Loading

அத்தியாயம் 45

ஆடவனின் நெருக்கம் கொடுத்த புதிய உணர்வை ஒதுக்கி விட்டு, கதவைத் திறந்தாள் உத்ஷவி.

சிசிடிவி ஜாமரை உபயோகித்ததால், பெண்கள் மூவரும் மாஸ்க்கை கழற்றி விட்டு உள்ளே நுழைந்தவர்கள் நேராக நூலகத்திற்கு சென்றனர்.

அங்கோ, நூலகக் கதவுக்கு ஃபிங்கர் பிரிண்ட் சிஸ்டம் இருக்க, “அதான பார்த்தேன்.” எனக் காய்ந்த ஸ்வரூப், ‘ஹேக் பண்ணுடி” என்று அதிகாரமாக உத்தரவிட்டான்.

“எதே… ட்ரை பண்ணிப் பாக்குறேன்.” என்ற உத்ஷவி, மடிக்கணினி மூலம் முயன்று, சில நிமிடங்களில் கதவை திறந்தாள்.

“ஸ்வரூ ரெண்டு நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள உள்ள போயிட்டு வந்துடனும். இல்லன்னா டோர் தானா லாக் ஆகிடும். மறுபடியும் ஹேக் பண்றது கஷ்டம்.” என்றவள், அவனது பதிலை எதிர்பாராமல் மடிக்கணினியை விஹானாவிடம் கொடுத்து விட்டு விருட்டென உள்ளே செல்ல, “ஏய்…” எனக் கடிந்த ஸ்வரூப்பும் உள்ளே சென்றான்.

அவளோ உள்ளே சென்று அங்கும் இங்கும் தேட, “எங்க இருக்கு புக்?” எனக் கேட்டதில், “இந்த ரெண்டாவது ஷெல்ப்ல தான் இருந்துச்சு டைனோசர். இப்போ காணோம்.” என்று குழம்பினாள்.

“ஹே டோர் லாக் ஆகப் போகுது. நீ வா” என அவளைப் பிடித்து இழுக்க,

“நீ போ. நான் அந்த ஷெல்ப்ல தேடிட்டு…” என்னும் போதே, “சப்புன்னு அடிச்சுடுவேன் வாடி” என அவளை இழுத்து வரும்போதே கதவு பாதி மூடிக்கொண்டது.

புயல் வேகத்தில் கண்ணில் பட்ட மனிதனின் மனநிலை சார்ந்த புத்தகம் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு, அவளை முதலில் வெளியில் தள்ளி விட்டு, அதன் பிறகே அவன் வந்தான். அத்தனை வேகமாய் வந்தும், அவனது கால் கதவில் மாட்டிக்கொள்ள, சிறிது நைந்தும் விட்டது.

வலியில் முகம் சுருங்கி அவன் அங்கேயே அமர்ந்து விட, நூலகத்தில் இருந்து பீப் சத்தமும் கேட்டது.

சஜித்தும் ஜோஷித்தும் பதறி அவனைத் தூக்க வர, “இங்க இருக்குறது நல்லது இல்ல. உடனே வெளில போகலாம் வாங்க…” என்று வலியை பொறுத்துக் கொண்டு எழுந்தான்.

உத்ஷவி தான் அவனுக்கு ஏற்பட்ட அடியில் திகைத்து, “கால் வீங்கிட போகுது ஸ்வரூ… நீவி விடாம” எனப் பேசி முடிக்கும் முன், அடிக்குரலில் “உன்னை போன்னு சொன்னேன். சொல்றதைக் கேட்டுப் பழகு!” என்று கடினத்துடன் அதட்டினான்.

அவள் விழித்தபடி நிற்க, விஹானா தான் அவளை இழுத்து வர வேண்டியதாகிப் போயிற்று.

உள்ளே ஆட்கள் வரும் அரவம் கேட்க, அனைவரும் யார் கண்ணிலும் படாமல் வெளியில் சென்று விட்டனர்.

ஜோஷித் காரை ஓட்ட, சிறிது தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு, பின்னால் அமர்ந்திருந்த ஸ்வரூப்பிடம், “இப்ப பெயின் எப்படி இருக்குடா?” எனக் கேட்டான் வருத்தமாக.

“ம்ம் பரவாயில்ல.” என்றவனின் வலி சிறிதும் குறையவில்லை என்றது அவனது சுருங்கிய முகத்திலேயே தெரிய,

“உத்ஷவி அது எப்படி பரவாயில்லாம இருக்கும். இந்நேரம் இரத்தம் கட்டிருக்கும். முதல்ல ஆயின்மென்ட் போடு.” என்று உள்ளுக்குள் எழுந்த பதற்றத்தை வெளியில் காட்டாமல் கூற, அவளை அறைய கையை ஓங்கினான் ஸ்வரூப் அவ்தேஷ்.

