Loading

சீமை 13

 

 

“அம்மா எது சொல்லிக்கிட்டாலும் பெருசா குழப்பிக்காத ஒளிரு. அப்பா கூட இல்லாத இந்த நேரத்துல அவங்கள கண்டிக்க மனசு வரமாட்டிக்குது. இவ்ளோ நாளு பொறுத்துட்ட எனக்காக இன்னு கொஞ்ச நாளு மட்டும் பொறுத்துக்க. அப்பா வந்துட்டா எல்லா சரியா போயிடும். ஆனா உன் மருவாதிய வுட்டு தராத.” தன்னிடம் ஒன்றிய மனைவியின் தலைக்கோதிக் கொண்டு மதுரவீரன் பேச,

 

“அய்த்த பேசுறது எனக்கு ஒன்னு பிரச்சன இல்ல மாமா. அவுங்க குணம் இதானு தெரிஞ்சதுக்கு அப்புறம் அமைதியா இருக்குறதுதா குடும்பத்துக்கு நல்லது.” என்ற வாசகத்தின் பொருளை நன்கு உணர்ந்தான்.

 

 

உனக்காகவும் உன் குடும்பத்திற்காகவும் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால், மிக கனத்த மனதோடு என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாள். 

 

 

“மாமா”

 

“என்னாம்மா”

 

“இந்த மொறயாது பம்ப அடிச்ச காச அய்த்த கிட்ட குடுங்க.”

 

“ஏதாச்சும் சொன்னாய்ங்களா?”

 

“சொல்லிடக் கூடாதுனுதா மாமா சொல்ற.”

 

 

“நாளைக்கு உன்ன ஏதாச்சும் கேட்டா நா பாத்துக்குற.” என்றவன் அவளை விட்டு புரிந்தான்.

 

 

யோசனைகள் மாமியார் மீது இருந்ததால் அவளும் விலகிப் படுக்க, அறையை விட்டு வெளி வந்தவன் சிறிது நேரத்தில் உள்ளே வந்தான். அவன் சென்றதையும் உள்ளே வந்ததையும் உணரவில்லை ஒளிர்பிறை. அதை உணர்ந்து கொண்டவன் பொறுமையாக,

 

“எந்திரிம்மா” என்றான்.

 

நினைவில் இருந்து திரும்பியவள் கேள்வியோடு முகம் நோக்க, “சாப்டலாம்” என்ற பதிலில் அருகில் இருக்கும் தட்டை நோக்கினாள்.

 

 

 

உதடு நோகாது மெல்லின சிரிப்பை வெளியிட்டவள் எழுந்தமர, “காலைல இருந்து ராத்திரி வரைக்கு எம்புட்டு வேல செய்யுற. சாப்டாம படுத்தா உடம்பு என்னாத்துக்கு ஆவுறது. எங்க கூடவே சாப்டுமானு பல தடவ சொல்லிட்ட, கேக்குற மாதிரி தெரியல. இனிமே நா சாப்டும் போது நீயும் சாப்டு.” பேசியவாறு முதல் வாய் சாதத்தை ஊட்டினான்.

 

 

சிந்தும் சாதத்தை வலது கையால் பிடித்தவள் வாயில் போட்டபடி, “பசிக்கல மாமா.” என்றிட,

 

 

 

 

“வூட்டு வேல செஞ்சா கூட பரவால எப்ப வேணா சாப்டுக்கலான்னு வுடலா. நீ தோட்டத்து வேலயுல செஞ்சுக்கிட்டு இருக்க.” வாய் பேசினாலும் கை மனைவியின் வயிற்றை நிரப்பி மகிழ்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தது.

 

 

“வுடுங்க மாமா… எதுக்கு இப்டி புலம்பிக்கிட்டு இருக்கீங்க.” என்றதும் ஊட்டுவதை நிறுத்தியவன்,

 

“நேரா நேரத்துக்கு சாப்டுனு சொல்றது புலம்புற மாதிரி இருக்கா உனக்கு” என முறைத்தான்.

 

 

“நா ஒன்னு அம்புட்டு வேல பாக்கல மாமா. நீங்க உங்களால முடிஞ்ச ஒத்தாசய செஞ்சு குடுக்கிறீங்க. எ… கொழுந்தய்ங்க உங்களுக்கும் மேல. வெள்ளன எழுந்ததும் மதினி காபி தண்ணி குடுங்கனு கேட்காம ஆளுக்கு ஒரு வேலய இழுத்து போட்டு செய்றாய்ங்க. தோட்ட வேலய தமிழு கூட இருந்து பாத்துக்குறா. சும்மா பேருக்குதா எல்லா எடத்துலயும் நா இருக்குற மாதிரி இருக்க.” என்றவள் பேச்சில் உண்மை இருப்பதால் முறைப்பை கைவிட்டவன் வாயை திறக்கும் படி சைகை செய்தான்.

 

 

முழு சாதத்தையும் ஊட்டி முடித்தவன், “எதுவா வேணா இருக்கட்டு அம்மணி. என்னை வுட இந்த வூட்ல அதிகமா உழைக்குறது நீதா. நீ தெம்பா இல்லினா இந்த வூடு சிரிக்காது. இந்த வூட்டோட உயிர் நீதாம்மா.” என குடிக்க தண்ணீரையும் கையில் திணித்தான்.

 

 

கணவன் வார்த்தையில் பற்கள் தெரிய புன்னகைத்தவள் ஓய்வெடுக்க, தட்டை கழுவி வைத்து விட்டு வந்தான். 

 

 

“பரீட்சை என்னிக்கும்மா?”

 

“அதுக்கு இன்னு ஒரு மாசம் இருக்கு மாமா.”

 

“விடிஞ்சதும் இவுனுங்க கிட்ட சொல்லி வேலய இன்னு உனக்கு சுலுவாக்க சொல்லுற. படிக்குற வேலய மட்டும் கவனமா பாரு. போன மொற ஏதோ பாயிண்டுல போச்சு அது இதுனு புலம்பிக்கிட்டு இருந்த.”

 

 

 

இருவரும் காதலித்தாலும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் போலவே நடந்தது. இவளது கனவும், அவனது பிரச்சனையும் தலைக்கு மேல் இருப்பதாக உணர்ந்தவர்கள் இல்லற வாழ்க்கையை தள்ளி வைத்தார்கள். அந்த முடிவு தளர்ந்து விட்டது என்றாலும் இருவரின் லட்சியமும் நிறைவேறாமல் இருக்கிறது. குழந்தை வரத்தை தள்ளி வைக்கவில்லை என்றாலும் இருவருக்கும் தானாகவே இன்னும் அமையாமல் இருக்கிறது. அதைப் பற்றிய பேச்சை ஒளிர் எடுத்து விட்டாள், 

 

“எ…குழந்தைக்கு இந்த சூழ்நிலை வேணா ஒளிரு. படிக்க வேண்டிய வயசுல படிக்காம திமிரு எடுத்துப் போனதாலதா இப்டி ஒரு நெலைல நிக்குற. படிப்பு ஒன்னுதா வன்முறைய ஒழிக்குனு இப்ப உணர்ந்துட்ட. அதனாலதா உன்னயும் தம்பிகளையும் எப்டியாது படிக்க வெச்சு இந்த கிணத்துல இருந்து வெளிய தூக்கி போடணுனு பாக்குற. அதனால இப்போதிக்கு வராம இருக்குறதே நல்லது” என்று விடுவான்.

