சொல்லாமல்…! – 04

Loading

 

சொல்லாமல்…!

 

மௌனம் – 04

 

சொல்ல மறந்த கதை..

 

கைக்கடிகாரங்களுக்கென்று,பிரத்தியேகமாய் வடிவமைக்கட்டிருக்கும் கடை அது.விதம் விதமாய்,அத்தனை வசீகரிக்கும் பாங்கில்,கைக்கடிகாரங்கள் வீற்றிருக்க,ஒவ்வொன்றையும் ஆராய்ந்த வண்ணம் பார்த்திருந்தான்,ஆடவன்.

 

அவனுக்கு கைக்கடிகாரங்கள்,என்றாலே அலாதி ப்ரியம்.அதற்கென்றே,ஒரு கலெக்ஷன் வைத்திருப்பவனோ,அடிக்கடி கைக்கடிகாரங்கள் வாங்குவது வாடிக்கை.

 

இதோ,இன்றும் அதற்கென வந்திருக்க,ஒரு வாட்சை கையில் எடுத்து,கடை ஊழியனிடம் அவன் கேட்ட கேள்வியில்,அவன் விழி பிதுங்கிப் போய் விட்டான்.

 

புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவனோ,இத்தனை நுணுக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது திணறிப் போக,அவன் நிலை கண்டு உதவிக்கு வந்த இரு ஊழியர்கள் தான்,ஆடவனின் கேள்விக் கணைகளை சமாளித்ததே.

 

“இந்த வாட்ச் டியூரபல்னு ஏன் சொல்றீங்க..?”

 

“ஸ்டேன்டர்ட் க்வார்ட்ஸ் மூமண்ட்ஸ் தான..? ஸோ ஹை அக்யூரஸி இல்ல..?” வாட்சை கையில் வைத்துக் கொண்டு,அவள் பந்தாட,திண்டாடிப் போயினர்,ஊழியர்கள்.

 

இதில் தான் வந்த வேலையை விட்டு விட்டு,அவனைத் தான் பேய் முழியுடன் பார்த்திருந்தாள்,பெண்ணவள்.அவன் நுணுக்கமும் கேள்வியும் ஆராயும் பாவமும்,அவளை அதீத வியப்பில் ஆழ்த்தின.

 

“என்னடி யோசன..? சீக்கிரம் வாட்ச செலெக்ட் பண்ணு..வீட்டுக்குப் போனும்ல..” தோழியின் உலுக்கலில் தான்,தன்னிலை மீண்டாள்.

 

“நாம பாப்போம் பிடிச்சது எடுப்போம்..இவ்ளோலாம் யோசிக்கிறது இல்ல பா..இவரு வாட்ச் மெக்கானிக்கோ” தனக்குத் தானே முணகியவறு,வாட்சை ஒன்றை கையில் எடுத்துப் பார்த்திட,இங்கோ ஆடவனுக்கு ஊழியர்கள் வேறு மாடலை காண்பித்தனர்.

 

“சார்,நீங்க கேக்கற மாதிரி,இந்த வாட்ச் மாடல் ஓகேவாகும் சார்..” என்று அவர்கள் கூறிய போதிலும்,அவனின் கவனமெல்லாம் முன்பு எடுத்த அந்த வாட்சில் தான்.

 

யோசனையுடன் அவன் திரும்பும் போதே,முதுகு காட்டி நின்றிருந்த பெண்ணவளின் செயலில்,அவன் கருமணிகள் ஒரு கணம் விழி மத்தியில்,அசையாது நிலை கொள்ளலாயின.

 

கடிகார முள் அசையும் சப்தத்தை அவள் கண் மூடி கேட்டுக் கொண்டிருக்க,அவள் செயலாக்கம் அவனுக்கு தன்னையே நினைவூட்டிட,இதழோரம் நெளிந்ததோ எனத் தோன்ற வைக்கும் படியாய் மெல்லியதோர் புன்னகைத் துகள்.

 

பின்னந்தலையை அழுந்தக் கோதியவாறு,தன் விழிகளை அவன் சுழற்றிக் கொள்ள,இதழோரம் சுமந்த புன்னகையை இப்போது விழியோரங்கள் ஏந்தியிருந்தன.

 

இரவின் நிசியில்,மௌனம் சுமக்கும் ஆழ்ந்த அமைதியில், தலையணைக்கு அண்மையில் இடம் கொள்ளும் வாட்சின்,முள் சுழலும் சப்தம் அவனுக்கு இதமான பிடித்தம் மிகுந்த தாலாட்டு.

 

அவனும் முன்பு எடுத்த வாட்சை காதரோம் கொண்டு செல்ல,முள் சுழலும் ஓசையை சில நொடிகள் தன் செவிக்குள் சேர்ப்பித்துக் கொண்டான்.

 

அவனின் நிபந்தனைகள் யாவற்றையும் தாண்டி,முள் நகரும் ஓசை வெகுவாய் பிடித்துப் போக,அதையே கொடுத்து பில் போடச் சொன்னவனை,”பே” என்று பார்த்தனர்,அந்த ஊழியர் இருவரும்.

 

“வேற மாடல் பாக்கறீங்களா சார்..? நீங்க கேட்ட மாதிரி இருக்கும்..” அவர்கள் கூற,அதற்கு மறுப்பான பாவமே,நீள விழிகளில்.

 

போகும் போது,அவள் முகம் காண,அவள் கண் மூடி அதே மோன நிலையில்.தன் செயலாக்கத்தை இன்னொருவர் அப்படியே பிரதிபலிக்கையில் உண்டாகிடும்,சிறு இரசனை அவன் விழிகளினோரம்.

 

பின்னந்தலையை கோதியவாறே,அவன் கடந்து செல்ல,சில சந்திப்புகள் தற் செயலானவை அல்ல என்பதை அப்போது,அவன் அறிந்திருக்கவில்லை.

 

●●●●●●●

 

“ஐயோ,இது வேற லோட் ஆகுதே..” சிக்னல் இல்லாத தன் வீட்டை சபித்தவாறு மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்கு ஏறினாள்,பெண்ணவள்.

 

பொடுபொடுவென்று முகமிருக்க,கிடைக்காத நெட்வர்க்கிற்கு அத்தனை பேச்சுக்கள்.”கவரேஜ வர வை முருகா!” என சத்தமாய் கும்பிடையும் வைத்திட,இங்கு தாயவரோ முறைத்து பார்த்தாள்,அவளை.

 

“எது எதுக்கு வேண்டனும்னு வெவஸ்த இல்லயாடி உனக்கு..?” அவர் சத்தமிட,அதையெல்லாம் கணக்கில் கொள்ளதவளோ,தன் மொத்தக் கவனத்தையும் அலைபேசி திரையில் வைத்திட,அவள் பார்க்க விழையும் காணொலியே இன்னும்,துவங்கவே இல்லை.

 

“இதுக்கு தான் வெப் சீரிஸ் பாக்க கூடாதுன்னு இருந்தேன்…இப்போ பாத்து..அந்த கண்ணுல மயங்கி..அதுக்கு அடிக்ட் ஆகி..லோட் ஆகறதுக்கு கூட வெயிட் பண்ண முடியாம..ஐயோ..”

 

என்று அவள் அத்தனை புலம்ப,அந்த புலம்பலில் புன்னகை வந்தது,சங்கவிக்கு.

 

சங்கவி,அவளின் சித்தி மகள்.பெண்ணவளை விட,இருவருடங்கள் மூத்தவள்.கல்லூரி விடுமுறைக்காக,பெரியம்மாவின் வீட்டுக்கு வந்திருந்தாள்.

 

“வெளில போய் பாரேன்..நெட்வர்க் கெடக்கும்..” தமக்கையின் அறிவுரைக்கு முறைப்பே பதிலாக வந்தது.

 

“தண்ணி டேங்குக்கு மேல கூட ஏறிப் பாத்தாச்சு..ஒன்னும் ஒர்க் அவுட் ஆகாம தான்,லூஸு மாதிரி பொலம்பி கிட்டு இருக்கேன்..ட்ரக்க விட,இது டேஞ்சரான அடிக்ஷனால இருக்கு..” நிந்தித்தவளுக்கு,இன்றைக்குத் தான் நெட்வர்க் இத்தனை சதி செய்ய வேண்டுமா என்கின்ற எரிச்சல் வேறு.

 

“சரி விடு நைட் பாத்துக்கலாம்..”

 

“கடுப்ப கெளப்பாத..நானே நாலு நாள் வெயிட் பண்ணி நொந்து போயிருக்கேன்..எதுக்கு தான் இந்த சீரிஸ பாக்க ஆரம்பிச்சேனோன்னு இருக்கு..ஆனா,முழுசா முடியுற வர பொறுமயும் இல்ல..”

 

சலிப்புடன் கூறியவாறு தன் அறைக்குள் நுழைந்திட,சங்கவிக்கு இவள் அலப்பறைகளில் ஆயாசமாய் இருந்தது.

 

“என்ன இருக்குன்னு அந்த சீரிஸ் மேல இவ்ளோ க்ரேஸ்..” பின்னூடு வந்தவள் கேட்டிட,பெண்ணவளின் முகம் அத்தனை ஒளிர்ந்தது.

 

“முழுசா சந்திரமுகியா மாறின கங்காவ பாருங்க..” அவளின் விழிகளில் தெறித்த ஒளிர்வில் தமக்கையவள் கலாய்த்திட,அவள் தோளில் ஒரு அடி வைத்தவளோ,உறுத்து விழித்தாள்.

 

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி..அப்டி என்ன தான் இருக்கு இந்த சீரிஸ்லன்னு இப்டி குதிச்சி கிட்டு இருக்க..”

 

“கண்ணால ஆக்ட் பண்ற என் கண்ணோட ஆக்டிங் பாருடி..அந்த கண்ண பாத்தப்றம் நா டோட்டல் ப்ளாட்..”

 

யாரு உன் கண்ணு..? அந்த வெப் சீரிஸ் ஹீரோவா..?”

 

“ம்ம்ம்ம்ம்..”

 

“ஃபேஸ கூட ரிவீல் பண்ணலயேடி அவனோட..அப்றம் என்ன க்ரஷ்ஷு அதுன்னுட்டு..”

 

“மூஞ்சு எப்டி வேணா இருக்கட்டும்..பட் அந்த கண்ணுக்கு நா அவுட்..” அவள் கூறும் போத நெட்வர்க் கிடைத்திட,”எஸ்ஸ்ஸ்ஸ்..” என்று அவள் துள்ளிக் குதித்ததில் சங்கவி தான் மிரண்டு விட்டாள்.

 

அந்த எபிசோட்டை பார்த்த முடித்ததும் தான்,நிம்மதியானது மனது.ஒரே அத்தியாயத்தை திரும்ப திரும்ப ஓட விட்டுப் பார்த்தவளைக் கண்டு சங்கவி,தலையில் அடித்துக் கொள்ள,பெண்ணவளின் கவனம் முழுவதும் அலைபேசி திரையின் மீதே.

 

அன்றிரவு,உறங்கச் செல்லும் நேரம்,மெல்ல வாய் திறந்தாள்,சங்கவி.

 

“நா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..” தயங்கி தயங்கி மொழிந்தவளை புருவம் சுருக்கிப் பார்த்தாள்,பெண்ணவள்.

 

“இழுத்து கிட்டு இருக்காம என்னன்னு சொல்லு..”

 

“எனக்கு ஒருத்தர புடிச்சி இருக்குன்னு சொன்னேன்ல..”

 

“அந்த காலேஜ்கு வந்தப்போ புடிச்சதுன்னு அவரா..?”

 

“ம்ம்ம்ம்..ஏன் திரும்ப அவரு உங்க காலேஜ் வந்தாரா..? ஏதோ ப்ராஜெக்ட் விஷயமா தான அப்போ வந்ததா சொன்ன..? இப்போ திரும்பவும் வந்தாரா..?”

 

“ம்ஹும்..காலேஜ் எல்லாம் வர்லடி..”

 

“அப்போ..?” என்க,ஒரு நொடி பதிலின்றி அவள் அமைதியாகிட,பெண்ணவளுக்கு என்ன கூற வருகின்றாள்,என்று சரிவர ஊகிக்க முடியவில்லை.

 

“நீ இன்னும் அவர மறக்கலியா டி..?”

 

“ம்ம்..லவ் எல்லாம் இல்லடி..ஆனா,அந்த டைம் ரொம்பவே அட்ராக்ட் பண்ணாரு..க்ரஷ்னு தான் சொல்லனும்..அப்போ ப்ரபோஸ் கூட பண்ண தோணல..ஜஸ்ட் ஃப்ரெண்ட்லியா தான் அப்ரோச் பண்ணேன்..பட்,அதுக்கே அவரு மொகத்துல அடிச்ச மாதிரி தான் ரிப்ளை பண்ணாரு..”

 

“அதான்,அப்டி நடந்து கிட்டாரே..அப்றம் என்ன..?”

 

“இல்ல இப்போ,வீட்ல மாப்ள பாக்கறாங்களே..அடிக்கடி அவரு ஞாபகம் தான்..தேடிப் பிடிச்சி கான்டெக்ட் நம்பர் கூட வாங்கி எடுத்தேன்..” என்க,”அவ்வா!” என்று வாயில் கை வைத்தாள்,பெண்ணவள்.

 

“என்னடி இது..?”

 

“எங்கப்பா பத்தி தான்,உனக்கு தெர்யும்ல..அவரு அவருக்கு ஏத்த மாதிரி மாப்ளய தான் கொண்டு வருவாருன்னு..என்னால,அத அக்ஸப்ட் பண்ண முடியாதே..”

 

கலக்கமாய் உரைத்தவளின் வார்த்தைகள் முற்றிலும்,உண்மை.வரட்டு கௌவரம் பிடித்த அவளின் தந்தை,நிச்சயம் அவளுக்கு பிடித்தாற் போன்ற வரனை கொண்டு வருவாரா என்பது,பெண்ணவளுக்கும் சந்தேகம் தான்.

 

இவ்வெண்ணத்தை தாயிடம் பகிர்ந்து,வகைதொகைதாய் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு.

 

“அதுக்கு..?”

 

“யார் மேலவும் எனக்கு லவ் வந்தது இல்ல டி..ஆனா,இவரு மேல ஒரு விருப்பம் இருக்கு..அதனால,ஒரு தடவ அப்ரோச் பண்ணி பாத்தா என்னன்னு தோணுது..பிடிக்கலன்னா நா என் பாட்டுல போய்ருவேன்..பட்,ஒரு ஸ்டெப் எடுத்து வச்சு இருக்கலாமேன்னு பின்னாடி யோசிக்கக் கூடாதுல அதான்..”

 

“அப்போ,ப்ரபோஸ் பண்ணப் போறியா போய்..? அது சரி,அந்தாளு நல்லவன்னு உனக்கு எப்டி தெர்யும்..? கேடு கெட்டவனா இருந்தா என்னடி பண்ணுவ..?”

அவளின் நிலை புரிந்த போதிலும்,தெரியாத ஒருவனை எப்படி நம்பலாம் என்கின்ற கேள்வி தான்,அவளுக்குள்.

 

“ஃபுல்லா விசாரிச்சிட்டேன் பையன் சொக்கத் தங்கம்..அதுவும் இல்லாம,அன்னிக்கி எங்கள டீஸ் பண்ண பசங்கள அடிச்சதும் அவரு தான்..எல்லாம் விசாரிச்சாச்சு..”

 

“அன்னிக்கி நைட் வரும் போது,ஹாஸ்டலுக்கு ரெண்டு பேர் கொண்டு விட்டாங்கன்னு சொன்ன..? அவரா..?”

 

“ம்ம்..அதுல ஒருத்தர் தான்..” அவளின் பதிலில்,தங்கையின் உள்ளமும் கொஞ்சம் தணிந்தது.

 

“யாரு பத்தியும் முழுசா தெரியாது டி..அரேஞ்ச் மேரேஜ்னாலும் சரி,லவ் மேரேஜ்னாலும் சரி..நா என்ன லவ்வா பண்ண போறேன்..? ஜஸ்ட் ஒரு அப்ரோச் தான..”

 

அவளின் வாதத்தில் தங்கையவள் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயம்.ஆனாலும்,முழு மனதாக ஏற்க முடியவில்லை.

 

“ஜஸ்ட் உங்கள பிடிச்சு இருக்கு..உங்க ஐடியா என்னன்னு கேக்கப் போறேன்..”

 

“சரி,அப்போ மெஸேஜ் போட்டு கேளு..”

 

“பண்ணாம இருப்பேனா டி..ஹாய்னு போட்டதுக்கு நம்பர ப்ளாக் பண்ணிட்டாரு..கால் பண்ணாலும்,கேர்ள் வாய்ஸ்னதும் கட் பண்றாரு..” அவள் கூறக் கூற,இங்கு பெண்ணவளுக்கு தான் வியப்பு மேலிட்டது.

 

“என் நம்பர தான் ப்ளாக் பண்ணிட்டாரு..உன் நம்பருல இருந்து போடவா..?” கேட்டவளுக்கு விழிபிதுங்கி அவள் மறுப்பாய் தலையசைத்திட,எப்படியே கெஞ்சி கேட்டு சம்மதிக்க வைத்திருந்தாள்.

 

“அப்பாவுக்கு தெரிஞ்சா செருப்பால அடிப்பாரு டி..” பெண்ணவளின் கதறல் எல்லாம்,காற்றோடு கலைந்து போனது தான் மிச்சம்.

 

அப்போதும்,அவளின் எண் ப்ளாக் செய்யப்பட,சங்கவிக்கு அயர்ச்சியான உணர்வு.இப்போது என்ன செய்வது என்பது போல்,பெண்ணவள் ஏறிட,தமக்கையின் விழிகள் பளிச்சிட்டன.

 

“எனக்கு அவர் கூட ஒரே ஒரு தடவ பேசனும்..அதுக்கு மட்டும் எப்டியாச்சும் அவர் கிட்ட வர சொல்றியா..? நா போய் சொன்னா,அவரு வர மாட்டாரு..ப்ளீஸ்,எப்டியாச்சும் கெஞ்சி நம்ம தெருல இருக்குற ரெஸ்டாரன்டுக்கு வர சொல்றியா..?” என்று வினவிட,இவளுக்கு தலை சுற்றியது.

 

“நம்ம தெரு..என்னடி ஒளர்ர..?”

 

“அவரு இங்க தான் டி இருக்காரு..இங்க பக்கத்துல புதுசா குடி வந்தாங்களே..அது அவரு தான்..” தமக்கையின் பதிலில் தங்கைக்கு,நெஞ்சடைத்து விட்டது.

 

“அது தான் அடிக்கடி மொட்ட மாடிக்கு போய் எட்டிப் பாத்தியா..? ராத்திரியெல்லாம் அதுக்கு தான் வெளில திரிஞ்சியா..ஐயோ..” என தலையில் கை வைத்து விட்டிருந்தாள்.

 

“என்னால முடியாது டி..ஆளு விடு..” அவளின் முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போலாக,கண்ணீர் காட்டி கத்தி முனையில் வைத்து,சம்மதிக்க செய்திருந்தாள்,தமக்கை.

 

“என் வாழ்க்க விஷயம் டி ப்ளீஸ் டி..இத விட்டா எனக்கு வேற சான்ஸ் இல்ல டி..ஒரே ஒரு தடவ அவரு கூட பேசனும் டி..நீ சின்னப் பொண்ணுனால,அவரு எறிஞ்செல்லாம் விழ மாட்டாரு டி..ப்ளீஸ்..” எப்படியே,சரி கட்ட பயத்துடன் ஒப்புக் கொண்டிருந்தாள்,பெண்ணவள்.

 

அதே நேரம்,

 

ட்ரூ காலரில் காட்டிய பெயரை யோசித்தவனுக்கு,சட்டென பிடிபட பற்களை நறநறத்துக் கொண்டான்.விருப்பம் கேட்டு வந்த குறுஞ்செய்திகள்,அவன் கோபத்துக்கு தூபம் இட,அவ்வளவு எரிச்சல் ஆடவனின் வதனத்தில்.

 

முதலில் வந்த எண்ணைத் தேடிப் பார்த்திட,அது காட்டவில்லை.இதோ இப்போது பெயரைக் கண்டதுமே,ஊகிக்க முடியுமாய் இருக்க,வீட்டில் வேலை செய்யும் பாட்டி கூறிப் போனதும் அவனின் சினத்தை உச்சிக்கு ஏற்றி விட்டிருந்தது.

 

புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர் அவர்.வெகுளியான பெண்மணியும் கூட.

 

“பக்கத்து வீட்டு பொண்ணு அடிக்கடி இங்க தான் பாத்துட்டு இருக்கு ராசா..உன் மனசுல என்ன இருக்குன்னு தெரில ராசா..பாத்து கவனமா இருந்துக்க..எதித்த வீட்டு மனுஷன் கூட வந்து சூசகமா சொல்லிட்டு போனாரு..பையன் பின்னாடி போகாம பொண்ணு எப்டி பாக்கும்..? பையனுக்கு சரியா இருந்துக்க சொல்லுங்கன்னு..பத்ரம் ராசா..”

 

அவர் கூறிய போதே,அவன் தேகம் இறுகிப் போனது.இதே போன்றதோர்,பழியை சுமந்து கொண்டு தான் வீட்டை விட்டு வந்தான்.அதுவே,மீளவும் நடந்தேறுகையில் வேதாளம் முருங்கை மரம் ஏறியது.

 

இதற்கு தீர்வு கட்ட அவன் யோசித்திருக்க,அடுத்த நாள் அவனுக்கு தரிசனம் தந்தாள்,பெண்ணவள்.முதலில்,சின்ன அதிர்வு தான்,அவனுக்கு.அன்று கடையில் அவளைக் கண்ட நினைவு இருந்தது.

 

அவர்களின் வீடுகளில் இருந்து தள்ளி இருக்கும் மைதானம் அது.அவன் ஜாகிங் செய்ய வருவது தெரிந்து தான்,சங்கவி அனுப்பி வைத்தது.அவன் வரும் நேரத்துக்கு ஆட்கள் இல்லாதிருப்பதையும் கவனிக்கவே செய்திருந்தாள்.

 

“உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..” சுற்றும் முற்றும் பார்த்தவாறு இவள் உரைத்திடும் போதே,அவன் ஆத்திரம் எல்லை கடந்து இருந்தது.

 

காலர் ஐடியில் அவளின் தந்தை பெயரைக் கண்டே,அவளென்று அவன் நினைத்திருக்க,இப்போது நேரடியாய் தன்னை சந்திக்க வந்ததும்,காரண கர்த்தா அவள் தான் என்று முடிவுக்கு வந்தே விட்டான்,ஆடவன்.

 

அவள் ஏதோ பேச வாயெடுக்கும் முன்னமே,சட்டென்று ஓங்கி ஒரு அறை அவள் கன்னத்தில்.

 

என்ன நடந்ததென்று அவள் விழி விரித்து பார்த்திடும் முன்னமே,அறை விழுந்திருக்க கண்ணெல்லாம் கண்ணீர் கட்டி நின்றது,பெண்ணவளுக்கு.

 

“ஸ்கூல் போற வயசுல உனக்கு லவ் ஒன்னு தான் கொறச்சல்..இனிமே,கண்ணு முன்னாடி வந்த தொலச்சி கட்டிருவேன்..” சீற்றத்துடன் அவன் உறுமி விட்டுச் செல்ல,இவள் தான் அவனின் ருத்ர தாண்டவத்தில் அரண்டு போய் நின்றிருந்தாள்.

 

●●●●●●●

 

ஜாகிங்கை முடித்து விட்டு,வியர்வைப் பூக்கள் முகமெங்கும் பூத்திருக்க,வீட்டுக்குள் வந்தான்,ஆதித்யா.

 

எப்போதும் முன் கூடத்தில் பத்திரிகையுடன் அமர்ந்திருக்கும் தந்தையக் காணாது,அவன் விழிகள் சுருங்கிட,”அம்மா!” என்றழைத்திருந்தான்,சத்தமாய்.

 

வழமையாக தான் வரும் போது,காஃபியை கையில் கொண்டு வரும் தாயின்,அரவமே இல்லை.யோசனையுடன்,தாயின் அறையை எட்டிப் பார்த்திட,கட்டிலில் கண்மூடி அவர் படுத்துக் கிடக்க,அவரின் கரத்தைப் பற்றியவாறு அருகே அமர்ந்திருந்தார்,தந்தை ரகுவரன்.

 

“என்னாச்சுபா..?”

 

“மயக்கம் வருதுன்னா சொன்னா..அதான் கூட்டிட்டு வந்து தூங்க வச்சேன்..” என்றவரின் தோற்றத்திலேயே,அத்தனை தளர்வு.

 

இப்போதெல்லாம்,அதிக யோசனையில் தாயார் அடிக்கடி இப்படி மயங்குவது பழகியிருக்க,ஆதித்யாவுக்குமே ஒரு புறம் ஆயாசம்.

 

நடந்ததை என்னவாயினும் மாற்ற முடியாதே.அப்படி இருக்கும் போது,இப்படி மருகித் தவித்து தனக்கு பிரச்சினையை தாயார் இழுத்துக் கொள்வதில்,அவனுக்கு அத்தனை வருத்தம்.

 

மகனின் முகமாற்றம் கண்டு,ரகுவரனுக்கும் மனம் கலங்கிட,மகனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்,அவர்.

 

“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாமாப்பா..?”

 

“டாக்டர் கிட்ட பேசுனேன் டா..ரெஸ்ட் எடுத்தா சரியாய்டும்னு சொன்னாங்க..” அவரின் வார்த்தைகளுக்கு,”ம்ம்” என்றவனோ,தந்தையுடன் உணவு மேசையில் அமர்ந்து அவருக்கும் சேர்த்துப் பரிமாறி தானும் உண்டு முடித்திருந்தான்.

 

அப்படியே,அவர்களின் பேச்சு வியாபார விடயமாகத் தாவிட,அதைக் கேட்டு சலித்தவாறே கீழிறங்கி வந்தாள்,அஷ்வினி.

 

“நா காலேஜ் போறேன் பா..” என்று அவள் கிளம்பும் போதே,இடை மறித்தான் ஆதித்யா,தான் கொண்டு விடுவதாக சொல்லி.

 

“நா தனியா போறேன் என்ன விடு..” என்றவளோ,அவன் வரும் முன்பே ஸ்கூட்டியை உதைத்துக் கொண்டு கிளம்பிட,ரகுவரனின் இதழ்களில் மெல்லிய சிரிப்பு.

 

“இவ ரொம்பத் தான் பிடிவாதம் பிடிக்கிறா..” அவர் செல்லமாய் கடிந்திட,”இப்டியே அவள கொஞ்சுங்க..” தந்தையிடம் முணுமுணுத்தவனோ,தானும் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2026.07.04

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்