
மாயோன் 9
சூரியனின் கதிர்கள் அழகாய் பூமியில் படர்ந்தது…
மயக்கம் தெளிந்து கண்களை சுருக்கிய கீர்த்திக்கு உடல் எல்லாம் அடித்து போட்டது போல வலித்தது… விக்ரமன் கொடுத்த மயக்க மருந்தின் தாக்கத்தால்…
இமைகள் வலிக்க, மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தாள் மங்கை அவள்…
அந்த அழகான பெரிய அறையில் அவள் மட்டும் தனித்திருக்க… கண்விழித்து பார்த்தவள், ஒரு கணம் அதிர்ந்து போனாள்…
” இது எந்த இடம்… நான் எப்படி இங்க வந்தேன்? ” என்றவள் தன் தலையை உலுக்கி நேற்று என்ன நடந்தது என்று யோசிக்க முயன்றாள்…
யோசித்து பார்த்தவளுக்கு தன் குடும்பத்தை நினைத்து விழியோரம் கண்ணீர் துளிர்த்தது…
” ஒரே நாள்ல என் வாழ்க்கையே இப்படி தடம் மாறி போய்டுச்சே.. எப்பவும் மாமா சொல்லும் வாழ்க்கையில் எந்த நொடியிலும் என்ன வேணும்னாலும் நடக்கும்ன்னு அது உண்மை தான் போல… நீ ஏன் மாமா என்னை தனியா விட்டுட்டு போன… நான் உன்னை தேடுவேன்னு உனக்கு தெரியாதா? ” என்றவளின் விழியோரம் நீர் கசிய… மனம் கனத்து போனது…
அந்த நேரம் யாரோ அறை கதவை தட்டியபடி உள்ளே வரவும்…
அதனை உணர்ந்தவள் வாசல் பக்கம் திரும்பி பார்க்க… காபி கப் உடன் உள்ளே நுழைந்தான் அபிமன்யூ…
அவனை பார்த்தவள், அதிர்ந்த படியே கட்டிலில் இருந்து எழுந்து கொள்ள… அவள் செயல் கண்டு மெல்ல இதழ் விரித்து சிரித்து கொண்டான் அவன்.
” எதுக்கு இவ்ளோ பதட்டம் ? ” என்று கேட்டவன் அவளிடம் வந்து காபி கப்பினை நீட்ட… அல்லி விழி விரித்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் கீர்த்தி.
” என்ன பார்க்குற? ம்ம்ம் பிடி ” என்றவன் அவள் கையை பிடித்து கொடுக்க… அவளோ அவன் தொட்ட கரத்தினை பார்த்தபடியே அவனையும் குழம்பியபடியே பார்த்தாள்.. அவனோ எந்த வித அலட்டலும் இல்லாமல் அருகே இருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
காபி கப்பினை கையில் வைத்த படி அவனை திரு திருவென பார்த்தவளின் கண்களை பாராது, ” இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போற? குடி ” என்றவன் தன் அலைபேசியை எடுத்து பார்க்க தொடங்கினான்…
அந்த இடத்தில் அவனை கண்டவளுக்கு ஒன்றுமே புரியவில்லை ‘நேத்து அப்படி எல்லாம் நடந்து கொண்டவன் இப்போது காபி கொண்டு வந்து கொடுக்கிறான்… முதலில் நான் எப்படி இங்க வந்தேன், ‘ என்றவள் அவனையே பார்த்து கொண்டிருக்க…
” நேத்து அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துட்ட! நான் தான் பாவம் சின்ன பொண்ணுன்னு இங்க அழைச்சிட்டு வந்தேன் ” என்று அவளது மனதை உணர்ந்து கூறினான் அபி…
‘தான் கேட்க வேண்டும் என்று நினைத்ததை அவனே கேட்கிறானே எப்படி? ‘ என்று நினைத்தவள் ” நான் உங்க கிட்ட எதுவும் கேட்கலயே… நீங்களே பதில் சொல்லுறீங்க? எப்படி? ” என்று அவள் முகத்தை சுருக்கி கேட்க
” அது தான் உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே… ம்ம் அப்ரோம் அந்த நேரம் நீ எதுக்காக அங்க வந்த? ” என்றவன் நிதானமாக அவளை பார்க்க…
” அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல மாட்டேன்… நான் போகணும்.. நேத்து நீங்க என்னை அத்தனை பேரு முன்னாடி எப்படி எல்லாம் அவமான படுத்தினீங்க நான் ஏன் உங்க கிட்ட சொல்லணும்… சொல்ல மாட்டேன்” என்றவள் சிறுப்பிள்ளையாக முகத்தை சுளிக்க… சிரித்து கொண்டான் அபி.
