Loading

அத்தியாயம் 64

உத்ஷவி காணாமல் போய் முழுதாய் ஒரு நாள் சென்றிருந்தது. விஹானா அழுது புலம்பினாள்.

“வெளில வரைக்குமாவது அவள் கூட போயிருக்கணும். இப்ப எங்கப் போனான்னு தெரியல. அந்த சைக்கோவே கடத்தி இருந்தா…” எனத் தேம்பிட,

அக்ஷிதாவும் அரற்றியபடி, “ஆனா, அவன் பசங்களை தானடி கடத்துவான். நீ வேணா பாரு. அவளே எங்கேயாச்சு போயிட்டு திரும்பி வந்துடுவா.” என்றாள் தனக்கு தானே நம்பிக்கை சொல்லியவாறு.

ஜோஷித்தும் சஜித்தும் ஒன்றுமே புரியாத நிலையில் இருந்தனர்.

ஸ்வரூப்பின் நிலை வேறு வெகு மோசமாக இருந்ததில், அவனைப் பார்ப்பதா? மனம் கவர்ந்தவளை சமன் செய்வதா? காணாமல் போனவளைத் தேடுவதா? பல விதக் குழப்பத்தின் மத்தியில், ஜோஷித் “அக்ஷி சொன்ன மாதிரி அவள் எங்கயாவது போயிட்டு வந்துடுவா விஹா.” எனப் பலவீனத்துடன் ஆறுதலுரைக்க,

“எனக்கு நம்பிக்கை இல்ல. ஏதோ நடக்கப் போகுதுன்னு மனசு உறுத்திக்கிட்டே இருக்கு ஜோஷ். ஏதாச்சு செய்ங்க ப்ளீஸ்.” என்றாள் கண்ணீருடன்.

சஜித்தும், “அவள் போன் கால்ஸ் டிராக் பண்ண சொல்லிருக்கோம். எந்த நம்பர்ல இருந்து கடைசியா கால் வந்துருக்குன்னு செக் பண்ணிட்டு இருக்காங்க. வாசல்ல கேப்ல ஏறி தான் அவள் போயிருக்கா. ஆனா, கேப்ல மஞ்சள் கலர் நம்பர் போர்ட்ல நம்பரரே இல்ல. இங்க இருந்து எங்க எல்லாம் போயிருக்க முடியும்ன்ற அஸ்ஸம்ப்ஷன்ல எல்லா ரோட்ல இருக்குற சிசிடிவி புட்ஏஜ், டோல்ன்னு ஒன்னு விடாம போலீஸ் பார்த்துட்டு இருக்காங்க. இங்க அவளுக்கு தெரிஞ்சவங்கன்னு கூட யாரும் இல்ல. எங்கன்னு போய் விசாரிக்கிறதுப்பா. அவள் கால் ரெக்கார்டிங்ஸ் வரட்டும் அதை வச்சு அடுத்து மூவ் பண்ணலாம்.” என வருத்தத்துடன் கூறினான்.

விஹானாவோ, “அதுக்குள்ளே அந்த சைக்கோ அவளை ஏதாச்சு பண்ணிட்டா? நினைக்கவே பயமா இருக்கு சஜி.” எனக் குமுறிட,

ஸ்வரூப்பின் முகத்தில் தவிப்பின் சாயல் அதிகரித்தது.

அதனைக் கண்ட ஜோஷித், “அவனே ஆள் சரி இல்லாம இருக்கான். நீ வேற ஏன் விஹா இப்படி பேசிக் கூட கொஞ்சம் பயமுறுத்துற. இங்க பாரு ஒன்னும் நடக்காது. அவள் சேஃப்பா தான் இருப்பா. நம்ம பாசிட்டிவ்வாவே திங்க் பண்ணலாம்.” என்றவனுக்கும் உள்ளுக்குள் நடுக்கமாகத் தான் இருந்தது.

ஸ்வரூப் அவ்தேஷ்  மொத்தமாக கதிகலங்கிப் போயிருந்தான்.

பல மாதங்களாக கடத்தப்பட்டிருந்த ஆட்களையே இப்போது தானே கண்டறிந்து, அதன் பின் இருக்கும் அதிர்ச்சிகளை எல்லாம் ஒன்றொன்றாக அறிகிறார்கள். இனி, அவளை எங்கு சென்று தேடுவது? அவளையும் மெஸ்மரைஸ் என்ற பெயரில் துன்புறுத்தி விடுவார்களோ! அதனை அவளால் தாங்க இயலாதே! தான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ? என உள்ளுக்குள்ளேயே மருகி மடிந்து கருகிப் போனான்.

அவ்வப்பொழுது, கலங்கி நின்ற கண்கள் பார்வையை மந்தமாக்கியது. நாற்காலியில் அமர்ந்தபடியே மடங்கி முகத்தை அவனது மடியில் புதைத்துக் கொண்டு,

‘ஏதாவது ஒரு க்ளூ! ஒரு சின்ன க்ளூ! சின்னதா இருந்தா கூட போதும், முருகா… ப்ளீஸ் ஒரே ஒரு க்ளூ. ஒண்ணே ஒன்னு. ஐ நீட் ஹெர். என்னால அவளை இழக்க முடியாது. ப்ளீஸ்ஸ்ஸ். முருகா… முருகா… முருகா…’ என அவனது இதழ்கள் நடுங்கி முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. பெரிய பெரிய மூச்சுக்கள் வாங்கியதன் அடையாளமாக, அவனது முதுகு ஏறி ஏறி இறங்கிட, இரும்பு தேகம் தளர்ந்து தொய்ந்தது.

காதலின் வலி. அக்காதலியை கண் முன்னே இழந்த வலி! எத்தனைக் கொடூரம் நிறைந்தது என்பதை உணர்வுப்பூர்வமாக அனுபவித்தான்.

சஜித்தும் ஜோஷித்தும் அவனை எழ வைக்க முயற்சி செய்து, “டேய் ப்ளீஸ்டா. அவளைக் கண்டுபிடிச்சுடலாம். நீ இப்படி இருக்குறதை பார்க்க முடியல.” என்று இருவரும் கெஞ்சினாலும் அவனிடம் மாற்றம் இல்லை.

அந்நேரம், ஸ்வரூப்பிற்கு போன் வந்ததில், அவசரமாக அதனை எடுத்துப் பேசியவனின் புருவ மத்தியில் முடிச்சு எழுந்தது.

நெற்றிக்கண் இருந்திருந்தால், அவ்விடத்தை ஆத்திரத்தால் எரித்திருப்பான்.

