
இரவு முழுவதும் உறக்கம் வராததால், மறுநாள் காலை தாமதமாக எழுந்த ராகவி, பத்து மணி அளவில் கிருத்திக்கு போன் செய்தாள்.
கிருத்தி, “ஹலோ யாரு?”
ராகவி, “ஹாய்… நான் ராகவி, சரண்யாவோட ஃபிரண்ட். சரண்யாகிட்டதான் உங்க நம்பர் வாங்கினேன். அது… அது… நீங்க தப்பா நினைக்கலன்னா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றாள் தயக்கத்துடன்.
கிருத்தி, “பரவால்ல சொல்லுங்க…”
ராகவி, “அது உங்க பிரேக்-அப் பத்தி…”
கிருத்தி “அதைப்பத்தி நீங்க பேச என்ன இருக்கு?” என்ற கிருத்தியின் குரலில் சற்று எரிச்சல் தெறித்தது.
ராகவி, “இல்ல… உங்க லவ் பிரேக்-அப் அப்போ மிஸ்டர் தாரகேஷ் உங்க டீம்லயோ உங்க பக்கத்துலயோ, ஐ மீன் ஏதோ ஒரு பொசிஷன்ல இருந்தாரா?”
கிருத்தி, “மிஸ்டர் தாரகேஷ் பத்தி தப்பா பேசாதீங்க. ஹி இஸ் எ ஜென்டில்மேன்! அந்த ஹர்ஷித்தோட பிரேக்-அப் ஆகி நான் மனசளவுல கஷ்டப்படும்போது அவர்தான் எனக்கு ஆறுதலா இருந்தார். என் கவனத்தை வேலைல திசை திருப்பிவிட்டார். அதனாலதான் இப்போ எனக்கு புரொமோஷன் கூட கிடைச்சிருக்கு!”
ராகவி, “பை எனி சான்ஸ்… உங்க லவ் ஏன் பிரிஞ்சதுன்னு தெரிஞ்சுக்கலாமா?”
கிருத்தி, “அந்த ஹர்ஷித் சரியான பிராடு! எங்க கம்பெனிக்கு கிடைக்க இருந்த மிகப்பெரிய புராஜெக்ட் டீட்டெய்ல்ஸை எங்களோட காம்பட்டிட்டர் கிட்ட கொடுத்துட்டான். அதனால எங்களோட பல நாள் உழைப்பு மொத்தமா திருட்டு போயிருச்சு. நான் ஹர்ஷித்த அவ்வளவு லவ் பண்ணேன். எனக்குக் கிடைச்ச ஆஸ்திரேலியா புராஜெக்ட்டை அவனுக்கு விட்டுக்கொடுக்குற அளவுக்கு லவ் பண்ணேன். அவனுக்கு அம்மா, தங்கச்சின்னு கமிட்மென்ட் நிறைய இருந்தது. இந்த புராஜெக்ட் கிடைச்சா எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு ரெண்டு பேரும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தோம். எல்லாம் நல்லாதான் போச்சு…
ஆனா ஆஸ்திரேலியா போனவன், எங்க புராஜெக்ட்டை மொத்தமா எங்களுக்கு எதிரான கம்பெனி சார்பா சப்மிட் பண்ணிட்டான். அவனும், தாரகேஷ் சாரும் தான் ஆஸ்திரேலியா போனாங்க. ஆனா திரும்பி வந்த தாரகேஷ் சார் ரொம்ப நொந்து போய் ஹர்ஷித் இப்படி பண்ணிட்டான்னு சொன்னாரு. முதல்ல எங்களுக்கு யாரை நம்பறதுன்னே தெரியல. ஆனா ஆதாரத்தை காட்டும்போது நாங்களும் என்ன பண்ண முடியும்? எங்க எல்லாரோட எதிர்காலத்தையும் மொத்தமா கேள்விக்குறி ஆக்கிட்டான்.
