மரம் தேடும் மழைத்துளி 5

Loading

மரம் தேடும் மழைத்துளி 5

 

இரண்டாம் நாள் இரவில், ருக்மணி மாடியில் இருக்கும். தனியறைக்கு சென்று அமர்ந்திருந்தாள்.

 

கீழ் வீட்டில், பார்வதி முருகனிடம், “நேத்து மாதிரி எதுவும் ஏடாகூடம்பண்ணி வைக்காமல், நல்ல விதமா இருக்கு பாரு.”

 

“சும்மா இருந்திரும்மா. நேத்து அவள் முகம் கோணுன கோணலுக்கு பல்ல உடைச்சிருப்பேன். முதல் நாளே வேண்டாம்னு விட்டுவிட்டேன். காலைல அவள் ஆத்தாக்காரி கூட ஓடுனதுக்கு. வீடு தேடி போய் காலை வெட்டி இருப்பேன். நீ சொன்ன ஒரே காரணத்துக்காக, அவளை காலிலே விழுந்து கூட்டிட்டு வந்து இருக்கேன். இனிமேதான் இருக்கு அவளுக்கு வேடிக்கை.”

 

“நீ வேடிக்கை காட்டு. நான் பாக்குறேன்னு அவ உங்க வீட்ல உட்கார்ந்து இருக்க போறாளாக்கும். நேத்து அவ அம்மா வீட்டுக்கு போனவள். இன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன் போறதுக்கும் தயங்க மாட்டாள். நாலு பேரைப் போல நல்லா வாழனும்னு நினைக்காமல். வாழ வந்தவளை வம்மம் (வன்மம்) கூறிக்கிட்டு இருக்கே. எனக்காக நீ ஒன்னும் வாழ வேண்டாம். நல்லமுறையா அவளை இப்பவே அவ வீட்டுக்கு அனுப்பிவச்சிரு. உன்னால தினம் தினம் நான் செத்துப் பிழைச்சுகிட்டு இருக்க முடியாது. பெத்த கடமைக்கு வடிச்சி கொட்டுறேன்.”

 

“உனக்கு பெத்த பிள்ளையை விட, தம்பி மக பெருசா போச்சா?”

 

“பெத்த பிள்ளை பெருசுனு நினைச்சு தம்பி மகளை கட்டி வச்சேன். நீ அவ கூட வாழ விரும்பலைன்னால் நான் என்ன செய்ய?”

 

“விருப்பம் இல்லாமலா அவள் கழுத்தில தாலி கட்டினேன். என்னை இவ்வளவு பேசுறியே ம்மா… ஒரு வார்த்தை அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோனு நீ சொல்லி இருப்பியா?”

 

“உனக்கு பிடிச்ச மாதிரி அவ நடந்துப்பாடா… அதுக்கு அவளுக்கு பிடிச்ச மாதிரி நீ நடந்துக்கணும். நீ காட்டுற அன்புல உன்னை மீறி போக கூடாதுன்னு அவள் நினைக்கணும். அப்படி நீ நடந்துகிட்டா இவ இல்ல, இவளை விட மோசமான பொம்பளையும், அந்த ஆம்பளைக்கு கட்டுப்பட்டு நடப்பா. இவளை கஷ்டப்படுத்தி அவ வீட்டுக்கு நீ அனுப்பி விட்டேனா… இந்த ஊரு சனம் மொத்தமும், அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கான்னு உன் மூஞ்சில காரி துப்பும். அதையும் மறந்துடாதே. உங்க அப்பன் பேரை எடுக்கணும்னு ஆசைப்பட்டேன்னால் உனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ. நாலு பேர் மதிக்கணும்னா நான் சொல்றபடி நடந்துக்கோ.”

 

மேற்கொண்டு முருகன், பார்வதியிடம் எதுவும் பேசவில்லை. வேகம் எடுத்து மாடிப்படியில் ஏறினான். ஏறும்போதே “நான் தொட்டதை அசிங்கப்பட்ட உன்னை, தொடாமலே நோகடிக்கிறேன்.” என்று எண்ணிக் கொண்டு கதவை தள்ளினான்.

