Loading

மாலை சமுத்ராவோடு வீடு வந்து சேர்ந்தான் ஷாத்விக். உதய் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு வேலையிருப்பதாக கூறி கிளம்பிட வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மாறி மாறி கேள்வி கேட்க ஷாத்விக் 

“சமுத்ரா இப்போ ரெஸ்ட் எடுக்கட்டும். சமுத்ரா நீ உள்ள போ.” என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தான் ஷாத்விக்.

அவள் செல்லும் வரை அமைதியாக இருந்த இந்திராணி

“இப்போ சொல்லுடா. சமுத்ரா உடம்புக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்க

“அவளுக்கு எதுவும் இல்லை நல்லா தான் இருக்கா. ஆனா…” என்று ஷாத்விக் இழுக்க

“ஆனா என்ன ஷாத்விக்?” என்று அமராவதி சற்று பதட்டத்துடன் கேட்க

“நீ இரண்டு பேரும் பாட்டி ஆகப் போறீங்க.” என்று என்று ஷாத்விக் கூற அங்கிருந்த அனைவரின் முகத்திலும் குழப்பம் மட்டுமே நிறைந்திருந்தது.

“எப்புர்றா?” என்ற ரீதியில் அனைவரின் முகத்திலுமிருந்த ரியாக்ஷனை பார்த்த ஷாத்விக்

“என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறீங்க? நிஜமாகவே சமுத்ரா கர்ப்பமா இருக்கா.” என்று ஷாத்விக் மீண்டும் கூறியவன் டாக்டர் கூறியவற்றை பக்குவமாக எடுத்து கூறினான்.

நடந்தவை தெரிந்ததும் கோபப்பட்ட பெரியவர்கள் பின் இனி அனைத்தையும் தாங்கள் பார்த்துக்கொள்வதாக உறுதி மொழி கொடுத்த பிறகு ஷாத்விக்கிற்கு நிம்மதியாக இருந்தது.

இந்த சில நாட்களாய் சமுத்ராவின் பாதுகாப்பு பற்றியிருந்த பயம் இப்போது முழுமையாக ஷாத்விக்கை விட்டு நீங்கியிருந்தது.

அன்றிலிருந்து மாலதி, அமராவதி, இந்திராணியென்று ஒருவர் மாற்றி ஒருவர் சமுத்ராவை நன்றாக கவனித்துகொண்டனர்.

சமுத்ராவுக்கு இந்த அதீத கவனிப்பு சில நேரங்களில் அவளின் பொறுமையை சோதிக்க அந்த நேரங்களில் ஷாத்விக்கின் நிலை தான் மோசமானது.

பகல் முழுவதும் தன் வீட்டாரின் அன்புத்தொல்லையை சகித்துக்கொள்பவள் இரவு வீடு திரும்பும் ஷாத்விக் மீது தன் மொத்த கோபத்தையும் காண்பித்தாள்.

அன்றும் அவ்வாறே கடையை பூட்டிவிட்டு வழமைக்கு முன்னதாகவே வீடு திரும்பிய ஷாத்விக் அவனும் சமுத்ராவும் தங்கியிருந்த அறைக்கு வந்தான்.

இப்போது வரை அவளின் உதவிக்காக அவனும் அவளுடனேயே தங்கியிருந்தான். வீட்டாரும் ஒரு சில அறிவுறுத்தல்களோடு இருவரும் ஒரே அறையில் தங்கட்டுமென்று விட்டுவிட்டனர்.

அறைக்குள் வந்தவன் கட்டிலில் அமர்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்த சமுத்ராவை பார்த்தபடியே ட்ரெசிங் டேபளில் தன் வாட்சை கழற்றி வைத்தபடியே

“ஏதாவது சாப்பிட்டியா சமுத்ரா?” என்று கேட்க

“ஏன் இல்லைனு சொன்னா வலுக்கட்டாயமா வாயை திறந்து திணிக்கப்போறீங்களா?” என்று சமுத்ராவோ எரிச்சலுடன் கேட்க ஷாத்விக்கிற்கு தான் ஏதாவது தவறாக கேட்டு விட்டோமோ என்று குழம்பினான்.