தாரகேஷ் சார்தான் கஷ்டப்பட்டு புது புராஜெக்ட் வாங்கி மொத்த டீமையும் காப்பாத்துனாரு. அப்புறம் நாங்க யாரையும் நம்பாம அவரை வச்சே சப்மிட் பண்ணி இதோ இப்போ எங்க டீம்ல எல்லாருக்கும் புரொமோஷன், இன்க்ரிமென்ட்னு இப்போதான் நார்மல் ஆகியிருக்கோம். அவனையும் கம்பெனில இருந்து தூக்கிட்டாங்க… மொத்த இண்டஸ்ட்ரிலயும் பிளாக் பண்ணிட்டாங்க. என்னால ஒரு துரோகியை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு பிரேக்-அப் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் அவனைப் பாக்கல…
தாரகேஷ் சாரோட ஹார்டு ஒர்க், ஒர்க் எத்திக்ஸ், ஸ்மார்ட்னஸ் எல்லாம் பாத்துதான சரண்யாவும் சாருக்கு ப்ரோபோஸ் பண்ணாங்க? ஆனா சார் வேண்டாம்னு சொல்லிட்டாரு போல. சரண்யா இதெல்லாம் உங்ககிட்ட சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” என்றாள்.
ராகவிக்கு பல விஷயங்கள் புரிந்தது. சில நிமிடம் அமைதியாக இருக்க, கிருத்தி, “ஹலோ… ஹலோ… லைன்ல இருக்கீங்களா?” என்றாள்.
ராகவி, “ஹான் இருக்கேன்… இஃப் யூ டோன்ட் மைண்ட், ஹர்ஷித் நம்பர் கிடைக்குமா?”
கிருத்தி, “அவன் நம்பரை பிளாக் பண்ணிட்டாலும் நான் டெலிட் பண்ணல. பட் இப்பவும் அந்த நம்பர்ல தான் இருக்கானான்னு தெரியல. இருந்தாலும் அனுப்பி வைக்கிறேன்,” என்றவள் புலனத்தில் (WhatsApp) ஹர்ஷித்தின் நம்பரை அனுப்பினாள்.
ராகவி, “தேங்க்ஸ்.”
கிருத்தி, “எதுக்காக இதெல்லாம் கேக்குறீங்க?”
ராகவி, “இல்ல… அது… எனக்கே சொல்லத் தெரியல… சாரி!” எனச் சமாளித்தவள் போனை கட் செய்தாள்.
கிருத்தியிடம் பேசிய ராகவி ஹர்ஷித் நம்பருக்கு கால் செய்ய, அந்த நம்பர் வேலை செய்யவில்லை.
பின் சரண்யாவிற்கு கால் செய்த ராகவி, அவளை அன்று மாலை மீண்டும் அந்த காபி ஷாப்பிற்கு வரச் சொன்னாள்.
மாலை ராகவி, சரண்யா இருவரும் சந்தித்தனர்.
ராகவி, “சரண் எனக்கு சில விஷயங்கள் புரியுற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்.”
சரண்யா, “ஏண்டி குழப்புற? கொஞ்சம் புரியுற மாதிரி தான் சொல்லித் தொலையேன்.”
ராகவி, “சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ ஏன் தாரகேஷை ப்ரபோஸ் பண்ண?”
சரண்யா, “நல்லவன்… ஜென்டில்மேன்… அதைவிட ஹார்டு ஒர்க்கர்! நீ போன் நம்பர் வாங்குனியே கிருத்தி, அவ ஆளு எங்க ஆபீஸ்ல முக்கியமான புராஜெக்ட்டை திருடி ஆப்போசிட் கம்பெனில கொடுத்துட்டான். அப்புறம் தாரகேஷ்தான் மேல பேசி வேற புராஜெக்ட் வாங்கி நிலைமையைச் சரி பண்ணான். சும்மா சொல்லக் கூடாது… சோர்ந்து போன மொத்த டீமையும் அடுத்த 6 மாசத்துல புரொமோஷன் வாங்குற அளவுக்கு கொண்டு வந்துட்டான். இப்படிப்பட்ட பொறுப்பான ஸ்மார்ட் பையனைப் பார்த்து லவ் வரலன்னா தான் அதிசயம். ஆனா இருந்து என்ன யூஸ், அதான் என்னை வேணாம்னு சொல்லிட்டானே!” எனப் பெருமூச்சு விட்டாள்.