 

நேற்றைப் போல் இன்றும் ருக்மணி வேகமாக எழுந்து நின்றாள்.

 

முருகன்,“ருக்கு நீ படுத்துக்கோம்மா. எதுக்கு இத்தனை சிரமப்பட்டு எந்திரிக்கணும்?”. என்ற மறு நொடி.

 

ருக்கு, படுக்கை விரிப்பில் படுத்து, வலக்கையை தலைக்கு வைத்து கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.

 

“ஓஹோ நீயும் திட்டத்தோடதான் படுத்து இருக்கியா?” என்று ருக்குவின் செய்கையை யூகித்துக் கொண்டான் முருகன்.

 

“ஒத்த நாளில் இப்படி தெய்வமா மாறிட்டாரு!”என்று எண்ணிக் கொண்ட ருக்கு. மூடிய கண்ணை திறக்கவில்லை.

 

தனது சட்டையை கழற்றி ஆணியில் கோர்த்து விட்டு. ருக்குவின் அருகில் இருக்கும் தலையனையில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.

 

பொழுது புலரும் வேளையில், ருக்மணிக்கு விழிப்பு தட்டியது. கண்விழித்து பார்த்ததும் பதறிப்போனாள். ருக்மணி தன் கணவனது நெஞ்சகத்தை மஞ்சமாக்கி துயின்றிருக்கிறாள்.

 

“அச்சச்சோ எவ்வளவு நேரம் இப்படி தூங்கினோம்னு தெரியலையே. நான் மேல கிடந்தது தெரிஞ்சுதான் தூங்குறாரா? இல்ல உணர்வு இல்லாம உறங்குகிறாரா?” இன்று எண்ணிய ருக்குவின் எண்ணத்தின் ஓட்டத்திற்கு பதில் கொடுப்பது போல,

 

கண் மூடிக்கொண்டே “புரண்டு படுக்க முடியல.” என்று முருகன் புலம்ப.

 

“அடியாத்தி நான் நினைக்கிறதுக்கு எல்லாம் சரியா பதில் சொல்றாரே!” என்று எண்ணியவள், முதல் முறையாக உறங்கும் முருகனை ரசனையோடு பார்த்தாள். “உம்மகூட கல்யாணம்னு எம்புட்டு சந்தோசமா இருந்தேன். நேத்திக்கு முந்தி, நடந்துக்கிட்ட முறையிலே. ஏன்டா கட்டிக்கிட்டோம்னு நொந்து போனேன். இன்னிக்கு எதுவுமே நடக்காத மாதிரி எப்டிய்யா? மாறுநீரு? உம்மோட உண்மையான குணம் எது? முதல் ராத்தியில பார்த்ததா? இல்ல இப்ப பார்க்கிறதா? உமக்கு என் மேல இருந்த ஆசையை, நான் சரியா புரிஞ்சுக்கலயா மாமா? நீங்க இதே மாதிரி நல்ல பிள்ளையா இருந்திருந்தீங்கன்னா எம்புட்டு நல்லா இருந்திருக்கும். அது என்ன திடீர்னு ஒரு கிறுக்கு?. லூசாய்யா நீ?” என்று கேட்டவள் கண்கள் மூடி சிரித்துக் கொண்டாள்.

 

கீழ் தளத்தில் இருந்த பார்வதி, “ருக்கு” என்று சத்தம் கொடுத்தார். பார்வதியின் சத்தத்தை கேட்ட ருக்க, மாடியில் இருந்து இறங்கி கீழே சென்றாள்.

 

“ருக்கு சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு. குலதெய்வம் கோயிலுக்கு போகணுமில்ல”.

 

“சரித்தே’

 

ருக்மணி, குளித்து முடித்து வெளியே வருவதற்கும். முருகன் மாடியில் இருந்து இறங்கி வருவதற்கும் சரியாக இருந்தது ருக்குவின் முதுகில் படர்ந்த நீர் திவளைகளை பார்த்த முருகனுக்கு. தனது உதட்டால் ஒற்றி எடுக்க வேண்டும் என்று ஆர்வம் இட்டுச் சென்றது. ஆனால் நேற்றைய சபதம் ஒரு புறத்தில் இடித்தது.

 

பார்வதி, முருகனை, “நீயும் சீக்கிரமா குளிச்சிட்டு கிளம்புடா. நானும் கிளம்பனும். எல்லாரும் ஒண்ணா குலதெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம்.”

 

சரி என்று தலையசைத்த முருகன், பாத்ரூமுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

 

சிறிது நேரத்தில் முருகனும், ருக்மணியும், பார்வதியை அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்கள்.

 

பார்வதி, ருக்மணியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, பேச்சியம்மன் சன்னிதானத்தின் முன்பு நிறுத்தி. “தாயே… என் பிள்ளைகள் நல்லபடியா வளர்ந்து, செழித்து, கிளை பரப்பனும். நீ காலமெல்லாம் கூட இருந்து காப்பாத்தணும். இவள் வந்த நேரத்தில் என் பிள்ளையை பிடிச்ச துன்பம் எல்லாம் விலகனும்.” என்று வாயார வேண்டிக் கொண்டார்.

 

முருகனோடு சேர்ந்து நின்று, ருக்மணி, பேச்சியம்மனை மனம் உருக வேண்டிக்கொண்டாள்.

 

மூவரும் பேச்சியம்மன் சன்னிதானத்திற்கு முன்பு இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து, கொண்டு சென்ற கட்டுச் சோற்றை ஒன்றாக உண்டார்கள். சிறிது நேரம் இருந்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

 

மறுநாள் 20 பேர் பயணிக்கும் வேன் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு. ருக்மணியின் தரப்பில் இருந்து, மாரியம்மாளையும், அவரது அக்கா சுப்புலட்சுமி மற்றும் அவரது மகன் ரவியையும் அழைத்துக் கொண்டு. முருகன் தரப்பில் இருந்து பார்வதி, கோமதி, கோமதியின் கணவர் சங்கர், அவர்களது குழந்தை துர்கா. மற்றும் கிருஷ்ணன் குடும்பத்திலிருந்து கிருஷ்ணன், லட்சுமி, சுந்தரி ஆகியோரை அழைத்துக் கொண்டு. திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றார்கள்.

 

வேனில் இருந்து இறங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபத்தில் ஒன்று கூடினார்கள்.

 

முருகன் தன்னுடைய தங்கைகளான கோமதி மற்றும் சுந்தரிக்கு மதுரை மல்லிகை பூவை வாங்கி கொடுத்தான். ரவி தன்னுடைய தங்கை ருக்மணிக்கு பூ வாங்கிக்கொள்ள நூறு ரூபாயை மாரியம்மாளிடம் கொடுத்தான். மாரியம்மா ருக்மணிக்கு தேவையான அளவு மல்லிகை பூ வாங்கி தலையில் சூட்டி விட்டார். கோவில் வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருட்களை அருகில் இருந்த கடைகளில் வாங்கிக் கொண்டார்கள். அனைவரும் ஒன்றாக கோவிலுக்குள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல இருந்த நேரத்தில் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் முருகா என்று கூவி அழைத்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முருகனை அழைக்கிறார் என்று எண்ணி அவ்விடத்திலேயே நின்று முதியவரை பார்க்க.

 

பார்வதி, முருகனையும், ருக்மணியும் ஒன்றாக இணைத்து. “இரண்டு பேரும் சாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்க.” என்று இருவரையும் முன்னிறுத்தினார்.

 

முருகனும் ருக்மணியும் அந்த முதியவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.

 

முதியவர், இருவர் முகத்தையும் நன்கு கவனித்த பிறகு, கையில் விபூதியை எடுத்து. தனது நெற்றியின் முன்பு வைத்து கண்ணை மூடி தியானித்தார். அவரது கண்களுக்குள் பாம்பும், கீரியும் சண்டை இடுவது போன்ற காட்சி தோன்ற. வேகமாக கண் விழித்தார்.

