Loading

அத்தியாயம் 67

இறுதியாக யார் போன் செய்தது என்ற விவரங்களை ஸ்வரூப் கேட்டு விடுவானோ என்ற தயக்கம் வேறு எழுந்தது உத்ஷவிக்கு.

பூமிநாதன் பற்றி வெளியில் சொல்லும் எண்ணம் அவளுக்கு இல்லை. அதற்கான ஆதாரமும் இப்போது இல்லை. ஸ்வரூப் அவளை ஆழ் பார்வை பார்த்தானே தவிர வேறு எந்த கேள்வியும் கேட்கவில்லை.

அவளை தன்னருகில் இழுத்து, கையை மட்டும் பிடித்துக் கொண்டவன், “திடீர்ன்னு என்ன ஆச்சு டாக்டர் அந்த பையனுக்கு?” என ஜெயராமனிடம் வினவ,

அவரோ, “நான் சொன்னேனே ஸ்வரூப். எந்த எக்ஸ்டரீமையும் அவங்களால கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே, ஒரு விஷயத்துக்கோ, அல்லது ஒரு நபருக்கோ கட்டுப்பட்டு இருக்குறவங்க, அந்த சமநிலையைத் தவறிட்டா விளைவுகள் பயங்கரமா இருக்கும்.

நீங்க ராகேஷ்ன்றவன் செத்துப்போனான்னு சொன்னீங்கள்ல. அவனுக்கும் இதே தியரி தான். திடீர்னு வேறு விதமான புது ஸ்ட்ரெஸ், புது உத்தரவுகளை நீங்க பிறப்பிச்சதும் அவனால அதை ஏத்துக்க முடியல. அவனோட மனக்கண்ணுல தன்னோட பாசை தேடி அலைஞ்சுருக்கான். அப்படி அவன் பிஹேவ் பண்ணும் போது, அதுல இருந்து தப்பிக்கிற விதமா ஏதோ செய்யப்போக கரெண்ட் வயரை பிடித்து இறந்துட்டான்.

அதே தான் மேகனாவும். எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம, சுவத்துல முட்டி இறந்துட்டா. சாகுறது அவங்க இன்டென்ஸன் கிடையாது. ஆனா, அவங்க சாகாம இருந்திருந்தா, உங்களை கடுமையா தாக்குற அபாயம் இருக்கு. ரெண்டு தடவையும் அது நடக்காததுனால தான் உங்களால அதுல இருக்குற சீரியஸ்நெஸ், அண்ட் அதோட விளைவுகளை எக்ஸ்சாக்ட்டா புருஞ்சுக்க முடியல.” என்றதும் ஆறு பேரின் முகங்களிலும் திகைப்பு பரவியது.

“அப்போ காடன் செத்தது கூட, அப்படி ஒரு நிலமைல தான் போல. மலை மேல இருந்து விழப் போறது தெரியாமயே செத்திருக்கான்” என்று ஜோஷித் யோசனையுடன் கூற,

ஸ்வரூப், “அதெல்லாம் ஓகே… ஆனா, இப்போ இவனை இங்க இருந்து யாரும் ஸ்ட்ரெஸ் பண்ணவோ, கொலாப்ஸ் பண்ணவும் இல்லையே டாக்டர். அப்பறம் ஏன் இப்படி பிஹேவ் பண்ணுனான்” என்று கூர்மையுடன் வினவ, பாவம் அவராலேயே அதற்கு பதில் கூற இயலவில்லை.

“என்ன டாக்டர் அவுட் ஆப் சிலபஸ்ல இருந்து கேட்ட மாதிரி இந்த முழி முழிக்கிறீங்க.” அக்ஷிதா அவரை வாரியதில் முறைத்தவர், “மே பி, அவங்களை நார்மலாக்க நம்ம குடுக்குற டேப்ளட்க்கு கூட இந்த மாதிரி பிஹேவ் பண்ணலாம்.” என்றதில், சஜித் மொபைலில் அங்கிருந்து சிசிடிவி வீடியோ புட் ஏஜ் களைப் பார்க்க ஆரம்பித்தான்.

அதில் அவன் புருவம் சுருங்க, “ஸ்வரூ… இடையில யாரோ கேமராவை ஹேக் பண்ணிருக்காங்கடா. ஜோ பாரு.” என்றதும், அவன் மடிக்கணினியை எடுத்து, அதில் மூழ்கினான்.

