
அத்தியாயம் 42
௭ழில், கோவித்து கொண்டு ஹாலில் படுத்து விட்டாலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து சென்று அவனை காய்ச்சல் குறைந்திருக்கா என ஆராய்ந்து கொண்டிருந்தாள். சூடு குறையாமலே இருக்க துணியை நனைத்து பத்து போட்டு பார்த்தாள். மிளகு பால் கொடுத்து காய்ச்சல் மாத்திரை ஒன்றை விழுங்க வைத்தாள்.
அவனுக்கோ மாத்திரையை விழுங்கின வேகத்தில் ஒரு மணி நேரம் காய்ச்சல் குறையும், ஆனால் மீண்டும் வந்துவிடும். அதிலேயே அவளுக்கு பயம் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. அவனுக்கும் அவள் பயம் புரிந்தது, ஆனாலும் ஆறுதல் வார்த்தை கூற கூட உடல் அனுமதிக்க மறுத்தது. அவள் மாஸ்க் கூட போடாமல் தன்னை சுற்றி வருகையில் பயந்தான் அவன்.
“தூங்குடி கொஞ்ச நேரம்” எனவும் சொல்லி பார்த்தான்,
அவளோ “நீங்க ஃபர்ஸ்ட் காய்ச்சலைக் குறைங்க, நாளைக்கு ஃபீவர் இருக்க கூடாது” என்கையில் அவனுக்கு சிரிப்புதான் வரும், ‘நா ௭ன்ன போக வேண்டான்னா புடிச்சு வச்சுட்ருக்கேன்’ ௭ன நினைத்து படுத்துக் கொள்வான்.
காலை 7:00 மணி ராஜமும், ஜெயந்தியும் எழுந்து வரையில், அவனுக்கு நீராவி பிடிக்க எடுத்துக் கொண்டு வைத்தாள்.
“இன்னும் ஃபீவர் குறையலையா?” என்றனர் அம்மாக்கள்.
“இல்ல லேசா சூடு இருக்கு. வேர்க்கவே இல்ல, மூக்கடப்பா இருக்குன்னு சொல்றாங்க அதான் ஆவி பிடிக்க வைக்றேன்”.
“இங்க வேப்பில கிடைக்காதே?”,
“துளசி இருந்தது, அதுகூட மஞ்சள், உப்பு சேத்து போட்டுருக்கேன்”.
“சரி குளிச்சிட்டு பிள்ளைக்கு பசி ஆத்து” ௭ன்றார் ஜெயந்தி.
“சரிமா இவங்க ஆவி பிடிச்சு முடிக்கவும், ஒருக்கா ஃபீவர் செக் பண்ணிட்டு வரேன்” என அவன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.
ஜெயந்தி காலை சாப்பாடு செய்ய போக, ராஜம் மீண்டும் பிள்ளைகளை பார்க்க சென்றார்.
ப்ரகலத்தன் ஆவி பிடித்து போர்வையை விளக்கையில் நன்றாக வியர்த்திருந்தது, ஆனாலும் மேல் சூடாக தான் இருந்தது. எழில் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் எடுத்தவள், தெர்மாமீட்டரை எடுத்துவந்து அவனுக்கு ஃபீவர் செக் செய்ய, அது 102 காட்ட, கையெல்லாம் நடுங்க, அப்படியே அமர்ந்து விட்டாள். அவளுக்கு ஆவி பிடிக்காமலே வியர்த்து விட்டிருந்தது.
“ஒன்னுமில்ல எழில். ஹாஸ்பிடல் போறேன், டெஸ்ட் பண்ணிட்டு என்ன வந்தாலும் ட்ரீட்மெண்ட் பண்ணா சரியாகிடும். நீ ஏன் இவ்ளோ பயப்படுற, சாப்பாடு பண்ணு, நா சாப்ட்டுட்டு ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடுறேன்” என்றவன் அமர்ந்திருக்க முடியாமல் அப்படியே சுருண்டு படுத்துக் கொள்ள.
