என் உள்ளத்தை ஈரத்த பூமுகம்-23

Loading

 

முகம் 23 

 

 

இப்படியே நாட்கள் நகர்ந்து செல்ல, அவர்களது காதலும் வானை முட்டும் நேசத்துடன் ஒருவருக்கு ஒருவர் சலைக்காமல் பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்திருந்தது.

 

இப்போது மயல் மூன்றாம் வருட மருத்துவப் படிப்பில் இருக்கிறாள். இப்போதே திருமணம் பற்றிய அவள் கனவுகள் விருட்சம் பெற்றிருந்தது.

 

இடையியே பல சண்டைகளும் வராமலில்லை, அவளோ அவள் வயதின் ஆசையிலும் புதிய உணர்விலும் அவனை அதிகம் தேட, பல நேரங்களில் வேலை சுமையில் அவனால் அவளுடன் நேரம் செலவழிக்க முடியால் போனது.

 

அவளது காதல் விவகாரம் சித்தார்த், கயல் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

 

தீரன் இன்னும் ஜோதியிடம் கூட பகிர்ந்திருக்கவில்லை. சொல்ல வேண்டாம் என்றில்லை. நேரில் சொல்ல வேண்டும் என்று காத்திருந்து, இறுதியில் நேரில் சென்றும் சொல்ல முடியாமல் தான் நிலைமை இருந்தது.

 

இந்த இடைவெளியில் இரண்டு முறை ஊருக்கு சென்று வந்திருக்கிறான்.

 

முதல் முறை சொல்லலாம் எண்ணும் போது, தாத்தாவுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனதால் அவனால் சொல்ல முடியவில்லை…

 

இரண்டாவது முறை போனவனுக்கு சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை பகிர முடியவில்லை…

 

ஏனோ ஒரு தடங்கல் ‘பின்னர் பார்த்துக்கொள்லாம்’ என்று விட்டு விட்டான்.

 

‘இவ்வளவு நாள் மறைத்து விட்டோமே’ என்ற குற்ற உணர்வாகக் கூட இருக்கலாம்.

 

அவனும் இதைக் கொண்டு எப்போதும் மயலிடம் புலம்புவதுண்டு,

 

அவளோ ஜோதியை ‘சக்காளத்தி’ என்பாள்.

 

அவனோ ‘இந்த வார்த்தை எல்லாம் எங்கடி கத்துக்குற நீ?’ என்று வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுவான்.

 

அன்று இவள் எந்த நேரத்தில் ‘கிளாஸ் இல்லையா?’ என்று கேட்டாளோ அன்றிலிருந்து விதம் விதமாய் வகுப்பு தான் நடக்கிறது.

 

அது முத்த வகுப்பு என்று எண்ணினால் அதுதான் தவறு.

 

அவள் சிறு பெண்ணாம் கெட்டு போய் விடுவாளாம், வாழ்க்கை பாடம் நடத்துகிறானாம்.

 

முடியாமல் பல நேரம் சிணுங்கி அவனிடம் செல்லம் கொஞ்சுபவளிடம் ‘உன் குழந்தைக்கு இதெல்லாம் யாரு சொல்லித் தருவா? நீதான சொல்லணும், அதனாலதான் முதல்ல நீ படி’ என்று அவன் சொன்னால் போதும் அடுத்து அவளிடம் மறுப்பு வராது.

 

உண்மையில் அவளை வளர்த்தான் அவன். ‘ஒரு தாயாய், தகப்பனாய், தோழனாய், தோழியாய், குழந்தையாய்’ இப்படி எல்லாமாகவும் அவன் அவள் வாழ்க்கையில் வெற்றிடங்களை நிரப்பிக் கொண்டிருந்தான்.

 

அவனுக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்று அவன் காதலில் உணர்ந்து கொள்வாள் அவள். ஆனால் ஜோதி என்று வரும் போது வேண்டும் என்றே உரிமை போராட்டம் தொற்றிக் கொள்ளும் அவளிடம்.

 

அதற்கும் சண்டை சமாதானம் என அவர்கள் காதல் வளர, அவனது வழக்கு மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே இடத்தில் தான் தேங்கி நின்றிருந்தது.

 

அவனும் யோசிக்காத வழியும் இல்ல, தேடாத சாட்சியும் இல்லை. ஆனால் ஆரம்பிக்க புள்ளி கிடைக்கவே இல்லையே!

 

இப்போது இன்னொரு வழியில் அவன் யோசனை சென்றிருக்க, ‘அது மட்டும் உறுதியானால் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்’ என்ற நம்பிக்கை அவனிடம்.

 

அன்று அவன் உடல் நிலை சற்று மோசமாகவே இருந்தது. வேலைக்குக் கூட செல்லவில்லை.

 

இரண்டு நாட்கள் தொடர் காய்ச்சல். ‘சித்தார்த்திடம் பார்த்து கொள்ளலாம்’ என கற்பகம் மருத்துவமனை வந்திருந்தான்.

 

அங்கே தான் இப்போது சித்தார்த் மருத்துவப் பயிற்சி (இன்டரன்) செய்து கொண்டிருக்கிறான்.

 

நண்பனை கண்டதும் “ஏன்டா கால் பண்ணி இருக்கலாம்ல, இப்படி முடியாம இருக்குறத்தோட இங்க வந்தியாக்கும்?” என்று கேட்க,

 

“இப்போ என்ன, உங்கிட்ட கொடுத்த வேலையையும் பார்த்துட்டு என்னையும் காட்டிட்டு போகலாம்னு வந்தேன்” என்றவன்,

 

“என்ன வேலைய முடிச்சிட்டியா?” என்று கேட்டான்.

 

“அட மனசாட்சி இல்லாதவனே, இவங்க தான் இன்டர்ன்னு வெச்சி செய்றாங்கன்னு பார்த்தா, நீ என்னடா நைட் தந்த வேலைக்கு இப்போ வந்து நிக்கிற” என்ற சித்தார்த்தை மதிக்காதவன்,

 

“சிக்ஸ் ஹவர்ஸ் முடிஞ்சிடிச்சு இது போதாதா உனக்கு?” என்க,

 

“நான் என்னை நைட்லையும் ஹாஸ்பிடல்லயாடா தூங்குறேன். ஆனா ஒன்னுடா நல்லவேளை, உனக்குக் கீழ எல்லாம் வேலை செய்யல நானு, என் நல்ல நேரம் டாக்டர் ஆகிட்டேன். போலீஸ் அது இதுனு அந்தப்பக்கம் வந்திருந்தேன் நான் செத்தேன்” என்றவன்,

 

“ராம்பிரசாத் சார் கிட்ட செக் பண்ணிட்டு இரு, நான் நீ கேட்டதத் தேடிப் பார்க்குறேன்” என்றான்.

 

உள்ளே செல்லத் திரும்பியவன் மீண்டும் இவனை நோக்கித் திரும்பி “உன் மாமனார் தான். மரியாதையா பேசு, நீ பேசுற பேச்சுல, உன்ன அவருக்குப் பிடிச்சு போகணும்” என்றான்.

 

தீரனோ அவனை மேலிருந்து கீழ் பார்த்தவன் “டேய் பொண்ணுகளை செட் பண்ணி தர்றவன மாமான்னு சொல்லுவோம். நீ என்னடான்னா மாமனாரையே செட் பண்ணி தரப் பார்க்குற, உன்ன என்னனுடா சொல்றது?” என்க,

 

“உடம்பு சரியில்லாம போனாலும் உன் வாய்க் கொழுப்பு சும்மா இருக்கா, அவரே விருப்பப்பட்டு பொண்ணக் கொடுக்கணும்னு சொல்ல வந்தேன்டா” என்று தலையிலடித்துக் கொண்டவன்,

 

அங்கிருந்த தாதி ஒருவரிடம், அவனை ராம்பிரசாத்தின் அறைக்கு அடுத்ததாக அனுப்புமாறு சொல்லி அங்கிருந்து சென்றிருந்தான்.

 

அடுத்து அவன் செல்லும் நேரம் வர, எழுந்து உள்ளே சென்றவனைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்த ராம்பிரசாத் பின் முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டார்.

 

அவரது முக மாற்றம் காவலன் கண்களிலிருந்து தப்பவே இல்லை.

 

அவர் முன்னே அமர்ந்தவன், “நைட்ல இருந்து சிவியர் ஹெட்டேக் அன்ட் ஹை ஃபீவர் இருக்கு டாக்டர்” என்றான்.

 

“ம்ம்ம் போலீஸ்காரர் அதிகமா வேலை பார்த்தா அப்படிதான். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்க, இவனுக்கு சந்தேகம் உறுதியானது.

 

“என்ன டாக்டர் பண்ணுறது, உங்களுக்கு நான் போலீஸ்ன்னும் என்னோட கஷ்டம் எண்ணனும் புரியுது. ஆனா என் டிபார்ட்மென்ட்க்குப் புரியலையே!” என்றவன்,

 

“ஊர்ல யாரு போலீஸா இருந்தாலும் தெரிஞ்சி வெச்சிருப்பீங்க போலயே!” என்று கேட்டான். அன்று அவன் தான். யூனிஃபோர்மில் வரவில்லையே!

 

“எல்லாரையும் எதுக்கு? நம்ம லைன்ல கிராஸ் பண்ணா தெரிஞ்சி வெச்சிருக்கிறது அவசியம் தானே!” என்றார்.

 

“டெபனட்ல்லி, தெரிஞ்சி வெச்சிருக்கலாம் தப்பில்ல, எப்படியும் தெரிஞ்சிக்க போறவங்க தானே!” என்க, அவர் பார்வை இவனை அர்த்தமாய் நோக்கியது.

 

“இது வைரல் ஃபீவர் தான். நான் கொடுக்குற டேப்லட்ட போடுங்க. அன்ட் நல்லா ரெஸ்ட் எடுங்க சீக்கிரமே சரி ஆகிடும்” என்றவர் மருந்து சிட்டை அவனிடம் கொடுக்க,

 

அவனோ “தேங்க்ஸ் டாக்டர், மறுபடியும் சந்திக்கலாம்” என்று எழுந்து அவருக்கு கரத்தைக் கொடுக்க,

 

‘உன்ன மறுபடியும் பார்க்கவே வேண்டாம்’ என்று எண்ணியவரோ “ஸ்யோர்…” என்றார் அவனது நீட்டிய கரத்தைப் பற்றிக் குலுக்கி…

 

மருந்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன், வாகனத்தில் அமர்ந்து அவளுக்குத் தான் அழைத்தான்.

 

எடுத்ததும் “மயிலு இப்போ என்ன கிளாஸ்?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டவன் “இன்னும் வன் ஹவர்ல குவார்டஸ்க்கு வா” என்றான்.

 

அவன் குரலில் இருந்த மாற்றத்தில் “என்னாச்சு ஜெய்” என்று அவள் பதற, “ஜஸ்ட் பீவர் தான் வாடி, கிளாஸ் முடிச்சிட்டே வா, நானும் வெளில தான் இருக்கேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், சித்தார்த்துக்காக காத்திருக்க தொடங்கினான்.

 

அடுத்த பத்து நிமிடங்களில் சித்தார்த் கையில் ஒரு கோப்புடன் ஜீப்பில் ஏறி இருந்தான்.

 

“கிடைச்சிதா சித்து?” என்று கேட்க,

 

அவனிடம் கையில் இருந்ததைக் கொடுத்தவன் “எல்லாருமே இங்க வந்திருக்காங்க ஜெய். நீ தந்த லிஸ்ட்ல உள்ள குழந்தைங்க கடத்தப்பட்டதா சொல்லப்படுற நாளுக்கு, டு த்ரீ மந்த்ஸ் முன்னாடி இங்க செக்கப் வந்திருக்காங்க. ஆனா எல்லாருமே வந்தது ஒரே நாளும் இல்ல” என்றான்.

 

தீரனிடம் பெருமூச்சு, இருட்டில் இருந்தவனுக்கு எங்கோ ஒரு மூளையில் வெளிச்சத்தைக் கண்ட சந்தோசம்.

 

சித்தர்த்தோ “ஆனா நீ சொல்லுற போல ஆர்கான் திருட வாய்ப்பு குறைவு தான். பொதுவா அவங்களோட உறுப்புகள் அளவுல சின்னது, அப்படியே கொடுக்கலாம்னா அதே வயசு உள்ள குழதைங்களுக்கு மட்டும் டிரான்ஸ்பிளான்ட் பண்ண முடியும். சில உறுப்புகள் லைக் கல்லீரல், கார்னியா அதாவது கண்ல மேல்பக்கம் உள்ள டிஸ்ஸு இதெல்லாம் பெரியவங்களுக்கு உதவலாம்” என்றவன்,

 

“பட் ஆர்கன்காகத் தான் கடத்தணும்னா நல்ல ஆரோக்கியமான குழந்தையை தான் கடத்தி இருக்கணும். இதுல வேற ஏதோ இருக்கு தீரா” என்க, அவனுக்கும் மனதில் அதுதான் ஓடிக்கொண்டிருந்தது.

 

“பார்க்கலாம் சித்து இதுல என்ன இருக்குனு, அன்ட் அங்க ஆசிரமங்கல்ல உள்ள குழந்தைகள மிரட்டுனதா சொல்லுற நம்பர்ஸ் பத்தி விசாரிச்சதுல மோஸ்ட்லி ராம்பிரசாத் நேம்ல தான் ரெஜிஸ்டர் ஆகி இருக்கு, இத ஒரு காரணமா சொல்ல முடியாது, ஈஸியா அவரு அவர் நேம்லேயே வாங்கி கடத்தல் தேவைக்கு ஏன் யூஸ் பண்ணணும்னு கேள்வி வரும், சோ இன்னும் ஆதாரம் வழுவா இருக்கணும்னு யோசிச்சேன். இப்போ அத்தனை குழந்தைகளும் இங்க வந்திருக்காங்க என்கிறது மிகப்பெரிய ஆதாரம் தான்” என்றவனுக்கு இன்னும் ஆராய்ந்து கண்டறிய எல்லா வழியிலும் மூளை செயற்பட்டது.

 

_____________

 

 

அங்கே ஜெயதீரன் வீட்டின் சமையல் கட்டில் நின்றிருந்தாள் மயல்.

 

“ரெண்டு நாள் ஃபீவர் இருந்திருக்கு, உங்களுக்கு எனக்கு சொல்லணும்னு தோணலல ஜெய்?” என்று அங்கே வந்ததில் இருந்து அவனுக்குத் திட்டியபடியே சமையலறையில் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தாள்.

 

இவனோ முன்னறையில் புன்னகையுடன் “இந்தப் பொண்ணுங்களுக்கு மட்டும் எப்படித்தான் இவ்வளவு புலம்ப முடியுதோ” என்று சொல்லிக் கொண்டவனோ எழுந்து அவளிடம் சென்றவன்,

 

அவளை பின்னிருந்து அணைத்து, “கொஞ்சம் வாய மூடிட்டுத் தான் சமையேன்டி” என்க,

 

“முன்ன எல்லாம் பேசு பேசுன்னு சொல்லுவீங்க, இப்போ பேசாதன்னு சொல்லுறீங்க ஜெய்” என்று முனங்கியவளின் கண்ணக் காதுப்புகளை இதழ் கொண்டு தீண்டியவன், “என் மயிலுக்கு வாய் வலிக்குமே!” என்றான் மெல்லிய குரலில்.

 

அவள் உயரத்துக்கு அவன் குனிந்து நிற்க வேண்டியதாய்ப் போய்விட, சட்டென அவளைத் தன் உயரத்துக்குத் தூக்கிக் கொண்டான்.

 

அவளோ “ஐயையோ, ஜெய் சமைக்கணும்” என்க, அடுப்பை அணைத்தவன், “சமைச்சது போதும், புருஷன பாருங்கள் மேடம்” என்று பின்னிருந்தவாறு அவள் கழுத்தில் புதைய,

 

“சின்ன பொண்ணுன்னு சொல்லுவீங்க, இப்போ என்னவாம்?” என்றாள்.

 

“அப்பப்போ பெரிய பொண்ணாகலாம் தப்பில்லை” என்று பேசியவனது இதழ்கள் அவள் கழுத்தில் வர்ணம் தீட்டியது.

 

அந்த உணர்வைத் தாங்க முடியாதவளோ “இப்போ எனக்கும் ஃபீவர் ஒட்டிக்கப் போகுது” என்று சொல்ல,

 

“முதல்ல என்னை ஒட்டிக்கோ அப்பறம் அந்த ஃபீவர ரெண்டு பேரும் ஒட்டிக்கலாம்” என்றவன், அடுத்த இரண்டு நிமிடத்தில் அவளை இறக்கி விட்டு தன் பக்கம் திருப்பியவன்,

 

“இந்தக் கண்ணப் பார்த்துட்டு நான் நானா இருக்குறதே ரொம்ப கஷ்டம் தெரியுமா? அதான் இப்போ பின்னால இருந்து கட்டிப்பிடிச்சேன். கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி” என்று, அவளைத் தூக்கி மின்னலாய் ஒரு இதழ் முத்தத்துடன் அவனைக் கவரும் அவள் விழிகளுக்கும் முத்தம் கொடுத்து, அங்கிருந்து சென்றிருந்தான்.

 

அவள் வந்தது முதல், ‘வீட்டை ஒழுங்கு படுத்துகிறேன்’ என்றும் ‘அவனைத் தூங்க வைக்கின்றேன்’ என்றும் ‘சமைக்கின்றேன்’ என்றும் அந்த வீட்டில் அங்கும் இங்கும் அவள் வளையவர அவன் கண்களுக்கு அவள் மனைவியாகத் தான் தெரிந்தாள்.

 

“சீக்கிரம் வளந்துடுடி, இல்ல என்னை நானே அர்ரெஸ்ட் பண்ண வேண்டியதா போய்டும்” என்றவன் அவளுக்கு கேக்கும்படி சொல்லிவிட்டே செல்ல, அங்கே கன்னம் சிவக்க நின்றிருந்தாள் தீரனின் மயில்…

 

ஒருவழியாய் சமைத்து முடித்து அவனுக்கு ஊட்டி விட்டவள், மருந்தை எடுக்க, “உன் அப்பன் தப்பா ஏதும் தந்திருப்பான் பார்த்துடி, ஏற்கனவே கோபம் வேற” என்க,

 

அவன் தோளில் அடித்தவள், “அப்பாவ பேசலான உங்களுக்கு தூக்கம் வராதே! அவருக்கு உங்க மேல என்ன கோபம்?” என்றாள்.

 

அவனோ “அதெல்லாம் இருக்கு எக்கச்சக்கமா” என்றவன் நடத்ததை சொல்ல,

 

“அச்சோ, அப்பாக்கு நம்ம லவ் மேட்டர் தெரிஞ்சிக்கு” என்றாள்.

 

அவனோ “அதுக்கெல்லாம் வாய்ப்பில்லையே!” என்க,

 

“ஏன் இல்ல, உங்ககிட்ட இப்படி பேசி இருகாங்கனா, நிச்சயமா தெரிஞ்சிருக்கு” என்றாள்.

 

அவனுக்கு இப்போதான் அந்த எண்ணத்தில் யோசிக்கத் தோன்றியது.

 

அதன்பின் அவன் மனைவி அவனை எங்கே யோசிக்க விட்டாள்??

 

ஒருவழியாய் பேசி அவனை தூங்க வைத்துவிட்டே அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

 

 

 

அடுத்த நாளே ராம்பிரசத்தை நேரடியாக சந்திக்க சென்றிருந்தான் தீரன்.

 

“இதுக்கு என்ன சொல்லுறீங்க மிஸ்டர் ராம்பிரசாத். ஊருக்கு நல்லவன் வேஷம். உள்ளுக்குள்ள கடத்தல் காரனா??” என்று நேரடியாகவே கேட்க,

 

அவரோ எந்தவித அலட்டலும் இல்லாமல், “அப்போ, என் பொண்ண உங்களுக்கு கொடுக்க மாட்டேன்னு இப்படி ஒரு பிளாக் மெயிலா? நல்லா இருக்கே!” என்றார்.

 

அதில் சத்தமாகவே சிரித்தவன் “என் மயலக் கொடுங்கன்னு உங்ககிட்ட நான் வந்து நிக்கப் போறதா எப்போ சொன்னேன்? இப்படி என்னை டைவேர்ட் பண்ண முடியும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டான் அவன்.

 

“மிஸ்டர் தீரன் உங்களோட இந்த சில்லியான கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கில்லை, உங்களால முடிஞ்சத பண்ணித்தான் பாருங்களேன். அவ என் பொண்ணு என் சம்மதம் இல்லாம உங்களக் கட்டிக்கிறது எல்லாம் நடக்காத காரியம். அதுக்காக என்னை இதுல மாட்டி விடணும்ங்கிற உங்களோட எண்ணமும் புரியுது” என்றவர்,

 

“கேள்விப்பட்டேனே இரண்டு வருஷமா உங்களோட முதல் கேஸ்ஸாமே இது, அதுவும் இன்னும் நீங்க முடிக்கலயாமே! அதுக்கு உங்களுக்கு நான் தான் கிடைச்சேனா, கண்டுபிடிக்க முடியலைன்னா முடியலன்னு சொல்லிட்டு போகணும். அத விட்டுட்டு இன்னொருத்தன் மேல பழியப் போட்டு உங்க தேவைய நிறைவேத்திக்கக் கூடாது?” என்றார்.

 

“அப்போ எல்லாம் விசாரிச்சு இருக்கீங்கன்னு சொல்லுங்க, உங்க விருப்பம் இல்லாம கல்யாணம் இல்லையா? ஒரு வாரத்துல கல்யாணம் வைக்கிறேன் வந்து சேருங்க. அப்பறம் சீக்கிரம் உள்ள போகவும் தயாரா இருங்க மாமனாரே! எல்லாம் உங்களுக்காகத் தான். பொண்ணு கல்யாணத்தைப் பார்க்காம ஜெயிலுக்குப் போறது நல்லாவா இருக்கும். அதான் அடுத்த வாரம் ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேருங்க” என்றவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

 

அவன் வெறும் பேச்சுக்கு சொன்னான் தான். ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமெல்லாம் இருக்கவில்லை…

 

விளையாட்டாக அவளிடம் இதை சொல்லி இருக்க, அவளோ தந்தை சொல்வதே சரி என்பது போல் ‘அவர் சம்மதம் இல்லையாமல் முடியாது’ என்றாள். ‘காத்திருப்போம்’ என்றாள்.

 

இவனுக்கோ ராம்பிரசாத் அத்தனை உறுதியாய் மகள் மீது நம்பிக்கையாய் பேசியதும், இதோ இவளும் அவனை விட்டுக்கொடுத்து அவருக்காய் பேசியததும் என ellam அவனையே கேலி செய்வதைப் போல பிரம்மை தோன்ற, கோபம் கண்ணை மறைத்தது.

 

ஒரு வாரத்தில் திருமணம் செய்யவே வேண்டும் என்று விட்டான்.

 

ஒருவித பிடிவாதம் அவனுக்கு, இந்த வழக்கு அவனை ஏகத்துக்கும் மன அழுத்தத்ததுக்கு உள்ளக்கி இருந்தது.

 

அவன் மனது ராம்பிரசாத் தான் குற்றவாளி என உறுதியாய் நம்பியது.

 

அத்தனை குழந்தைகளும் அவரது மருகுவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பிறகே கடத்தப் பட்டிருக்கின்றனர் என்பதே அவன் மீது சந்தேகம் வரக் காரணம் எனலாம் அதையும் விட, அந்த சந்தேகம் உறுதியாகும் சம்பவமும் அடுத்து நடந்தேறியது.

 

 

 

அடுத்து ஒரு வாரம் கடந்திருந்தது. தீரனின் சந்தேகம் மொத்தமும் ராம்பிரசாத் மீது குவிந்து இன்னும் ஏதேனும் ஆதாரம் ஏதேனும் கிடைக்கட்டும் என அவன் காத்தத்திருந்த தருணமது…

 

அன்று காலை சித்தார்த் மருத்துவமனை சென்ற போது ஊழியர் ஒருவருக்கும் இன்னும் சிலருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க, அங்கே கூட்டம் கூடி இருந்தது.

 

ஒரு ஆண் கோபமாய் பேசிக்கொண்டிருக்க, அவன் கை வளைவில் அழுதபடி ஒரு பெண் நின்றிருந்தாள். அந்தத் தம்பதியினரை சித்தார்த்துக்கு அடையாளம் தெரிந்திருந்தது.

 

போன வாரம் தான் அவளுக்கு பிரசவம் நடந்திருக்க, பிரசவ அறையில் கோதையோடு உதவிக்கு நின்றிருந்த மருத்துவரில் அவனும் ஒருவன்,

 

நிலைமை ஏதோ சரி இல்லை என அவர்கள் அருகில் விரைய,

 

“என்னடா உளறிட்டு இருக்க, பல்லை தட்டி கைல கொடுத்துடுவேன். தப்பா மருந்து கொடுத்தது மட்டும் இல்லாம திமிரா வேற பேசுறியா?? உன்னை எல்லாம் போலீஸ்ல பிடிச்சுக்கொடுத்தா தன்னால உண்மை வெளிய வரும்” என்று அவர்களில் ஒருவர் கத்திக் கொண்டிருக்க, அடிதடி மட்டும் தான் குறை அங்கே!

 

அந்த ஊழியர் அருகில் வந்த இன்னொருவனோ “நீதான் பண்ணேன்னு ஒத்துக்கிட்டா தண்டனையோட தப்பிக்கலாம். இல்லனா மொத்தமா உள்ள இருக்க வேண்டி வரும்” என்றவன் மிரட்டலில் சிறு பயம் கூட இல்லாதவனாய்,

 

“என்ன சார் மிரட்டுறீங்களா? தப்பே பண்ணாம நான் ஏன் சார் பயப்படணும்” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் தான் அவர் அருகில் வந்தான் சித்தார்த்.

 

“என்னாச்சு மூர்த்தி?” என்று அவன் கேட்க, அந்தக் குரலில் திரும்பி அவனைப் பார்த்தவரோ,

 

“டாக்டர், இந்தப் பொண்ணோட குழந்தைக்கு ஹெவி பீவராம். பக்கத்துல உள்ள ஏதோ ஒரு கிளினிக்ல செக் பண்ணாங்கலாம் அங்க என்னனா இங்க இந்தப் பொண்ணுக்கு கொடுத்த மருந்துல தான் ஏதோ தப்பு நடந்திருக்கு அதனால தான் பிள்ளைக்கு இப்படியாகி இருக்குனு சொல்லவும் இதோ ஆளுங்களக் கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ணுறாங்க” என்று சொல்ல,

 

அந்தப் பெண்ணைப் பார்த்தவனோ “என்னமா இது, மருந்து எல்லாம் இங்க தப்பா போக வாய்ப்பில்லையே! குழந்தைக்கு என்ன? என்ன மருந்து” என்று கேட்க,

 

அவள் கணவனோ “இவளுக்கு என்ன மருந்து கொடுத்தீங்க நீங்க, பாருங்க இப்போ என் குழந்தைக்கு இப்படி ஆகிடிச்சு, குழந்தைக்கு பால் கொடுக்குறவ இவ, இதெல்லாம் பார்த்து மருந்து கொடுக்க, மாட்டீங்களா? இத நான் சும்மா விடமாட்டேன். கூப்பிடுங்க அந்த டாக்டர, ஏதோ சீக்கிரம் கொண்டு போனதால என் குழந்தைய காப்பாத்த முடிஞ்சிது இல்லனா நீங்க என்ன பண்ணி இருப்பீங்க” என்று கோபமாய் கத்த,

 

சித்தார்த்தோ “சார் கொஞ்சம் அமைதியா பேசுங்க, இவ்வளவு பேர் இருக்கும் போது இப்படிக் கத்துனா, பேசண்ட்ஸ் பேனிக் ஆவாங்க, சோ நீங்க உள்ள வெயிட் பண்ணுங்க டாக்டர் வந்ததும் பேசிக்கலாம். இப்போ அந்த மருந்த காட்டுங்க நான் பார்க்குறேன்” என்றான்.

 

அப்போதும் அந்த ஆண் அடங்குவதாய் இல்லை. அவனை அடக்க பெரிய போராட்டம் தான் அங்கே.

 

அந்தப் பெண் தான் கணவனை அமைதிப்படுத்தி அழுதபடி அந்த மருந்துக் கவரை நீட்ட, வாங்கிப் பார்த்தவனுக்கு அவர்களது மருத்துவமனை மருந்து தான் என்பது அட்டையை பார்த்ததும் புரிந்து போனது.

 

கூடவே மருந்துகளும் சரியாகத் தான் பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் அதன் திகதி அது தான் அவன் கண்ணை உறுதியது. திகதி இருக்கும் இடத்தின் மேலே இன்னொரு தாள் ஒட்டப்பட்டிருப்பது புரிந்தது. மருத்துவன் அவனுக்கு அதனை புரிந்து கொள்ள நேரம் எடுக்கவில்லை.

 

ஆனால் அதனை அந்த இடத்தில் வெளிக்காட்டுவது அத்தனை சரியாகப் படவில்லை என்பதால் அமைதி காத்தான்.

 

அதற்குள் அங்கிருந்த யாரோ காவல்துறைக்கு அழைத்திருக்க, சரியாக அவர்கள் அங்கே வர வாக்குவாதம் முற்றி இருந்தது.

 

ஜீப்பில் இருந்து இறங்கியது என்னவோ தீரன் தான்.

 

அவன் காவல் அதிகாரிகளுக்கு கண் காட்ட, சிறிது நேரத்திலேயே வாக்குவாதம் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

 

அந்தத் தம்பதியினரிடம் என்னவென்று கேட்டு கிரகித்தவன்,

 

“ஓகே உங்களுக்கு சந்தேகம் இருந்தா இந்த ஹாஸ்பிடல் மேல ப்ரொப்பரா ஒரு கம்பளைண்ட் எழுதிக் கொடுங்க. விசாரிச்சு உண்மைய நாங்க கண்டுபிடிக்கிறோம். இப்படி பொது இடத்துல வந்து கத்தி கூச்சல் போட்டா எல்லாம் சரியாகிடுமா? படிச்ச இந்த தலைமுறை ஆக்கள் நீங்களே இப்படி பண்ணா நாட்டோட நிலைமை என்ன ஆகுறது. நமபிக்கையா போங்க நிச்சயம் இதுக்குக் காரணமானவங்களுக்கு தண்டனை கிடைக்கும்” என்க, அவன் பேச்சில் அவர்கள் சற்று தெளிய, அடுத்த சில நிமிடங்களில் அங்கே கூட்டம் கலைந்தது.

 

காலை நேரம் என்பதால் நோயாளிகள் வழமைய விட சற்று குறைவாகத்தான் வந்திருந்தனர்.

 

ஆனாலும் இந்த விஷயம் வெளியே போகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை…

 

நெருப்பை பற்ற வைக்க ஒரு குச்சி போதாதா??? அது நல்லாதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் நிலைமை அதுதான்.

 

அந்த நேரம் சரியாக பூங்கோதை மற்றும் அந்த மருத்துவமனை மருத்துவர்களில் ஒருவரான சிவப்பிரகாசம் இருவரும் வர, சித்தார்த்தினால் விடயம் அவர்களுக்கும் பகிரப்பட்டது.

 

தீரனை நேரடியாகப் பார்த்த கோதையோ “மிஸ்டர் தீரன், இது எங்க சைட்ல நடந்திருக்க வாய்ப்பே இல்லை. உங்க பக்க விசாரணைய நீங்க ஆரம்பிக்கலாம். ஹாஸ்பிடல் சார்பா முழு ஒத்துழைப்பு நாங்க கொடுப்போம்” என்றார் சிறு ஆராய்ச்சியான பார்வையுடன் அவனை நோக்கினார்.

 

அன்று அவன் மயலை திருமணம் செய்வது பற்றி ராம்பிராசாத்திடம் பேசியத்தை அவர் மனைவியுடம் பகிர்ந்திருந்தார் அதன் தாக்கம் அது,

 

அவரையே ஊடுருவும் பார்வை பார்த்த தீரனும் “கண்டிப்பா டாக்டர். இந்த கேஸ்ல குற்றவாளிய நிச்சயம் கண்டு பிடிப்பேன். கண்டுபிடிக்க தானே நான் இருக்கேன்” என்று திமிராய் சொன்னவன், அங்கிருந்த சிசிடிவியை கேலியாய் பார்த்து,

 

‘லெட்ஸ் சீ மிஸ்டர் ராம் பிரசாத்’ என்று மனதுக்குள் எண்ணிகொண்டான்.

 

இதே நேரம் அவரும் அதன்வழி அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

 

 

ஈர்க்கும்…

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்