இத்தனை உரையாடல்களிலும் உத்ஷவி மட்டும் ஒன்றுமே பேசவில்லை. இறுக்கத்துடன் நின்றிருந்தாள்.

ஸ்வரூப் மடிக்கணினியை பார்க்கும் பொருட்டு, அவள் கையை விட்டு விட்டு நகர எத்தனிக்க, அவள் விடவில்லை.

திரும்பி தன்னவளைப் பார்த்தவன், அவள் கன்னம் பற்றி “ஆர் யூ ஓகே டி?” என மென்மையுடன் வினவ, அவளோ கன்னம் பற்றிய தன்னவனின் கையைப் பற்றிக்கொண்டு, “ஸ்வரூ…” என மூச்சு வாங்க,

“என்னடி… என்ன ஆச்சுமா.?” என்றான் மீண்டும் உருகும் குரலும்.

அவனது மென்மையும், தீண்டலும் அவளை மேலும் உடைய வைத்தது. “ஸ்வரூ… என்… என்னை கொன்னுடு.” என்று தலையை ஆட்டிக் கூறியவளை அதிர்ந்து பார்த்தான்.

“என்னடி உளறுற?” அவன் மென்மை இழந்து கத்திட, “நான்… நான் உயிரோட இருந்தா உங்களை ஏதாவது செஞ்சுருவேன். என்னைக் கொன்னுடு. உன் கையால நான் செத்ததா இருக்கட்டும். ப்ளீஸ் என்னைக் கொன்னுடு.” என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே சொன்னவளை, விஹானா, “அடியேய். நீ செத்துட்டா எல்லாம் சரியாய் போய்டுமா” என அவளருகில் வர, உத்ஷவி கண்ணிமைக்கும் நேரம் ஸ்வரூப்பின் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்திருந்தாள்.

அவன் கைகளில் திணித்து, அவளது நெற்றிப்பொட்டில் வைத்துக் கொண்டவள், “ஷூட் மீ. ஷூட் மீ. ப்ளீஸ்…” என்றிட, ஸ்வரூப்பின் விழிகளில் நீர்ப்படலம்.

“உனக்கு ஒன்னும் இல்லடி. நீ நார்மலா தான் இருக்க.” என்றவன் ஆதங்கத்துடன் உரைக்க,

“இல்ல… விஹா விஹா என்னை தொட வந்ததுக்கு நான் தள்ளி விட்டேன்னு சொன்னா… எனக்கு அது ஞாபகமே இல்ல. அதே மாதிரி ஏதோ ஏதோ நான் தான் பண்ணிருப்பேன். எனக்கே தெரியாம… நான் நான் என் கண்ட்ரோல்ல இல்ல தான டைனோசர். ப்ளீஸ். ப்ளீஸ்டா… என்னை கொன்னுடு.”என்று ட்ரிக்கரில் கை வைத்திட,

“ஏய்…” என கோபத்தில் கத்தியவன், தணிந்து, “விஷாம்மா உனக்கு ஒன்னும் இல்ல. எதுவும் சிவியர் ஆகி இருக்காது. கொஞ்சம் நிதானமா இரு. நம்ம இதை சரி பண்ணிடலாம். நான் சொல்றதைக் கேளுடி.” என்றான் கிட்டத்தட்ட கெஞ்சலுடன்.

அவளோ அதனை ஏற்கவே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ட்ரிக்கரை அழுத்தியே இருந்தாள்.

நல்லவேளையாக அதில் அவன் குண்டை லோட் செய்யவில்லை. “ஏண்டா புல்லட் இல்லாம துப்பாக்கி வச்சு இருக்க.” என்று எரிச்சலானதில், துப்பாக்கியை தூக்கி எறிந்தவன், அவளை ஓங்கி அறையப் போனான்.

பின் கட்டுப்படுத்திக் கொண்டு, அவள் மீதான பார்வையை மாற்றாமல் “சஜி” என சத்தத்துடன் அழைக்க, அவன் ஸ்வரூப்பின் அருகில் வந்தான். தம்பியின் காதினுள் ஏதோ கிசுகிசுக்க, சஜித்தோ ஸ்வரூப்பை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

அதில், “என்னடா?” என முறைக்க,

“இல்ல… இங்க இவ்ளோ கலவரம் நடக்குது.” என இழுத்தவன், சிரிப்பை அடக்கிக்கொண்டு சென்று விட, “இந்த லூசு ஏன் சிரிச்சுக்கிட்டே போகுது” என்ற குழப்பம் அக்ஷிதாவிற்கு.

