நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா! – அத்தியாயம் 39

https://thoorigaitamilnovels.com/wp-admin/options-general.php?page=ad-inserter.php#tab-1

Loading

துஷ்யந்த் சகுந்தலாவை சந்தித்ததில் இருந்து பரத் தன்னுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறான் என்பது வரை அனைத்தையும் கூற, அவனின் மனதின் வலியை நிரஞ்சனாவாலும் உணர முடிந்தது.

“என்னால முடிஞ்ச அளவு சகுந்தலாவை விட்டு விலகி இருக்க தான் விரும்பினேன். ஆனா பரத் அதுக்கு தடையா இருந்தான். அது என்னன்னே தெரியல சகுந்தலாவ கூட பார்க்காம இருந்துடுவேன். ஆனா பரத்த பார்க்காம, அவன் கூட பேசாம ஒரு நாள் கூட இருக்க முடியல. அவ்வளவு அட்டேச் ஆகிட்டேன் அவன் கூட. டாக்டர்ஸுக்கு சொல்லப்படுற ஒரு முக்கியமான ரூலே எந்தவொரு பேஷென்ட் கூடவும் எமோஷனல் அட்டாச்மன்ட் வெச்சிக்க கூடாதுங்குறது தான். ஆனா பரத் விஷயத்துல அதை நானே உடைச்சிட்டேன். பரத் பூரணமா குணமாகும் என்னோட துணை அவனுக்கு நிச்சயம் தேவை. அதனால அவன் குணமாகும் வரை என் மனசை கல்லாக்கிட்டு இருக்கேன். அப்புறம் தான் அம்மா உன்ன செலெக்ட் பண்ணி உன் ஃபோட்டோ காட்டினாங்க. உன் கிட்ட எந்தக் குறையும் எனக்குத் தெரியல. என் எதிர்ப்பார்ப்புக்கு ஏத்த விதமா தான் நீ இருந்த. ஆனா என்னோட மனசு தான் இங்க பிரச்சினையா இருக்கு.” என்றான் துஷ்யந்த்.

“அப்போ கல்யாணத்த நி…நிறு…த்தணும்னு சொல்…றீங்களா?” எனக் கேட்ட நிரஞ்சனாவின் குரல் உடைந்து கண்கள் கண்ணீரை சிந்தியது.

“நோ நோ… நாட் லைக் தெட். நான் அப்படி சொல்ல வரல. எப்போ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேனோ அப்போவே சகுந்தலா மீது எனக்கு இருந்த உணர்வ எனக்குள்ள போட்டு மூடிட்டேன். ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் கூடிய சீக்கிரம் இதுல இருந்து வெளிய வந்துடுவேன். எப்போ நீ தான் என் வருங்கால மனைவின்னு முடிவு பண்ணிட்டேனோ அப்போவே முழு மனசா தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். மனசுல ஒருத்திய வெச்சிட்டு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்குற அளவுக்கு நான் மோசமானவன் இல்ல. சகுந்தலாவ மொத்த மறந்துட்டேனான்னு கேட்டா இல்ல. ஏன்னா இது மெச்சூர்டான ஏஜ்ல எனக்குள்ள ஏற்பட்ட உணர்வு. உடனே அதுல இருந்து வெளி வரது கஷ்டம். ஆனா எப்போ நீ முறையா என் மனைவி ஆகுவியோ அப்போவே நீ தான் என் ப்ரசன்ட்டாவும் ஃபியூச்சராவும் இருப்ப. அதுக்கு இடைப்பட்ட நாட்கள்ல நிச்சயம் நான் சகுந்தலாவ மறந்துடுவேன். அதைத் தான் இப்போ ட்ரை பண்ணிட்டு இருக்கேன். எனக்கு அதுக்கு கொஞ்சம் டைம் வேணும். இப்போ நான் ஏன் இதை எல்லாம் உன் கிட்ட சொல்லிட்டு இருக்கேன்னா எனக்கு இந்த ரிலேசன்ஷிப்ப பொய்யோடு ஆரம்பிக்க விருப்பம் இல்ல. இது ஜஸ்ட் அரேன்ஜ் மேரேஜா இருந்தாலும் என் மனைவிக்கு உண்மையா இருக்கணும்னு நான் விரும்புறேன். அதே நேரம் என் பாஸ்ட்ட தெரிஞ்சிக்கிற முழு உரிமையும் உனக்கு இருக்கு. இந்த விஷயத்துல நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதை முழு மனசா அக்சப்ட் பண்ணிப்பேன். நான் என் மனசுல இருக்குறத ஓப்பனா சொல்லிட்டேன். இனிமேல் இதைத் தொடரணுமா? இல்ல இங்கயே எல்லாம் முடிச்சிக்குறதா? எல்லாம் உன் கைல தான். நீ எதுவா இருந்தாலும் ஓப்பனா பேசலாம்.” என்று முடித்தான் துஷ்யந்த்.

