Loading

அத்தியாயம் 5

உணவு நேரம் முடிந்த பின்பும் சிறிது வேலை இருக்க. அவைகளை முடித்துவிட்டு மணியைப் பார்த்த ரகுவரன், அது நாலரை மணி என்றதில் நேற்று சந்திக்க வேண்டும் எனக் கூறிய மருத்துவர் பிரபுவின் எண்ணுக்கு அழைக்கத் தொடங்கினார். அழைப்பு முடியும் தருவாயில் ஏற்கப்பட.
“ஹலோ டாக்டர். நான் ரகுவரன் பேசுறேன்.” எனத் தன்னை அறிமுகம்   செய்து கொண்டார்.
“தெரியுது சார். உங்க நம்பர சேவ் பண்ணி தான் வச்சிருக்கேன்.” என்ற மருத்துவரின் பதிலில் ஆசுவாசம் பெற்றவராக.

“சந்திக்கணும்னு சொன்னிங்களே.?”என்று ஞாபகப்படுத்த,

“ஆமா நீங்க எனக்கு கூப்பிடலைன்னா நானே உங்களுக்கு ஃபோன் பண்ணி இருப்பேன். இன்னும் கொஞ்ச நேரத்துல கிளினிக் கிளம்புறேன். அங்கேயே மீட் பண்ணுவோமா.” எனக் கேட்க,
“அங்க பேஷண்ட்ஸ் வருவாங்களே. உங்களுக்குத் தொந்தரவா இருக்காதா.?” என்றவரின் கேள்விக்கு.
“அதுவும் சரிதான்.” என இவர் யோசிக்கும்போதே
“உங்களுக்கு எப்போ முடியும்னு சொல்லுங்க. அந்த நேரம் நான் வரேன்.” என்றவரின் பதிலுக்கு,

“எப்ப முடியும்னு சொல்ல முடியாது. பேஷண்ட்ஸ் வரவைப் பொறுத்துதான். உங்களால இன்னும் ஒரு கால் மணி நேரத்துல கிளம்பி வர முடியுமா.?”
“வர முடியும் சார். எனக்கு வேலை முடிஞ்சிடுச்சு. நீங்கப் பேசணும்னு சொன்னதுனால நான் ஏற்கனவே பர்மிஷன் வாங்கி தான் வச்சிருக்கேன்.”
“அப்போ ஒன்னு செய்யுங்க. என் கிளினிக் பக்கத்திலேயே ஒரு காபி ஷாப் இருக்கு அங்க வந்துடுங்க.” எனக் கூற. அதன்படி ரகுவரனும் கிளம்பி சென்றார்.

இவர் சென்ற நேரம் அங்கே ஏற்கனவே பிரபு அமர்ந்து இவருக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
ஒருவருக்கு ஒருவர் இருவருமே இதற்கு முன் பார்த்துக் கொண்டதில்லை என்பதால் காபி ஷாப்பின் உள்ளே சென்ற ரகுவரன் அலைபேசியில் பிரபுவிற்கு அழைக்க. அதுவரை மெனு கார்டை புரட்டிக் கொண்டிருந்தவர், அலைபேசியின் அழைப்பில் யாரெனப் பார்த்து விட்டு நிமிர்ந்து பார்க்க. அங்கு ரகுவரன் மட்டுமே காதில் அலைபேசியை வைத்துக்கொண்டு சுற்றி முற்றி பார்த்துக்கொண்டிருந்தார். அதிலேயே அவர் தான் ரகுவரன் என்பதை தெரிந்து கொண்ட பிரபு. “மிஸ்டர் ரகுவரன்.” என்று அழைத்தபடியே கைகளை ஆட்ட, இவரும் பதிலுக்குக் கைகளை ஆட்டிவிட்டு புன்னகையுடன் அவரை நோக்கி  வந்தார்.

பிரபுவின் எதிரில் அமர்ந்த ரகுவரன்.
“சாரி சார் எனக்கு உங்களை யாருன்னு தெரியல.? நீங்க எப்படி என் மகளைப் பற்றிப்  பேசுறீங்கன்னும் புரியல.? இதுக்கு முன்னாடி நாம எங்கேயாவது சந்தித்து இருக்கோமா..?” எனக் கேள்வியாகக் கேட்ட ரகுவரனை பார்த்துப் புன்னகைத்த பிரபு,
“இல்ல சார். இன்னைக்கு தான் நாம இரண்டு பேரும் முதல்முறையாகச் சந்திக்கிறோம்.”என்றவர் வசுந்தரா வேலை செய்யும் குழந்தைகள் பள்ளியின் பெயரைக் கூறியவர் “அங்கதான உங்க பொண்ணு  வேலை பார்க்கிறாங்க.” எனக் கேட்க ஆம் என்பதாகத் தலையசைத்தார் ரகுவரன் யோசனையுடன்.