இவளை ரூம்க்கு கூட்டிட்டு போங்க என்று பெண்களிடம் கட்டளையிட, விஹானா “டார்ல்ஸ் நீ அந்த கையை பிடிச்சுக்க நான் இந்த கையை பிடிச்சுக்குறேன். மெஸ்மரைஸ் ஆகி நம்மளை போட்டு தள்ளிட போறா.” என்று அக்ஷிதாவிடம் கூறியதில் உத்ஷவியின் கோபப்பார்வை தான் கிடைத்தது.

சிறிது நேரத்தில் அறைக்குள் நுழைந்த ஸ்வரூப், மற்ற இருவருக்கும் கண்ணை காட்ட, அவர்கள் சமத்தாக வெளியில் சென்று விட்டனர்.

உத்ஷவி சாய்ந்து அமர்ந்து எங்கோ வெறித்திருக்க, அருகில் நிழலாடியதில் திரும்பி ஸ்வரூப்பைப் பார்த்தாள்.

“உனக்கு சாகனும் அவ்ளோ தான? செத்துக்கோ. ஆனா!” என்றபடி அவள் முன் அமர்ந்தவன், அங்கும் இங்கும் உருளும் அவளது கருவிழிகளை களவாடியபடி, “சாகும் போது நீ மிஸஸ் ஸ்வரூப் அவ்தேஷா தான் சாகணும்.” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவனது கூற்றை உணரும் முன்பே, சஜித் வாங்கி வந்த மஞ்சள் கயிறை பொறுமையாக அவள் கழுத்தில் கட்டி, மூன்று முடிச்சை இட்டான்.

நடந்து முடிந்த காரியம் புரியவே சில நிமிடங்கள் பிடித்தது உத்ஷவிக்கு. அவனோ அவளது அதிர்வை சட்டை செய்யாமல், துப்பாக்கியை எடுத்து லோட் செய்து விட்டு, “இப்போ லோட் பண்ணிட்டேன். சாகுறியா?” என சாக்லேட் வேணுமா என்ற தொனியில் கேட்க, அவளுக்கோ வந்ததே ஆத்திரம்.

அவன் மார்பிலேயே படபடவென அடித்தாள். “ஏண்டா ஏண்டா இப்படி பண்ணி தொலைச்ச. என்னை டார்ச்சர் பண்றதுக்குன்னே பிறந்து வந்துருக்கியா. உன் மனசுல என்ன தான்டா நினைச்சுட்டு இருக்க.” என்று ஆவேசமாக அவன் சட்டையைப் பிடித்து இழுத்தாள்.

அவனோ அசராமல், “உன்னை தான் நினைச்சுட்டு இருக்கேன்னு சொன்னா ரொம்ப பழைய டயலாக்கா இருக்கும்டி.” என மெல்ல புன்னகைத்தவன், சட்டென முகம் மாறி, “இப்போதைக்கு இந்த பிரச்னையை முடிக்கணும். உன்னை லூசு மாதிரி யோசிக்க வச்ச விஷயம் என்னன்னு கண்டுபிடிக்கணும். ஏகப்பட்ட வேலை இருக்கு விஷாம்மா. இதுக்கு மேல யாரும் பாதிச்சுட கூடாது. உன்னை அங்க இருந்து மீட்க மட்டும் தான் முடிஞ்சுது. அங்க யார் யார் இருந்தா, என்ன நடந்துச்சு எதுவுமே தெரியல. உங்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குற அளவு நீ தெளிவா இல்ல. உங்கிட்ட பேசுனா கூட, உன்னை விட்டு பிரிஞ்சு இருந்த அந்த நாலு நாளும் நான் செத்து சாம்பலானத பத்தி பேசி, உன் முன்னாடி அழுது தொலைச்சுடுவேனோன்னு என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். என்னைக் கொல்லாதடி.” என்றான் ஏக்கக் குரலில்.

அவனது ஏக்கம் அவளைத் தாக்கியதோ என்னவோ, தாவி அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக்கொண்டு கேவினாள்.

—–

ஜோஷித் மடிக்கணினியில் புதைந்திருக்க, விஹானா அவனருகில் அமர்ந்தாள்.

