Loading

துஷ்யந்திற்கான உடைகளை நிரஞ்சனாவே தேர்வு செய்ய, மற்றவர்களும் தமக்குத் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு வந்தனர்.

பின் மதிய உணவை ஒரு ஹோட்டலில் உண்டு விட்டு நகை வாங்க என்று அனைவரும் சேர்ந்து நகைக் கடைக்குச் சென்றனர்.

முதலில் தேவையான மற்ற நகைகளை வாங்கி விட்டு இறுதியாக தாலியை தெரிவு செய்யலாம் என்று முடிவு செய்தனர்.

நிரஞ்சனா பெரியவர்களுடன் சேர்ந்து நகைகளைத் தெரிவு செய்து கொண்டிருக்க, துஷ்யந்த் நிரஞ்சனாவிற்கு என்று தனியாக மோதிரம் பார்த்துக் கொண்டு இருந்தான்.

எல்லாம் நிரஞ்சனாவை சமாதானம் செய்வதற்காகத் தான்.

ஆனால் ஆடவன் அவன் அறியவில்லை பெண்ணவள் எதிர்ப்பார்ப்பது அவளவனின் அருகாமையையும் அவன் தனக்காக யோசித்து ஒரு விடயத்தையும் செய்வதையே அன்றி நகையோ துணிமணியோ இல்லை என்று.

நிரஞ்சனாவிற்கு தாலியை துஷ்யந்த் தெரிவு செய்ய வேண்டும் என்று ஆசை.

ஆனால் பெரியவர்கள் என்ன கூறுவார்களோ என சங்கடப்பட்டவள் தங்கையிடம் கூற, காயத்ரியோ நிரஞ்சனாவைக் கிண்டல் செய்தே ஒரு வழிப்படுத்தினாள்.

நிரஞ்சனாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.

துஷ்யந்திடம் கூறினால் மட்டுமே இது சாத்தியப்படும் என்பதை அறிந்து இருந்த காயத்ரி நேராக தன் மாமனை தேடிச் சென்று விஷயத்தைக் கூற, துஷ்யந்த் திரும்பி நிரஞ்சனாவைப் புன்னகையுடன் நோக்கினான்.

அவளோ வெட்கத்தில் தலை குனிந்து கொள்ள, அனைவரும் இருந்த இடத்திற்கு வந்த துஷ்யந்த் பரிமளத்தை தனியாக அழைத்துச் சென்றான்.

“என்ன கண்ணா? அங்க எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க. சீக்கிரம் சொல்லு.” என அவசரப்படுத்தினார் பரிமளம்.

“அம்மா…” எனத் தயங்கிய துஷ்யந்திற்கு தாயிடம் எப்படிக் கூறுவது என்று சங்கடமாக இருந்தது.

அவனுக்குத் தான் இதெல்லாம் பழக்கம் இல்லையே.

எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பவனுக்கு இதெல்லாம் மலையைப் பிளக்கும் வேலையாக இருந்தது.

“அம்மா தான். இப்போ உனக்கு அதுவா சந்தேகம்?” என நேரம் காலம் தெரியாமல் கேலி செய்தார் பரிமளம்.

“அம்மா…” எனக் கடுப்பாக அழைத்த துஷ்யந்த், “நிருவுக்கு நானே தாலிய செலெக்ட் பண்ணுறேன். போய் அத்தை கிட்டயும் மாமா கிட்டயும் சொல்லுங்க.” என்றான் அவசரமாக.

பரிமளமா வாயில் கை வைத்து மகனைப் பார்த்தார் வியப்பாக.

“என்னாச்சு ம்மா?” எனக் கேட்டான் துஷ்யந்த் தாயின் பார்வையின் அர்த்தம் புரியாமல்.

“இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு பார்க்குறேன். கல்யாணம்னு சொன்னாலே பத்தடி தள்ளிப் போற என் பிள்ளையா இது? இருந்தாலும் இவ்வளவு வேகம் கூடாது கண்ணா.” என்றார் பரிமளம் கிண்டலாக.