 

 

அவன் கூற்று சரி என்றாலும் அடிக்கடி குழந்தையை வைத்து குறை கூறும் ஆண்டாளின் குத்தல் பேச்சில் மனம் வருந்துகிறாள் அனுதினமும். போதாக்குறைக்கு பார்ப்போர்கள் அனைவரும் குழந்தை எப்பொழுது என்ற கேள்வியை முன்வைக்க, பதில் சொல்லியே ஓய்ந்து போனாள்.

 

 

தினமும் தூக்கத்திற்கான பஞ்சு மெத்தை அவனது மார்பாக, இரு நாட்களாக கிடைக்காத அந்த சுகத்தை அவள் அனுபவிக்க, துயில் கொள்ள துவங்கியது வீட்டின் ஒளிர் விளக்கு. 

 

 

***

 

 

தென்னை மரக் கீற்றுகளுக்கு நடுவில் சூரியன் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் அழகிய காலை பொழுதை வரவேற்றது சிறுமயிலூர் கிராமம். குயில்கள் அவ்வூரில் அதிகம் போல “கீச் கீச்” என்று கத்திக் கொண்டே இருந்தது. அதற்குப் போட்டியாக காகங்களும் களத்தில் இறங்க, ஒவ்வொரு வீட்டின் கதவும் திறக்க ஆரம்பித்தது. 

 

 

பொதுவாக இவ்வூரில் பெரும்பாலானோர் நான்கு மணிக்கு எழும் பழக்கம் கொண்டவர்கள். அதேபோல் மதுரவீரன், மச்சக்காளையன் வீடுகளும் நான்கு மணிக்கு கடமையைச் செய்ய விழித்துக் கொண்டது.

 

 

இரவு கட்டிய சேலை கசங்கி இருக்க, அவள் இடுப்போடு முந்தானை ஒதுங்கி இருந்தது. கொசுவம் மொத்தமும் முந்தானை இருக்கும் இடத்திற்கு மேல் குடி கொண்டிருக்க, கணுக்கால் மேலே பாவாடை சண்டையிட்டுக் கொண்டிருந்தது மங்கையின் கால்களுக்கு நடுவில். 

 

 

அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் நிலையில் இல்லாதவள் கொட்டாவி விட்டுக்கொண்டு மாட்டு சாணத்தை அள்ளிக் கொண்டு இருந்தாள். 

 

 

“மதினி நீங்க கோழிய தொறந்து வுடுங்க நா சாணிய எடுத்து போடுற.” என புத்துணர்ச்சி முகத்தோடு ஒளிர்பிறையின் முன்பு நின்றான் செந்தமிழன்.

 

 

“வேணா தமிழு அவ்ளோதா முடிச்சிட்ட. நீ போயி கோழிய தொறந்துவுடு.” மதினியின் கட்டளையை உடனே நிறைவேற்றினான் இரவெல்லாம் சிறையில் இருந்த கோழிகளை திறந்து விட்டு.

 

 

கூடவே தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து வந்தவன் அங்கு இருந்த புளிய மரம், வேப்பமரம் இரண்டிலும் கட்டி வைத்தான். அவனுக்கு பின்னால் அவ்வீட்டின் அடுத்தடுத்த காளைகள் தூங்கி எழுந்து வர, ஆளுக்கொரு வேலையை கையில் எடுத்தார்கள்.

 

 

இமையவன் ஆடுகளை கவனிக்க சென்று விட, எழில்குமரன் அண்ணன் திறந்து விட்ட கோழிகளுக்கு தீவனமிட பறந்தான். இளையவன் அண்ணன் மனைவிக்கு வேலையை குறைக்க பின்பக்க வாசலை பெருக்கிக் கொண்டிருந்தான்.

 

 

நேற்று இரவு கழுவாமல் வைத்த பாத்திரங்களை கழுவ எடுத்து வந்தவள், “எடேய்! நீ எதுக்கு விளக்குமாற புடிச்சுக்கிட்டு கெடக்குற. வேற எதுனா வேல இருந்தா பாரு நா பாத்துக்குற.” என்ற சத்தம் தூங்கிக் கொண்டிருந்த மதுரவீரன் செவியில் விழுந்தது.

 

 

புரண்டு படுத்தவன் போர்வையை முழுவதுமாக போர்த்திக் கொள்ள, தூக்கம் கலைந்து தலை முடியை அள்ளிக் கொண்டை போட்டார் ஆண்டாள். 

 

 

“விளக்குமாறு சொல்லுச்சா மதினி நா புடிக்கக் கூடாதுனு.” என்றவாறு கவிநேயன் பெருக்கிக் கொண்டிருக்க, “அது சொல்லல உங்க மதினி அவ வேலய குறைக்க இந்த மாதிரி உங்கள பேச வெக்குறா.” என அங்கு வந்து நின்றார் ஆண்டாள்.

 

 

மாமியாரை கண்டதும் எதுவும் பேசாமல் கழுவ எடுத்து வந்த பாத்திரங்களை வைத்துவிட்டு அவள் உள்ளே சென்று விட, “கூறு கெட்டவனே இதுலா பொம்பளைங்க பாக்க வேண்டிய வேல. புத்தி கெட்ட தனமா மதினிக்கு நல்லது பண்றனு சொல்லி மானத்தை கெடுத்துக்காத. நீ இப்டி புடிக்குறத எவளாது பாத்தாளுகனு வெச்சுக்க நாள பின்ன பொண்ணு தர மாட்டாய்ங்க.” என்ற அன்னையின் பேச்சை கண்டு கொள்ளாமல் ஆளுக்கு ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வீட்டின் ஆண்கள்.