இவளுக்கு தான் அவனை அப்படி பார்க்கவே முடியவில்லை. அவன் இப்படி உடம்பு முடியாமல் சுருண்டு படுத்து இதுவரை அவள் பார்த்ததில்லை. அது அவளை மிகவும் கவலைப்படுத்த, அவன் எழ உதவி செய்து கட்டிலில் படுக்க வைத்து கணத்த போர்வையை எடுத்து மூடி விட்டாள். அவன் கண்ணயர்ந்து விட, வெளியேறி சென்று குளித்து பிள்ளைக்கு பசி அமத்தி தூங்க வைத்து மறுபடியும் கணவனிடம் வந்துவிட்டாள்.
காலை உணவாக இரண்டு இட்லிக்கு மேல் வாங்க மறுத்து விட்டான். “சாப்பிட முடியலம்மா, கசக்குது” என்றபின், அவளாலும் சாப்பிட முடியவில்லை.
பத்து மணிவாக்கில் வைரமும், லட்சுவும் வந்தனர். ப்ரகலத்தனை தொட்டு பார்த்த வைரம் “ஃபீவர் குறையல ஹாஸ்பிடல் போயிட்டு வந்துரலாம்” என்ற வைரத்தை, “முடியாது, ப்ரெசிடெண்ட்ட நா எங்கேயும் அனுப்ப மாட்டேன். அங்க போனா பிடிச்சு வச்சுட்டு விடமாட்டாங்க. நானே பாத்துக்கிறேன் அவங்கள” என அழத் தயாரானாள்.
“டெஸ்ட்க்கு குடுத்துட்டு வர்றேன் எழில். என்னன்னு தெரிய வேணாமா?” ப்ரகலத்தன் சொல்ல.
“ஒன்னும் டெஸ்ட் எடுக்க தேவையில்ல. இது சரியாகிடும். கசாயம் போட்டு குடிக்கலாம் சரியாகிடும்” என்றாள் அவன் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு.
“சின்னபுள்ள மாதிரி அடம் பிடிக்காத ஆறு. எதுனாலும் ஹாஸ்பிடல் போனா தான சரியாகும்”.
அவளுக்கிருந்த பயம் மற்றவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை என நினைத்தவள் வைரத்தயும், லட்சுவயும் வெளியில் தள்ளி, அவனிருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
படுத்திருந்தவன் எழுந்தமர்ந்து, “எழில் குட்டி இங்க வா.., ஒன்னுமில்லடா நீ ஏன் இவ்வளவு பயப்படுற. இது சரியா போயிடும். பாரு முகமெல்லாம் வேர்த்து, கையெல்லாம் நடுங்குது. நெகட்டிவ் தான் வரும், டெஸ்டுக்கு கொடுத்துட்டு அரை மணி நேரத்துல வந்துருவேன். வீட்ல பெரியவங்க, குழந்தைங்கள வச்சுக்கிட்டு நாம இப்படி அசால்டா இருக்றது நல்லது இல்லமா, சொன்னா கேளு” என பொறுமையாக நாலு இருமலுடன் அவன் சொல்லி முடிக்க.
“வேணா ப்ரெசிடெண்ட் ப்ளீஸ். நா… நா உங்கள எங்கயும் விடமாட்டேன். அங்க போனா உங்கள அவங்க பாக்க கூட விட மாட்டாங்க. இது ௭ன்னன்னே தெரிய வேணாம், சாதாரண ஃபீரா இருக்கட்டும் அப்டியே நினைச்சுட்டா சரியாகிடும், கூட ரெண்டு தடவ ஆவி புடிச்சு, கசாயம் குடிச்சா கண்டிப்பா சரியாகிடும். எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ். நீங்க எங்கேயும் போக வேண்டாம்” என ஏங்கி ஏங்கி அழ.
