விழியால் தொட்ட அழகே – 11

Loading

அத்தியாயம் – 11

ரிஷியும் நித்யாவும் வீடு வந்து சேரவே மணி இரவு பன்னிரெண்டை தொட்டிருந்தது, தாங்கள் வந்த காரை கேட்டின் வெளியவே நிற்க வைத்த ரிஷி அவர்கள் வீட்டின் ஓட்டுனரை அழைத்து, அவரிடம் கார் சாவியை கொடுத்து விடிவதற்குள் காரை மெக்கானிக் செட் எடுத்து சென்று சரி பண்ணி வை என கட்டளையிட்ட பிறகே வீட்டினுள் சென்றான், இது போல கார் அடிவாங்குவதெல்லாம் பல சமயம் நடந்திருக்கு, ஒரு முறை செவ்வந்தி அதனை கண்டு கொண்டு பயந்து ஆர்ப்பாட்டம் செய்து விட்டார், அன்றைய நாளிலிருந்தே இது போல் ஏதாவது கார் அடிவாங்கினால் தன் தாத்தா பாட்டிக்கு தெரியாமல் ஓட்டுனரிடம் அழைத்து எடுத்து போக சொல்லி விடுவான், அவரும் விடிவதற்குள் காரை எடுத்து சென்று, சரி செய்து கொண்டு வந்து வீட்டில் விடுவார்,..

வீட்டினுள் நுழையும் போதே மனைவியிடம் பாட்டி தாத்தாவிற்கு நடந்த விஷயம் எதுவும் தெரிய கூடாது என சில நிமிடங்கள் அறிவுரை வழங்கிய பிறகே உள்ளே அழைத்து சென்றான்,…..

நித்யாவும் சரி சரி என மண்டையாட்டியவள், பாட்டி, “என்னடா வந்துட்டீங்களா” என்று கேட்டதுமே, அவரை அணைத்துக் கொண்டு அழுதுவிட்டாள்…

உடலெல்லாம் இன்னமும்  நடுங்கியது, தங்களை நேர் எதிரே நின்று ஒருவன் துப்பாக்கியால் தாக்க முயன்றிருக்கிறான், அதை எப்படி அவ்வளவு சுலபமாக அவளால் கடந்து வந்து விட இயலும், ஏற்கனவே நடந்த சம்பவத்தால் பயத்திலிருந்தவள், பாட்டி அனுசரணையாக விசாரிக்கவும் அழுதுவிட்டாள்….

“என்னடா கண்ணு என்ன ஆச்சு” என செவ்வந்தி படபடக்கும் மனதுடன் கேட்க, தர்மாவும் என்னவானது என்பது புரியாமல் முகத்தில் கலவரம் படர பார்த்துக் கொண்டிருந்தார்,…..

“பாட்டி” என்றவளுக்கு உதடுகள் துடிக்க, வார்த்தைகள் வெளிவர மறுத்தது, அவளது அழுகையை கண்டதுமே தலையில் கைவைத்துகொண்டு அவளை முறைத்தபடி நின்ற ரிஷி, அவள் முழுதாக அனைத்தையும் சொல்லி முடிக்கும் முன்பே,… “நீங்க நினைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல பாட்டி, அவ அம்மாவையும் அண்ணனையும் விட்டு வந்த ஃபீலிங்ல அழறா, வர வழியெங்கும் இதே அலப்பறை தான்” என சமாளிக்க, ‘இவ்வளவு தானா’ என பெருமூச்சு விட்டவர்,… “அப்படியாடா கண்ணு, அதுக்கா இப்படி அழற” என அவள் கன்னம் தொட்டு வினவ,,…

அவள் இல்லை என தலையாட்டும் முன், அவளது கரத்தை பிடித்து தன் பக்கம் இழுத்து கொண்டவன்… “ஏற்கனவே ரொம்ப லேட்டாச்சு பாட்டி, நான் சொல்லியும் நீங்களும் தாத்தாவும் இவ்வளவு நேரம் தூங்காம முழிச்சிட்டு இருந்திருக்கீங்க, நித்துவும் தூங்கி எழுந்தா நார்மலாகிடுவா, நீங்க ரெண்டு பேரும் முதல்ல போய் தூங்குங்க, உடம்புக்கு ஏதாவது வந்துட போகுது” என்று தன் அன்பான வார்த்தைகளால் அவரின் வாயை அடைத்து, அவர்களை அனுப்பி வைத்தவன், மனைவியை பிடித்து இழுத்துக்கொண்டு தங்களதறைக்கு வந்தான்,…

“கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி ஒன்னுக்கு ஒன்பது தடவை சொல்லி கூட்டிட்டு வந்தா, பாட்டிகிட்ட போய் ஒப்பிக்க பார்கிறியா அறிவு ஜீவியே” என பற்களை கடித்தபடி கேட்டான் ரிஷி,…..

“நான் சொல்ல வேணாம்னு தான் நினைச்சேன், ஆனா எனனால முடியல, நடந்த சம்பவம் என் கண்ணுக்குள்ளேயே நிற்குது, கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு, பாட்டியை பார்த்ததும் அழுகை வந்துடுச்சு, அதான்” என இழுத்துக் கொண்டே விசும்ப ஆரம்பித்தாள்….

“ஏய் நித்து” என்று அவளது அழுகையை பார்க்க முடியாமல், அவள் கன்னங்களை தாங்கியவன்,… “நடந்தது சாராதாரண விஷயம் இதுக்கு எதுக்காக இவ்வளவு பயப்படுற, நான் உன் பக்கத்துல இருக்கும் போது, உனக்கு எதுவும் ஆகாது, நான் ஆகவும் விட மாட்டேன்” என உறுதியான குரலில் கூறியவன், அவளது நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்,….

அவனது அருகாமை அவள் நடுக்கத்தை குறைத்தது, பயமும் குறைந்தது போல் இருக்க, விழிகள் மூடி அவன் தந்த முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவள், அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் பாந்தமாக,….

அடுத்த நாள் காலை நித்யா கண்விழித்தது ரிஷியின் முதுகில் தான், அப்போது தான் குளித்து முடித்து வந்திருப்பான் போல, இடையில் டவலுடன் நின்றவன், கப்போர்டை திறந்து ஹேங்கரில் தொங்கி கொண்டிருந்த உடையை எடுத்து அணிந்து கொண்டிருந்தான், முதலில் பேண்டை அணிய போனவனை பார்த்து கொஞ்சம் தடுமாறியவள், ‘ச்சே துணி மாத்துறதை பார்க்கிறது பேட் மேனர்ஸ் ஸ்ரீ’ என தனக்கு தானே கூறிக்கொண்டு கண்களை மூடிக் கொண்டாள், சில நிமிடங்கள் கழித்து விழிகளை கொஞ்சமாக திறந்தவள், அவன் மேல் சட்டையின் பட்டன் போட்டு கொண்டிருப்பதை கண்டு, புருவம் உயர்த்தினாள்,…

‘காலைலயே எங்கே கிளம்புறாரு’ என யோசித்தவள், அப்போது தான் மணி பக்கம் பார்வையை திருப்ப அது எட்டரை என காட்டியது,… “கடவுளே” வாய்விட்டே அலறியபடி எழுந்து அமர்ந்தவள்,… “இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா” என்றவாறு தன் மேலிருந்த போர்வையை விலக்கினாள்,…..

“குட் மார்னிங் நித்து” அவள் குரலை கேட்டு, அவள் விழித்து கொண்டதை அறிந்தவன்,  தன் வேலையில் ஈடுபட்டபடியே காலை வணக்கத்தை வைத்தான்,…

“எதுக்காக என்னை எழுப்பி விடல நீங்க, மணி ஒன்பதாக போகுது, இவ்ளோ லேட்டா நான் தூங்கி எழுந்து போனா பாட்டி என்னை பத்தி என்ன நினைப்பாங்க” என்றாள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு,…