 

பின்பு முருகனுக்கும், ருக்மணிக்கும் விபூதி அணிவித்து விட்டு. “ரெண்டு பேரும் இந்த கோவில் மூலவர் சன்னிதானத்துக்கு முன்னாடி நின்னு. மாலை மாத்திக்கோங்க.” என்று சொல்லிவிட்டு அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றார்.

 

பார்வதி, முருகனிடம், “சாமி என்னடா சொன்னாரு?”

 

“ரெண்டு பேரும் முருகனுக்கு முன்னாடி மாலை மாத்தனும்னு சொன்னாரு.”

 

கிருஷ்ணன், “ஆமா மதினி. இந்த கோவில்ல கல்யாணம் முடிச்சா சிறப்பாக இருக்கும்னு சொல்லுவாங்க. அப்படி கல்யாணம் முடிக்க முடியாதவங்க. சாமிக்கு முன்னாடி நின்னு மாலை மாத்திப்பாங்க. அந்த முறையை சொல்லி இருக்கிறார் போல இருக்கு. வாங்க ரெண்டு பேருக்கும் மாலை வாங்கிட்டு போய், சாமி பாதத்தில் வச்சு கொடுக்கச் சொல்லுவோம். என்று பூக்கடை நோக்கி சென்றார்கள். இருவருக்கும் இரண்டு மாலைகளை வாங்கிக் கொண்டு சாமி தரிசனத்திற்கு கோவிலுக்குள் சென்றார்கள்.

 

முருகனும், ருக்மணியும், சுப்பிரமணியர் முன்பு மாலை மாற்றிக்கொண்டார்கள்.

 

கோவிலுக்கு அருகில் இருந்த ஹோட்டலில் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டார்கள்.

 

கோவிலை சுற்றி இருந்த கடை வீதியில், முருகன் தனது சகோதரிகளுக்கும். மருமகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தான்

 

மாரியம்மாளுக்கு, “தன்னுடைய மகளுக்கு என்று எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லையே என்று ஏக்கம் தோன்றியது.

 

ரவி, “ருக்கு வாத்தா. உனக்கு புடிச்சதை வாங்கிக்கோ.” என்று ருக்மணியை அழைக்க.

 

“வேண்டாண்ணே…” என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தாள்.

 

அனைவரும் ஒன்றாக வேனில் ஏறி மீண்டும் சேர்த்துருக்கு புறப்பட்டார்கள். செல்லும் வழியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வேனை நிறுத்தும்படி முருகன் சொன்னான். அனைவரும் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு விரைந்து சென்றார்கள்.

 

முருகன், “நீங்க எல்லாம் சீக்கிரமா போய் சாமி கும்பிட்டுட்டு வாங்க. நடை சாத்துற நேரம் ஆச்சு. நானும் ருக்குவும் இப்படி முன்னாடி காத்திருக்கிறோம்.” என்று உடன் வந்தவர்களை கோவிலுக்குள் அனுப்பி வைத்தான்.

 

“ருக்கு திருப்பரங்குன்றத்திலே ஒரு கடையும் உருப்படியா இல்ல. ஒரு பொருளும் நல்லா இல்லை. இங்கே நிறைய இருக்கும் வா… உனக்கு பிடிச்சதை வாங்கிக்கலாம்.”

 

ருக்மணி, முருகனின் அக்கறையை எண்ணி ஆனந்தப்பட்டு கொண்டாள். “எனக்கு எதுவும் வேண்டாம் மாமா.” என்று மெல்லிய குரலில் சொல்ல.

 

“சரி பக்கத்துல பால்கோவா சூப்பரா இருக்கும். வா…” என்று அவளுக்கு பால்கோவா வாங்கி கொடுத்து. தானும் வாங்கிஉண்டான். பின்பு கடைவீதிகளில் ருக்மணிக்கு, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், குங்குமம், கால் விரல்களுக்கு மெட்டி. என்று தேவையான பொருட்களை தேடி தேடி வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்தினான்.

 

மாரியம்மாள் இருவரும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்குவதை கண்டு பூரித்து போனார்.

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்