
வள்ளி, நீலகண்டன் இருவரும் தன் முன்னே அமர்ந்திருக்கும் நந்து பேசப்போகும் விஷயத்தைக் கேட்க ஆர்வமாக அமர்ந்திருந்தனர். அவனோ பேசத் தயங்கியபடி, இருவரையும் பாராமல் தலை குனிந்திருந்தான்.
“என்னமோ பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படிடா? சொல்லு நந்து, என்ன விஷயம்?” என நீலகண்டன் அவனது மௌனத்தைக் கலைத்தார்.
“பெரியப்பா, பெரியம்மா… நீங்க எனக்காகப் பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறீங்க. அதுல எனக்குச் சந்தோஷம்தான், ஆனா… எனக்கு…” என நிறுத்தி எச்சிலை விழுங்கினான்.
“உனக்கு… உனக்கு என்னடா?” வள்ளி பதற்றமாகக் கேட்க,
“நான் ஒரு பொண்ணை மனசார நேசிக்கிறேன் பெரியம்மா! அவளோட வாழணும்னு விரும்புறேன். என்னை மன்னிச்சிடுங்க! நீங்க எனக்காகப் பெண் பார்க்கும்போது எனக்குக் குற்றவுணர்ச்சியா இருந்தது. எனக்கு அந்தப் பொண்ணு இல்லாம வாழ்க்கையே இல்லை… அவதான் வேணும் பெரியம்மா!” எனச் சிறுபிள்ளை போலக் கேட்டான்.
பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டனர். பின் புன்னகையோடு அவனை நோக்கினர்.
“உனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்தா எங்ககிட்ட சொல்ல என்னடா தயக்கம்? நாங்க உனக்கு பெரியம்மா, பெரியப்பாதான், ஆனா நீ எங்களுக்குப் பிள்ளைடா! உரிமையா உன் விருப்பத்தைச் சொல்ல ஏன் தயங்குற? சொல்லு, யாரு அந்தப் பொண்ணு? நாங்க ரெண்டு பேரும் போய் முறைப்படி பெண் கேட்கிறோம்,” எனக் கனிவுடன் கூற, அவன் நெகிழ்ந்து அவர்கள் காலடியில் அமர்ந்து கொண்டான்.
“என்னை மன்னிச்சிடுங்க பெரியம்மா! நீங்க என்ன நினைப்பீங்களோன்னு தயக்கமா இருந்தது. ஆனா, நான் தான் உங்களைத் தப்பா நினைச்சிருக்கேன், சாரி பெரியம்மா!” என அவர் கையைப் பற்றிக்கொண்டான்.
அவனது தலையை வருடியவர், “நான் என்னடா உன்னை நினைக்கப் போறேன்? குழந்தைக்காகத் தவிக்கிறவங்களுக்குக் குழந்தை வரமாய்க் கிடைப்பது போலத்தான் நீயும் எங்களுக்கு… மத்தவங்களுக்காகவோ இல்ல நாங்க செஞ்ச பாவத்துக்குப் பரிகாரமாகவோ உன்னை எங்க பிள்ளையா ஏத்துக்கலடா! பிள்ளை இல்லாம தவிச்ச எங்களுக்கு மகனா கிடைச்ச வரம் நீ! எங்க கடைசி காலத்துல எங்களைப் பார்த்துக்க ஜனனி இருந்தாலும், எங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய ஒரு மகன் இல்லையேன்ற வேதனை இருந்தது. ஆனா உன்னைப் பார்த்ததும் அந்த வேதனை மறைஞ்சு போச்சு. உனக்குன்னு ஒரு குடும்பம் வந்தாலும், அவங்க முக்கியமாப் போனாலும், எங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மட்டும் செஞ்சிடுப்பா… அதுவே போதும்,” என்றார் கண்ணீரோடு.
“எனக்குக் குடும்பம் வந்தாலும் நீங்க ரெண்டு பேரும்தான் முக்கியம் பெரியம்மா! உங்களை விட்டுட்டு நான் ஒரு குடும்பம் அமைப்பேன் என நினைக்கிறீங்களா? நீங்க இல்லாம எனக்குக் குடும்பமே இல்லை…” என அவர் கைகளில் கன்னம் பதித்தான்.
