்சாடி பேசுன. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன?’ என்று அவள் தலையாட்டும் தோரணையிலேயே உணர்ந்துக் கொண்டாள் வைஷ்ணவி. 

 

“இது எல்லாம் போங்கு. வேற எதாவது சொல்லுங்க. அவன் என்னை அடிச்சுட்டா நான் என்ன பண்ணுவேன்.” 

 

“நீ தான் தைரியமான ஆளாச்சே சமாளி.” என்று அவள் செய்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் தோழிகள் அனைவரும்.

தைரியத்தை வரவழைத்தபடி எழுந்தவளுக்கு மது, “ஆல் தி பெஸ்ட்” கூற, “இப்போ  இது ரொம்ப முக்கியம்.” என்று நொந்தபடி சென்றாள் வைஷ்ணவி.

 

மற்ற தோழிகள் அனைவரும் அவளைத் தொடர, “இதுல எல்லாம் கரெக்டா இருப்பாளுங்க. பிராடு புள்ளைங்க.” என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே சென்றவள், பக்கத்து வகுப்பினை எட்டி நின்று பார்க்க, நல்லவேளை அவன் இல்லை.

 

“அப்பாடா யாரு பெத்த புள்ளையோ நேரம் பார்த்து எஸ்கேப் ஆகி நம்மளையும் காப்பாத்திட்டான்.” என்று பெருமூச்சொன்றை விடுத்தவள் திரும்ப, அவள் எதிரே வந்து நின்றான் வருண்.

 

“எக்ஸ்க்யூஸ்மீ.” என்றவன் வழி விடும்படி அவளை பார்க்க, இருவரையுமே ஆவென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் மற்ற தோழிகள். 

 

“சாரி‌” என்றவள் வழி விட, தூரத்தில் இருந்தபடி மிரட்டினர் அவளது தோழிகள்.

 

“இதுங்க தொல்லை தாங்க முடியலையே ஆண்டவா.” என்று வாய்விட்டு புலம்பியவள் தைரியத்தை வரவழைத்து,

“வருண்.” என்று அழைக்க வருணும் திரும்பி அவளை பார்த்தான்.

 

“நீங்க வருண் தானே? கொஞ்சம் வெளியே வர முடியுமா?” என்றவள் அழைக்க, அவனும் புரியாத பாவனையுடன் வெளியே வந்தான்.

 

“நீங்க அழகா இருக்கீங்கனு நினைக்கலை.” என்றவளுக்கு அடுத்த வரி நினைவின்றி போக,  “அதுக்கு அப்புறம் என்ன லைன் வரும்?” என்று அவனிடமே இவள் வினவ, மற்ற தோழிகள் அனைவரும் இவளை தூரத்தில் இருந்தபடி விநோதமாக பார்த்தனர் என்றால் வருணோ அவளை முறைத்து பார்த்தான்.

 

“ப்ளீஸ் ஹெல்ப் மீ. டயலாக் எடுத்து மட்டும் விடுங்க.”

 

“உன் மேல ஆசைப்படலை. இது தான் முதல்ல வரும்.” என்றவன் அவளை பார்த்தபடி, பின்னால் நின்றிருந்த பெண்களையும் கவனித்தபடி கூறியவனுக்கு ஓரளவு நடப்பதை யூகிக்க முடிந்தது. இம்முறை அவனையும் மீறி ஒரு நக்கல் கலந்த புன்னகை தோன்றியிருந்தது.

 

“ஆமா ஆமா தாங்க்ஸ் வருண். இப்போ பாருங்க. வருண் உன் மேல ஆசைப்படலை. அப்புறம் நீ அழகா இருக்கேனு நினைக்கவே இல்லை. ஆனால் இது எல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு.” என்றவள் ஒரு வேகத்தில் கூறிவிட, கைகளை கட்டிக் கொண்டபடி அவளையே உற்று பார்த்தான் வருண்.

