
இரவு வேளையில் அனைவரும் அவரவர் அறையில் முடங்கி இருக்க, தன்னை அணைத்து நெஞ்சில் உறங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பிரித்துத் தனியாகப் படுக்க வைத்தவள், விழிகளை மூடி உறங்கப் போகும் முன் அவளது கைபேசி சத்தமிட்டது. எடுத்துப் பார்த்தாள்.
நந்துவிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருக்க, அதனைத் திறந்து பார்த்தாள்.
“கதவைத் திறடி” என்று அனுப்பி இருந்தான். அதிர்ந்து போனவள் வேகமாக வந்து கதவைத் திறக்க, சராலெனக் காற்றைப் போல உள்ளே புகுந்து கதவைத் தாளிட்டான்.
“இந்த நேரத்துல இங்க என்னடா பண்ற?” என்று சின்னக் குரலில் கேட்டாள். அவனோ பதில் சொல்லாது சச்சின் முன்னால் வந்து நின்றான்.
“தூங்கிட்டான்டா! எதுக்கு அவனையே பார்க்கிற?”
“ஒன்னுமில்ல…” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றான்.
“என்ன வேணும் இந்த நேரத்துல? அத்தை, மாமா பார்த்தால் என்ன நினைப்பாங்க?” எனத் தலையில் அடித்துக் கொண்டு பேசினாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாது பால்கனி கதவைத் திறந்து அவளைக் கீழே அமரச் சொல்லி, அவள் மடியில் படுத்துக் கொண்டு அவள் முகம் பார்த்தான்.
“என்னடா?”
“எனக்கு அம்மாவா இருப்பேன்னு சொல்லிட்டுச் சின்னுவை மட்டும் தூங்க வைக்கிற? என்னைத் தூங்க வைக்க வேணாமா?”
“ஆமா, இவரு சின்னப் பிள்ளை பாரு! நெஞ்சுல போட்டுத் தட்டிக் கொடுக்க?” என வாய் விட்டவள் நாக்கைக் கடித்து அவனைப் பார்க்க, அவனது கண்கள் பளபளத்தன.
“பரவாயில்ல, கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நெஞ்சுல போட்டுத் தூங்க வைக்கலாம்… ஆனா இப்ப இது போதும்,” என வாகாகப் படுத்துக் கொண்டான்.
அவனை முறைத்தாலும் கை அவனது சிகைக்குள் சென்று அளைந்தது. அவனும் அவளது முகம் பார்த்திருந்தான்.
“என்னடா?” எனக் கேட்டாலும் வெட்கம் பிடுங்கித் தின்றது அவளை.
“அழகா இருக்க அன்னம்மா!!! தாயா உன்னைப் பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்க! அன்னம்மான்ற பேரு உனக்குச் சரியாத்தான்டி வச்சிருக்கேன்…” என்று கன்னத்தைக் கிள்ள, தட்டி விட்டாள்.
“ஏன்டி?”
“இதுதான் சாக்குன்னு சாரோட கை நீளுது!”
“உன்னைப் பக்கத்துல வச்சுக்கிட்டுத் கட்டுப்படுத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாடி?”
“அதுக்கு?” எனப் புருவத்தை உயர்த்த,
“அதுக்குக் கொஞ்சமாக் கைய வச்சுக்கிறேன்,” என முடிக்கும் முன்னமே வாயில் ஒன்று போட்டாள் ஜனனி.
“கொன்னுடுவேன்! எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான். ஒழுங்கா எழுந்து உன் ரூமுக்கு போடா,” என்றாள்.
“ம்கூம் முடியாது; நான் இங்கதான் இருப்பேன். இங்கதான் தூங்குவேன். நீயில்லாம தூக்கமே வர மாட்டேங்குதுடி. எப்போடா உன்னை அணைச்சுட்டுத் தூங்கலாம்னு இருக்கேன்…? இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல! கட்டி அணைச்சுட்டே தூங்கினா என்ன?!” என எழுந்து அமர,
“ஓ தூங்கலாமே!” என அவள் எழுந்து கொள்ள, அவனும் எழுந்தான். பால்கனி கதவைத் தாளிட்டவள், அவனை இழுத்துக் கொண்டு வந்தாள்.
