
“பரத்த எப்பவும் போல பசங்க கூட விளையாட விட்டுட்டு நான் ஒரு ஓரமா அங்க இருந்த ஸ்டோன் பெஞ்ச்ல உட்கார்ந்து அவங்கள வேடிக்கை பார்த்தேன். அதுக்குள்ள எனக்கு ஆஃபீஸ்ல இருந்து ஒரு கால் வரவும் அங்கயே உட்கார்ந்து பேசிட்டு இருந்தேன். ஆனா அதுக்குள்ள பசங்களுக்குள்ள சண்டை சத்தம் கேட்டு பார்த்தப்போ பரத் ஒரு பையனோட சட்டைய பிடிச்சி சண்டை போட்டுட்டு இருந்தான். நான் அவசரமா அங்க போக முன்னாடியே அந்தப் பையன் ஏதோ சொல்லவும் ‘எங்க மம்மி அப்படி இல்ல…’ அப்படின்னு கத்திட்டு அந்தப் பையன கீழே தள்ளி விட்டுட்டு அழுதுட்டே வெளியே ஓடினான். நான் பதறி பரத் பின்னால கத்திட்டே ஓடினேன். அ…அதுக்குள்ள… அதுக்குள்ள… பரத் ரோட பார்க்காம க்ராஸ் பண்ணக் கிட்ட எதிர்ல வந்த காரால ப்ரேக் பிடிக்க முடியாம ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. நான் போனப்போ என்…என் பையன் இரத்த வெள்ளத்துல சுயநினைவே இல்லாம இருந்தான்.” எனக் கூறிக் கதறினாள் சகுந்தலா.
துஷ்யந்தோ பரத்தின் வலியைத் தானே அனுபவித்தது போல் உறைந்து போய் இருந்தான்.
கண்கள் விடாது கண்ணீரைப் பொழிய, மூளையோ அடுத்து என்ன என்பதே தெரியாமல் மரத்துப் போனது போல் இருந்தது.
இவ்வளவு பெரிய விபத்தை பரத்தின் இதயம் நிச்சயம் தாங்கிக் கொள்ளாது என்பதை நன்றாகவே அறிவான் துஷ்யந்த்.
பரத்தின் நிலையை அவனால் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க முடியவில்லை.
கஷ்டப்பட்டு தன்னை சமன் செய்து கொண்ட துஷ்யந்த் சகுந்தலாவை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தான்.
“துஷ்யந்த் என் பையன்…” என சகுந்தலா அழ, “என் மேல நம்பிக்கை வை சகுந்தலா. நான் சேம்ப்புக்கு எதுவும் ஆக விட மாட்டேன். ஐ ப்ராமிஸ் யூ.” என்றான் துஷ்யந்த்.
அதே நேரம் ஐ.சி.யூ இலிருந்து வெளியே வந்த மருத்துவர் துஷ்யந்தைக் கண்டதும், “தேங்க் காட். டாக்டர்… நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க. உங்கள கான்டாக்ட் பண்ண தான் ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டு இருந்தோம்.” என்றார்.
“டாக்டர் பிரசாத்… பரத்துக்கு இப்போ எப்படி இருக்கு?” எனக் கேட்டான் துஷ்யந்த் அவசரமாக.
“ஆக்சிடன்ட் ஆனதுல அடி கொஞ்சம் பலமா இருக்கு. அதுக்கு ட்ரீட்மென்ட் பண்ணிட்டு இருக்கோம். நல்ல வேளை தலைல பெரிசா அடிபடல. பட் என்ன விஷயம்னா ஆல்ரெடி அந்தப் பையனோட ஹார்ட் ரொம்ப வீக். இதுல ஆக்சிடன்ட் ஆனதுல ஷாக் ஆனது அன்ட் நெஞ்சுப் பக்கம் அடிபட்டது எல்லாம் சேர்ந்து ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு. சோ உடனடியா நாம ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் பண்ணி ஆகணும். அதுக்கு முன்னால நிறைய ப்ளட் லாஸ் ஆகி இருக்கு. சோ உடனடியா ப்ளட் ஏத்தணும். என்னப் பிரச்சினைன்னா அந்தப் பையனோட ப்ளட் க்ரூப் ஓ நெகடிவ். இப்போ நம்ம ப்ளட் பேங்க்ல ஸ்டோக் இல்லாம இருக்கு.” என அம் மருத்துவர் கூறவும், “ஐயோ…” எனத் தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் சகுந்தலா.
