Loading

தந்தை சொல்லி விட்டுச் சென்றதை எண்ணி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் துஷ்யந்த்.

அவனால் சரியாக எதையும் சிந்திக்க முடியவில்லை.

இப்போது கூட சகுந்தலாவின் வார்த்தைகளை நினைக்கும் போது அவ்வளவு கோபம் வந்தது.

ஆனால் பரத்தைப் பற்றி நினைக்கும் போது மட்டும் ஏதோ ஒன்று மனதைப் பிசைந்தது.

சரியாக அந் நேரம் துஷ்யந்தின் கைப்பேசி ஒலி எழுப்பி அவனின் கவனத்தைக் கலைத்தது.

நிரஞ்சனா தான் அழைத்திருந்தாள்.

அவளின் பெயரைப் பார்த்ததுமே துஷ்யந்தின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தன்னால் உதயமானது.

உடனே அழைப்பை ஏற்றுக் காதில் வைத்த உடனே மறு முனையில் கேட்டது என்னவோ நிரஞ்சனாவின் புன்னகை தான்.

“ச்சீ போடி. ஒழுங்கா போய் படிக்கிற வேலைய பாரு. அப்புறம் அரியர் விட்டுட்டேன்னு என் கிட்ட வந்து அழக் கூடாது.” என நிரஞ்சனா கூறவும், “இவ மட்டும் டிகிரிய முடிச்சிட்டு ஹாயா வீட்டுல இருப்பியாம். நான் மட்டும் படிச்சு வேலைக்கு போகணுமாம். அதெல்லாம் முடியாது. நானும் மாம்ஸ போல ஒரு டாக்டரையோ இன்ஜினியரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டின்னு லைஃப்ல செட்டில் ஆகப் போறேன்.” என்றாள் காயத்ரி.

“அடிச்சேன்னா பாரு. படிக்கிற வயசுல பேச்சைப் பாரு. அம்மா…” என நிரஞ்சனா சத்தமிடவும், “வவ்வவ்வவ்வா…” என தமக்கைக்கு பழிப்பு காட்டி விட்டு ஓடி விட்டாள் காயத்ரி.

தங்கையின் அலப்பறையில் இணைப்பில் துஷ்யந்த் இருப்பதையும் மறந்து நிரஞ்சனா அவளுடன் மல்லுக்கட்டியவளுக்கு அப்போது தான் துஷ்யந்தின் நினைவு வந்தது.

துஷ்யந்தோ சகோதரிகளின் செல்லச் சண்டையில் அனைத்தும் மறந்து புன்னகை முகமாகக் காணப்பட்டான்.

“ஹேய் சாரிங்க… சாரி… நீங்க கால் அட்டன்ட் பண்ணத நான் கவனிக்கவே இல்ல. ரொம்ப நேரம் ஆச்சா?” எனக் கேட்டாள் நிரஞ்சனா சங்கடமாக.

“அவ்வளவு நேரம் எல்லாம் இல்ல. இப்போ தான்.” என்ற துஷ்யந்தின் குரலில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“என்னாச்சு? ஏன் சிரிக்கிறீங்க?” எனக் கேட்ட நிரஞ்சனாவையும் துஷ்யந்தின் சிரிப்பு தொற்றிக் கொண்டது.

“ரொம்ப டென்ஷனா இருந்தேன். ஆனா உங்க ரெண்டு பேரோட கூத்த கேட்டதும் எல்லா பாரமும் இறங்கின ஃபீல். நான் அன்னைக்கு உன் தங்கச்சி கிட்ட கூட சொன்னேன் அவள போல ஒரு தங்கச்சி இல்லையேன்னு எனக்கு கவலையா இருக்குன்னு. இப்போ கூட அது தான் ஃபீல் ஆச்சு.” என்றான் துஷ்யந்த் மனநிறைவுடன்.

“ஓஹ்… அதுக்கென்ன போச்சு? என் கூட இலவச இணைப்பா என் தங்கச்சியையும் உங்களுக்கு தங்கச்சியா தத்து எடுத்துக்கோங்க.” என நிரஞ்சனா கேலி பேசவும், “அதுவும் சரி தான்.” என்றான் துஷ்யந்த் சிரிப்புடன்.

________________________________________________
மறுநாள் காலையில் சகுந்தலா கண் விழிக்கும் போது உடம்பை அசைக்கக் கூட கஷ்டமா இருந்தது.

உடம்பு எல்லாம் அடித்துப் போட்டது போல் வலி.

கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தவளுக்கு அப்போது தான் முன் தினம் இரவு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்து சட்டென தன்னைக் குனிந்து பார்த்தாள்.

பொட்டுத்துணி இன்றி இருந்தவளின் உடம்பு ஆங்காங்கே கன்றிச் சிவந்து இருந்தது.

அவசரமாகக் கால்களைக் மடக்கி அணைத்துக் கொண்டு அமர்ந்த பெண்ணவளின் கண்களில் கண்ணீர்.

மெதுவாகத் தலையைத் திருப்பிப் பார்க்க, ஒரு பக்கம் ரிஷிகேஷோ போதை மயக்கத்தில் ஆழ்ந்து உறக்கத்தில் இருந்தான்.

அவனைக் காணக் காண அவ்வளவு வெறியாக இருந்தது சகுந்தலாவிற்கு.

ஒரு நொடி என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று ரிஷிகேஷின் அனைத்து ரகசியங்களையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமா என்று கூட நினைத்தாள்.

ஆனால் மறு நொடியே பரத்தின் முகம் கண் முன் வந்து சகுந்தலாவின் எண்ணங்களைக் கட்டிப் போட்டது.

கஷ்டப்பட்டு எழுந்து நின்றவளுக்கு பேசாமல் உறங்கிக் கொண்டு இருப்பவனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டால் என்ன என்று கூட தோன்றியது.

ஆனால் தான் கொலை செய்து விட்டு சிறைக்குச் சென்றால் ரிஷிகேஷ் சொன்னது போல் தன் மகன் அநாதாகையாக நிற்பான் என்பதால் அவ் எண்ணத்தைத் தள்ளிப் போட்டாள்.

குளிக்கும் போது கூட ஷவரில் இருந்து வந்த தண்ணீருடன் சேர்த்து கண்ணீர் சிந்தினாள் சகுந்தலா.

சகுந்தலா உடை மாற்றி வெளியே வந்த நேரம் அவ் அறைக்குள் நுழைந்தான் ரிஷிகேஷ்.

எங்கே முன் தினம் இரவு போல ஏதாவது செய்து விடுவானோ எனப் பெண்ணவள் அஞ்ச, ரிஷிகேஷோ ஒரு இளக்காரப் புன்னகையுடன் சகுந்தலாவைக் கடந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

பரத் எழுந்ததும் அவனை அழைத்துக்கொண்டு மூவருமே மருத்துவமனைக்குக் கிளம்பினர்.

ரிஷிகேஷ் தான் பரத்தைத் தூக்கி வைத்து இருந்தான்.

அன்று வெகு சீக்கிரமாகவே துஷ்யந்தும் மருத்துவமனைக்கு வந்திருக்க, ரிஷிகேஷின் கையில் பரத்தைக் கண்டவனின் முகம் இறுகியது.

ஆனால் மறந்தும் கூட சகுந்தலாவின் பக்கம் துஷ்யந்தின் பார்வை செல்லவில்லை.

“சாக்லேட் அங்கிள்…” எனக் கத்திக் கொண்டு துஷ்யந்தின் கரத்திற்குத் தாவிய சிறுவனை அள்ளி அணைத்து முத்தமிட்டான் துஷ்யந்த்.

ரிஷிகேஷிற்கு அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் சந்தேகத்தைத் தான் விளைவித்தன.

மெதுவாகத் திரும்பி சகுந்தலாவின் முகம் நோக்க, அவளோ தலை குனிந்தவாறு நின்றிருந்தாள்.

“வாட்சப் சேம்ப்? சாப்பிட்டியா? இப்போ எல்லாம் அங்கிள கண்டுக்குறதே இல்ல.” என்றான் துஷ்யந்த் செல்லக் கோபத்துடன்.

“பரத்துக்கு தான் இப்போ டேடி வந்தாச்சுல.” என பரத் நொடியும் தாமதிக்காது பதில் அளிக்க, சகுந்தலாவோ அதிர்ச்சியுடன் அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள்.

ரிஷிகேஷோ அதனைக் கேட்டு வன்மத்துடன் புன்னகைக்க, துஷ்யந்தின் மனநிலையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

‘தான் அப்போது பரத்துக்கு முக்கியம் இல்லையா?’ எனத் தன்னையே கேட்டுக் கொண்டவனின் மனசாட்சி சகுந்தலாவின் வார்த்தைகளை அவனுக்கு நினைவுபடுத்தியது.