துஷ்யந்தோ தாயின் பேச்சில் வெட்கம் வந்து வேறு திசை பார்க்க, “சொன்னாலும் சொல்லல்னனாலும் என் மருமகள் கெட்டிக்காரி தான். என் பையனையே இந்த அளவுக்கு மாத்திட்டாளே.” எனப் பரிமளம் கூறவும் துஷ்யந்தின் முகத்தில் மென் புன்னகை.

அதனை ஆசை தீர ரசித்துப் பார்த்த தாயானவளோ தன் நெற்றி வழித்து மகனுக்கு திருஷ்டி கழித்து முத்தமிட்டார்.

துஷ்யந்தின் புன்னகை மேலும் விரிவடைந்தது.

அவனுக்குத் தேவையாக இருந்ததும் இது ஒன்று தானே.

தன் பெற்றோரின் முகத்தில் இந்த சந்தோஷத்தைப் பார்க்க அவன் எதையும் இழக்கத் தயங்க மாட்டான்.

“சரி சரி… நீ போய் மருமகள் கூட நில்லு கண்ணா. நான் பார்த்துக்குறேன்.” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

துஷ்யந்த் நிரஞ்சனாவின் அருகில் வந்து நிற்க, அவனை ஏறிட்டுப் பார்த்த நிரஞ்சனாவின் விழிகள் கூட புன்னகையைச் சிந்தின.

“சம்பந்தி… என் மருமகளுக்கான தாலியை என் பையனே வாங்கிக் கொடுக்க பிரியப்படுறான். வாழப் போறது அவங்க ரெண்டு பேரும் தானே. அவங்க மனசுக்கு பிடிச்சதா எல்லாம் அமைஞ்சா கல்யாண வாழ்க்கையும் அமோகமா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.” என்றார் பரிமளம்.

சந்திரசேகரனுக்கு மனைவி காரணம் ஏதும் இன்றி இவ்வாறு கூற மாட்டாள் என்பது புரிந்ததால் திரும்பி துஷ்யந்தைப் பார்க்க, துஷ்யந்த் மற்றும் நிரஞ்சனாவின் முகத்தில் தெரிந்த எதிர்ப்பார்ப்பிலேயே அவருக்கு விஷயம் புரிந்தது.

இருவரின் ஜோடிப் பொருத்தமும் மனதுக்கு நிறைவாக இருக்க, சந்திரசேகரனும் மனைவியின் கருத்தை ஆமோதித்தார்.

“அது சரி தான் சம்மந்தி. ஆனா நம்ம வழக்கப்படி பொண்ணு வீட்டால தான் தாலி எடுக்கணும்.” எனத் தயங்கினார் வேணி.

“வேணி..‌ அது தான் சம்பந்தியே சொல்றாங்களே. வாழப் போற பசங்க ஆசைப்படுறாங்க. அது படியே நடந்துட்டு போகட்டுமே. இதுல என்ன இருக்கு? எல்லாம் நம்ம மனத் திருப்தில தான் இருக்கு.” என்றார் முரளி மனைவியிடம்.

பெரியவர்கள் சம்மதிக்கவும் நிரஞ்சனாவின் கண்கள் பளிச்சிட, துஷ்யந்த் புருவங்களை உயர்த்தி அவளிடம் சந்தோஷமா என வினவினான்.

நொடி நேரம் கூட யோசிக்காமல் தலை அசைத்த நிரஞ்சனாவிற்கு அவ்வளவு சந்தோஷம்.

“கண்ணா… மருமகள கூட்டிட்டு போய் நீங்க ரெண்டு பேரும் தாலிய செலெக்ட் பண்ணுங்க. நாங்க இங்க மத்த நகைகள பார்க்குறோம்.” எனச் சந்திரசேகரன் கூறவும் நிரஞ்சனாவை அழைத்துக் கொண்டு தாலிகள் இருந்த இடத்திற்குச் சென்றான் துஷ்யந்த்.

மணமக்கள் இருவரும் ஒரு பக்கம் அமர்ந்து தாலிக்கொடியைத் தெரிவு செய்து கொண்டிருக்க, துஷ்யந்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

அவனின் பிரத்தியேக எண்ணுக்கே அழைப்பு வர, முதலில் அழைப்பு வந்ததைக் கவனிக்கவில்லை துஷ்யந்த்.