அவன் மெத்தையை நோக்கிச் செல்ல, இவளோ கதவைத் திறந்து அவனை வெளியே தள்ளினாள்.
“எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்! போய் தூங்குடா,” என்று கதவைச் சாத்திவிட்டு அதில் சாய்ந்து கொண்டாள்.
இரண்டு முறை தட்டிப் பார்த்தான்; திறக்கவில்லை என்றதும் அவனது அறைக்குச் சென்றுவிட்டான்.
அவள் மேனியெல்லாம் குறுகுறுக்க, மெத்தையில் வந்து விழுந்தவளுக்கும் அவனைக் கட்டி அணைத்து உறங்க வேண்டும் என்றுதான் இருந்தது. இத்தனை நாள் தனக்குள் அடக்கிக் கொண்ட அவளது அத்தனை சுகங்களையும் மீட்டெடுத்துவிட்டான் சின்னத் தீண்டலில். மெத்தையில் வந்து விழுந்தவள் தலையணையைத் குறுக்கே வைத்து அணைத்துக் கொண்டு படுத்துவிட்டாள்.
இதழின் சிரிப்பை அடக்கியபடி அவள் படுத்திருக்க, விபு அவளது தட்டையான வயிற்றுப் பகுதியில் படுத்துக் கொண்டு அவனால் அவளுக்குள் உருவான புது உறவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“தங்கமே! கேக்குதா! உன் அப்பாதான் தங்கமே பேசுறேன் கேக்குதா! இன்னைக்குத்தான் முதல் நாள். இது மாதிரி நீ உள்ள இருக்கப் பத்து மாசமும் அப்பா உன்கிட்டப் பேசப் போறேன். நீ கேட்டுட்டு எனக்கு ரிப்ளை பண்ணனும் புரியுதா?!” எனப் பேசிக் கொண்டிருக்க,
“நான் வேணும்னா ஒரு போனை முழுங்கிடவா? உன் பிள்ளை உனக்கு ரிப்ளை தர ஈஸியா இருக்கும்ல,” எனப் கேலி செய்ய, அவளது இடையைச் லேசாகக் கடித்தான்.
“ஆவுச்,” என்று அலறினாள்.
“கத்தாதடி புள்ளை தூங்கட்டும்,” என அவ்விடம் முத்தம் வைத்தான்.
“இது சரியில்லை… கரு உண்டானதுக்கே சார் பிள்ளை பிள்ளைன்னு சொல்லிட்டு இருக்கீங்க!!! குழந்தை வந்துட்டா என்னைப் மறந்திடுவீங்கதானே! என்னைத் டீல் விட்டுடுவீங்கதானே,” எனவும்,
அவனும் தோளை அசட்டையாகக் குலுக்கிவிட்டு “ஆஃப் கோர்ஸ்” என்றான்.
அவனது முடியைப் பிடித்து இழுத்தாள். “ஆஆ…” என்று விபு அலறினான்.
“கொன்னுடுவேன்!!! உனக்கு எப்பவும் முதல்ல நான்தான். என்னைக் கொஞ்சின பிறகுதான் உன் பிள்ளையைக் கொஞ்சணும். ஃபர்ஸ்ட் பிரியாரிட்டி எனக்குத்தான். அப்புறம்தான் உன் புள்ளை… என்னை ஏங்க விட்ட, அப்புறம் பார் கடிச்சு வச்சுடுவேன்,” என்று மிரட்ட, அவளது வயிற்றுப் பகுதியிலிருந்து நெஞ்சுப் பகுதிக்கு வந்தவன், அவளது இதழில் முத்தம் வைத்தான்.
“அடியே!!! எனக்கு எப்பவும் முதல் குழந்தை நீதான். உன்னைக் கொஞ்சின பிறகுதானே நம்ம புள்ளையே வந்துச்சு! எப்பவும் முதல்ல நீ… நீதான். அப்புறம்தான் நம்ம பாப்பா! எனக்கு மட்டும் இல்லை உனக்கும் அதைத்தான் சொல்றேன். முதல்ல உனக்கு நான், அப்புறம்தான் பாப்பா,” என்று நெற்றி முட்ட, அவனது இதழில் முத்தம் வைத்தாள். அவனும் நேராகப் படுத்துக் கொண்டு அவளை அணைத்தான்.