“டாக்டர்… என் ப்ளட் டைப்பும் ஓ நெகடிவ் தான்.” என்றான் துஷ்யந்த் அவசரமாக.
“தேங்க் காட். அப்போ இமீடியெட்டா ஃபர்தர் ட்ரீட்மென்ட்ட ஸ்டார்ட் பண்ணலாம். நீங்க வாங்க.” என்ற மருத்துவர் கையோடு துஷ்யந்தை அழைத்துச் சென்றார்.
அதற்குள் தகவல் அறிந்து பரிமளமும் சந்திரசேகரனும் நிரஞ்சனாவுடன் மருத்துவமனைக்கு வந்தனர்.
துஷ்யந்த் நகைக் கடையில் இருந்து பாதியில் சென்றதுமே நிரஞ்சனா காயத்ரியை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, அவர்களைத் தேடி வந்த பெரியவர்கள் நடந்ததை அதிர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
துஷ்யந்தின் பெற்றோருக்கு மகனின் செயலால் நிரஞ்சனாவின் குடும்பத்தின் முன்னால் தலை குனிவாகப் போய் விட்டது.
ஆனால் அவர்களுக்குத் தெரியும் நிச்சயம் மருத்துவமனையில் இருந்து ஏதாவது அவசரநிலை என்று தகவல் வந்து இருக்கும் என்று.
நிரஞ்சனாவின் பெற்றோரோ துஷ்யந்தின் செயலில் மன வருத்தத்தில் நின்றனர்.
போதாக்குறைக்கு மகளின் அழுகை வேறு அவர்களை வேதனைப்படுத்தியது.
“எங்க பையனோட செயலுக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக்குறோம் சம்பந்தி. ஆனா நிச்சயம் ஏதாவது இமர்ஜன்சி கேஸ் விஷயமா தான் போய் இருப்பான்.” என்றார் சந்திரசேகரன் சங்கடமாக.
“ச்சே ச்சே… மன்னிப்பு எல்லாம் எதுக்கு சம்பந்தி? எங்களுக்கும் புரியுது மாப்பிள்ளை ஏதாவது காரணமா தான் போய் இருப்பார்னு. ஆனா இப்படி ஒரு நல்ல விஷயம் நடக்குறப்போ அட்லீஸ்ட் சொல்லிட்டாவது போய் இருக்கலாமேன்னு தான் எங்க வருத்தம் எல்லாம். அதுவும் இல்லாம பசங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம். என் பொண்ணு வருத்தப்பட்டு அழுறது தான் எங்களுக்கு கஷ்டமா இருக்கு.” என்றார் முரளி வருத்தமாக.
சந்திரசேகரனுக்கும் பரிமளத்திற்கும் என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.
சந்திரசேகரன் உடனே மருத்துவமனைக்கு அழைத்து விசாரிக்க, துஷ்யந்த் மருத்துவமனையை அடையும் முன்னரே இவர்கள் தகவல் அறிந்து கிளம்பினர்.
கூடவே நிரஞ்சனாவும் அவர்களுடன் வருவதாகக் கூற, வேறு வழியின்றி அவளையும் அழைத்துக் கொண்டே கிளம்பினர்.
இங்கோ சகுந்தலா யாருமற்று தனிமையில் கதறிக் கொண்டு இருக்க, அவளின் தோற்றம் அம் மூவரின் இதயத்தையுமே கசக்கிப் பிழிந்தது.
“அம்மாடி…” என அழைத்தவாறு பரிமளம் வேகமாக சகுந்தலாவை நெருங்க, “ஆன்ட்டி… என் பையன்…” என்றவாறு பரிமளத்தை அணைத்துக் கொண்டு கதறினாள் சகுந்தலா.
சந்திரசேகரன் பரத்தின் நிலையைப் பற்றி விசாரிக்க உள்ளே சென்று விட்டார்.
துஷ்யந்த் மீது கோபமும் ஆதங்கமுமாக வந்த நிரஞ்சனாவோ சகுந்தலாவின் நிலையைக் கண்டதும் துஷ்யந்தை மொத்தமாக மறந்து விட்டு சகுந்தலாவுக்கு ஆறுதலாக நின்றாள்.
அதே சமயம் இரத்தம் கொடுத்து விட்டு வெளியே வந்த துஷ்யந்த் அங்கு நின்று இருந்தவர்களை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.
“அம்மா…” எனத் தயங்கிக் கொண்டே அழைக்க, பரிமளமோ அவனைக் கண்டுகொள்ளவே இல்லை.
நிரஞ்சனாவும் துஷ்யந்தின் முகம் பார்க்காமல் தவிர்க்க, அவனோ பெருமூச்சுடன் ஐ.சி.யூ இனுள் நுழைந்தான்.
மருத்துவ சாதனங்களுக்கு மத்தியில் தலையிலும் உடலிலும் கட்டோடு படுத்திருந்த பரத்தைக் கண்டு துஷ்யந்திற்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.
‘சாக்லேட் அங்கிள்…’ எனக் கத்திக் கொண்டு ஓடி வந்து தன்னை அணைத்துக் கொள்ளும் சிறுவன் தான் துஷ்யந்திற்கு நினைவுக்கு வந்தது.
தான் ஒரு வைத்தியன் என்பதைக் கூட மறந்து பரத்தின் கரத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டு வாய் விட்டே அழுதான் துஷ்யந்த்.
ஆரம்பத்தில் இருந்தே பரத்தின் மருத்துவ அறிக்கைகள் எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இருக்கவில்லை.
ஆனால் சகுந்தலா தாங்க மாட்டாள் என்பதற்காகவே அவளிடம் இருந்து பாதி உண்மையை மறைத்து விட்டான் துஷ்யந்த்.
இதய மாற்று அறுவை சிகிச்சை நடத்தாவிட்டால் பரத்தினால் சில மாதங்கள் மட்டும் தான் உயிர் வாழ முடியும் என்று இருந்தது.
ஆனால் துஷ்யந்திற்கு ஏனோ மனதுக்குள் ஆழமான நம்பிக்கை ஒன்று இருந்தது பரத் விரைவில் குணம் அடைவான் என்று.
அதற்கும் கூட அவசரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
ஆனால் இப்போதோ மருத்துவ உபகரணங்கள் தான் பரத்தின் உயிரைப் பிடித்து வைத்து இருந்தது.
சகுந்தலாவிடம் இருந்து விலகுவதாக நினைத்து பரத்திடம் இருந்தும் விலகி நின்ற தன் மடத்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டான் துஷ்யந்த்.
“சேம்ப்…” எனக் கண்ணீருடன் துஷ்யந்த் அழைக்க, பரத்திடமோ கிஞ்சித்தும் அசைவு இல்லை.
“சேம்ப்… உன்னோட சாக்லேட் அங்கிள் வந்து இருக்கேன். என் சேம்ப் சூப்பர் ஹீரோ ஆச்சே. சீக்கிரம் எழுந்து வாங்க. உங்களுக்காக தான் எல்லாரும் வெய்ட் பண்ணுறாங்க. மம்மி பாவம்ல.” என்றான் துஷ்யந்த் கண்ணீருடன் பரத்தின் தலையைக் கோதிக் கொண்டு.
“அங்கிள் கூட கோவமா இருக்கீங்களா சேம்ப்? அது தான் பேச மாட்டேங்குறீங்களா? உங்களுக்கு லாங் ட்ரைவ் போகணும்னு சொன்னீங்களே. சேம்ப் எழுந்தா அங்கிள் கண்டிப்பா கூட்டிட்டுப் போவேன்.” என துஷ்யந்த் கூறியதற்கு பதில் அளிக்கத் தான் அங்கு யாரும் இருக்கவில்லை.
காரணமே தெரியாமல் துஷ்யந்தின் இதயம் பரத்தை நினைத்து கதறியது.
துஷ்யந்த் ஏதேதோ பேசிப் பார்த்தான் பரத்துடன்.
எதற்குமே பரத்திடம் அசைவு இல்லை.
அதே நேரம் துஷ்யந்தின் தோளில் ஒரு கரம் பதியவும் தலையை உயர்த்திப் பார்க்க, சந்திரசேகரன் தான் அவனுக்கு அருகில் நின்று இருந்தார் கண்ணீருடன்.
அவருக்கும் பரத்தின் நிலையைக் கண்டு மனம் தாளவில்லை.
‘தாத்தா… தாத்தா…’ என அவ்வளவு உரிமையாகப் பழகுவான்.
“அப்பா… பரத்…” என்றான் துஷ்யந்த் கண்ணீருடன்.
முதல் தடவை துஷ்யந்த் இவ்வாறு உடைந்து போய் பார்க்கிறார் சந்திரசேகரன்.
சகுந்தலாவின் மீது தான் காதல் என்று தந்தையானவர் நினைத்து இருக்க, துஷ்யந்திற்கோ பரத் தான் அவன் மனமும் முழுவதும் இடம் பிடித்து இருந்தான்.
துஷ்யந்தின் தோளில் தட்டிக் கொடுத்த சந்திரசேகரன், “பரத்துக்கு எதுவும் ஆகாது கண்ணா.” என்றார் ஆறுதலாக.
“உடனே ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் பண்ணலன்னா…” என்ற துஷ்யந்திற்கு அதற்கு மேல் வாய் வார்த்தையாகக் கூடக் கூற முடியவில்லை.
“நான் நிறைய இடத்துல ரிக்வஸ்ட் பண்ணி இருக்கேன் துஷ்யந்த். கண்டிப்பா இன்னைக்குள்ள ஏதாவது ஒரு வழி கிடைக்கும்.” என்ற சந்திரசேகரன் துஷ்யந்தை வெளியே அழைத்து வந்தார்.
சரியாக அந் நேரம் பரத்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவரோ கையில் ஒரு கோப்புடன் பதட்டமாக அங்கு வந்தார்.
“என்னாச்சு டாக்டர்? பரத்துக்கு ஒன்னும் இல்லையே.” எனக் கேட்டான் துஷ்யந்த் பதட்டமாக.
சுற்றி நின்று இருந்தவர்களைக் கவனித்த மருத்துவரோ எதுவும் கூறாது தயங்கி நிற்க, “சொல்லுங்க டாக்டர்.” என்றான் துஷ்யந்த் அவசரமாக.
“நீங்க கொஞ்சம் தனியா வாங்க டாக்டர். முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.” எனப் பொடி வைத்துப் பேசினார் அம் மருத்துவர்.
சகுந்தலா உடனே துஷ்யந்தின் கரத்தைப் பற்றி மறுப்பாகத் தலை அசைக்க, “எதுன்னாலும் இங்கயே சொல்லுங்க டாக்டர்.” என்றான் துஷ்யந்த்.
ஏனெனில் ஏற்கனவே பரத்தின் உண்மையான நிலையைப் பற்றி தான் சகுந்தலாவிடம் மறைத்து இருக்காவிட்டால் அவள் இன்னும் கொஞ்சம் கவனமாக பரத்தைக் கவனித்து இருப்பாளோ என எண்ணி குற்றவுணர்வில் மருகிக் கொண்டு இருந்தான் துஷ்யந்த்.
மீண்டும் அதே தவறை செய்ய அவன் விரும்பவில்லை.
எதற்கும் சகுந்தலாவை இப்போது இருந்தே வருவதை ஏற்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நினைத்தான் துஷ்யந்த்.
“உங்க ப்ளெட்ட பரத்துக்குக்கு ஏத்த முன்னாடி அது பர்ஃபெக்ட்டா பரத்துக்கு பொருந்துதான்னு பார்க்க டெஸ்ட் எடுத்தோம் டாக்டர். அந்த ரிப்போர்ட் படி உங்க ரெண்டு பேரோட டி.என்.ஏ மேக்சிமம் பொருந்தி போகுது. ஐ மீன் ஒரு பேரன்ட்டுக்கும் பிள்ளைக்கும் மட்டும் தான் இப்படி பொருந்தும். அப்படி இல்லையா அவங்க சகோதரர்களா இருக்கணும். ஆனா அது கூட இதை விட கம்மியா தான் பொருந்தும். சோ இதன்படி பார்த்தா பரத் உங்களோட பையன்.” என அலுங்காமல் குலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட, சுற்றி நின்றிருந்தவர்களோ மூச்சு விடக் கூட மறந்து விட்டனர்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Ayyo semma twist eagerly waiting for next episode 😊