” சரி சொல்ல வேண்டாம், அப்போ எங்க போகணும்னு சொல்லு நானே கொண்டு போய் விடுறேன் ”
” அதெல்லாம் ஒன்னும் வேணாம் நானே போய்க்குவேன்.. எனக்கும் கடவுள் கால் கொடுத்து இருக்காரு ”
‘ அது சரி… இந்த வாய் மட்டும் குறையுதா பாரு’ என்று எண்ணி தன் தலையை கோதி கொண்டவன் ” ஆனால் யாருக்கோ பயந்து ஓடி வந்த மாதிரி இருந்தது… அது தான் உதவி பண்ணலாமேன்னு கேட்டேன் ” என்றான் அவளது முகத்தையும் பாராமல், அலைபேசியை பார்த்தபடி…
” எனக்கு யாரை பார்த்தும் பயம் இல்லை, நான் எல்லாம் லேடி ஜாக்கி ஜான், பறந்து பறந்து அடிச்சா பக்கத்துல ஒருத்தரும் நிற்க முடியாது… ” என்று அவள் பெருமை பேச…
” ஹா ஹா ஆமா அப்படி தான் சொல்லிகிட்டாங்கா ” என்ற அபி… இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்…
இருக்கையில் இருந்து எழுந்து வந்தவன், அவளை அழுத்தமாக பார்த்தவாறே அருகில் நெருங்கி வர… அவளோ அவனை மிரட்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்…
” இப்போ எதுக்கு பக்கத்துல வரிங்க? ” என்று கேட்டவள் பின்னால் நகர்ந்து நிற்க…
அவளை அழுத்தமாக பார்த்தபடியே சட்டையை முட்டி வரை மடக்கி விட்டவன்… ” ஒரு ட்ரையல் பார்க்கலாமா ” என்று கூறி வசீகரமாக புன்னகைத்தான்…
” எதுக்கு ட்ரையல் பார்க்கணும் ” என்றவள் பயத்தில் அப்படியே அருகேயிருந்த மெத்தையில் அமர்ந்து கொண்டாள்…
” பெர்பெக்ட் ” என்று அவளை நெருங்கி வந்த அபி அவளது கையில் இருந்த காபி கப்பினை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்தவன், ஒரு கையை மெத்தையில் ஊனி கொண்டு… அவளது முகத்திற்கு நேராக தன் முகத்தை கொண்டு போனான், அவனது உஷ்ண பெருமூச்சு அவளது மனதில் பயத்தை உண்டாக்க… ” என்ன பண்ணுறீங்க தள்ளி போங்க…அன்னிக்கு கூட நீங்க இப்படி தான் தப்பு தப்பா பக்கத்துல வந்து என்ன என்னமோ பண்ணீங்க, இப்போவும் அப்படி தான் பண்ண பாக்குறீங்க… உங்க பார்வையே சரி இல்லை, தப்பு தப்பா பாக்குறீங்க, நான் போகணும் விடுங்க ” என்று அழும் குரலில் கூறியவள், அவனை கலக்கத்துடன் பார்க்க…
உதட்டோரம் மறைத்த புன்னகையுடன் இன்னும் அவளை நெருங்கியவன்… விசமமாக அவளை பார்த்து பெருமூச்சி விட… அவனது மூச்சி காற்று பட்டு பெண்ணவளின் மேனி சிலிர்த்து அடங்கியது…
” இங்க பாருங்க… தள்ளி போங்க ” என்று அவனிடம் இருந்து விலகும் பொருட்டு நகர்ந்தவள் அப்படியே மெத்தையில் சாய்ந்து கொள்ள… அவளது இருபக்கமும் கையை ஊனி கொண்டு அவளை தாபம் பொங்க பார்த்தவன்… அப்படியே அவள் அருகில் சரிந்து படுத்து கொண்டான்…
கிடைத்த அந்த நொடியில் வேகமாக அவனிடம் இருந்து எழுந்து செல்ல முயன்றவளின் மீது கையை அணையாக போட்டு தடுத்து பிடித்தவன் நொடியில் அவள் மீது படர்ந்தான்…
அவளோ அவனது மார்பில் கரம் பதித்து அவனை தன்னிடம் இருந்து பிரிந்து தள்ள முயற்சி செய்ய… அவளது இரு கரத்தையும் தன் ஒரு கரத்தால் அடக்கி பிடித்தவன்… அவளது கைகளை அவளது தலைக்கு மேலே தூக்கி மெத்தையில் அழுத்தி பிடித்தான்… இவையாவும் ஒரு நொடியில் நிகழ்ந்து விட… பெண்ணவளோ அவனை அதிர்ச்சியுடன் எதிர் நோக்க… அவனோ அவளது இடை வளைவில் கை கொடுத்து தன்னோடு இறுக்கி கொண்டவன்… அவளை பார்த்து ஒற்றை கண் சிமிட்டி வசீகரமாக சிரித்தான்…
பயத்திலோ? பதட்டத்திலோ ? அவளது முகம் முழுவதும் முத்துகளாய் வியர்வை துளிகள் அரும்பி இருக்க… அதனை பார்த்தவன் இதழ் குவித்து அவளது வதனத்தில் இதமாக ஊதி விடவும்… உணர்ச்சியின் பிடியில் பெண்ணவளின் கண்கள் தானாக மூடி கொண்டது…
அவள் செயல் உணர்ந்து தனக்குள்ளேயே சிரித்து கொண்டவன் “என்ன ஆச்சு லேடி ஜாக்கி ஜானுக்கு? இப்போ பறந்து பறந்து அடிக்க மாட்டீங்களா? ஒருவேளை அதுக்கு மூட் இல்லையோ ? ” என்று கேட்டவன் அவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்க்க… அவனது கேள்வியில் சற்றென்று கண்களை திறந்தவள், சினம் கொண்டு அவனை தன்னிடம் இருந்து தள்ள முயன்றாள்… அவள் செயல் அவனிடம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை அவனோ அசையாமல் இன்னும் அவள் மீது தன் உடல் படுமாறு படர்ந்து கொண்டான்…
” எழுந்து போங்க… ” என்றவள் அவனிடமிருந்து மீண்டும் மீண்டும் விலக பார்க்க… அவனோ புன்னகை முகம் மாறாமல் அவளது முகத்தை பார்த்து கொண்டிருந்தான்…
ஒருகட்டத்தில் இயலாமையின் காரணமாக கண்ணீருடன் தன் முகத்தை திருப்பி கொண்டவள்… அவனை விலக்க எந்த முயற்சியும் எடுக்காமல் படுத்திருக்க… அவளது மனம் உணர்ந்து சிறு முறுவலுடன் அவளை விட்டு விலகி எழுந்து கொண்டான்… அபிமன்யூ
அவன் எழுந்த பின்பும் பெண்ணவள் அதே இயல்பில் படுத்திருக்க…. ” எழுந்திரு ” என்றவன் அவளது கைகளை பிடித்து எழுந்து அமர வைத்தவன்… மேசையில் இருந்த காபி கப்பினை எடுத்து அவளிடம் நீட்டினான் ” குடிச்சிட்டு எங்க போகணுமோ போ… ” என்று கூற…
அவனை வெற்று பார்வை பார்த்தவள் காபியை குடிக்க தயங்கியபடி நிற்க…
” இப்போ குடிக்கிறியா இல்லை… ” என்றவன் அவளது கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுக்க… அவளோ திகைத்து நின்றாள்…
அதனை சிறிதும் பொருட்படுத்தாதவன்,தன் விரல் கொண்டு அவளது நெற்றியில் கோலமிட்டவாறே கழுத்து வழியே பயணிக்க தொடங்க… பயந்து போன கீர்த்தி
” நா…நான் குடிக்கிறேன் ” என்றவாறு அவனிடம் இருந்து விலகி வேகவேகமாக முழுவதையும் குடித்து முடித்தாள்… அதனை இதழிகளில் சிறு முறுவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான் அபி…