“எப்படியோ!!! உள்ளுக்குள்ள ஓரமாக இருந்த சின்னக் குற்றவுணர்வு ஒண்ணுமில்லாம போயிடுச்சு! இனி முழுசா சந்தோஷமா நம்ம குழந்தை பெத்துக்குறதுல கான்சென்டிரேஷன் பண்ணலாம்…” என அவள் சொல்ல,
“ஆங்… பி.எட் (B.Ed) எக்ஸாம் வருது மேடம்… புக்ஸை எப்போ கையில எடுக்கிறதா இருக்கீங்க?” என அவளை நிம்மதியாக மூச்சு கூட வாங்க விடவில்லை, மறந்து போன படிப்பைப் பற்றிப் பேசினான்.
“நான் சந்தோஷமா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா விபு! எந்த நேரத்துல எதை நியாபகப்படுத்துற நீ?” எனச் சலித்துக் கொள்ள,
“நீ மறந்து போயிருப்பேன்னு தெரிஞ்சுதான்டி நியாபகப்படுத்தினேன். ஒழுங்கா நான் டைம் டேபிள் போட்டுத் தர்றேன், அதுபடி படிக்கிற! புரிஞ்சுதா?” என அதட்ட, அவளோ இதழைப் பிதுக்க, அதனைச் சிறையெடுத்தபடி அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்.
அன்று விடுமுறை நாளாக இருக்க, சச்சினை அழைத்துக்கொண்டு மூவரும் தங்களது கேட்டரிங்கிற்குச் சென்றனர்.
அன்று விசேஷம் இல்லாததால் வழக்கமாகச் சமைத்துத் தரும் இடங்களுக்கு மட்டும் உணவைச் சமைத்து அனுப்பிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு உதவியாக நந்துவும் பெரிய பாத்திரங்களைத் தேய்த்து விளக்கிக் கொண்டிருந்தான். சச்சினோ தண்ணீர் பைப்பை வைத்து அவன் மீது தண்ணீரை அடித்தபடி விளையாடிக்கொண்டிருந்தான்.
சட்டையைத் தனியாகக் கழற்றி வைத்துவிட்டு, உள் பணியணோடு (Banian) பேன்ட்டை முட்டி வரை ஏற்றிவிட்டுத் தேய்த்துக் கொண்டிருந்தான்.
‘சின்னு’ என்ற முதல் அழைப்பிற்குத் தண்ணீரைத் திறந்து விடுவதும், ‘சின்னு’ என்ற இரண்டாம் அழைப்பிற்குத் தண்ணீரை மூடுவதுமாக இருவரும் விளையாடிக்கொண்டே வேலை செய்தனர்.
உள்ளே கணக்கு வழக்கைப் பார்த்தபடி இவர்கள் விளையாட்டை கேட்ட வண்ணம் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். வேலைகள் முடிய வெளியே வந்தாள்.
“இன்னும் உங்க வேலை முடியலையா?”
“இதோ அவ்வளவுதான், முடியப் போகுது,” என்று நந்து சொல்ல,
அவன் அருகே வந்து நின்றாள். ‘சின்னு’ என முதல் அழைப்பில் பாத்திரத்தின் மேல் தண்ணீர் விடச் சொல்ல, அவனோ தாய் மீது தண்ணீரை அடித்தான்.
“சச்சின்… சச்சி!” என அவள் விலகிச் சென்றாலும் அவள் உடலை முழுவதுமாக நனைத்துவிட்டான்.
வேகமாக நந்து அவனிடமிருந்து பைப்பை வாங்கித் தூரப் போட்டான்.
“ஹேய்,” எனத் துள்ளி குதித்து மகிழ்ந்தான் அந்தச் சிறுவன்… தலையில் கை வைத்து நின்றான் நந்து.