“என்ன ஆச்சுடா யார் போன்ல” ஜோஷித் குழப்பமாகக் கேட்க, அப்பொழுது அவனுக்கும் உத்ஷவியின் கால் ஹிஸ்டரி பத்திய தகவல் வந்ததில்,  “பாஸ்டர்ட்.” என பல்லைக்கடித்தான்.

அக்ஷிதா புரியாமல் “அவள் எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா?” எனக் கேட்க, “கூடிய சீக்கிரம் தெரியும்” என்ற ஸ்வரூப் சஜித்தைப் பார்க்க, அவன் அடுத்த அரை மணி நேரத்தில் ஜெட்டை ஏற்பாடு செய்தான்.

“இப்ப எங்க போறோம் நம்ம?” ஜெட்டில் ஏறியபடி, விஹானா கேட்க, சஜித் விவரம் கூறியதும், இரு பெண்களின் விழிகளும் தெறித்து விடும் அளவு விரிந்தது.

ஐவரும் அவசரமாக சென்றது, ஸ்வரூப் அவ்தேஷின் வீட்டிற்கு தான்.

அங்கு பெரியவர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து, மகன்களின் முடிவை ஆலோசித்துக் கொண்டிருக்க, யசோதா “இங்க பாருங்கண்ணா, என் பொண்ணு தப்பு செஞ்சதாவே இருக்கட்டும். ஆனா, அதுக்காக நம்ம குடும்ப நடைமுறையை மாத்த முடியாது. கண்ட கண்டப் பொண்ணுங்களை எல்லாம் உறவாட விட்டா, குடும்பத்தோட பாரம்பரியம் என்ன ஆகுறது?” என்று மறுக்க,
சாணக்கியர் யோசனையில் ஆழ்ந்தார்.

சித்தாராவும், “இதுவரை நம்மகிட்ட எதையாவது ஆசைப்பட்டு கேட்டு இருக்காங்களா? சின்ன வயசுல இருந்து நெறி தவறாம வளர்ந்த பசங்க தான். அதையும் மீறி, அவங்க ஆசைப்பட்டாங்கன்னா, அந்த பொண்ணுங்க அவ்ளோ வொர்த்தா தான் இருக்க முடியும்ங்க. இது என்னோட அபிப்ராயம் தான். முடிவு உங்களோடது.” என்றிட,
பூமிநாதன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

“அட என்னம்மா பேசுற நீ. இத எல்லாம் ஒத்துக்க முடியாது” என்றார் தீர்மானமாக.

உமையாள் தான், “ம்ம்க்கும், இவரு மகன் மட்டும் ஊரை அழிக்க கங்கணம் கட்டிட்டு திரியுவானம். அதைப் பத்தி பேச்சைக் காணோம். வந்துட்டாரு நாட்டாமை பண்ண.” என்று கனகரூபிணியிடம் புலம்பித் தள்ள, “உஷ், சும்மா இரு உமா. அவரு காதுல விழுந்தா அவருக்கு பதிலா யசோதா தான் ஆட ஆரம்பிச்சுடுவா. அப்பறம் நம்ம புருஷன்மார்கள் உருகிப் போய்டுவாங்க தங்கச்சிகிட்ட.” என்று அடக்கினார்.

நந்தகோபாலும் பாரிராமும் தமையனை தான் பார்த்தனர்.

அவரோ, “உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்லிடுங்க” என்று கேட்க, தம்பிகள் இருவரும் தயங்கினர்.

“எங்களுக்கு மனசு ஒப்பல தான் அண்ணா. ஆனா இந்த பசங்க வீம்பா இருக்கறதை பார்த்தா மனசு விட்டுப் போச்சு. நீங்களே எந்த முடிவுன்னாலும் எடுங்க.” என்று பொறுப்பை அவரிடம் விட்டு விட,

“நான் என்ன முடிவு எடுத்தாலும் உங்களுக்கு சரி தான? எல்லாரும் ஒரு மனசா ஒத்துப்பீங்க தான” என ஒரு முறை கேட்டுக்கொண்டார்.

யசோதாவும் தமையன் எப்படியும் தங்களுக்கு ஆதரவாகத் தான் முடிவெடுப்பார் என்ற தைரியத்தில், “நீங்க சொன்னாலும் சரிண்ணா” என்றிட,

“அப்போ சரிம்மா, பசங்க ஆசைப்பட்ட பொண்ணுங்களையே கல்யாணம் பண்ணி வச்சுடலாம்.” என்று ஒரே முடிவாக கூறி விட, சித்தாராவின் வேதனை தோய்ந்த முகம் சட்டென பிரகாசித்தது.

மனையாளின் முகத்தை ஆராய்ந்தபடியே, கண்ணை மூடித் திறந்தவரை அன்பு பொங்க பார்த்திருந்தார்.

சாணிக்கிய அவ்தேஷ், இளவயதாய் இருக்கும் போது, அந்நியப்பெண்ணின் மீது காதல் கொண்டார். ஆனால், தகப்பனின் சொல்படி, வேறு வழியற்று அத்தை மகளான சித்தாராவைத் திருமணம் செய்து கொள்ள, அவருடன் காதலுடன் இணைய மனம் அனுமதி கொடுக்கவில்லை.

“என்னை மன்னிச்சுடு சித்துமா.” என்றவர் தான் வேறொரு பெண்ணை விரும்பியதாகக் கூற, அதில் அதிர்ந்தாலும், “உங்க விருப்பம் தான் என் விருப்பம் மாமா. பரவாயில்ல, இந்த கல்யாணத்தை முறிச்சுட்டு நீங்க விரும்புன பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் எல்லாரையும் சமாளிச்சுக்குறேன்” என்று தனக்காக பேசிய பெண்ணை வியப்புடன் ஏறிட்டார்.

“எங்க கல்யாணம் பண்ண, நான் தான் இன்னும் காதலையே சொல்லலையே. நம்ம வீட்ல ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சு, மனசுலயே வச்சு இருந்தேன். அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வச்சுட்டு காதல சொல்லலாம்ன்னு நினைச்சேன் சித்துமா” என்றவரை பே வெனப் பார்த்தார்.