 

“இது எனக்கான டேர்… ப்ளீஸ் கோபப்படாதீங்க சாரி.” என்றவள் ஒரே ஓட்டமாக ஓடி விட, அவனது இதழ்கள் அவனையும் மீறி புன்னகையை சுமந்திருந்தது.

 

“ஏய் கலக்கிட்ட.” என்று ஒவ்வொரு தோழியும் வைஷ்ணவியை பாராட்டவும், மதுவும் அவளை மெச்சுதலாக பார்த்தாள்.

 

இம்முறை வைஷ்ணவி சுழற்ற, சுழன்றபடி மதுவை பார்த்தது அந்த தண்ணீர் நிரப்பப்படாத நெகிழி குவளை.

 

“சொல்லுங்க மேடம் ட்ரூத் ஆர் டேர்?”

 

“ட்ரூத்” என்று பட்டென்று கூறிவிட்டாள் மது. எங்கு இது போல ஆபத்தான சவால்களை தந்துவிடுவார்களோ என்ற எச்சரிக்கையில். இம்முறை அனைவரும் ஆலோசித்து பதிலளிக்க இயலாத அளவிற்கான கேள்வி ஒன்றை தொடுத்தனர். 

 

“மிஸ் மதுவர்ணிகா சினிமா தவிர்த்து ரியல் லைஃப்ல உன் க்ரஷ் யாருனு சொல்லணும். பதில் ஆக்செப்ட் பண்ற மாதிரி இல்லைனா நேரடி பனிஷ்மெண்ட் தான்.” எடுத்த உடனே ஆப்பு ஒன்றை தயார் நிலையில் வைத்தபடி தோழி ஒருத்தி கூறி முடிக்க, இவள் திருதிருவென விழித்தாள்.

 

“அப்படி யாருமே எனக்கில்லையே?” என்று பாவமாக கூறுபவளை பார்த்து, “ஓ நோ” என்று பரிதாபமாக அனைவரும்  கிண்டலடித்தனர்.

 

“காலேஜ்லயும் எவனையும் நீ சைட் அடிச்சதில்லை. ஸ்கூல்லயும் அப்படிதான்னு வைஷு சொன்னா. தாங்க்ஸ் டி வைஷு உன்னை நம்பி இந்த கேள்வி கேட்டது இப்போ நல்லதா போச்சு.” என்றாள் புன்னகைத்தபடி.

 

மதுவின் கண்களோ வைஷுவை பார்த்து, “உன்னை வந்து வெச்சுக்கிறேன்.” என்று மிரட்டலை விடுக்க, 

 

“செல்லகுட்டி ஒருத்தர் கூடவா இல்லை. யோசிச்சு சொல்லு. அவங்களை நினைக்கும் போதே உள் மனசுக்குள்ள மகிழ்ச்சி சும்மா பொங்கி வரணும். நல்லா யோசிச்சு சொல்லு.” என்று பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டியபடி கூறும் வைஷுவை முறைத்துப் பார்த்தாள் மதுவர்ணிகா.

 

அவள் சொல்வதும் சரி தான். இவர்களது டேர் எந்தளவு இருக்கும் என்பதை யோசித்தவள் கண்களை மூடி, ஒவ்வொன்றாக நினைத்து பார்த்தாள். அந்நொடி சைத்ரா ரகுவை பற்றி கூறியதும், ஏதோ ஒன்று பார்க்காமலே ரகு மீது உண்டான அன்பையும் நினைத்தவள், அடுத்த நொடியே கண்களை திறந்தாள்.

 

“ரகு என்னோட க்ரஷ்.” என்றவள் உதிர்க்க தோழிகள் கூட்டமே ஆச்சரியமாக பார்த்தது. 

 

“யாருடி அது?” உச்சபட்ச அதிர்ச்சியில் கேட்டது என்னவோ வைஷ்ணவி தான்.

 

“உனக்கு தெரியாது‌. என் பிரெண்ட் சைத்ராவோட கசின்.”