“ஒன்னும் நினைக்க மாட்டாங்க, நீ
ஒரு மணிக்கு எழுந்து போனாலும் பாட்டியோ தாத்தாவோ உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க, நீ அதை நினைச்சு ஃபீல் பண்ண வேணாம், உன் வீட்ல எப்படி இருப்பியோ அப்படியே இங்கேயும் இரு நித்து, பாட்டியும் தாத்தாவும் கூட அப்படி தான் எதிர்பார்ப்பாங்க” என்றான்,…

“என்ன இருந்தாலும் நான் இந்த வீட்டு மருமக இல்லயா, லேட்டா எழுந்து போனா வெளியாளுங்க என்ன நினைப்பாங்க, இங்க வேலை செய்றவங்க கூட ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க, பாட்டிக்கும் இதனால அவமானம் இல்லயா, உங்க வீட்டு மருமக ஏன் இப்படி இருக்கான்னு எகத்தாளமா பேசிட கூடாதுல, என்னால அவங்கள யாரும் தப்பா பார்க்க கூடாது” என்றவளை புருவம் உயர்த்தி பார்த்தவன்,… “ம்ம்ம்…. குடும்ப பொண்ணா மாறிட்ட நித்து நீ, சரி நான் டியூட்டிக்கு கிளம்புறேன், டைமாச்சு” என்று தன் பெல்ட்டை சரி செய்தபடி, காக்கி சட்டையில் கம்பீரமாக தன் முன் நின்றவனை மலங்க மலங்க பார்த்தவள்,… “என்ன ட்ரஸ் இது” என்றாள்,…

“என்ன ட்ரஸ்னா? இதான் என் யூனிஃபார்ம்” என்றான்,….

“நீங்க நீங்க வாட்ச்மேனா?” அவள் கேட்ட கேள்வியில் நெஞ்சடைக்க பார்த்தவன்,… “என்னை பார்த்தா உனக்கு வாட்ச்மேன் வேலைக்கு போற மாதிரியா இருக்கு” என்றான் பாவமான முகத்துடன்,…

“இந்த பிரவுன் கலர் யூனிபார்ம் வாட்ச்மேன் தானே போடுவாங்க” என இழுத்துக் கொண்டே கேட்டவளுக்கு, ஏதோ ஒன்று குழப்பம் ஏற்பட, அவனோ “எந்த வாட்ச்மேன்க்குமா கன் கொடுகிறாங்க,” என தன் துப்பாக்கியை சுட்டிக்காட்டி கூறியவன் “அண்ட் என் சோல்டர்ல இருக்க ஸ்டார்ஸ் இதெல்லாம் பார்த்துமா உனக்கு என்னை வாட்ச்மேனா நினைக்க தோணுது” என்றான்,…

“அப்படினா,… நீங்.. நீங்க போலீஸா?” அவள் சத்தியமாக எதிர்ப்பக்கவில்லை தன் கணவன் ஒரு போலீஸ் காரன் என்பதை, கொஞ்சம் தயக்கத்துடன் வினவியவள் அவனது,… “ஆமா” என்ற பதிலில் அதிர்ச்சியாய் பார்த்தாள் அவனை,…

“புருஷன் என்ன வேலை பண்ணுறானுன்னு கூட தெரியாத ஒரே பொண்டாட்டி நீயா தான் நித்து இருப்ப, ம்ஹும் ரொம்ப கஷ்டம்” என்றவன் சோர்ந்து போய் நிற்க,… “உங்க முழு பெயர் ரிஷி மித்ரனா” என்றாள் அவன் நெஞ்சில் குத்திருந்த பேஜை கண்டு,…

“வாவ்,… என்னோட நேமே உனக்கு இப்போ தான் தெரியுதா?” அவன் நக்கலுடன் கேட்க, அவனின் நக்கல் தொனி புரிந்தவள்,… “ஆமா… உங்களை நான் என்ன விருப்பபட்டா கட்டிக்கிட்டேன் உங்களோட பேக்ரவுண்ட் அனைத்தையும் தெரிஞ்சி வச்சுகிறதுக்கு” என்று அவள் தன் பக்கம் உள்ள நிதர்சனதை உரைக்க, அவனுக்கு அவள் சொன்ன அந்த வார்த்தைகள் சுருக்கென்று வலிக்க செய்தது, இதழில் புன்னகையுடன் நின்றிருந்தவனின் முகம் சட்டென்று மாறியது இறுக்கமாக,…