எப்போதும், எந்த அடிக்கும் அஞ்சாதவள், அவனது கோபம் தன்னைத் தாக்க கண்ணை இறுக்கி மூடிக் கொண்டாள்.

கோபத்தை அடக்க இயலாத ஸ்வரூப் தான், பக்கவாட்டில் இருந்த ஜன்னலை நங்கென்று குத்திக்கொள்ள, அதில் லேசாய் கீறல் விழுந்தது. அவனது கையும் அல்லவா காயம் கண்டது. ஜோஷித்தும் சஜித்தும் அவனைத் தடுத்திட, அவனோ உத்ஷவியின் மீது கனலைக் கக்கினான்.

“உன்னை அதிகப்பிரசங்கித்தனம்” செய்யாதன்னு ஏற்கனவே சொல்லிருக்கேன் விஷா. நானா இருந்ததுனால சரியாப் போச்சு. இதுல நீ சிக்கி இருந்தா, அப்படியே போய் சேர்ந்துருப்ப. ‘வா’ ன்னு சொன்னா வர மாட்டியா?” எனக் கடிந்தான்.

அவனுக்கு ஏற்பட்ட வலியை விட, அவள் இதில் மாட்டி இருந்தால் என்னவாகி இருக்கும் என்ற தவிப்பே அதிகம் இருந்தது அவனது வார்த்தைகளில்.

அது புரியாமல், “நான் உள்ள மாட்டி இருந்தாலும் உன்னைப் போட்டு குடுத்து இருக்க மாட்டேன். இடைல சிக்கி செத்துருந்தாலும் உன் மேல பழி போட மாட்டேன். ஏதோ ஒரு ஆர்வத்துல உண்மையைக் கண்டுபிடிக்கணும்ன்னு கொஞ்சம் ஆர்வக்கோளாறுல நடந்துக்கிட்டேன். அதுக்கு என்னமோ, உன் சொத்தை அழிச்ச மாதிரி கத்துற.” என்று உதட்டைச் சுளித்தாள்.

கோடி கோடியாய் சொத்துக்களும் பதவியும் ஊரைக் காக்கும் கடமையும் மானத்திற்கும் மரியாதைக்கும் அஞ்சும் குடும்பத்தையும் கூட இரண்டாம் பட்சமாய் எண்ணி, அவனது மொத்த சொத்தாக அவளை மட்டுமே எண்ணும் ஆடவனின் நெஞ்சத்தை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது? அவனே அவனை கொஞ்ச கொஞ்சமாய் உணர்ந்து, அதிர்ந்து கொண்டு இருக்கிறானே! அவளில்லா உலகம்… உயிரில்லா வெற்றுடல் போல அல்லவா அவனை நடைபிணமாக்கும். அப்படி ஒரு நினைவே அவனுக்குக் கசந்திட, அவளது கூற்றில் அவனுக்கு ஆத்திரம் ஆத்திரம் ஆத்திரம் மட்டுமே சூழ்ந்தது.

உத்ஷவி பேசியது அவளது தோழிகளுக்கே கோபத்தை வரவழைக்க, அக்ஷிதா, “இவளை நாலு அடி போடு ஸ்வரூ. எதுக்கு வந்தோம்ன்னே தெரியாம, முழு இன்வெஸ்டிகேஷன் ஆபிஸரா தன்னை நினைச்சுட்டு இருக்கா.” என்று தோழியை முறைக்க,

விஹானாவும், “இங்க யாரும் உனக்கு அவார்ட் தரப்போறது இல்ல டார்ல்ஸ். அப்படியே தந்தா கூட உன் உயிரைப் பணயம் வைக்காத.” என்று அதட்டினாள்.

“எதுக்கு இப்ப எல்லாரும் ஓவரா இமேஜின் பண்ணிக்கிறீங்க. நான் திருடும் போதே, ரிஸ்க் எடுத்து தான் போவேன். ஒரு விஷயத்தை முடிக்கலைன்னா, முடிச்சே ஆகணும்ன்ற அர்ஜ் என்னை சும்மா விடாது. எவ்ளோ ரிஸ்க் வேணாலும் எடுப்பேன்.” என்றவள், ஸ்வரூப்பின் சலனமற்ற முகத்தைக் கண்டு அவள் முகமும் தொங்கிப் போனது.

“இவ்ளோ நாளா திருடுறதுக்கு ரிஸ்க் எடுத்தேன். இப்போ, உன் ஊர் பசங்களை காப்பாத்த ரிஸ்க் எடுக்க மாட்டேனா?” என்றாள் முணுமுணுப்பாக.

தோழிகளுக்காக அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தவள் இப்போது அவனது முகத்தில் தெரியும் சிறு சுளிப்பைக் கூட ஏற்க இயலாமல், உண்மையைத் தெரிந்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தாள்.

முன்பு, அவனது நெற்றியில் ஏற்பட்ட இரத்தத்தைக் கூட அசட்டையாகப் பார்த்தவள், இப்போது ஏற்பட்ட இரத்தக்கட்டில் இடிந்தே போனாள்.