துஷ்யந்த் கூறியதைக் கேட்டு நிரஞ்சனாவின் மனதில் இவ்வளவு நேரம் இருந்த கலக்கம் மறைந்து ஒரு பெரும் அமைதி.

சில நொடிகளுக்கு அங்கு மௌனமே ஆட்சி செய்தது.

நிரஞ்சனாவே அதனைக் கலைத்து பேச ஆரம்பித்தாள்.

“உங்க மனச சொல்லிட்டீங்க துஷ்யந்த். என் மனசயும் நான் சொல்லிடுறேன். எனக்கு வரப் போற கணவன பத்தி என் மனசுல நிறையவே ஆசைகளும் எதிர்ப்பார்ப்புகளும் இருந்தது. இப்போவும் இருக்கு. உங்க ஃபோட்டோ காட்டினதுமே நீங்க என் மனசுக்குள்ள இடம் பிடிச்சிட்டீங்க. அதுக்கு முன்னாடி நான் யாரையும் காதலிச்சது இல்ல. உங்கள பார்த்ததுமே எனக்கு பிடிச்சு போச்சு. நான் எதிர்ப்பார்த்த மாதிரி நூற்றுக்கு நூறு நீங்க இல்லன்னாலும் எல்லா விதத்துலயும் எனக்கு நீங்க பொருத்தமா இருப்பீங்கன்னு எனக்கு தோணிச்சு. நாம ஆசைப்படுறது எல்லாமே நமக்கு அப்படியே கிடைக்கிறது இல்ல. கிடைச்சத நமக்கு ஏத்த மாதிரி மாத்திக்கணும். இல்ல நாம மாறணும். உண்மை தான். ஆரம்பத்துல இருந்தே நம்ம ரிலேசன்ஷிப்ல எதுவா இருந்தாலும் இனிஷியேட் பண்ணுறது நானா தான் இருந்து இருக்கேன். ஆரம்பத்துல அது என் மனசுக்கு கஷ்டமா தான் இருந்தது. ஆனா எனக்காக உங்கள மாத்துறத விட உங்களுக்கு ஏத்த மாதிரி நான் மாறுறது பெட்டர்னு தோணிச்சு. இந்தக் காதல் ரொம்ப வித்தியாசமானது. ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கூட நம்மளோட தன்மானத்த விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆனா காதல்னு வந்துட்டா மட்டும் எந்த அளவுக்கு இறங்கிப் போக முடியுமோ போய்டுறோம். அதனால தான் என்னோட ஆசைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் குறைச்சிக்கிட்டு உங்க லைஃப் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி நான் மாறிட்டேன்.” என்றாள் நிரஞ்சனா.

துஷ்யந்த் அவளின் முதிர்ச்சியான பேச்சையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

“நீங்க பேச ஆரம்பிக்கும் போது என்னோட காதல் கை சேரா கனவா போய்டுமோன்னு நினைச்சி வருத்தப்பட்டேன். ஆனா நீங்க பேசி முடிக்கவும் புரியுது நான் சரியான ஒருத்தர தான் என் லைஃப் பார்ட்னரா சூஸ் பண்ணி இருக்கேன்னு. இப்போ தான் எனக்கு உங்கள இன்னும் பிடிக்குது. என் காதலுக்காக இந்த ரிஸ்க்க நான் எடுக்க விரும்புறேன். என் காதலுக்காக நான் எந்த முயற்சியும் எடுக்கலயேன்னு பின்னாடி ஃபீல் பண்ணுறத விட இப்போ அதுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்னு நான் நினைக்கிறேன். நிஜமா சொல்லணும்னா உங்க முதல் காதலா இருக்குறத விட உங்களோட கடைசி காதலா இருக்கத் தான் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க கேட்ட டைம நான் உங்களுக்கு தரேன். என் காதல் உங்கள மாற்றும்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. சோ அதுக்காக முதல் படியா லெட்ஸ் பீ ஃப்ரெண்ட்ஸ்.” என்றவாறு புன்னகையுடன் துஷ்யந்திடம் கரத்தை நீட்டினாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவின் முகத்தையும் கரத்தையும் மாறி மாறி நோக்கிய துஷ்யந்த் சில நொடிகளுக்குப் பின் புன்னகையுடன் பதிலுக்கு நிரஞ்சனாவின் கரம் பிடித்து கை குலுக்கினான்.

அதன் பின் வந்த நாட்களில் நிரஞ்சனா ஒரு நல்ல நண்பியாக துஷ்யந்தின் மனதில் இடம் பிடித்தாள்.