அவன் முக மாறுதலை கவனித்து விட்டவளுக்கு, ஒருமாதிரியாகி விட, அவள் ஏதோ பேச வரும் முன் விறுவிறுவென்று வெளியே நடந்து விட்டான் அவன், அவள் அவனை காயப்படுத்தும் நோக்கில் கூறவில்லை, அவன் கேட்ட கேள்விக்கு சட்டென்று இந்த பதில் தான் முந்திக் கொண்டு வந்தது, தான் இன்னொருவனை நேசிக்கிறேன் என்று கூறிய போது கூட புன்னகை முகம் மாறாமல் நிதானத்தை கடைபிடித்தவர், இன்று ஏன் பேசாமல் சென்றுவிட்டார், நான் நடந்ததை தானே சொன்னேன், அது தான் உண்மையென்று அவருக்கும் தெரியும், பிறகு ஏன் கோபித்து கொள்ளனும், நான் அவ்வாறு பேசி இருக்க கூடாதோ, நானும் பேசணும் என்று பேசவில்லையே, வாயில் தெரியாமல் வந்துவிட்டது என வெகு நேரமாக புலம்பி கொண்ருந்தவளுக்கு, அவன் கோபித்துக் கொண்டு போனால் தனக்கென்ன? தான் அவனிடம் கூறியது போல் அவனை விரும்பி ஒன்றும் திருமணம் செய்யவில்லையே என்று அவன் பாரா முகத்தை ஏற்றுக் கொண்டு சகஜமாக இருக்க முடியாமல், மனம் தவியாய் தவித்து கொண்டிருந்தது,…

“ரிஷி கண்ணா இன்னைக்கு வேலைக்கு கிளம்பிட்டியா என்ன? ஒரு வாரம் லீவ் போட்டிருகள்ல நீ,” யூனிபார்மில் கனகச்சிதமாய் தயாராகி வந்த ரிஷியை கண்டு வினவினார் தர்மதுரை,…

“போக வேண்டிய சூழ்நிலை தாத்தா” என அவன் பதில் கூறிக்கொண்டிருக்கும் போதே, கணவனின் சொல் காதில் விழுந்து வேகமாக அவ்விடம் வந்து சேர்ந்த செவ்வந்தி,…. “கல்யாணமான மூணு நாளையிலேயே வேலைக்கு போகணும்னு என்ன அவசியம் வந்தது ரிஷி, நீ வேலைக்கெல்லாம் போக வேணாம், அதான் லீவ் போட்டிருகள்ல முடிஞ்ச பிறகு போலாம்” என்று கட்டன் ரைட்டாக கூறினார்…

“பாட்டி,.. இம்பார்டன்ட் வொர்க் இருக்கு, நான் போய் தான் ஆகணும் பாட்டி, என் செல்ல பாட்டில, இந்த பேரன் சொன்னா கேட்பீங்க தானே, முடிஞ்சா லன்ச்க்கு வர கூட ட்ரை பண்ணுறேன்” என்றவனை கோபமாக முறைத்தவர்,…. “நான் சொன்னா கேட்க மாட்ட அப்படி தானே” என்றார்,…

“நீங்க சொன்னா நான் கேட்காம போவேனா, நீங்க சொன்னதுக்காகவே எனக்கும் உங்க பேத்திக்கும் ஹனிமூன்க்கு டிக்கட் புக் பண்ணிருக்கேன் நெக்ஸ்ட் வீக், இப்போ நான் என்னோட வேலையை கொஞ்சமாவது ஃபினிஷ் பண்ணா தான், என்னால நிம்மதியா ஹனிமூன் கொண்டாட முடியும், என்ன பாட்டி நான் சொல்றது சரி தானே” என அவன் கேட்க, ஹனிமூன் என்றதில் வாயை மூடிவிட்டவர், “சரிகண்ணா, நீ பத்திரமா போயிட்டு வா” என அவனை அனுப்பி வைத்து விட்டார்,…. பாட்டியின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டுட்டு தாத்தாவிடம் கூறிவிட்டு வெளியே வந்தான் ரிஷி,…