வருத்தம் அவள் முகத்தில் கூட அப்பட்டமாக எதிரொலித்தது. இதெற்கெல்லாம் காரணத்தை ஆராய அவள் விரும்பவில்லை. காரணமென்று ஒன்று அவளுக்குத் தோன்றவே இல்லையே!

மெல்ல மெல்ல கோபம் மட்டுப்பட, “இதான் லாஸ்ட். இன்னொரு தடவை இந்த மாதிரி அசட்டு துணிச்சல்ல ரிஸ்க் டேஷ் எதுவும் எடுக்கக் கூடாது. காட் இட்.” என்று அவள் மீதிருந்த பார்வையை எடுக்காமல் உத்தரவிட, அவன் கூறிய வாசகத்தின் ஆழத்தை உணராமலேயே வேகமாக தலையசைத்தாள்.

அதன் பிறகே, அவனது சிவந்த வதனம் சற்று இயல்பானது.

அருகிலேயே உணவகம் ஒன்று இருக்க, ஸ்வரூப் “நீங்க போய் சாப்பிட்டுட்டு எங்களுக்கும் வாங்கிட்டு வாங்க.” என்று சகோதரர்களை பார்த்து கூறிட, அவர்கள் இருவருமோ ஸ்வரூப்பின் நடவடிக்கைகளை குழப்பத்துடன் பார்த்தனர். அப்படியும் அவனது காதல் மனதை பற்றி அவர்களது புத்திக்கு உரைக்கவில்லை.

“நீ காலுக்கு மருந்து போடு” என்று விட்டு ஆடவர்கள் இறங்க, பெண்களும் கீழே இறங்கினர்.

மற்றவர்கள் சென்றதும், “காலை காட்டு மருந்து போடலாம்.” என்று உத்ஷவி கையோடு கொண்டு வந்திருந்த முதலுதவிப் பெட்டியில் இருந்த மருந்தை எடுத்திட, அவன் சாவகாசமாக காலை அவள் மீது போட்டுக் கொண்டான்.

அவளும் வெகு கவனமாய் அவனது காலைப் பிடித்து மருந்திட்டு நீவி விட, அவன் திமிராக அமர்ந்திருந்தான்.

அதில் அவளது துடுக்குத்தனம் தலை தூக்க, “இப்படி உன் காலைபி பிடிக்க வேண்டிய நிலைமை வரும்னு தெரிஞ்சுருந்தா உன் வீட்டுப்பக்கம் நான் வந்துருக்கவே மாட்டேன் டைனோசர்” என வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“இதுக்கேவா. இன்னும் நிறைய இருக்கே. எனக்கு நீ செய்ய வேண்டிய சேவையும், எனக்கு அடங்கி நீ கெஞ்சப்போறதும்…” குறும்பு மின்னும் வார்த்தைகளால், குதர்க்கமாகப் பேசி முறுவலித்தான் ஸ்வரூப்.

அவன் கூறியதன் அர்த்தம் புரியாமல், “உனக்கு நான் சேவை செய்யணுமா? க்கும். அதெல்லாம் கனவுல கூட நினைக்காத. அதுவும் உங்கிட்ட நான் ஏன் கெஞ்சப் போறேன்.” என்றாள் எகத்தாளமாக.

“கெஞ்ச வச்சுட்டா?” ஒற்றைப் புருவம் உயர்த்தி சவாலாக அவன் வினவ,

“முதல்ல கெஞ்ச வை பாப்போம்” என்று நாக்கைத் துருக்கினாள்.

“அப்டி ஒரு நாள் கெஞ்ச வச்சுட்டா, தினம் தினம் நீ கெஞ்சிக்கிட்டே தான் இருக்கணும் விஷா” என சிரிப்பை அடக்கிக்கொண்டு ஸ்வரூப் கூற,

“தினமும் உன்னை யாரு பார்க்க போறாவாம். இந்த பிரச்சனை முடிஞ்சதும், நான் பறந்து போய்டுவேன். தனியா உட்காந்து தண்ணி குடிச்சு கூட எவ்ளோ நாள் ஆகுது தெரியுமாடா. என் தனிமையவே சிதைச்சுட்டீங்கடா.” என வெகுவாய் வருத்தம் கொள்ள, ஸ்வரூப் கண்ணைச் சுருக்கி கடுகடுத்தானே தவிர அடுத்த வார்த்தை உதிர்க்கவில்லை.

——-

உணவகத்தைப் பார்த்து திகைத்த அக்ஷிதா, “என்னது வெஜ் ஹோட்டலா? எனக்கு சாப்பாடே வேணாம் போங்கடா…” என வெளிநடப்பு செய்திட, சஜித் சிரித்து விட்டான்.