 

 

“தெனமும் கண்ண தொறந்தா கண்ட கருமத்த பாக்க வேண்டியதா இருக்கு. நானும்தா இந்த வூட்டுக்கு வாழ வந்து வருசம் பல‌ ஆச்சு. உங்க அஞ்சு பேத்தியும் பெத்து போட்டதுக்கு அப்புறமும் கூட எல்லா வேலயும் நா மட்டும்தா செய்வ. புருச புள்ளைங்க நல்லா இருக்கணுனு உடம்ப வருத்திக்கிட்டு இத்தினி வருசமா உங்களுக்கு பொங்கி கொட்டி இருக்க. என்னாமோ இவதா சீமையில இல்லாத மதினியா போயிட்டா.” யாரும் தன் பேச்சை மதிக்காததால் வம்பு இழுக்கும் நோக்கோடு அள்ளி முடிந்த கொண்டையை மீண்டும் விரித்து போட்டார்.

 

 

 

“இமையா அந்த பழுப்ப தொறந்துவுடு.” பாத்திரம் கழுவுவதற்காக தொட்டியில் தண்ணீர் நிரப்ப உத்தரவிட்டாள்.

 

 

இவ்வளவு பேசியும் பெற்ற மகனை வேலை வாங்கும் மருமகள் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டவர், “இதுலா எங்க போய் முடியப் போவுதோ. வூட்டுக்கு வாழ வந்த பொட்ட புள்ள புருசனுக்கும் அவன் கூட பொறந்தவங்களுக்கும் சேவகம் செஞ்சுக்கிட்டு கெடக்கனுமே தவிர சொகுசா வாழணுனு நெனைக்க கூடாது. நல்ல குடும்பத்துல பொறந்த எந்த பொண்ணு இந்த மாதிரி காரியத்த செய்ய மாட்டா.” என்றதும் தேய்த்துக் கொண்டிருந்த பாத்திரத்தை “தொம்” என்ற சத்தத்தோடு தரையில் வீசி அடித்தாள்.

 

 

 

பாத்திரம் கொடுத்த சத்தத்தில் அங்கிருந்த கோழிகள் சிறு பயத்தில் பறந்து நிலத்தில் விழ, புன்னகை முகமாக தடவி கொடுக்கும் மங்கையின் விழியில் தெரியும் கோபத்தை புரியாமல் பார்த்தது வீட்டின் மாடுகள். 

 

 

ஆண்டாள் மருமகளை சினத்தோடு நோக்க, “ஆரு சொன்னது பொம்பள புள்ளைங்க சேவ செஞ்சுக்கிட்டு மட்டும்தா இருக்கணுனு. ஆம்பள விளக்குமாத்த புடிச்சா குறைஞ்சு போயிடுவானா. விளக்குமாற புடிக்குற பொண்டாட்டிய தான ராத்திரி கட்டிப் புடிக்குறாய்ங்க, வாரிச பெத்துக்குறாய்ங்க. அப்ப தெரியலயா அவ நல்ல குடும்பத்து பொண்ணானு?” என்ற கேள்விக்கு பதில் இருக்காது என்று தெரிந்தும் மீண்டும் தொடர்ந்தாள்,

 

 

“வூட்டுக்கு வாழ வந்தவ சொகுசா இருக்கணுனு நெனைக்குறதுல என்னா தப்பு இருக்கு? அவள பெத்தவய்ங்க அவள அப்டித்தான வளத்து விட்டாய்ங்க. கட்டிக்கிட்டு வரும்போது ராணி மாதிரி பாத்துக்குறனு இந்த வாயி தான சொல்லுச்சு. அவன புடிக்காதன்னு சொன்னதுக்கு காரணம் ஆம்பளயா போனதால இல்ல. சின்ன பையன வேல வாங்க கூடாதுனு.” என்றாள் காட்டமாக.

 

 

படுத்திருந்த மதுரவீரனின் செவியில் நன்றாக விழுந்து தூக்கத்திலிருந்து எழ வைத்தது. அவிழ்ந்த கைலியை எழுந்து நின்று கட்டியவன் கலவரம் நடக்கும் இடத்திற்கு விரைய, 

 

 

“நல்லா இருக்குதுடி உன் பேச்சு. மகாராணியா வாழனுனு நெனைக்குறவ அப்பன் வூட்டுக்கு போவ வேண்டியது தான. இங்க நா பெத்ததுங்க கஷ்டப்படவா உன்ன கட்டி வெச்ச. ஆரு என்னா சொன்னாலும் பொம்பள வூட்டு வேல செய்ய பொறந்தவதா.” என்றார் முதியவர்.

 

 

“வேணா அய்த்த, எ…புருச அம்மாவா நீங்க பேசுறத பொறுத்துப்ப. ஆனா, ஒரு பொண்ணா நிச்சயம் இந்த மாதிரி ஒரு எண்ணத்த ஆதரிக்க மாட்ட. ஒளிர்பிறை உங்க மகன கட்டிக்கிட்டு வந்து இருக்காளே தவிர அடிமயா வரல. அவள அடக்கணுனு நெனைச்சீங்க… அம்புட்டுதா அவ ஆட்டம் உங்கள அடக்கிடும்.” மதுரவீரனின் ஒளி விளக்கு காற்றில் அசைந்து நெருப்பின் தனலை கூட்ட ஆரம்பித்திருந்தது பேச்சால்.

 

 

 

சீமை 14

 

ஒளிர்பிறையின் பேச்சுக்குப் பின், “எம்மா! எதுக்குமா இப்ப காலங்காத்தால கத்திக்கிட்டு கெடக்க. மதினி சொல்லி ஒன்னு நா விளக்குமாத்த எடுக்கல. மதினி இல்லாம இருந்தாலும் இதயேதா நா செஞ்சு இருப்ப.”

 

 

“அப்டி சொல்லு கவி. சின்ன புள்ள அவனுக்கு கூட எப்டி இருக்கணுனு தெரியுதும்மா. மதினி நீயி சொன்ன மாதிரி அண்ணனுக்கு சேவகம் பண்ணலாம் எங்களுக்கு எதுக்கு பண்ணனும்?” என்ற செந்தமிழன் பேச்சு நின்றது அண்ணன் வருகையை அறிந்து.

 

 

தன்னிடம் பேசிக் கொண்டிருந்த மகனின் பார்வை தனக்கு பின்னால் செல்வதை உணர்ந்த ஆண்டாள் திரும்பிப் பார்க்க, கைலியை முட்டி வரை ஏற்றி கட்டிக்கொண்டு அவர்களுக்கு தரிசனம் கொடுத்தான் மதுரவீரன்.

 

 

மகனைப் பார்த்த உடனே ஆண்டாளின் இரு உதடுகளும் ஒட்டிக்கொண்டது. அவனோ யாரையும் பார்க்காமல் பார்வையை தம்பி பிடித்திருக்கும் விளக்குமாறு மீது வைத்திருந்தான். அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொள்ளும் முன்னர் அதை அவன் கைகளுக்கு இடம் மாற்றிக் கொண்டான். 