வாசலிலேயே அவனது காவல்துறை ஓட்டுநர் ராமையா தன் உயரதிகாரிக்காக காத்திருந்தவர், அவனை கண்டதும்,… “குட் மார்னிங் சார்” என புன்னகை முகமாக கூற, அவனும் இன்முகமாக பதில் வணக்கம் வைத்தவன் ஸ்டேஷனுக்கு போக சொல்லி உத்தரவிட்டான்,…

காவல் துறை வட்டாரத்தில் ரிஷி சிரித்து பேசும் இரு நபர்கள் என்றால் ராமையாவும் கார்த்திக்கும் தான், அதுவும் தனியாக இருக்கும் சமயம் மட்டுமே, மற்றவர்களிடத்திலெல்லாம் தன் முகத்தை இறுக்கமான வைத்துக் கொண்டே பேசுவான், இது அவர்களை பிடிக்காமல் என்றெல்லாம் இல்லை, கொஞ்சம் சிரித்து இறங்கி போய் பேசினாலும் தன் மீதுள்ள பயம் குறைந்து, வேலையில் கடமை தவறி ஏனோதானோவென்று இருந்து விடுவார்களே என்ற எண்ணத்தில் தான்,…

அவன் கைக்கு ஒரு கேஸ் வந்தால் அது எத்தனை பெரிய கேஸாக இருந்தாலும் சரி ஒரு வாரத்திற்கு மேல் இழுத்தடிக்க விடவிரும்பாமல் முடித்து வைப்பான், அவனுக்கு வேண்டிய தகவல்களை அவனுக்கு கீழ் பணிபுரிபவர்கள் டக்கு டக்கென்று சேகரித்து கொடுக்க வேண்டும், கொஞ்சம் தாமதப்படுத்தினாலும் வார்த்தையால் குதறி எடுத்து விடுவான்,…

ஸ்டேஷன் வந்து சேரும் வரை பொதுவாக ராமையாவுடன் கதைத்து கொண்டு வந்தவன், ஸ்டேஷன் வந்ததும் முகத்தில் இறுக்கத்தோடு சேர்த்து ஒருவித ஆக்ரோஷமும் சேர்ந்து வந்து ஒட்டிக் கொண்டது,..

வேக நடையுடன் ஸ்டேஷனிற்குள் நுழைந்தவன், தனக்கு கூறும் மரியாதைகளை எல்லாம்  சிறு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டு,.. தன் முன்னே வந்து சல்யூட் அடித்து விட்டு நின்ற காரத்திக்கிடம்,… “எங்க அவன்?” என்றான் இறுகிய குரலில்…

“லாக்கப்ல இருக்கான் சார்” என காவலரிடம் கூறி அவன் இருக்கும் லாக்கப்பை திறந்து விட்டதும், ரிஷி உள்ளே சென்றான், விழிகளை மூடிக் கொண்டு ஒய்யாரமாய் கால் மேல் கால் போட்டு படுத்திருந்தான் நேற்றைய இரவு அவனையும் அவன் மனைவியையும் தாக்க வந்தவன்,…

அவனை ரிஷி புருவங்கள் சுருங்க பார்த்து நிற்கவும், கார்த்திக் முன் வந்து,…”டேய் எழுந்துடுடா சார் வந்திருக்காரு” என்றவாறு அதட்டி, அவனது தோள் சட்டையை பிடித்து இழுத்து நிற்க வைத்தான்,….

ரிஷியை நேருக்கு நேராக கண்டவன், விழிகளில் கொஞ்சமும் பயம் இல்லாமல் இதழில் எகத்தாள சிரிப்புடன் நிற்க,.. அவனை உறுத்து விழித்தவாறே,… “ஏதாவது சொன்னனா கார்த்திக்” என்றான்…

“இல்ல சார், எதுவும் வாய் திறக்கல, நீங்க அடிக்க வேணாம்னு சொன்னதால நானும் அடிச்சு விசாரிக்கல, அடிச்சு விசாரிச்சிருந்தா சொல்லிருப்பான்னு தோணுது சார்” என்றான்,…

“அப்படியா” என்று தன் கூர் விழிகளால் அவனை ரிஷி அளவிட… “அடிச்சு விசாரிச்சாலும் நான் வாயை திறக்க மாட்டேன், கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு இல்ல சார், இல்லனா நீங்களும் உங்க மனைவியும் பொணமா கிடந்திருப்பீங்க உங்க வீட்டு நடு முற்றத்துல” என்றதும் சினம் பொங்கியது அவனுக்கு,….

