Loading

அன்று காலையிலேயே வீட்டிற்கு முன் சத்தமாக இருந்தது. எதிர் வீட்டில் யாரோ புதிதாக குடி வருகிறார்கள் போல. தன் வீட்டின் பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி.

 

வீட்டின் வாசலில் அவள் வயது பெண் ஒருத்தி, கையில் குழந்தையுடன் நின்று, பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைகளைச் சொல்லிக்கொண்டிருந்தாள். அருகில் ஒரு வயதான பாட்டி நின்றிருந்தாள்.

 

பொறுமையாக கிளம்பிய ராகவி வேலைக்குச் செல்லும் முன் எதிர் வீட்டைப் பார்த்தாள். அந்தப் பெண் வாசலில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள்.

 

ராகவி பார்ப்பதை கவனித்த அந்தப் பெண் சிறு புன்னகையுடன் தலையசைத்தாள். பதிலுக்கு தலையசைத்த ராகவி, தன் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள்.

 

மாலை வீட்டிற்கு வந்த ராகவி தன் தாயிடம் எதிர் வீட்டில் புதிதாக குடிவந்திருப்பவர்களைப் பற்றி விசாரித்தாள்.

 

ராகவி, “புதுசா எதிர்வீட்டுக்கு வந்துருக்கது யாருமா அது? நீ எதும் போய் பேசுனியா?”

 

 

ராகவியின் தாய் சாரதா, “இன்னும் போல டி. ஈவனிங் விளக்கு வச்சி சாமி கும்பிட்டுட்டு தான் போய் என்னன்னு பார்க்கனும்.”

 

 

ராகவி, “சரி இரும்மா.. நானும் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்..”

 

 

 

ராகவி தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வர, இருவரும் வீட்டில் இருந்து கொஞ்சம் இனிப்புகளையும் எடுத்துக்கொண்டு எதிர் வீட்டிற்குச் சென்றனர்.

 

 

வெளியே இருந்து ராகவி அவர்களைக் கூப்பிட அந்த வீட்டில் இருந்த பெண் சிரித்த முகத்துடன் கதவைத் திறந்தாள். ஆனால் கண்களில் தான் அந்தச் சிரிப்பு எட்டவில்லை.

 

 

ராகவி, “ஹாய் நான் ராகவி. இது என் அம்மா சாரதா. இங்க உங்களுக்கு எதிர்வீட்டுல தான் இருக்கோம். சும்மா ஒரு ஹலோ சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தோம்.”

 

 

சஞ்சனா, “உள்ள வாங்க.. நீங்களும் உள்ள வாங்கம்மா..” என இருவரையும் வரவேற்றாள்.

 

 

ஹாலில் குழந்தை அக்ஷிதா விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

 

ராகவி, “பாப்பா ரொம்ப க்யூட்டா இருக்கா..” என்றாள்.

 

 

சாரதா (ராகவியின் தாய்), “எல்லாம் செட் ஆகிருச்சாம்மா.. இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க?” என்று பேச்சை ஆரம்பித்தார்.

 

 

சஞ்சனா, “நாங்க இதுக்கு முன்னாடி மதுரைல தான் இருந்தோம். எனக்கு ஹஸ்பெண்ட் இல்ல. நானும் என் பொண்ணும், என் மாமியாரும் தான் இங்க இருக்கோம். வேலைக்காக இங்க சென்னைக்கு வந்துருக்கோம்.” என சுருக்கமாக கூறினாள்.

 

 

ராகவி, “ஓஹ்.. சாரி அக்கா.. அக்கா சொல்லலாம்ல” என்றாள்.

 

 

சஞ்சனா, “பரவால்ல.. சஞ்சனான்னு பேர் சொல்லியே கூப்பிடு.” என்று பேச்சை இயல்பாக்கினாள்.

 

 

ராகவி, “எங்க வேலை பார்க்குறீங்க..”

 

 

சஞ்சனா, “இங்கதான் பக்கத்துல..” என்று ஒரு மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டாள். அங்க தான் லேப் டெக்னீஷியனா சேர்ந்துருக்கேன்.”

 

 

ராகவி, “ஓஹ் அந்த ஹாஸ்பிட்டலா.. எங்க ஆஃபிஸ் பக்கத்துல தான் இருக்கு..” என சகஜமாக பேசத் தொடங்கினாள். சற்று நேரத்திலேயே இருவரும் நல்ல தோழிகளாகிவிட்டனர்.

 

 

இருவரும் சிறிது நேரம் சஞ்சனாவிடம் பேசிவிட்டு கிளம்பினர்.

 

 

சாரதா, ”நல்ல பொண்ணா இருக்கு.. ஆனா புருஷன் இல்லன்னு சொல்லுது. அதான் கஷ்டமா இருக்கு..”

 

 

ராகவி, “விடும்மா அவங்களுக்குன்னு ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதுக்கு என்ன பண்ண முடியும். முடிஞ்சா அப்படியே ஏத்துக்கோ.. இல்லன்னா கண்டுக்காத..”

 

 

ஒரு வாரம் சென்றிருக்கும். இடைப்பட்ட நாளில் ராகவி, சஞ்சனா யார் எதிரில் வந்தாலும் பார்த்து சிரித்துக்கொண்டும், மாலை சில நேரம் வீட்டு காரிடாரில் அமர்ந்து பேசும் அளவிற்கும் அவர்களது நட்பு வளர்ந்திருந்தது.

 

 

அன்று ஞாயிற்றுக்கிழமை. எப்பொழுதும் போல் காலை நேர பரபரப்பின்றி தெருவே அமைதியாக இருந்தது. ராகவி அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

 

 

அப்பொழுது வெளியே யாரோ ஒரு ஆண் சத்தம் போடுவதும், அதற்கு ஒரு பெண் பதிலுக்கு கத்துவதும் கேட்டது.

 

 

அரைத் தூக்கத்தில் எழுந்த ராகவி, பால்கனி வழியாக வெளியே பார்த்தாள். அங்கு ஒரு இள வயது ஆண் சஞ்சனாவின் வீட்டு வாசலில் இருந்து கத்திக்கொண்டிருந்தான். சஞ்சனாவோ வீட்டு வாசலில் கண்கள் கலங்க, தலையில் கைவத்து அமர்ந்திருந்தாள். சஞ்சனா வீட்டில் இருக்கும் வயதான பாட்டி தான் அந்த இளைஞனிடம், இங்கு வரக்கூடாது என்று கத்திக்கொண்டிருந்தார்.

 

 

பாட்டி, “உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவு வராதாடா.. என் மருமவ வாழ்க்கைய கெடுத்ததும் இல்லாம, இப்போ உன் பொண்ண வேற பாக்கனும்ன்னு சொல்ற.. வெக்கமா இல்ல.. வெளிய போடா நாயே”

 

 

அந்த ஆள், “அத நீ சொல்லாத.. நீ எல்லாம் ஒரு அம்மாவா.. அதான் எனக்கும் அவளுக்கும் டிவோர்ஸ் ஆகிருச்சுல. அப்பறம் எதுக்கு நீயும் அவ கூடவே இருக்க. இதுல என் பொண்ண வேற இரண்டு பேரும் சேர்ந்து மறைச்சி வச்சிருக்கீங்க. என்ன டிராமா பண்றீங்களா.. கோர்ட்டே என்னை என் பொண்ணுகிட்ட இருந்து பிரிக்க முடியாதுன்னு சொல்லிருச்சு. எனக்கு என் பொண்ண இப்போ பார்த்தே ஆகனும் இரண்டு பேரும் வழி விடப்போறீங்களா இல்லையா?”  எனக் கத்திக்கொண்டிருந்தான்.

 

 

இந்த சண்டையைக் கேட்ட ராகவி, கோபமாக கீழே வந்தாள்.  நேரே வெளியே சென்றாள்.

 

 

ராகவி, “ஹலோ மிஸ்டர். எதுக்கு இப்படி வீட்டு வாசல்ல வச்சி சண்டை போட்டுட்டு இருக்கீங்க. அக்கம் பக்கத்துல ஆள் இருக்கது தெரியல. ஆம்பளை இல்லாத வீட்டுல இப்படி தான் பிரச்சனை பண்ணுவீங்களா?

 

 

அந்த ஆள், “என்னது,  ஆம்பளை இல்லாத வீடா.. ஹலோ இது என் அம்மா.. அந்தா தலைல கை வச்சிட்டு உக்காந்துட்டு இருக்காளே அவ என் பொண்டாட்டி.. உள்ள தூங்கிட்டு இருக்கே அது என் பொண்ணு. இது எங்க வீட்டு பிரச்சனை. என் வீட்டு பிரச்சனைல தலையிட முதல்ல நீ யாரு?” என்றான்.