“சரி சரிடா, அம்மாவும் பையனும் பாசத்தைப் பொழிஞ்சது போதும். பொண்ணு யாருன்னு சொல்லுடா, போய் பேசிட்டு வருவோம்.”
“சொல்றேன் பெரியப்பா, ஆனா இப்போ இல்லை! பொண்ணுகிட்ட இருந்து இன்னும் ‘நல்ல நியூஸ்’ வரலை. வந்ததும் கண்டிப்பா சொல்றேன், அப்போ பொண்ணு வீட்ல பேசலாம்.”
“ஒன் சைட் லவ்வா? இன்னும் பொண்ணு ஓகே பண்ணலையா? யாருடா அந்தப் பொண்ணு, நாங்க வேணா பேசவா?”
“அவளுக்குள்ள நானும் இருக்கேன் பெரியம்மா, அதை அவ ஒத்துக்க மாட்டேங்கறா!”
“ஏன்டா, அவங்க வீட்ல ஜாதி ஏதும் பார்ப்பாங்களா?”
“இல்லை பெரியப்பா! அவங்க வீட்ல நம்மளைப் போலத்தான். இவ மட்டும்தான் எதையோ நினைச்சுட்டுப் பிடிவாதம் பிடிக்கறா. கண்டிப்பா அவ மனசை மாத்தி என் காதலைப் புரிய வச்சிடுவேன். எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்.”
“சரிடா! ஆனா வயசு ஏறிட்டே போகுதே! நான் வேணா அந்தப் பொண்ணுகிட்ட பேசட்டுமா?”
“இல்ல பெரியம்மா, நானே பார்த்துக்கிறேன்!”
“சரிடா, எப்போ காதலிக்க ஆரம்பிச்ச? அந்தப் பொண்ணு யாருன்னு சொல்லுடா.”
“பெரியம்மா, ஸ்கூல் படிக்கிறப்ப இருந்தே லவ்! கண்டிப்பாச் சொல்லுவேன், இப்போதைக்கு இது சஸ்பென்ஸ்,” என்று கூறி எழுந்து வெளியே சென்றான். பெரியவர்கள் இருவரும் குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பூங்காவில்:
கீழே பூங்காவில் சச்சின் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். ஜனனி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, நகங்களைக் கடித்தபடி தன் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உண்மை தெரிந்து அவர்கள் தன்னை அழைத்து என்ன பேசுவார்களோ என்ற பயமும் பதற்றமும் அவளை ஆட்கொண்டிருந்தது. மகன் மேல் கவனம் வைக்காமல், மேலே அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற சிந்தனையிலேயே மூழ்கியிருந்தாள்.
அவளைத் தேடி வந்த நந்து, அவளது நிலமையைக் கண்டு சிரித்தபடி அருகில் அமர்ந்தான். அதைக் கூடக் கவனிக்காமல் இருந்தவளைச் சொடுக்கிட்டு அழைத்தான். சட்டென நினைவிற்கு வந்தவள் அவனைக்கண்டு விழிகளை விரித்தாள்.
“என்ன மேடம், ஏதோ யோசனையில இருக்கீங்க போல? என்னன்னு சொல்லுங்க, உங்களுக்கு உதவி பண்றேன்.”
“நந்து… அத்தை, மாமாகிட்ட என்ன பேசின?”
“நான் காதலிக்கிற விஷயத்தைச் சொல்லிட்டேன்,” என்றான் அசட்டையாக.
“சொல்லிட்டியா?” என அதிர்ந்தவள், “அ… அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?” எனப் பதற்றமாக வினவினாள்.
அவனோ இதழுக்குள் சிரித்தபடி, “பொண்ணு யாருன்னு சொல்லு, கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொன்னாங்க!”
“நீ… நீ என்ன சொன்ன?”
“பொண்ணு ஓகே சொல்லட்டும் அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டேன். அதுவரைக்கும் சஸ்பென்ஸ்!” என்று அவன் தோளைக் குலுக்க, அவளுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. நெஞ்சில் கை வைத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“என்ன, இதுக்கே இப்படிப் பயந்து டென்ஷனான எப்படி? இன்னும் நிறையப் பார்க்க வேண்டியது இருக்குமே!” என நக்கலுடன் அவன் சொல்ல, அவளுக்குக் கோபம் வந்தது.