“இடையிலகாணாம போன ஃபுட் ஏஜ் திரும்ப கிடைச்சுதா ஜோஷ்.” என ஆரம்பிக்க,

“இல்லடி அதான் பாத்துட்டு இருக்கேன். எந்த நாய் இந்த வேலையை பாத்துச்சுன்னு தெரியல.” என்றான் நெற்றியை நீவிக்கொண்டு.

“இங்க வந்துருக்குற டாக்டர்ஸ்ல யாரும் ஸ்லீப்பர் செல்லா இருப்பாங்களோ?” என அவள் வினவிட,

“சேம் டவுட். சஜி எல்லாரையும் தனி தனியா விசாரிச்சுட்டு இருக்கான்.” என்றதும், “ப்ச் வெளில இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு உள்ளுக்குள்ள இருக்குற துரோகிங்க வேற.” என சலித்தவள், “ஷவியை எங்க தான் எக்ஸ்சாக்ட்டா வச்சுருந்துருப்பாங்க ஜோஷ். அவள் இவ்ளோ பயந்து போயிருக்கான்னா, கண்டிப்பா ஏதோ நடந்துருக்கு. ஆனா, நம்ம அரண்மனைல பாக்கும் போது, எதுவுமே இல்ல.” என்று குழம்பினாள்.

“ம்ம்… அங்க ஏதாவது சுரங்கப்பாதை, பேஸ்மெண்ட், ஆர் மறைக்கப்பட்ட ரூம்ன்னு இன்ச் பை இன்ச்சா செக் பண்ணியாச்சு. இன்னும் கூட ஆளுங்க அங்க செக் பண்ணிட்டே தான் இருக்காங்க. ஷவி ஏதாவது சொன்னா தான் உண்டு.” என் அவன் யோசனையுடன் கூறியதும்,

“எனக்கு என்னமோ அவளுக்கு தெரிஞ்சுருக்காதுன்னு தான் தோணுச்சு ஜோஷ்.” என்னும் போதே, அவன் ஏதோ பேச வர, புரை ஏறியதில் இரும ஆரம்பித்தான்.

“ஹே பார்த்து!” என அவன் தலையை தட்டிகொடுத்த்தவள், ஓடிச் சென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து, அவனுக்கு புகட்டினாள்.

அவன் முறைத்து விட்டு, தண்ணீரை தட்டி விட, விஹானா “வேதாளம் முருங்கை மரத்துக்கு ஏறிடுச்சு” என முணுமுணுத்துக் கொண்டு, சற்று நிதானமாக அவள் மனதில் ஏற்பட்ட  குழப்பத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், எடுத்துக் கூறி, “நீ ஒருவேளை லவ்வ சொல்லிட்டா என்னால மறுக்க முடியாதுன்னு தான் அப்படி பேசிட்டேன் ஜோஷ். ரொம்ப சாரி.” என்றான் கண்ணீர் தேங்க.

அதில் நெக்குருகி போனவன், “பைத்தியக்காரி… ம்ம்ஹும் தப்பு என் மேல தான். உன்னை கிஸ் பண்றதுக்கு முன்னாடி, லவ்வ சொல்லி இருக்கணும். முதன் முதலா என் ரூம்ல வந்து மயங்கி விழுந்தியே அப்பவே உன்மேல எனக்கு ஒரு ஸ்பார்க். உங்களை ரூம்ல அடைச்சு வச்சு, உங்க ஆக்டிவிட்டீசை கேமரால வாட்ச் பண்ணப்ப, உன் முகமும் உன் திமிரும் உன் ஆட்டிடியூட்டும் என்னை மொத்தமா திருடிட்டு போய்டுச்சு. உன்னை திருட்டுத்தனமா சைட் அடிச்சேன். அப்போ என்கேஜ்மென்ட் ஆனது வேற ஞாபகம் வந்து, இப்படி நினைக்கிறதே தப்புன்னு என்னை நானே திட்டிக்குவேன். சில நேரம் என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ற உன்னை வேணும்ன்னே திட்டுவேன். அதுக்கு அப்பறம், அந்த பீல் என்னை ஆக்கிரமிச்சுருச்சு சீட்டர். தானா இயல்பா மனசுக்குள்ள நுழைஞ்ச காதல், உன் மனசை மட்டும் தான் பாக்கும், உன் பேக் கிரவுண்டை இல்ல.” என்றான் நிறுத்தி நிதானமாக.

அவளோ குண்டு விழிகளை சாஸர் போல விரித்து, “அப்போவேவா?” என வியந்தவளுக்கு, மனத்தெங்கும் சில்லென்ற உணர்வு ஆர்ப்பரித்தது.