‘அதுவும் கரெக்ட் தான். நான் பரத்துக்கு ஜஸ்ட் டாக்டர் தானே. வேற ஒன்னும் இல்லையே.’ எனத் தன்னையே சமாதானம் செய்து கொண்ட துஷ்யந்த் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் பரத்தை ரிஷிகேஷிடம் நீட்டினான்.

குரலை செறுமிக் கொண்டு பரத்தின் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்த துஷ்யந்தின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

சகுந்தலாவோ துஷ்யந்த் என்ன கூறுவானோ எனப் பதட்டமாகவே அவனின் முகம் பார்த்திருக்க, “சேம்ப்… அங்கிள் நர்ஸ் ஆன்ட்டி கிட்ட உங்களுக்கு ஒரு கிஃப்ட் கொடுத்து இருக்கேன். நீங்க போய் அதை வாங்கிப் பாருங்க.” என்றான் துஷ்யந்த் பரத்திடம்.

உடனே பரத் ரிஷிகேஷின் கரத்தில் இருந்து இறங்கி துள்ளிக் குதித்துக் கொண்டு வெளியே ஓட, ரிஷிகேஷ் அழைத்தது எதுவும் அவனின் செவிகளை எட்டவில்லை.

“என்னாச்சு?” எனப் பதட்டமாகக் கேட்ட சகுந்தலாவிடம் பதில் அளிக்காது ரிஷிகேஷை நோக்கிய துஷ்யந்த், “மிஸ்டர் ரிஷிகேஷ்… கொஞ்சம் நாள் முன்னாடி தான் பரத்தோட மெடிக்கேஷன் எல்லாம் நாங்க மாத்தி இருந்தோம். ஆனா இன்னுமே சொல்லிக்குற அளவுக்கு ரிப்போர்ட்ல எந்த இம்ப்ரூவ்மன்ட்டும் இல்ல. அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பரத்துக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் பண்ணி ஆகணும். திரும்ப மெடிக்கேஷன்ஸ சேன்ஜ் பண்ணுறதுல எந்த யூஸும் இல்ல. அது மூலமா பரத் தான் இன்னும் வீக் ஆவான்.” என்றான்.

அதனைக் கேட்டு சகுந்தலா உடனே வாய் விட்டு அழுது விட, அவளுக்கு ஆறுதல் கூற விழைந்த மனதை அடக்குவது பெரும்பாடாக இருந்தது துஷ்யந்திற்கு.

“அப்போ என்ன டாக்சி பண்ணுறது? என் பையன் பிழைக்க மாட்டானா?” என நீலிக் கண்ணீர் வடித்தவாறு கேட்டான் ரிஷிகேஷ்.

“நோ…” எனக் கத்தியவாறு சகுந்தலா சத்தமாகவே கதற, ரிஷிகேஷின் வார்த்தைகளில் துஷ்யந்திற்கே கோபத்தில் கழுத்து நரம்புகள் புடைத்தன.

துஷ்யந்திற்கு அதனைக் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

“என்ன பேசுறீங்க மிஸ்டர்? முதல்ல பாசிட்டிவ்வா நினைக்க பழகுங்க. நாமளும் நம்மள சுத்தி இருக்குறவங்களும் எவ்வளவு பாசிட்டிவ் வைபோட இருக்குறோமோ அந்த அளவுக்கு பரத் ரெகவர் ஆக வாய்ப்பு அதிகம். கடவுள் மேல நம்பிக்கை வைங்க முதல்ல.” என்றான் துஷ்யந்த் கோபமாக.

“எனக்கு மட்டும் என்ன ஆசையா? பல வருஷம் கழிச்சு என் பையன சந்திச்சு இருக்கேன். ஆனா அவன் கூட இருக்க எனக்கு கொடுத்து வைக்கலயே. கடவுளுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?” என்றான் ரிஷிகேஷ் போலியாக கண்ணீர் சிந்தியவாறு.

துஷ்யந்த் மீண்டும் பதிலுக்கு ஏதோ கோபமாகக் கூற முயல, அதற்குள் அழுது கொண்டே அங்கிருந்து எழுந்து ஓடினாள் சகுந்தலா.

உடனே ரிஷிகேஷும் அவள் பின்னால் செல்ல, கோபத்தில் மேசையில் ஓங்கி அடித்தான் துஷ்யந்த்.

வெளியே ஓடி வந்த சகுந்தலாவோ பரத்தைத் தேடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டு கதறி அழுதாள்.