“ஸ்டுபிட் நந்து! ஏன் என்னை இப்படிச் சாவடிக்கிற? நிம்மதியா இருந்த என்னை நிம்மதி இல்லாம தவிக்க விடுறயே! எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டியா? எனக்குக் கல்யாணம் வேணாம்னு சொல்றேனே, ஏன் இன்னும் அதையே பிடிச்சுட்டுத் தொங்குற? ப்ளீஸ் நந்து, வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ, என்னை விட்டுடு.”
“விட்டுடணுமா? எப்படி விடச் சொல்ற? சின்ன வயசுல இருந்து உன்னை விரும்புறேன். அவ்வளவு ஈஸியா உன்னை என் மனசுல இருந்து தூக்கிப் போட்டுட்டு இன்னொரு பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க முடியும்னு எப்படி நினைக்கிற? அப்படி நான் நினைச்சிருந்தா, அந்த மித்ராவைக் கல்யாணம் பண்ணிட்டு ராஜாவா இருந்திருப்பேன். ஏன் பண்ணலை? என் மனசுல நீ வேரூன்றி இருக்க! உன் நினைப்பு எனக்குள்ள ஆணிவேராப் புதைஞ்சிருக்கு. அதைச் சாதாரணமாப் பிடுங்கிப் போட முடியாது. என் சாவைத் தவிர எதனாலும் என் காதலை மாற்ற முடியாது!”
அவன் பேசப் பேச அவளது நெஞ்சில் ஒரு புதிய வலியும் பரவசமும் ஒருசேர உண்டானது.
“உனக்கும் என்னைப் பிடிக்கும், நீயும் என்னை விரும்புறன்னு எனக்குத் தெரியும்! அன்னைக்கு பெரியம்மா எனக்குப் பொண்ணு பார்க்கச் சொன்னப்போ உன் முகம் வாடிடுச்சு பாரு, அதுலேயே தெரிஞ்சுடுச்சு நீ என்னை லவ் பண்றன்னு!”
“அ… அதெல்லாம் எதுவுமில்லை,” என எங்கோ பார்த்துச் சமாளித்தாள்.
“என்னைப்பார்த்துச் சொல்லு… என் கண்ணைப் பார்த்து உனக்கு என் மேல காதல் இல்லைன்னு சொல்லு,” என்றான் அழுத்தமாக.
அவளும் அவன் விழிகளைப் பார்த்துச் சொல்ல முயன்றாள், ஆனால் வார்த்தைகள் தட்டுமாறிப் போயின.
“உன்னால முடியாது, எனக்குத் தெரியும். பிகாஸ் யூ லவ் மீ!”
“நோ! ப்ளீஸ் நந்து! நான் உன்னை விரும்பலை! என்னை விட்டுடு,” எனத் தலைகுனிந்து கண்ணீர் விட்டாள்.
“என்னைப்பார்த்துச் சொல்லு.”
அவள் ஒரு முடிவெடுத்தவளாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “நந்து! நிச்சயம் என்னால உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க முடியாது! நான் உன்னை விரும்பலை! நீ வேறொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டுச் சந்தோஷமா இரு. அதையும் மீறி நான் வேணும்னு நினைச்சா, நான் இங்க இருக்கவே மாட்டேன். நானும் சச்சினும் எங்கயாவது போயிடுவோம். எனக்கு என் நிம்மதிதான் முக்கியம்… நீ வந்த பிறகு அது சுத்தமா இல்லாமப் போயிடுச்சு! ப்ளீஸ், அந்த நிம்மதி எனக்கு வேணும்… என்னை விட்டுடு! உன் சந்தோஷத்துக்காகத்தான் உன்னை இந்தியா வரச் சொன்னேன், ஆனா நீ வந்ததும் என் நிம்மதியைப் பறிச்சுட்ட! எங்களை விட்டுடு நந்து,” என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டாள்.
விரக்தியாகச் சிரித்தவன் எதுவும் பேசவில்லை, ஆனால் உள்ளுக்குள் சுக்குநூறாக உடைந்து போனான். தான் நேசிக்கும் பெண்ணிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் கண்களில் கண்ணீர் வடிய, அதைக் கண்டவளின் நெஞ்சில் ரத்தம் வடிந்தது. அவனைக் காயம் செய்வது போலத் தன்னையே காயம் செய்து கொண்டாள் ஜனனி.