அந்நேரம் மடிக்கணினியில் ஹேக் செய்யப்பட்ட புட் ஏஜ் திரும்பி ஒளிபரப்பாக, அதனைக் கண்டு இருவரும் அதிர்ந்தனர்.

அத்தியாயம் 68

சஜித் துளைக்கும் பார்வையுடன் ஒவ்வொரு மருத்துவரையும் தீவிரமாக விசாரித்தான்.

“அந்த பையன் கத்துறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை நீங்க எங்க இருந்தீங்க? என்ன வேலை பார்த்துட்டு இருந்தீங்க?” என அடுக்கடுக்காய் கேள்விகளைத் தொடுக்க, ஒரு மருத்துவர் “எங்களையே சந்தேகப்படுறது டூ மச் சஜித்” என்றார் கோபமாக.

“இப்ப எல்லாரையும் சந்தேகப்பட்டு நடத்துற சூழ்நிலைல இருக்கோம் டாக்டர். இந்த பிரச்சனை முடியிற வரை எல்லாரும் கோ ஆபரேட் பண்ணுங்க. பண்ணி தான் ஆகணும்.” என்றான் அதிகாரமாக.

அக்ஷிதாவும் அவனுடன் தான் இருந்தாள். மெல்ல அவனது காதில், “சஜூ ஜெயராமன் சார விசாரிக்கல?” என்று கிசுகிசுக்க,

அது அவருக்கும் கேட்டதில், “அது சரி. கடைசில என்னையவே சந்தேகப்படுறீங்களா?” என்றார் முறைப்புடன்.

அக்ஷிதா, “நீங்க தான் சைக்கோ கில்லாரோட டீச்சர் மாதிரி, எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே டாக்டர். அதான் ஒரு கிளாரிஃபிகேஷன்க்கு” என்று சமாளிக்க,

சஜித் “சும்மா இருடி.” என்று சிரிப்புடன் அடக்கினான்.

அப்போது அங்கு வந்த ஜோஷித், “அவள் கேக்குறதுல என்ன தப்பு இருக்கு. சொல்லுங்க டாக்டர் நீங்க எங்க இருந்தீங்க? என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?” என விசாரிக்க, “என்னப்பா என்னையவே கார்னர் பண்றீங்க.” என்றவர். “நான் இதை எப்படி சரி பண்றதுன்னு தான் டேப்லட்ஸ் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்.” என்றார்.

“சரி, உங்க பி. ஏ என்ன செஞ்சுட்டு இருந்தாரு?” என்றான் இளக்காரமாக.

அப்போது தான் அங்கு வந்த விக்னேஷ், “சார் தான், அவரோட புக்ஸ் சிலது வீட்ல இருக்குன்னு எடுக்க அனுப்பினாரு” என்றான் வேகமாக.

அதனை ஜெயராமனும் ஒப்புக்கொள்ள, “ஓஹோ… புக் எடுத்துட்டு வந்தாச்சா?” என ஜோஷித் நக்கலாகக் கேட்க, “எடுத்துட்டேன் சார்.” என்றவனை முகத்திலேயே ஓங்கி ஒன்று கொடுத்தான்.

“அப்போ இது யாருடா?” என்று வீடியோவைக் காட்ட, அதில் சாட்சாத் விக்னேஷ் தான். அந்த பையனின் காதில் ஹெட் போனை வைத்து எதையோ கேட்க வைத்து விட்டு, அவன் விழித்ததும் வெளியில் சென்று விட, அதன் பிறகே அவன் வித்தியாசமாக நடந்து கொண்டான்.

—-

தன்னைக் கட்டிக்கொண்டு தேம்பியவளின் முதுகை நீவி விட்டு ஆசுவாசப்படுத்திய ஸ்வரூப் அவ்தேஷ், “விஷாம்மா… ப்ளீஸ். கண்ட்ரோல் யுவர் செல்ப். ஏற்கனவே ரொம்ப டயர்டா இருக்க. கொஞ்சம் ரெஸ்ட் எடு. ம்ம்ம். நான் வந்துடுறேன்.” என அவளை படுக்கையில் கிடத்தி விட்டு நகரப்போக, அவளோ அவனது கையைப் பற்றிக்கொண்டு, “பயமா இருக்கு ஸ்வரூ” என்றாள் கலக்கத்துடன்.