 

 

அனைவரும் என்ன செய்யப் போகிறான் என பார்க்க, பெற்ற அன்னைக்கு சொல்லாமல் பதில் சொன்னான் குப்பைகளை கூட்ட ஆரம்பித்து. மகனின் வாய் திறக்கா பளீர் செயலில் வந்த வழியே திரும்பி விட்டார் ஆண்டாள்.

 

 

 

“குடு’ண்ணே நா கூட்டுற.” என எழில்குமரன் அண்ணன் முன்பாக கை நீட்ட, “நீ வேற வேல இருந்தா பாருடா நா கூட்டி தள்ளிக்குற.” என்று மறுத்து விட்டான்.

 

 

தர்ம சங்கடமான நிலையில் அமர்ந்திருந்தாள் ஒளிர்பிறை. கணவனை தடுப்பதா வேண்டாமா என்ற பல சிந்தனைகளுக்குப் பிறகு, “மாமா மன்னிச்சிடுங்க” என்றிட,

 

 

“காலங்காத்தால வாங்கி கட்டிக்காத ஒளிரு. ஆரம்பத்துல இருந்தே சொல்லிட்டு கெடக்க ரொம்ப வுட்டுக் குடுக்காதன்னு. நீயி பழகி வுட்ட பழக்கம் தான இந்த அளவுக்கு பேச வெச்சிருக்கு. வீர வசனம் பேசுறதுக்கு முன்னாடி தேவயே இல்லாத எடத்துல வளைஞ்சி குடுத்து போவ கூடாதுனு புத்திக்கு சொல்லி வை.” என்றவன் முழு இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு சென்றுவிட்டான்.

 

 

***

 

 

சூரியன் வரவிற்கு முன் எழுந்த ஒளிர்பிறை வீட்டைத் திறந்தாள் என்றால், சாமந்தி கடுப்பங்கறை மட்டுமே திறந்து வைத்திருந்தாள். முதலில் அவள் எழுந்து நிற்கும் இடம் இவை தான். சமையலை முடித்த பின்னர் தான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பாள். 

 

 

பல வருடங்களாக அம்மாவின் கை மணத்தை மறந்த மூவருக்கும் அதை திருப்பிக் கொடுப்பதே அவளின் முதல் கடமை. இதைக் கவனித்த அவளின் அன்பு கொழுந்தன்கள் அதிகம் வேலை வைக்காமல் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். 

 

 

அதன்படி என்றும் அவள் சமையலை முடிப்பதற்கு முன்னர் எழுந்து விடும் சிலம்பன் வீட்டின் வாசல் முதல் கொண்டு அனைத்து இடத்திலும் சாணம் தெளித்தான். மொழியன் பொறுமையாக தூங்கி எழுந்து வர,

 

“எடேய், இம்புட்டு நேரமாடா உனக்கு தூக்கம் வேண்டி கெடக்கு.” மாடுகளை அவிழ்த்து விட்டு வந்த மச்சக்காளையன் அதட்டினான்.

 

இரவெல்லாம் வழிந்து காய்ந்திருந்த உவர் நீரை துடைத்தவாறு, “இந்தா போயிட்ட ண்ணே.” என்றான்.

 

 

‘சொல்றத கொஞ்சம் பொறுமையாதா சொன்னா என்னாவாம். காலைலயே புள்ளைய கத்திக்கிட்டு.’ வெளியில் சொன்னால் தனக்கும் திட்டு விழும் என்ற பயத்தில் மனதோடு மட்டுமே நியாயம் கேட்டாள்.

 

 

“சிலம்பா நம்ம லட்சுமி மாட்டுக்கு ரெண்டு மூணு நாளா வயித்தால போயிட்டு இருக்குனு உன் மதினி சொல்லிட்டு இருந்தாளே சரியா போயிடுச்சா?”

 

“முன்ன வுட இப்ப பரவால’ண்ணே. இன்னிக்கு ஒரு தடவ டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவனும்.” 

 

 

“அப்டியே இந்த கோழிக்கு தீவனம் வெக்குறத பத்தி பக்கத்து ஊரு மாடசாமி அண்ண கிட்ட பேசி இருந்த. அவரு வீட்டுக்கும் ஒரு எட்டு போயிட்டு அத பத்தி விசாரிச்சுட்டு வா.” என்ற கட்டளைக்கு சம்மதமாக தலையசைத்தான் சிலம்பன்.

 

 

முகம் கழுவி வந்த மொழியன் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் ஆடுகளை சிறிது நேரம் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல புறப்பட்டான். மேல் சட்டை அணியாமல் புறப்படும் மொழியனின் தலையில் அடித்தவள்,

 

 

“என்னாதா படிக்க போனாலும் புத்தி போவுதா பாரு. இப்ப எதுக்குடா ஊருக்கே படம் காட்டிக்கிட்டு போற. பனியன எடுத்து போடு.” என்றாள்.

 

 

மதினியின் சொல்பேச்சை கேட்கும் ரகம் இல்லை என்றாலும் வீட்டில் இருக்கும் அண்ணனுக்கு பயந்து உடுத்தி வந்தான். கையில் சாதம் வடித்த பழைய நீச்சி தண்ணீரை கொடுக்க, தொண்டையை தூக்கிக் கொடுத்து வயிற்றை நிரப்பி கொண்டவன் புறப்பட்டான். 

 

 

மொழியன் வருவதற்குள் சிலம்பன் அண்ணன் சொன்ன வேலைகளை முடித்து வந்தான். குளித்து முடித்து கட்டிய ஈர துண்டோடு மச்சக்காளையன் உள்ளே வர, 

 

“மாடசாமி அண்ண கிட்ட பேசிட்டண்ணே. நாளைக்கு வெள்ளன வூட்டுக்கு வரதா சொல்லி இருக்காரு. மாட்ட மட்டும் சாயங்காலம் வந்து கூட்டிட்டு போற.” என்றான் அவன் மீண்டும் கேட்கும் முன்னர்.

 

 

மேச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆடுகளை பத்திரமாக வீடு திருப்பி இருந்தான் மொழியன். வந்தவன் கையில் தேனீரைக் கொடுத்தவள் கிளம்புமாறு சொல்லிவிட்டு வேலையை கவனிக்க, அவனும் தயாராகி வந்தான் பள்ளி சீருடையில். சிலம்பன் கல்லூரிக்கு போவதால் மதிய உணவை தவிர்த்து விட, சிறியவனுக்கு மட்டும் சோறு கட்டி அனுப்பி வைத்தாள்.

 

 

 

“மாமா சாப்ட வாங்க.” பம்பை அடித்து விட்டு நேற்று தான் வீடு திரும்பியதால் இன்று வேலைக்குச் செல்லவில்லை மச்சக்காளையன். 

 

“எனக்கு சாப்பாடு வேணா.” என்றவனை அவனது மனைவி கேள்வியோடு நோக்க,

 

“கொஞ்சோம் வேல இருக்கு. நீ சாப்ட்டு வேலய கவனி. முடிச்சுட்டு வந்து நானே போட்டு சாப்டுக்குற.” என்றுவிட்டு பம்பை துணிகளை துவைக்க ஊற வைத்தான்.

 

 

அதற்குள் அவனோடு வேலை செய்த நபர்கள் வந்துவிட, “இந்தாம்மா அந்த காச எடுத்துட்டு வா.” என குரல் உயர்த்தினான்.

 

 

சட்டை உள்பக்கத்தில் இருக்கும் கட்டு தாள்களை அவன் கையில் திணித்தவள் வந்தவர்களுக்கு தேனீர் கொடுத்துவிட்டு சென்றுவிட, உழைத்த உழைப்பிற்கான ஊதியத்தை கொடுத்து அனுப்பி வைத்தான்.

 

 

வந்தவர்களை வழியனுப்பியவன் ஊற வைத்த துணியை துவைக்க பின் பக்கம் வர, அவனது மனைவி அவன் வேலையை மிச்சம் செய்திருந்தாள் தானே துவைத்து.

 

 

“என்னாத்துக்கு இப்ப இத நீ தொவைச்சிக்கிட்டு கெடக்க எனக்கு தொவைக்க தெரியாதா?” 

 

 

“உங்களுக்கு கட்டிக்கிட்ட பொண்டாட்டியதா கண்ணுக்கு தெரியாதே தவிர மத்த எல்லா விவரமும் நல்லா தெரியும்.” பொடி வைத்து பேசும் மனைவியின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாதது போல் அவள் அலசி வைத்த துணியை காய போட கையில் எடுத்தான்.

 

 

“என்னா பண்ண… நா வாங்கிட்டு வந்த வரம் அந்த மாதிரி. அங்கங்க ஊரு உலகத்துல கட்டிக்கிட்டவள எப்டி கொஞ்சுறாய்ங்கனு தெரியுமா. இங்க கொஞ்சவும் வழி இல்ல மிஞ்சி போனா அதட்டவும் வழியில்ல.”

 

“எதுக்கு காலைல பாட்டு படிச்சுக்கிட்டு கெடக்க.”

 

“ராத்திரி படிக்க வேண்டிய பாட்ட படிச்சி இருந்தா நா எதுக்கு கால பாட்ட படிக்கப் போற.” என்றவளை முறைத்தான் மச்சக்காளையன்.

 

கணவனின் முறைப்பில் வர தயாராக இருந்த வார்த்தையை உள்ளுக்குள் முழுங்கியவள், “தப்பா ஒன்னு சொல்லல. நீங்க பம்ப அடிக்கும் போது ரொம்ப நல்லா பாடுவீங்க. இன்ன வரைக்கும் எனக்கு ஒரு பாட்டு கூட பாடி காட்டலயேன்னு சொன்ன.” பின்வாங்கி விட்டாள் பேசிய பேச்சிலிருந்து.

 

 

“ஒத்த வார்த்த பேசாம இருக்கு போதே இந்த பேச்சு பேசுற. இன்னு நீ சொல்ற மாதிரி உன்ன கொஞ்சி பாட்டுலா பாடுனா தல மேல ஏறி உக்காந்துக்க மாட்ட. நாலு மொற என்னை கடந்து போவும் போது பாத்ததுக்கே ஏமாத்தி புட்டான்னு சொன்னவ தான நீயி. இந்த லட்சணத்துல பாட்டு பாடி தலைய வெட்டுன்னு நானே குடுக்கவா.” என்றவன் துணிகளை காய போட்டு விட்டு உள்ளே செல்ல,

 

 

“எப்ப பாரு அதியேதா பேசுவீங்களா மாமா. நமக்கு கண்ணாலம் ஆகி எத்தினி வருசம் ஆவுதுனு தெரியுமா?” என பின்னால் சென்றாள்.

 

 

“தெரிஞ்சு நா என்னா பண்ண போற.” என்றவன் முன்பு முறைப்போடு நின்றவள், “கட்டிக்கிட்ட புருச பேசுற பேச்சா இது. கண்ணாலம் ஆகி எத்தினி வருசம் ஆவுதுனு கூட தெரியாம இருக்குறது பெரிய குத்தம் மாமா.” என்றாள்.

 

 

“எவ்ளோ பெரிய குத்தமா வேணா இருந்துட்டு போவட்டும், இப்ப நீயி நகரு பசிக்குது.”

 

 

அவன் பேச்சைக் கேட்டவள் கோபத்தோடு செய்து வைத்த சாப்பாட்டை படையல் இட, “உக்காரு சேர்ந்து சாப்டுவோம்.” என அவள் மனதை குளிர வைத்தான்.

 

 

இருவரும் வாக்குவாதங்கள் செய்து கொண்டே காலை உணவை முடிக்க, ஒளிர்பிறையின் மூன்று கொழுந்தன்களும் தயாராகி விட்டார்கள். நேற்று இரவு எங்கும் செல்ல வேண்டாம் என்றவள் பேச்சையும் மீறி கிளம்பினார்கள். வீட்டில் இருவர் கல்லூரிக்கும் சின்னவன் பள்ளிக்கும் செல்வதால் வேலை எப்போதும் பரபரப்பாக ஓடும்.

 

 

கவிநேயனை மட்டும் செந்தமிழன் வாகனத்தில் அழைத்துச் செல்ல, சரியான நேரத்திற்கு பேருந்து பிடிக்க வேண்டும் என்பதால் மற்ற இருவரும் வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். காலையில் இவ்விரு குடும்பத்தையும் பார்த்தால் மிகவும் பொறுப்பான குடும்பம் போன்று தான் ஊருக்கே தெரியும். 

 

 

அதிலும் இரு வீட்டின் வாண்டுகளும் அநியாயத்திற்கு நல்லவர்களாக அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்வார்கள். குடித்தவன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல் படித்து முடித்துவிட்டு வீட்டில் கால் வைத்ததும் சுருட்டி வைத்திருந்த குரங்கு வால் வெளியில் வந்துவிடும்.

 

 

அந்த வால் எதிர் வீட்டுக்கும் சென்று வம்பை வளர்க்க, தினமும் அண்ணன்களின் அன்பு பரிசில் தான் தூங்கவே செய்வார்கள். 

 

 

வரும் வழியில் அறிவுரை சொல்லிக்கொண்டே தம்பியை அழைத்து வந்தான் செந்தமிழன். அவனும் ஏதோ கேட்போம் என்பது போல் தலையாட்டிக் கொண்டே வர, “என்னாடா எல்லாத்துக்கும் பூம்பூம்மாடு மாதிரி தலையாட்டுற. நேத்து வாங்குன உத பத்தலையா.” கண்ணாடி வழியாக கேட்டான்.

 

 

உதை என்றதும் இரவு வாங்கிய அத்தனை அடிகளும் அவன் கண் முன்னால் வர, “அண்ணே அத மட்டும் தயவுசெஞ்சு நியாபகப்படுத்தாத. அந்தக் கட்டபொம்ம கூட பொறந்தவய்ங்கன்னு கூட இரக்கம் பாக்காம பம்பய அடிக்குற மாதிரி எங்க முதுக அடிச்சு புட்டான்.” என்றான் அதிர்வோடு.

 

 

“என்னாடா அண்ணன மருவாதி இல்லாம அவன் இவன்னு”

 

“அட போண்ணே, அவரு அடிக்கு ஆரா இருந்தாலும் இத வுட மோசமா பேசுவாய்ங்க. நாங்களா இருக்க போயி இத்தோட நிறுத்திக்கிட்டோம்.” என்றவன் கோபத்திற்கு செந்தமிழன் ஆளானான் நடுரோட்டில் வண்டியை நிறுத்தியதால்.

 

 

தலையை உயர்த்தி முன்னால் பார்வையை பதிக்க, மொழியன் நடந்துக் கொண்டிருந்தான். இருவரும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறார்கள். அதனால் ஒரே வழியில் பயணிக்க, தினமும் அவனைப் பார்த்ததும் இருசக்கர வாகனத்தை நிறுத்துவான் செந்தமிழன்.

 

 

மிகுந்த சினத்தோடு கவிநேயன் வண்டியை விட்டு இறங்க, “கவி” என்ற அழுத்தமான அழைப்பில் அமர்ந்தான்.

 

 

 

சீமை 15

 

தன்னருகில் வரும் இரு சக்கர வாகனத்தின் நிழலை கண்டு கொண்ட மொழியன் எதைவும் பார்க்காதது போல் தான் போக்கில் நடந்து கொண்டிருந்தான். இருந்தும் பின் தொடர்ந்தான் செந்தமிழன். 

 

 

சின்னவன் நடக்க, பெரியவன் பின் தொடர என நேரம் நகர்ந்தது. பின்னால் அமர்ந்து வந்த கவிநேயனுக்கு பெரும் எரிச்சல் உண்டானது. தினமும் நாள் தவறாமல் நடக்கும் நிகழ்வு தான் என்றாலும் எரிச்சல் நின்ற பாடில்லை அவனுக்கு.

 

“அண்ணே அவன் உன்ன மதிக்காம தெனமும் இதே மாதிரி பண்ணிக்கிட்டு கெடக்கா. நீயி மட்டும் எதுக்கு கெஞ்சிக்கிட்டு பின்னாடி போற.” 

 

“அவனுக்கு அண்ணன்ற உரிமை இருக்குறதால தான்டா இந்த அளவுக்கு வீஞ்சிக்கிட்டு போறா.”

 

“அவன் சொன்னானா உன்ன அண்ணனு?”

 

“சொல்லி சில விசயம் புரிஞ்சிக்க முடியாது கவி. ஒரு நாளு இல்ல ஒரு நாளு அவன் இந்த வண்டில வரத்தா போறா. உங்க ரெண்டு பேரயும் சேத்து ஸ்கூல்ல வுடதா போற, நீ வேணா பாரு.” என்றவன் பேச்சு இருக்கும் எரிச்சலை இன்னும் அதிகமாக்கியது கவிநேயனுக்கு.

 

“அவனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்னா சம்பந்தம் இருக்கு? உன் வண்டில அவன ஏத்த.”

 

“கவி அவன் உன்ன வுட பெரியவ. மரியாதை இல்லாம பேசாத.”

 

“நா என் கூட பொறந்தவனுக்கே மரியாத குடுக்க மாட்ட. இவன் ஒரு ஆளுனு மருவாத வேற ” என்றவனை கண்ணாடி வழியாக முறைத்தான் செந்தமிழன்.

 

 

அண்ணன் முறைப்பில் சின்னவன் வாய் தானாக மூடிக் கொள்ள, வாகனத்தின் ஒலிபெருக்கியை அடித்தான் நடப்பவனின் பார்வை திரும்புவதற்காக. அவனோ பிடிவாதமாக காதில் கேட்காது போல் சென்று கொண்டிருக்க,

 

“மொழி நில்லு” என்றான் கட்டளையாக.

 

 

அவன் கேட்காமல் சிறிது தூரம் நடக்க, “உன்ன நில்லுன்னு சொன்ன” என்ற வாசகம் நடையை நிறுத்தியது.

 

 

நின்றவன் திரும்பிப் பார்க்காமல் விரைப்பான உடலோடு நின்றான்.

சின்னவன் நிற்கும் இடத்திற்கு விரைந்தவன், “எவ்ளோ தூரம் நடந்து போவ வண்டில ஏறு ஸ்கூல்ல வுடுற.” என்றான் அக்கறையாக.

 

 

காதில் வாங்காதவன் போல் அவன் அசையாமல் நிற்க, “உன்கிட்டதா பேசிக்கிட்டு இருக்க… மரம் மாதிரி நின்னா என்னா அர்த்தம்?” குரல் உயர்த்தி அழுத்தமாக கேட்டான்.

 

 

“அர்த்தம் என்னானு உங்க வூட்ல இருக்க எல்லாருக்கு தெரியும். உங்களுக்கும் எங்களுக்கும் ஆவாதுனு தெரிஞ்சும் எதுக்கு தெனம் என் பின்னாடி வரீங்க. உங்க வூட்டு ஆளுங்கள பாத்தாலே எனக்கும் அண்ணன்களுக்கும் சுத்தமா புடிக்காது. நாங்க ஒதுங்கி போனாலும் வந்து வம்பு பண்றீங்க.” என்றவன் பேச்சு கவிநேயவனுக்கு கோபத்தை கிளறியது.

 

 

“எடேய் என்னா? எங்க அண்ண கிட்ட குரல் ஒசத்தி பேசுற. நாக்கே இல்லாம தெனம் ஸ்கூலுக்கு வர வேண்டியதா இருக்கும்.”

 

“நீ நாக்க அறுக்குற வரைக்கும் சும்மா இருப்பனு நெனைச்சியாடா கிறுக்கு பயலே. எ…நாக்க அறுக்க போறனு சொன்ன அந்த நாக்க அறுத்து போட்டுட்டு தான்டா வேற வேலயே எனக்கு.”

 

“அம்புட்டு தைரியமான ஆம்பளையாடா நீயி. எங்க, இங்க நிக்குற வந்து அறு பாப்போம்.” 

 

 

“அந்த இத்து போன நாக்க அறுக்குறது என்னா அவ்ளோ பெரிய தேர இழுக்குற விசயமா. அறுத்து கைல குடுக்குற அப்போ தெரிஞ்சிப்ப நா எவ்ளோ பெரிய ஆம்பளன்னு ” 

 

மொழியனின் பேச்சை கேட்ட சின்னவன் வாகனத்தில் இருந்து இறங்கி நிற்க, தன் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் இளையவனை நெருங்கினான் அவனை விட இரு வயது பெரியவனான மொழியன்.

 

 

உடன் பிறந்தவனும் பிறவாதவனும் அடித்துக்கொள்ள தயாராகும் முன், “பெரிய ஆம்பளைங்க கணக்கா பேசிக்கிட்டு நிக்காதிய்ங்கடா, நகருங்க.” என தடுத்து விட்டான் செந்தமிழன்.

 

 

“அண்ணே நீ பேசாம இரு. இவன இன்னிக்கு என்னா பண்ணனுன்னு எனக்கு தெரியும்.”

 

 

“எடேய்! அதேதா உனக்கும். இன்னியோட உன் கணக்க முடிச்சு போட்டுட்டுதா மறு வேல எனக்கு.”

 

 

தடுத்து தனித்தனியாக நிற்க வைத்தவன், “படிக்குற பசங்க மாதிரி எங்கயாது பேசுறீங்களா நீங்க ரெண்டு பேரும். இன்னு பள்ளிக்கூடத்த கூட தாண்டல அதுக்குள்ள வெட்டுவ குத்துவன்னு பேசுறது நியாயமா இருக்கா?” என்பவன் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருவரும் முறைக்கும் வேளையில் ஈடுபட்டார்கள்.

 

 

“இந்த முரட்டு குணம்தா நம்ம அப்பனுங்கள ஜெயிலுக்குள்ள வெச்சிருக்கு மறந்துடாதீய்ங்க. பெத்தவங்க நமக்கு குடுத்த பெரிய பாடமே அதுதா. நீங்களாவது படிச்சி இந்த குடும்பத்தியும் ஊரையும் மாத்த பாருங்க.” 

 

 

“சும்மா தெனம் நிக்க வெச்சு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்காதீய்ங்க. எதுவா இருந்தாலும் உங்க தம்பியோட வச்சுக்கோங்க.” என்ற மொழியன் அவனை மதிக்காது அங்கிருந்து நகர,

 

“மொழி நா என் தம்பி மொழியன் கிட்டதா அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்க.” என்ற வார்த்தையில் நடந்தவனை திரும்பிப் பார்க்க வைத்தான் செந்தமிழன்.

 

 

புன்னகை முகமாக அவனிடம் நெருங்கியவன், “எனக்கு மொத்தோ அஞ்சு தம்பிங்க. என்னிக்கும் கூட பொறந்த மூணு பேத்தியும் மட்டும் தம்பியா நெனைச்சது இல்ல. அதனாலதா தெனமும் நீ நடக்குறத பாத்து என் மனசு வலிக்குது. அண்ண மனச நோக வெக்க கூடாதுனு புரிஞ்சி நீயே ஒருநாள் என் கூட வருவ.” என்றவன் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்.

 

 

செந்தமிழன் மீது எவ்வளவு கோபம் கொள்ள முயன்றாலும் அவனது புன்னகையும் பேச்சும் கவிழ்த்து விடுகிறது என்ற எண்ணம் அவனுள்.

மச்சக்காளையின் சகோதரர்கள் இருவருக்கும் அடிக்கடி தோன்றும் விஷயமும் கூட. இவன் மீது மறைமுகமாக அன்பு உண்டானதையும் உணரத்தான் செய்கிறார்கள். 

 

இருந்தும் பகை கொண்ட வீடு அதை வெளிப்படையாக காட்ட மறுக்க, அந்தப் பகையை மாற்றும் அன்பு தன்னிடம் இருப்பதால் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறான் மதுரவீரனின் தம்பி.

 

****

 

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கட்டுப்பட்ட சிறு கிராமம் சிறுமயிலூர். அந்த கிராமத்தில் இப்போதுதான் பரவலான நவீன வசதிகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மின்சாரத்திற்கே அல்லோலப்பட்டு கொண்டிருந்த கிராமம் அது. கிராமமும் அல்லாது நகரமும் அல்லாது நடுவில் சிக்கிய ஊரும் கூட. 

 

 

அந்த ஊரில் பல கட்டுப்பாடுகள்  நடந்தேறிக் கொண்டிருந்தது. அதில் ஒன்று பட்டணம் சென்று படிக்கக் கூடாது என்பது. அதை எதிர்த்து முதலில் போராடியவர் முனுசாமி. அவரது தந்தை அம்மனுக்கு பம்பை அடிக்கும் தொழில் செய்து வந்தவர்.

 

 

கால் சட்டை பரவலாக அறிமுகம் ஆகிக்கொண்டிருந்த சமயம் ஊருக்குள் பந்தாவாக வளம் வந்தார் முனுசாமி. அவர் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் ஆசிரியர்கள் மேற்கொண்டு படிக்க வற்புறுத்த, தந்தையிடம் மல்லுக்கு நின்றார்.

 

 

அவரோ முடியாது என்ற சாதிக்க, செங்கல்பட்டில் இருந்து சென்னை பயணம் மூன்று மணி நேரம் மட்டுமே என்று தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தினார் முனுசாமி.

 

 

தன் கையை மீறப் பார்க்கும் பிள்ளைக்கு கால் கட்டு போட்டார் திருமணத்தை நடத்தி. பெண் பிள்ளைகளுக்கே படிப்பு கேள்விக்குறியாக இருக்கும் இவ்வூரில் இவ்வளவு படித்ததே பெரிய விஷயம் என்ற எண்ணத்தை புகுத்தினார் அவரது தந்தை. முனுசாமி கட்டிக்கொண்ட மனைவியின் பெயர் நாகலட்சுமி.

 

 

ஐந்தாம் வகுப்பை கூட முடிக்காதவர் முனுசாமிக்கு வாக்கப்பட்டு கொத்தடிமை ஆனார். படிக்காமல் அவ்வூரில் முடங்கிய கோபத்தையும் சேர்த்து மனைவிடம் காட்டி அதிகாரம் செய்ய ஆரம்பித்தார். கணவனே அனைத்தும் என்ற கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்ட நாகலட்சுமி முதல் பிள்ளையை பெற்றெடுத்தார்.

 

 

பிள்ளைக்கு ஆறுமுகம் என்று பெயர் சூட்டிய நாகலட்சுமி இல்லற வாழ்க்கையை பல போராட்டங்களோடு நகர்த்தினார். முனுசாமியின் தந்தை காலமாக, தந்தையின் தொழிலை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம். 

 

இளம் வயதில் படிப்பின் மீது இருந்த ஆர்வம் குறைந்து ஆண் என்ற அதிகாரம் முளைக்க ஆரம்பித்திருந்த வயது அவருக்கு. அதற்கேற்றார் போல் சிறு குரல் உயர்த்தினாலே மனைவி அடங்கிப் போக, அவர் வைத்த சட்டமே வீடும், தொழிலும் என்றானது.

 

 

பம்பை உடுக்கை அடிக்க அடிக்கடி வெளியூர் சென்று வந்தவர் மொத்தமாக மாதக் கணக்கில் வெளியூரில் தங்க ஆரம்பித்தார். கணவனை வேவு பார்க்கும் துணிவு இல்லாத நாகலட்சுமி பொறுமை காக்க, காதை எட்டியது வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் செய்தி.

 

 

வாழ்க்கைக்காக நியாயம் கேட்டு முனுசாமி முன்பு நிற்க, அவரோ சண்முகம் என்ற பிள்ளைக்கு தந்தையாகத் தான் பதில் சொன்னார். பக்கத்து ஊரில் வசிக்கும் மாரியம்மாவை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார் முனுசாமி. கூடவே அதற்கு சாட்சியாக சண்முகத்தையும் பெற்றிருந்தார்.

 

 

தன் வாழ்க்கைக்காக கெஞ்சி கதறிய நாகலட்சுமி ஊரார் முன்பு நிறுத்தினார் நியாயம் கேட்டு. ஒரு குழந்தை பிறந்த பின்பு என்ன செய்ய முடியும் என்று பஞ்சாயத்து முனுசாமி பக்கம் நின்று விட, விஷயம் தெரிந்து விட்டதால் ஒரே ஊரில் இரு மனைவியையும் வைத்து எதிரெதிர் வீட்டில் வாழ ஆரம்பித்தார்.

 

 

என்ன இருந்தாலும் தந்தை பார்த்து வைத்த மனைவி என்பதால் நாகலட்சுமியிடம் அன்பு குறைந்தது முனுசாமிக்கு. அதற்கு மாறாக மாரியம்மாவோடு இல்லற வாழ்க்கை சுமுகமாக நகர்ந்து பெண் பிள்ளையும் பிறந்தது. அதற்கு ராசாத்தி என்று பெயர் சூட்டியவர் செல்லம் அதிகமாக கொடுத்து வளர்த்தார்.

 

 

காலங்கள் நகர்ந்து பெரியவர்களின் உயிரை மாய்த்துக் கொண்டது. மின்னல் தாக்கிய மரம் மீளாது மறைந்த கிளையோடு காட்சியளிக்கும் என்பது போல் பெரியவர்கள் சென்ற பின்பும் அவர்கள் உருவாக்கிய போர்க்களம் தொடர்ந்தது.

 

 

 

ஆறுமுகம் சண்முகம் இருவரும் அடித்துக் கொள்ளாத நாளே இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையோடு தான் பகலையும் இரவையும் கடப்பார்கள். அதிலும் தந்தை முனுசாமியின் தொழிலை இருவரும் பின்பற்ற, யார் அதில் சிறந்தவர்கள் என்ற போட்டி நாளுக்கு நாள் சூடு பிடித்தது. 

 

 

ஒருவர் கைக்கு வரும் வேலையை மற்றொருவர் தட்டி பறிப்பது, சுற்று வட்டாரங்களில் அவதூறு பரப்புவது,  தொழில் நடக்கும் இடத்தில் ஆட்களை அனுப்பி சச்சரவு வர வைப்பது என அவர்கள் அட்டூழியங்கள் தொடர்ந்தது. இருவரையும் ராசாத்தி தான் அடக்கிக் கொண்டிருந்தார்.

 

 

உடன் பிறந்த அண்ணனை விட ஆறுமுகத்திடம் அதிக அன்பு கொண்டிருந்தார். ஆறுமுகமும் ஒரு கட்டத்தில் அந்த அன்புக்கு அடிபணிந்து விட, சண்முகத்தின் எரிச்சலுக்கு ஆளானார் இன்னும். தங்கையை தன்னிடமிருந்து பிரிக்க பார்ப்பதாக அவரும், தாயின் வாழ்வை நாசமாக்கியதாக இவரும் தாக்கி கொண்டனர்.

 

 

இருவரின் பெற்றோர்களும் ஏதோ புண்ணியம் செய்துவிட்டு சென்றிருந்தார்கள் போல திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தது. ஆறுமுகம் ஆண்டாளுக்கு மதுரவீரன் முதலில் பிறக்க, ஓர் ஆண்டு கழித்து மச்சக்காளையன் பிறந்தான் சண்முகத்திற்கு.

 

 

அடுத்ததாக செந்தமிழன் பிறக்க, ராசாத்திக்கு திருமணம் முடிக்கப்பட்டது பக்கத்து ஊரில் இருக்கும் முருகேசனுக்கு. இருவரின் வாழ்வு ஆனந்தமாக சென்று கொண்டிருக்கும் பொழுது ஆண்டாளுக்கு இமையவன் பிறந்தான்.

 

 

கலவரத்தோடு கலவரமாக அடுத்த சில வருடங்களில் ஆறுமுகத்திற்கு எழில்குமரனும், சண்முகத்திற்கு சிலம்பனும் ஒரே வருடத்தில் பிறந்தார்கள். 

 

 

ஒத்த வயதுடைய இருவரும் வரவேற்றார்கள் முருகேசன் ராசாத்தியின் வாரிசை. அந்த காலத்தில் பிள்ளைப்பேறு சகஜம் என்பதால் உடனே சண்முகத்திற்கு மூன்றாவது பிள்ளை மொழியன் பிறந்தான். அவன் பிறந்த நொடியே தாய் விண்ணுலகம் சென்று விட, மூவரையும் தனி ஆளாக வளர்த்தார்.

 

 

கடைசியாக கவிநேயன் ஆண்டாள் வயிற்றில் உதிக்க, அத்தோடு போதும் என்று ஐந்து காளைகளைப் பெற்ற இருவரும் முடிவு எடுத்து விட்டனர். 

 

 

தந்தை வழியே வந்த மதுரவீரனும் மச்சக்காளையனும் அவர்களைப் போலவே இளமையில் இருக்க, செந்தமிழன் படிப்பை கையில் எடுத்து பொறுமை காத்தான். 

 

இமையவன் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். அண்ணன் வழியே விவசாய படிப்பை படித்துக் கொண்டிருக்கிறான்.

 

 

எழில்குமரன், சிலம்பன் இருவரும் பிகாம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள். மொழியன் பன்னிரண்டாம் வகுப்பும், கவிநேயன் பத்தாவது வகுப்பையும் பயின்று கொண்டிருக்கிறார்கள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்