 

“ஓ…ஓ”

 

“எங்க மதுவை மயக்கிய ரகு எப்படி இருப்பாரு?” என்று கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

 

“நான் போட்டோ கூட பார்த்தது இல்லை. பேசுனதும் இல்லை.” என்றவள் கூறியதுமே தோழிகளிடத்தில் பெருத்த அமைதி நிலவியது.

 

“இது என்னப்பா காதல் கோட்டை பார்ட் டூவா இருக்கு.” என்றொருத்தி கேட்க,

 

“அய்யய்யோ லவ்லாம் இல்லை. ஜஸ்ட் க்ரஷ்.” என்று கூறி முடித்துக் கொண்டாள் மது. 

 

அன்றைய நாள் வீட்டிற்கு வந்தும் கூட,  ‘தான் ஏன் ரகுவை பற்றி கூறினோம்.’ என்ற யோசனை இருக்க தான் செய்தது. அந்நொடி தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அவ்வாறு கூறினோம் என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.

 

இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை ரகு தனிப்பட்ட முறையில் அவனாக வந்து ஹாய் என்று எந்த வித குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. உண்மையாகவே அது அவளுக்கு பிடித்திருந்தது. அவன் மீதிருக்கும் நல்லெண்ணம் மேலும் மேலோங்கியிருந்தது. அதே போல அவளாகவும் அவனிடம் பேசவில்லை. 

 

இத்தகைய சூழலில் அவள் ஒரு ஆடை வடிவமைத்து அதனை பதிவிட்டிருக்க, அவனிடமிருந்து முதன் முறையாக லைக் வந்திருந்தது. அத்துடன் அற்புதமான கலை உணர்வு என்று கருத்தும் வந்திருக்க, பெண்ணவளின் இதழ்கள் அன்னிச்சையாக மலர்ந்திருந்தது.

எப்போதுமே நாம் செய்யும் செயலுக்கு பாராட்டும், அங்கீகாரமும் கிடைத்தால் அந்நொடி மகிழ்ச்சி தன்னிச்சையாக வந்துவிடும். அதுவும் நாம் மதிக்கத்தக்க ஒருவரிடமிருந்து கிடைக்கும் சிறு பாராட்டு கூட உற்சாகத்தை ஏற்படுத்திவிட்டு தான் செல்லும். அன்றைய நாளே மகிழ்ச்சியானது போல உணர்ந்தாள் மதுவர்ணிகா.

இப்படியே சிறு சிறு லைக்குகள் என்று தொடங்கி அன்றொரு நாள் தனிப்பட்ட முறையில் அவனிடமிருந்து குறுஞ்செய்தியும் வந்திருந்தது. 

 

“ஹாய் ஐ அம் ரகு. யுவர் டிசைன்ஸ் ஆர் வெரி யுனிக்.” என்று அனுப்பியிருக்க, அவனிடமிருந்து வந்த முதல் குறுஞ்செய்தி அவளுக்குமே ஆச்சர்யம் தான்.

 

“தாங்க் யூ.” என்று மட்டும் கூறியவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ஒரு வித தயக்க உணர்வும் படபடப்பும் அவளிடம் தெளிவாக தெரிந்தது. 

 

அன்றைய நிகழ்வுக்கு பிறகு, அவன் பதிவிடும் கருத்துக்களுக்கும், படங்களுக்குமே இவளும் லைக்குகளை போடத் தொடங்கியிருந்தாள். சிறு புள்ளியாக தொடங்கிய இவர்களது அறிமுகம் அடுத்தடுத்த பேச்சுக்களின் தொடக்கங்களாக மாறியிருந்தது.

 

காலையானதும், “குட் மார்னிங்” என்னும் வாசகத்துடன் இன்றைய நாள் உனக்கு நன்னாளாக மாறட்டும் போன்ற மென் வாசகங்கள் அடங்கிய குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கியிருந்தான் ரகு. அவளும் பதிலுக்கு குட் மார்னிங் என்று அனுப்ப, அதுவே தினந்தோறும் தொடர்ந்தது.