“வீட்டுக்கு வா உன்னைப் பார்த்துக்கிறேன்,” என்று விறுவிறுவென அலுவலகத்துக்குள் சென்றுவிட்டாள்.
சச்சின் நந்துவைச் சிரிப்புடன் பார்க்க, அவனும் ‘ஏன்டா?’ எனச் சிரிப்புடன் கேட்டுவிட்டு உள்ளே சென்றான்.
அவன் உள்ளே வர அவளோ திரும்பி இருந்தாள். பின்னழகில் ஈரம் சொட்டச் சொட்ட உடலோடு ஒட்டிப் போயிருந்தது சேலை.
எச்சிலை விழுங்கிக் கொண்டு வந்து நின்றான்.
“நந்து!!! சாரி மொத்தமும் ஈரமாச்சு! என்னால வெளியே வர முடியாது ப்ளீஸ் ஏதாவது பண்ணு!” என்றாள் திரும்பாமல்.
உள்ளே ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த தனது சட்டையை எடுத்து அவளிடம் கொடுத்து, “இதைப் போட்டுக்கோ அன்னம்மா.”
“சரஸ் அக்காவை வரச் சொல்றேன். ஆட்டோல போயிடு! நான் சச்சினோட வண்டியில வர்றேன்,” என்றான் பிடரியை வருடியபடி.
“உனக்குச் சட்டை?”
“இங்க ஏற்கனவே ஒரு செட் இருக்கு! நான் போட்டுக்கிறேன்… நீ இதைப் போட்டுக்கோ,” என்று மேசையில் வைத்துவிட்டு வெளியேறினான். இவளும் அதனை அணிந்து கொண்டாள்.
சரஸ்வதி என்ற பெண் ஆட்டோ ஓட்டுநர், ஜனனி அழைக்கும் போதெல்லாம் சவாரி வருவது வழக்கம்… ஒருவருக்கொருவர் நட்பு ரீதியாகப் பழக்கம் என்பதால் ஜனனி எப்போது அழைத்தாலும் வந்து விடுவாள் சரஸ்வதியும்.
இன்று அழைக்க, இதோ வந்துவிட்டாள். நந்துவின் சட்டையை நனைந்த சேலை மீது அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.
சச்சின் சிரிக்க, நந்துவும் சிரிக்க இருவரையும் முறைத்துவிட்டு ஆட்டோவில் ஏறிக் கொண்டாள்.
வரும் வழியெல்லாம் சட்டையிலுள்ள காலரை நாசியில் வைத்து நந்துவின் வாசனையைச் சரஸ்வதி அறியாத வண்ணம் உள்ளிழுத்துக் கொண்டே வந்தாள்.
ஜனனியின் அப்பார்ட்மெண்ட் வர, பணத்தைக் கொடுத்து இறங்கிக் கொள்ள, நமட்டுச் சிரிப்புடன் சரஸ்வதி கண்ணடித்து விட்டுச் செல்ல, சரஸ்வதி கண்டு கொண்டதை நாக்கைக் கடித்தபடி வழிந்தவள், யாரும் பார்க்காத வண்ணம் மின் தூக்கியில் (Lift) ஏறிக் கொண்டாள். அவளது தளத்திற்கு வந்ததும் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்.
வீட்டில் யாருமில்லை. அவளது மாமனார் மாமியார் தெரிந்தவர் விசேஷத்திற்குச் சென்றிருப்பதால் தான் சச்சினைத் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
உள்ளே வந்தவள் உடை மாற்றிவிட்டுச் சட்டையை நிமிர்த்திப் பிடித்துப் பார்த்தாள். சட்டைப்பை இருந்த பகுதியில் முத்தம் வைத்தாள்.
கணவனின் சட்டையை அணிந்து கொண்டு அவனுடன் உறங்க வேண்டும் என்பது நிராசையான அவளது ஆசைகளில் ஒன்று. முதல் திருமணத்தில் கணவன் அருகே நின்று பேசுவதே அரிதான விஷயம் அவளுக்கு. இதெல்லாம் எங்கே நடந்திருக்கும்?
ஆனால் இன்று அவளது ஆசைகளில் ஒன்றான இதுவும் நடந்தது. சட்டையைச் சுருட்டித் தனது சேலைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டாள்.