ராகவி, “அப்போ அந்த கிருத்தியோட ஆளு ஹர்ஷித்…”
சரண்யா, “கிருத்தி ஆளு ஹர்ஷித்னு உனக்கு எப்படிடி தெரியும்?”
ராகவி, “காலையில கிருத்திகிட்ட பேசினேன். ப்ளீஸ் சொல்லுடி, கிருத்தி ஆளு ஹர்ஷித் என்ன ஆனான்?”
சரண்யா, “யாருக்கு தெரியும்? மொத்தமா இண்டஸ்ட்ரில இருந்து பிளாக் லிஸ்ட் பண்ணாங்க. வேலையை விட்டுட்டு போயிட்டான் அவ்ளோ தான். இத நான் ஏற்கனவே சம்பவம் நடந்தப்பவே சொன்னேன் தான?” என கிருத்தி சொன்னதையே சரண்யாவும் உறுதிப் படுத்தினாள்.
ராகவி, “இங்க தாண்டி… கவனிச்சுப் பாரேன்! சுபாஷையும் ‘கே’ன்னு யாரோ பொய்யா பரப்பி விட்ருக்காங்க. அவன் வேலையே வேண்டாம்னு ரிசைன் பண்ணிட்டு போயிட்டான். இங்க ஹர்ஷித் மேல போட்ட பழி மட்டும் ஏன் பொய்யா இருக்கக் கூடாது?”
சரண்யா, “லூசாடி நீ? சுபாஷ் மேலயும் ஹர்ஷித் மேலயும் பொய்யா இப்படி அபாண்டமா பழி சுமத்தி இண்டஸ்ட்ரியை விட்டே அனுப்ப அவனுங்க என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? சரி அப்படியே அதை தாரகேஷ் பண்ணாலும் ஏன் பண்ணனும்? இதனால அவனுக்கு என்ன லாபம்? உன்னையோ இல்ல கிருத்தியையோ கரெக்ட் பண்ணக் கூட இல்ல அவன்… அப்புறம் இவங்க மேல ஏன் அப்படி ஒரு பழியைப் போட்டு அனுப்பணும்? ரேண்டமா நடந்த விஷயத்தை எல்லாம் கம்பைன் பண்ணி கன்பியூஸ் ஆகிக்காத ராகவி.”

ராகவி, “நான் கம்பைன் பண்ணிருக்க மாட்டேன் தான். ஆனா சுபாஷ் லவ் பிரேக்-அப் ஆன டைம்ல நான் ரொம்ப டிஸ்டர்பா இருந்தேன். கொஞ்ச நாள் லீவ் கூட போட்டுட்டேன். ஆனா அப்போ தாரகேஷ் தான் என்னை ஒர்க் பக்கம் திருப்பி விட்டான். எங்க டீம்ல அப்போ தான் புராஜெக்ட் முடிஞ்சு எல்லாரும் ஃப்ரீயா இருந்தாங்க. நானும் ஃப்ரீயா இருந்தா கண்டதை யோசிப்பேன்னு என்னை டெட்லைன் கிட்ட இருந்த வேறொரு டீம்க்கு டெம்பரரியா அசிஸ்ட் பண்ண அனுப்புனான். அந்த டீம் புராஜெக்ட் பயங்கர ஹிட். சோ அந்த டீம் லீடர் கிட்ட என் பெயரையும் டீம் மெம்பர்ல சேர்க்கச் சொல்லிக் கேட்டான்.
அந்த டீம் லீடர் கொஞ்சம் பொறாமை பிடிச்சவன், ஹெல்ப் பண்ணதுக்காக எல்லாம் கிரெடிட் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டான். ஆனா தாரகேஷ் தான் சண்டை போட்டு, ‘அவ மட்டும் சரியான டைம்ல ஹெல்ப் பண்ணலன்னா உங்க டீம் டெட்லைன்குள்ள புராஜெக்ட்டே முடிச்சிருக்க முடியாது. அவ உங்க டீம்ல ஒரு மாசம் வேலை பார்த்ததுக்கான புரூஃப் என்கிட்ட இருக்கு. அவளுக்கு வர வேண்டிய கிரெடிட் அவளுக்கு வரலன்னா உங்க டீம்க்கும் ராகவி இல்லன்னா என்ன நடந்துருக்குமோ அது தான் நடக்கும்’னு மிரட்டிட்டான்.
அதுக்கு பயந்துதான் என்னையும் அந்த டீம் மெம்பர் லிஸ்ட்ல சேர்த்தாங்க. டீம் மெம்பர் லிஸ்ட்ல சேர்த்ததால தான் எனக்கும் அடுத்த இன்க்ரிமென்ட் கிடைச்சது. இதுல இருக்க ‘பேட்டர்ன்’ (Pattern) கவனிக்கிறியா? ஒரு பிரேக்-அப் நடக்குது. அதுல இருக்க ஆணுக்கு லைஃப் மொத்தமா போகுது. ஆனா அதுல இருக்க பெண்ணுக்கு இன்க்ரிமென்ட், புரொமோஷன்னு எல்லாம் கிடைக்குது. அவளுக்கு காதல் தோல்வின்னு ஃபீல் பண்ணக் கூட டைம் இல்ல. அந்த இடத்துல எல்லாம் தாரகேஷ் இருக்கான்… வித்தியாசமா இல்ல?”
சரண்யா, “உனக்கு இன்க்ரிமென்ட் கிடைக்கவும், கிருத்திக்கு புரொமோஷன் கிடைக்கவும் ஏண்டி உங்க ஆளுங்க லைஃபை ஸ்பாயில் பண்ணனும்? லாஜிக் இடிக்குதே! நியாயமா நீ இதுக்கு சந்தோஷம் தான் படனும்.”
ராகவி, “முன்னாடி நானும் சந்தோஷமா தான் இருந்தேன். ஆனா இப்போ என்னவோ சரியில்ல.. ஒரு மாதிரி வித்தியாசமா டிஸ்டர்பா இருக்கு.”
சரண்யா, “நீ சொல்றது எல்லாம் உண்மைன்னே வச்சுப்போம். இப்போ தாரகேஷ் ஏன் இப்படி பண்ணான், இதனால அவனுக்கு என்ன லாபம்? அப்படியே அவன் ஏதோ காரணத்துக்காக பண்ணான்னு சொன்னாலும், அவன் தான் பசங்க லைஃபை ஸ்பாயில் பண்ணிட்டான்னு என்ன ஆதாரம் இருக்கு? கொஞ்சமாவது யோசிடி.”
ராகவி, “எனக்கு எல்லாம் புரியுதுடி. ஆனா… அவனுக்கும் இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு மட்டும் என் உள் உணர்வு சொல்லிட்டே இருக்கு.”
சரண்யா “ரொம்ப போட்டு குழப்பிக்காத ராகவி. அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது. நீ நேத்து சுபாஷை மறுபடியும் பார்த்ததால கொஞ்சம் டிஸ்டர்பா இருக்க. மத்தபடி வேற எதுவும் இருக்காது. ஃப்ரீயா விடு,” என்று சமாதானப்படுத்தினாள்.
சரண்யா சொன்னது போல் இதனால் அவனுக்கு என்ன லாபம் இருக்கும்? அதுக்கான ஆதாரம் தான் என்ன? எங்களுக்கு ஏன் நல்லது செய்றான்? என்று மேலும் குழம்பியவள், வீட்டிற்குச் சென்றாள். ஆனால் ராகவியின் குழப்பத்திற்குச் சான்று சற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து அவளுக்குக் கிடைத்தது. ஆனால் கிடைத்த சான்றோ அவளை மேலும் குழப்பியது.