“நான் இருக்கேன்லடி என்ன பயம்… ம்ம்?” என அவளருகில் சாய்ந்து கூந்தலை கோதி விட, “எனக்கு எனக்கு… இந்த இடம் புல்லா மனுஷனோட பாடி பார்ட்ஸ் இருக்குற மாதிரி இருக்கு. ஒரு மாதிரி ஹாலுசினேஷனா இருக்கு டைனோசர். நானும் நானும்… நாய் மாதிரி அவனுக்கு அடிமையாகி எல்லாரையும் ஹர்ட் பண்ணிடுவேனா?” எனப் பரிதாபமாகக் கேட்டவளைக் கண்டு நெஞ்சம் வலித்தது.

“இல்லடி. நான் அப்படி எல்லாம் எதுவும் ஆக விட மாட்டேன்.” என அவளைத் தனக்குள் அடக்கிக்கொண்டவன், அவளை இறுக்கிக் கொள்ள, அவளும் வாகாக அவன் அணைப்பில் அடங்கினாள்.

“அங்க அங்க… ரொம்ப கொடூரமா இருந்து டைனோசர். ஒரு ரூம் முழுக்க, கெட்ட வாடை…” என்று அங்கு நேர்ந்த அனுபவத்தையும் பயத்தையும் வார்த்தைகளில் கொணர்ந்தவள், “பயமா இருந்துச்சு டைனோசர். அப்போ எல்லாம் உன் குரலும் நீ பக்கத்துல இருக்கன்ற என் கற்பனையும் இல்லன்னா, இந்நேரம் அங்கேயே செத்துருப்பேன். உன் குரல் தான் என்னை சுயநினைவுக்கு கொண்டு வந்துச்சு. ஆனா, ஒரு கட்டத்துல உன் நினைப்பு கூட என்னை விட்டுப் போய்டுமோன்ற தவிப்பு தான் அதிகமா இருந்துச்சு. அது இல்லன்னா, எந்த அடிப்படையில நான் வாழுவேன்னே எனக்கு தெரியல ஸ்வரூ.” என்றவளது ஒவ்வொரு வார்த்தைகளிலும் துடித்தவன், அந்நிலையிலும் தன்னையே துணையாக எண்ணி இருந்ததில் விழியோரம் நீர் துளிர்த்தது.

“இவ்ளோ காதலையும் வச்சுக்கிட்டு தான், என்னமோ பிடிக்காதவ மாதிரி பிஹேவ் பண்ணுனியாடி.” என்றான் சீண்டலாக.

அத்தனை நேரமும் நேர்ந்த அதிர்வில் துவண்டிருந்தவள், அவனது கூற்றில் இதழோரம் மென்னகை சிந்தினாள்.

“இப்பவும் இது ரியாலிட்டில சரியா வராதுன்னு தான் சொல்றேன். எண்ணத்துக்கு எல்லை இல்ல டைனோசர். ஆனா, நிஜ வாழ்க்கை?” என நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அது கனிந்திருந்தது.

“அன்புக்கும் எல்லை கிடையாதுடி. எந்த தடையையும் உடைக்கிற சக்தி அதுக்கு அதிகமா இருக்கு. என் மேல உனக்கு இருக்குற அன்பையும் நம்பிக்கையையும் கற்பனைல கொண்டு வந்து தான, அவ்ளோ பெரிய டேஞ்சர்ல இருந்தே இந்த அளவு மனதைரியத்தோட தப்பி இருக்க. அதுவே நிஜத்துல இருந்தா, கண்ணுக்கு தெரியிற தடை எல்லாம் ஒண்ணுமே இல்லடி.” என்றான் மிருதுவாக.

அவனது கரம் பெண்ணவளின் முழங்கை முதல் உள்ளங்கை வரை வருடி விட்டது. அந்த வருடலின் குளுமையைப் போல ஆணவனின் காதலும் மனதினை மெல்லிய சாரலாய் தீண்டிச் சென்றது.

மரத்திருந்த இதயம் தான்! எவ்வித மென்மை உணர்வையும் ஏற்காத பாறையான உள்ளம் தான். ஆனால் அது இன்று ஆடவனின் நேச அருவியில் நனைந்து கரைந்தது.