” ம்ம் இப்போ சொல்லு எங்க போகணும் ? ” என்று அவன் மீண்டும் கேட்க…
” எங்கயும் இல்லை ? ”
” ஒஹ் அப்போ எங்கூடவே இருக்கணும்னு ஆசை வந்துடுச்சா ? ” என்று சிரித்த படியே அவன் கேட்க…
” அப்படி எல்லாம் இல்லை… எனக்கு போக தெரியும்… எனக்கு யாரு உதவியும் வேணாம்… யாரும் என் கூட இருக்கணும்னு நான் ஆசை படல ”
” ஒஹ் சரி சரி… ஆனால் இப்போ நீ உண்மையை சொல்லல அப்படின்னா இன்னும் கொஞ்சம் நேரத்துல மேல போய் சேர்ந்திடுவ ! பரவாயில்லையா? ” என்று சிரித்தபடியே கூறிய விக்ரமன், இருக்கையில் சாய்ந்து அமர…
” என்ன சொல்லுறீங்க? ”
” ம்ம்ம் நீ குடிச்ச காபில பாய்சன் கலந்து இருக்கேன்… சோ… இன்னும் ஒரு பத்து நிமிஷம் தான் … உனக்கான நேரம் ” என்றவன் அங்கிருந்த கடிகாரத்தை குறிப்பிட்டு காட்டினான்…
” ஐயோ அப்போ நான் செத்து போய்டுவேணா? ”
” ம்ம்ம்…ஆனால் நீ எங்க போறேன்னு சொன்னால் ஏதாவது மாத்து மருந்து கொடுத்து உன்னை காப்பாத்த முயற்சி பண்ணுறேன் “என்று அவன் கூற … அமைதியாகவே நின்றாள் பெண்ணவள்… அவளுக்கு தன்னுடைய விஷயத்தை அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை… மேலும் இவனிடமும் நடந்தவற்றை கூற போய்… அந்த போலீஸ் காரர்கள் போல இவனும் தன்னை பைத்தியம் என்று நினைத்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு அதிகமாக இருந்தது…
அவளது யோசனை பூசிய முகத்தை பார்த்தவன் ” இப்போவே உனக்கு தொண்டை எல்லாம் வறண்ட மாதிரி இருக்குமே ” என்று கூற… அவளுக்கும் அப்படி தான் இருந்தது… ( அது வெறும் மனபிரம்மை பெண்ணே அவனை நம்பாதே)
” அது ஒன்னும் இல்லை விஷம் வேலை செய்யுது ” என்று கூறி அவன் மீண்டும் அவளை பயம் கொள்ள வைத்தான்…
” தலை கூட சுத்துற மாதிரி இருக்குமே ? ” என்று அவன் மீண்டும் கூற… அவளுக்கு அது எல்லாம் நடப்பது போல பிரம்மை உருவாக தலையை பிடித்து கொண்டு மெத்தையில் அமர்ந்து கொண்டாள்…
அதனை பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன் ” அவ்ளோ தான் இன்னும் மூணு நிமிசம் தான் இருக்கு ” என்று கூற… தன் குடுபத்திற்காக தானாவது உயிரோடு இருக்க வேண்டும் என்று எண்ணியவள்…
” அது நான் தமிழ் நாட்டுக்கு போகணும்… ” என்று சற்றென்று கூறினாள்…
” எதுக்கு ? ” என்று அவன் கேள்வியாக அவளை பார்க்க…
” அங்க எங்க அப்பா வீடு இருக்கு அங்க போகணும் ”
” ஒஹ் அப்போ இவ்ளோ நாள் எங்க இருந்த ? ”
” எங்க அம்மா,அக்கா மாமா கூட… அப்பா இறந்து போன உடனே இங்க வந்துட்டோம் ” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது…
” ம்ம்ம் இப்போ அவங்க எல்லாம் எங்க இருக்காங்க ” என்றவன் எழுந்து வந்து அவள் அருகில் நிற்க… தன் எதிரில் இருப்பவன் தான் தன் எதிரி என்று அறியாத பேதை பெண்ணோ எழுந்து நின்று அவனை வலியுடன் பார்த்தவாறே ” தெரியலை ” என்று தலையை ஆட்டி கூற… அவளது கண்களில் தெரிந்த வலி விக்ரமனை ஏதோ செய்தது… அவனும் அந்த வலியை அனுபவித்தவன் அல்லவா? தன்னை மறந்து அவளது வலிக்கு ஆதராவாகி அவளை அணைத்து கொண்டான்…
அவளது விழிநீரை கண்டவனுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வலி… இதயத்தை துளைத்து கொண்டிருந்தது…
ரணம் மிகுந்து அவனது அணைப்பில் நின்றுகொண்டிருந்தவளுக்கு அது எதையும் உணரும் பக்குவம் இல்லை…
முதலில் தன்னிலை உணர பெற்ற விக்ரமன்… அவளை விட்டு விலகி நிற்க… அப்போது தான் அவளும் நிதானம் அடைந்தாள்…
” நானும் இன்னிக்கு சென்னை தான் கிளம்புறேன்… என் கூடவே வா நானே உன்னை உன் அப்பா வீட்டுல விட்டுடுறேன் ” என்று கூறியவன் அவளது தலையை இதமாக வருடி கொடுக்க… அந்த வருடல் பெண்ணவளுக்கு மகிழனை ஞாபக படுத்த… தன்னையும் மீறி கதறி அழுதவள் அப்படியே கீழே அமர்ந்தாள்…
அவளது அழுகையை பார்த்த விக்ரமனுக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ” ஓகே ரிலாக்ஸ் என்ன ஆச்சு ஏன் இப்போ அழகுற? ” என்று கேட்க… அவளோ இன்னும் அழுது கொண்டே இருக்க… ஆழ்ந்த பெருமூச்சு விட்டவன் நொடியில் அவளது முகத்தை தன் கைகளில் தாங்கியவன் ” ஷ் ” என்று அதட்டி கூற… அவளோ அவனது முகத்தை விலுக்கென்று பார்த்தவள்… பயத்தில் அழுகையை விழுங்கி கொண்டாள்…
தன் பெரு விரல் கொண்டு அவளது கன்னத்தில் வடிந்த கண்ணீரை துடைத்தவன் ” ஆர் யூ ஓகே ” என்று கேட்க… ” ம்ம்ம் ” என்று பொம்மை போல தலையாட்டினாள் கீர்த்தி…
பின்னர் அவளை விடுத்து எழுந்து கொண்டவன் ” ஈவினிங் பிளைட் இருக்கு… ரெடி ஆகி இரு… ” என்று கூறியவன் வாசல் வரை சென்று விட்டு மீண்டும் ஏதோ எண்ணம் தோன்றியவனாக உள்ளே வந்தவன் கீர்த்தியை பார்த்து
” கொஞ்சம் எழுந்து நில்லு ” என்று கூற.. புரியாமல் முழித்தவள்…
” எதுக்கு ” என்று தயங்கியபடியே கேட்க…
” நில்லு சொல்லுறேன் ” என்ற விக்ரமன் கதவில் சாய்ந்த படி நிற்க,
எழுந்து நின்றாள் கீர்த்தி…
அவளை கண்களில் அளவெடுத்தவன் அப்படியே நிற்க… அவன் பார்வை பதியும் இடம் கண்டு பெண்ணவள் திரும்பி நின்றுகொண்டாள்…
அவள் திரும்பி கொள்ளவும் ” என்ன ஆச்சு? ” என்று உதட்டோரம் வெளிப்பட்ட புன்னகையுடன் அவன் கேட்க…
” எதுக்கு இப்படி குறு குறுன்னு பாக்குறீங்க? ” என்று கேட்டாள் கீர்த்தி
” பார்க்காமல் எப்படி உனக்கு ட்ரெஸ் எடுக்க முடியும்? இதே ட்ரெஸ்ல உன்னை எப்படி இங்கேயிருந்து அழைச்சிட்டு போக முடியும்? பொண்ணுங்க கிட்ட சைஸ் கேக்குறது நாகரீகம் இல்லை அதுக்கு தான்”
“அதுக்கு பொண்ணுங்களை இப்படி தான் குறுகுறுவென பார்ப்பீங்களா? ” என்று சினம் துளிர்க்க பேசினாள்.