ஏனெனில் அவனது கைப்பேசி சைலன்ட்டில் போடப்பட்டு மேசை மீது வைக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் ஒரு முறை அழைப்பு வர, நிரஞ்சனா தான் அதனை முதலில் அவதானித்தாள்.

அழைத்தது யார் என்று கூட பார்க்காமல் கைப்பேசியை அவள் துஷ்யந்திடம் நீட்ட, உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் கேட்டது என்னவோ சகுந்தலாவின் அழுகுரல் தான்.

உடனே இருக்கையை விட்டு பதறி எழுந்த துஷ்யந்த், “சகுந்தலா… சகுந்தலா என்னாச்சு? ஏன் அழுதுட்டு இருக்க?” எனக் கேட்டான் பதட்டமாக.

நிரஞ்சனாவும் என்னவோ ஏதோ எனப் பதறி துஷ்யந்தின் கரத்தைப் பற்றிக்கொள்ள, “பரத்… பரத்… இரத்தம்… இரத்தம்…” எனச் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தாள் சகுந்தலா அழுது கொண்டே.

“பரத்துக்கு என்ன சகுந்தலா? அழாம விஷயத்த சொல்லு.” எனக் கேட்டான் துஷ்யந்த் கோபமாக.

“பரத்… பரத்த இங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.” என மறு முனையில் சகுந்தலா கூறவும் ஏகத்துக்கும் அதிர்ந்தான் துஷ்யந்த்.

“என்ன சொல்ற? எங்க ஹாஸ்பிடல்?” எனக் கேட்டான் துஷ்யந்த் அவசரமாக.

“உங்க ஹாஸ்பிடல் தான். எ…எனக்குப் பயமா இருக்கு துஷ்யந்த். நிறைய இரத்தம். என் பையன்… பரத்…” என ஏதேதோ கூறிக் கதறினாள் சகுந்தலா.

சகுந்தலா இருக்கும் நிலையில் அவள் கூறியது எதுவுமே தெளிவில்லாமல் இருக்க, பரத்திற்கு ஆபத்து என்று மட்டும் துஷ்யந்திற்குப் புரிந்தது.

“ஓக்கே ஓக்கே… நீ அழாதே… வெய்ட் பண்ணு. நான் உடனே கிளம்பி வரேன்.” என்ற துஷ்யந்த் அழைப்பைத் துண்டித்து விட்டு தன்னைப் பிடித்து இருந்த நிரஞ்சனாவின் கரத்தை தள்ளி விட்டு யாரிடமும் ஏதும் கூறாமல் உடனே அங்கிருந்து கிளம்பிப் போனான்.

துஷ்யந்தோ எதையும் சிந்திக்கும் நிலையில் இருக்கவில்லை.

சுற்றி இருந்தவர்கள் கூட அவனின் பார்வையில் இருந்து மறைந்து விட்டனர்.

அவனின் எண்ணம் எல்லாம் பரத்தே நிறைந்து இருந்தான்.

பரத்துக்கு என்ன ஆனதோ எனப் பதட்டத்தில் காணப்பட்டான் துஷ்யந்த்.

நிரஞ்சனா அழைத்தது எதுவுமே அவன் செவிகளை எட்டவில்லை.

துஷ்யந்த் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த நிரஞ்சனாவின் விழிகளோ கண்ணீர் சிந்தி அவளது கன்னத்தைத் தொட்டன.

அவளுக்கு முன் கடை பரப்பப்பட்டு இருந்த தாலிக்கொடிகளோ அவளைப் பார்த்து கை கட்டி சிரித்தன.

எங்கிருந்தோ வந்த காயத்ரி அவசரமாக தன் சகோதரியை அணைத்துக் கொள்ள, தங்கையை ஏறிட்டுப் பார்த்த நிரஞ்சனாவின் விழிகளோ வலியையும் ஏமாற்றத்தையும் அப்பட்டமாக வெளிக் காட்டின.

இங்கோ மருத்துவமனைக்குச் செல்வதற்காக தன் காரை ஸ்டார்ட் செய்த துஷ்யந்த் அப்போது தான் அவனின் ஏனைய பாவனைக்கு உரிய கைப்பேசியை காரிலேயே விடுபட்டு இருப்பதைக் கண்டான்.

அதிலோ ஏகப்பட்ட தவறிய அழைப்புகள்.

அனைத்துமே அவன் பணி புரியும் மருத்துவமனையில் இருந்து தான் வந்து இருந்தன.

போதாக்குறைக்கு பரத்தின் ஹார்ட் மானிட்டரில் இருந்து தகவல் அனுப்பும் அவனது வாட்ச் கூட சார்ஜ் இல்லாமல் உயிரை விட்டு இருந்தது.

“ஷிட்…” எனத் தலையில் அடித்துக் கொண்டவனோ காரின் வேகத்தை ஏகத்துக்கும் அதிகரித்தான்.

துஷ்யந்தை அறியாமலேயே அவனின் விழிகள் விடாது கண்ணீர் சிந்தின.

இதயம் இரு மடங்கு வேகத்தில் துடிக்க, சொல்லொணா உணர்வில் தத்தளித்தான் அவன்.

மருத்துவமனையை அடைந்தவன் வேகமாக பரத்தை அட்மிட் செய்து இருந்த இடத்துக்குச் சென்றான்.

துஷ்யந்த் முதலில் கண்டது என்னவோ ஐ.சி.யூ இற்கு வெளியே உடை முழுவதும் இரத்தத்தில் நனைந்து போய் இருக்கையில் அமர்ந்து கூறிக்கொண்டு இருந்த சகுந்தலாவைத் தான்.

இவ்வளவு நேரமும் யாரும் அற்ற அநாதை போல் ஆறுதல் கூறக் கூட யாரும் இன்றி அழுது கொண்டு இருந்த பெண்ணவளோ துஷ்யந்தைக் கண்டதும் தாயைக் கண்ட சேயைப் போல் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டு கதறினாள்.

சகுந்தலா இருந்த நிலையே துஷ்யந்திற்கு பரத்தின் நிலையை எடுத்துரைக்க, சகுந்தலாவைப் பதிலுக்கு அணைத்து ஆறுதல் கூறக் கூடத் தோன்றாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று இருந்தான்.

சில நொடிகள் கழித்தே அவனின் மூளை அவனின் கடமையை நினைவுபடுத்த, அவசரமாக சகுந்தலாவைத் தன்னை விட்டுப் பிரித்தவனோ, “சகுந்தலா அழாம என்ன நடந்துச்சுன்னு சொல்லு.” எனக் கேட்டான்.

“ஆ…ஆக்…ஆக்சிடன்ட்…” என சகுந்தலா திக்கித் திணறிக் கூற, “என்ன?” எனக் கேட்டான் துஷ்யந்த் அதிர்ச்சியாய்.

“கா..லைல இருந்தே மனசுக்கு என்னவோ போல இருந்துச்சு. பரத் வேற இன்னைக்கு ரொம்ப டல்லா இருந்தான். சுத்தமாவே என் கிட்ட‌ பேசல. ஏதோ யோசனையாவே இருந்தான். அது தான் அவன் ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடினா கொஞ்சம் ஓக்கே ஆகிடுவான்னு அவன பசங்க விளையாடுற பார்க்குக்கு கூட்டிட்டுப் போனேன். ரொம்ப நாள் கழிச்சு எங்கேயும் போக முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சான். ஆனா எனக்குத் தான் இப்படி அவன் வீட்டுக்குள்ளயே அடைஞ்சி இருந்தா ஸ்ட்ரெஸ் ஆகிடுவானோன்னு கட்டாயப்படுத்தி அழைச்சிட்டுப் போனேன். ஆனா அதுவே என் பையனுக்கு இப்படி ஆபத்தா முடியும்னு நான் நினைக்கல.” என்று கூறியவாறு தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் சகுந்தலா.

வேகமாக அவளின் கரங்களைப் பிடித்துக் கொண்ட துஷ்யந்த், “எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க? அழாம‌ முழுசா சொல்லு சகுந்தலா என்னாச்சுன்னு. அப்போ தானே எனக்கு ஏதாவது பண்ண முடியும்.” என அதட்டினான்.

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்