இன்னும் குழப்பம் தீராமல் அவர் அமர்ந்திருப்பதை பார்த்த பிரபு “முதல்ல நான் என்னைப் பற்றிச் சொல்லிடுறேன். நான் பிரபு. என்னுடைய மனைவி அனுபமா. அவங்களும் டாக்டர் தான். நாங்க ரெண்டு பேருமே சொந்தமாகக் கிளினிக் வச்சி பொது மருத்துவம் பார்த்துக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு ஒரே ஒரு பையன் பேரு சஞ்சய் குமார். இன்ஜினியர் ஆக வேலை பார்க்கிறான்.” என்று விட்டு அவன் வேலை செய்யும் கம்பெனியின் பெயரையும் கூறியவர். மேலும் தொடர்ந்தவராக.

“நல்ல வேலையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம் வாங்குறான். எந்தக் கெட்ட பழக்கமும் அவனுக்குக் கிடையாது.” என மகனைப் பற்றிக் கூடுதல் தகவலைக் கூறியவர். பின்பு,
“உங்க மக வசந்தரா வேலை செய்யும் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு எதிரில் தான் எங்க வீடு இருக்கு. என் மகன் சஞ்சய்க்கு உங்க மகள ரொம்ப பிடிச்சிருக்குன்னு  சொன்னான். விரும்புறதா சொன்னான். அதுதான் உங்கள பாத்து பேசிப் பையனோட ஆசையை நிறைவேற்றி வைக்கலாம்னு வந்தேன்.” என்றார் விளக்கமாக.

“ஓஹோ.!” என்றவர் பின் மெதுவாக,
“உங்க மகனை என் மகள் வசுந்தராவும் விரும்புறாளா.?” எனக் கேட்டார். அடைக்கும் தொண்டையை சரி செய்து கொண்டு.

“அய்யய்யோ…! சார். அதெல்லாம் இல்ல. இன்ஃபேக்ட் என் பையன்  விரும்புவதே உங்க பொண்ணுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒரு பெண்ணை லவ் பண்ணி அவ பின்னாடியே போய் அவகிட்ட சம்மதம் வாங்கும் திறமை எல்லாம் என் பையனுக்குக் கிடையாது. அப்படியெல்லாம் செய்ய அவனுக்கு வரவும் வராது. அதுதான் கஷ்டமே இல்லாம நேரா அவங்க அம்மாகிட்ட போயி எனக்கு இந்தப் பொண்ண பிடிச்சிருக்கு. பேசிக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு பொறுப்பைக் கொடுத்துட்டான். மகன் சொல்லை மீறாத தாய் இல்லையா.? அவங்க நேரா வந்து என்கிட்ட சொல்லிட்டாங்க. நானும் மனைவி சொல்லைத் தட்டாத நல்ல கணவனா உங்கள பார்த்துப் பேச ஏற்பாடு செய்து, இதோ, இப்போ உங்க முன்னாடி வந்து  உட்கார்ந்து இருக்கேன்.?” என்றார் பெரிதான சிரிப்புடன்.

அவர் கூறிய தொனியில் புன்னகைத்தவருக்கு  பெரிதான ஆசுவாசம்.தங்கள் மகள் காதல் என்ற நிலைக்குச் செல்லாததில். அப்படி அவள் விரும்பி இருந்தால் அவன் நல்லவனாக இருப்பின் இவருக்கு அதில் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை தான்.ஆனால் சும்மாவே அவளைக் கொட்டும் மனைவியை நினைத்துத்தான் இவரின் கவலையெல்லாம். அந்த வகையில் மகள் தப்பித்துக் கொண்டாள் என்ற பெரிய ஆசுவாசமும், நிம்மதியும். அந்தப் பாவப்பட்ட தகப்பனுக்கு.