வாட்சினை வைத்துவிட்டு சமுத்ராவை திரும்பி பார்த்தவன்

“சாப்பிட்டியானு தானே கேட்டேன்.” என்று ஷாத்விக் கேட்க

“அந்த அக்கறை வார்த்தையில மட்டும் இருக்கிறதால தான் வீட்டுல உள்ளவங்க என்னை பாடாய் படுத்துறாங்க.”என்று சமுத்ரா அதே எரிச்சலுடன் கூற ஷாத்விக்கிற்கு தான் எதுவும் புரியவில்லை.

வீட்டில் வேறேதும் பிரச்சினையோ என்று எண்ணியவன்

“என்னாச்சு சமுத்ரா? ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்க

“பிரச்சினைக்கென்ன பஞ்சமா? இப்போ எல்லாமே பிரச்சினையா தான் இருக்கு. அப்பவே வாயை மூடிட்டு பேசாமல் இருந்திருந்தா இப்படி எந்த தொந்தரவும் இருந்திருக்காது.” என்றவளின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அவனுக்கு சுத்தமாக புரியவில்லை.

அப்போது அறைக்கு வெளியே அமராவதி அழைக்கும் குரல் கேட்க சமுத்ராவா தன் கையிலிருந்த புத்தகத்தை வேகமாக அறைந்து மூடிவிட்டு

“இவங்க வேற டைமுக்கு டைம் வந்து டார்ச்சர் பண்ணுறாங்க.” முனங்க ஷாத்விக்கிற்கு இப்போது தான் விஷயம் புரிந்தது.

“நீ இரு நான் பார்க்கிறேன்.” என்றவன் வெளியே சென்று கையில் ஒரு கோப்பையோடு வந்தான்.

அவன் கையிலிருந்த கோப்பையையும் அவனையும் மாறி மாறி முறைத்த சமுத்ராவின் எண்ணவோட்டத்தை கண்டுகொண்டவன்

“முடியும்னா குடி. இல்லைனா வை நான் குடிக்கிறேன். இப்படி நீ டென்ஷன் ஆகுறது பாப்பாவுக்கு நல்லதில்லை.” என்று ஷாத்விக் சொல்ல 

“சே. சொன்னா புரிஞ்சிக்கமாட்டேங்கிறாங்க. எது குடிச்சாலும் வாந்தியா வருது. சாப்பிடவே வெறுப்பா இருக்குனு சொன்னாலும் இதை குடி அதை குடினு மாறி மாறி ஒவ்வொரு ஆளா ஒவ்வொன்னா எடுத்துட்டு வாராங்க.” என்று சமுத்ரா சலித்துக்கொள்ள அவனுக்கு அவள் நிலைமை புரிந்தது.

தன் கையிலிருந்த கோப்பையை மேசை மீது வைத்துவிட்டு அவளருகே வந்து அமர்ந்தவன்

“சரி டென்ஷன் ஆகாத. நீ எதுவும் சாப்பிட வேண்டாம்.” என்று ஷாத்விக் கூற

“ஆனா பசிக்கிதே.” என்று அவள் சிறு பிள்ளை போல் கூற அவனுக்கு அது சிரிப்பை உண்டுபண்ணிய போதும் அதனை வெளிக்காட்டும் தைரியம் அவனிடமில்லை.

“என்ன வேணும் சாப்பிட?” என்று அக்கறையுடன் ஷாத்விக் கேட்க

“எனக்கு பராட்டாவும் நல்லா காரமா சிக்கன் குழம்பும் சாப்பிடனும் போல இருக்கு.” என்று சமுத்ரா சொல்ல 

“இவ்வளவு தானா? சாப்பிட்டா போச்சு.” என்றவன் குளித்து உடை மாற்றி அறையிலிருந்து வெளியேறினான்.

சரியாக அரை மணித்தியாலம் கழித்து ஒரு கையில் பார்சலும் மற்றைய கையில் ஒரு கிண்ணத்தோடு வந்தவனை குழப்பத்தோடு பார்த்தாள்.

“சீக்கிரம் கையை கழுவிட்டு வா. சுடச்சுட சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்.” என்று கூறியவன் அவள் பேசுவதற்கு கூட வாய்ப்பு கொடுக்காது அவளை அனுப்பிவைத்தான்.

அதற்குள் சாப்பிடுவதற்கு தேவையான அனைத்து ஒழுங்கையும் செய்திருந்தான் ஷாத்விக்.

அதை பார்த்தவள்

“இது எப்படி?” என்று கேட்க

“பரோட்டா கடையில இருந்து ஸ்பெஷலா கேட்டு வாங்கிட்டு வந்தேன். சிக்கன் கறி அம்மா சமைச்சது. உனக்கு தான் அம்மாவோட கோழி கறி ரொம்ப பிடிக்குமே.” என்று ஷாத்விக் கூறியவன் அவளை அமரச் சொல்லிவிட்டு அவளின் தட்டை நிரப்ப தொடங்கினான்.

“சாப்பிட்டு நீ எதிர்பார்த்த டேஸ்ட்டுல இருக்கானு சொல்லு.” என்று ஷாத்விக் சொல்ல சமுத்ராவோ அவனையும் உணவையும் மாறி மாறி பார்த்தாள்.

அவளின் பார்வைக்கான அர்த்தம் புரியாதவன்

“என்னாச்சு?” என்று கேட்க

“நீங்க சாப்பிடலையா?” என்று சமுத்ரா கேட்க

“நீ சாப்பிடு. நான் பிறகு சாப்பிடுறேன்.” என்று ஷாத்விக் சொல்ல

“சேர்ந்து சாப்பிடலாம்.” என்று சமுத்ரா வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து கூற ஷாத்விக்கிற்கு இதற்கு மேல் மறுத்தால் பழைய சமுத்ராவை பார்க்கவேண்டியிருக்குமென்று எண்ணியவன் எழுந்து சென்று தனக்கும் ஒரு தட்டு எடுத்து வந்து உட்கார்ந்து அவளோடு சேர்ந்து உண்ணத்தொடங்கினான்.

சமுத்ராவோ ஒரு பரோட்டாவோடு எழுந்துகொள்ள முயன்றவனை தடுத்த ஷாத்விக்

“இது உன் வயித்துக்குள்ள இருக்க பாப்பாக்கு கூட பத்தாது. இன்னும் ஒன்னு சாப்பிடு.” என்று ஷாத்விக் கூற சமுத்ராவோ மறுத்தாள்.

ஷாத்விக் தன் தட்டிலிருந்து ஒரு வாய் அவளுக்கு வலுக்கட்டாயமாக ஊட்ட சமுத்ரா முரண்டு பிடித்தாலும் அதனை வாங்கிக்கொண்டாள்.

மேலும் இரண்டு பரோட்டா காலியானதும் சமுத்ரா இம்முறை போதுமென்று உறுதியாக மறுக்க அதற்கு மேல் ஷாத்விக் வற்புறுத்தவில்லை.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் ஷாத்விக் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு அவள் குடிப்பதற்கு பால் எடுத்து வந்தான்.

தன்னுடைய லேப்டாப்பை திறந்து ஏதோ செய்துகொண்டிருந்தவளின் பால் கோப்பையை நீட்டியவன்

“இதை குடிச்சிட்டு வேலையை பாரு.” என்று கூற அவளுள் அதை வாங்கி அருந்தியபடியே தன் வேலையை தொடர்ந்தாள். 

ஷாத்விக்கும் அன்றைய கணக்குவழக்குகளை சரிபார்த்தபடியிருக்க இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.

ஷாத்விக் முதலில் வேலையை முடித்தவன் சமுத்ரா அருகே வந்தமர்ந்து 

“லேட்டாச்சு சமுத்ரா. படுக்கலாமா?” என்று ஷாத்விக் கேட்க லேப்டாப்பை அணைத்துவிட்டு ஒரு ஓரமாக வைத்தவள் 

“கொஞ்ச நேரம் பேசலாம் மாமா.” என்று கூற ஷாத்விக்கிற்கு என்ன பேசப்போகிறாளென்ற குழப்பமே மிஞ்சியது.

இதுநாள் வரை அவன் தான் அவளிடம் இப்படி பேசவேண்டுமென்று ஆரம்பித்திருக்கிறான். ஆனால் இன்று திடீரென்று சமுத்ரா இப்படி சொல்ல ஷாத்விக்கிற்கு குழப்பமே அதிகமானது.

“சொல்லு சமுத்ரா.” அவனும் சாதாரணமாகவே கேட்க

“நான் ஏன் திடீர்னு ஊருல இருந்து யாரு கிட்டயும் சொல்லாமல் கிளம்பி வந்தேன்னு தெரியுமா மாமா?” என்று சமுத்ரா கேட்க ஷாத்விக் ஏதேதோ யோசித்து பல காரணங்கள் கண்டுபிடித்திருந்தாலும் இதுவாக தான் இருக்குமென்று அவனால் உறுதியான ஒரு முடிவுக்கு வரவில்லை. அவனுக்கு மட்டுமில்லை அந்த வீட்டிலுள்ள யாருக்குமே சமுத்ரா ஏன் திடுதிடுப்பென்று கிளம்பிப்போனாளென்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இப்போது சமுத்ராவாக காரணம் சொல்ல முன்வந்தபோதிலும் இந்த சூழ்நிலையை கெடுத்துக்கொள்வதா என்ற எண்ணமும் ஷாத்விக்கினுள் எழுந்தது.

“நடந்து முடிந்ததை பத்தி இப்போ எதுக்கு பேசனும்? இனி நடக்கபோறதை பத்தி பேசலாமே.” என்று ஷாத்விக் அப்பேச்சினை இடைநிறுத்த பார்க்க

“இத்தனை நாள் காலதாமதப்படுத்தாமல் எல்லாத்தையும் பேசியிருந்தேன்னா நமக்குள் இவ்வளவு குழப்பங்கள் வந்திருக்காது.” என்று கூறியவள் மேலும் தொடர்ந்தாள்.

“இன்னைக்கு நிர்மலா அத்தை பேசுன மாதிரியே சில சம்பவங்கள் மாமாவோட இறப்புலயும் நடந்தது. உடனே கிளம்பிடலாம்னு நினைச்சாலும் எனக்குரிய கடமைகள் என்னை தடுத்திடுச்சு. இதையெல்லாம் இப்போ ஏன் உங்ககிட்ட சொல்றேன்னா இந்த நிலைமை என்னோட குழந்தைக்கும் வரக்கூடாது.” என்று சமுத்ராவோ குரலில் விரக்தியோடு சொல்ல

“நீ தேவையில்லாததையெல்லாம் யோசிக்கிற சமுத்திரா.” என்று ஷாத்விக் அவளை குறுக்கிட

“இல்ல மாமா. தேவையானதை தான் பேசுறேன். சின்னதிலிருந்தே அப்பா அம்மாவோட அரவணைப்புல வளர்ந்ததால இந்த சமுதாயத்தோட வக்கிர புத்தியை நீங்க முழுசா பார்த்திருக்கமுடியாது. நான் அதை முழுசா அனுபவிச்சிருக்கேன். அப்பா இறந்ததும் ஆம்பளையில்லாத வீடுனு ஒரு பெயரு. அதை தெரிஞ்சி சீண்ட வந்த சில நல்ல மனிதன் போர்வையில் இருக்கிற வக்கிரபுத்தி மனிதர்கள். பெண்கள் தொழில் ஏமாத்தி லாபம் பாக்கலாம்னு கஷ்டத்தை கம்மி விலைக்கு உறிஞ்சி குடிக்க நெனைச்சவங்க, சொத்துக்காக சொந்த இரத்த உறவுகள் அழிஞ்சி போகனும்னு நெனைச்சவங்க.வெகுளித்தனத்தை வேற மாதிரி கையாள நெனச்சவங்க. பாதுகாப்புக்காக கொஞ்சம் உரமாக இருந்தா திமிருபிடிச்சவ, அடங்காதவனு பட்டம் கொடுக்க சிலபேருனு எவ்வளவு பேரை பார்க்க முடியுமோ அத்தனை பேரையும் பார்த்துட்டேன். இதுல கொடுமை என்னதுனா என் ராசி தான் என் அப்பா உயிரை காவு வாங்கிடுச்சுனு என் காது படவே பேசுவாங்க. இதெல்லாம் கண்டுக்கலாமானு நீங்க நினைக்கலாம். ஆனா அப்பாவோட இறப்பையும் என்னோட ராசியையும் சம்பந்தப்படுத்தி பேசும் போது பல நேரம் கண்டுக்காம போனாலும் சில நேரம் அது மனசை குத்தி காயப்படுத்தும். ஆனா அதை யாருமே யோசிக்கிறதில்லை.” என்றவளின் குரல் இப்போது கரகரக்க விழிகளோ லேசாக கலங்கியது.

“இதை பத்தி இன்னொரு நாள் பேசலாமே சமுத்ரா?” என்று ஷாத்விக் சமுத்ராவின் உடல்நிலையை கருதி கேட்க

“இல்லை மாமா. நான் இன்னைக்கே இதை பத்தி பேசனும். என் மனசை அரிச்சிட்டிருந்த சில விஷயங்கள் இன்னைக்கு பேசனும்.” என்று சமுத்ரா உறுதியாக கூற ஷாத்விக்கிற்கும் அமைதியாக இருப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை.

 

“என்னை பாதிச்ச விஷயங்கள் மஹியையும் வினுவையும் பாதிச்சிடக்கூடாதுனு தான் நான் எல்லார்கிட்டயும் கண்டிப்பா இருந்தேன். என்னோட மனநிலையை அம்மா புரிஞ்சிக்காத போதிலும் பெரிய மாமா புரிஞ்சிக்கிட்டாரு. அவரு இருந்த வரைக்கும் தூர இருந்தாலும் எல்லா விஷயத்துலயும் எனக்கு துணையாக இருந்தவரு அவரு மட்டும் தான். நான் உடைஞ்சு போய் யார்கிட்ட பேசுறதுனு தெரியாமல் தவிக்கும் போது மாமா கிட்ட இருந்து போன் வரும். அவருக்கு என் மனநிலை எப்படி தெரியும்னு தெரியல. ஆனா அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி எனக்கு ஆறுதலாக பேசுவாரு. அப்பா இருந்தப்போ கூட நான் இப்படியொரு பாதுகாப்பை உணர்ந்ததில்லை. ஆனா மாமா அப்பாவுக்கு மேலான ஸ்தானத்துல இருந்து எனக்கு அந்த பாதுகாப்பையும் தைரியத்தையும் கெடுத்தாரு. அப்படிபட்டவரோட இறப்புக்கு என்னோட ராசிதான் காரணம்னு….” என்றவள் அதற்கு மேல் பேசமுடியாது உடைந்து அழுதாள்.

பலநாள் வேதனையின் ஒரே நாளில் அழுது தீர்த்திடவேண்டுமென்ற முனைப்போடு அழுதவளின் செயல் ஷாத்விக்கை சற்று பதறத்தான் வைத்தது.

 

அவளை இழுத்து அணைத்தவன்

“அழாத சமுத்ரா. இந்தமாதிரி நேரத்துல நீ அழுறது சரியில்லை.” என்றவன் தன் அணைப்பை இறுக்கியபடியே அவளின் தலையை தடவிக்கொடுத்தான்.

சில விநாடிகளிலேயே அவளின் அழுகை அடங்கிட மெதுவாக ஷாத்விக்கின் அணைப்பிலிருந்து விலகியவள் ஏதோ பேச முனைய அவளை தடுத்தான் ஷாத்விக்.

“வேணாம் சமுத்ரா. இனி இதை பத்தி எதுவும் பேச வேணாம். ஆனா ஒரு விஷயம் மட்டும் சொல்றேன். அப்பா ஒரு விஷயம் சொல்லுவார். நீ பிறந்ததுக்கு பிறகு தான் அவரோட தொழில்ல விருத்தியாம். அதுமட்டுமில்லை எந்த சொத்து வாங்குறதுனாலும் உன் கையால வாங்குனா அது செழிச்சு நிற்குமாம். இப்போ வரைக்கும் ஊருல அப்பா பேருல உள்ள எல்லா சொத்தும் உன் கையால வாங்குனது தானாம். அவருக்கு எப்பவுமே நீ மட்டும் தான் ராசியானவ. தன்னோட ராசியான மருமக தன் வீட்டுக்கு மருமகளா வந்தா அவரு பரம்பரையே தழைச்சி நிற்கும்னு அவரு நம்புனாரு. அதுனால தான் கடைசி நிமிஷத்துல நம்ம கல்யாணம் நடந்துச்சு. அவரை பொறுத்தவரைக்கும் நீ தான் இந்த இரண்டு குடும்பத்தோட மகாலட்சுமி. இதை நாங்க எல்லாருமே நம்புறோம். அப்பாவோட திடீர் மரணம் யாரும் எதிர்பார்க்காதது தான். அது நீ இந்த வீட்டுக்கு மருமகளாக வந்ததால நடந்த விஷயமில்லை. மௌனிகா இந்த வீட்டு மருமகளா வந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும். அப்போ யாரோட ராசின்னு சொல்லுவ? பிறப்பும் இறப்பும் நம்ம கையில இல்லை. யாரோ ஏதோ சொன்னாங்கங்கிறதுக்கா அவங்க சொன்னதெல்லாம் உண்மையாகிடுமா? இங்க பாரு இந்த சமூகத்தை பொறுத்தவரை நீ ஒரு பொண்ணு. பொண்ணுன்னா இப்படி தான் இருக்கனும்னு இந்த சமூகம் ஒரு வரையறையை வச்சி அதுக்குள்ள தான் பொண்ணுங்க வாழனும்னு எதிர்பார்க்கிது. அப்படி இருக்க பொண்ணுங்களும் இருக்காங்க. ஆனா அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கான்னு கேட்டா யாருகிட்டயும் பதிலில்லை. சமூகம் வரைஞ்சிருக்க அந்த வரையறைக்குள்ள நீ அடங்கலைங்கிற கடுப்புல தான் உன்னை ஏதாவது ஒரு வகையில காயப்படுத்தனும்னு நினைக்கிறாங்க. உன்னை குறை சொன்னவங்கள யாராவது ஒருத்தர் உன் கஷ்டகாலத்துல உதவியிருக்காங்களா? இல்லை நீ  கஷ்டப்படுறீயேனு பரிதாபப்பட்டிருக்காங்களா? இப்படி எதுவுமே செய்யாமல் எல்லாத்தையும் அமைதியா வேடிக்கை பார்த்தவங்களோட பேச்சை நீ ஏன் கண்டுக்கனும்? நான் உன்னை பார்த்து பொறாமை படுற விஷயம் உன்னோட கெத்து தான். அதை ஏன் இந்த மாதிரி சில்லறை விஷயங்களை நினைச்சு தொலைக்கனும். நீ எப்பவும் சமுத்ராவா இரு. அது தான் உனக்கு அழகு. எந்த விஷயத்தையும் யோசிச்சு முடிவெடுக்கிற உன்னோட நிதானம் உன்னோட பலம். அதை இந்த பேச்சுகளால் தொலைச்சிடாத. நீ இந்த குடும்பத்துக்கு கிடைச்ச தேவதை. நீ சந்தோஷமா இருந்தா தான் இந்த இரண்டு குடும்பமும் சந்தோஷமா இருக்கும். மத்தவங்க என்ன வேணாலும் பேசட்டும். எங்களுக்கு எப்பவும் நீ தான் முக்கியம்.” என்று ஷாத்விக் பேச இப்போது  சமுத்ராவோ அவனை இழுத்து அணைத்துக்கொண்டாள்.

ஷாத்விக்கும் திரும்ப அணைத்துக்கொண்டவன் சில நிமிடங்கள் அப்படியே இருந்தான்.

சில விநாடிகளின் பின் அவனிடமிருந்து விலகியவள்

“தூங்கலாம் மாமா.” என்று மட்டும் கூற அவள் வேறேதும் பேசுவாளென்று எதிர்பார்த்த ஷாத்விக்கிற்கு அது ஏமாற்றத்தை தந்த போதிலும் அதனை வெளிகாட்டாது சரியென்றவன் வழமைபோல் குழந்தையிடம் சில விநாடிகள் பேசிவிட்டு இருவரும் உறங்கச் சென்றனர்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.