“என்னை மன்னிச்சிடு! ப்ளீஸ், இதுக்கு மேலே காதலைப் பத்தி என்கிட்ட பேசாதே,” என்று கூறிவிட்டு அவள் செல்ல, கண்ணீரைத் துடைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அன்னை அழுதுகொண்டே போவதைக் கண்ட சச்சின், நந்துவின் அருகே வந்து, “எதுக்கு என் அம்மாவை அழ வைக்கிற? ஏன் அவங்ககூடச் சண்டை போடுற?” எனக் கேட்டான்.
“நான் உன் அம்மாகூடச் சண்டை போடலைடா… அவகிட்ட நான் கேட்ட ஒரு விஷயத்துக்கு அவ மறுப்பு சொல்லிட்டு என்னை ஹர்ட் பண்ணிட்டுப் போறா,” என்றான் கண்களைத் துடைத்தபடி.
“என்ன கேட்ட?”
“உனக்கு அம்மாவா இருக்கிறது போல, எனக்கும் அம்மாவா இருப்பியான்னு கேட்டேன். முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டா!” என்று சொல்லும்போதே மீண்டும் அவனுக்குக் கண்ணீர் வந்தது. அதைச் சச்சின் தன் பிஞ்சு கைகளால் துடைத்து விட்டான்.
“உனக்கு அம்மா இல்லையா?” எனப் பாவமாகக் கேட்டான் சிறுவன்.
நந்துவோ, “அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை… எனக்கு யாருமில்லை,” என உதட்டைப் பிதுக்கினான். சச்சின் மீண்டும் அவன் கண்ணீரைத் துடைத்தபடி, “நான் இருக்கேன் நந்து உனக்கு. அம்மாகிட்ட நான் பேசவா? ‘நந்துவுக்கும் அம்மாவா இரு’ன்னு ஜானுகிட்ட சொல்றேன்,” என்றதுமே அவனை வாரி அணைத்துக் கொண்டான் நந்து.
சச்சினும் தன் பிஞ்சு கைகளால் அவன் முதுகை வருடிக்கொடுத்தான். வழக்கமாக சச்சின் அழும்போது ஜனனி செய்வது போலவே இவன் செய்ய, நந்துவிற்கு அழுகை முட்டியது.
பின் இருவரும் பிரிந்தனர். சச்சின் அவன் கையைப் பற்றிக்கொண்டு, “வா… இப்போவே கேட்கலாம்,” என்று இழுத்தான்.
“வேணாம் சின்னு, உங்க அம்மா நம்ம ரெண்டு பேரையும் திட்டுவாங்க. இதைப்பத்தி நீ எப்பவும் உங்க அம்மாகிட்ட பேசக்கூடாது, ஓகேவா?” எனக் கேட்க, யோசனையோடு “சரி” என்றான் சிறுவன்.
இருவரும் வீட்டிற்குச் சென்றனர். சச்சினை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு, “எனக்கு வேலை இருக்கு சின்னு, நீ போ. எனக்குச் சாப்பாடு வேணாம்னு சொல்லிடு,” என்று கூறிவிட்டு நந்து தன் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.
சச்சின் உள்ளே சென்று தாத்தா மடியில் அமர்ந்துகொண்டான். “எங்கடா நந்து?” என வள்ளி கேட்டதும், சச்சின் ஜனனியை முறைத்துப் பார்த்துவிட்டு, “நந்து வீட்டுக்கு போயிட்டான். வேலை இருக்கு, சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டான்,” என்றான்.
“என்ன ஆச்சு இவனுக்கு?” என வள்ளி அலைபேசியில் அழைக்க, அவன் ஏதோ சொல்லிச் சமாளித்து வர மறுத்துவிட்டான். அவர்களும் அதை நம்பிவிட, உண்மை தெரிந்த ஜனனிக்கு மட்டும் குற்றவுணர்வாக இருந்தது. அவர்களுக்கு இரவு உணவைப் பரிமாறியவள், தான் உண்ணாமல் படுத்துக் கொண்டாள்.
கண்களில் நீர் வடிய அவள் இருக்க, சச்சின் அவளைப் பார்த்தபடியே உறங்கிப் போனான். மறுநாள் விடிந்ததும் சொல்லப்பட்ட ஒரு செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனாள் ஜனனி. இப்போது தவிக்கப் போவது அவளாகத்தான் இருக்கும்!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
+1