அவனும் வேலை முடித்து வர, நீலகண்டனும் வள்ளியும் வந்துவிட்டனர்.
பின் கணக்கு வழக்கு, இரவு உணவு என அனைத்தையும் முடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டனர்.
வழக்கம் போலவே வாசலில் நின்று கொண்டு கதவைத் திறக்கும்படி குறுஞ்செய்தி அனுப்பினான்.
இந்த முறை அவளோ திறக்கவில்லை.
‘மாட்டேன்’ என்று அதே பிடியில் அவளும் நின்றாள்.
“அடியே தினமும் நடக்கிறதுதானே! இன்னைக்கு மட்டும் என்ன திறக்க மாட்டேன்னு நிக்கிற? என்னடி விஷயம்?”
“அதெல்லாம் சொல்ல முடியாது! இன்னைக்குத் திறக்க முடியாது போ… போய் படு,” என்று அவனுக்குப் பதில் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.
“அதெல்லாம் முடியாது, நீ இப்பத் திறக்கிற? இல்ல பெரியம்மா பெரியப்பாவைக் கூப்பிடுவேன்,” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு கதவைத் தட்டினான்.
லேசாகத் திறந்தவள், “உனக்குச் சொன்னா புரியாதா? அதெல்லாம் இன்னைக்கு உன்னை உள்ள விட மாட்டேன் போய் தூங்கு,” என்றவள் கதவைச் சாத்தும் முன் பிடித்துக் கொண்டவன், எட்டிப் பார்க்க அரைகுறையுமாக அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்துவிட்டான். அவனது சட்டையைத்தான் அணிந்திருந்தாள்.
“சரி சரி நீ திறக்க வேணாம், என்னோட சட்டையை மட்டும் கொடு நான் போயிடுறேன்,” என்று சிரிப்பை அடக்கியபடி சொல்ல, அவளோ நாக்கைக் கடித்தவள், அவனிடம் சமாளிப்பாக “அது ஈரமா இருக்கு நாளைக்குக் காய வச்சுத் தர்றேன்,” என்றாள்.
“இல்ல ஈரமா இருந்தாலும் பரவாயில்லை நான் காய வச்சுக்கிறேன். என் சட்டையைக்கொடு,” என்று அவனும் விடாமல் வம்பு செய்ய,
“அதுதான் தர முடியாதுன்னு சொல்றேன்ல போடா,” எனச் சற்று கதவைத் தளர்த்திச் சொல்ல, வேகமாக உள்ளே புகுந்துவிட்டான் அந்தக் கள்வன்.
அவளோ திரும்பி நின்று முகத்தை மறைத்துக் கொண்டாள். அவனது சட்டையும் கீழே லாங் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள்.
விசிலடித்த படியே அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
“ஓஹோ!!! இதுக்குத்தான் மேடம் திறக்க மாட்டேன்னு சொன்னீங்களா?” எனக் காது மடல் உரசச் சொன்னான். அவளோ வெட்கம் கொள்ள, அவளைத் தன் பக்கம் திருப்பியவன், “என் சட்டைக்கு வாய்த்த அதிர்ஷ்டம் எனக்குக் கிடைக்கல,” என்க, வேகமாக அவனை வெட்கத்துடன் அணைத்துக் கொண்டாள்.
அவனோ சத்தமாகச் சிரித்தபடி அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.
கைகளை பிசைந்து கொண்டு நல்லசிவம் கந்தன் முன்னே நிற்க, அவன் நீட்டிய பத்திரத்தைக் கண்டு அதிர்ந்து போய் நின்றார் அவர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தட்டச்சு பிழையா அல்லது அத்தியாயம் 38 பதிவேற்றவில்லையா? 37 க்கு பிறகு அத்தியாயம் 39 என்று இருக்கு..
நாயகன் 38 தான் மா 39 போட்டுட்டேன். இப்போ மாத்திட்டேன். உங்க கமென்ட் நன்றி மா… இது போல அடுத்த அத்தியாயங்களுக்கும் உங்க கருத்தை எதிர்பார்க்கிறேன்.