துஷ்யந்தின் முதல் தோழி, தோழன் எல்லாமே அவள் தான்.

அதில் ஏக பெருமை அவளுக்கு.

மருத்துவமனையில் முதன் முதலாக சகுந்தலாவை சந்தித்த அன்றே இரவு நிரஞ்சனாவிடம் சகுந்தலா யார் என்று கூறி விட்டான் துஷ்யந்த்.

ஆனால் நிரஞ்சனா ஒரு முறை சகுந்தலாவைப் பார்க்கும் போது தன் உடைமை தன் கையை விட்டுப் போய் விடுமோ என்று நினைக்கவே இல்லை.

அந்த அளவுக்கு தன் காதல் மீது அவளுக்கு நம்பிக்கை.

பரத்தின் துஷ்யந்த் மீதான உரிமைப் போராட்டம் கூட நிரஞ்சனாவிற்கு புன்னகையைத் தான் கொண்டு வந்தது.

துஷ்யந்த் ஏன் பரத்துடன் அந்த அளவுக்கு நெருக்கமாகி விட்டான் என்பது பரத்துடன் பழகும் போது தான் புரிந்தது.

யாருக்குத் தான் பிடிக்காது அந்த துறு துறு என இருக்கும் குறும்புக்காரக் கண்ணனை.

ஆனால் எப்போது பரத் விபத்தில் அடிபட்டு அவனின் பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டதோ அன்றில் இருந்தே நிரஞ்சனாவின் நம்பிக்கை எல்லாம் குறைந்து கொண்டே வந்தது.

நிரஞ்சனாவிற்கு துஷ்யந்த் மீது எந்தக் கோபமும் இல்லை.

அந்த விதி மீது தான் கோபம் வந்தது.

ஆனால் ஒன்று மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

யாருக்கு யார் என்று எழுதி வைக்கப்பட்டு இருப்பதை மாற்ற யாராலும் முடியாது என்று.

ஏற்கனவே‌ மனதுக்குள் பல குழப்பங்களுடன் இருந்தவள் இன்று பரத் கேட்ட கேள்வியில் மொத்தமாக உடைந்து விட்டாள்.

சகுந்தலா பரத்திற்கு உணவை எடுத்து வர சென்ற பின் அவ் அறையில் சில நொடிகளுக்கு அமைதியே நிலவியது.

நிரஞ்சனாவும் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்து இருக்க, அவளின் விரலைப் பிடித்து இழுத்து அவளது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான் பரத்.

“என்னடா கண்ணா? ஏதாவது வேணுமா? பசிக்குதா? மம்மி உங்களுக்கு சாப்பாடு எடுத்து வரப் போய் இருக்காங்க.” என்றாள் நிரஞ்சனா பரத்தின் தலையைக் கோதி விட்டவாறு ஆதூரமாக.

மறுப்பாகத் தலை அசைத்த பரத் நிரஞ்சனாவைத் தன் அருகே வரும் படி தலை ஆட்டினான்.

ஏனென்றால் இன்னுமே அவனால் சத்தமாகப் பேச முடியவில்லை.

சாதாரணமாகப் பேசினால் கூட மூச்சு வாங்கியது.

நிரஞ்சனா புன்னகையுடன் பரத்தின் முகத்தின் அருகே தன் முகத்தைக் கொண்டு செல்ல, “என்னோட அப்பாவ எனக்கே கொடுத்துடுறீங்களா ஆன்ட்டி?” எனக் கேட்டான் பரத் மெல்லிய குரலில்.

பரத்தின் முகத்தை அதிர்ச்சியுடன் ஏறிட்ட நிரஞ்சனாவிற்கு பேச்சே வரவில்லை.

துஷ்யந்த் தான் பரத்தின் தந்தை என்ற உண்மை இது வரை யாருமே பரத்திடம் தெரிவிக்கவில்லை.

காரணம் அவனது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதால் திடீர் அதிர்ச்சிகள் மற்றும் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் எல்லாமே பரத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று துஷ்யந்த் தான் தடுத்து இருந்தான்.

நிரஞ்சனாவின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த பரத், “இங்க ஒரு டாக்டர் நர்ஸ் ஆன்ட்டி கிட்ட பேசிட்டு இருந்தத நான் கேட்டேன்.” என்றான் தெளிவாக.

பரத் மயக்கத்தில் இருக்கிறான் என நினைத்து பரத்தைக் கவனிக்கும் தாதியிடம் பரத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் இதைப் பற்றிக் கூறி இருக்கிறார்.

ஆனால் அப்போது தான் லேசாக மயக்கம் தெளிந்த சிறுவனின் செவியில் இச் செய்தி தெளிவாகவே விழுந்தது.