‘ரிசல்ட் தெரியும்முன்ன இவ்வளவு பயப்படுறாளே’ என யோசித்தவன், “சரிமா நா ௭ங்கயும் போகல. நீ அழாத. வெளியில கதவ தட்டுறாங்க பாரு, அவங்களும் பயப்பட போறாங்க, கதவ திற” ௭ன்றான். அவள் பாவமாய் பார்க்க,
“நான் எங்கேயும் போகல, உன்கூட தான் இருப்பேன் போதுமா. கதவ திற” என்றான்.
கதவை திறந்தவளை நாலு பேரும் திட்ட, அவள் அதை கண்டுகொள்ளவே இல்லை. வைரம் ப்ரகலத்தனை பார்க்க அவன் கண்ணை மூடித் திறக்க, அவன் லட்சு காதை கடித்தான்.
“காய்ச்சல் குறையாம என் பிள்ளைய இப்டியே வச்சுருந்து என்ன செய்யலாம்னு இருக்க?” ௭ன்ற ராஜத்திற்கும்.
“ஏன்டி கூட ஒரு ஊசியை போட்டு வந்தா சரியா போக போகுது. அதுக்கு எதுக்கு இவ்வளவு அளப்பறை பண்ற” என்ற ஜெயந்திக்கும் அவள் பதில் சொல்ல தயாராக இல்லை.
அவள் மனம் பிரார்த்தனையில் இருந்தது ஃபீவர் குறைய வேண்டி. லட்சு தான் அவளை அந்த ரூமில் இருந்து வெளியே இழுத்து, “உள்ள உள்ள போயிட்டு வந்து எல்லாத்தையும் உளப்பாத. வைரல் ஃபீவராயிருந்தா வீட்ல ௭ல்லாருக்கும் ஈஸியா ஸ்ப்ரெட் ஆகும்” என பேசிக் கொண்டிருந்தாள்.
அந்த கேப்பில் வைரம் ப்ரகலத்தனை காணச் சென்றான் மாஸ்க்குடனே. “என்ன சீனியர் பண்ணலாம்?”,
“பிரைவேட்ல செக் பண்ற மெடிக்கல் ரெப் இருப்பாங்க. வீட்டுக்கே வந்து சேம்ப்பிள் கலெக்ட் பண்ணிட்டு போவாங்க. அப்டி யாரு காண்டாக்ட் நம்பரயாது வாங்கி வீட்டுக்கு வரச் சொல்லு. டெஸ்ட்க்கு கொடுக்கலாம்” என்றான்.
உடனே, “சரி” என்று வெளியேறியவன், அடுத்த ஒரு மணி நேரத்தில் சேம்ப்பிள் கலெக்ட் பண்ண ஆள் வர வைத்திருந்தான்.
யார் என்று முழித்த ஆறு, வைரம் அவனை ப்ரகலத்தன் அறைக்கு கூட்டி செல்லவும், வேகமாக வந்தாள். ஆனால் அவள் ஏதும் பேசுமுன் ப்ரகலத்தன் ஒரு பார்வையில் அவளை அடக்கியிருந்தான். அவளால் கையை பிசைந்துக்கொண்டு நிற்க மட்டுமே முடிந்தது.
“6 ஹௌர்ஸ்ல ரிசல்ட் உங்க நம்பருக்கு மெசேஜ் வந்துரும் சார். ஆதார் டீடைல் மட்டும் கொடுங்க” என பேப்பர் ஃபில் பண்ணி கிளம்பிவிட்டான்.
ரிசல்ட் வரும் நேரத்திற்குள் எல்லோரும் வெளியில் நிதானமாக காட்டிக் கொண்டனர். ஆனால் எழிலால் தான் அதுவும் கூட முடியவில்லை, அவளுக்கு எதுவுமே ஓடவில்லை. ஏதேதோ கற்பனையில் வந்து அவளை சுயநினைவோடு நடமாட விடாமல் செய்தது. அவளையே தான் பார்த்திருந்தான் ப்ரகலத்தன். அவனுக்கு உடம்பு அசதியை விட, அவளை நினைத்தே சோர்வு அதிகமானது.
மதியம் ஒரு முறை ஃபீவர் செக் செய்து பார்த்தனர், 104 என்று காட்டவும் எல்லோருக்குமே திக் என்று தான் இருந்தது. ஃபீவர் கூட கூட அவனால் தூங்கவும் முடியவில்லை. மனதின் திடம் மயக்கத்திற்கு இழுத்துச் செல்லாமல் அவனைக் காத்தது.
‘இருக்கிற சிச்சுவேஷனுக்கு நாம இப்ப மயங்கி வேற தொலைச்சுட்டா நமக்கு முன்ன இவளத்தான் அட்மிட் பண்ற மாதிரி ஆகிடும்’ என நினைத்து சரியாகவே இருக்க முயற்சித்தான்.
வைரமும், லட்சவும் அங்குதானிருந்தனர். ஈவினிங் அவனுக்கு மெசேஜ்ஜில் ரிப்போர்ட் பாசிட்டிவ்வாகவே அனுப்பப்பட்டு இருந்தது. அவனுக்கு தான் தெரியுமே ரிசல்ட் இதுதான் என்று, அதை அப்படியே வைரத்திற்கு பார்வர்டு செய்தான். ஆல்ரெடி செல்லில் ௭தையோ பார்த்து கொண்டிருந்தவனும், ப்ரகலத்தனிடமிருந்து மெசேஜ் வரவும் எழுந்து வந்து அவன் ரூம் வாசலில் நின்றான். அவன் கண்ணாலயே மொபைலை காட்ட வேகமாக எடுத்து பார்த்தான்.
ரிப்போட் ஓபன் செய்து பார்த்து விட்டு, மறுபடியும் “இப்ப என்ன செய்யலாம் சீனியர்” என்றான், முகத்தில் பயம் தெரிந்தது வைரத்திற்கும்.
“௭க்ஸ்பிரஸன ஃபஸ்ட் மாத்து. யார்கனவே அவ ஃபார்ம்ல இருக்கா, நீ வேற இன்னும் ஏத்திவிட்றாத. ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணு அட்மிட் ஆகிடுறேன். ஃபீவர் கூடிட்டே போகுது, இப்டியே இருக்கிறது தான் ரிஸ்க்”.
“ஆறு? அம்மாகிட்டல்லாம் சொல்ல வேணாமா?”.
“டெஸ்ட் எடுக்கவே எவ்வளவு ஆர்ப்பாட்டம்னு பாத்தல்ல. ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆக விடவே மாட்டா. நாம இன்பார்ம் பண்ணலனாலும், அந்த மெடிக்கல் ரெப் ரிப்போர்ட்டை கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுவான், ரெண்டு நாள்ல அவங்களே நம்மள தேடி வருவாங்க, அதுவர இப்படியே இருந்து ரிஸ்க் எடுக்குறத விட, பிரைவேட்ல எங்க பெட் அவைலப்லுன்னு பாரு, அட்மிட் ஆகிடுறேன். நீ கொஞ்சம் நா ரெக்கவர் ஆகி வர்ற வர இவங்களயெல்லாம் பாத்துக்கோ, முக்கியமா எழில ரொம்ப கவனமா பாத்துக்கணும்டா” என்றான் வருத்தத்துடன்.
சற்று தெளிவான வைரம், “சீனியர் ஒன்னும் இல்ல, ரெண்டு, மூணு நாள்ல ரெக்கவர் ஆயிடும், டோன்ட் ஒரி. நா இங்கே பாத்துக்றேன். நீங்க மைண்ட்ட ஸ்ட்ராங்கா வச்சுட்டு போயிட்டு வாங்க. மூச்சுவிடலா ஒன்னும் சிரமமா இல்லயே?”.
“இல்லடா, மாஸ்க் போட்டுட்டு இருக்குறது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. மூச்சு வாங்குது, நீ ஹாஸ்பிடல் செக் பண்ணிட்டு சொல்லு”.
