Loading

சமுத்ராவை மருத்துமனையில் அனுமதித்ததும் அவளை பரிசோதித்த மருத்துவர் அவளின் முந்தைய  உடல்நிலையை பற்றி விசாரிக்க எதற்கும் இருக்கட்டுமென்று தன் மொபைலில் சேமித்திருந்த சமுத்ராவின் ரிப்போர்ட்டுக்களை காண்பித்த ஷாத்விக் அவள் கர்ப்பமாக இருப்பதையும் தெரியப்படுத்தினான்.

அவளின் உடல்நிலை பற்றி முழுதாக தெரிந்ததால் சிகிச்சைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

சமுத்ராவிற்கு உரிய சிகிச்சையை வழங்கிவிட்டு வெளியே வந்த மருத்துவர்

“அம்மாவும் குழந்தையும் நல்லா இருக்காங்க. ஆனால் அடுத்த முறையும் இதே மாதிரி நடந்தால் என்னால இதே வார்த்தைகளை சொல்லமுடியாது. சோ அவங்க ஸ்ரெஸ் ஆகாமல் பார்த்துக்கோங்க.” என்று அறிவுரை வழங்கியவரிடம் நன்றி கூறியவன் சமுத்ராவை பார்க்கலாமா என்று கேட்டு அவளை அனுமதித்திருந்த அறைக்குள் சென்றான்.

சமுத்ரா இன்னும் மயக்கத்தில் இருக்க அவளருகே சென்று அமர்ந்தவனுக்கு அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது.

சமுத்ரா மயங்கியபோது ஷாத்விக் பயந்துவிட்டான். ஏற்கனவே மருத்துவரை பார்த்து வந்தபோது அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தார். அப்படியிருக்கும் போது மயங்கி விழுந்தவளிடம் எந்த அசைவும் இல்லாதிருக்க நன்றாகவே பயந்துபோனான் ஷாத்விக். 

மெதுவாக சமுத்ராவின் கையை பற்றியவன் மனதினுள் அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு தலையை திருப்பி பார்த்தவனுக்கு உதய் உள்ளே வருவது தெரிய அப்போது தான் உதய்யின் நினைவு வந்தது.

ஷாத்விக்கின் அருகே வந்த உதய் டாக்டர் கூறியதன் மூலம் தான் தெரிந்துகொண்ட விஷயத்தை தெளிவுபடுத்துக்கொள்ள நினைத்தவன்

“டாக்டர் சொன்னது உண்மையா ஷாத்விக்?” என்று கேட்க

“ஆமா உதய். சமுத்ரா கர்ப்பமா இருக்கா. குழந்தை இன்னும் ஸ்டேபலா இல்லைனு டாக்டர் சொன்னாங்க. வீட்டுல சொன்னா பயப்படுவாங்கனு மூனு மாசத்துக்கு பிறகு சொல்லலாம்னு நினைச்சிருந்தோம். ஏற்கனவே அப்பாவோட இழப்புல இருந்து இன்னும் யாரும் முழுசா மீளலை. இப்போ இதை சொல்லி அப்புறம் ஏதாவது தப்பா நடந்துட்டா மனக்கஷ்டம்னு தான் இப்போதைக்கு சொல்லவேணாம்னு நெனச்சோம். ஆனா இனிமேலும் இதை மறைச்சு வைக்கிறது குழந்தை சமுத்ரா இரண்டு பேருக்கும் ஆபத்து.” என்று ஷாத்விக் இருவரும் சேர்ந்து முடிவெடுத்ததை போல் உதய்யிடம் சொல்ல உதய்யோ முழுதாக அதனை நம்பவில்லை.

ஷாத்விக்கை விட சமுத்ராவை அவனே நன்கு அறிவான். நிச்சயம் இது சமுத்ராவின் முடிவாகவே இருக்குமென்று உதய் உறுதியாக நம்பினான். ஆனால் ஷாத்விக் தனக்கும் இதில் பங்குண்டென்று கூறி சமுத்ராவுக்கு அரணாயிருப்பது உதய்க்கு மகிழ்ச்சியாக இருந்தது.