 

 

அதில் சற்று திகைத்த ராகவி, சட்டென சுதாரித்து, “இது உங்க வீட்டு பிரச்சனையாவே இருக்கட்டும். அதுக்குன்னு இப்படி தான் ரோட்டுல வச்சி கத்துவீங்களா.. நீங்க சொல்ற மாதிரி அவங்க உங்க பொண்டாட்டி புள்ளையாவே இருந்தாலும் இப்படி தான் கத்தி ஊர கூட்டி அசிங்கப்படுத்துவீங்களா?” என்று கேட்டாள் நிமிர்வாக.

 

 

இம்முறை திகைப்பது எதிரில் இருந்த சஞ்சனாவின் முன்னாள் கணவன் ராகேஷ். (முதல் அத்தியாயத்துல முதல்ல பிரிஞ்ச கப்பிள் இவங்க தான்)

 

 

ராகேஷ் சற்று நிதானத்துடன் “அது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் டைவர்ஸ் ஆகிருச்சு.. கோர்ட் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை குழந்தைய நான் பார்க்கலாம்ன்னு பெர்மிஷன் கொடுத்தும், இன்னைக்கு என் பொண்ண இவங்க கூட்டிட்டு வரல. அந்த கோபத்துல தான்…” என்று தடுமாற்றத்துடன் கூறினான்.

 

 

ராகவி, “அவங்க ஏற்கனவே உங்களால ஏதோ ஒரு மனக்கஷ்டம் அடைஞ்சதுனால தான் உங்க கூட வாழ முடியாம பிரிஞ்சி வந்துருக்காங்க. இப்படி வீட்டு வாசல்ல வச்சி கத்தி அவங்கள மேற்கொண்டு கஷ்டப்படுத்தாதீங்க. உங்க பொண்ண தேடி நீங்க இவ்ளோ தூரம் பிரச்சனை பண்றீங்கன்னா அது உங்க பாசத்துனாலன்னு வச்சிக்கிட்டா கூட,  அத  அவங்க மேல நீங்க காட்டுற விதம்,  அவங்கள மேலும் மேலும் தான் கஷ்டப்படுத்துது. முடிஞ்சா உங்க பொண்டாட்டி மனச ஜெயிக்க பாருங்க.. இப்போ தயவு செய்து கிளம்புங்க” என்றாள் காட்டத்துடன்.

 

 

ராகவி பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சஞ்சனாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. அவ்வளவு நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தவள், இப்பொழுது நிமிர்ந்து பார்த்தாள். அந்தக் கண்களில் என்ன இருந்ததோ,  ராகேஷ் அந்த இடத்தை விட்டு மறுப்பேச்சு பேசாமல் சென்றுவிட்டான்.

 

 

ராகேஷ் சென்றதும் நேரே பாட்டியிடம் சென்ற ராகவி, “உங்க வயசுக்கு நீங்க இப்படித்தான் சண்டை போடுவீங்களா பாட்டி. விட்டா ப்ரூஸ் லீ மாதிரி பறந்து வந்து அடிச்சிருவீங்க போல..

 

 

பாட்டி, “அடிக்கிறது என்ன.. அவன பெத்ததுக்கு… வேண்டாம் நான் பெத்தவனை நானே கெட்ட வார்த்தை சொல்லி சபிக்கக் கூடாது.. இருந்தாலும் அவனெல்லாம்..” என்று ஏதோ ஆரம்பித்தவர், பின் திட்டக்கூடாது என்று உள்ளே சென்றுவிட்டார்.

 

 

அதில் சிரித்த ராகவி, “சரி உங்க பையன மனசுல திட்டிக்கிடே சஞ்சனாக்கு கொஞ்சம் தண்ணீ கொண்டு வாங்க.. பாவம் எவ்ளோ நேரம் தான் கஷ்டத்தை தொண்டைலயே வச்சிருப்பாங்க..” என உள்ளே குரல் கொடுத்தாள்.

 

 

கையில் தண்ணீருடன் வந்த பாட்டி, “இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்படியே உக்காந்துட்டு இருக்கப்போற.. இந்தா தண்ணிய குடிச்சிட்டு யாரை பத்தியும் யோசிக்காம போய் புள்ளைய பாரு.. புள்ள எந்திரிக்கிற நேரம். எழுந்து உன்னை தேடி அழ  ஆரம்பிச்சா அழுகைய நிப்பாட்டுறதுக்குள்ள எனக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏத்தனும். போ போய் வேலைய பாரு” என்றார்.

 

 

ராகவியின் பேச்சில் நிமிர்ந்த சஞ்சனா வந்த அழுகையை தண்ணீர் குடித்து விழுங்கியவள், தன் அத்தையின் பேச்சில் மெல்ல புன்னகைத்தாள்.

 

 

சஞ்சனா, “ரொம்ப நன்றி ராகவி, அது…” என அவள் தயங்க.

 

 

ராகவி, “அது உங்க பெர்சனல்.. இப்போவே சொல்லனும்ன்னு அவசியம் இல்ல.. நான் சாப்ட்டு தெம்பா வந்து கதை கேக்குற மோட்ல உட்காருறேன். அதுக்குள்ள நீங்களும் ஃப்ரெஷ் ஆகிட்டு சாப்பிட்டு வாங்க. பொறுமையா கேப்போம்..”  என்றாள் விளையாட்டாக.

 

 

அதில் சட்டென சிரித்த சஞ்சனா ராகவியிடம் நன்றி கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

 

 

சஞ்சனா உள்ளே சென்றதும் திரும்பிய பாட்டி ராகவியிடம் ஏதோ கூற வர, “இப்போ தான சொன்னேன், சாப்பிட்டு வரேன். தெம்பா பேசுவோம்..” என்று அவரிடமும் குறும்பாகக் கூறிவிட்டு தன் வீட்டிற்கு சிட்டாக பறந்துவிட்டாள்.

 

 

வீட்டிற்கு வந்த ராகவியிடம் அவள் தாய் சாரதா, “ஏண்டி விடிஞ்சும் விடியாமலும் எதிர் வீட்டு பஞ்சாயத்துல எல்லாம் தலைய கொடுக்குற.. ஒன்னுகிடக்க ஒன்னு உனக்கு ஆகிருச்சுன்னா என்ன பண்றது..” என்று கவலையுடன் திட்டினார்.

 

 

ராகவி, “சும்மா என்னமாவது பேசாதம்மா. அவங்களே பாவம் பிரச்சனைய சமாளிக்க முடியாம இருந்தாங்க. நான் மட்டும் போகலன்னா அந்த ஆள் அவங்கள மொத்தமா அசிங்கப் படுத்திருப்பாரு. உன்ன மாதிரி எல்லாரும் நமக்கு எதுக்கு நமக்கு எதுக்குன்னு ஒதுங்கி போறதுன்னால தான் உண்மைலயே கஷ்டப்படுறவங்களுக்கு கூட உதவி கிடைக்க மாட்டேங்குது. எனக்கு எல்லாம் ஒன்னும் ஆகாது. நான் என்னமோ சண்டை போடப்போற மாதிரி நீ பயப்படாத..” என்று தன் அறைக்குச் சென்றாள்.

 

 

சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்ற ராகவி அன்று அதன் பின் சஞ்சனா வீட்டிற்குச்  சென்று அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை.

 

 

மறுநாள் வழக்கம் போல் காலை புன்னகையுடன் ஆரம்பித்தனர் தோழிகள்.

 

 

பெங்களூரில்…

 

 

தாரகேஷ், “என்னம்மா உங்க பொண்ணு இப்போ நல்லா இருக்காளா..”

 

 

தாரகேஷ் வீட்டில் வேலை செய்யும் பெண், “ஆமாம் தம்பி உங்க புண்ணியத்துல என் பொண்ணு நல்லா இருக்கா. காதல் தோல்வியால வீட்டுக்குள்ளயே முடங்கிக்கிடந்த பொண்ண வேலைக்கு போக வச்ச உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது தம்பி, இப்போ நல்ல வேலைல நல்ல சம்பளத்துல இருக்கான்னா அதுக்கு முழு காரணமும் நீங்க தான் தம்பி. உங்களுக்கு தான் கோடி நன்றி” என்றார் மரியாதையுடன்.

 

 

தாரகேஷ், “இதுல என்னம்மா இருக்கு.. பூ எப்போதும் செடில இருக்கணும். அப்பதான் சந்தோஷமா இருக்கும்” என்றான் புன்னகையுடன்..

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்