அதே நாளில் அவளது பிராக்டிக்கல் வகுப்பில் அவளது வடிவமைப்பிற்கு பாராட்டும் கிடைக்க, மனதில் சிறு துளி போல் ரகுவின் நினைவும் வந்து சென்றது. அந்நொடி நேரங்களில் அவளையும் மீறி ஒருவித மகிழ்ச்சி தோன்றாமல் இல்லை.

 

அன்றைய நாள் இரவு சைத்ரா அவளுக்கு அழைப்பை விடுத்திருக்க, உற்சாகத்துடன் கைப்பேசியை எடுத்திருந்தாள் மதுவர்ணிகா. 

 

“ஏய் டாக்டர் மேடம், எப்படி இருக்கீங்க?”

 

“நல்லா இருக்கேன் மச்சி. என்ன மச்சி குரலே கலகலப்பா இருக்கு. எனிதிங் ஸ்பெஷல்?”

 

“இன்னைக்கு எங்க மேம் என்னோட பிரசென்டேஷனை புகழ்ந்து தள்ளிட்டாங்க.”

 

“சூப்பர்டா நீ கலக்கு. எனக்கு இரண்டு நாள்ல எக்ஸாம். ஒரு மாசத்துக்கு நோ போன் டி. அது தான் இன்னைக்கே எல்லாம் பேச ஓடி வந்துட்டேன்.”

 

“இரண்டு நாள்ல எக்ஸாம் வெச்சுட்டு எதுக்கு கால் பண்ற? படி சைத்து. வருங்கால டாக்டர் கையில போன் அலோவ்டே கிடையாது.”

 

“ஓகே மேடம். அப்புறம் மச்சி மிஸ் யூ. ஏனோ உன்னை பார்க்கணும் போல இருக்குடி.”

 

“நீங்க டாக்டர் ஆகிட்டு வாங்க மேடம். அப்புறம் வேற எங்கயும் விடமாட்டேன். அப்புறம் உன் கசின் இருக்காரே அவரும் ஃபேஸ்புக்ல இருக்காரு போல.”

 

“ஆமா மேடம். ஆமா ஏன் திடீர்னு ரகு பத்தி கேட்கிற?”

 

“அதுவா…” என்று இழுத்தவளுக்கு அப்போது தான் ரகு பற்றிய நினைவு வந்தது. அவனிடம் சொல்லாது சைத்ராவிடம் அவனை பற்றி கூறினால் தவறாக இருக்கும். மேலும் அவள் பரீட்சை முடிந்து வந்த பின்னர் கூறிவிடலாம். என்று எண்ணியவள், “ஒண்ணும் இல்லை. சும்மா கேட்டேன்.” என்பதோடு நிறுத்திவிட்டாள்.

 

“ஓகே மச்சி பாய். டேக் கேர்.” என்று கூறிவிட்டு சைத்ராவும் வைத்துவிட, அப்போது தான் மது ஒன்றை உணர்ந்தாள். இதுவரை எதுவுமே நாம் சைத்ராவிடம் மறைத்ததில்லை. முதல்முறை ரகுவிற்காக யோசிப்பது எதனால்? என்று அவள் மனமே அவளை கேள்வி கேட்டது.

 

அதன்பின்னர் இரண்டு நாட்களாக அவளது வடிவமைப்பு சார்ந்த வேலை பளு அதிகரித்திருக்க, தொடர்ந்து மூன்று நாட்களாக அவள் சோசியல் மீடியாவிலிருந்து விலகியே இருந்தாள். 