தொடர்ந்து சில நாட்களாக அனுபவித்த அதிர்ச்சிகள், முன் இரவு நடந்த வன்முறை என அனைத்தும் சேர்ந்து சகுந்தலா அவளாகவே இல்லை.

“மம்மி… மம்மி…” என்ற பரத்தும் அழத் தயாராக, அங்கு நின்றிருந்த தாதிகள் எவ்வளவோ அவளை சமாதானப்படுத்த முயன்றும் எதுவும் சகுந்தலாவை அமைதிப்படுத்த மறுத்தது.

அங்கிருந்த தாதிகளுக்கு சகுந்தலா துஷய்ந்திற்கு வேண்டப்பட்டவள் என்பது அறிந்து இருந்ததால் ஒரு தாதி அவசரமாக சென்று துஷ்யந்திற்கு தகவல் தெரிவித்தாள்.

துஷ்யந்த் அங்கு வந்து சேரும் போது பரத்தை அணைத்தவாறே மயங்கிச் சரிந்தாள் சகுந்தலா.

“சகுந்தலா…” எனக் கத்திக் கொண்டு துஷ்யந்த் அவளை நெருங்கப் போக, அதற்குள் அவ்வளவு நேரமும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த ரிஷிகேஷ் சகுந்தலாவைத் தாங்கிப் பிடித்து அங்கிருந்த கட்டிலில் கிடத்தினான்.

உடனே துஷயந்தின் நடை தடைப்பட்டது.

துஷ்யந்த் நின்ற இடத்தில் இருந்து நகராமல் அப்படியே நிற்க, சகுந்தலாவோ மயக்கத்தில் இருந்து எழும்பவது போல் இல்லை.

தலைமைத் தாதி துஷ்யந்தின் முகம் நோக்க, “உடனடியா என்னன்னு சீக்கிரம் செக் பண்ணுங்க.” என்ற துஷ்யந்த் பயத்தில் அழுது கொண்டிருந்த பரத்தைத் தூக்கிக் கொண்டான்.

சிறுவனோ துஷ்யந்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனின் தோளில் உடனே முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

துஷ்யந்த் சொன்னதைக் கேட்டு பயந்து விட்டான் ரிஷிகேஷ்.

ஏனென்றால் சகுந்தலாவைப் பரிசோதித்தால் அவளின் உடலில் உள்ள காயங்கள் பற்றி தெரிந்து விடுமே.

“அ…அதெல்லாம் ஒன்னும் வேணாம். இது சும்மா மயக்கம் தான். அவளே இன்னும் கொஞ்சம் நேரத்துல எழுந்திருச்சுடுவா.” என்றான் துஷ்யந்த் தன் பயத்தை மறைத்துக் கொண்டு.

“மிஸ்டர்… நீங்களா டாக்டர்? இல்ல நானா?” எனக் கோபமாகக் கேட்ட துஷ்யந்த் ரிஷிகேஷின் பதட்டத்தைக் கண்டு கொண்டான்.

“இல்ல டாக்டர் நான்…” என ரிஷிகேஷ் ஏதோ கூற வர, அவனை பேச விடாது இடை மறித்த துஷ்யந்த், “மிஸ்டர் ரிஷிகேஷ்… இதுக்கு மேல நீங்க எங்க டியூட்டிய பார்க்க விடலன்னா எங்களால போலீஸ்ல கம்ப்ளைன் கூட பண்ண முடியும்.” என மிரட்டினான்.

அதில் வேறு வழி இன்றி அமைதி காத்தான் ரிஷிகேஷ்.

சகுந்தலாவிற்கு சிகிச்சை அளிக்க வேறு ஒரு மருத்துவர் வந்து ரிஷிகேஷை வெளியே அனுப்பினார்.

துஷ்யந்த் எப்போதோ பரத்தை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

சகுந்தலாவைப் பரிசோதித்த மருத்துவர் வெளியே வர, ரிஷிகேஷைப் பதட்டம் பிடித்துக் கொண்டது.

அவரோ ரிஷிகேஷைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் துஷ்யந்தைத் தேடிச் சென்று அவனிடம் ஏதோ கூறினார்.

மருத்துவர் கூறிய செய்தியில் ஆவேசம் அடைந்த துஷ்யந்த் பரத்தைத் தன் அறையிலேயே அமர வைத்து விட்டு நேராக ரிஷிகேஷைத் தேடிச் சென்று அவனின் சட்டையைப் பற்றினான்.

இதனை அங்கிருந்த யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்