கரத்தை நீட்டி ரிஷி ஏதோ கேட்க, அவனது கரத்தில் லத்தி கொடுக்கப்பட்டது, “என்ன சார் அடிக்க போறீங்களா? நீங்க என்ன தான் அடிச்சாலும் நான் வாய் திறக்க மாட்டேன்” அவன் மேலும் எகத்தாளமாய் பேச,… “நீ வாய் திறக்க வேணாம்” என்றவன், தன் கையில் போட்டிருந்த பிளாட்டின காப்பை மேலே இழுத்து விட்டு, அவனை அடிக்க தொடங்கினான், அடித்தான் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது அதற்கும் மேல் வெளு வெளுவென்று வெளுத்தான்,…

சற்று நேரத்திற்கு முன்னர் அவ்வளவு எகத்தாளமாய் பேசியவன்,… “விற்றுங்க சார், நான் சொல்லிடுறேன்” என கத்தி கதற அவன் அப்போதும் விடவில்லையே, அவனது எகத்தாள திமிரு பேச்சிற்க்காக அவனை அடிக்கவில்லை, நேற்றைய இரவு அவன் மனைவியை கொல்ல துணிந்ததற்காக தான் போட்டு வெளுத்து கட்டினான், இன்னும் கொஞ்சம் மிஸ் ஆகிருந்தால் நான் செத்துருப்பேன் என்று அவள் கூறிய வார்த்தை அவன் உயிர் வரை சென்று வலிக்க வைக்க, அவளை தாக்க நினைத்தவனின் மீது வெறி வந்தது, இரவே கார்த்திக்கிற்கு போன் செய்து அவன் ஓடிக் கொண்டிருக்கும் இடத்தை குறிப்பிட்டு, தகவல் கொடுத்து விட்டான், அதன்பெயரில் கார்த்திக்கும் அவனை கையும் களவுமாக பிடித்து ஜெயிலில் அடைத்திருந்தான்,…..

இன்று ரிஷி ஸ்டேஷனுக்கு வந்தது கூட இவனின் தோலை உறிக்க வேண்டுமென்ற நோக்கில் தான், உடை கிழிந்து, உடலில் பல இடங்களில் ரத்தம் வழிந்தபடி கதறி கொண்டிருந்தவன், வலி தாங்க இயலாமல் மயங்கி விட, அப்போதும் ரிஷியின் ஆத்திரம் தணியவில்லை, சுற்றி நின்ற காவலாளிகளுடன் சேர்ந்து கார்த்திக் உட்பட அவனது செயலில் எச்சில் விழுங்க நான்கடி தள்ளியே நின்றனர், எந்த ஒரு குற்றவாளியையும் அவன் இது போல் அடித்து துன்புறுத்தியது கிடையாது, முக்கால்வாசி கேஸில் கார்த்திக் தான், ரிஷியின் கட்டளையின் பெயரில் அடிகள் கொடுப்பதை எல்லாம் கையிலெடுப்பான், ரிஷி தன் மிரட்டலான பேச்சில் குற்றவாளிகளின் வாயிலிருந்து உண்மையை கறப்பான் அவ்வளவே,…

இன்னும் அடிக்க விட்டால் அவன் செத்துவிடுவான், இதனால் ரிஷிக்கு தான் பிரட்சனை என அறிந்த கார்த்திக் முன்வந்து,… “சார் அவன்  செத்துற போறான் சார், அப்புறம் பிரட்சனையாகிடும்” என்ற குரலில் கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவன்,… “இவன் கண் விழிச்சதும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணு” என கூறிவிட்டு விறுவிறுவென்ற நடையுடன் தனது அறைக்கு சென்று விட்டான்….

‘இவன் கண்விழிக்கிற நிலமையிலயா இருக்கான், ஒரு வேளை கண்விழிச்சாலும் அவர் இன்னும் ஒரு அடி அடிச்சாலே மரணலோகத்துக்கு போயிடுவானே’ என்ற புலம்பலுடன் கார்த்திக் வெளி வந்தான் செல்லை விட்டு,…

மற்ற செல்லிலுள்ள சிறு குற்றங்கள்  செய்த குற்றவாளிகள் அனைவரும் வியர்வை வடிய, நெஞ்சு படபடக்க மூலைக்கு ஒருவராய் அமர்ந்திருந்தனர், அடிவாங்கியவனின் கதறல் அந்தளவிற்கு அவர்களை குலை நடுங்கச் செய்திருந்தது, சில குற்றவாளிகள் பயத்தில் இனி தவறெதுவும் செய்ய கூடாதென்று கூட மனதில் பதிய வைத்துக் கொண்டனர்,….

அனுமதி கேட்டுவிட்டு உள்ளே நுழைந்த கார்த்திக்கிடம்,.. “மூணு நாளா என்னென்ன கேஸ் வந்தது, யாராரு வந்து போனாங்க, ரெக்கார்ட் கொண்டு வாங்க” ரிஷியின் ஆர்டரை தொடர்ந்து வேகமாக சென்று அதனை எடுத்து வந்து அவனிடம் ஒப்படைத்தான் கார்த்திக்,…

அதனை பார்வையிட்டவாறே சில கேள்விகளை வைத்து பதிலை பெற்றுக் கொண்டவனின் விழிகளில்,.. “கருணாகரன்” என்று எழுதிருந்த கோப்பு ஒன்று கண்ணில் பட்டது,…

அவன் அதனை கையில் எடுக்க,… “கருணாவோட கேஸ் ஃபைல் சார், நீங்க சொன்னது போல அவனை பற்றின அனைத்து தகவலையும் திரட்டியாச்சு, அனைத்து டீடைல்சும் இந்த ஃபைல்ல இருக்கு” என்றான் கார்த்திக்,…. சில நொடிகள் அந்த ஃபைலை வெறித்தவன், அதனை திறந்து படிக்க ஆரம்பித்தான்,…

இங்கு நித்யா நிமிடங்கள் கடந்தும் கணவனை நினைத்தபடியே அமர்ந்திருந்தாள், நேரம் போவதை அறிந்து எழுந்து குளித்து வந்தவள், புடவை ஒன்றை சுற்றிக் கொண்டு வரவழைக்க பட்ட புன்னகையுடன் கீழே சென்றாள், பாட்டியும் தாத்தாவும் அவளது முகம் கொஞ்சம் வாடியிருந்தாலும் என்ன ஏதென்று நோண்டி நோண்டி விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள், அதனாலேயே தன் கணவனின் பாரா முகத்தால் வாடியிருந்த தன் முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தவள், அதே சிரிப்புடன் தான் அன்று வலம் வந்தாள், கணவனுக்காக அவனுக்கு பிடித்த உணவுகளை பாட்டியிடம் கேட்டு அறிந்து சமைத்து வைத்தாள், அவன் தான் உணவுண்ண வரவில்லை, ‘பல சமயம் இப்படி தான் கண்ணு நடக்கும் அவன் வேலை அப்படி’ என தர்மாவும் செவ்வந்தியும் தான் அவளுக்கு சொல்லி புரிய வைத்தனர்,….

அன்று அவளுக்கு உணவு கூட சரியாக இறங்கவில்லை, ரிஷியை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள், என்னவோ தெரியவில்லை தன் வார்த்தைகளால் அவன் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு சென்றுவிட்டது மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது பாட்டியிடம் பேச்சு கொடுத்தாள்… “உங்க பேரன் போலிஸா பாட்டி” என்றாள்,….