“சொல்லாத காதலுக்கா இவ்ளோ பீல் பண்றீங்க?” அவர் ஆச்சரியத்துடன் கேட்க,

“சொல்லல தான். ஆனா என் மனசுல வேறொருத்திக்கு இடம் குடுத்தது தப்பு தான. இப்பவும் என்னால அவளை மறக்க முடியல. ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. சாரி சித்துமா. இது உன்னையும் சேர்த்து கஷ்டப்படுத்துது. எனக்கு கொஞ்சம் டைம் குடுக்குறியா. நான்… நான் மாறிடுவேன். ப்ளீஸ்.” எனக் கெஞ்சலாகக் கேட்க, அவள் பதறினாள்.

“என்ன மாமா நீங்க போய் என்கிட்ட கெஞ்சிக்கிட்டு… நீங்க சொன்னா நான் செய்யப்போறேன்.” என அதற்கு ஒப்புக்கொண்டவரின் அளவில்லா அன்பில் அவர் மனதில் காதல் வரவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.

ஆனாலும், அவ்வேதனை அவரை அவ்வப்பொழுது குடையத் தான் செய்யும். இப்போது மகனது கண்களில் அதே வேதனை. அது அவரை சுட்டதோ என்னவோ, தன் மகன்களும் அத்தகைய கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டாம் என மனது அடித்துக்கொண்டது.

தனக்கு வந்த மனைவி போல அவர்களுக்கும் அமைந்தால் பரவாயில்லை. தனது தங்கை மகள்கள் அந்த அளவு எல்லாம் பொறுமையின் சிகரம் கிடையாது என்று அவருக்கும் தெரியும்.

யசோதாவும் பூமிநாதனும் இம்முடிவில் திகைத்தனர்.

“என்ன மச்சான் நீங்க… உங்களுக்கு புத்திக் கெட்டு போச்சா?” என எகிறிட, “உங்களுக்கு புத்தி பொங்கி வழியுதோ!” எனக் கர்ஜித்த ஸ்வரூப் அவ்தேஷ் நெருப்பின் மறுஉருவமாக அவரை எரித்துக்கொண்டிருந்தான்.

அவரது சட்டையைப் பற்றியவன், “எங்க அவ?” என மிரட்டலாகக் கேட்க, பாரி அவனைத் தடுத்தார்.

பூமிநாதனோ, “யாரு” எனத் தெரியாதது போல வினவ,

“ம்ம்… உன் சொந்த பொண்ணு. நீ திருட்டுப் பட்டம் குடுத்தியே அந்த பொண்ணு.” ஸ்வரூப் எகத்தாளத்துடன் கூற, பூமிநாதனுக்கு வியர்வைத்துளிகள் அரும்பியது. இது இவனுக்கு எப்படி தெரிந்தது என்ற அதிர்ச்சி அவரை சிலையாக்கியது.

ஜோஷித், “ஷவி உன் பொண்ணு தானய்யா. அவளோட அம்மாவை நீ தான ஏமாத்தி இருக்க.” என்று அவரை தாக்க வர,

“தேவை இலலாம என்மேல பழி போடாதீங்க. இதெல்லாம் அந்த திருடி சொன்னாளா? அவள் சொன்னதை நம்பிட்டு இருக்கீங்க” என்று அவர் கூறியதில்,

சஜித், “ஹலோ மாம்ஸ்… பல வருஷத்துக்கு முன்னாடி நீங்க அவள் ஊருக்கு போனது, அங்க ஃப்ரீ சர்விசா ஸ்கூல்ல பசங்களுக்கு பாடம் எடுத்தது. அங்க சாவியோட அம்மாவைப் பார்த்து காதலிச்சது, எல்லா தகவலும் எங்க பிங்கர் டிப்ல இருக்கு.” என்றான் நக்கலாக.

யசோதாவிற்கு நெஞ்சு வலியே வரும் போல இருந்தது.

“என்னங்க இது?” எனத் தவிப்புடன் கேட்க, அவரோ அப்போதும் “இவனுங்க உளறுறங்கு யசோ. எனக்கு அவள் யாருன்னே தெரியாது” என்று மீண்டும் மறுக்க, ஸ்வரூப் அவரை அறைந்தே விட்டான்.

அத்தியாயம் 65

“வயசுக்குக் கூட மரியாதை குடுக்க தோணல எனக்கு. உன்னை அடிச்சு பிச்சு பீஸ் பீசா ஆக்குறதுக்குள்ள உண்மையை சொல்லல. இங்க என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.” என்றவனின் கோப மூச்சுக்கள் அவ்விடத்தையே நிரப்பியது.

“விஷா அவளை பத்தி சொன்னதுமே, அவளோட அப்பனை கண்டுபிடிச்சு நாலு மிதி மிதிக்கணும்ன்னு டிடெக்டிவ் ஏஜென்சி வச்சு விசாரிக்க சொல்லிருந்தேன். உருப்படியா ஒரு தகவலும் வரல. ஆனா, இங்க வந்து அவள் உன்னைப் பார்த்ததும் குடுத்த எக்ஸ்பிரஷனும் நீ அவளை பார்த்து ஷாக் ஆனதும் என் கண்ணுல அப்படியே விழுந்துருச்சு. அப்போதுல இருந்து நீ அவளை முறைச்சு பார்க்குறதும் அவள் உன்னைப் பார்க்காம அவாய்ட் பண்றதும் எனக்கு உறுத்துச்சு. அப்போ தான், உன்னை பத்தி உன்னோட ஆக்டிவிட்டிஸ் பத்தி டிடெக்டிவ் ஏஜென்சில விசாரிக்க சொன்னேன். அவங்க அழகா எல்லா தகவலும் எடுத்துட்டு வந்துட்டாங்க.

ஏன்யா இப்படி செஞ்ச?” என மீண்டும் அவர் சட்டையைப் பற்றினான்.

நந்தகோபாலோ, “ஸ்வரூ அவரை விடு. முதல்ல இதெல்லாம் உண்மையா இல்லையான்னு தெரியாம… ” என முடிக்கும் முன், “என்ன சித்தப்பா பேசுறீங்க. அது தெரியாமயா இங்க வந்து பைத்தியக்காரன் மாதிரி கத்திட்டு இருக்கேன். இந்த ஆளுனால, இங்க மகாராணியா வளர வேண்டிய ஜுவனைல்ல தேவையே இல்லாத திருட்டு பழியோட வளர்ந்து இருக்கா.” என்று மிதமிஞ்சிய சினத்துடன் உறுமினான்.

“என்ன ஓவரா பேசுற. அவளை இங்க வந்து மஹாராணியா வேற வாழ வச்சுருப்பேனா. பொண்ணு பிறந்தா அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ற கண்டிஷனோட தான் அவள் அம்மா கூட பழகுனேன். அவளும் எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு தெரிஞ்சு தான் என்கூட சுத்துனா.

எனக்கு அடுத்து அடுத்து பொண்ணுங்களா போய்ட்டாங்க. இருந்த ஒரு பையனும் விவரம் இல்லாம வந்துட்டான். அதான் உங்களுக்கு போட்டியா பையனை பெத்துக்கணும்ற ஆசைல அவளை காதலிச்சேன். பையன் பிறந்தா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அந்த சனியன் பிறந்து தொலைஞ்சுருச்சு. அவள் அம்மாக்காரியும் அதுக்கு அப்பறம் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லல. நானும் கிளம்பி வந்துட்டேன். அவ்ளோ தான்” என்று வெகு சாதாரணமாய் பேசிட, அவ்விடமே மயான அமைதியாய் காட்சியளித்தது.

கணவனின் செயலில் அருவருத்துப் போன யசோதா, “அடப்பாவி… உனக்கு மனசாட்சியே இல்லையா. குத்து கல்லு மாதிரி பொண்டாட்டியும், முத்தா நாலு புள்ளைங்களையும் விட்டுட்டு… அவளுக்கும் உண்மையா இல்லாம எனக்கு உண்மையா இல்லாம… ச்சே…” என முகத்தை சுளித்தார்.

இத்தனை வருட தாம்பத்தியம் அவருக்கு குமட்டலைக் கொடுத்தது.

“அதுக்காக உன்னை கொடுமை படுத்தவா செஞ்சேன். நீ எதுக்குடி இப்ப எகுறுற?” என மனைவியை பேசிட, சாணக்கியர் கோபத்துடன் அமர்ந்திருந்தார்.

“ஸ்வரூ… இந்த ஆளு என் கண்ணு முன்னாடியே வரக்கூடாது. பார்க்க பார்க்க ஆத்தரமா வருது. இங்கயே இப்பவே சுட்டுத் தள்ளிடு. யசோம்மா இவனை… இந்த மாதிரி பேயெல்லாம் உனக்கு புருஷனா இருக்குறதுக்கு சாகுறது மேல்மா” என்றார் தங்கையை பாசத்துடன் வருடி.

“அண்ணா…” என அவர் நெஞ்சில் சாய்ந்து யசோதா அழுது தீர்க்க, ஸ்வரூப் “அப்படி எல்லாம் சாகடிச்சுட முடியாதுப்பா. இந்த ஆளு, விஷாவை கடத்தி வச்சிருக்கான். எங்கயா அவ?” என தீப்பார்வையுடன் வினவ, அவருக்கோ சுட்டு விடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது. மனைவியும் தனக்கு எதிராக அல்லவா இருக்கிறாள்.

எச்சிலை விழுங்கியவர், அமைதியாக நிற்க, ஜோஷித் “அவளுக்கு கடைசியா நீ தான் கால் பண்ணி வெளில வர சொல்லி இருக்க. அந்த பைத்தியமும் உன்னைப் பார்க்க வந்துருக்கு. அப்பறம் என்ன நடந்துச்சு.” என்று கேட்டதில், “எனக்கு தெரியாது” என்று மறுத்தார்.

மீண்டும் அவர்களின் கையால் அறை வாங்கியவர், “எனக்கு… எனக்குத் தெரியல. பத்ரியை வச்சு தான் அவளைக் கடத்த வச்சேன். கடத்தி, கழுத்தறுத்து எங்கயாவது போட சொன்னேன். அவன் அவள் இனிமே வெளில நடமாட மாட்டா. நாங்க பாத்துக்குறோம்ன்னு என்னை அவளுக்கு போன் பண்ணி வெளில வர வைக்க சொன்னான். அதுக்கு அப்பறம் என்ன ஆச்சுன்னு தெரியல…” என ரத்தம் வாய் வழியே கொட்ட கொட்ட அவர் கூறிய செய்தியில் ஸ்வரூப்பின் ஒவ்வொரு அணுவும் வலியில் சுருண்டது.

கண்ணைக் கடினப்பட்டு திறந்த உத்ஷவிக்கு தலை கிண்ணென இருந்தது. சுற்றிலும் கும்மிருட்டு. ஒரு கணம் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

மெல்ல மெல்ல நினைவுகள் மீண்டிட, அதன் பிறகே பூமிநாதன் போன் செய்ததும், அவரைப் பார்க்கும் பொருட்டு வெளியில் வந்ததும், மர்ம நபரால் தான் சுயநினைவை இழந்ததும் நினைவு வர, பதறி எழுந்தாள்.

அந்த இருட்டைப் பழகவே கண்களுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

“டேய் யாருடா என்னை கடத்திட்டு வந்தது. யாராவது இருக்கீங்களா?” எனக் கத்திட ஒரு பயனும் இல்லை.

ஏதோ ஒரு வித்தியாசமான வாடை வேறு குடலைப் பிரட்டியது.

மூச்சை அடக்கிக் கொண்டவளால், ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை. இருட்டுக்குள் எழுந்திடவும் பயமாக இருந்தது.

ஆனாலும் இப்போது வேறு வழியில்லை, இந்த நாற்றத்தினுள் இருந்தால் மூச்சடைத்து இறந்தே விடுவோம் என்று தோன்றியது.

மெல்ல மெல்ல எழுந்து சுவற்றைப் பற்றியபடி நடந்தவளுக்கு, காலடியில் ஏதேதோ தட்டுப்பட்டது.

என்ன ஏதென்று தெரியவில்லை. ஊசியாய் பயமும் நெஞ்சைத் துளைக்க, தன்னை தைரியப்படுத்திக் கொண்டவளுக்கு, இந்த இருட்டு அறையெல்லாம் புதிதல்ல. திருடவே இரவு தானே செல்வாள். அதனால், பயத்தை அவளால் சமாளிக்க முடிந்தது.

சில நொடிகளின் தேடலின் விளைவாக, கையில் ஸ்விட்ச் போர்ட் தட்டுப்பட்டது.

அதனை அழுத்தியதும், மஞ்சள் நிற ஒளி அவ்விடத்திற்கு வெளிச்சமூட்ட, ஒரு கணம் உறைந்து வெளிறி கத்தி விட்டாள்.

சுற்றிலும் மனித உடல் உறுப்புகள். கை, கால், தலை, இரத்தத்திட்டுகள், ஒடிக்கட்டப்ப விரல்கள், துண்டிக்கப்பட்ட மர்ம உறுப்புகள், வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குடல் என நினைத்துப் பார்க்க இயலாத கொடூரத்தின் உச்சமாக அந்த அறை காட்சியளிக்க,

உத்ஷவி கண்ணை மூடிக்கொண்டு ஆஆ.. ஆ என அலறினாள்.