முதல்முறையாகப் பார்த்துப் பேசும் பிரபுவை மிகவும் பிடித்திருந்தது ரகுவரனுக்கு. அவரின் குடும்பமும் மகனும் மனதிற்கு இதத்தையே அளித்தார்கள். அதுவும் மகளை விரும்பி வரும் சம்மந்தம் எனும்போது இரட்டிப்பு மகிழ்வு தான் இவருக்கு. என்ன ஒன்று அவர்களின் வசதி நிலைதான் இவருக்குச் சிறிது யோசனையைக் கொடுத்தது.

ஆனாலும் அவரின் அணுகுமுறை இவருக்குப் பிடித்தே இருந்தது. இருந்தாலும் உடனே என்ன கூறுவது எனப் புரியாமல் இவர் தன் போல் யோசனையில் ஆழ்ந்திருக்க

“என்ன சார்.?அவ்வளவு யோசிக்கிறீங்க. நீங்க வேணும்னா எங்க குடும்பத்தைப் பற்றி, என் பையனைப் பற்றி வெளியே விசாரிச்சுக்கோங்க. அதுக்கப்புறம் உங்க முடிவைச் சொல்லுங்க எனக்கு எந்த ஒரு  ஆட்சேபனையும் இல்லை.” “அச்சச்சோ.! சார். அப்படி எல்லாம் எதுவும் இல்லை.” என்று வேகமாக மறுத்தவரை பார்த்தவர்
“அப்புறம் என்ன யோசிக்கிறீங்க.?” “இல்ல, உங்க அளவுக்கு வசதி இல்ல என் கிட்ட.” என்று தயக்கமாகக் கூறியவரை பார்த்தவர்
“வசதி எல்லாம் என்ன சார்.? பசங்களுக்கு புடிச்சிருக்கா.? அது மட்டும் போதும். இப்போ எல்லாம் பிரேக்கப், டிவோர்ஸ் எல்லாம் ரொம்ப சாதாரணமா நடக்குது. இதுல பசங்களுக்கு பிடிச்ச மாதிரி கல்யாணம் செய்தால், ஏதோ அவங்க விரும்பி ஒன்றி வாழ ஆரம்பிப்பாங்க. பிள்ளைங்க. சந்தோஷம் தானே சார் நமக்கு முக்கியம்.” என்றவரின் கேள்வியில்,
“கண்டிப்பா டாக்டர்.”என்று அவரும்  உடனடியாக ஒப்புக்கொண்டார்  அதற்கு.

“சரி நீங்க வீட்ல போய்ப் பேசிட்டு, ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்க. நாங்க சம்பிராயதமாகப் பொண்ணு பார்க்க வரோம். என் மருமகளை இன்னும் நான் பார்க்கவே இல்லை. அவங்க அம்மாக்கு மட்டும் தன் வருங்கால மனைவியைக் காமிச்சிருக்கான் என் மகன். எனக்கு மட்டும் காட்டவே இல்லை… என்னதான் இருந்தாலும் அம்மா தான் முக்கியம் இந்தப் பசங்களுக்கு.” என்று சோகமாகக் கூறியவரை பார்த்துச் சிரித்த ரகுவரன்.

“எனக்கு அந்த மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்ல டாக்டர். ஏன்னா மூணுமே பெண் குழந்தைகள்தான் எனக்கு.”என்றார்.
“சரி சீக்கிரமே சம்மந்திகளாகப் போறோம். அதனால இனிமே சார், டாக்டர் அப்படின்னு ஃபார்மலா கூப்பிடுறது எல்லாம் நிறுத்திட்டு. நீங்க என்னைப் பிரபுன்னு கூப்பிடுங்க. நான் உங்களை ரகுன்னு கூப்பிடுறேன் சரிதானே.” என்றார் சிரிப்புடன்.
“நல்ல ரைமிங்கா பேசுறீங்க. டாக்டர்.” எனக் கூற வந்தவர்பின்
“பிரபு.” என மாற்றி அழைத்து, சிரித்து இருவரும் கைக்கூலுக்கி, வீட்டில் பேசிவிட்டு விரைவில் தொடர்பு கொள்வதாகக் கூறிவிட்டு, விடை பெற்றார்கள். மகிழ்வுடன்.

கணவர் வருவதற்கு முன்பே கிளினிக்கில் காத்திருந்தார் அனுபமா. அன்று சிகிச்சை பெறுபவர்களின் வருகை குறைந்து இருந்தது. வந்த இரண்டு மூன்று நபர்களையும் அவரே பரிசோதித்து அனுப்பி இருந்தார். வசுந்தராவின் தந்தையை சந்தித்த பேசப் போவதை பற்றி மனைவியிடம் கூறிவிட்டே சென்று இருந்தார் பிரபு. அங்கு என்ன பேசிக் கொண்டார்கள் எதிர்வினை எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாகக் காத்திருந்தார் கணவனின் வருகைக்காக.
அவர் எதிர்பார்த்தது போல் பிரபுவும் விரைவாக வந்துவிட ஆவலோடு கணவனின் முகத்தைப் பார்த்தவருக்கு அங்கு நடந்ததை சுருக்கமாகக் கூறிய பிரபு விரைவில் அவர்கள் வீட்டில் பேசிவிட்டு தகவல் சொல்வதாக ரகுபதி கூறிச் சென்றதை கூறியவர். விரைவில் மகனின் திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்ற அவர் எதிர்பார்த்த நல்ல செய்தியையும் கூறி மனைவியின் முகத்தில் ஜொலி ஜொலிப்பை உண்டாக்கினார் பிரபு.

வசுந்தராவின் இல்லத்தில் மகள்கள் இருவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் கோகிலா. அவர்கள் மூவரும் காபி குடித்த காலி டம்ளர்கள் சோபாவின் முன்பு இருந்த டீப்பாவில் காய்ந்து போய் இருந்தது.
வீட்டிற்குள் நுழைந்த ரகுபதிக்கு அதுவே முதலில் கண்களில் பட்டது.
பெரிய மகளும் வந்திருப்பதை பார்த்தபடி வீட்டிற்குள் நுழைந்த ரகுபதி
“குடிச்ச டம்ளரை  தான் எடுத்துட்டு போய்க் கழுவி வைக்க முடியாது உங்களால. அதைக் கொண்டு போய்க் கழுவ போடக் கூட முடியாதா.?”என்று சற்று கண்டிப்புடன் கூறிய வரை பார்த்தவர்களின் பேச்சு நின்று அங்கு நிசப்தம் ஏற்பட்டது.

“வசுந்தரா.” எனக் கோகிலா அழைக்க “எதுக்கு இப்ப அவளைக் கூப்பிடுற.? இந்த வீட்டில வேலைக்காரி மாதிரி அவ பார்த்த வேலையெல்லாம்  போதும். இனி ராணி மாதிரி வாழற வாழ்க்கை வரப் போகுது அவளுக்கு.” என்றார் பெருமிதத்துடன்.
“ராணி மாதிரி வாழ்ற வாழ்க்கையா.?” என்ற கேள்வியுடன்., இவர் கூப்பிடும் குரல் கேட்டு முன் வந்து நின்ற மகளை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு கேட்ட கோகிலாவை பார்த்தவர்.

“ஆமா ஒரு டாக்டர் பேசினார் இல்ல. அவரைச் சந்திச்சு பேசிட்டு தான் வரேன். அவரோட மகனுக்கு நம்ம வசுந்தராவை ரொம்ப பிடிச்சு போயிருச்சாம். அதனால கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்னு கேட்டிருக்காங்க. நானும் வீட்டில் கலந்து பேசிட்டு தகவல் சொல்றேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன்.”என்றார் மகிழ்வுடன்.

“என்னது டாக்டர் மாப்பிள்ளையா.?”என்று அதிர்வுடன் கேட்ட வசுமதியை பார்த்த ரகுபதி. மகளுக்குப் பதில் கூறும் முன்பே இடையிட்ட கோகிலா.
“வீட்டில் கலந்து பேசிட்டு சொல்றதா தான சொல்லி இருக்கீங்க. நல்லதா போச்சு. இந்தச் சம்பந்தம் நமக்கு வேண்டாம்.”என்ற கோகிலாவை அதிர்வுடன் பார்த்தார் ரகுபதி. அதற்கு நேர் மாறாக  நிம்மதியுடன் பார்த்தார்கள் வசுமதியும், வசந்தியும்.

மனைவி கூறியதில் அதிர்ந்தவர். சில நிமிடங்களிலேயே சுதாரித்துக் கொண்டு கோபமாகக் கோகிலாவை பார்த்து ரகுபதி
“நீ நிஜமாகவே இவளைப் பெத்தவ தானா.? ஒரு பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையாதான்னு ஒவ்வொரு தாயும் கவலைப்பட்டுட்டு இருக்கும்போது, கடவுளா பார்த்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர்றான். அது உனக்குப் பொறுக்கல. அதை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று யோசிச்சிட்டு இருக்கே. சீய் நீ எல்லாம் ஒரு தாயா.?”என்று ஆக்ரோஷத்துடன் அவரை நெருங்கிக் கேட்க.