“எதிர்த்த கடைல சாண்ட்விச் இருக்கும் கேடி வா…” என்று அவள் கையைப் பிடித்து சாலை மாறிச் செல்ல, அவளும் “நிஜமாவே வாங்கித் தர போறியா காட்ஸில்லா…” என்று குதூகலத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டு சென்றாள்.

“அடிப்பாவி… சாப்பாடுன்னு சொன்னதும் என்னைக் கழட்டி விட்டுட்டு போய்ட்டா.” என்று விஹானா இடுப்பில் கை வைத்து நிற்க, “இன்னும் சாப்பிட்டு முடிக்கிற வரை, அவளுக்கு உன் ஞாபகமே வராது சீட்டர்.” என்று கிண்டலடித்தான் ஜோஷித்.

“அது என்னமோ உண்மை தான்…” என ஒப்புக்கொண்ட விஹானாவின் இதழ்களில் சிறு புன்னகை.

“உனக்கு வெஜ் ஓகே வா?” எனக் கேட்டபடி நிற்க, அந்நேரம் சடசடவென மழை பொழிய ஆரம்பித்தது.

பத்தடி தூரத்தில் கடை இருந்தாலும் அங்கு சென்று சேர்வதற்குள் இருவரும் தொப்பலாக நனைந்து விட்டனர்.

“இதென்ன, பேய் மழையா இருக்கு திடீர்ன்னு.” என்ற விஹானாவின் நீர்த்துளிகள் பதிந்த முகம், அவனுக்குள் மோகத்தைத் துளிர் விட வைத்தது.

மேலுதட்டைக் கடித்து தனது உணர்வுகளை அடக்கியவன், “இந்த ஹோட்டல்ல ரூமும் இருக்கும்ன்னு நினைக்கிறேன் விஹா. உன் ட்ரெஸ் டிக்கில இருக்குல்ல. அதை எடுத்துட்டு வரேன். மாத்திடு.” என்றதும்,

“மறுபடியும் மழைக்குள்ள போக போறியா? வேணாம் விடு. காஞ்சுடும்.” என மறுத்திட, “இது எப்ப காயிறது?” என்றவன், வேகமாக காருக்கு ஓடினான்.

—–

“நல்லவேளை ஹோட்டலுக்குள்ள வந்துட்டோம். இல்லைன்னா மழை நம்மளை செஞ்சுருக்கும் சஜூ.” என நிம்மதி பெருமூச்சு விட்ட அக்ஷிதா, உணவை ஆர்டர் செய்ய, ‘ஜஸ்டு மிஸ்ஸு. ஒண்ணா நனைஞ்சுருக்கலாம்.’ என தனக்குள் முணுமுணுத்து தலையைக் கோதிக் கொண்டான் சஜித்.

“என்ன சொன்ன?” தண்ணீரைக் குடித்தபடி அவள் கேட்க, “பிரைட் ரைஸ் சூடா இருக்குமான்னு கேட்டேன்” என்றான் கடுப்பாக.

“அதெல்லாம் சூடா தான் இருக்கும். இல்லன்னா, சண்டை போட்டுட மாட்டேன். உனக்கு ப்ளெய்ன் ரைஸ் பிடிக்குமா, செஷ்வாங் பிடிக்குமா?” என அவள் தீவிரத்துடன் வினவ, “ரொம்ப முக்கியம்.” என நொந்து கொண்டவன், “சாப்பாடை பத்தினா மட்டும் நல்லாப் பேசு. விசாரிக்க போற இடத்துல கம்முன்னு இரு.” எனக் கலாய்த்தான்.

அவளோ அசடு வழிந்து, “எது தெரியுதோ அதை பத்தி தான பேச முடியும். இதே எப்படி பிக் பாக்கெட் அடிக்கிறதுன்னு கேளு, உனக்கு க்ளாஸே எடுப்பேன்.” என்றாள் பெருமையாக.

அவன் கடுமையுடன் முறைத்து, “இனிமே பிக் பாக்கெட்டுன்ற வார்த்தை உன் வாயில வந்து இருந்து வந்தா, பல்லுத் தெறிச்சுடும் அக்ஷிதா.” என இறுக்கத்துடன் அதட்டினான்.

அவன் பெயர் சொல்லி அழைத்தது அவள் மனதைத் தாக்கியதோ என்னவோ, சட்டென சுருங்கிப்போன முகத்துடன், “சரி சரி பேசல.” என்றவள், பேச்சை மாற்ற, “எனக்கு பிசிக்ஸ் பத்தி கூட தெரியுமே. காலேஜ் படிக்கும் போது பிசிக்ஸ்ல ரொம்ப இன்டரஸ்ட். இவ்ளோ ஏன் இந்த கலவரத்துக்கும் பிஸிக்ஸ்க்குமே ஒரு ஒற்றுமை இருக்கு.” என்றதும் அவன் சுவாரஸ்யத்துடன் அவளை ஏறிட்டான்.

அக்ஷிதா சர்வர் கொண்டு வந்த சாண்ட்விச்சை வாயில் திணித்தபடி, “மனுசன் மண்ணுல இருந்து தான் படைப்பட்டது உண்மைன்னா, மனுஷனும் அவனோட மைண்டும் இந்த உலகத்துல ஒரு பொருள் தான் சஜூ. பிசிக்ஸ்ல ஒரு பொருளோடு சமநிலை தவறும் போது, இல்லன்னா அதோட பொசிஸனை மாத்தி வைக்கும் போது, அதோட தன்மை, பண்பு, ரேஷியோன்னு எல்லாமே மாறிடும். அதே போல தான் மனுஷனும்.

கண்ணாடிப் பாத்திரம் மாதிரி கவனமா கையாளனும் அவனோட மைண்டை. மைண்டும் ஒரு திங்க் தான். அது சமநிலைல இருந்து தவறும் போது, ஒரு அழுத்தத்தை அல்லது பயத்தை போர்ஸ் பண்ணி குடுக்கும் போது, அதோட சுயத்தன்மையை இழந்து மொத்தமா கொலாப்ஸ் ஆகிடும். அப்படி கொலாப்ஸ் ஆன மைண்ட்ன்னால தான் வியர்டா பிஹேவ் பண்ணி செத்துப் போய் இருப்பாங்களோன்னு எனக்கு ஒரு டவுட் இருக்கு.” என்று அசால்ட்டாக பேசி விட்டு, சாண்ட்விச்சைக் கடிக்க, சஜித் அசந்து விட்டான்.

அத்தியாயம் 46

“பிரில்லியண்ட் கேடி.” என அவளது தலையைக் கலைத்து விட்டுப் பாராட்டிய சஜித், “ஏண்டி திருடி சேர்த்த காசுலயாவது படிப்பை கன்டின்யூ பண்ணி இருக்கலாம்ல” எனக் கேட்டான் ஆதங்கமாக.

அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தவள், “ஆமா, நான் திருடுற அஞ்சு பத்து காசுல அமிஞ்சிக்கரைல இடம் வாங்கி போட்டு இருக்கேன் பாரு. அதெல்லாம் திங்க தங்கவே காலி ஆகிடும். சென்னைல வாடகை எவ்ளோன்னு தெரியுமா உனக்கு.” என்று முறைத்தாள்.

அவன் முகம் வாடிப்போக, “அது மட்டும்மில்லாம என் சர்டிபிகேட்ஸ் ஒன்னு கூட என்கிட்ட இல்லையே. அதெல்லாம் எப்படி திரும்பி வாங்குறதுன்னு கூட எனக்குத் தெரியல. அதான் படிப்புக்கு புல் ஸ்டாப் வச்சுட்டேன்.” என்றதும், “ம்ம்” எனக் கேட்டுக்கொண்டவன், அதற்கு பதில் ஏதும் கூறவில்லை.

—-

காருக்குப் போகும் போதே, ஹோட்டலில் இருந்து குடை வாங்கிக் கொண்ட ஜோஷித், ஸ்வரூப்பிடம் கொடுத்து, “ரெண்டு பேரும் ஹோட்டலுக்கு வாங்க. நீயும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ஸ்வரா.” என்றான் அவன் கால் வீக்கத்தைப் பார்த்து.

“நீ முதல்ல தலையை துவட்டு ஜோ. எப்படி நனைஞ்சு போயிருக்க பாரு.” என்று தமையனாக அதட்டிட, “துவட்டிக்கிறேன்டா.” என்றபடி, காரில் இருந்த பேகை எடுத்துக் கொண்டு வந்தவன், மீண்டும் நனைந்திருக்க, அங்கேயே அறையும் புக் செய்தான்.

“வா…” என விஹானாவின் மீதான பார்வையைக் கவனத்துடன் தவிர்த்தவன், அவளை உடை மாற்றக் கூறி விட்டு, பக்கத்து அறைக்குச் சென்றான்.

வெளி இடங்களில் சுற்றுவதால், கைவசம் சில உடைகளை காரிலேயே வைத்திருந்தனர். அது இப்போது உதவி புரிய, ஜோஷித்தும் குளித்து உடை மாற்றி விட்டு, நேரம் சென்றதால் விஹானாவின் அறைக்குச் செல்ல, அங்கோ அவள் இன்னும் குளியலறையில் இருந்து வெளியில் வரவே இல்லை.

தலையில் அடித்துக் கொண்டவன், “அடியேய்… ஹோட்டல் தண்ணி டேங்கை காலி பண்ணிடாத. சீக்கிரம் வா.” என்றிட,

“இப்ப நான் சீக்கிரம் வந்து என்ன செய்யப் போறேன். எல்லாரும் கிளம்பும் போது சொல்லுங்க. நான் அதுவரை குளிச்சுட்டு இருக்கேன்” என்று சத்தம் கொடுத்தாள்.

அவனோ விழித்து, “அடிப்பாவி. இவ்ளோ நேரம் குளிச்சா ஜன்னி வந்துடும்டி.” என்றிட,

“அதெல்லாம் எனக்கு வராது. ஒரு அஞ்சு சோப்பாவது போட்டு குளிக்காம வெளில வர மாட்டேனாக்கும்” என்று பழக்க தோஷத்தில் கூறி விட,
ஜோஷித்தின் இதழ்கள் ரசனைப் புன்னகை பூத்தது.

“சோப் போட கஷ்டமா இருந்தா சொல்லு. நான் வேணும்ன்னா ஹெல்ப் பண்றேன்.” எனக் கிறக்கத்துடன் வார்த்தைகள் வெளி வர, அவள் திகைத்தாள்.

கூடவே, கன்னங்கள் ரோஜாவாக சிவந்து விட, “தேவை இல்ல பனங்கா மண்டையா. நீ உன் வேலையை மட்டும் பாரு.” என்று திமிராக கூற வந்தாலும், வார்த்தைகள் தந்தியடித்தது அவளுக்கு.

“மவளே… இப்ப மட்டும் நீ குளியலை முடிச்சுட்டு வெளில வரல… நான் சொன்னது தான் நடக்கும்” என பேண்ட் பாக்கெட்டினுள் கையை விட்டபடி சிரிப்பை அடக்கிக்கொண்டு கூறினான்.

அதில் படக்கென கதவைத் திறந்து தலையை மட்டும் வெளியில் நீட்டியவள், “டேய்…! என்ன மிரட்டுறியா?” என முறைக்க முயன்று, அவன் பார்வையில் உறைந்து, அதன் வீச்சைத் தாங்க இயலாமல் சட்டென உள்ளே சென்று விட்டாள்.

அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு, தலையில் துண்டைச் சுற்றிக்கொண்டு வெளியில் வந்தவள், அவனைப் பாராமல் ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன்பு சென்று நின்றுகொள்ள, அவனது பார்வை அவளையே சுற்றி வந்தது.

“மழையிலயும் நனைஞ்சுட்டு, அரை மணி நேரமா தண்ணில நின்னுட்டு இருக்கியே அறிவில்லையா உனக்கு.” என மென்மையாகக் கண்டித்தவனை, நிமிர்ந்துப் பார்க்க இயலாமல் அவள் தடுமாற, அவனும் அவளது தடுமாற்றத்தில் தடம் மாறிப் போனான்.

கால்கள் அவனது பேச்சைக் கேளாமல், அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, விஹானாவின் அடிவயிற்றில் புத்தம் புது உணர்வுகள் நர்த்தனம் ஆடியது.

அவள் முதுகில் உரசும் படி நின்றவன், தலையில் கட்டி இருந்த துண்டை அவிழ்க்க, எச்சிலை விழுங்கியபடி நின்றவளுக்கு, தயக்கமும் நாணமும் சரிபாதியாக துளைத்தெடுத்தது.

இது சரியா தவறா என யோசிக்க இருவருமே விரும்பவில்லை. இந்த நிலை ரசிக்கும்படியாக இருக்க, அவளும் ரசித்தாள், அவனையும், அவனுடனான இந்த பயணம் கொடுக்கும் அனுபவத்தையும். எப்போதிருந்து இந்த ரசனை தொடங்கியதென்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால், அவன் இப்போது அவளுள் ஆழமான தடத்தை ஏற்படுத்தி விட்டான் என்பது மட்டும் புரிந்தது.

எதிர்காலம் இல்லாத இந்த உறவுக்குப் பெயர் வைக்க வழி இல்லாமல், அவனைத் தடுக்கவும் தோன்றாமல் சிலையாகி நின்றாள் விஹானா.

இதழ் துடிக்க பெண்ணவள் நின்றிருந்த கோலம், ஆடவனைப் பித்தாக்கிட, குரலைக் கனைத்தவன், “இத்துனூண்டு முடிக்கு இவ்ளோ பெரிய டர்கி டவலை சுத்தி வச்சுருக்க… எப்படிடி காயும்.” என்றபடி, டேபிள் மீதிருந்த ஹேர் ட்ரையரை வைத்து, அவளது குட்டிக் கூந்தலை காய வைக்கும் பணியில் இறங்கினான்.

முன் ஒருமுறை, ஹேர் ட்ரையரைத் தொட்டதுக்கே தாம் தூமெனக் குதித்தவன் தான்… இப்போது அவனே அவளுக்கு சேவகனாக மாறி இருக்க, விஹானாவிற்கு தான் அது மேலும் தயக்கத்தைக் கொடுத்தது போலும்!

“விடு ஜோஷ். நான் காய வச்சுக்குறேன்.” என்று மறுக்க, அது காதில் விழாதது போன்று, அவள் முடியைக் கலைத்து விட்டு, காய வைத்தான்.

அவனது தீண்டல், மேனியைக் கூச வைத்து, சிலிர்க்க வைத்தது.

அவனும் அவள் மீதிருந்த மோகப்பார்வையை மாற்றினான் இல்லை.

அவர்களது மோனநிலை, கதவு தட்டும் சத்தம் கேட்ட பின்னே தான் கலைந்தது.

—–

ஸ்வரூப் காரில் இருந்தபடியே சஜித்திற்கு போன் செய்து, “சாப்பிட்டீங்களா?” எனக் கேட்க, “சாப்பிட்டுக்கிட்டே இருக்காடா… இன்னும் முடிச்ச பாடில்லை. அநேகமா ரெஸ்டாரண்ட்டை காலி பண்ணிட்டு தான் வருவா போல” என்றதும், ஸ்வரூப்பிற்கும் புன்னகை எழுந்தது.

“சரி, நான் ஹோட்டலுக்கு போறேன். நீங்க முடிச்சுட்டு வாங்க. மழை வேற பெய்யுது.” என்றதும்,

“நாங்க வர்றதுக்குள்ள நின்னுடும்டா. மழை நின்னதும் வரோம். நீ போய் ரெஸ்ட் எடு. மார்னிங் விஜயவாடா போகணும்ல.” என்றான்.

சஜித்தும் அக்ஷிதாவும் சிறு வயது முதலான பல விஷயங்களை என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ஏதேதோ பேசிட, அந்த சுவீட் நத்திங்ஸ் சஜித்தை அவளை விட்டு நகராவிடவில்லை.

ஹோட்டலுக்கு சென்றால், அவள் பாட்டிற்கு தோழிகளுடன் ஐக்கியமாகி விடுவாள் என்பதால், அவளே வேண்டாம் என்றால் கூட உணவுகளை வாங்கி குவித்துக் கொண்டிருந்தான்.

அவளும், வாய் ஓயாமல் பேசியும் சாப்பிட்டுமாக பொழுதை நகர்த்த, அவன் பெண்ணவளின் நயன அசைவில் கட்டுண்டுப் போனான். ஆனால், அவனுக்கு ஏற்பட்ட உணர்வு அவளுக்கும் ஏற்படாது போனது தான், அதிசயித்திலும் அதிசயம்.

—-

“மழை அடிச்சு ஊத்துது டைனோசர். நம்மளும் கொஞ்சம் மழை நிக்கவும் போகலாமா?” என உத்ஷவி கண்ணாடியை வழியே பார்த்தபடி கேட்க,

“செம்ம பசிடி. உனக்கு பசிக்கலையா?” என்றான் அவளை ஊடுருவியபடி.

“பசிக்கலையாவா. விட்டா உன் கையை கடிச்சு சாப்புட்ருவேன். அவ்ளோ பசில இருக்கேன். ஆனா, உனக்கு நடக்க முடியுமா. நல்லா வீங்கி இருக்கே.” என வருத்தம் கலந்த குரலுடன் அவள் கூற, அது அவனுக்கு இனித்தது.

அந்நேரம், அவனது தாய் போன் செய்ய, சட்டென போனை எடுத்தவன், “ம்மா…” என அழைக்க, எதிர்முனையில் சித்தாராவின் சந்தோஷக் குரல் கேட்டது.

“ஸ்வரா… அப்பா கண்ணு முழுச்சுட்டாருப்பா. உன் சித்தப்பாக்களுக்கும் இப்ப பரவாயில்ல. ஐசியூல இருந்து நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க” என்ற சந்தோஷச் செய்தியைக் கூற, அது அவனையும் மகிழ்வாக்கியது.

நிம்மதி பெருமூச்சு விட்டவனுக்கு, விழியோரம் நீர் துளிர்க்க, “அப்பா பேசுனாராம்மா. வீட்டுக்கு எப்போ போகலாம்ன்னு சொன்னாங்க. நான் டாகடர்கிட்ட பேசுறேன்.” என்றதும்,

“அட அதை ஏன்பா கேக்குற. மூணு பேரும் சின்ன பசங்க மாதிரி, எந்திரிச்சதுல இருந்து வீட்டுக்குப் போகணும்ன்னு அனத்திக்கிட்டே இருக்காங்க. அதுவும் உன் அப்பா சொல்ற பேச்சைக் கேட்கவே மாட்டுறாரு. இன்னும் முழுசா சரி ஆகல. அப்சர்வேஷன்ல இருக்கணும்ன்னு டாக்டர் சொல்லிருக்காரு. ஆனா இவரு கேட்டா தான. விட்டா டாக்டரை அடிச்சுப்போட்டுட்டு கிளம்பிடுவாரு போல” என சலித்துக் கொண்டதில், ஸ்வரூப் மனம் விட்டுச் சிரித்தான்.

“அவருக்கு எப்பவுமே ஹாஸ்பிடல்ன்னா அலர்ஜி தானம்மா. முடிஞ்ச அளவு நான் சீக்கிரம் வந்துடுறேன். அதுவரை அவரைப் பொறுமையா இருக்க சொல்லுங்க. அங்க நம்ம ஆளுங்க எப்பவுமே இருப்பாங்க காவலுக்கு. உங்களுக்கு தேவையானது எல்லாம் அங்க வந்துடும்மா.” என்றதும், “நீங்க போன வேலை என்ன ஆச்சுப்பா?” எனக் கேட்டார்.

“கிட்டத்தட்ட நெருங்கிட்டோம்மா. நீங்களும் கவனமா இருங்க. அத்தை மாமா எல்லாரும் இருக்காங்க தான.” எனக் கேட்டதும்,

“ம்ம்… அதெல்லாம் இருக்காங்க ஸ்வரா. பாவம், என் மருமகளுங்களும் ராத்திரி முழுக்க தூங்காம கூடவே தான் இருந்தாங்க. வீட்டுக்குப் போயிட்டு வர சொன்னாலும் கேட்க மாட்டுறாங்கப்பா. உங்களுக்கு கல்யாணம் மட்டும் தான் ஆகல. மத்தபடி, வீட்டு மருமகளுங்களாவே மாறிட்டாங்க.” என பேசிக் கொண்டே சென்றதில், ஸ்வரூப் விழி இடுங்க அமைதியானான்.

அவர் பேசியதெல்லாம் உத்ஷவிக்கும் நன்றாகவே கேட்டது. அவனது மலர்ந்த முகத்தை ரசித்திருந்தவள், அவனை சைட் அடிக்கும் பணியை செவ்வனே செய்ய, ‘பாருடா… ரொம்பத்தான் லவ்வு போல…’ எனப் புருவத்தை உயர்த்தினாள்.

அவனோ உத்ஷவியை அழுத்தத்துடன் பார்த்தபடி, “ம்மா… யார் இருந்தாலும் இல்லைனாலும் நீங்க ஹாஸ்பிடலை விட்டு நகராதீங்க. அப்பா கூடவே இருங்க. சித்திங்ககிட்டயும் சொல்லி, சித்தப்பாங்க கூடவே இருக்க சொல்லுங்க.” என்று கண்டிப்பாய் கூற, “அவரை விட்டு நகரவே இல்லைப்பா நான்.” என்றதுமே சற்று ஆசுவாசமானவன், “நான் நேர்ல வந்து பேசிக்கிறேன்ம்மா. அப்போ அப்போ எனக்கு அப்டேட் குடுத்துடுங்க.” என்று போனை வைத்தவனுக்கு, சினம் பீறிட்டது.

“இருங்கடி… உங்க அண்ணனோட வண்டவாளம் எல்லாம் முழுசா தெரியட்டும். உங்க நாலு பேரையும் தூக்கி போட்டு மிதிக்கிறேன். நடிக்கிறாளுங்க.” என பல்லைக் கடித்துக் கொண்டான்.

“ஸ்வரூ, மழை கொஞ்சம் குறைஞ்சு இருக்கு. குடையை பிடிச்சுட்டு போய்டலாமா?” என உத்ஷவி அவனது எண்ணத்தைக் கலைக்க, இருவரும் இறங்கி ஒரே குடையில் நடக்கத் தொடங்கினர்.

“இந்த காலை ரொம்ப ஊண்டாத ஸ்வரூ..”. என அவனது காலைப் பார்த்தே நடக்க, அவன் வாகாக அவளது தோள் மீது கையைப் போட்டுக்கொண்டான்.

அவள் நிமிர்ந்து முறைக்க, “குடையை தூக்கிப் பிடிடி. சாரல் அடிக்குது.” என அதிகாரம் வேறு செய்ய, அவன் கையில் குடையைக் கொடுத்தவள், “ஏதோ சைட் அடிச்ச பாவத்துக்கு உனக்கு குடை பிடிச்சுட்டு வந்தா நீ ரொம்ப ஓவராத்தான் போற டைனோசர்.” என வெகுவாய் சிலுப்பிக்கொண்டதில், அதரம் மடித்துப் புன்னகைத்தான்.

அவளை இன்னும் தன்னருகில் இறுக்கிக் கொண்டதில், இருவரின் தோள்களும் ஒன்றை ஒன்று உரசிக்கொள்ள, மண்வாசமும் மங்கையின் வாசமும் கலந்தடித்து ஆண்மகனின் கட்டுப்பாடுகளுக்கு ஆட்டம் காட்டியது.

மண்ணில் இழைந்து உறவாடும்
மழையைப் போல…

முதல் சொட்டும்
கடைசி சொட்டும்
பூமிக்கே சொந்தமாவது போல…

என் முதலும் முடிவும்
நீயென ஆனாய்…

முதலும் முடிவும் நீ
மேகா!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
96
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.