” பொண்ணுங்களை எல்லாம் இல்லை… உன்னை மட்டும்… இப்படி பார்க்கலாம் ” என்று அவன் அழுத்தி கூற… கீர்த்தியோ மீண்டும் புரியாமல் முழித்தாள்… அவனோ அவளை மேலும் சங்கட படுத்த விரும்பாதவன் அவ்விடத்தில் இருந்து அகன்றான்…
வெளியே வந்தவனுக்கு சத்யனிடம் இருந்து அழைப்பு வந்தது… அழைப்பை ஏற்றவன் ” சொல்லு சத்யா? ” என்க…
” சார்… இன்னும் ரெண்டு வாரத்தில் லாஸ்ட் ஹியரீங் என்ன பண்ண போறோம்? இதை வாய்ப்பை இழந்துட்டால், அவரை காப்பாத்த வேற வழியே இல்லை ” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்…
” புரியுதுடா, பார்த்துக்கலாம் நான் இன்னும் உயிரோட தானே இருக்கேன், அவளோ சுலபமா விட்டுட மாட்டேன்… ” என்ற விக்ரமனின் குரலில் விவரிக்க முடியாத அளவுக்கு வலி நிரம்பி இருந்தது…
********
கீர்த்தியின் தோழி வினோதினி ப்ராஜெக்ட் விஷயமாக தன் சக தோழிகளுடன் பிளேன்ட் கலக்சனுக்காக… காடு காடாக அலைந்து கோண்டிருந்தாள்…
” இன்னிக்கி கீர்த்தி வரேன்னு சொன்னா இல்லை ஏன்டி வரல ? ” என்று தோழி ஒருவள் கேட்க..
” தெரியலடி அவளுக்கு தான் உடம்பு சரி இல்லல, நானும் போன் பண்ணி பார்த்தேன் அவள் வீட்டுல கூட யாரும் எடுக்கல.. ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பான்னு நெனைக்கிறேன் ” என்று வினோ கூற…
” உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? கீர்த்தி இருக்குற இடம் பக்கத்துல தான் ஏதோ வீட்டுல கேஸ் வெடிச்சிதாமா! நியூஸ்ல எல்லாம் போட்டாங்க… ஒருவேளை அது அவள் வீடா இருக்குமோ? ” என்று இன்னொரு தோழி கேட்க…
” என்னடி இப்படி சொல்லுறீங்க அப்படி எல்லாம் இருக்காது…” என்று வினோ வாய் வார்த்தையாக கூறினாலும் மனம் பதறியது…
அப்போது அவர்கள் நடந்து கொண்டு இருக்கும் பொழுது ” ஏய் அங்க பாருங்க? ” என்று தோழி ஒருவள் கை காட்ட அனைவரும் அவள் கை காட்டிய இடம் நோக்கி பார்த்தனர்…
” ஏய் யாரோ இறந்து கிடக்குறாங்க ” என்று கூற…
” இப்போ என்னடி பண்ணுறது ”
“பேசாமல் அப்படியே ஓடி போய்டுவோம்… ”
” ஆமா அது தான் சரி… நமக்கு எதுக்கு பிரச்சனை ” என்று தங்களுக்குள்ளே பேசியபடி வினோதினி தோழிகள் நிற்க…
“எதுக்கு இப்படி பேசறீங்க… இருங்க அவங்களுக்கு உயிர் இருக்குதான்னு பார்ப்போம் ” என்ற வினோ அந்த நபரின் அருகில் செல்ல… தோழிகள் அனைவரும் அவளது கரத்தை பிடித்து இழுத்தபடி ” வேண்டாம் டி வா போகலாம் ” என்று கூற…
அதனை கருத்தில் கொள்ளதா வினோதினி அந்த நபரின் அருகில் செல்ல… ஒருபக்கம் மட்டும் தெரிந்த அந்த முகத்தை கண்டு அதிர்ந்து போனவளின் உதடுகள்” நந்தினி அக்கா ” என்று முணுமுணுத்து கொண்டது…
அந்த இடத்தில் நந்தினியை கண்ட வினோதினி சுற்றும் மறந்தவளாக “ஐயோ நந்தினி அக்கா… ” என்றவள் அவள், அருகில் மண்டியிட்டு அமர… அருகில் இருந்த நண்பர்கள் ” உனக்கு இவங்களை தெரியுமாடி ” என்று கேட்டனர்…
” தெரியுமாவா? ஏய் இவங்க நம்ம கீர்த்தியோட அக்கா நந்தினிடி .. வேடிக்கை பார்க்காமல் அந்த தண்ணி பாட்டிலை கொடுங்க… என்ன ஆச்சுன்னு தெரியல ” என்றவள் பதட்டமாக பேச..
” வினோ வேணாம் டி நம்ம போலீஸ்க்கு வேணும்னா தகவல் கொடுக்கலாம் … அவங்களுக்கு உயிர் இருக்கோ? இல்லையோ? எதுக்கு ரிஸ்க் எழுந்து வா ”
” ச்சே போங்கடி… ” என்ற வினோதினி அந்த பெண்ணின் கையில் இருந்து தண்ணீர் பாட்டிலை பறித்து வாங்கி, தண்ணீரை நந்தினியின் முகத்தில் தெளித்தாள்…
ஆனால் அது நந்தினியின் உடலில் சிறிய மாற்றத்தை கூட ஏற்படுத்த வில்லை…
” அசைவே இல்லடி, இப்போ என்ன பண்ணுறது? ” என்று வினோ கேட்க
” ஒருவேளை அவங்க செத்து போயிடங்களோ என்னவோ ” என்று கூறினாள் தோழி…
” சும்மா இருடி, எப்போ பாரு அபசகுணமாவே பேசிட்டு ” என்றவள், தன் அலைபேசியை எடுத்து ” ஆமா 100 க்கு கால் பண்ணா போலீஸ்க்கு போகும் தானே” என்று சந்தேகம் கேட்க…
” எனக்கு என்ன தெரியும் நான் என்ன தினமும் அவங்களுக்கு போன் பண்ணி நலம் விசாரிச்சிட்டா இருக்கேன் ” என்று முகம் சுளித்தாள் தோழி…
” உங்கிட்ட போய் கேட்டேன் பாரு ? ” என்றவள் தானே அந்த எண்ணிற்கு அழைத்து தடுமாறி விஷயத்தை கூற… அடுத்த அரைமணி நேரத்தில் காவலர்கள் அங்கு வந்தனர்… வினோதினி விஷயத்தை கூறியிருக்க.. தங்களுடன், ஆம்புலன்சையும் அழைத்து வந்தனர் காவலர்கள்…
அங்கு வந்த காவலர் வேறு யாரும் இல்லை பரதன் தான்…
அவர்களுடன் வந்த மருத்துவர் நந்தினியின் உடலை பரிசோதித்து பார்க்க… நந்தினிக்கு உயிர் இருந்தது… ஆனால் கண்களில் கூட அசைவு இல்லை…
” சார் உயிர் இருக்கு சார், ஆனால் உடலில் எந்த அசைவும் இல்லை.. ” என்று கூற… அருகே வந்து அவளை பார்த்த பரதனின் உதடுகள் ” நந்தினி ” என்று கூறி கொள்ள… ‘ இவள் எப்படி இங்க? ‘ என்று யோசனையில் ஆழ்ந்தவன்…
” சரி உடனே ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போங்க ” என்று அவர்களை நோக்கி கூறினான் பரதன்…
நந்தினியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்…
” மேல இருந்து விழுந்து இருப்பாங்க போல சார்… தலையில் பயங்கரமா அடிபட்டு இருக்கு, கைகால்களில் கூட காயம் இருக்கு, ரத்தம் நிறையா வீணாகி இருக்கு… அடிபட்டு ரொம்ப நேரம் இருக்கலாம்… முகத்தில உள்ள ரத்தம் எல்லாம் உறைந்து போய் இருக்கு… ஆனால் அவங்களே விழுந்தாங்களா இல்லை யாராவது தள்ளி விட்டு விழுந்தாங்களான்னு தான் சார் விசாரிக்கனும்… ” என்று காவலர் ஒருவர் பரதனிடம் கூற…
” ஓகே ” என்ற பரதன் வினோதினியின் நண்பர்கள் அருகில் வந்தான்…
“யார் போன் பண்ணி தகவல் சொன்னது ” என்று பரதன் அங்கிருந்தவர்களிடம் கேட்க…
வினோதினியின் தோழிகள் அனைவரும் ஒரு சேர, வினோதினியை கை காட்டினர்.
‘ அடிப்பாவிங்களா! ” என்று மனதில் அவர்களை திட்டி கொண்ட வினோதினி ” நான் தான் சார் ” என்றாள் சலிப்பாக…
” எதுக்காக இங்க வந்திங்க? எப்படி இவங்களை பார்த்தீங்க? ”
” அது சார் நாங்க எல்லாம் பாட்டணி ஸ்டுடெண்ட்ஸ், ப்ராஜெக்ட்டுக்காக பிளான்ட் கலெக்ட் பண்ண வந்தோம் அப்போ தான் இவங்களை பார்த்து பதறி போய் உங்களுக்கு கால் பண்ணேன் ” என்று அனைத்தையும் தடுமாறி கூறி முடித்தாள் வினோதினி…
” ஒஹ் அப்போ உனக்கு அவங்களை முன்னாடியே தெரியுமா? ”
” ஆமா சார் என் பிரென்டோட அக்கா தான் ” என்றவளை சந்தேகமாக பார்த்தான் அவன்…
” தனியா நாலு பொண்ணுங்க இப்படி தான் பிளேன்ட் கலெக்ட் பண்ண நடு காட்டுக்கு வருவீங்களா? ஒருவேளை இந்த சம்பவத்துக்கும் உனக்கும் வேற ஏதாவது சம்மந்தம் இருக்கா? ”
” என்னை பார்த்த கொலை முயற்சி பண்ணுற ஆளு மாதிரியா சார் இருக்கு ” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு வினோ கேட்க…
உடனே ” ஆமா ” என்றான் பரதன்…
” சார்!! ” என்று அவள் பதற…
” எப்போ விசாரணைக்கு கூப்பிட்டாலும் வரணும்… இனிமேல் இப்படி தனியா எல்லாம் காட்டுக்குள்ளா சுத்திட்டு இருக்காதீங்க, அவர் கிட்ட உங்க நம்பரை கொடுத்துட்டு இங்கேயிருந்து கிளம்புங்க… ” என்றவன் அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிளை கை காட்டி விட்டு நேராக நந்தினியை, சேர்ந்திருந்த மருத்துவனைக்கு வந்தான்…
மருத்துவமனைக்கு வந்தவன்… அங்கு நந்தினியை பற்றி விசாரித்தான்…
” பேசன்ட் கோமா ஸ்டேஜ்ல இருக்காங்க… தலையில் பலமா அடிபட்டு இருக்கு, ”
” எப்போ சரி ஆகும் டாக்டர்? ” என்று பரதன் கேட்க…
” இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது… ஒரு மாசமும் ஆகலாம்… ரெண்டு மாசமும் ஆகலாம் அது பேசன்ட் ஹெல்த் கண்டிஷன் பொறுத்து தான்… ”
” ஓகே டாக்டர் ” என்று கூறி வெளியே வந்த பரதன், அடுத்து அழைத்தது என்னவோ விக்ரமனுக்கு தான்…
” ஹெலோ அண்ணா ”
” சொல்லுடா ” என்று விக்ரமன் கூற, பரதனோ நந்தினி கோமாவில் இருப்பதை பற்றி கூறினான்…
” என்ன பண்ணலாம் அண்ணா? ”
” இப்போதைக்கு எதுவும் பண்ண வேண்டாம் பரதா… இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்… இன்னும் ரெண்டு வாரத்தில் கேஸ் ஹீயரிங் வேற இருக்கு… முக்கியமா இதை சத்யன் கிட்ட சொல்லாத… கண்டிப்பா அவள் மேல இருக்குற கோவத்துல, ஹாஸ்பிட்டல் உள்ளயே வந்து அவளை கொன்னு போட்டாலும், போட்டுடுவான்… சோ இது அவனுக்கு தெரிய வேண்டாம், அப்புறம் நந்தினியை கவனிக்க ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி பார்த்துக்கோ… புரியுதா? ” என்று விக்ரமன் அழுத்தமாக கூற… ‘ சரி ‘ என்று கூறி அழைப்பை துண்டித்தான் பரதன்…
*****
தன்னுடைய குடும்பத்தை பற்றிய யோசனையில் ஆழ்ந்த கீர்த்தி பால்கனி கதவோரமாக நின்றுகொண்டிருக்க… மேகம் இருள் சூழ்ந்து மழை பொழிந்தது…
மழை சாரல் பால்கனி அறை நோக்கி வீசியது… அதை சற்றும் கருத்தில் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்த கீர்த்தியின் உடலை மழை சாரல்கள் தீண்டி செல்ல…மழை சாரல் முகத்தில் தெரிக்கவும் சற்றென்று நிதானம் அடைந்தவள், அங்கிருந்து விலகி வந்து, பால்கனி கதவை இழுத்து மூடினாள்…
மழை சாரல் பட்டு கீர்த்தியின் ஆடைகள் முழுவது நனைந்திருந்தது…
‘ ட்ரெஸ் முழுக்க நனைஞ்சிடுச்சு, உடம்பு எல்லாம் கசகசன்னு இருக்கு பேசாமல் குளிச்சிடலாமா? ‘ என்று எண்ணியவள், அங்கிருந்த ஒவ்வொரு கபோர்டையும் திறந்து பார்த்தாள்… ஏதாவது உடைகள் இருக்கின்றதா என்று!
அங்கு முழுவதும் விக்ரமனின் உடைகள் மட்டுமே நிறைந்து இருந்தது… அதிலிருந்த விக்ரமனின் ஒரு சட்டையை கையில் எடுத்தவளுக்கு மகிழனின் ஞாபகம் வந்தது…
சிறுவயதில் எத்தனையோ முறை மகிழனின் சட்டையை எடுத்து அணிந்தபடி, தங்கள் வீட்டில் ஓடி, ஆடி விளையாடியது எல்லாம் ஞாபகம் வந்தது…
இப்போதும் அந்த நிகழ்வை மனதில் நிலைநிறுத்தியவளின் விழியோரம் நீர் துளிர்க்க… இமைகளை மூடி கண்ணீரை உள் இழுத்து கொண்டவள், ஆழ்ந்த பெருமூச்சி விட்டவாரே… அதிலிருந்த ஒரு சட்டையையும், டவலயும் எடுத்து கொண்டு ” ஆபத்துக்கு பாவம் இல்லை ” என்றவாறு குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்…
குளித்து முடித்து, விக்ரமனின் சட்டையை அணிந்தபடி, தலையில் டவலை சுற்றியபடி வெளியே வந்தாள் கீர்த்தி…
விக்ரமனின் சட்டை கீர்த்தியின் உயரத்திற்கு, முட்டிக்கு மேல் வரை இருந்தது…
கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்தவள், தலையில் சுற்றி இருந்த டவலை கொண்டு தலையை துவட்ட தொடங்கி இருந்தாள்…
அப்போது கீர்த்திக்கு தேவையான ஆடைகளை வாங்கி விட்டு நேராக வீட்டிற்குள் நுழைந்தான் விக்ரமன்,
உள்ளே வந்தவன் எப்போதும் போல தனது அறை என்ற நினைவில் எதை பற்றியும் யோசிக்காமல் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்…
அப்போது தான் அவள் தன்னுடைய ஆடையை அணிந்து ,திரும்பி நின்று தலையை துவட்டி கொண்டிருப்பது தெரிந்து… நெற்றியை நீவி கொண்டவன்…
” இதுல ட்ரெஸ் இருக்கு ஓகே வா ன்னு பாரு… இன்னிக்கு ஈவினிங் போர் ஓ க்ளாக் பிளைட், ரெடியா இரு ” என்று கூறி வாங்கி வந்த ஆடைகளை மெத்தியின் மீது வைத்தவன், அதன் பிறகு மறந்தும் கூட அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை…
அவன் குரல் கேட்டு சட்டென திரும்பி பார்த்த கீர்த்தி… அவனை கண்டு பதறியபடியே டவலை தன் இடையில் மறைத்து கட்டி கொண்டாள்…
” அது.. மழை… வந்தது அதான், நீங்க எப்போ வந்தீங்க, ” என்று பேசமுடியாமல் கீர்த்தி கடினப்பட்டு வார்த்தைகளை உதிர்க்க…
அவள் அருகில் மெல்ல எட்டு வைத்து வந்தவன், அவளை கண்களில் அளவெடுக்க, தலை குனிந்து கொண்டாள் கீர்த்தி…
அவள் செயல் கண்டு மெல்ல புன்னகைத்தவன் ” ஏன் டோர் லாக் பண்ணல? ” என்று கேட்டான்…
” அது லாக் எட்டல… ” என்று மெதுவாக உரைத்தாள், அவனை நிமிர்ந்தும் பாராது…
” ம்ம்ம் ” என்றவன் அவளையே மெல்லிய முறுவலுடன் பார்த்துக்கொண்டிருக்க..
” நீங்க டோர் நாக் பண்ணிட்டு வந்து இருக்கலாம் இல்லை ? ” என்றாள் தயங்கியபடியே…
“ஞாபகம் இல்லை… ” என்றவன்,தன் விரல்கொண்டு அவளது நெற்றியில் படர்ந்திருந்த முடிகளை நீக்கிவிட்டு, நொடியில் அவளது முகத்தை கைகளால் ஏந்தினான்… அவளோ மிரண்டு முழிக்க… அவனது கைகளில் அடங்கி இருந்தவளின் கரு விழிகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது…
அந்த விழிகளை ஊடுருவி பார்த்தவன்… ” உனக்கு இந்த ட்ரெஸ் கூட அழகா தான் இருக்கு… நம்ம மட்டும் சென்னை போக வேண்டியது இல்லைன்னா, உன்னை இப்படி பார்த்ததுக்கு அப்புறம் கண்டிப்பா உனக்கு வேற ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்க மாட்டேன் ” என்று கூறி… நொடியில் அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன், அவள் அதை உணர்வதற்குள் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
அவனது முதுகை அதிர்ந்து பார்த்தவள்… தலையை பலி ஆடு போல உதறி கொண்டாள்… ” இவரு பேச்சு,பார்வை எதுவும் சரி இல்லை… சீக்கிரம் இங்கேயிருந்து போய்டனும் ” என்றவள் அவன் வாங்கி வந்த ஆடைகளை பார்க்க தொடங்கி இருந்தாள்…
******
மேகங்கள் சூழ்ந்து அடைமழை பெய்து கொண்டிருந்த நேரமது…
” டேய் அதி எங்க இருக்க? உனக்காக தான் வெயிட் பண்ணுறோம் எப்போ வருவ? ” என்று அவன் நண்பன் பாரில் இருந்தபடி கேட்க…
” இதோ பக்கத்துல வந்துட்டேன், டென் மினிட்ஸ் தான் வந்திடுவேன் ” என்ற அதியன் மகிழுந்தினை வேகமாக செலுத்தினான்…
காரில் பாடல்கள் ஒலிக்க அதனை கேட்டு கொண்டு,அதற்கேற்ப வாயசைத்தபடி காரினை ஓட்டிய அதியன், இடையில் சிக்னல் போடவும்… வண்டியை நிறுத்தினான்…
” ஷிட்… நேரங்கெட்ட நேரத்துல தான் சிக்னல் போடுவானுங்க… ” என்று சினந்து கொண்டவன், தன் பார்வையை வெளியே பதிக்க… அங்கு சாலையோரம் ஒரு பெண் மழையில் நடுங்கியபடி கைகளை கட்டி கொண்டு நின்றுகொண்டிருந்தாள்…
அவளை கண்டவன் ” இவள் எங்க இங்க? ” என்று எண்ணியவாறே… சிக்னல் விடுபடவும், அவளை நோக்கி வந்து வண்டியை நிறுத்தினான்…
அவள் அருகில் வண்டியை நிறுத்தியவன், சிறிதும் யோசிக்காமல் கதவை திறந்து கிழே இறங்கியபடி அவளை நோக்கி சென்றான்…
” இங்க என்ன பண்ணுற ? ” என்று அவளிடம் அதியன் கேட்க…
” அதியன் சார் நீங்க எங்க இங்க… மழை வேற வருது, எதுக்கு காரில் இருந்து இறங்கி வந்தீங்க ? முதலில் உள்ள போங்க ” என்று கூற… அவளது அக்கறையான பேச்சு எப்போதும் போல இப்போதும் அதியனது வதனத்தில் புன்னகை பூக்க செய்தது…
” அதெல்லாம் பிரச்சனை இல்லை, நான் இப்போ நனையுறதால ஒன்னும் கறைஞ்சிட மாட்டேன்… நீ இங்க என்ன பண்ணுற லேப்க்கு போகாமல் ” என்று மழையில் நனைந்தபடியே கேட்டான்…
” அங்கேயே நிக்காதிங்க சார், இங்க மரத்துக்கு கீழயாவது வந்து நில்லுங்க ” என்றவள் அவனது கரத்தை பற்றி தன் அருகில் இழுக்க… அவளது கரத்தை பார்த்த படியே அவள் அருகில் நெருங்கி வந்து நின்றான் அதியன்…
ஓராயிரம் அழகிகள்!!!
எனை தீண்டிய போதும்…
தடுமாறாதா என் நெஞ்சம்,
உன் ஒற்றை விரல் தீண்டலில்…
தடம் மாறும் மாயம் என்னவோ???
மௌனமாக அவளது கண்களை பார்த்துக் கொண்டே நின்றுகொண்டிருந்தான் அதியன்…
மழை துளி, பனி துளியாக, அவள் இதழ்களில் படர்ந்திருக்க… அதனை தொட்டு உணர துடிக்கும், அவனது எண்ணங்களுக்கு கடிவாளமிட்டவன், தலையை அழுத்தி கோதியபடி அவளை விட்டு விலகி நின்றான்…
” வண்டி பஞ்சர் ஆகிடுச்சு சார்… அதை மெக்கானிக் ஷாப்ல விட்டுட்டு திரும்பி வரும் போது தான் பயங்கர மழை அதான் அப்படியே இங்கேயே நின்னுட்டேன் ” என்றவள் நடுங்கியபடியே கூற… அவனது எண்ணங்கள் எங்கெங்கோ பயனமானது… அவளை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டவன்,
” சரி வா நான் கொண்டு போய் லேப்ல விட்டுடுறேன் ” என்றவன் காரின் முன் பக்க கதவினை திறந்து அவளை அமர சொல்ல… சிறு புன்னகையுடன் அவளும் ஏறி அமர்ந்து கொண்டாள். சிறு புன்னகையுடன் வந்து அவள் அருகில் அமர்ந்தவன், காரினை செலுத்தினான்…
பெண்களை கண்டாலே கண்களுக்கு கீழே பார்த்து பேசுபவன், இன்று அவளது மைவிழிகளில் கட்டுண்டு கிடந்தான்…
செல்லும் வழியில் அவள் ஏதோ யோசனையுடனே அமர்ந்திருக்க… அவளை திரும்பி பார்த்த அதியன் ” என்ன யோசனை ? ” என்று கேட்டான்…
” இல்லை அதியன் சார்… ட்ரெஸ் எல்லாம் ஈரமா இருக்கு, இப்படியே எப்படி லேப்க்கு போறது அதான் யோசனையா இருக்கு ” என்று அவள் கூற… அமைதியாக வந்தவன் உடனே ஒரு துணி கடையின் முன் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினான்…
” சார் எங்க போறீங்க? ” என்று கேட்டவளின் குரல் காற்றில் கரைந்து போனது.
கடைக்குள் சென்று அவளுக்கென ஒரு புடவையையும், இப்போது அவள் அணிந்திருப்பது போல லாங் ஸ்கர்ட்டும் டீ ஷர்டும் வாங்கி வந்தான்…
காருக்குள் ஏறியவன்,
அந்த கவரை பின் பக்க இருக்கையில் வைத்து விட்டு மீண்டும் காரை எடுத்தான்…
” எங்க சார் போனீங்க? என்ன வாங்கிட்டு வந்து இருக்கீங்க? ” என்று அவள் கேட்க… அதியன் மென்மையாக புன்னகைத்தானே தவிர ஒரு வார்த்தை கூட பேசவில்லை…
சிறுது நேரத்தில் தன் வீட்டை அடைந்திருந்தான் அதியன்… மழையும் ஒரு அளவுக்கு நின்றிருந்தது…
” கீழே இறங்கு”
” இது எந்த இடம் சார் ”
” என் வீடு தான் ”
” இங்க எதுக்கு சார் வந்திருக்கோம் ” என்று கேட்டவளின் குரலில் ஒரு வித பயம் வெளிபட்டது… அவள் முகத்தில் தெறிந்த அந்த பயமே அதியனை கத்தி இன்றி காயப்படுத்தியது…
” சொல்லுறேன் வா ” என்றவன், காரில் இருந்த அந்த துணி பையை எடுத்து அவளிடம் கொடுத்தான்…
” ட்ரெஸ் சேன்ச் பண்ணிட்டு கிளம்பலாம் ” என்று கூறியவனை பார்த்து இதமாக புன்னகைத்தவள்…
” சரி ” என்று தலையாட்டினாள்…
” இந்த ரூம்ல சேன்ஞ் பண்ணிக்கோ ” என்றவன் வெளியே வந்து நின்று கொண்டான்…
அப்போது அங்கு வந்து சேர்ந்தான் சரத்… அவனை கண்ட அதியன் ‘ இவன் எங்க வந்தான் ? ‘ என்று நினைத்து கொள்ள…
உள்ளே வந்த சரத் வாசலில் அவளது செருப்பை கண்டு ” டேய் என்னடா எனக்கு தெரியாமல் ஏதாவது புது பொண்ணை கூட்டிட்டு வந்து இருக்கியா? ” என்று ஆர்வமாக கேட்டவன் அதியனை கடந்து உள்ளே செல்ல பார்க்க…
” அதெல்லாம் ஒன்னும் இல்லை இது வேற, உனக்கு புரியாது… மரியாதையா வெளியே கிளம்பு ” என்று அதியன் அவனை தடுத்து கூற…
” ரொம்ப தான்டா பண்ணுற? வர வர உன் நடவடிக்கையே சரி இல்லை ” என்றவன் திரும்பி செல்லும் போது…
” அதியன் சார் ” என்று உள்ளிருந்தபடியே அழைத்தாள் அவள்… அந்த குரலை வைத்து அது பெண் தான் என்று அறிந்து கொண்ட சரத் ” டேய் வாழுற போ…குரலே இவ்ளோ ஸ்வீட்டா இருக்கு… கொடுத்து வச்சவன்டா நீ ” என்று கூறியபடியே அங்கிருந்து சென்றான் சரத்…
சரத் சென்ற பிறகு அவளை காண உள்ளே சென்றான் அதியன்…
” இதுல புடவை ஒன்னு இருக்கு அது யாருக்கு சார் ” என்று புரியாமல் கேட்டாள் அவள்…
” உனக்கு தான் வேற யாருக்கு? அன்னைக்கு புடவையில் ரொம்ப அழகா இருந்த, அது தான் ” என்று அதியன் புன்னகை முகமாக கூற…
” சரி ” என்றவள்… ” உங்க வீடு அழகா இருக்கு சார்… ஆனால் ரொம்ப அமைதியா இருக்கு, லவ் பேர்ட்ஸ் வாங்கி வளருங்க சார் அந்த சத்தம் மனசுக்கு அவ்ளோ இதமா இருக்கும் ” என்று கூறியவளின் நினைவாக… இன்றும் தன் அறையில் அந்த லவ் பேர்ட்ஸ்களின் சத்தத்தில் தொலைந்த தன் நிம்மதியை தேடிக் கொண்டிருந்தான் அதியன்…
லவ் பேர்ட்ஸினை பார்த்தபடி அமைதியா இருந்தவனின் அருகில் வந்தமர்ந்த சரத்… “என்னடா மறுபடியும் பகல் கனவா ? ” என்று கேட்டான்… அதியனோ பதில் கூறாமல் அந்த பறவைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்…
” நந்தினி கிட்ட இருந்து எந்த தகவலும் வரல…ஏதாவது மெயில் பண்ணி இருக்காளா பார்க்கலாம் ” என்றவன் அதியனின் லேப்டாப்பை எடுத்து உயிர்ப்பிக்க முயன்றான் அது பாஸ்வேர்ட் கேட்கவும்…
” பாஸ்வேர்ட் சொல்லு அதி ” என்றான் சரத்…
” எதுக்கு ? உன் லேப்டாப் எங்க? ”
” அதுல எந்த மெயிலும் வரலடா அதான் உனக்கு வந்திருக்கா பார்க்கலாம்னு கேட்டேன் சொல்லு ”
” கொடு நானே ஓபன் பண்ணி தரேன் ” என்று அதி அவனிடம் இருந்து லேப்டாப்பை வாங்க பார்க்க…
” நோ அதி சொல்லு நானே ஓபன் பண்ணுறேன் ” என்று பிடிவாதமாக தர மறுத்தான் சரத்…
” ம்ம்ம்… சொல்லுறேன்” என்ற அதியன் பாஸ்வேர்டை கூற தொடங்கினான்… அதனை கேட்டு அதிர்ச்சியாக அவனை திரும்பி பார்த்த சரத் .. ” எங்க மறுபடி சொல்லு ” என்று கேட்டான், தன் சந்தேகத்தை போக்கும் நோக்கத்தோடு…
” V A R S H A T H I Y A N ” என்று மீண்டும் அழுத்தி கூறினான்…