இதயத்துடிப்பின் வேகம் தாறுமாறாக இருந்தது. முகத்தை கைகளால் மூடிக்கொண்டவளுக்கு ஏதோ பிசுபிசுவென இருக்க, கை முழுக்க இரத்தம். சுவற்றில் படிந்திருந்த குருதி அவளது கையிலும் ஒட்டி இருந்தது. அதற்கும் சேர்த்து அலறியவள், ‘ரிலாக்ஸ்டி ரிலாக்ஸ்’ என்ற ஸ்வரூப்பின் குரலை தான் மனக்கண்ணிற்குள் கொண்டு வர முயற்சித்தாள்.

அவனது நினைவும் பேச்சும் ஒன்றே அவளை இப்போது தைரியப்படுத்தும் ஒரே வழி என்றாகிப் போனது. “பயமா இருக்கு ஸ்வரூ. பயமா இருக்கு.” என மூச்சு வாங்க, அவன் அருகில் இருப்பது போலவே நடுங்கியவள், அவன் கை தனக்குள் இருப்பது போலவே கற்பனை செய்து கொண்டு, தன்னை நிதானப்படுத்தினாள்.

நர்சிங் படித்த காரணத்தினால், தான் ஒரு போஸ்ட் மார்ட்டம் அறையில் இருப்பதாக எண்ணிக்கொண்டவள், அந்த பயத்தையும் வெற்றிகரமாக சமாளித்தாள்.

நடுங்கிய கால்களுடன் அவ்வறையை விட்டு வெளியேறியவளுக்கு சுற்றிலும் சிறைச்சாலை போல இருந்தது. எங்கு செல்வது என்றே தெரியவில்லை. இது என்ன இடம் என்றும் புரியவில்லை.

எச்சிலை விழுங்கியபடி முன்னேறிப் போனவள் வேறொரு அறையில் சிக்கிக்கொள்ள, அங்கு கதவு தானாக மூடியது.

அதில் மிரண்டவள், அடுத்து என்னவென யோசிக்கும் முன், வசியப்படுத்தும் ஓலக்குரலும், ஏதேதோ சத்தங்களும் அவள் செவியை நிறைக்க, அவள் காதை இறுக்க பொத்தியும் பயனில்லை.

அதைக் கேட்க கேட்க, இதயம் தாறுமாறாய் துடித்து, இரத்த கொதிப்பு அதிகமாகி, வியர்த்து வழிந்து, நடுங்கி ஒடுங்கினாள்.

அதன் வீரியம் அவளை மயங்கச் செய்தது. எத்தனை மணி நேரங்கள் மயக்கத்தில் கிடந்தாள் என்று தெரியவில்லை. இன்னும் அந்த ஆடியோ ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.

ஒரே நல்ல விஷயம் கதவு திறந்திருந்தது. எழுந்து வெளியில் செல்ல எத்தனித்தாள். ஆனால் முடியவில்லை. கைகளும் கால்களும் முற்றிலும் செயலிழந்தது போலொரு எண்ணம். கண்களோ மேல் நோக்கி மீண்டும் சொருகியது.

‘இல்ல… மறுபடியும் மயங்கக் கூடாது. எந்திரி ஷவி. எந்திரி.’ என தன்னை தானே கூறிக்கொள்ள, “விஷக்கிருமி…” என்ற ஸ்வரூப்பின் குரலை மீண்டும் தனக்குள் பதிய வைத்துக் கொண்டாள். ‘டைனோசர்… டைனோசர் நீ என் பக்கத்துல தான இருக்க.’ என தனக்கு தானே பேசிக்கொண்டு கண்ணை இறுக்கி மூடிக்கொணடவள், முயன்று அந்த ஆடியோவை தனக்குள் புகுற விடாமல் தவிர்த்து, எண்ணம் முழுதும் ஆடவனை மட்டும் நிரப்பினாள்.

“ஐ லவ் யூ டி திருடி! இப்ப எல்லாம் உன்னை நினைச்சு கவிதை தோணுதுன்னா பார்த்துக்கோயேன்.” என்ற ஆண்மகனின் கொஞ்சும் சிரிப்பு இந்நிலையிலும் அவளுக்கு சிறு புன்னகைக் கொடுத்தது.

‘வெறும் நினைவுகள் மொத்த உணர்வையும் ஆட்டிப்படைக்க இயலுமா? என்னை எல்லாத்தை விட வசியப்படுத்துறது உன் சிரிப்பு தான்னு, இந்த கிட்னாப்பர்க்கு தெரியாம போய்டுச்சு டைனோசர்…’ மனதினுள் அவனது பிம்பம் அவளை அணைத்துக் கொண்டது. வெளியில் செல்லும் வரை, கண்ணை திறக்கவே இல்லை அவள். கண்ணைத் திறந்தாள், நிஜம் சுடும். இனிய கனவு கலைந்து விடும்.

‘இனி, அடுத்து என்ன?’ என்ற கேள்வி அவளைக் குடைந்து பரிதவிக்க விட்டாலும், ‘என்னை இங்க இருந்து கூட்டிட்டு போய்ட ஸ்வரூ வந்துடுவான்’ என்ற நம்பிக்கை மட்டும் அதிகமாக இருந்தது. ‘ஆனா, நான் காணாம போய்ட்டேன்னு கூட இந்நேரம் தெரிஞ்சு இருக்குமான்னு தெரியலையே?’ என்னும் போதே கண்கள் பனித்தது. “அதிகப்பிரசிங்கத்தனம் செய்யாத.” அவன் படித்து படித்து கூறிய வார்த்தை.

அதனைக் கேளாமல் போனது இத்தகைய விபரீதத்தில் முடியும் என்று எண்ணவில்லை அவள்.

ஒரு வழியாக அவ்விடத்தை விட்டு, வெளியில் சென்று விட்டவள், மிகப்பெரிய நீளமான ஹாலில் சில ஆள்களை கட்டிப்போட்டிருப்பது தெரிந்தது.

மற்ற அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்திருக்க, அங்கு தலைவன் போல ஒருவன் இருந்தான். அவன் முகத்திலும் சிங்கத்தின் அமைப்பு போல மாஸ்க் அணிந்திருந்தான். கையில் ஒரு நீளமான சிவப்பு நிற லத்தி இருந்தது.