தந்தை, அன்னையை திட்டுவதை பொறுக்காத வசுமதி,
“இப்ப என்ன தப்பா சொல்லிட்டாங்க அம்மான்னு நீங்க இவ்ளோ கோவப்படுறீங்க அப்பா.?”என்று கேட்டாள்.
“உங்க அம்மா சொல்றது தப்புன்னு உனக்குக் கூடத் தெரியலையா.?”என்று மகளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு கேட்க.

“அம்மா அப்படி சொன்னதுல எந்தத் தப்பும் தெரியலப்பா.” என்றாள் வேகமாக.
“அம்மா என்னையும் யோசிச்சு தான் இந்தப் பதிலைச் சொல்லி இருப்பாங்கன்னு  நான் நினைக்கிறேன்.”
“உன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க என்னமா இருக்கு.? உன்னைக் கட்டிக் கொடுத்தாச்சு. நீ நல்லா வாழ்கிற.அப்புறம் என்ன.?”

“ஆமாப்பா நீங்கச் சொன்ன மாதிரி என்னைக் கட்டிக் கொடுத்தாச்சு. ஆனா யாருக்கு கட்டிக் கொடுத்திருக்கீங்க.? அம்மாவுடைய அண்ணன் பையனுக்குக் கட்டிக் கொடுத்திருக்கீங்க.”
“தெரிஞ்ச கதையை ஏன் மா இப்போ சொல்லிட்டு இருக்க.?”
“உங்களுக்குப் புரிய வைக்கிறதுக்கு தான்பா.நீங்க என்னைக் கட்டிக் கொடுத்த இடம் இப்போ உங்க செல்ல மகளுக்குக் கொண்டுட்டு வந்த பணக்கார வீட்டு சம்பந்தம் போல இல்ல. அவங்க நடுத்தரமான மிடில் கிளாஸ்.”
“ஆமா அதுக்கு.” என்று யோசனையும் கோபமும்மாகக் கேட்ட தந்தையை பார்த்தவள்.

“என்னப்பா.? அதுக்கு என்னன்னு  ரொம்ப அசால்டா கேக்குறீங்க. நாளைக்கு இதனால் எங்களுக்குள்ள ஏற்றத் தாழ்வு வராதா.? எங்க மாமியார் வீட்ட உங்கள் புது சம்மந்திங்க  மதிப்பாங்களா.? எனக்கோ உங்க மருமகனுக்கோ ஒரு மரியாதை குறைவு வந்தால் அது நல்லா இருக்குமா.? இது எல்லாம் யோசிச்சு தான் அம்மா இந்தச் சம்பந்தம் வேண்டாம்னு சொல்றாங்க…” என்றவளின் பதிலில் அயர்வாக அவளைப் பார்த்தவர்.

“ஏன் மா…? உனக்குச் சாதாரண வீட்டில் சம்பந்தம் பண்ணதுனால அவளுக்கும் அதே மாதிரி தான் பண்ணனும்னு சொல்ல வரியா. ஏன் அவளுக்கு ஒரு நல்ல இடத்துல இருந்து வசதி கூடுன இடத்துல இருந்து அவங்களே சம்பந்தம் பேசி வரும்போது அதை வேண்டாம் என்று நம்ம தட்டி கழிச்சிரணுமா.? அவளுக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததே  அப்படின்னு நீங்க யாரும் சந்தோஷப்பட மாட்டீங்க அப்படித்தானே. என்ன ஜென்மங்கள் நீங்க எல்லாம்.? அந்தப் பையன் அவரா விரும்பி வசுந்தராவை திருமணம் செய்யக் கேட்கிறார். நான் கூட ரொம்ப வசதியான வீடாச்சே, அப்படின்னு யோசிச்சேன். ஆனா அவங்க ரொம்ப பெருந்தன்மையா வசதி பற்றி எல்லாம் நீங்க எதுவுமே யோசிக்காதீங்க. உங்க பொண்ண மட்டும் கட்டி குடுங்க போதும்னு சொல்லிட்டாங்க.” என்றவரின் வார்த்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கோகிலாவிற்கு அவர் கடைசியாகச் சொன்ன.

