Loading

அத்தியாயம் 1

 

விடிந்தும் விடியாத அந்த அதிகாலை வேளையில், இரை தேடிச் செல்லும் புள்ளினங்களுக்கு துணையாக, அவனும் தன் அதிகாலை நடைப்பயிற்சியை துவங்கினான்.

 

அவன் இப்படி நாலரை மணிக்கு நடப்பது அவன் வாழ்வில் எப்போதோ கடைபிடிக்க துவங்கிய நிகழ்வு தான். சரியாக சொல்ல வேண்டும் என்றால், அவன் பூங்காவை சுற்ற, அவனை சுற்றும் பெண்களை தவிர்க்கவே இந்த நாலரை நடைப்பயிற்சி!

 

அவன் தீரன் ஆத்ரேயன்!

 

அவனுக்கு அளிக்கப்பட்ட முன்னுரையை வைத்து, ஒட்டுமொத்த பெண் குலத்தை வெறுக்கும் அரக்கனாக நீங்கள் கற்பனை செய்தால், அதற்கு அவன் பொறுப்பல்ல!

 

தன் மேல் விழுந்து பழக நினைக்கும் பெண்களை, தன் கனல் பார்வையால் தள்ளி நிற்க வைக்கும் அவனே தான், தினமும் அவன் அன்னையை கட்டிப்பிடித்து கொஞ்சிவிட்டு பணிக்கு செல்பவன்!

 

உரிமை உள்ள இடத்தில் அவனிடம் சிறு இளக்கம் இருக்கும் என்று வேண்டுமென்றால் அர்த்தம் கொள்ளலாம்.

 

நேரத்தை விரயம் செய்ய பிடிக்காதவன்; அதற்காகவே நண்பர்கள் என்று பலரை அருகில் வைத்துக் கொள்ளாதவன். அவனுக்கு பிடிக்காததை செய்தால், சட்டென்று கோபம் கொள்பவன்; கோபத்தில் தன்னிலை மறந்து வார்த்தைகளை விடுபவன் – இவ்வாறு ‘டெரர்’ நாயகனுக்கு உண்டான பத்து பொருத்தமும் பக்காவாக பொருந்தி இருப்பவன் தான் தீரன் ஆத்ரேயன்!

 

அவன் குணத்தை முன்பே அறிந்ததாலோ என்னவோ, பெயரைக் கூட வெகு பொருத்தமாகவே வைத்திருந்தனர் அவனின் பெற்றோர் – கமலக்கண்ணன் மற்றும் வாசந்தி தம்பதியர்.

 

மகனுக்கு அப்படியே எதிர் துருவம் தான் பெற்றோர் இருவரும்!

 

‘வாசு, நம்ம ரெண்டு பேருமே அமைதி. உன் பையன் மட்டும் எப்படி இப்படி துர்வாசர் டைம் டிராவல் பண்ணி வந்த மாதிரி இருக்கான்? அந்த கமண்டலம் மட்டும் தான் மிஸ்ஸிங்!’ – இவை அடிக்கடி கமலக்கண்ணன் உதிர்க்கும் சொற்கள். அதற்கு மனைவியிடம் திட்டு வாங்குவது தனிக்கதை!

 

ஆக, அமைதியான பெற்றோரின் வாழ்வை ஒளிமயமாக்க வந்த ஒற்றை தழல் தான் நம் நாயகன், தீரன் ஆத்ரேயன்.

 

இதோ, வழக்கமான தன் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு உள்ளே நுழைந்த தீரன் கண்டது, நீள்சாய்விருக்கையில் அமர்ந்து, தன் கொட்டாவியை அடக்க படாதபாடு படும் கமலக்கண்ணனை தான்.

 

“இவருக்கு இதே வேலையா போச்சு! தூக்கம் வந்தா, தூங்க வேண்டியது தான!” என்று முணுமுணுத்த தீரன், “அப்பா…” என்று அழைக்க, திடீரென்று கேட்ட குரலில் திகைத்து விழித்தவர், பின் அழைத்தது மகன் என்று அறிந்து, ஆசுவாசப்பட்டவராக, “அப்பா தான் பா. அதை ஏன் இப்படி அணுகுண்டை போட்ட மாதிரி கூப்பிடுற? மெல்ல தான் கூப்பிடேன்.” என்றார் கமலக்கண்ணன்.

 

“ப்ச், இப்போ இந்த பன்ச் டயலாக் முக்கியமா? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு மெல்ல எழுந்து வர வேண்டியது தான?” என்றவாறே, அவர் கையில் பெயருக்கு வைத்திருந்த நாளிதழை வாங்கினான்.

 

“உனக்கு அப்பாவை பிடிக்கும்னு தெரியும் தான், அதுக்காக இப்படி ஓரவஞ்சனை பார்க்கலாமா தீரா?” என்று மகன் சத்தத்தை கேட்டு வெளியே வந்த மனைவியை ஓரக்கண்ணில் பார்த்துக் கொண்டே கூறினார் கமலக்கண்ணன்.

 

வாசந்தி கொடுத்த தேநீர் கோப்பையை வாங்கிய தீரனோ புரியாமல் கமலக்கண்ணனை நோக்க, வாசந்தியோ, “உங்களுக்கும் உங்க பையனுக்கும் இடையில நடக்குற பேச்சுல, எதுக்கு என்னை இழுக்குறீங்க?” என்று கணவன் கூற்றை புரிந்த மனைவியாக வினவினார்.

 

இத்தனை ஆண்டுகள் ஈருடல் ஓருயிராக வாழ்ந்த தம்பதியருக்குள் இந்த புரிந்துணர்வு கூட இல்லாமல் இருந்தால் தானே ஆச்சரியம்!

 

“அது வாசும்மா, என்னதான் என் மேல பாசம் இருந்து, இன்னும் கொஞ்ச நேரம் தூங்க சொன்னாலும், உன் மகன் உன்னையும் கவனிக்கணும் இல்லையா? நான் நல்லா படுத்து தூங்க, நீ மட்டும் நேரத்துல எழுந்து கிட்சன்ல வேலை பார்த்துட்டு இருப்பியா? உன் மகன் உன்னை கவனிக்கலைன்னாலும், என் பொண்டாட்டியை நான் கவனிக்கணும் தான?” என்று கமலக்கண்ணன் கூறியவாறே, கண்களால் மனைவிக்கு ரகசிய செய்தியை பரிமாறினார்.

 

அதை கவனிக்காமல் விடுவானா தீரன்?

 

இன்னும் சில நிமிடங்களுக்கு அங்கு நிகழப்போகும் நாடகம் என்ன என்பதை அறிந்தாலும், அதை துளியும் வெளிப்படுத்தாமல் நாளிதழில் மூழ்கியதை போலவே காட்டிக் கொண்டான் அவன்.

 

அதற்குள் கணவனின் செய்தியை சரியாக புரிந்து கொண்ட மனைவியாக, “க்கும், நானும் உங்க கூட வந்து படுத்துட்டா, இங்க யாரு வேலை செய்வா? அதெல்லாம் புரிஞ்சு, ஏதாவது செய்யணும்னு அவனுக்கா தோணனும்.” என்றார் வாசந்தி.

 

அன்னை தலையை சுற்றி மூக்கை தொடுவது எதற்கு என்று புரிந்து, சிரிப்பு வந்தாலும், தேநீர் அருந்தும் சாக்கில், சிரிப்பை கோப்பைக்குள் மறைத்தவன், “இதுக்கு எதுக்கு ஃபீல் பண்றீங்க? நாளைக்கே ஒரு ஹெல்பரை வேலைக்கு வர சொல்லிடுவோம். நீங்களும் அப்பா கூட நல்லா தூங்கி எழுந்து வாங்க.” என்று கூறிவிட்டு, காலிக் கோப்பையை வைக்க சமையலறைக்குள் சென்றான்.

 

அதில், மற்ற இருவரும் தான் ‘பே’வென்று ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர்.

 

அடுத்த நொடியே இயல்பிறகு திரும்பியவராக, “ப்ச் ஆதி, நான் என்ன சொல்றேன், நீ என்னடான்னா ஹெல்பரை வேலைக்கு வைக்க சொல்ற!” என்று சலித்துக் கொண்டார் வாசந்தி.

 

“உங்களுக்கு வேலை பார்க்க கஷ்டமா இருக்குறதால ஒரு ஹெல்பரை வேலைக்கு வச்சுக்க சொன்னேன். நான் சரியா தான சொல்லிருக்கேன்?” என்று அப்போதும் விலாங்கு மீனாக நழுவியவனை விடாது பற்றிய வாசந்தி, “ப்ச், சரி நேரடியாவே கேட்குறேன், எப்போ தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லப் போற? நானும் கதையில, படத்துல வர மாதிரி விதவிதமா கேட்டுப் பார்த்துட்டேன். ஆனா, வாயை திறக்குறியா நீ! க்கும், அதுலயாவது, அந்த பசங்க ஒரு நேரத்துல அம்மா மேல இருக்க பாசத்துல மனமிரங்கி சம்மதிப்பாங்க. ஆனா, நீ…” என்று புலம்ப, அவரை இடைவெட்டிய கமலக்கண்ணனோ, “வாய்ப்பே இல்ல வாசு!” என்று தன் பங்குக்கு கொழுத்திப் போட்டார்.

 

தந்தையை பாசமாக பார்த்து வைத்த தீரனோ, “அதான் நீங்களே சொல்லிட்டீங்களே… இதுலயாவது உங்க சொல்பேச்சை கேட்குற பையனா இருக்கேன் ப்பா.” என்று கூறிவிட்டு தன்னறைக்கு சென்று விட்டான்.

 

‘அடப்பாவி! சரியான ஊமைக்குசும்பன்! இப்படி மாட்டி விட்டுட்டானே!’ என்று மனதிற்குள் புலம்பியவராக வாசந்தியை பார்க்க, அவரோ, “உங்க திருவாயை வச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா? நானே, ரொம்ப கஷ்டப்பட்டு அவனை பிடிச்சு வச்சு பேசுனா, இப்படி தான் கெடுத்து விடுறதா?” என்று திட்டி தீர்த்து விட்டார்.

 

பின்னர், கமலக்கண்ணன் பல ‘சாரி’க்களை கூறி சமாதானம் செய்தவர், “ஏன் வாசும்மா, இப்படி கல்யாணப் பேச்சை ஆரம்பிக்குறதுக்கே ஆட்டம் காட்டுறானே உன் பையன், ஆனா, நீ என்னவோ டெயிலி அஞ்சு பொண்ணுங்க ஜாதகத்தை நம்ம ஜோசியருக்கிட்ட குடுக்குற? இது, ஒத்து வருமா?” என்று வினவ, “நானே உள்ளுக்குள்ள பதட்டதுல தான் இருக்கேன். இதுல நீங்க வேற! இந்த விஷயம் தெரிஞ்சு, உங்க பையன் கோபத்துல ஏதாவது பேசிடக் கூடாதேன்னு பயந்து பயந்து தான ஜோசியரை பார்க்கப் போறேன்.” என்றார் வாசந்தி.

 

“ம்ம்ம், சரி நல்லதே நினைப்போம்.” என்று மகனின் எதிர்காலத்தை எண்ணி பயந்திருந்த மனைவியை சமாதானப்படுத்தினார் கமலக்கண்ணன்.

 

அவனே அறியாமல் பெற்றோரை பயமுறுத்தியவனோ, மௌனமாக அறைக்குள் நுழைய, அவன் கவனத்தை ஈர்த்தது புலனத்தில் வந்திருந்த செய்தி.

 

அனுப்பியவனின் பெயரை நோக்கிய தீரனோ, “இந்த நேரத்துல இவன் என்ன அனுப்பி இருக்கான்?” என்ற முணுமுணுப்புடன், புலனத்தை திறந்து பார்க்க, பார்த்தவனின் விழிகள் கோபத்தில் பளபளத்தன.

 

“ராஸ்கல், இவனுக்கு…” என்று பல்லைக் கடித்தவனின் கோபம் அடுத்தடுத்து வந்து விழுந்த செய்திகளில், எங்கு தஞ்சம் புக வேண்டும் என்று அறியாமல் தடுமாறியது என்று தான் கூற வேண்டும்.

 

நிமிடங்கள் சில கழிந்தாலும், அலைபேசியில் பதிந்திருந்த அவன் விழிகளில் சற்றும் அசைவில்லை. கண்களின் கூர்மையும், நிர்மலமாக இருந்த முகமுமே சொன்னது, அவன் திட்டம் தீட்ட துவங்கி விட்டான் என்பதை.

 

ஆனால், இம்முறை அவன் தீட்டும் திட்டம் அவன் வாழ்வை மட்டுமல்ல, இன்னொருத்தியின் வாழ்வையும் அடியோடு மாற்றி அமைக்கும் என்பதையோ, இத்தனை நாட்கள், ‘என் வாழ்வு, என் கையில்’ என்று சுற்றித் திரிந்தவனின் வாழ்க்கையுடன், மற்றவளின் வாழ்க்கையும் விதியின் கைகளில் சிக்கி சுழலப் போகிறது என்பதையோ அவன் அறியவில்லை. அப்படியே அறிந்தாலும், அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை என்பதே எதார்த்தம்!

 

*****

 

அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டின் சமையலறையில் அரக்கப்பறக்க வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி தாமரைச்செல்வி.

 

அவரின் கைகள் அதன் வேலையை சரியாக செய்ய, வாயோ அவரின் சீமந்தபுத்திரியை துதிபாடும் வேலையை செய்து கொண்டிருந்தது.

 

“இந்த உலகத்துல எந்த பொண்ணாவது இப்படி இருப்பாளா? காலையில அஞ்சரை மணிக்கெல்லாம் அலாரம் வச்சு எழுந்து, பல்லைக் கூட விளக்காம பால்கனில போய் உட்கார்ந்துக்குறா! இதுல, பேசுறது கூட காதுல விழாத மாதிரி, அந்த இயர்ஃபோனை மாட்டிக்க வேண்டியது! அப்படி என்னத்த தான் வேடிக்கை பார்ப்பாளோ? எல்லாம் என் நேரம்! இப்படியும் ஒரு பொண்ணு!” என்று வாய் ஓயாமல் புலம்பியவரை பின்னிருந்து இரு கரங்கள் அணைத்தன.

 

பட்டென்று அந்த கரங்களில் தாமரைச்செல்வி அடிக்க, “ரொம்ப சூடா இருக்கியா தாமு? வேணும்னா அப்பாவை வர சொல்லவா?” என்ற குரல் கேட்க, “வர வர உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு டி. எல்லாம் அடக்க வேண்டியவங்க அடக்கினா தான் அடங்குவ போல!” என்றார் அந்த வாயாடியின் அன்னை.

 

“ப்ச் ம்மா, எப்போ பார்த்தாலும் என்னை அனிமல்ஸ் கூட கம்பேர் பண்றதே வேலையா போச்சு! ஆமா, உன் புலம்பல் எல்லாம் ஓவரா, இல்ல இன்னும் பாக்கி இருக்கா? இருக்குன்னா, அப்படியே புலம்பிட்டே சூடா ஒரு ஃபில்டர் காஃபி போட்டு தருவியாம்.” என்று அவள் செல்லம் கொஞ்ச, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. கழுதை வயசாச்சு, இன்னும் ஒரு காஃபி போட்டு குடிக்க தெரியல!” என்று மகள் சொன்னதை தட்டாதவராக புலம்பியபடி மகளுக்கு குளம்பியை கலக்கினார் தாமரைச்செல்வி.

 

கரிகாலன் – தாமரைச்செல்வியின் ஒற்றை மகள் உதயராகா. பெயரை போலவே, அவள் அவர்கள் வாழ்வில் உதயமான பின்னர், அந்த வீட்டில் எப்போதும் ஆனந்த ராகம் தான்.

 

உலக வழக்கமாக, உதயராகாவும் தந்தை செல்லமாகிப் போனாள். கரிகாலன் – மற்றவருக்கு கடினமான மனிதராக இருந்தாலும், மகள் என்று வந்தால் தன்னால் இளக்கம் தோன்றி விடும் மனிதருக்கு!

 

மகளை கண்டிக்க கூட யோசிக்கும் தந்தை. அதற்காக கண்டிப்பதே இல்லை என்றெல்லாம் இல்லை. அவருக்கு ஒவ்வாததை மகள் செய்தால், மனைவியிடம் சொல்லி கண்டிக்க சொல்லும், பாசமான தந்தை (!!!) தான் கரிகாலன்.

 

அவ்வளவாக பேசாத கரிகாலனுக்கு சரியான ஜோடி தான் தாமரைச்செல்வி. இவர் இருக்கும் இடத்தில் அமைதிக்கு வேலையே இல்லை எனலாம்!

 

நிதானத்தில் தந்தையை கொண்டும், வாய்ப்பேச்சில் தாயைக் கொண்டும் பிறந்திருந்தாள் உதயராகா. அதனாலோ என்னவோ, தந்தையிடம் நிதானமாகவும், தாயிடம் வாயாடியாகவும் வலம் வருவாள்.

 

இதோ, இப்போது கூட தாயிடம் வம்பளந்து கொண்டே அவர் கொடுத்த குளம்பியை குடிக்க, அவர்களின் சம்பாஷணையை கலைப்பது போல, சமையலறை வாசலிலிருந்து செருமினார் கரிகாலன்.

 

தாயும் மகளும் திரும்பி பார்க்க, “நான் கடைக்கு போயிட்டு வரேன்.” என்று கரிகாலன் கூற, அடுப்பில் வேலை பார்த்துக் கொண்டே, “சரி, போயிட்டு வாங்க.” என்றார் தாமரைச்செல்வி.

 

அப்போதும் செல்லாமல் அங்குமிங்கும் நடந்த தந்தையை ஓரக்கண்ணில் பார்த்த உதயராகாவோ நமுட்டுச் சிரிப்புடன், “அம்மோவ், அப்பாக்கு உன்கிட்ட தனியா பேசணும் போல. மேபி, சம்திங் சம்திங் எதிர்பார்க்குறாரு போல. போய் குடுத்துட்டு வரது.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

 

“இதெல்லாம் நல்லா பேச தெரியும், சாம்பாருக்கு என்ன பருப்பு போடணும்னு கேட்டா மட்டும் பதில் சொல்ல தெரியாது!” என்று தாமரைச்செல்வி அவளின் தலையில் கொட்ட, “ஆஹ், அம்மா, இப்போ நான் சொன்னதுக்கும் நீ சொல்றதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? வெட்கத்துல ஏதாவது உளற வேண்டியது!” என்று கூறிவிட்டு, தன்னறைக்கு ஓடி விட்டாள் உதயராகா.

 

“கழுதை, என்னத்தையாவது பேசி வைக்க வேண்டியது!” என்று முணுமுணுத்தவருக்கு உண்மையாகவே வெட்கம் வந்துவிட, கீழே குனிந்தபடியே கணவரருகே வந்தவர், “எதுக்கு இப்படி குட்டி போட்ட பூனையாட்டம் இங்கேயே சுத்திட்டு இருக்கீங்க? கடைக்கு போறேன்னு தான சொன்னீங்க, போகலையா?” என்று வினவினார்.

 

கரிகாலனோ மனைவியை வித்தியாசமாக பார்த்தபடி, “போறேன் போறேன். உதயா கிட்ட அந்த விஷயத்தை சொல்லிடு. அதை சொல்ல தான் வெயிட் பண்ணேன்.” என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட, “க்கும், இந்த மனுஷனுக்கு இதே வேலையா போச்சு! எல்லாத்துக்கும் நான் தான் அவகிட்ட பேச்சு வாங்கணும்!” என்று அதற்கும் புலம்பினார் தாமரைச்செல்வி.

 

அவரின் தோளை பற்றி உலுக்கிய உதயராகாவோ, “அம்மோவ், அப்பா போய் அரைமணி நேரமாச்சு. இன்னுமா கனவுல இருந்து வெளிய வரல?” என்று கூற, “எது, அரைமணி நேரமா?” என்று அதிர்ந்த தாமரைச்செல்வி, பின் நேரத்தை பார்த்து, மகளின் முதுகில் லேசாக அடித்தவர், “இப்படி எதுக்கெடுத்தாலும் விளையாட்டா இருந்தா, போற இடத்துல எப்படி பொழைக்கப்போறியோ?” என்றார்.

 

“ம்மா, இரு இரு, பேச்சு ரூட்டு எங்கேயோ போகுதே! அப்படி என்ன சொல்லிட்டு போனாரு உன் ஹஸ்பண்ட்?” என்று அவள் வினவ, “ஒழுங்கா அப்பான்னு கூப்பிடுன்னு எத்தனை முறை சொல்றது?” என்று அவள் வாயில் அடித்தவர், “உனக்கு ஒரு வரன் வந்துருக்கு.” என்று தான் கூறினார்.

 

உடனே, “ம்மா, என்னம்மா இது? நான் என்ன கல்யாணம் பண்ண மாட்டேன்னா சொன்னேன்? படிச்சு முடிச்சதும், நீங்க யாரை சொல்றீங்களோ கல்யாணம் பண்ணிக்குறேன்னு தான சொன்னேன்! உங்களை யாரு இப்போ எனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாங்க?” என்று பொறிந்தாள் உதயராகா.

 

“அடியேய், கொஞ்சம் என்னையும் பேச விடுடி. அப்படியே அப்பாவை மாதிரியே பொறந்து தொலைஞ்சுருக்கு!” என்று மகளை திட்டும் சாக்கில் கணவரையும் திட்டியவரோ, “யாரு இப்போ உனக்கு மாப்பிள்ளை பார்த்தா? அதுவும், நீ படிச்சு முடிச்ச பின்னாடி தான் கல்யாணம்னு ஸ்டிரிக்ட்டா சொன்னன்னு, உன் அப்பா ஜாதகம் பார்க்க கூட விடல.” என்றார்.

 

“அப்போ நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்?” என்று உதயராகா குழப்பமாக வினவ, “உன் ஃபோட்டோ பார்த்து பிடிச்சு போய் அவங்க தான் கேட்டாங்க டி. நல்ல சம்பந்தம்னு நான் தான் உங்க அப்பாவுக்கு வேப்பிலை அடிச்சுருக்கேன். நீ நடுவுல புகுந்து எதையும் கெடுத்து விட்டுடாதடி.” என்றார்.

 

“நினைச்சேன், அது நீயா தான் இருக்கும்னு. நான் அப்பா செல்லம்னு என்மேல உனக்கு பொறாமைன்னு தெரியும். ஆனா, அதுக்காக இப்படி என்னை பேக்கப் பண்றதுக்கான வேலையை தான் பார்த்துட்டு இருக்கியா?” என்று விளையாட்டாக அவள் வினவ, “எது பேக்கப் பண்றேனா? க்கும், இதுல பொறாமை வேறயா? எனக்கு ஒரு ஆமையும் இல்ல மகளே! வேணும்னா, உன் கல்யாணத்துக்கு அப்பறம், நீயே உங்க அப்பாவை கூட்டிட்டு போய் வச்சுக்கோ. தொல்லை ஒழிஞ்சுது.” என்றார்.

 

“சரி சரி, போதும் உன் புலம்பல்ஸ். மாப்பிள்ளையோட ஃபோட்டோ எங்க?” என்று உதயராகா வினவினாள்.

 

இது தான் உதயராகா. தனக்கு பிடிக்காத நிகழ்வு நடந்தாலும், உடனே எதையும் வெளியே காட்டிவிட மாட்டாள். என்ன ஏதென்று ஆராய்ந்து பார்த்தே தன் உணர்வுகளை கூட வெளிக்காட்டுவாள். அத்தனை நிதானம் அவளிடம்!

 

மேலும், அவளுக்கு பிடிக்காத எதையும் அவளின் பெற்றோர் செய்து விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அபாரமாகவே இருந்தது தான், இந்த நிதானத்திற்கு காரணமோ?

 

பின்வரும் காலத்தில் இந்த நிதானம் எங்கோ மறைந்து விடும் என்று இப்போது அவளுக்கு தெரியாதல்லவா?

 

உதயராகாவின் அன்னை கொடுத்த புகைப்படத்தில் சாதாரண ஃபார்மலில் கூட கம்பீரமாக தெரிந்தான் அவன்.

 

உதயராகாவின் விழிகள் அவனை அவளுக்கு தெரியாமலேயே உள்வாங்கிக் கொண்டிருந்தன.

 

‘அட, நல்லா ஹேண்ட்சமா தான் இருக்கான்!’ என்று தனக்குள் கூறிக் கொண்டவள், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “ம்மா, இதென்ன இவர் இவ்ளோ அழுத்தமா இருக்காரே. எப்பவும் இப்படி தானா? இப்படியே இருந்தா, என் நிலைமை என்ன ஆகுறது?” என்றாள்.

 

“ஹ்ம்ம், எல்லாருக்கும் ஆசைப்பட்ட மாதிரி கிடைச்சுடுமா என்ன? கிடைச்சதை வச்சு வாழ்க்கையை ஓட்ட வேண்டியது தான்! நான் உங்க அப்பாவை வச்சு காலம் தள்ளுறேனே அப்படி!” என்று அவளின் அன்னை அவளுக்கு சளைத்தவர் இல்லை என்று நிரூபித்தார் தாமரைச்செல்வி.

 

*****

 

அவனின் விழிகள் கோபத்தில் பளபளக்க, இவளின் விழிகள் ஆர்வத்தில் விரிந்தன. இருவரின் விழிகளில், மற்ற பாவனைகளையும் வெளிப்படுத்த ஆவண செய்ய ஆரம்பித்தது விதி!

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்