அதைக் கண்டதும் மீண்டும் அச்சம் அவளை ஆட்கொண்டது. இருந்தும், நம்ம  வாங்காத அடியா? என தயாராக இருந்தாள்.

ஆனால் அத்தலைவனோ அவளைக் கண்டு இகழ்ச்சிப் புன்னகை வீசி விட்டு, அங்கு கட்டிப் போடப்பட்டிருந்த ஆள் ஒருவனை விடுவித்தான்.

அவனது உடைகளும் களையப்பட்டன. அதில் முகம் சுளித்து அவள் மறுபுறம் திரும்பிக் கொள்ள, வேறொருவன் அவளது கழுத்தைப் பிடித்துத் தூக்கி பார்க்க வைத்தான்.

அவளுக்கோ தன் முன் நிர்வாணமாய் நின்ற ஆணைக் காண சகிக்கவில்லை. அவன் முகத்திலும் ஒரு வித பயம் தெரிந்தது.

அந்த பயத்தினூடே கையிலிருந்த லத்தியை வைத்து, தலைவன் அவனது இடுப்புப்பகுதியை ஓங்கி ஒரு அடி அடிக்க, அவன் மடங்கி கீழே அமர்ந்தான்.

வலி தாளாமல் அலறினான். ஆனால் அடியை நிறுத்தவில்லை. ஒவ்வொரு அடியும் அத்தனை அழுத்தமாய் ஈரக்குலையை பிடுங்கி எறிவதாய் இருந்தது. அந்த ஆடவன், உயிர் போக கத்தினான். அவனை அடிக்க அடிக்க, இத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த தைரியமெல்லாம் காற்றில் பறந்து போனது பெண்ணவளுக்கு.

யாரென்று அறியா மனிதனின் வலியைக் காணவே அத்தனை பயமாக இருந்தது. ‘இப்படியும் கூட பயம் காட்ட இயலுமா? அடுத்து தன்னை அடிப்பானோ…? ஒரு அடிக்கே செத்து விடுவேனே!’ என்ற நடுக்கம் அதிகமாக, அத்தலைவன் அத்துடன் நிறுத்தாமல், அடுத்த அடுத்த ஆள்களை அதே போல துன்புறுத்தினான்.

சிலர் அந்த அடியில் இறந்தே போக, அதே இடத்திலேயே இறந்தவர்களின் உடற்பகுதியைத் துண்டு துண்டாக வெட்டினர்.

உத்ஷவி உயிரை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயல, எங்கும் நகரக்கூட இயலவில்லை.

எப்போது தன்னிடம் வருவான் என்ற பயமே அவளை வெகுவாய் ஆட்டுவித்தது.

அத்தியாயம் 66

அடி வாங்கியவர்களை எல்லாம் தூக்கிக்கொண்டு வேறொரு இடத்திற்குச் செல்ல, உத்ஷவிக்கு அங்கிருந்து சென்றால் போதுமென்றிருந்தது.

ஆனால், மீண்டும் அவளை இரத்தமும் உடற் பாகங்களும் இருக்கும் இடத்தில் தான் அடைத்தனர். அவளுக்கு இக்கொடுமை தாள இயலவில்லை.

சிறிது நேரத்தில் மூச்சை இழுத்துப் பிடித்து மயங்கியும் விட்டாள்.

சில மணி நேரத்தில் மீண்டும் விழிக்க, அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது.

அந்த வாடை தாள இயலாமல் வெளியில் சென்றவள், இப்போதும் அந்த ஆடியோ ஒலிக்கும் அறையில் மாட்டிக்கொண்டு, அதன் வசியத்தில் மயங்கிப் போனாள்.

சிறிது நேரத்தில் விழித்தவள், அந்த அறைக்கதவு திறந்திருந்ததில், வலுவிழந்த கால்களுடன் வெளியில் வர, இம்முறை உடலில் பலமே இல்லை. மனதிலும் தான். இங்கு வந்து எத்தனை மணி நேரங்கள், எத்தனை நாள் ஆனது என்று தெரியவில்லை. பசியில் காது அடைத்தது. வயிறு உணவுக்குக் கெஞ்சியது. இப்போதைக்கு ஸ்வரூப்பின் பெயர் மட்டுமே அவளை தாங்கிப் பிடித்தது.

பசி மயக்கத்திலும், நேரும் அதிர்விலும் அவனது நினைவு கூட பின்னோக்கி சென்று விடுமோ என்று அஞ்சினாள்.

மறுபடியும் அதே நீள அறை. அதே லத்தியுடன் தலைவன். வேறு சில ஆள்களை அடிக்கத் தொடங்கினான்.

ஆனால் இப்பொழுது அவளுக்கு பயம் தோன்றவில்லை. கண்ணைக் கூட மூடவில்லை. அவர்களை அடிக்க அடிக்க ஏதோ ஒரு வெறி தோன்றியது. அரை மயக்கத்தில் அந்த அடிகளை மனது பிடித்ததுடன் பார்த்தது. ஒரு மனது, இது தவறு. என அறிவுறுத்தினாலும், பலவீனமான உடலும் மனதும் மிகப்பெரிய இராட்சசன் என்று அவள் உணர்ந்த தருணம்.

இப்படியே போனால், அவளுக்குக்கூட உணர்வுகள் மரத்து விடும். சில நாட்களில் இவனுக்கு அடிமையாகி விடக்கூடும்.

அங்கு அனைவருமே அப்படித்தான் இருந்தனர். நாய் போல தலைவனுக்கு சேவகம் செய்தனர். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று யோசிக்க கூட அவளுக்குத் திராணி இல்லை.

இரத்த அழுத்தம் அளவுக்கு மீறி உயர்ந்திருந்தது. இன்னும் ஒரு முறை இதே போல நிகழ்ந்தால் நிச்சயம் தானும் இப்படி மாறிவிடுவோமோ என்ற பதற்றம் எழுந்தாலும், அதனை சீர் செய்யக்கூட வலு இல்லை.

அப்போது அத்தலைவனுக்கு அலைபேசி அழைப்பு வர, அதில் பேசியவனின் உடல் மொழியே அவன் அதிகபட்ச கோபத்தில் இருக்கிறான் என்று உணர வைத்தது. “நோ நோ…” என்று கத்த, மறுபக்கம் என்ன சொல்லப்பட்டதோ, மீண்டும் அவளை ஆடியோ ஒலிக்கும் அறையிலேயே அடைத்தனர். அங்கு சென்றதும், அந்த வசியத்தில் மயங்கி விட்டவளின் காதில், “இப்ப இங்க இருந்து அவன் உன்னைக் காப்பாத்திடலாம். ஆனா, நீயே திரும்பி வருவ. துன்புறுத்துறதை என்ஜாய் பண்ணிப் பார்க்க வேணாமா?” என்ற ஒரு குரல் ஒலிக்க, அவள் மனதிலும் அது பதிந்து போனது.