அவளது கலங்கிய முகத்தை நிமிர்த்திய ஸ்வரூப் அவ்தேஷ், பாவையின் நெற்றியில் இதழ் பதித்து, “உன் நம்பிக்கையை நான் சாகுற வரை காப்பாத்துவேன். என்னைக்கு உன் நம்பிக்கையை உடைக்கிறேனோ அன்னைக்கு நான் செத்து இருப்பேன். இட்ஸ் அ ப்ராமிஸ்.” என்றவனின் பேச்சில் திகைத்து எழுந்தாள்.

“என்னடா பேசுற?” என்று அதட்டியவள், முகம் வாடி, “நான் மறுபடியும் திருடுனா… என் கை சும்மா இருக்காது டைனோசர். அத  மட்டும் என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல.” என்றாள் பாவமாக.

“உன்னை யாரு கண்ட்ரோல் பண்ண சொன்னா. நீ திருடி என்கிட்ட குடுத்துடு. நான் திரும்ப அதை சம்பந்தப்பட்ட ஆள்கிட்ட குடுத்துடுறேன்.” என  அவளின் நெற்றியில் முட்ட, பெண்ணவளின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது.

அதனை ரசித்துப் பார்த்தவன், செவ்விதழ்களுக்கு அழுத்த முத்தமொன்றை கொடுக்க, உத்ஷவியின் மேனி சிவந்து போனது.

அவனது மூச்சின் வெப்பம், அவளை திணற வைக்க, “என்னை மெஸ்மரைஸ் பண்ணாத டைனோசர்” என்று கருவிழிகளை உருட்டி மிரட்ட எத்தனித்தவளுக்கு, புதிதாய் ஒரு வெட்கம் ஆட்கொள்ள, அது கொஞ்சலாக வெளிவந்தது.

ஸ்வரூப்பின் கண்கள் குறும்பில் சுருங்கிட, தன்னவளை தூக்கி மடியில் வைத்து அரவணைத்துக் கொண்டவன், ‘நான் லிப் ரீடிங் பண்ணல. உன் லிப்ஸ தான், ரசிச்சுட்டு இருந்தேன்.” என்றான் கிசுகிசுப்புடன்.

அவளோ புரியாமல் “என்ன சொல்ற டைனோசர்?” என அவனது நெஞ்சில் உரிமையாய் சாய்ந்தபடி கேட்க,

“அன்னைக்கு ஒரு நாள், உன் லிப்சை பாக்குறேன்னு நீ சண்டை போட்டப்ப. லிப் ரீடிங் பண்ணுனேன்னு சொன்னேன்ல. அது பொய்டி” என்றான் சிறிதாய் வெட்கம் கலந்து.

சாதாரணமாகவே அவனது பாவனைகளை எல்லாம் படம் பிடித்து சைட் அடிப்பவளுக்கு, இப்போது சொல்லவும் வேண்டுமா?

“அடப்பாவி…!” என வாயில் கை வைத்தவள், “என்னமோ நான் சைட் அடிக்கக் கூட ஒர்த் இல்லன்னு சொன்ன…” என்று உதட்டைச் சுளித்தாள்.

சுளித்த இதழ்களை இரு விரல்களுக்கு இடையில் பிடித்துக் கொண்டவன், “அது எனக்கு நானே சொல்லிக்கிட்டதுடி. அப்படியாவது உன்னை சைட் அடிக்காம இருப்பேன்னு தான். பிகாஸ், நீ வீட்டுக்கு திருட வந்தப்பவே உன் அசட்டுத் தைரியத்துல நான் விழுந்துட்டேன்.” என்றவனின் இதழ்கள் இரசனை புன்னகை பூத்தது.

“இன்னும் என்ன என்ன ரகசியத்தை எல்லாம் மறைச்சு வச்சு, திருட்டுத்தனம் பண்ணுனன்னு இப்பவே சொல்லடு டைனோசர்!” எழுந்த நாணத்தையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு உத்ஷவி கேட்க, அவள் மூக்கோடு மூக்கை உரசியவன், “நிறைய இரகசியம் இருக்கே!  சொல்லட்டா இல்ல செயல்ல காட்டட்டா.” என்றவனின் குரலில் குறும்பு கூத்தாடியது.

“அச்சோ போடா. நீ ஒன்னும் சொல்ல வேணாம்.” என வெட்கம் தாளாமல் எழுந்து விட்டவள், “சார்… இப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கிறதா உத்தேசமா? அந்த சைக்கோவை கண்டுபிடிக்க வேணாம். உனக்கு கொஞ்சம் கூட டீ டிகாஷனே இல்லடா.” என்றாள் குறுகுறுப்பை மறைத்தபடி.

