Loading

மெல்ல உத்ஷவியின் புறம் காலடி எடுத்து வைத்த ஸ்வரூப், அவள் மீதிருந்த அழுத்தப் பார்வையை மட்டும் மாற்றவே இல்லை. அவளுமே அந்த காந்தப்பார்வையில் ஈர்க்கப்பட்டு, கண்ணை விலக்க இயலாமல் நிற்க, தனது கைக்குட்டைக் கொண்டு, அவளது இரத்தத்தைத் துடைத்தவன், “இன்னொரு தடவை இந்த மாதிரி அதிகப்பிரசங்கித்தனம் செய்யாத உத்ஷவி. கொன்னுடுவேன்!” என்றான் வெப்ப மூச்சு அவள் மேனியை பதமாகத் தீண்ட.

அவன் முகத்தில் எதிரொலிக்கும் உணர்வுக்குப் பெயர், கோபமா, கண்டிப்பா, தவிப்பா என்று புரியாமல், மையமாகத் தலையாட்டி வைக்க, அந்நேரம், சஜித்தும் அக்ஷிதாவும் அவர்களை நோக்கி வந்து விட்டனர்.

அதில், இரண்டடி பின்னால் நகர்ந்த ஸ்வரூப், வேகமாக காரை நோக்கி சென்று விட, அக்ஷிதா தான் உத்ஷவியின் காயத்தைக் கண்டு பதறினாள்.

பின், ஜோஷித்தும் விஹானாவும் வந்து விட, உத்ஷவியின் காயத்துக்கு மருந்திட்டு விட்டு, மலைக்கிராமத்தின் காட்டேஜுக்கு திரும்பினர்.

அதுவரையில், உத்ஷவியும் ஸ்வரூப்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை. ஸ்வரூப்பின் முகம் பலதரப்பட்ட குழப்பத்தை ஒருங்கே தாங்கி இருந்தது.

முதலாவது, இந்த பெண் தனக்குள் இத்தகைய ஆழத்தை ஏற்படுத்தி இருந்ததை உணர்ந்து மலைத்திருந்தான். அவளுக்கொன்று என்றால், தனது சுயத்தை மொத்தமாக இழக்கும் தன்னையே எண்ணி திகைத்திருந்தான். அவள் மீது பூத்த நேசத்திற்குப் பெயர் காதல் என்று புரிந்தது தான். ஆனால், இந்த பைத்தியக்காரத்தனமான அன்பு அவனுக்கே புதிது. அவனது குடும்பமும் குடும்ப கவுரவமும் இத்தனை வருடமாக கட்டிக் காத்த பாரம்பரியமும் நிச்சயம் இந்த அன்பினால் பாதிக்கப்படும்.

இன்னும் பல குழப்பங்கள் சூழ, புருவ மத்தியில் ஏற்பட்ட முடிச்சுடன் காரில் பயணித்தவனை ஜோஷித் அழைத்தான்.

“என்னடா யோசனை?” எனக் கேட்டதில், மறுப்பாக தலையசைத்தவன், மீண்டும் யோசனைக்குள் மூழ்கி, சில நிமிடங்களில் தீர்மானமாய் ஒரு முடிவெடுத்தான். அதன் பிறகே அவன் முகம் தெளிச்சிப் பெற்றது.

காட்டேஜுக்குள் நுழைந்ததுமே, சிப்பிற்குள் இருக்கும் விஷயத்தை டீ-க்ரிப்ட் செய்ய முயன்றான் ஜோஷித்.

சில நிமிடங்களில் தகவலையும் எடுத்து விட்டவனின் முகத்தில் யோசனையின் தடம்.

“இதுல ஏதோ ஃபார்முலா மாதிரி இருக்குடா. இது எதுக்கான ஃபார்முலாவா இருக்கும்.” எனப் புரியாமல் அதனை ஸ்வரூப்பிடம் நீட்ட, அவனும் புரியாமல் குழம்பினான்.

ஏதேதோ கெமிக்கல் பெயர்களும், அதனை இணைத்தது போன்ற ஃபார்முலாவும் இருக்க, அக்ஷிதா “நீ ஃபார்முலான்னு சொன்னதும், ஏதோ எக்ஸ் ஸ்கொயர் ப்ளஸ் ஒய் ஸ்கொயர் இஸ் ஈகுவல்ட்டு எக்ஸ் ஒய் ஸ்கொயர்ன்னு இருக்கும்ன்னு பார்த்தா, இது என்ன வாயில நுழையாத பேரா இருக்கு.” என்று தலையைச் சொரிந்தாள்.

விஹானா சிந்தனையுடன் “இது ஏன் ஒரு ட்ரக் கிரியேட் பண்றதுக்கான ஃபார்முலாவா இருக்கக் கூடாது” என்று கேட்டதில், அனைவரும் அவளைப் பார்த்தனர்.

“ஒரு தடவை, மெடிக்கல் ஃபார்மா கம்பெனில இருந்து ஒரு ஃபார்முலாவை திருடிட்டு வர சொல்லி இருந்தான் ராகேஷ். அதை எடுத்தது ஷவி தான். அந்த ஃபார்முலா கூட கிட்டத்தட்ட இதே மாதிரி தான் இருந்துச்சு.” என்றதும் ஸ்வரூப் இப்போது உத்ஷவியைப் பார்க்க, அவள் விழித்தாள்.

“ஃபார்மா கம்பெனில இருந்து எதையோ திருடிட்டு வரச் சொல்லி ப்ராஜக்ட் குடுத்து இருந்தான் ராகேஷ். ஒத்துக்குறேன். ஆனா, இது அதுவான்னு எனக்குத் தெரியல” என்றவள், “அப்போ ஆல்ரெடி நான் திருட்டிட்டு வந்ததை தான் இப்பவும் திருடிட்டு வந்து இருக்கேனா?” என்று வெகுவாய் வருந்திக் கொள்ள, ஸ்வரூப் நெருப்பாய் காய்ந்தான்.

“அறிவு கெட்டத் தனமா அவன் சொல்றான்னு ஃபார்முலாவை திருடிட்டு வந்து இருக்கியே. இதை அவனுங்க தப்பா யூஸ் பண்ணி, மக்களை அழிச்சா, அதுக்கு முதல் காரணம் நீ தான்” என்று கடுகடுக்க, உத்ஷவி திகைத்தாள்.

“ம்ம்க்கும், இவ்ளோ பிளான் பண்ணுன உன் அத்தைப் பையன் நல்லவன். எடுத்துட்டு வந்த நான் கெட்டவளாக்கும். இருக்குறவனுக்கு தான் நீங்க எல்லாம் சப்போர்ட் பண்ணுவீங்க.” என உத்ஷவி முறைத்திட, “தப்புக்கு துணை போறதும் தப்பு தான் திருடி.” என அழுத்தத்துடன் கூறியதில், “நான் இல்லைன்னாலும் இதை வேற யாராவது எடுத்து இருப்பாங்க டைனோசர். இதை வச்சு இவ்ளோ பெரிய பிரச்சனை இழுப்பாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்”. என முணுமுணுத்தாள்.

அதில் கோபம் குறைந்தாலும் அவளை முறைப்பதை நிறுத்தவில்லை அவன்.

“அவளை விடுடா. இப்போ, இதை வச்சு என்ன செய்றது?” என்று சஜித் வினவ, “முதல்ல இது என்ன ஃபார்முலான்னு கண்டுபிடிக்கணும். இதை எங்க இருந்து திருடுன?” என ஸ்வரூப் கேட்க,

“அமுதன் ஃபார்மா கம்பெனில இருந்து திருடுனேன்.” என்றாள் மெல்ல.

“அப்போ அங்க போய் விசாரிக்கலாம் ஸ்வரா. அந்த கம்பெனியோட டீன் நம்ம காலேஜ் மேட் தான்.” என்ற ஜோஷித்தின் கூற்றில், அடுத்ததாக அமுதன் ஃபார்மா கம்பெனிக்கு படையெடுத்தனர்.

ஏற்கனவே, கம்பெனியின் டீனான அமுதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவனும் இவர்களுக்காக காத்திருந்தான்.

அனுமதி கேளாமல், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவர்களைக் கண்டு ஒரு நொடி விழித்த அமுதன், “என்னடா ஏதாவது பிரச்சனையா?” என நேரடியாகக் கேட்டு விட, “பிரச்சனைன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று சஜித் சந்தேகமாகப் பார்த்தான்.

“அடேய்… உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? மேனர்ஸ்ல மூழ்கிப் போனவனுங்களா. காலேஜ் படிக்கும் போது கூட, கிளாசுக்கு எக்ஸ்கியூஸ் கேட்டுட்டு தான வருவீங்க. இப்ப கதவை கூடத் தட்டாம மடமடன்னு உள்ள வர்றீங்களே ஏதோ அவசரமான பஞ்சாயத்தான்னு கேட்டேன்” என்றதில், ஜோஷித், “ஆமா ஆமா பஞ்சாயத்து தான். ஆனா அதுல யார் தலை உருளப் போகுதுன்னு தான் தெரியல.” என்றான் நக்கலாக.

“இப்ப என்ன உனக்கு கதவைத் தட்டிட்டு உள்ள வரணுமா?” என ஒரு காலை சேர் மீது வைத்து எகத்தாளமாக நின்றிருந்த உத்ஷவியைக் கண்டு, “இந்த பொண்ணுங்க யாருடா?” எனக் கேட்டான்.

ஸ்வரூப் எதற்கும் பதில் அளிக்காமல், மடிக்கணினியில் இருந்த ஃபார்முலாவைக் காட்டி, “இது உன் ஃபார்மா கம்பெனிக்கு சம்பந்தப்பட்ட ஃபார்முலா தான?” எனக் கேட்டு விட்டு, கையில் அணிந்திருந்தக் காப்பைப் பின்னால் நகர்த்தினான்.

கொஞ்சம் நிதானம் தவறிப் பதில் அளித்தால் தன்னைப் பிரித்து மேய்ந்து விடும் அளவு அவர்களது ‘பாடி லாங்குவேஜ்’ இருப்பதைக் கண்டு எச்சிலை விழுங்கியவன், ‘என்ன செஞ்சேன்னு தெரியலையே. மொத்தமா வந்துருக்கானுங்க.’ என மிரண்டான்.

இருந்தும் ஃபார்முலாவைக் கவனமாகப் பார்த்து விட்டு, “ஆமா, இது எப்படி உங்க கிட்ட?” எனக் கேட்டு திகைத்தவனைக் கூர்மையுடன் ஸ்வரூப் ஆராய,

அவனோ பயந்து, “டேய் ஸ்வரூ சத்தியமா நான் எந்தத் தப்பான வேலையும் பார்க்கல. முதல்ல உங்க பாடியை விறைப்பா வைக்காம கொஞ்சம் லூஸ் பண்ணுங்கடா… எனக்கு அடி வயிறு லேசா கலங்குது.” என வயிற்றைப் பிடித்துக் கொண்டான் அமுதன்.

பக்கென சிரித்து விட்ட அக்ஷிதா, “அட கொஞ்சம் நார்மலா விசாரிங்கப்பா. பாவம் பையன் பயத்துல ரூமை நாறடிச்சுட போறான்.” என்றிட, அதில் சஜித் இறுக்கம் தளர்ந்து, “உன் கம்பெனியோட ஃபார்முலா திருடுப் போனதுக் கூட உனக்குத் தெரியலையா?” என்றான்.

“என்னது திருடுப் போய்டுச்சா? யாரு திருடுனா?” என அவன் எழுந்து விட, “இதோ இவள் தான்” என விஹானா உத்ஷவியைக் கை காட்டி அவளிடம் இருந்து முறைப்பைப் பரிசாக வாங்கி கொண்டாள்.

அமுதனுக்கோ பைத்தியமே பிடிப்பது போல இருந்தது. மீண்டுமொரு முறை ஃபார்முலாவைப் பார்த்தவன், மெல்ல சிந்தித்து விட்டு,

“ஸ்வரூ, இதோட பேசிக் என் கம்பெனி ஃபார்முலா தான். ஆனா, இதுல சொல்லி இருக்குற எக்ஸ்டரா கெமிக்கல்ஸ் எல்லாம் நாங்க சேர்க்கல. இது மெண்டல் டிஸார்டரை கண்ட்ரோல் பண்றதுக்காக, நாங்க தயாரிக்கிற ட்ரக். பொதுவா இதை, மனநல மருத்துவமனைக்கு தான் அனுப்புவோம். சைக்கியாட்ரிஸ்ட் தான், இதை யாருக்கு பிரிஃபர் பண்ணலாம், எவ்ளோ அளவு குடுக்கலாம்ன்னு டிசைட் பண்ணுவாங்க.” என்றதில்,

ஜோஷித், “மெண்டல் டிஸார்டர்ன்னா குறிப்பிட்டு எதுக்குன்னு குடுப்பீங்க?” எனக் கேட்க,

அக்ஷிதா அமைதியாக இராமல், “அப்டியே இவளுக்கு ஒரு டோஸ் குடுங்க. இவளுக்கும் திருடுற வியாதி இருக்கு. அது கண்ட்ரோல் ஆகும்” என்று கூறிட, உத்ஷவி ‘மூடு’ என சைகை காட்டினாள்.

அமுதனோ, “நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. இது ஃபியர் அல்லது ஆங்சைட்டி(anxiety)யை கண்ட்ரோல் பண்ற ட்ரக்குக்கான பார்முலா. இதை யூஸ் பண்ணி தான், க்ளோனோபின், xanax, avitan மாதிரியான டேப்ளட்ஸ தயாரிப்போம்.” என்றவன், “இதுல சேர்த்துக்குற எக்ஸ்டரா கெமிக்கல்ஸ் என்னன்னு எனக்குத் தெரியல. கெமிக்கல் டிபார்ட்மென்ட் ஹெட்ட விசாரிச்சா, மே பி அவருக்குத் தெரியலாம்.” என்றான்.

சொன்னதோடு நில்லாமல், அவரை அறைக்கும் வரவைத்தான். “வேலன்” என அவரை அறிமுகப்படுத்திய அமுதன், அவரிடம் அந்த ஃபார்முலாவைக் காட்ட, அதனைக் கூர்மையுடன் பார்த்த வேலன், “சார் இதை பாருங்களேன் இதோட பேசிக் நம்மளோட மெடிசின் சார்.” என்று வியந்தார்.

பின், “ஆனா நம்ம பேசிக்ஸ்ஸோட எதிர்வினையா வேற கெமிக்கல் சேர்த்துருக்காங்க.” என்றவரின் முகத்தின் சிறு அதிர்வு.

ஸ்வரூப் “புரியல?” எனப் புருவம் சுருக்க,

“அதாவது, பயத்தையும் அது சம்பந்தப்பட்ட ஹார்மோனையும் கண்ட்ரோல் பண்றதுக்காக நாங்க தயாரிச்ச ஃபார்முலாவை மாத்தி, பயத்தை உண்டு பண்றதுக்கான கெமிக்கல்ஸ் ஆட் ஆகி இருக்கு சார். இதை வச்சு ட்ரக் வந்துட்டா, மனுஷனோட ஆங்சைட்டி ஹார்மோன்ஸான அட்ரீனலின், கார்டிசோல் ஓட வேலையை அதிகமாக்கி, டிப்ரெஷன், பயம், அதிகமாகி யோசிக்கிற தன்மையை இழக்கச் செய்யும்.” என்றவரின் கூற்றில், அனைவருமே அதிர்ந்தனர்.

“பயம் காட்ட இப்படி எல்லாமா செய்வாங்க…” உத்ஷவி திகைத்துக் கேட்டபடி காருக்கு அருகில் செல்ல, “அப்படி பயம் காட்டி என்ன செய்வாங்க” என்று அக்ஷிதா குழம்பினாள்.

“அதான் புரியல. இவங்களோட மோட்டிவ் தான் என்ன?” என ஸ்வரூப்பும் சலித்தான்.

பின் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன், “இதை கேட்க வேண்டிய ஆளுகிட்டயே கேட்டுடலாம்” என்று ஏளனப் புன்னகை வீசினான்.

——

மூக்கில் இருந்து நிற்காமல் வழிந்த குருதியைத் துடைத்த ப்ரீத்தனின் அருகில் யாருமே செல்ல இயலவில்லை. ரௌத்திரத்தின் மறுஉருவமாக மூர்க்கத்துடன் காட்சியளித்தான்.

பூமிநாதனும் அவரது மனைவி யசோதாவும் எவ்வளவோ கெஞ்சியும் அவன் காயத்திற்கு மருந்திடவில்லை.

தன்னை அடித்தது ஸ்வரூப் என்பது அவனுக்கு நிச்சயம். அவனது அடியை முன் சில முறை வாங்கி இருக்கிறானே!

ஆனால், எதற்கு அடித்தான் எனப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் அல்லவே அவன்.

இஷானா கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். காதல் மயக்கத்தில் ஸ்வரூப்பிடம் அவனது சீக்ரட் அறை பற்றிய ரகசியத்தைக் கூறி விட்டாளே!

அது தெரிந்தால் தமையன் தன்னைக் கொன்றே விடுவான் என மிரண்டு நின்றிட, அவள் நினைத்தது போலவே அவனது அறையில் இருந்து எதுவோ திருடுப் போன விஷயம் தெரிந்து அதிர்ந்தாள்.

தன்னிடம் விஷயத்தை வாங்கி விட்டு இப்போது போனை எடுக்காமல் ஆட்டம் காட்டும் ஸ்வரூப்பின் மீது ஆத்திரம் மழையாகப் பொழிந்தது.

பூமிநாதன் தனது மகன் தாக்கப்பட்டதை போலீஸ் கேஸாக கொடுக்க முயல ப்ரீத்தன் தடுத்தான். “இதை நானே பாத்துக்குறேன் எல்லாரும் இங்க இருந்து போங்க” என்று கத்திட யசோதாவிற்கு கண்ணீர் வழிந்தது.

“இப்படி அடி பட்டுருக்கேப்பா” என வருத்தத்துடன் கூறியதில், “இன்னும் சாகலைல… நீங்க உங்க அண்ணன் மகன்களையே தலைல தூக்கி வச்சு ஆடுங்க.” என்று சிடுசிடுத்தான்.

“இப்போ ஏன்பா அவங்களை இழுக்குற. நீ இங்க அபார்ட்மென்ட் கட்டக் கூடாதுன்னு தான சொன்னாங்க. அதைக் காரணமா வச்சு உன் தங்கச்சிங்களோட நடக்க இருக்குற கல்யாணத்தை நிறுத்திடலையே. என் அண்ணனுங்கப் படுத்த படுக்கையா இருக்குறனாள தான், எல்லாம் தள்ளிப் போயிட்டு இருக்கு.” என பெருமூச்சு விட்டவருக்கு இந்த கல்யாணம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்ற கவலை நாளுக்கு நாள் அதிகமானது.

பூமிநாதன் யசோதாவை சமன் செய்து அறைக்கு அழைத்துப் போக, பிரீத்தன் தன் தங்கைகளை அலட்சியத்துடன் பார்த்தான்.

“இந்த கல்யாணம் நடக்கும்ன்னு நினைக்காதீங்கடி அடி முட்டாளுங்களா. அவனுங்க அந்த பொண்ணுங்ககூட குடும்பமே நடத்திட்டு இருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.” என்றதில், பாவனா, “சும்மா உளறாதண்ணா, அவனுங்களுக்கு அந்த அளவு தைரியம் எல்லாம் இல்ல” என்றாள் அசட்டையாக.

“ஆஹான் அப்படியா?” என வாயில் வழிந்த இரத்தத்துடன் இகழ்ச்சியாகப் புன்னகைத்தவன், போனை எடுத்து ஒரு வீடியோவைப் போட்டுக் காட்டினான்.

சென்னையில், அக்ஷிதாவின் தந்தைத் தவறிய செய்தி தெரியும் போது, சஜித் அக்ஷிதாவை தனியே அழைத்துச் சென்று கையைப் பிடித்து சமாதானம் செய்த காட்சி அதில் பதிவாகி இருக்க, அதனைக் கண்டு பாவனா திகைத்தாள்.

அவன் கண்களில் தான் எத்தனை மென்மை! அதனைக் காண காண சினம் சூழ்ந்தது அவளுக்கு.

ப்ரீத்தனோ “இப்போ இங்க என்ன நடந்துச்சு தெரியுமா?” என நடந்ததை ஒன்று விடாமல் கூறி விட்டு, “அந்த திருட்டுப்பொண்ணை அடிச்சதுக்காகத் தான், அவன் என்னை அடிச்சுட்டு போயிருக்கான்” என்ற செய்தி இஷானியின் காதல் மயக்கத்தைக் கலைத்தது.

“ஸ்வரூப் என்னை ரொம்ப சாதாரணமா எடை போட்டுட்டான் அண்ணா. ஏதோ கல்யாணம் முடியிறதுக்காக நான் பொறுமையா போயிட்டு இருக்கேன். அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன்.” என்று பல்லைக்கடித்து நெருப்பை உமிழ்ந்து விட்டு நகர, மற்றவர்களும் கோபம் தாங்கிய வதனத்துடன் சகோதரியின் பின் சென்றனர்.

ப்ரீத்தனோ மலையளவு சினத்துடன் “அவனுக்கு நான் யாருன்னு காட்ட தான் போறேன்…” என்று வீர வசனம் பேசும் போதே, மயங்கி விழுந்து விட்டான்.

கண் விழித்துப் பார்க்கும் போது, கைகளும் கால்களும் கட்டிடப்பட்டிருந்தது. அவனுக்கு எதிரில் மூன்று ஆடவர்களும் எமன் போல நின்றனர்.

முதலும் முடிவும் நீ!
மேகா!

அடுத்த பதிவு நைட்டு போடுறேன் டியர்ஸ்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
74
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment