Loading

தீயின் இரை தீயோ?!

ஐசியூவிலிருந்து வெளியே வந்த டாக்டர் ஆண்டனி, நேரே ருத்ரனிடம் வந்தார்.

“குண்டு அவங்க நெஞ்சுல பாய்ஞ்சிருக்கு. நல்லவேளையா இதயத்துக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆனா, இதயத்துக்குக் கொஞ்சம் மேல குண்டு துளைச்சிருக்கு.

அதனால உடனே ஆபரேஷன் பண்ணி குண்டை வெளிய எடுக்கணும். கூடவே இதயத்துக்குப் போற ரத்த நாளங்கள்ல எவ்வளவு பாதிப்பு உண்டாகியிருக்குன்னு தெரிஞ்ச பின்னாடி தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்.” என்று கூறிவிட்டு அவர் செல்ல, அக்னியை அவசரமாக அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தச் சில மணிநேர அறுவைசிகிச்சையோ, ருத்ரனுக்குப் பல யுகங்களாகத் தோன்ற, உள்ளுக்குள் பெரும் அழுத்தம் அவனை அப்படியே புதைக்கத் துவங்கியது.

கடற்கரையில் தங்களது வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அவ்விடம் வந்தனர் அமரேந்தரும், அர்ஜுனும்.

அங்கே ருத்ரன், நாற்காலியில் அப்படியே தோய்ந்து போய் அமர்ந்திருப்பதைக் கண்டவர்களுக்கு நெஞ்சுக்குள் நடுக்கம் பிறந்தது.

வேகமாக அவனிடம் விரைந்த அமரேந்தரோ.. அவனுக்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து, மெல்ல அவனது தோளைத் தொட்டார்.

மெல்ல அவரை நிமிர்ந்து பார்த்தவனோ, எதுவுமே பேசாது பார்த்தது பார்த்தபடி இருக்க, அமரேந்தருக்குத் தான் மனது கேட்கவில்லை.

“சரியாகிடுவா பிரதாப்.. அக்னி சீக்கிரம் சரியாகிடுவா.. நீ கவலைப் படாத..” என்று அவர் கூற, ருத்ரனின் கண்களிலோ சிறு ஆச்சர்யம்!

அதைக் கண்டுகொண்டவரோ, மெல்லத் தலைகுனிந்து.. “நான் இப்பவும் சொல்லறேன்.. எனக்கு அந்தப் பொண்ணு மேல நம்பிக்கை இல்ல..

நம்பிக்கை இல்லைன்றதை விட.. அவ நேரடியாவே சொல்லறா, உன்னைக் கொல்லத் தான் இங்க வந்தேன்னு..

ஆனா.. அவ மேல உனக்குக் காதல் வந்துடுச்சு..

அவளோட கொள்கைகள், நம்பிக்கைகள் வேற.. நம்மளோடது வேற!

எப்படி அவ நம்மளை புரிஞ்சுப்பானு எனக்குத் தெரியல..

ஆனா.. உங்க ரெண்டு பேரோட கண்ணுலேயும் நான் பார்க்கறது அளவுக்கு அதிகமான காதலை.

என்னால இதைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்கவே முடில பிரதாப்!

இந்தப் பதினஞ்சு வருஷத்துல உன்னோட பார்வை இவ்வளவு கனிஞ்சு போய் நான் பார்த்ததே இல்ல..

எனக்கு நீ சந்தோஷமா இருக்கணும்.. உன்ன.. உன்னோட வாழ்க்கையை அழிச்சுட்டேனேன்ற குற்ற உணர்வு எனக்கு ரொம்பவே அதிகமா இருக்கு. அது இந்தக் காலத்துல போகுமோ எனக்குத் தெரியல.

ஏன்னா.. உன்ன இந்தப் பாதைல இழுத்துவிட்டது நான் தான். இது ஒருவழிப் பாதைன்னு தெரிஞ்சும்.. நீ இங்கிருந்து பின் வாங்க முடியாதுனு தெரிஞ்சும்.. இந்தப் பாதையோட முடிவு மரணமா தான் இருக்கும்னு தெரிஞ்சும் உன்ன உள்ள இழுத்துட்டு வந்தது நான் தான்..

ஆனா.. வெறும் முள்ளுச் செடியும், கள்ளிச் செடியுமா இருக்கற இந்தப் பாலைவனப் பாதைல உனக்கே உனக்காகவேன்னு பூத்த ரோஜா அவ.

அவ மேல அமிலத்த ஊத்திட்டு உன்னை என்னால வாழ வைக்க முடியாதுனு எனக்குப் புரிஞ்சுடுச்சு பிரதாப்.

ஆனா.. நீ போற பாதைல மட்டுமில்ல.. அங்க பூத்திருக்கற ரோஜாலையும் முள்ளிருக்கு.” என்று கூறியவர், ஒரு கணம் தன் பேச்சை நிறுத்திப் பெருமூச்சொன்றை விடுவித்தார்.

மீண்டும் தன் பேச்சை அமரேந்தர் தொடங்கிய போது, அவரது குரலில் நிராசை வழிந்தது!

“முயற்சி செஞ்சு பாரு.. அவளுக்கு நம்மளை பத்தி எல்லாத்தையும் சொல்லிப் புரிய வை.

நாம யாருன்னு தெரியாத வரைக்கும் நம்மளை எல்லாரும் தப்ப நினைக்க வாய்ப்புண்டு. ஆனா.. நம்மளை பத்தி தெரிஞ்சா..” என்று சொல்லிக் கொண்டே போனவர், மறுப்பாய் ஒரு தலையசைப்புடன் எழுந்து சென்று விட்டார்.

அவர் ஏன் அப்படி எழுந்து சென்றார் என்று ருத்ரனுக்கும் புரியாமலில்லை.

தன் பக்கத்தில் இருக்கும் நியாயத்ததைக் கூற முனைந்தாலே, ‘கொலைகாரனுக்கு கூட அவன் பக்கம் நியாயம்னு ஒன்னு இருக்கும்.. அதையெல்லாம் கேட்டு இரக்கப்பட முடியாது..’ என்று தானே கூறுவாள்.

அவளுக்கு எல்லாவற்றையும் விட இந்த நாட்டின் மீதிருக்கும் பற்று அதிகம், ருத்ரனுக்கு காளிக்க்ஷேத்ராவின் மீதிருக்கும் பற்றினைப் போல!

செல்லும் அவரையே அவன் வெறித்து நோக்கிக் கொண்டிருக்க, சற்று தொலைவில் நின்றிருந்த அர்ஜுன் அவர் தன்னருகே வருவதைக் காணவும்..

“என்ன மாமா.. ஜி இப்படி இருக்காரு..” என்று கூற, தன்னையும் அறியாது அமரேந்தரின் கண்கள் கசிந்தன.

அதைக் கண்ட அர்ஜுனுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் அதிர்ந்தது!

ருத்ரனைப் பின்தொடர்ந்தே அமரேந்தரை, “மாமா” என்று அழைப்பவன் அவன். ருத்ரன் தான் அவனுக்கு எல்லாமே என்றாலும், ருத்ரனுக்கு எல்லாமுமாக இருக்கும் அமரேந்தரின் மீது ஒரு பிரமிப்பு, மரியாதை எல்லாமே அவனுக்கு அளவுக்கு அதிகமாவே உண்டு.

அப்படிப்பட்டவர் இன்று கலங்குகிறார் என்கவும் அர்ஜுனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அந்த அதிர்வில், “மாமா..” என்று இவன் அழைக்க, மெல்ல கசிந்த விழிநீர், இப்பொழுது பொலபொலவெனக் கொட்டியது.

சட்டென அவனுக்கு முகத்தை மறைக்க, வேறுபுறமாகச் சென்று சுவரோடு ஒண்டியவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பி நின்றான் அர்ஜுன்.

மெல்ல அவரது முதுகை அர்ஜுன் வருடிக் கொடுக்க, அப்படியே திரும்பி அவனைக் கட்டிக் கொண்டார் அமரேந்தர்.

வான் தொட்டு நின்ற இமயம் ஒன்று அப்படியே தூள் தூளாய் காற்றில் கரைந்து பொடிப்பொடியாகப் போனது போன்றதொரு அதிர்வு அர்ஜுனிடத்தில்!

“மாமா.. மாமா..” என்று அவன் அமரேந்தரை அழைத்திருக்க, சற்று நேரம் பொறுத்தே மேலே நிமிர்ந்தவர் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

அர்ஜுன் பிரம்மை பிடித்ததை போல அவரை அப்படியே பார்த்திருக்க, அவரோ..

“பிரதாப்.. என்னோட பிரதாப்போட இந்த நிலைமைக்கு நான் தான் முழுக்காரணம்!

என் அக்கா இத்தனை வருஷமாகியும் என் கூடப் பேசாம இருக்காங்கன்னா.. நான் செஞ்ச பாவம் அவ்வளவு பெருசு!

எப்படியோ போயிருக்க வேண்டிய பிரதப்போட வாழ்க்கையை இப்படி பாழாக்கினது நான் தான்.

என் குழந்தை கண்ணுல இத்தனை நாள், நான் ரத்தவெறியைப் பார்த்திருக்கேன்.. திமிரைப் பார்த்திருக்கேன்.. அவனோட ஆளுமையைப் பார்த்துப் பிரம்மிச்சு போயிருக்கேன்..

அப்போ எல்லாம் எனக்குள்ள ஒரு கர்வம் தான் வரும்!

என்னோட வளர்ப்பு இவன்.. என்னோட பிரதாப் இவன்!

இந்த உலகத்துக்கே சிம்ம சொப்பனமா இருக்கறது என்னோட ப்ரதாப்ன்னு ஒரு செருக்கு இருக்கும்.

அவன் கண்ணுல வழியற திமிரைப் பார்த்தும்.. அவனோட கட்டுக்கடங்காத காட்டாறு மாதிரியான வேகத்துலயும், கோபத்துலையும் என் நெஞ்செல்லாம் பூரிப்புல விம்மும்!

ஆனா.. இன்னைக்கு அவன் கண்ணுல கண்ணீரைப் பார்க்கறேன் அர்ஜுன்!

அந்தக் கண்ணீரோட.. அந்தக் கண்ணீரோட.. நான்.. நான் காதலைப் பார்க்கறேன்!..

இத்தனை வருஷமா பிரதாப்போட வாழ்க்கையைப் பத்தி நான் எவ்வளவு தான் பெருமையா நினைச்சிருந்தாலும், உள்ளுக்குள்ள எங்கயோ ஒரு மூலைல எனக்குள்ள குற்றஉணர்ச்சியும் இருக்கத் தான் செஞ்சுது.

அவன் வாழ்க்கைல காதல், கல்யாணம் இதெல்லாம் இல்லாமலேயே போய்டுமோன்னு நான் கவலைப்பட்டதுண்டு!

ஆனா.. இன்னைக்கு என் பிரதாப் கண்ணுல நான் காதலைப் பார்த்தேன்..

அர்ஜுன்.. என்னால சந்தோஷப்பட முடியலையே.. காதலால அவன் வாழ்க்கை சமநிலை ஆகிடும்னு கனா கண்டுட்டு இருந்தேனே..

இத்தனைப் பெரிய காளிக்ஷேத்ராவை பிரதாப் தோள்ல இறக்கி வச்ச அன்னைக்கு நான் யோசிச்சது ஒண்ணே ஒன்னு தான்.. அது இந்த மக்களோட விடுதலை!

ஆனா.. இன்னைக்கு நான் செஞ்சது தப்போன்னு தோணுது..

அக்னிக்கான பரிதவிப்பு.. அவ கூட ஒரு சாதாரண வாழ்க்கை வாழணும்னு என் பிரதாப் ஏங்கறது அவனோட கண்கள்ல நான் பார்க்கறேன் அர்ஜுன்.

ஆனா.. அது நிச்சயம் நடக்காது.

அவன் ஒரு சாதாரண பொண்ணை காதலிச்சிருக்கலாம்.. ஆனா.. இந்தக் காதல் ஏன் அக்னி மேல பிரதாப்புக்கு வந்துச்சு?

இனி இங்க என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு..” என்று அவர் முகத்தை மூடிக் கொண்டு அழ, அவரையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு இப்பொழுது தான் நிலைமையின் தீவிரமும், அதன் வீரியமும் ஆழப் புரிந்தது.

அவன் திகைத்துப் போய் நின்றிருக்க, அப்பொழுது தான் கவனித்தான், அமரேந்தருக்குப் பின்னால் சற்று மறைவாக ருத்ரன் நின்றுகொண்டிருப்பதை!

அவனைப் பார்த்ததும் அர்ஜுனுக்கு தொண்டை வறண்டுவிட்டது!

சிரமத்துடன் மிடறு விழுங்கிக் கொண்டு, “ஜி..” என்று காற்றாகிவிட்ட குரலில் அவன் கூற, அமரேந்தரோ விலுக்கென்று பின்னே திரும்பினார்.

வந்து நின்ற ருத்ரனைப் பார்த்து அவருக்கும் அதிர்ச்சி தான்.

இதுநாள் வரை அமரேந்தர், ருத்ரனிடம் காட்டியதெல்லாம் வலிமை, மற்றும் ஆளுமையைத் தான்!

அவர் உடைந்து போய், நிலைகுலைந்து நின்றதை பார்த்துக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.

இப்பொழுது அவனுக்காக அவர் கண்ணீர் வடிப்பதை பார்த்து.. அதிலும் வயதில் சிறுவனான அர்ஜுனிடம் இப்படி அழுது புலம்பியதைப் பார்த்து அவன் என்ன நினைப்பனோ என்று அவர் திணறிக் கொண்டிருக்கையில், ஒற்றை விரலசைவில் அர்ஜுனை அங்கிருந்து அகற்றினான் ருத்ரன்!

அவன் அங்கிருந்து அகன்றதும், தன்னையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த அமரேந்தரைப் பார்த்துக் கேலியாய் வளைந்தன ருத்ரனின் இதழ்கள்.

“என்ன மாமா.. என்னைப் பார்த்துப் பரிதாபமா?” என்று கேட்டு இடிஇடியென அவன் நகைக்க.. வேர்வரை தீப்பிடித்தது அமரேந்தருக்கு!

ருத்ரனுக்கு பிடிக்காத ஒரே ஒரு விஷயம்.. “கருணை!”

அவன் யாருக்கும், எதற்கும் இரக்கம் கொண்டதே கிடையாது. கருணை என்ற ஒன்றே இல்லாது, கடும்பாறையாய் அவனது இதயத்தினை இறைவன் படைத்துவிட்டானோ என்று இத்தனை நாட்களாய் ஐயப்பட்டுக் கொண்டிருந்தார் அமரேந்தர்!

அப்படிப்பட்ட ஒருவனைப் பார்த்துத் தான் இரக்கப்பட்டதை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று அவருக்கே உள்ளுக்குள் உதறல் எடுத்தது தான்.

அவர் அவனையே வெறித்திருக்க, ருத்ரனோ தன் சிரிப்பைத் தானே நிறுத்திக்கொண்டு..

“இந்த ஊருக்காக என்னைக் காவு கொடுத்துட்டீங்கனு இரக்கப்படறீங்களா மாமா?

அதுவும்.. என்னை? இந்த ருத்ரனைப் பார்த்தது இரக்கப்படறீங்களா?

மாமா.. நல்ல கேட்டுக்கோங்க.. என்னை யாரும் பலி கொடுக்க முடியாது.. அதே சமயம்.. இது தியாகமும் இல்ல!

நான் ருத்ர பிரதாபன்!

என் ஊரைக் காப்பாத்தறதுக்காகப் பதினஞ்சு வயசுலேயே ருத்ரதாண்டவமாடி, இந்த ஊரு அரக்கனுங்களை வதம் செய்தவன் நான் மாமா!

என்னமோ சொல்லுவாங்களே.. ஒரு நாட்டைக் காப்பாத்தறதுக்காக ஒரு மாநிலத்தைப் பலி கொடுக்கலாம்.. ஒரு மாநிலத்தைக் காப்பாத்தறதுக்காக ஒரு ஊரைப் பலி கொடுக்கலாம்.. ஒரு ஊரைக் காப்பாத்த ஒரு குடும்பத்தைப் பலி கொடுக்கலாம்னு..

அந்த மாதிரி இந்த நாட்டைக் காப்பாத்த என் ஊரைப் பலி கொடுக்கணும்னு நினைச்சா, அது இந்த ருத்ரன் இருக்கற வரைக்கும் நடக்காது மாமா..

ஏன்னா.. இந்த ஊர்ல இருக்கற ஒவ்வொரு உயிரும் என்னோடது!

மாமா.. நான் ரொம்ப சுயநலமான ஆள்! என்னோட சுயநலம் இந்த ஊரைப் பத்தி மட்டும் தான் நினைக்குது. என்னோட சுயநலத்துக்குக் காதல் கீதல் எல்லாம் தெரியாது.

அதே சமயம் இந்தக் காதல் என்னை முழுசா அழிச்சுடும்னு எனக்கு இப்பவே ஆருடம் சொல்லுது மாமா.. அது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான்!

ஆனா.. நான் ரொம்ப பிடிவாதக்காரன்! இந்த ஊர் மக்களுக்கு நல்லது நடக்காம நான் சாக மாட்டேன்!

கவலைப்படாதீங்க மாமா.. என் காதலை நான் பார்த்துக்கறேன்..” என்று கூறிவிட்டு அப்புறம் திரும்பியவன், மீண்டும் சரக்கெனத் திரும்பி..

“இனி ஒரு முறை எனக்காகப் பரிதப்படாதீங்க.. ருத்ரனோட பேருக்கு இருக்கற சூடே குறைஞ்சுட்டா மாதிரி இருக்கு!

ருத்ரன்னா, அவன் நெருப்பு!

அந்தத் தீயோட மகன் நான்!

நெருப்புக்கு யார் மேலேயும் கருணை கிடையாது.. பரிதாபம் கிடையாது!

தீ, தன் கண்ணுல அகப்படற எல்லாப் பொருளையும் தீயாவே மாத்திடும்! அதாவது இந்த நெருப்போட இரை, நெருப்பே தான்!

அதே மாதிரி அந்த நெருப்பு மேல பரிதாபப்படறவங்களும் யாரும் கிடையாது.

இந்த ருத்ரனுக்கு யாரோட பரிதாபமும் வேணாம் மாமா..

அவன் நெருப்பு! அது அப்படியே இருக்கட்டும்!” என்று இறுகிய குரலில் அவன் கூறிவிட்டுச் செல்ல.. அவனையே உறைந்து போய்ப் பார்த்திருந்தார் அமரேந்தர்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்