“ஓகே சீனியர், நீங்க படுங்க. நா பாத்துட்டு வர்றேன்” என வெளியேறினான்.
விளக்கேற்றி சாமி கும்பிட்ட திருநீருடன் அவனிடம் சென்றாள் ஆறு. நெற்றியில் வைத்து விட, கண்ணைத் திறந்து பார்த்தான்.
“சரியாகிடும்ப்பா, நா நல்லா சாமி கும்பிட்டுருக்கேன். என்னமாச்சு வேணுமா? மதியம் கொஞ்சுண்டுதான் சாப்பிட்டீங்க. கபசுரக் குடிநீர் எடுத்துட்டு வரட்டுமா?”. அவன் தலையை அசைக்கவும், பத்து நிமிடத்தில் எடுத்து வந்து குடிக்க கொடுத்தாள்.
“மாஸ்க் போட்டு வான்னு சொன்னா ஏண்டி கேட்கவே மாட்டேங்குற”.
“உங்கள ஒட்டிட்டே தான் திரிஞ்சுருக்கேன், வாறதுன்னா உங்களுக்கு சிம்டம்ஸ் தெரிஞ்சப்றம் தான் தெரியணும்னு இல்லயே, ௭னக்கும் இந்நேரம் வந்துருக்கணுமே” என்றாள்.
“அப்ப எனக்கு கொரோனான்னு முடிவு பண்ணிட்டியா?” ௭ன்றான் சிரித்து.
“ம்ம்ம், இல்லன்னா இப்பவர ஃபீவர் கூடிட்டு இருக்காதே. நா கூகுள் பண்ணிட்டேன். சிம்டம்ஸ் எல்லாம் அப்டித்தான் சசொல்லுது. ரிப்போர்ட் வந்துட்டா?”.
“ம்ம் வந்துட்டு பாசிட்டிவ்ன்னு வந்துருக்கு”. அவளே தயாராக இருப்பதால், அவன் மறைக்க முயற்சிக்கவில்லை.
கண்கலங்கியது, “கொரோனாக்கு டேப்லெட் இருக்குதாம். ஸிங்க், ஐயன் டேப்லெட்ன்னு வாங்கி சாப்பிடலாம். வைரத்துட்ட வாங்கிட்டு வர சொல்றேன். ஒன்னும் செய்யலல உங்களுக்கு. மூச்சு…. மூச்சு விட” என்பதற்குள் கண்ணீர் வடிந்து விட.
“எழில் குட்டி…..” ௭ன்றவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டு, “பாரு நா நல்லாத்தான் இருக்கேன். ஒன்னும் இல்ல சரியா?. பிள்ளைகளயும் கொஞ்சம் பாரு. நீயும் போகலன்னா உன்னத் தேடிட்டு அப்புறம் என்ன தேட ஆரம்பிப்பாங்க. போய் பாருடா” என்றான்.
“இல்ல அவங்கள பாத்துக்க ஆள் இருக்காங்க. இப்போ உங்கள தான் பாத்துக்கணும். படுங்க” என படுக்க வைத்துவிட்டு கட்டிலுக்கு கீழயே அமர்ந்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, வைரம் வந்து தான் எழுப்பி விட்டான். “ஆறு ரொம்ப பழசு, லேசான டிரஸ் ஒரு மூணு செட் சீனியரோடது எடுத்து தா. ப்ளாஸ்க், டவெல், சானிடைசேர், க்லவ்ஸ், மாஸ்க் பேக், ஹாஸ்பிடல்ல என்னெல்லாம் கொடுப்பாங்கன்னு தெரியாது, நாம கொடுத்துவிடுவோம். வேணும்னா சீனியர் யூஸ் பண்ணிக்கட்டும், ஆம்புலன்ஸ் வந்துருச்சு, சீக்கிரம் எல்லாம் எடுத்து வை” என அவளுக்கு விஷயம் தெரியும் என்பதாக நினைத்து படபடத்தான்.