அவளை வியப்பாய் பார்த்தவர்,…”ஏன் கண்ணு உனக்கு தெரியாதா அதை பத்தி, அன்னைக்கு நானும் கூட உன்கிட்ட சொன்னேனே” என்றவர், அன்று ரிஷியின் தாய் தந்தையை பற்றி கூறிய போது அவன் தந்தை போல் அவனும் போலீஸ் ஆக ஆசை பட்டதிலிருந்து ஆரம்பித்து அன்று கூறியதை இன்றும் கூறி முடிக்க, நித்யா வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டாள்,…

அன்று செவ்வந்தி, ரிஷி தன் தாய் தந்தையை இழந்து கஷ்ட்டப்பட்டான் என கூறிய விஷயம் மட்டுமே மனதில் பதிந்தது, மற்ற அனைத்தும் அவள் கருத்தில் பதியவே இல்லை, இப்போது அதனை எண்ணி  தன்னையே திட்டிக் கொண்டாள் நன்றாக, தான் மறந்து விட்டதாக கூறி பாட்டியிடம் மன்னிப்பு வேண்டியவள், அறைக்கு வந்துவிட்டாள்….

அவனில்லாத அறை அவளுக்கு வெறுமையை தந்தது, விழிகளை மூடிக் கொண்டு படுத்திருந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கி போனாள், அவள் உறக்கத்திலிருந்து விடுபடும் போது கணவனின் அருகாமையிலிருந்தாள்,….

‘கனவு கண்டு கொண்டிருக்கிறோமா’ என்ற குழப்பத்தில் விழிகளை கசக்கிவிட்டு பார்த்தவளின் கண்களிற்க்கு மீண்டும் அவன் முகம் தான் தெரிந்தது, “கனவில்ல நித்து உண்மையாகவே நான் உன் பக்கத்துல தான் இருக்கேன்” அவன் எண்ணம் புரிந்து விழிகளில் புன்னகையுடன் கூறியவன்,… “ஏன் நித்து என்னை நீ அவ்ளோ மிஸ் பண்ணியா என்ன?” என்றான்,

“இல்ல” என்று வெடுக்கென்று கூறியவள்,….”எப்போ வந்தீங்க, காலையில, காலையில சண்டை பிடிச்சிட்டு போனீங்க, இப்போ ஏன் என் பக்கத்துல வந்தீங்க” என்றாள் அவனை கொஞ்சமும் விட்டு விலகாமல்,….

“சண்டையா நானா? நான் எப்போ உன்கிட்ட சண்டை பிடிச்சேன்” அவன் குழப்பமாய் கேட்க…. “அதான்… நான் ஏதோ சொன்னேன் அதுக்கு கோவிச்சிக்கிட்டு போனீங்களே” என்றாள், மறந்து போனவனுக்கு மீண்டும் தானே நியாபக படுத்தி விட்டால் மறுபடியும் விலகி போய்விடுவானோ என்ற பயத்தில் திக்கி திக்கி தான் கூறினாள்,…

“அதுவா? ப்ச் நீ சொன்னதை கேட்டு கொஞ்சம் அப்சட் ஆகிட்டேன் அவ்ளோ தான், மத்தபடி சண்டையும் இல்ல கோவிச்சுக்கவும் இல்ல, என் நித்து மேல நான் எப்படி கோப படுவேன்” என்றான் விழிகளில் காதல் பொங்க,….

அவன் விழிகளில் தெரிந்த காதலில் மொத்தமாய் உருகி போனவள்,… “ஏன்  என் மேல கோப பட மாட்டீங்களா” என்றாள்,..

“ம்ஹும்” அவன் கூறவும்,… “நான் கருணா கூட போயிட்டா கூடவா” என்று கேட்கவும், சட்டென்று முகமாறியவன், நொடியில் அதனை மாற்றிக் கொண்டு,… “ஆமா, நீ யார் கூட போனாலும் எனக்கு கோபம் வராது” என்றான், அவளுக்கு தற்போது  அவன் கூறியதை கேட்டு என்ன யோசிக்கவென்பது என்று கூட தெரியவில்லை, மனம் ஒரு மாதிரி பாரமேறி போனது போல் இருந்தது, அவனது மார்பில் தலை வைத்து படுத்துக் கொண்டவளின் மூளை பலதை பற்றி சிந்திக்க தொடங்கியது,…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்