“சாக்லேட் அங்கிள் தான் என் அப்பாவா ஆன்ட்டி?” எனக் கேட்டான் பரத் மீண்டும் நிரஞ்சனா அமைதியாக இருக்கவும்.

நிரஞ்சனாவோ கண்களில் நீர் கோர்க்க ஆம் எனத் தலை அசைக்க பரத்தின் முகத்தில் இத்தனை நாட்கள் இருந்த இறுக்கம் தளர்ந்து பழையபடி மனதாரப் பெரிதாகப் புன்னகைத்தான்.

பரத்தின் இந்தப் புன்னகையின் முன்னால் தன் வலி எல்லாம் சாதாரணமாகத் தோன்றியது நிரஞ்சனாவிற்கு.

ஆனால் பரத்திடம் என்ன பதில் கூற என்று தான் அவளுக்குப் புரியவில்லை.

அதனால் அமைதி காக்க, எங்கே தான் கேட்டதை நிரஞ்சனா மறுத்து விடுவாளோ என எண்ணிய பரத், “மம்மி ரொம்ப பாவம்… பரத்த தூங்க வெச்சிட்டு டெய்லி அழுவாங்க. பரத் சாமி கிட்ட போய்ட்டா மம்மிக்கு யாருமே இல்ல ஆன்ட்டி.” என்றான் சோகமாக.

பரத்தின் பேச்சில் பதறி விட்டாள் நிரஞ்சனா.

“பரத்… என்ன பேச்சு கண்ணா இது?” எனக் கேட்டாள் நிரஞ்சனா அழுகையும் அதிர்ச்சியுமாக.

நினைவு தெரிந்த நாளில் இருந்து கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் தான் அவளின் பெற்றோர் அவளை வளர்த்து இருந்தனர்.

அதனாலேயே இதை எல்லாம் நிரஞ்சனாவால் தாங்க முடியவில்லை.

அதுவும் தன் உள்ளம் கவர்ந்தவனின் பிள்ளை இவன்.

அதனாலேயே பரத்தின் வேதனை தன்னையே தாக்கியது போல் உணர்ந்தாள் பெண்ணவள்.

“எனக்குத் தெரியும் ஆன்ட்டி. எனக்கு இங்க எல்லாம் ரொம்ப வலிக்கிது இப்போ எல்லாம். பரத் சாமி கிட்ட போய்டுவேன்னு தான் மம்மி இப்போ எல்லாம் அழுறாங்க.” என பரத் கூறவும் அவனின் வாயில் சட்டெனக் கரத்தை வைத்து பேச்சை நிறுத்திய நிரஞ்சனா, “இல்லடா கண்ணா. பரத் சீக்கிரமா குணம் ஆகுவீங்க. அது தான் பரத்துக்கு புது ஹார்ட் கிடைச்சிருச்சே. ஒரு குட்டி ஆப்பரேஷனுக்கு அப்புறம் பரத் குட்டி உங்களோட‌ ஃப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் ஓடி பிடிச்சு விளையாடலாம். யாரும் ஒன்னுமே சொல்ல மாட்டாங்க.” என்றாள்.

ஆனால் பரத்தின் முகத்தில் நம்பிக்கை வந்ததற்கான அறிகுறியே இல்லை.

“ம்ஹ்ம்… மம்மி பாவம்… நீங்க சாக்லேட் அங்கிள என் மம்மிக்கு கொடுத்துடுறீங்களா ஆன்ட்டி? ப்ளீஸ்…” எனக் கேட்டான் பரத் கெஞ்சலாக.

அதனைக் கேட்டு வெடித்து சிதற இருந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கிய நிரஞ்சனா, “சரிடா கண்ணா… பரத்தோட அப்பாவ ஆன்ட்டி பரத்துக்கே தந்துடுறேன். உங்க மம்மிக்கு சேர வேண்டியத உங்க மம்மி கிட்டயே ஒப்படைச்சிடுறேன்.” என்றாள் கண்ணீருடன்.

“நிஜமாவா?” என பரத் ஆவலாகக் கேட்ட, ஆமோதிப்பாய்த் தலை அசைத்தாள் நிரஞ்சனா.

உடனே கஷ்டப்பட்டு தலையை உயர்த்திய பரத் நிரஞ்சனாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் இட்டு, “தேங்க்ஸ் ஆன்ட்டி.” என்றான் சந்தோஷமாக.

தன் துக்கத்தை மறைத்துக் கொண்டு புன்னகைத்த நிரஞ்சனா சகுந்தலா அங்கு வரவும் பரத்தின் தலையைத் தடவி விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

https://thoorigaitamilnovels.com/wp-admin/options-general.php?page=ad-inserter.php#tab-1