“நீங்க விஷயத்தை சொல்லுறது தான் நல்லதுன்னு எனக்கும் தோனுது. இந்த மாதிரி நேரத்துல கட்டாயம் பெரியவங்க துணை வேணும். நான் ஆண்டிக்கு தகவல் சொல்லிடுறேன். ரெண்டு தடவை கூப்பிட்டுட்டாங்க.” என்றவனிடம்

“இது பத்தி ஏதும் சொல்ல வேணாம். வீட்டுக்கு போனதும் நானே சொல்லிக்கிறேன். இப்போதைக்கு சமுத்ரா நல்லா இருக்கான்னு மட்டும் சொல்லிருங்க. நானே டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சிட்டு வாரேன்னு சொல்லிடுங்க.” என்று ஷாத்விக் சொல்ல உதய்யும் அவன் சொன்னபடியே செய்தான்.

மறுபுறம் பவனோ தன் அன்னையை திட்டிக்கொண்டிருந்தான்.

“அம்மா நீங்க என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா? சமுத்ரா மேல உங்களுக்கு ஏன் அத்தனை வெறுப்பு? அதுவும் இத்தனை பேர் இருக்க இடத்துல இந்த மாதிரி தான் பேசுவீங்களா?” என்று பவன் ஆத்திரத்துடன் கேட்க

“நான் என்னடா தப்பா பேசிட்டேன்? நடந்ததை தானே சொன்னேன். அவளை பத்தி பேசுனா நீ ஏன்டா துள்ளிட்டு வர?” என்று நிர்மலாவும் சிலிர்த்துக்கொண்டு நிற்க

“நீங்க என்ன மனசுல நெனைச்சிட்டு இப்படியெல்லாம் பேசுறீங்கனு எனக்கு தெரியும். உங்களுக்கு சமுத்ரா குடும்பத்தை பிடிக்காது. எங்க அந்த குடும்பத்து பொண்ணுங்க நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திடுவாங்களோனு பயம். ஆனா நீங்க பயப்படுறதுக்கு எதுவுமே இல்லை. நீங்களே கெஞ்சுனா கூட அந்த கொடுமையை சமுத்ரா குடும்பத்துக்கு நான் எந்த காலத்துலயும் செய்யமாட்டேன்.” என்று பவன் சொல்ல

“என்னடா பேசுற நீ? அந்த நாதியில்லாத குடும்பத்துக்காக என்கிட்ட ஒன்னுக்கு ஒன்னு நிற்கிற?”என்று நிர்மலா அதற்கும் சண்டைக்கு வர

“நான் நியாயத்தை சொன்னேன்மா. அவங்க வீட்டு பங்கஷன்ல போய் அவங்க வீட்டு பொண்ணை இவ்வளவு பேசுனபிறகும் அவங்க வீட்டாளுங்க அமைதியாக இருக்கிறதே பெருசு. இதே நீங்களா இருந்தா அமைதியாக இருந்திருப்பீங்களா?” என்று பவன் கேட்க

“எனக்கென்ன அந்த குடும்பம் மாதிரி நாதியில்லாமலா இருக்கு?” என்று நிர்மலா தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் மட்டுமே என்ற ரீதியில் பேச பவனுக்கு தன் அன்னையிடம் பேசி எந்த பலனில்லையென்று புரிந்தது.

“நான் சொல்றதை நீங்க கேட்கப்போறதில்லை. ஆனா இனி நீங்க சமுத்ரா விஷயத்தில் தலையிட்டா நான் அமைதியாக இருப்பேன்னு எதிர்பார்க்காதீங்க.” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.

விஷயம் தெரிந்து ஷாத்விக்கின் நண்பர்கள் கடைக்கு வந்திட நாதன் வீட்டாரை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றான்.

வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அமராவதி அழுதுகொண்டே வர யாருக்கும் அவருக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியவில்லை.

வீட்டிற்கு வந்ததும் அவர் அதையே தொடர இந்திராணி தான் அவரை அதட்டி அடக்கினார்.

“அண்ணி நீங்க இப்படியே புலம்புறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. சமுத்ராவுக்கு எதுவும் இருக்காது. நீங்க அழுது உடம்பை கெடுத்துக்காதீங்க.” என்று இந்திராணி கூற

“இல்லை அண்ணி. நான் அவளை சரியாக கவனிக்கல. மத்த பிரச்சினையில அவளை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். சின்ன வயசுல இருந்தே அவ எதையும் வாயை திறந்து சொல்லமாட்டா. உடம்புக்கு முடியலனா கூட நாமளா தெரிஞ்சிக்க வரைக்கும் அவ சொல்லமாட்டா. குடும்ப பொறுப்பை எடுத்த பிறகு அதுக்கு அவ சந்தர்ப்பமே கொடுக்கல. இத்தனை நாள்ல அவ அழுததது அண்ணாவோட சாவுக்கு மட்டும் தான். அதுவும் இன்னைக்கு நிர்மலா அண்ணி பேச்சை கேட்டு அவ அழுததை பார்த்து எனக்கு ஈரக்குலையை நடுங்கிப்போச்சு.”என்று அமராவதி புலம்ப

“அவளாம் ஒரு ஆள்னு அவளை கேள்வி கேட்கப்போன உங்களை சொல்லனும்.” என்று இந்திராணி அமராவதியை திட்ட

“அவங்க வாழவேண்டிய பொண்ணை நாக்குல நரம்பில்லாம சபிக்கிறதை எப்படி அண்ணி என்னால அமைதியாக பார்த்துக்கிட்டிருக்க முடியும்?” என்று அன்னையாய் அமராவதி கேட்க இந்திராணிக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“சரி அழாதீங்க. ஷாத்விக் உதய் இரண்டு பேரும் கூட போயிருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க.” என்று இந்திராணி ஆறுதல் கூறினார்.

அப்போது உதயிடமிருந்து அழைப்பு வர அதனை நாதன் ஸ்பீக்கரில் போட அனைவரும் பயத்துடனேயே நடப்பதை கவனிக்கத்தொடங்கினர்.

“சமுத்ரா எப்படி இருக்கா தம்பி?” என்று அமராவதி முந்திக்கொண்டு கேட்க

“சமுத்ரா நல்லா இருக்கா. சாதாரண மயக்கம் தான். ட்ரிப்ஸ் முடிந்ததும் டாக்டர் வீட்டுக்கு அழைச்சிட்டு போக சொல்லிட்டாங்க.”என்று உதய் சொல்ல

“சமுத்ரா பக்கத்துல இருந்தா கொஞ்சம் கொடுக்கிறீங்களா?” என்று அமராவதி கேட்க

“நான் மெடிகல்ஸ் வந்திருக்கேன் ஆண்டி.” என்று உதய் ஒரு பொய்யை சொல்ல

“சரி தம்பி. வேற ஏதும் பிரச்சினையில்லையே அவளுக்கு?” அதே கலக்கத்துடன் கேட்க 

“அதெல்லாம் எதுவும் இல்லை ஆண்டி. அவ நல்லா இருக்கா. நீங்க கவலைப்படாமல் இருங்க.” என்று கூற அப்போது தான் அமராவதிக்கு சற்று ஆறுதலாக இருந்தது.

மறுபுறம் மருத்துவமனையில் மெதுவாக கண்விழித்தாள் சமுத்ரா.

அருகே ஷாத்விக் அமர்ந்து எதையோ புரட்டிக்கொண்டிருப்பதை பார்த்து மெதுவாக அழைத்தாள். அவளின் அசைவை உணர்ந்தவனும் அவளை நெருங்கியவன்

“உடம்புக்கு எப்படி இருக்கு? ஏதாவது குடிக்கிறியா?” என்று கேட்க

“தண்ணி”என்று அவளது உதடுகள் உச்சரிக்க அவள் எழுந்து அமர்வதற்கு உதவியவன் அவள் நீர் அருந்த உதவினான்.

தண்ணீர் பருகியதும் சற்று ஆசுவாசமடைந்த சமுத்ராவுக்கு நடந்த அனைத்தும் நினைவு வர சாந்தமாக இருந்த அவளின் முகமோ இப்போது சுருங்கியது. 

அதை கவனித்த ஷாத்விக்கிற்கு அவளின் மனதில் இது தான் ஓடுகின்றதென யூகிக்கமுடிந்தது.

மெதுவாக அவளின் கையை பற்றியவன்

“இப்போதைக்கு நம்ம பாப்பா தான் முக்கியம். வேறு எதுவும் நமக்கு தேவையும் இல்லை. அவசியமும் இல்லை. அதனால கண்டதையும் யோசிக்காமல் மனசை அமைதியாக வச்சிக்கோ. இனிமேல் இப்படியொரு சூழ்நிலை வராமல் நான் பார்த்துக்கிறேன்.”என்று ஷாத்விக் சொல்ல

“பாப்பாவுக்கு எதுவுமில்லையே?”என்று சமுத்ரா சற்று பதற்றத்துடன் கேட்க

“என் தங்கம் பத்தரமா அவங்க அம்மா வயித்துக்குள்ள சமத்தா இருக்கான். ஆனா அவங்க அம்மா தான் அடிக்கடி டென்ஷன் ஆகிட்டே இருக்காங்க.”என்று ஷாத்விக் இப்போது சமுத்ராவை குற்றம் சொல்ல சமுத்ராவிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“சமுத்ரா இனியும் இந்த விஷயத்தை வீட்டுல மறைக்கிறது சரின்னு எனக்கு தோணலை. இந்த மூனு மாசம் நீ எவ்வளவு ரெஸ்ட்டுல இருக்கியோ அவ்வளவு நல்லது டாக்டர் சொன்னாங்க. என்னால உன் பக்கத்துலயே இருந்து பார்த்துக்க முடியும். ஆனா அனுபவமுள்ளவங்க கவனிப்பு இன்னும் பாதுகாப்பாக இருக்கு. ப்ளீஸ் இதை வேணாம்னு மறுக்காத.” என்று ஷாத்விக் சொல்ல சமுத்ராவோ சரி வேண்டாமென்று எதுவும் சொல்லவில்லை.

இன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு அவளும் மனதளவில் பலவீனமாகவே உணர்ந்தாள். அனைத்து பிரச்சினைகளையும் உதறிவிட்டு அன்னை மடியில் சரணடைந்திட அவள் மனம் ஏங்கியது. 

எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தவளை கண்ட ஷாத்விக்கோ இனியும் நேரம் கொடுத்தால் மறுப்பதற்கும் வாய்ப்பிருக்கென்று எண்ணியவன்

“வீட்டுக்கு போனதும் நானே விஷயத்தையும் சொல்லிடுறேன். சரி நீ ரெஸ்ட் எடு. நான் எப்போ டிஸ்சார்ஜ்னு விசாரிச்சிட்டு வரேன்.” என்று கூறி விலக முயன்றவனை தடுத்த சமுத்ரா

“நிர்மலா அத்தை பேசுனது…” என்று சமுத்ரா ஆரம்பிக்க

“இன்னைக்கு கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டாங்க. உடுக்கையடிக்க மங்கை சித்தி இருக்கவும் இவங்களுக்கு சத்தமா சாமியாட சரியான சந்தர்ப்பம் கிடைச்சிடுச்சு. ஆனால் அவங்க பேசுனதெல்லாம் உன் மேல உள்ள பொறாமையால் வந்த வார்த்தைகள். அதுல எந்த நியாயமும் இல்லைனு அவங்களுக்கே தெரியும். என் கோபம் என்னதுனா அவங்க தான் ஏதோ பேசனும்னு பேசுறாங்கனா நீ அதை கேட்டு டென்ஷனாகி கத்தி மயங்கி விழுந்து இப்படி ஹாஸ்பிடல்ல வந்து படுத்திருக்கியேன்னு தான்.”என்று ஷாத்விக் சொல்ல

“அப்போ நீங்க அதை நம்பல?” என்று சமுத்ரா மீண்டும் கேட்க

“அவங்க பேசுனதையே மைண்டுல ஏத்திக்கலனு சொல்லுறேன். இதுல எங்க இருந்து நம்புறது?” என்று ஷாத்விக் சொல்ல

“தேங்க்ஸ்” என்ற வார்த்தைகளை உதிர்த்தது சமுத்ராவின் உதடுகள்.

அது ஷாத்விக்கிற்கு சற்று அதிர்ச்சியை கொடுத்த போதிலும் அவன் இதழ்களோ புன்னகையில் லேசாக விரிந்தது.

அவளருகே நெருங்கியவன் அவள் எதிர்பாரா நேரத்தில் அவளின் முன்நெற்றியில் முத்தமிட்டதோடு அவளின் காதருகே குனிந்து

“நன்றியை இப்படியும் சொல்லலாம்.” என்றவன் அதற்குமேல் அங்கு நிற்கவில்லை.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.