‘உங்க பெண்ணை மட்டும் கட்டி கொடுங்க போதும்.’ என்ற வார்த்தையே காதில் எதிரொலித்துக் கொண்டு இருந்தது. அப்படி என்றால் மகளுக்கு எந்த நகை நட்டும், சீரும் செய்யத் தேவையில்லை. அவளுக்கென்று சேர்த்து வைத்த பத்து பவுன் நகைகளோடு கணவர் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் மாமியாரின் அந்தக் கால பதினைந்து பவுன் நகையையும் சின்ன மகளுக்குப் போட்டு அவள் திருமணத்தையும் சிரமமின்றி நடத்தி விடலாம் என்று கணக்கு போட்டவர்.

“அப்ப அவங்க எந்த நகையையும் சீரும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாங்களா.? இதல்ல நீங்க முதல்ல சொல்லணும்.” என்று புன்னகையுடன் கூறியவர்.
“அவங்க நம்மகிட்ட எதுவுமே எதிர்பார்க்கலைன்னா நல்லது தான். நம்மளால முடிஞ்சதுன்னு கைக்கும் கழுத்துக்கும் ஒரு நாலு அஞ்சு பவுன்ல நகை போட்டு அனுப்பிடலாம்.
இவளும் நாம செய்யணும்னு பெருசா எதிர்பார்க்க மாட்டா. அவங்களும் எதிர்பார்க்கலைன்னு சொல்றீங்க இவளுக்குன்னு சேர்த்து வச்சிருக்கிறத நம்ம வசந்தியின் திருமணத்திற்கு எடுத்து வைத்து விட வேண்டியது தான்…” என்று கூறியபடி நிம்மதி பெருமூச்சு விட்டவரை அற்ப புழுவைப் பார்ப்பது போலப் பார்த்த ரகுபதி.

“அவங்க பெருந்தன்மையா அப்படித்தான் சொல்லுவாங்க. அதுக்காக நம்ம பொண்ண வெறும் கையோடு அனுப்புறதா.? அவளுக்குன்னு சேர்த்து வைத்த நகைகள் அவளுக்கு மட்டும் தான். அதுல எந்த மாற்றமும் இல்லை. நீ என்ன யோசிக்கிறேன்னு  எனக்கு நல்லா தெரியும். அவளுக்கு உண்டானது அவகிட்ட போய்ச் சேரும். யார் தடுத்தாலும் இதுல மாற்றம் இல்லை. என் பொண்ண சீரும் சிறப்புமாகக் கட்டி கொடுக்கறதுக்கு அவளுடைய அப்பாவா நான் உயிரோட தான் இருக்கேன். யார் கூட இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. இந்தக் கல்யாணம் ரொம்ப சிறப்பா நடக்கும். வர ஞாயிற்றுக்கிழமை அவங்களை பொண்ணு பார்க்க வரச் சொல்லப் போறேன். உங்களுடைய கேவலமான சிந்தனைகளை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சிட்டு பெற்ற மகளுக்கு, கூடப் பிறந்தவளுக்கு கல்யாணம் என்கிற சந்தோஷத்தோட இருக்கிறது என்றால் இருங்க. இல்லையா இடத்தைக் காலி பண்ணுங்க.” என்று சுடக்கிட்டு எல்லோரையும் பொதுவாகப் பார்த்துக் கூறிவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றார் வேகமாக.
இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வசுந்தராவுக்கு கண்ணீர் மட்டும் மட்டு படாமல் வழிந்து கொண்டே இருந்தது.

செல்லும் கணவனைக் கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்த கோகிலாவை பார்த்த வசந்தி.
“அம்மா விடுங்க இதுக்கெல்லாம் கோபப்பட்டு டென்ஷன் ஆகாதீங்க. இவளை எல்லாம் இப்படி யாராவது கல்யாணம் பண்ணா தான் உண்டு. இவ போனால்தான் எனக்கு லைன் கிளியர் ஆகும். ஏதோ இவ முடி கொஞ்சம் பெருசா இருக்கிறதுனால அந்த அழகுல மாப்பிள்ளை மயங்கிட்டாரோ என்னவோ.?” என்று நக்கலாகக் கூறினாள்.

தன்னைவிட பெரியவள் என்ற பாசமும் மரியாதையும் சிறிதும் இல்லாமல். தன்னை நக்கல் செய்யும் தங்கையை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவை பார்த்த வசுமதியும்
“ஆமா அம்மா, இவ சொல்றது உண்மைதான். இவள எல்லாம் விரும்பிக் கல்யாணம் பண்ற அளவுக்கு இவகிட்ட அப்படி என்ன இருக்கு.? வெறும் நீள முடியைத் தவிர. அதுல தான் மயங்கி இருப்பார் அந்த வீணா போன மாப்பிள்ளை. இவ கல்யாணம் பண்ணிட்டு போனா தான் உங்களுக்கும் ஒரு பாரம் குறையும். நம்ம வசந்திக்கும் நல்ல இடமா அமைஞ்சு வரும். அதனால வந்தவரைக்கும் லாபம்னு இவளைக் கேட்டு வரவங்களுக்கே கல்யாணம் பண்ணி அனுப்புங்க. அதுதான் வசதியைப் பற்றி எல்லாம் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லன்னு அந்த வீட்ல இருக்குறவங்க சொல்லி இருக்காங்களே.அதைக் குடுங்க இதைக் குடுங்க என்று எந்தப் பிக்கல் பிடுங்கலும் இருக்காது. நீங்களும் பிரச்சனை இல்லாம எனக்கும் வசந்திக்கு மட்டும் என்ன வேணுமோ பார்த்துச் செய்யலாம்.”  என்றாள் தங்கைக்குக் கிடைக்கும் நல்வாழ்வை நினைத்துச் சிறிது பொறாமையும். தங்கள் வீட்டில் அவ்வப்போது அதை, இதை வாங்கி வா எனக் கூறும் மாமியாரை மனதில் நினைத்துக் கொண்டும்.

மகள்கள் இருவரும் ஓதும் வேதத்தைக் கேட்டுக் கொண்டிருந்த கோகிலாவிற்கும் அவர்கள் சொல்வது சரி என்று பட்டது. இவளைக் கட்டிக் கொடுப்பதும் தங்கள் கடமைகளில் ஒன்று தானே இப்படி அவர்களே கேட்டு வரும் சம்பந்தம் அமைந்ததும் நன்றுதானென நினைத்தவராக

“ஆமாமா அதுவும் சரிதான்.” என்றவர் தாயும் உடன் பிறந்தவர்களும் பேசிக் கொண்டிருப்பதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவை பார்த்தவர்
“என்ன இங்கிருந்து வாய் பார்த்துகிட்டே இருக்கே.? போ, போய் நைட்டு டிபன் வேலையைச் செய். பேசிப் பேசிச் சோர்ந்து போயிட்டேன். பசிக்குது ரொம்ப எனக்கு.” என்றபடி சோபாவில் அமர்ந்து கொண்டார் கால்களை நீட்டிக்கொண்டு.

இரவு உணவின்போது சாப்பிடுவதற்கு வந்த அமர்ந்த சஞ்சய்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனைவிக்குக் கூறுவது போல அன்று ரகுபதியை கண்டு பேசியதை விலாவாரியாகக் கூறிக் கொண்டிருந்தார் பிரபு.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்ல. அவன் ஒன்றும் கூறாமல் எழுந்து செல்வதை பார்த்த பிரபு கண்களில் மனைவிக்குச் சாடை காட்ட
“சஞ்சய்.” என்று அழைத்த அன்னையை திரும்பிப் பார்த்தவன் கேள்வியாக அவரை நோக்க. ‘ஹ்ம்ம்க்ம். என்னன்னு  கேட்டிட மாட்டாரு துரை.? அப்படி கேட்டுட்டா இப்ப சாப்பிட்ட சப்பாத்தி எல்லாம் கீழ கொட்டிடும் இல்ல அது தான்.’ என்று முனுமுனுத்த பிரபு மனைவியையும் மகனையும் கோபத்துடன் கண்களைச் சுருக்கி பார்த்துக் கொண்டிருக்க.

“அப்பா சொன்னது கேட்டுச்சா.?” என்ற மனைவியின் கேள்விக்கு
“ம்ம்.” என்ற ஒற்றை வார்த்தையில், வார்த்தை என்று சொல்வதும் தவறுதான் ஒற்றை எழுத்தில் பதில் கூறியவன் தலையை மேலும் கீழும் ஆட்ட
“வர ஞாயிற்றுக்கிழமை நம்ம போய்ப் பெண்ணைப் பார்த்துட்டு வந்துடலாம். சரிதானே.” என்று மீண்டும் மகனிடம் சம்மதம் கேட்டு உறுதி பெற்றுக் கொள்ள நினைத்த அனுபமாவை பார்த்த சஞ்சய்,
“நான் எதுக்குமாம் மா.? நான் தான் ஏற்கனவே பொண்ண பாத்துட்டேனே திரும்ப நான் எதுக்கு வந்து பாக்கணும். நீங்க மட்டும் பாத்துட்டு கல்யாண தேதியை முடிவு பண்ணிட்டு வாங்க.” என்று கூறியபடியே மேலே ஏறிச் சென்ற மகனை ஆயாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெற்றவர்கள் இருவரும்.

“என்னடி சொல்லிட்டு போறான் உன் பையன்.?” என்று மனைவியிடம் தன் ஆதங்கத்தை கொட்டிய பிரபுவிற்கு “நீங்களும் கேட்டுட்டு தான் இருந்தீங்க. அவன் என்ன சொல்லிட்டு போனான்னு.?” என்று பதில் கூறினார் அனுபமாவும்.
“இவன் அந்தப் பொண்ண பார்த்துட்டான் சரி. அதேபோல அந்தப் பொண்ணு இவன பார்த்துதான்னு தெரியணும் இல்ல. இவனுக்கு அந்தப் பொண்ண பார்த்தவுடனே புடிச்சிருச்சு. அந்த மாதிரி அந்தப் பொண்ணுக்கும் இவனைப் பார்த்தவுடனே பிடிக்கணும்ல.பிடிக்காமல் போயிடுச்சுன்னா.?”
“அதெல்லாம் பிடிக்கும். அவ ஏற்கனவே என்னைப் பார்த்து இருக்கா.” என்ற படியே மாடியின் விளிம்பில் நின்று தந்தைக்கு பதில் கூறியவன் தன் அறையை நோக்கிச் சென்றான். முதல் முதலாகத் தன்னவள்  தன்னை பார்த்து விட்டு அரண்டு ஓடியதை நினைத்துச் சிரித்துக்கொண்டே.

“என்னடி இவன் இப்படி இருக்கான்.? அந்தப் பொண்ணு இவனைப் பார்த்துடுச்சு சரி. அவங்க வீட்ல இருக்குறவங்க எல்லாம் பார்க்க வேண்டாமா.? அவங்க அப்பா, அம்மா பார்க்க வேண்டாமா? மாப்பிள்ளையை பார்க்காமலேயே பொண்ண கட்டி குடுத்துடுவாங்களா.?” எனக் கேட்டவருக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த அனுபமா பின்பு ஏதோ முடிவு எடுத்தவராக,

“சரிங்க முதல்ல நாம போய்ப் பொண்ண பார்ப்போம். அதுக்கு அப்புறமா அவங்கள நம்ம வீட்டுக்கு வர வச்சு இவன காமிப்போம். அதுதான் ஒரே வழி. இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாது.” எனக் கூற.
“அவங்க மாப்பிள்ளை வரலையான்னு கேட்டா நாம என்ன பதில் சொல்றது.?” என இன்னும் கோபம் தீராமல் கேட்ட பிரபுவைப் பார்த்தவள்
“அவசரமான வேலைன்னு ஏதாவது சொல்ல வேண்டியது தான்.” “ஞாயிற்றுக்கிழமையிலும் வேலையா.?”
“இப்படி வக்கீல் மாதிரி வளைச்சு, வளச்சு என்னைக் கேள்வி கேட்காதீங்க. நீங்க ஒரு டாக்டர் நியாபகம் வச்சுக்கோங்க.” என்று கூறிய அனுபமா

அவங்க ஏதாவது கேட்டாங்கன்னா எங்க வீட்டையும் நீங்கப் பாக்கணும் இல்லையா.? உங்க பொண்ணு வாழப் போற வீடு. அப்படியே வந்து மாப்பிள்ளையையும் பார்த்துக்கோங்கன்னு நாம சொல்லிட்டு வர வேண்டியது தான்.” என்று அன்றைய சம்பவத்திற்கான தீர்வைக் கண்டுவிட்ட நிம்மதியில் கூற.

“வேற வழி. நல்லா வந்து சேர்ந்திருக்கீங்க பாரு அம்மாவும் பிள்ளையும்.” என்ற படி எழுந்து சென்றார் பிரபுவும்.
“கல்யாணம் முடியறதுக்குள்ள இதுங்க ரெண்டு கிட்டயும் என்னெல்லாம் பாடுபடப் போறேனோ  நான்.” என்று நினைத்து அழுத்தப்படி அமர்ந்து கொண்டார் அனுபமா.

காத்திருப்போம் நாமும்..

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்