இன்னும் சில குரல்கள் கேட்டது. அதில் ஒருவனது குரல் மட்டும் அவளை எழுச் சொல்லி உந்தியது.

“விஷா… என்னைப் பாருடி. நான் பேசுறது கேட்குதா. திருடி… எந்திரிடி. என்னைக் கெஞ்ச வைக்கிறது உனக்குப் பிடிக்காதுல. அப்பறம் ஏன்டி என்னைக் கெஞ்ச வைக்குற. என்னை உடைய வைக்காதடி. ப்ளீஸ் திருடி. எந்திரிச்சுப் பாரு.” மங்கலாகக் காதில் விழுந்த வார்த்தைகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவாகக் கேட்டது.

“டைனோசர்” அவள் உதடுகள் சத்தமின்றி அசைய, கிட்டத்தட்ட ஏழு மணி நேரமாக அவளை எழுப்ப அரும்பாடுபட்டு தொய்ந்து ஓய்ந்து போன ஸ்வரூப் அவ்தேஷிற்கு மீண்டும் புத்துயிர் வந்தது போல இருந்தது.

“விஷா! விஷா நான் பேசுறது கேட்குதாடி.” எனக் கேட்டு அவள் கன்னத்தை மென்மையாய் தட்டிக் கொடுக்க, ம்ம் என முனகியவள், கடினப்பட்டு கண்களைத் திறந்தாள்.

ஸ்வரூப்பின் கையணைப்பில் தான் இருந்தாள். அந்த கதகதப்பே தான் மீண்டும் தன்னவனிடம் சேர்ந்து விட்டோம் என்று உறைக்க, இன்னும் தலை கிண்ணென வலித்தது.

அது ஸ்வரூப்பின் சென்னை பங்களா தான். ஆந்திரா பார்டரில் இருக்கும் ஒரு பாழடைந்த அரண்மனையில் தான் அவள் மயங்கிக் கிடந்தாள்.

ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது. மற்ற நால்வரும் அவளைச் சுற்றி நின்று பரிதவிப்புடன் பார்த்திருக்க, உத்ஷவி சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடி மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

அவனோ நகர விடவில்லை.

“இப்ப பரவாயில்லையாடி” உடைந்த குரலில் கேட்டவனை நிமிர்ந்து பார்க்க, அவனது முகம் வாடி கருத்திருந்தது. கண்ணிற்கு கீழே கருவளையம் விழுந்திருந்தது. எத்தனை நாட்கள் தூங்காமல் இருந்தானோ?

“நான்… நான் அங்க எவ்ளோ நாள் இருந்தேன்?” எனக் கேட்டவளைக் கண்டு துக்கம் தொண்டையை அடைத்தது.

விஹானா, “நாலு நாள் இருக்கும்படி. அந்த பத்ரி எருமை, உன்னை எங்க வச்சுருக்கோம்ன்னு சொல்லவே இல்லை.” என அவள் கையைப் பிடிக்க விழைய, அவளுக்கோ இன்னும் தன்னை சுற்றிலும் மனித உடல்பாகங்கள் நிறைந்திருப்பது போல பிரம்மை.

அதில் அவளுக்கு வேகமாக மூச்ரைக்க, தன்னைத் தொட வந்த விஹானாவின் கையைத் தட்டி விட்டவள், காலைக் குறுக்கி நடுங்கியபடி அமர்ந்தாள்.

அவளது செய்கையில் அனைவரும் திகைத்திருக்க, விஹானாவிற்கு வேதனை தாளவில்லை.

“டார்ல்ஸ்!” கண்ணில் நீர் மின்ன தேம்பியபடி அழைக்க, அதனை அவள் உணரக்கூட இல்லை.

அக்ஷிதாவோ, நாய் போல மாறி ஏதாவது செய்து கொள்வாளோ என்ற அச்சம் மிளிர, “இவள்… இவள் நார்மலா தான இருக்கா? ராகேஷ், மேகனா மாதிரி…” என தவிப்புடன் கூற, ஸ்வரூப் “அப்படி எதுவும் நடக்காது” என்று தனக்கு தானே சொல்வது போல அதட்டினான்.

ஜோஷித் தன்னை நொந்து, “ஷவி… எதை பார்த்து இப்படி பயந்து போற” எனப் பரிவுடன் கேட்க, அவளோ பதில் கூறாமல், இன்னும் அதே நிலையிலேயே நடுங்கினாள்.

அவளுக்கு சிகிச்சை செய்த ஜெயராமன், “மன ரீதியா ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க ஸ்வரூப். கொஞ்சம் அவங்கள ப்ரீயா விடலாம்.” என்றதில், சஜித் “உங்க தெரபி மூலமா ஏதாச்சு செய்ங்க டாக்டர்” என்று வேதனையுடன் கூற, “என்ன மாதிரியான அட்டாக் நடந்துருக்குன்னு தெரியாம, உடனே அவங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது சஜித். இது அவங்களோட மனநிலையை சீர்குலைச்சுடும். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அங்க நடந்ததை பத்தி அவங்களே பேசட்டும்.” என்றிட, ஸ்வரூப் நடுங்கிக்கொண்டிருந்தவளின் மீதிருந்த உணர்வற்றப் பார்வையை சிறிதும் மாற்றவில்லை.

அவளுக்கு உணவைக் கொடுத்து, அவனது அணைப்பிலேயே உறங்கவும் வைத்தான். இது எதையும் அவள் தடுக்கவில்லை. அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

அவனை தன்னுடன் இருப்பதாக உருவகப்படுத்தி வைத்திருந்தவளுக்கு, நிஜமாகவே அவன் தன்னுடன் இருக்கையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

அவன் கையை மட்டுமே பிடித்தபடி இருந்தாள். ஆனாலும் பேசும் நிலையில் இல்லை. இன்னும் அரை மயக்கத்தில் இருந்தவளை தொந்தரவு செய்யாமல், தலையைக் கோதி கொடுத்த ஸ்வரூப், மெல்ல அவளை தலையணையில் படுக்க வைத்து விட்டு இறுகிய நிலையில் வெளியில் வந்தான்.

இத்தனை நடுக்கத்திலும், தன்னை மட்டும் அவள் விலக்காதது மனதோரம் சிறு திருப்தியைக் கொடுத்தது.

ஆனால், அது போதவில்லை. சிறகொடிந்து அவளை ஒடுங்க வைத்தவனின் மீது சினம் மழையாய் பொழிந்தது.

தப்பித்து விட்டானே! தன்னிடம் சிக்காமல் போக்குக் காட்டும் அந்த சைக்கோ மனிதன் வசமாய் மாட்டிக்கொள்ளும் நாள் வெகு தூரம் இல்லை.

அவளைக் கண்டுபிடிப்பதற்கான ஏற்பாடுகள், உடனுக்குடன் நடந்திருந்தது. அப்படியும் அவளை மீட்க நான்கு நாட்கள் ஆகி விட்டதில் தன் மீதே கோபம் எழுந்தது ஸ்வரூப்பிற்கு.

பத்ரியிடம் கடத்தச் சொல்லியதாக பூமிநாதன் கூறியதில், அவர் மூலம் பத்ரியைப் பிடித்தனர்.

அவனோ கையில் சிக்காமல் ஆட்டம் காட்ட, போன் லொகேஷனை வைத்து அவனைப் பிடித்து விட்டனர்.

அவனை அடித்து துவைத்துக் கேட்டும் எந்த சரியான பதிலும் கிடைக்கவில்லை. “அவளைக் கொலை பண்ண சொன்னதுனால நான் கொன்னுட்டேன்.” என்ற பத்ரியின் கூற்றில் ஸ்வரூப் மிருகமானான்.

“இல்ல… நீ பொய் சொல்ற. அவள் உயிரோட தான் இருக்கா. இருப்பா. உண்மையை சொல்லுடா.” என்று அவனை அடித்துப் பிரித்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவனுக்கு அடிகள் உறைக்கவே இல்லை.

அவன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் கண்டறிந்து இறுதியில் அந்த அரண்மனையையும் கண்டுபிடித்து விட்டனர். அங்கே தான் இருக்க வேண்டும் என்ற கணிப்பில் அரண்மனைக்குச் சென்று பார்க்க, அதற்கு முன்னர்,

அவர்கள் கண்டுபிடித்து விட்டதை உணர்ந்த பத்ரி, அவசரமாக அவனது பாஸிற்கு போன் செய்தான்.

“பாஸ்… ஸ்வரூப் கண்டுபிடிச்சுட்டான். உள்ள வந்து நோண்டுனா எல்லாம் தெரிஞ்சுடும். அவளை இப்போதைக்கு விட்டுடுங்க.” என்றதில் தான் அவன் கோபமானது.

பின், அவளை அரண்மனையின் முன் வாசலிலேயே விட்டு விட்டனர்.

அந்த அரண்மனை முழுக்க தேடிப் பார்த்தும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவளை எங்கு வைத்திருந்தார்கள் என்று இன்னும் கூட புரியவில்லை.

இரகசிய அறை எதுவும் இருக்கிறதா என்றும் ஆராய்ந்து விட்டார்கள் ஆனால், விடை என்னவோ பூஜ்ஜியம் தான்.

“நம்ம எதிர்பார்க்காத அளவு மோசமானவனா இருப்பான் போல.” என விஹா பெருமூச்சு விட,

“அவன் யாருன்னே தெரியலையே முதல்ல. எதுக்கும் அஞ்சாத ஷவியையே இப்படி நடுங்க வச்சு இருக்கான். அவன்லாம் நாசமா தான் போவான்.” என்று அக்ஷிதா சாபமிட்டாள்.

“அவன் யாருன்னு தெரியும்.” ஜோஷித் மெதுவாகக் கூறிட, அவனை விழி விரித்துப் பார்த்த விஹானா, “நிஜமாவா? யாரு ஜோஷ். தெரியும்ன்னா அவனை பிடிக்க வேண்டியது தான?” எனப் பரபரக்க,

“அது தான முடியாம குழம்பிப் போய் இருக்கோம்” என்றான் சஜித்.

“கொஞ்சம் புரியிற மாதிரி பேசுங்கடா…” என அக்ஷிதா கடிந்து கொள்ளும் போதே, காப்பாற்றப்பட்ட ஆடவர்களில் ஒருவன் வெறித்தனமாக நடந்து கொண்டான்.

அங்கிருந்த மருத்துவர்களைத் தாக்கி, நாய் போல மண்டியிட்டு பக்கவாட்டில் இருந்த ஜன்னலை உடைத்து, அந்த கண்ணாடியை வைத்து அனைவரையும் தாக்க முயல, ஒரு மருத்துவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஸ்வரூப், சஜித், ஜோஷித் மூவரும் அந்த ஒற்றை ஆடவனை அடக்க முற்பட, மிகவும் சிரமமாகவே இருந்தது அவனது பலத்தை அடக்க.

ஜெயராமன் ஏதோ ஒரு ஊசியை போட்டு அவனை மயக்க நிலைக்கு கொண்டு சென்ற பிறகு தான் அங்கு இயல்பு நிலை மெல்லத் திரும்பியது.

உத்ஷவியும் மயக்கம் கலைந்து அங்கு வந்திருக்க, ஸ்வரூப் “நீ ஏண்டி வந்த? ட்ரிப்ச ஏன் கழட்டுன. இப்ப ஓகே வா?” எனப் படபடப்புடன் கேட்க, “ஓகே தான். இங்க என்ன ஆச்சு?” என்றவள் இப்போது சற்று இயல்பாய் இருந்தாள்.

ஆனாலும் விஹானாவும் அக்ஷிதாவும் அவளைத் தள்ளி நின்றே மிரண்டு பார்க்க, “நீங்க ஏண்டி இப்படி பாக்குறீங்க” என்றாள் முறைப்பாக.

விஹானாவோ, “போடி. நீ தான் நான் தொட வந்ததுக்கு தள்ளி விட்டியே” என்று அழுகுரலில் கூற, “நானா? நான் எப்ப தள்ளி விட்டேன். எனக்கு இப்ப தான் மயக்கமே கொஞ்சம் க்ளியர் ஆகியிருக்கு டார்ல்ஸ்” என்றதில்,

“இப்படி சொல்லாம கொள்ளாம எங்கயும் போய் தொலையாதடி. எங்களுக்கு உயிரே போயிடிச்சு” என்ற அக்ஷிதா அவளை அணைத்துக் கொள்ள, விஹானாவும் அவர்களுடன் இணைந்தாள்.

முதலும் முடிவும் நீ

மேகா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
97
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment