Loading

ராஜி உணவு சமைத்துக் கொண்டிருக்க.. வீதியில் விஜயநந்தன், யுகேந்திரன், வளவன், இன்னும் சில பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவியாவிற்கு தானும் விளையாட வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

“அண்ணா.. நானும் வர்றேன் என்னையும் சேர்த்துக்க” என வளவனின் கையை சுரண்டினாள்.

“பாப்பா.. உனக்கு விளையாடத் தெரியாது , பால் வேற மேல பட்டுடும், தள்ளிப் போய் உக்காந்து வேடிக்கைப் பாரு” என்று தங்கையிடம் கத்திவிட்டு மட்டையைப் பிடித்திருந்த விஜயநந்தனுக்கு பந்தை வீசினான்..

விஜய் அடித்த பந்து அருகில் இருந்த முட்புதரில் போய் விழா, அதைத் தேடிச் சிலர் சென்றுவிட்டனர்..

பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த நிலாவைப் பார்க்க ஒரு மாதிரி இருந்தது யுகேந்திரனுக்கு..

“பூனை வா… விளையாடலாம்..”

“இல்ல வேண்டா, அண்ணா திட்டுவான்”.

“அதலாம் திட்ட மாட்டான், வா என்று நிலாவின் கையைப் பிடித்து அழைக்க..

அதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு புசுபுசுவென்று கோவம் வந்தது.

யுகிப் புடித்துக்கொண்டிருந்த கையையே அனல் கக்கும் விழிகளால் பார்த்தவன் 

“டேய் அவளை எதுக்குடா கூப்பிடற?, அவளுக்கு என்ன விளையாட தெரியும்?கம்முன்னு வேடிக்கை பார்க்கட்டும் விடு” என யுகியின் கையை பிடித்து இழுத்தவன்.. நிலாவைப் பார்த்து முறைத்தான்.

அந்தப் பார்வையில் நடுங்கிப் போன நிலா.. யுகிப் பிடித்திருந்த கையை விலக்கி விட்டு “நான் வரல விடுங்க” என்று மீண்டும் அதே இடத்தில் சென்று அமரப் போனவளை இழுத்துப் பிடித்த யுகி

“உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன் இந்த வாங்க போங்களா அவன் கிட்ட வெச்சிக்கோ என்கிட்ட வெச்சிகாதன்னு..அவன் சொல்லிட்டு போறான் நீ வந்து பீல்டிங் பண்ணு கொஞ்சம் விளையாட்டு புரிஞ்சதும் பேட்டிங் பண்ணல வா”‘ என்று வழுக்கட்டாயமாக அழைக்கவும் விஜயைப் பார்த்து பயந்து கொண்டே யுகியின் பின்னால் வந்து நின்றாள்.

அதற்குள் பந்தைக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டான் வளவன்..

“பந்து வந்துடுச்சி எல்லாம் ரெடியா நில்லுங்க.. பூனை நீ அங்கப் போய் நில்லு, பந்து உங்கிட்ட வந்தா மட்டும் புடி” என்று ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு யுகி கீப்பராக சென்று நின்று கொண்டான்.

இதை விஜியின் விழிகள் குரோதமாக பார்த்தது.. “நான் இவ்வளவு சொல்லியும் நீ அவளை விளையாட வைக்கறியா.. அவளும் வந்து நிக்கறன்னா என் மேல இருக்கற பயம் கொறஞ்சுடுச்சிடுன்னு தானே அர்த்தம்.. பேசிக்கறேன்” என்று வன்மம் கொண்டான் பதினாறே வயதான விஜயநந்தன்.

வளவன் பந்தை வீச விஜய் ஒரு முறை நிலாவைப் பார்த்துக் கொண்டவன் பந்தை நிலாவை நோக்கி வேகமாக அடித்தான்.

அவன் அடித்த பந்தைப் பிடிக்க வேண்டியதோ பந்து வரும் வேகத்தைப் பார்த்து கண்களை இறுக மூடிக் கொண்டு அம்மாஆஆஆஆ என்று கத்த, பந்து நிலாவின் காதை உரசிக்கொண்டுச் சென்று முட்புதரின் நடுவே விழுந்தது.

“ஏய் நீதானே பந்தை புடிக்கல போய் நீயே எடுத்துட்டு வா” என்று விஜய் கண் மூடி நின்றவளிடம் சொடக்கிட்டு அவன் முன் வந்து நின்ற வளவன்..

“நான் போய் எடுத்துட்டு வர்றேன்ங்க” என்று ஓடினான்..

“ஏய்?” என வளவனை பார்த்து விஜய் கர்ஜிக்கவும் வளவனின் கால்கள் அந்த இடத்திலையே ஆணி அடித்தது போல் நின்றது.

“உன்கிட்ட சொன்னனா..?” என்று நிலாவைப் பார்த்துக் கொண்டே வளவனிடம் கேக்க..

“பாப்பாவால முள்ளுள்ள கையை விட முடியாதுங்க.. அதுக்காக தான் நான் போறேன்னு” என்று இழுத்தவனை நோக்கி விஜயின் கண்கள் திரும்பவே இல்லை.நிலாவிடமே நிலைத்திருக்க

“இதுக்கு தான் அண்ணா உன்னைய விளையாட்டுக்கே சேர்க்கிறது இல்ல.. எல்லோரையும் சேர்ந்து விளையாடறதா இருந்தா மட்டும் விளையாட்டுக்கு வா..இல்லனா வராத.. வளவா இரு நானும் வர்றேன்” என்று அவனுடன் யுகியும் சேர்ந்து பந்தை எடுக்கப் போக..

நிலாவின் அருகில் சென்ற விஜயோ..”நான் வேண்டான்னு சொல்லியும் அவன் சொன்னான்னு வந்து நிக்கிற, உனக்கு அவ்வளவு திமிராகிடுச்சா?” என்று நிலாவின் தலையில் ஓங்கி ஓங்கி கொட்டினான்.

பத்து வயது சிறுமியால் விஜயின் அடியை தாங்க முடியவில்லை கீழே அமர்ந்து அழவும்… அவள் முன் ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவன்..

“ஸ்ஸ்ஸ்…. சத்தம் வந்துச்சி கொன்னுடுவேன் இனி அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான்னு நான் சொல்றதை மீறி வந்து நின்ன தோலை உரிச்சி தொங்க விட்டுருவேன் ஜாக்கிரதை” என்று மிரட்ட.. முட்டைக்கண்ணை விரித்து மழுங்க மழுங்க விழித்தது அந்த சிறிய மொட்டு.

  •  
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
17
+1
0
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment