Loading

8.அத்தியாயம்

 

தன்னுள் தகிக்கும் கோபங்களை எல்லாம் அவனிடம் காட்டியிருந்தாள் மது. காதல் எனும் மூன்று எழுத்து வார்த்தை அவள் வாழ்வில் நடத்திய நிகழ்வு தான் இந்த கோபத்திற்கும் காரணம். அந்த கோபத்தை அவள் காட்டிய இடம் தவறாக இருந்தாலும், அவன் இன்று தன்னை அப்படி ஒரு நிலையில் பார்த்ததும், தற்போது காதல் என்று பேசியதும் அவனை தவறாக நினைக்க வைத்திருந்ததன் விளைவே அவளது பேச்சிற்கு காரணம்‌.

பேசியதை எல்லாம் பேசிவிட்டு கண்கள் அசையாது இவள், அவனை முறைத்துப் பார்க்க, அவனோ சலனமே இன்றி நின்றிருந்தான். நந்தாவின் முகத்தில் தெரிந்த மாற்றங்களை பெண்ணவளால் கணிக்க இயலவில்லை. இருந்தும் அவனது பதிலை தெரிந்துக் கொள்ள நினைத்தாள். ஆணவனோ, அடுத்த நொடியே இடுப்பில் கைவைத்தவன் தன்னை சமன்படுத்தி முன்புறமாக திரும்ப, பெண்ணவளோ அவனை அலட்சியப் பார்வை பார்த்தபடி எழுந்து நின்றாள்.

அடுத்த நொடியே அவள் புறமாக திரும்பியவன், “இப்போ என்ன சொன்ன? கொஞ்சம் திரும்ப சொல்லு?” என்று கண்களை சுருக்கி உதட்டை வளைத்துக் கேட்க, அவன் கேட்ட தொனி அவளுக்குள் சிறு பயத்தைக் கொடுத்தது உண்மை தான்.

சிறு பதட்டம் கலந்த வீராப்புடன், “உனக்கு என் உடம்பு மேல தான் ஆசைனா இப்போவே சொல்லிடு.” என்றாள் முறைத்தபடி.

அடுத்த நொடியே தன் இடுப்பை பற்றியிருந்த ஒற்றைக் கரத்தை விடுத்தவன், கையினை ஓங்கி அறைவது போல தூக்கிய நொடியே பயந்தவள், கன்னத்தை பொத்திக் கொள்ள செல்ல, ஆணவனோ இழுத்து அறைந்திருந்தான். ஆனால் அறைந்தது என்னவோ அவளது சேலை விலகிய இடையினை. ஒரு நொடி வலியில் அதிர்ந்தவள் விக்கித்துப் போய் அவனைக் காண, ஆணவனோ, அவளை நிமிர்ந்து பார்த்த வண்ணம் அடித்தக் கைகளில் இருந்த கொசுவினைக் காட்டினான்.

“கொசு…” என்றவன் கைகளை அவள் புறமாக காட்ட, அவளோ அதிர்ந்த விழிகளுடன் அவனது கைகளையும் அவனது முகத்தினையுமே மாறி மாறி பார்த்தாள்.

ஒரு புறம் சுள்லென்று இடுப்பு வேறு வலியெடுக்க, ‘ஒரு கொசுவுக்கா இந்த அக்கப்போரு. இந்த அடி கொசுவுக்கா? இல்லை நமக்கா?’ என்ற ரீதியில் பார்த்தவளது கண்கள் அவளையும் மீறி கலங்கியது.

“ரொம்ப நேரமா பார்க்கிறேன். இந்த கொசு உன்னையவே சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கு. இப்போ தான் நீ முக்கியமான பாய்ண்ட் வேற பேசிட்டு இருக்க? அதான் பட்டுன்னு போட்டுட்டேன்.” என்றான் சர்வ சாதாரணமாக.

‘அதுக்கு ஏன் டா, என்னை அடிச்ச?’ கேட்க துடித்த நாவினைக் கட்டுப்படுத்தியபடி பற்களை கடித்தாள்.

“ஆமா மது, நீ என்ன சொன்ன? ஒன்ஸ் மோர் ப்ளீஸ்?” என்றவன் அடித்தக் கைகளை தன் மற்றொரு கரத்தில் உரசிக் கொண்டே கேட்க, தூக்கி வாரிப்போட்டது அவளது தேகம்.

இன்னுமே சுளிர் சுளிரென்று வலி பெண்ணவளின் இடப்பக்க இடையிலிருக்க, அவன் அடித்த வேகத்தில் சற்று சிவந்து லேசாக கன்றிப் போய் இருந்தது பெண்ணவளின் இடை.

‘நோ வே. எமகாதகனா இருக்கான். இன்னொரு அடி வாங்க உடம்புல தெம்பும் இல்லை. அவனை திருப்பி அடிக்குற மனசக்தியும் இந்நேரம் நமக்கு இல்லை.’ நிதர்சனம் உரைத்த நொடி எதுவும் பேசாதவள் மௌனமே உருவாய், எதுவும் பேசாது நகர்ந்துச் சென்றாள்.

“மது… ஏய் சொல்லிட்டு போடா.” என்றான் சற்று எள்ளல் தொனிக்கும் குரலில்.

வார்த்தை விட்ட பின்னர் தானே அவளுக்கும் உரைத்திருந்தது. ‘கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ?’ என்று யோசிக்காமல் அவள் இல்லை‌. அதிலும் அவனது அடியில் இவள் உடலே தூக்கி வாரிப்போட்டிருக்க, பொறிகலங்கிய நிலையில் அவனை திரும்பி பார்த்தவள்,

“உங்கிட்ட பேசுற நிலைமையில நான் இல்லை. மனுசனா நீ?” என்றாள் வலியில் முறைத்தபடி. இருந்தும் அவன் மீண்டும் அடித்துவிடுவானோ என்று அச்சம் வேறு தோன்ற அடுத்த நொடியே , “இல்லை உயர்ந்த மனுசன் நீ. போய் தூங்குங்க சார். தூங்குங்க‌…” என்றாள் வலியுடன்.

“இல்லை நீங்க ஏதோ கேள்வி கேட்டீங்களே மது?” என்றவன் விடாப்பிடியாக கேள்வியை பிடித்து தொங்கிக் கொண்டே நிற்க,

‘திரும்பவுமா?’ என்ற ரீதியில் அவனை பார்த்தவள், “கேள்வியா? என்ன கேள்வி? கேள்வினா என்னன்னு எனக்கு தெரியாது.” என்றவளைக் காணும் போதே அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

‘அப்படி வாடி வழிக்கு. உன்னை எல்லாம் இப்படி தான் டீல் பண்ணனும். அடி உதவுற மாதிரி, அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்னு சொல்றது சரியாக தான் இருக்கு. பைனலி கொசு டெக்னிக் சக்சஸ்.’ என்று மனதிற்குள்ளே பேசியவன், அவளைப் பார்த்து, “ஏதோ உடம்புனு சொன்னியே செல்லம்?” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன். அந்த புன்னகைக்கு பின் மறைந்திருந்த கோபம் அவனுக்கு மட்டுமே தெரியும்.

“அது வந்து எனக்கு உடம்பு சரியில்லை. கத்த வைக்காத? ப்ளீஸ்” என்று கெஞ்சாத குறையாக அவள் கூறிய பின்னரே,

“யூ கோ கோர்ள்.” என்றான் கண்களை அசைத்து. புன்னகையோடு அவன் கண்களை அசைத்த விதத்தை யார் பார்த்தாலுமே ரசிக்காமல் இருக்க மாட்டார்கள்.

ரசிக்க வேண்டியவளோ, முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். இன்று அவள் மெத்தையின் மீதே படுத்துக் கொள்ள, அவன் மறுப்பொன்றும் சொல்லவில்லை. அவள் படுக்கும் வரை, அவ்விடமே நின்றவன் படுத்த பின்னரே அறைக்குள் இருக்கும் பால்கனி நோக்கிச் சென்றான்.

அவன் செல்வது அறிந்தும் அமைதியாக படுத்தவள் அவளது கன்றிய இடையினைத் தொட்டுப் பார்த்தாள்.

“பாவி ராட்சசா… இப்படி பண்ணி வைச்சிட்டியே? நிஜமாவே நீ நல்லவன் தானா? இல்லை நல்லவன் வேசம் போடுறியா? ஒவ்வொரு முறையும் நம்பி ஏமாற என்னால முடியலை.” என்று சத்தமின்றி அவள் உதடுகள் உரைத்த நொடி, அவளையும் மீறி கண்களினோரம் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

நேருக்கு நேராக அவன் அடித்திருந்தால் கூட, திருப்பி சண்டை போட்டிருப்பாள். இல்லை எதிர்த்து மிரட்டியாவது இருப்பாள். கொசு அடிக்க, ஈ அடிக்க என்று இடுப்பில் எல்லாம் அடிக்கும் அவனது செயல் அவளை அசரடித்தது உண்மைதான். ஒருபுறம் இடுப்பில் வலி இருந்தாலும், ஆணவனின் கரம் இடையில் பட்ட நொடி அவளையும் மீறி கூச்ச உணர்வும் சங்கடமுமே மேலோங்கியிருக்க, இதற்கு மேல் அவனிடம் பேச முடியாத நிலையில் தான் அமைதியாக சென்றுவிட்டாள் மதுவர்ணிகா.

அடியிலும் ஒரு நல்லது நிகழ்ந்து தான் இருந்தது. கசப்பான பழைய நினைவுகளை மறந்தவள் மனம், அவனை வசைப்பாடுவதில் திசைத் திரும்பி இருந்தது. இந்த சண்டி ராணிக்கு ஏற்ற சண்டி வீரன் அவன் தான் போல.

பால்கனியில் நின்றிருந்தவன் மனநிலையோ தீவிர யோசனையுடன் இருந்தது. அவள் சொல் உண்டாக்கும் வலியினை பொறுத்துக் கொண்டு சென்றாலுமே, என்றைக்கோ ஓர் நாள் அது வெடித்து பெரிதாகிவிடும் என்பதை அவன் அறியவில்லை.

“மாத்துவேன் உன்னையும், உன் மனசையும்.” என்று தீர்க்கமாக உரைத்தவன் மீண்டும் புன்னகைத்தான். பின்னரே அவன் வந்துப் பார்க்க, அங்கு பெண்ணவளோ அழுத நிலையிலேயே உறங்கியிருந்தாள்.

உறக்கத்திலிருக்கும் தன் தேவதையை மனம் குளிர ரசித்தவன், “எப்படி மது, உனக்கு அப்படி சொல்ல தோணுச்சு?” என்றவனின் வார்த்தைகளில் தொக்கி நின்றது ரணமான இருதயத்தின் வலி.
அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், சேலையை லேசாக விலக்கி பெண்ணவளின் கன்றிய இடையினை பார்த்தான்.

“உஃப்” என்று மெதுவாக அவன் ஊதி விட உறக்கத்தில் லேசாக நெளிந்தாள் பெண்.

ஒவ்வொரு முறையும் பெண்ணவளின் இடையினை பற்றி வளைத்த கைகளே, இன்று அடியினையும் கொடுத்திருக்க, தன் கையினையே முறைத்துப் பார்த்தான். அந்த பார்வையிலேயே சிறு பொறாமையும் சினமும் தெளிவாகத் தெரிந்தது.

‘நெய்மீனு மாதிரி வழுக்கின்னு போற இடுப்பு, இப்படி பொறிச்சு எடுத்த வறுவல் மீனு மாதிரி ஆகி போச்சே? ஆண்டவா இந்த புள்ளைக்கு இனியாவது நல்ல புத்தி கொடுப்பா.’ மனதார வேண்டிவிட்டே வருத்தத்துடன் உறங்கச் சென்றான் நந்தா.

அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது உமாபதிக்கு. அத்தையும், மாமாவும் இன்று ஊருக்கு செல்லவிருப்பதாக அன்னை கூறியிருந்தது நினைவில் வர, ஒரு வித உற்சாகத்துடன் எழுந்திருந்தான் உமாபதி.

“இன்னையோட அந்த தொல்லை ஊருக்கு போயிடும்.” வெண்ணிலாவும் சென்று விடுவாள் என்று நினைக்கும் போதே அவனுக்குள் ஒருவித குதுகளிப்பு தோன்ற தான் செய்தது.

அந்த அளவிற்கு அவள் மீது வெறுப்பை வைத்திருந்தவன், துளியளவு கூட நேற்று அடிப்பட்டிருந்த பெண்ணவளின் கைகளை நினைத்துப் பார்க்கவில்லை.
குளிக்க சென்றவன், குளித்து முடித்த பின்னர் தயாராகியபடி கீழே வர, ஏற்கனவே தயாரான நிலையிலிருந்த வெண்ணிலாவே முதலில் கண்களில் அகப்பட்டாள். வெள்ளை நிற சுடிதாரில் ஆங்காங்கே இளம் சிவப்பு நிறம் கலந்தது போல ஆடை அணிந்திருந்தவள் எளிய ஒப்பனைகளில் மிக அழகாக காணப்பட்டாள். அடிப்பட்ட கைகளில் கட்டுப் போட்டிருக்க, அவளைப் பார்த்தபடி படிகளிலிருந்து இறங்கி வந்தவனின் பார்வை நக்கலாக பதிந்து மீண்டது பெண்ணவளின் மீது.

“லேசான அடிக்கே இவ்ளோ சீன் போட்ருக்காளே?” என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் கீழே வர, பெண்ணவளோ எதேச்சையாக அவனைத் திரும்பி பார்த்தவள் மென்மையாக அவனை கண்டு புன்னகைத்தாள்.

அவனோ அதை பெரிதாக கண்டுக் கொள்ளாதவன், “என்ன பேக் பண்ணியாச்சா?” என்றான் எள்ளலாக.

“அத்தான்” என்று அவள் எதையோ சொல்ல வரும் முன்னரே குறுக்கிட்டவன்,
“அப்படி சொல்லாதனு எத்தனை முறை சொல்றது இடியட்.” என்று பற்களைக் கடிக்க, அவளது சிரித்த முகம் ஒரு நொடியில் வாடிப் போனது.

“மனசுல இருந்து கூப்பிட பழகின விசயம் என்னைக்குமே மாறாது அத்தான். என்னைக்குமே நீங்க எனக்கு அத்தான் தான். ஆங்கிரி பேர்ட் அத்தான்.” என்றவள் களுக்கென்று சிரிக்க,

“என்னடி, சிரிப்பு இது?” என்று உறுத்து விழித்தவன் மனமோ, ‘எவ்ளோ பேச முடியுமோ பேசிக்கோ, இன்னைக்கு தான் உனக்கு குட் பாய் சொல்லப் போறேனே’ என்று நினைத்தவாறு உதடுகளை ஏளனமாக வளைத்தான்.

“உங்களுக்கு தெரியுமா ஊருல, எனக்கு சிரிப்பழகினு பட்டப்பெயரே இருக்கு” என்று பெருமிதம் பொங்க கூறுபவளைக் கண்டு எரிச்சலோடு பார்த்தது ஆணவனின் கண்கள்.

“எவனாவது இழுச்சவாயன் சொல்லிருப்பான். அது எல்லாம் நம்பிக்கிட்டு… போவியா?” என்றான் அலட்சியப் பார்வையில்.

“க்கூம்” என்றவள் உதட்டை சுளித்து விட்டு நகர, அவ்விடம் வந்தார்கள் தாமோதரனும் பிரபாவதியும். பெற்றோர்களை கண்டதும், பவ்யமாக நின்றவன்,

“குட் மார்னிங் மாம். குட் மார்னிங் பா.” என்றான் நல்ல பிள்ளையாக. அவர்களும் பதிலுக்கு புன்னகையுடன் கூறினர்.

“என்னடா, சீக்கிரமே கிளம்பி ரெடியாகி வந்திருக்க?” தாமோதரன் கேட்க,

“அப்பா, இன்னைக்கு அத்தை மாமா கிளம்புறாங்கல்ல. அவங்களை ட்ராப் பண்ண சொல்லி மாம் சொல்லியிருந்தாங்க.”

“உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பாரு. அவங்க கிளம்பி அரை மணி நேரம் ஆகுதுடா உமா.” என்ற அன்னையைக் கண்டு அதிர்ச்சியுடன் நோக்க, அவனை கண்டு புன்னகைத்தாள் நிலா.

“அப்போ வெண்ணிலா?” என்றான் அதிர்ச்சியாக.

“இதோ இங்க தானே நிற்குறா?”

“தெரியுது மாம். அவ வீட்டுக்கு போகலையா?” என்றான் சற்று எரிச்சலாக.

“இதுவும் அவ வீடு தானடா. வார்த்தைகளை உபயோகிக்கிறப்போ பார்த்து பேசு.” என்ற அன்னையைக் கண்டு, “சாரி மாம்.” என்றான் சங்கடமாக.

“பிரபா, அவன் அந்த விதத்துல சொல்லியிருக்க மாட்டான். கேட்க தெரியாமல் கேட்டுட்டான்.” தனக்கு ஆதரவாக பேசும் தந்தையைப் பார்த்து ஆம் என்று தலையசைத்தான் உமாபதி.

“சரி விடுங்க. நிலா மேல் படிப்பு இங்க இருந்து தான் படிக்க போறா. பாரதியார்ல மெரிட்ல சீட் கிடைச்சிருக்கு.” என்ற அன்னையின் வார்த்தை ஈட்டி போல் தாக்க, “ஓ அப்படியா.” என்று சுரத்தே இன்றி கூறினான் உமா.

பின் அங்கிருந்து அறைக்கு விரைந்தவன், குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கியிருந்தான்.

“இப்போவே இவளை மிரட்டி அனுப்பலைனா விளைவுகள் ரொம்பா மோசமா இருக்கும்டா உமா. இவ வேணும்னே தான் இங்க காலேஜ்ல அப்ளை பண்ணியிருக்கா. உனக்கு பெரிய ஆப்பு இவ மூலமா காத்துக்கிட்டு இருக்கு. சும்மா விடக்கூடாது. இப்போவே இவளை துரத்தணும்” என்ற யோசனையில் நடந்துக் கொண்டிருந்தவன் பால்கனிக்கு சென்றான்.

சில மணி துளிகள் கழித்து, வெண்ணிலாவும் தோட்டத்திற்கு செல்ல, மேலே பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்த உமாபதிக்கோ அவளைக் கண்டதுமே ஆத்திரமாக வந்தது. இது தான் சரியான சமயம் அவளை மிரட்டுவதற்கு என்று எண்ணியவன், கீழே விரைந்துச் சென்றான்.

“வாவ்! இந்த பிளவர்ஸ் எவ்ளோ அழகா இருக்கு.” என்று ரசித்தபடியே நடந்தவள், ஓரமாக போடப்பட்டிருக்கும் முல்லைப்பூ பந்தலின் அருகே சென்றாள். வீட்டின் கூரை போல, அழகாக படர்ந்திருந்த ஜாதிமுல்லையின் வாசத்தை நுகர்ந்தபடி, அவள் செல்ல, அவ்விடம் வந்திருந்தவனோ பெண்ணவளின் கைகளை பற்றியது மட்டுமின்றி, முல்லை பந்தலுக்குள்ளே இழுத்தும் சென்றான்.

முதலில் அதிர்ந்தவள் கத்த போக, அவன் தான் என்று தெரிந்ததும் கத்துவதை கைவிட்டிருந்தாள். “அத்தான் என்ன பண்றீங்க?” என்றவள் திடுக்கிட்டு கேட்க,

“உஷ்” என்றான் முறைத்துக் கொண்டே, “என்ன விடுங்க அத்தான்.” அவள் பயத்துடன் கேட்க, “அப்படி எல்லாம் விட முடியாது. சொல்லுடி எதுக்கு இங்க வந்த? எதுக்கு இங்க காலேஜ்ல சேர்ந்த? இதுக்கு பின்னாடி என்ன சதி திட்டம் வெச்சிருக்க? சொல்ல போறியா? இல்லையா?” என்று தன் தோள் பட்டையினை பற்றியபடி உலுக்கும் உமாபதியை புரியாது பார்த்தாள் பெண்.

“என்ன அத்தான் விளையாடுறீங்களா? என்னமோ அல்கொய்தா தீவிரவாதியை விசாரிக்குற மாதிரி விசாரிக்கிறீங்க? என்ன பார்த்தால் எப்படி தெரியுது” என்றாள் சற்று காட்டமாக.

“என்னடி மிரட்டுற? நீ அதுக்கும் மேலயாச்சே? அப்புறம் உன்னை பார்த்தால்?” என்றவனின் காலின் மீது ஏதோ பூச்சி கடிப்பது போல் தோன்ற, பெண்ணவளின் முகத்திலிருந்த பார்வை கீழே பதிந்த அந்த தருணம் அவனது பார்வை செல்லும் விதத்தை தவறாக நினைத்துக் கொண்டாள் நிலா.

“ச்சீ வெட்கமா இல்லையா அத்தான்.” என்று ஆணவனை உதறித் தள்ளியவள் கழுத்தினை ஒட்டியிருந்த தன் துப்பட்டாவினை சரி செய்தபடி அணிந்துக் கொள்ள, அவனது முகம் அவமானத்தில் கருத்துப் போனது. மேலும், அவளது செயல் எதற்காக என்பதை உணர்ந்தவனுக்கு அந்த நொடி கட்டுக்கடங்காத கோபம் துளிர்த்தது.

“என்னடி நினைச்ச? அந்த அளவு கீழ்த்தரமா நினைச்சுட்டல்ல. உனக்கு நல்லபடியா பேசுனா புரியாது. நீ நினைச்ச மாதிரியே பேசுறேன் டி.” என்றவன் அடுத்த நொடியே அவளது செவ்விதழ்களை சிறை எடுத்திருக்க, சற்றும் எதிர்பாராதவள் அதிர்ச்சியில் கண்களை பெரிதாக விரித்தாள்.

அடிப்பட்ட கைகளால் அவனை விலக்கவும் அவளால் முடியவில்லை. ஒருகட்டத்திற்கு மேல் அவன் மீதிருக்கும் அவளின் காதல் மறுப்பேதும் தெரிவிக்காமல் போக, கோபத்தில் துணிந்தவன் பெண்ணவளின் இதழ் தேனை சுவைப்பதில் கருத்தாகிப் போக, விரிந்த முல்லை மலர்கள் ஒவ்வொன்றாய் இருவரின் மீதும் விழுந்த அந்த நொடி அவனையும் மீறி முத்தத்தில் மூழ்கியிருந்தவனது கைகள் பெண்ணவளின் இடையினை வாகாக திருப்பி தன் உடலோடு சேர்த்து அணைத்திருந்தது.

“டேய் உமா…” என்று அவன் பின்புறமாக கேட்ட அழைப்பில் ஸ்தம்பித்துப் போய் அவளை விட்டு விலகியிருந்தவன், அதிர்ச்சியில் வெலவெலத்துப் போய் திரும்பி பார்த்தான்.

ஒற்றை அழைப்பு அவனை மல்லாக்க படுக்க வைத்து ஏறி மிதித்து ஓடுவதைப் போல மாய பிம்பத்தை தோற்றுவிக்க, அச்சம் சூழ நின்றவனின் கண்கள், எதிரே நின்றிருந்தவர்களைக் கண்டு மயக்கம் வராத குறையாக பார்த்தது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்