 

நான்கு நாட்கள் கழித்து அவள் முகப்புத்தகத்தின் உள் பெட்டியை திறந்து பார்க்க, ரகுவிடமிருந்து எண்ணற்ற குறுஞ்செய்திகள் வந்திருந்தது. “ஆர் யூ ஓகே.” என்று அக்கறையான குறுஞ்செய்திகள் வந்திருக்க அவளே ஸ்தம்பித்துப் போய் பார்த்தாள்.

 

“எஸ் ஐ அம் ஓகே? என்னாச்சு?” என்று அவள் கேட்டதுமே அவனிடம் செய்தி வந்தது.

 

“இல்லை மூணு நாளா உங்களை காணோம். உங்க உடம்புக்கு எதாவது சரியில்லையோனு ரொம்ப கவலையாகிடுச்சு. ஒண்ணும் பிரச்சனை இல்லைதானேங்க.” என்றவனின் துடிப்பில் அவளையும் மீறி மனம் கனிந்தது.

 

“ரொம்ப நல்லா இருக்கேன். காலேஜ் வொர்க். அதுதான் குட் மார்னிங் சொல்லலை.” என்று புன்னகைக்கும் ஸ்மைலிகளை அனுப்பியபடி பதில் கூறினாள்.

 

வீட்டில் கிடைக்காத அக்கறையும், கனிவும் பிறரிடம் கிடைக்கும் நிலையில் அந்த இடத்தில் தான் பிறர் மீதான நம்பிக்கை அதிகரிக்கின்றது. அந்த நொடி முதல் அவனுடன் நன்கு பேசத் தொடங்கியிருந்தாள் மதுவர்ணிகா. 

அன்பை தேடும் மனதிற்கு அவனது தன்னலமற்ற அன்பும், அக்கறையும் இதமாக தோன்ற, தன் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகள் தொடங்கி அனைத்தையுமே அவனிடம் ஆர்வமாக கூறத் தொடங்கியிருந்தாள். பெற்றோரிடம் சிறு வயதில் பள்ளியில் நடந்ததை கூறி மகிழ்வோம் அல்லவா? அந்த மகிழ்ச்சி ரகுவின் மூலம் அவளுக்கு கிடைத்தது. 

 

“வாங்க,போங்க” என்று மரியாதையாக அவன் அழைக்கும் அழைப்பும் இதுவரை அவளது புகைப்படமோ, எண்ணோ எதையுமே கேட்காத அவன் நற்குணமும் அவளை ஈர்க்கத் தொடங்கியிருந்தது.

 

“உங்களை பத்தி சைத்ரா நிறைய சொல்லுவா? எனக்கு ஒரு டவுட் உங்க முழு பேர் என்ன?” ஆர்வத்துடன் கேட்டாள்.

 

“ரகுவரன்.” 

 

“அடடே நல்லாருக்கு. எனக்கு பிடிச்ச வில்லன் பேர்.”

 

“அப்பாடா நல்லவேளை உங்களுக்காவது என் பேர் பிடிச்சிருக்கு.” 

 

“நீங்க என்னவிட பெரியவங்க தானே பேர் சொல்லியே கூப்பிடுங்க.”

 

“சரிங்க வர்ணிகா.” 

 

“சரி வர்ணிகானு சொல்லுங்க.” என்றவளின் பதிலுக்கு ஸ்மைலி ஒன்றை அனுப்பியிருந்தான் ரகு. 

 

அதன்பின்னர், அவனும் உரிமையோடு பேச, அவளும் அவனுடன் உரிமையாக பேச, நாட்கள் அழகாக நகர்ந்த தருணம். ஒரு மாத முடிவில் அவள் சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தேறியது.

 

“உனக்கு நான் இருக்கேன் வர்ணிமா. இனி நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது.” என்றவனின் குரலில் திடுக்கிட்டு நின்றவள் கைப்பேசியை காதில் இறுக பற்றிக் கொள்ள, அடுத்து அவன் கூறிய சொல்லில் கைப்பேசியை ஒரு நொடி கீழே தவறவிட்டாள்.

 

Click on a star to rate it!

Rating 3 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்