“அவனைக் கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டமான விஷயமா? இப்ப பிரச்சனையே அவன் எங்க இருக்கான், உன்னை எக்ஸ்சாக்ட்டா எங்க வச்சிருந்தான்றது தான்.” என்றதில், உத்ஷவி திகைத்தாள்.

“இதுவும் கெஸ்ஸா இல்ல உண்மையாவே கண்டுபிடிச்சுட்டியா டைனோசர்?” என வியப்புடன் கேட்க, “நோ. கன்பார்மா தெரியும்.” என்றதில், “யாரு?” என்று கேட்கும் போதே, ஜோஷித்திடம் இருந்து போன் வந்ததில், “பிளாக் ஷீப் யாருன்னு தெரிஞ்சுடுச்சு… வா!” என்று உத்ஷவியை கையோடு அழைத்துச் சென்றான்.

உத்ஷவி கழுத்தில் உறுத்திய மஞ்சள் கயிறை சிலிர்த்து பார்த்து, அதனை ஆடைக்குள் மறைத்துக் கொண்டாள்.

அங்கு, விக்னேஷ் முகமெல்லாம் வீங்கி கட்டிப்போடப்பட்டிருக்க, உத்ஷவி பதறி, “திரும்பவும் ஏன் இவனை அடிச்சு வச்சிருக்கீங்க” என்று ஆடவர்களைப் பார்த்தாள்.

“எல்லாத்துக்கும் இவனும் ஒரு காரணம் ஷவி” என ஜோஷித் கூறியதில், “எல்லாத்துக்கும்ன்னா?” எனப் புரியாமல் கேட்டாள்.

“எல்லாத்துக்கும்ன்னா, எல்லாத்துக்கும். உனக்கு திருட்டுப் பட்டம் கட்டி ஜுவனைல்க்கு அனுப்புனதுல இருந்து…” என்று ஸ்வரூப் அழுத்திக் கூற, உத்ஷவி அதிர்ந்தாள்.

விஹானாவும் அக்ஷிதாவுமே குழம்பிட, “என்னப்பா சொல்றீங்க? இவளோட அக்கா தான, வீட்டுக்கு வர விடாம செஞ்சு, துரத்துனது. இவரு இவளை தேட தான செஞ்சுருக்காரு” என்றிட, அக்ஷிதாவும், “ஆமா, பொண்டாட்டியும் புள்ளையும் வேற செத்துப் போயிருக்காங்க” என்றாள் பாவமாக.

சஜித், “ஒரு மண்ணும் இல்ல அக்ஷி. இவன் எல்லாமே பிளான் பண்ணி பண்ணிருக்கான். உன் வாயால உண்மையை சொல்றியா? இல்ல நாங்க சொல்ல வைக்கட்டுமா?” என்று அவனை சுளீரென தலையில் அடிக்க, விக்னேஷிற்கு மாட்டிக்கொண்டதன் காரணமாக கதிகலங்கியது.

ஆனாலும் எப்படியும் தப்பி விடுவோம். அவன் தன்னை கை விடமாட்டான் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருந்ததில், “டேய்… எல்லாரும் அவன்கிட்ட சிக்கி சின்னாபின்னமாகத் தான் போறீங்க.” என்று ஆங்காரத்துடன் கத்தினான்.

“அதுக்கு முன்னாடி நீ சின்னா பின்னமாகப்போற நாயே!” என ஜோஷித் அவன் தலை முடியைப் பிடித்து ஆட்ட, ஜெயராமன் ஒன்றும் விளங்காமல் நின்றிருந்தார்.

ஸ்வரூப் அவ்தேஷ் துப்பாக்கியை எடுத்து பேண்டில் தேய்த்தபடி அவனருகில் வர, பயம் நெஞ்சைக் கவ்வியதில்,  “என்னை சுட்டுட்டு நீங்கல்லாம் தப்பிக்க முடியுமா?” என எகிறிட, அவனது ஒரு விரலை சுட்டுத் துண்டாக்கினான்.

வலியில் அவன் அலறியதில், உத்ஷவிக்கு கடத்தப்பட்ட இடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளும் அந்த ஆடியோவில் எதிரொலிப்பும் மூளையை ஆக்கிரமிக்க, ஒரு மாதிரி தள்ளாடினாள்.

முதலும்.முடிவும் நீ

மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
89
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments